Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கரை தாண்டா அலைகள்

அலை-11

குறள் 961:

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்

மு.வ உரை: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

ருத்ரேஸ்வரனின் எதிர்பார்ப்பு மனைவியின் மடி சாய்தலும் தலை கோதலுமாய் இருந்தது. செங்காந்தளின் எதிர்பார்ப்போ கணவனின் அருகாமையாய் இருந்தது.



Advertisement

ஆனால் இருவருக்குமே ஒருவருக்கொருவர் வெளிப்படையாய் அதை சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ!

அத்தனை தயக்கத்தையும் தடைகளையும் உடைத்துக் கொண்டு இருவரில் ஒருவர் மனம் திறந்து விட்டாலும் இந்த உறவு உயிர் நிலையை எட்டி விடும்.

ஆனால் அது காலத்தின் கையில் இருக்கும் போது யாரால் என்ன செய்திட முடியும்?!

Advertisement

கணவனின் பாராமுகத்தால் அரைகுறையாய் தூங்கியவள் சீக்கிரமே எழுந்து வேலையை கவனிக்கச் சென்றிருந்தாள்.

Advertisement

தூக்கம் கலைந்தவனுக்கு இரவு, தான் அவளிடம் பேசியது நினைவு வர தலையில் கை வைத்து விட்டிருந்தான்.

என்ன நினைத்திருப்பாளோ என்ற கவலையில் ருத்ரேஸ்வரன் வெளியில் வர செங்காந்தளோ எப்போதும் போல் தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

“காந்தா..”

Advertisement

“மாமா?”

“பாப்பாக்கு லீவு தான நான் போகும் போது உங்களைத் தோப்பு வீட்டில் விட்டுட்டு போறேன். ரம்யா கூட்டிட்டு வரச் சொன்னா..”

“சரி மாமா.”, என்றவளை ஒரு பார்வைப் பார்த்து அவன் நகர்ந்திருக்க பெண்ணவளோ மொத்தமாய் குழம்பியிருந்தாள்.

மகள் எழுந்ததும் அவளைத் தயார் செய்து அவளும் கிளம்பி வர ருத்ரேஸ்வரன் இருவரையும் அழைத்துக் கொண்டு தோப்பு வீட்டிற்குச் சென்றான்.

பிள்ளையைப் பார்த்ததும் அனைவரும் ஹாய் என்று ஆர்பரிக்க அவளோ தாயின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

“அவளை ஏன் பயமுறுத்துறீங்க இப்போ?”, என்ற ருத்ரேஸ்வரன் இயல்பாய் சிரிக்க அதையே கவனித்து மென்னகைத்தாள் செங்காந்தள்.

ரம்யா அதைக் குறித்துக் கொண்டவளாய் அவளுக்கு கையசைத்து தோளில் கைப் போட்ட படி தன்னருகில் நிறுத்திக் கொண்டாள்.

“செங்கா க்கா.. வாங்க வாங்க..”, என்று வந்த பொன்னியைய் பார்த்ததும் தீப்தி அவளிடம் ஓடியிருந்தாள்.

“காந்தா நான் கிளம்புறேன். சாயிந்தரம் வந்து கூட்டிட்டு போறேன்.”

“சரி மாமா..”, என்றவள் அவன் கிளம்பிய பின் தான் ரம்யாவின் புறம் தலையைத் திருப்பினாள்.

“ப்பா.. உங்க ஆளு கண்ணை விட்டு மறைஞ்சா தான் நாங்க எல்லாம் கண்ணுக்குத் தெரியுவோம் போல.”

“அப்படியெல்லாம் இல்ல கா..”

“ம்ம் அதான் பார்த்தோமே.. ஊருக்கெல்லாம் செங்கா.. உங்க அவருக்கு மட்டும் தான் காந்தா வா..”

“அடியாத்தி என்னவெல்லாம் கவனிக்குறீங்க நீங்க?!!”

“இல்லைனால் இவங்ககிட்ட எல்லாம் வேலை வாங்க முடியுமா?”

“..”

சரி சொல்லு நான் சொன்னது சரி தான?”

“ம்ம் ஆமா. அவங்க மட்டும்தேன் அப்படி கூப்பிடுவாக.”

“ஒரே லவ்ஸ்ஸா தான் இருக்கு..”, என்றவளுக்கு புன்னகைத்தவளாய் அவளோடு அங்கிருந்த படியில் அமர்ந்தாள்.

“இன்னைக்கு வேலை பக்கத்து கிராமத்தில் தான். உன் பொண்ணுக்கு லீவ்னு சொன்னான் அதான் எங்களோட கூட்டிட்டு போலாமேனு வர சொன்னேன்.”

“நீங்க எல்லாருமே மெட்ராஸில தான் இருக்கீகளா?”

“ம்ம் ஆமா செங்கா.. உன் புருஷன் தான் தப்பிச்சு வந்து இங்கே நிம்மதியா வாழுறான்.”

“..”

“அவன் இவன்னு சொன்னா கோப பட மாட்டியே?! “

“ச்ச ச்ச ப்ரெண்ட்ஸுக்குள்ளே வேற எப்படி பேசிப்பாக..”

“..”

“நீங்க ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸோ? உங்களோட கொஞ்சம் இயல்பா பேசி சிரிச்சு இருக்காங்க மாமா.”

“ம்ம்.. நான் ருத்ரா அப்பறம் இன்னும் இரண்டு பேர் தான் கொஞ்சம் க்ளோஸ்.

இவன் கல்யாணத்துக்கு ஒரு மாசம் வரைக்கும் டச்ல இருந்தோம். ஆனால் கல்யாணத்தைப் பத்தி வாயே திறக்கலை.”

“…”

“நம்பரும் மாத்திட்டான். காலேஜ் குரூப்பில் ஒருத்தன் மூலமா தான் இப்போ நம்பர் கிடைச்சது.”

“ம்ம்..”

“உன்னைப் பார்க்கவே இந்த கோவில் சிலைனு சொல்லுவாங்களே! அப்படி இருக்க செங்கா..”

“அக்கா கேலி பண்ணாதீங்க..”

“நிஜமா தான் சொல்றேன். இந்த பொட்டு குங்குமம் மூக்குத்தி கண்ணாடி வளையல் எல்லாத்தையும் விட இந்த சாதாரண புடவையை கூட எவ்வளவு அழகா கட்டியிருக்கத் தெரியுமா!

இந்த காலத்தில யாரும் மூக்குத்தி போட்டாலே பெரிய விஷயம் தான். இதில் இரட்டை மூக்குத்தி வேற! ரொம்ப அழகாயிருக்கு.”

“சின்ன வயசில டீவியில் ஒரு தடவை எம் எஸ் சுப்புலட்சுமியோட பாட்டு பார்த்தேன். அப்போ அவங்க மூக்குத்தியைப் பார்த்துட்டு என்ன அழகாயிருக்காங்கலனு தோணிச்சு.”

“..”

“அப்பறம் என்னோட அத்தை ஒருத்தவங்க இரண்டு பக்க மூக்குத்தி போட்டுருப்பாங்க அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சது.

அடம் பிடிச்சு இரண்டு பக்கமும் மூக்கு குத்திகிட்டேன். கல்யாணத்துக்கு என்ன வாங்குறீகளோ இல்லையோ இந்த நாலு கல் மூக்குத்தி போட்டே ஆகணும்னு கேட்டு வாங்கினேன் க்கா..”

“நேத்து உன்னைப் பார்த்தப்போ ரொம்ப அமைதினு நினைச்சேன். ஆனால் ரொம்ப நல்லா பேசுற நீ.”

“வீட்டில் கொஞ்சம் அப்படியே இருந்து பழகிட்டேன். இங்கே நீங்க நல்லா பேசுறீங்க அதேன் நானும் பேசுறேன்.”

“ரம்யா வா கிளம்பலாம். நேரமாகுது.”, என்று சுரேஷ் கூற அனைவருமாய் காரில் கிளம்பினர்.

மற்றவர்கள் அங்கு வேலையை ஆரம்பிக்க செங்காந்தளோடு ஓரமாய் மர நிழலில் அமர்ந்தவளாய் ரம்யா அவளிடம்,

“அப்பறம் உன் மாமா உன்னை எப்படி பார்த்துக்குறான்?”, என்றதற்கு அழகாய் புன்னகைத்தவளை ஆச்சரியமாய் பார்த்திருந்தாள் ரம்யா.

மனதினுள் ஏதோ நினைத்தவளாய் போனில் ரெக்கார்டரை ஆன் செய்து வைத்து விட்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

“என்ன சிரிக்குற? அவ்வளவு லவ்ஸா?!”

“ம்ம்..”

“பாருடா! உங்க காதல் கதையைப் பத்தி சொல்லேன் கேட்போம்.”

“வேலையைப் பார்க்கணும்னு சொல்லிட்டு கதை கேட்குறேன்னு சொல்றீக?”

“இதுவும் வேலை தான். கிராமத்து காதல் கதைனு போட்டா நூறு நாள் கூட ஓட வாய்ப்பிருக்குல..”

“சரியான ஆளுதேன் நீங்க.”

“மழுப்பாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..”

“அவருக்கு இந்த கல்யாணம் சுத்தமா பிடிக்கலை கா..”, என்றவள் சாதாரணமாய் கூறிவிட்டு அவளை ஏறிட்டாள்.

“அதனாலதேன் உங்களை எல்லாம் கூப்பிடலையா இருக்கும். அதனால அவுக மேல கோவப்படாதீக. உங்க சிநேகிதருங்க கிட்டேயும் சொல்லுங்க.”

“அப்பறம் லவ்ஸுனு சொன்ன?!”

“ம்ம் எனக்கு அவரு மேல..”, என்று செங்காந்தள் கூறியதில் கண்களை அகல விரித்திருந்தாள் ரம்யா.

“என் மாமா மாதிரி ஒருத்தரை எங்கேயுமே பார்க்க முடியாது. ரொம்ப நல்லவுக. பொறுமைசாலி. என்ன தான் பிடிக்காம கட்டிகிட்டாலும் இத்தனை வருசமும் என்னை எம்புட்டு நல்லா பார்த்துகிறாகத் தெரியுமா!”

“!!”

“என்னக்கா இப்படி முழிக்குறீங்க?”

“எனக்கு உன் காதல் கதை ஒண்ணும் புரியலை தாயே!”, என்றதற்கு குலுங்கிச் சிரித்தாள் செங்காந்தள்.

“என்ன சிரிக்குற. பிடிக்காம கட்டிக்கிட்டான்ற ஆனால் நல்லவன்ங்கிற. ரொம்ப பிடிக்கும்ங்கிற. என்னனு புரியும் எனக்கு?”

“நீங்க சொல்லுங்க உங்களுக்கு பிடிக்காத கல்யாணமா இருந்தா நீங்க என்ன பண்ணிருப்பீங்க?”

“ம்ம் இதோ இப்போ இருக்கேனே டிவோர்ஸ் பண்ணிட்டு தனியா ஜாலியா இப்படி தான் இருப்பேன்.”

“ஐயோ மன்னிச்சுகிடுங்க எனக்குத் தெரியாது!! நான் சாதாரணமா தான் கேட்டேன்.”

“ஏன் டென்ஷன் ஆகுற செங்கா. நிஜத்தை தான் சொன்னேன். நீ சொல்லு..”

“எங்க மாமாக்கு பிடிக்கலை ஆனால் அதுக்காக அவர் என்னை எப்பவும் திட்டவோ அடிக்கவோ பண்ணதேயில்லை.”

“ஏதே அடிக்குறதா?!!”

“ஆமா இங்கே ஊருக்குள்ளே எத்தனை பேரு புருசன்கிட்ட தினம் தினம் அடி வாங்குவாகத் தெரியுமா?”

“!!”

“பிடிச்சு கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழுறவுகளே சண்டைனு வந்தா யோசிக்காம கையை நீட்டிருவாக.

ஆனால் இவுக இத்தனை வருசத்தில் என்கிட்ட குரல் உசத்தி கூட பேசினது இல்ல.”

“சரி தான் அவன் பேசாமயே இருக்குறதை நீ உனக்கு ஏத்த மாதிரி மாத்திகிட்டியா?”

“உங்களுக்குப் புரியலை க்கா..”

“!!!”

“உங்க விருப்பப்படி உங்க வாழ்க்கை அமையலைனால் உள்ளுக்குள்ளே ஒரு ஆத்திரம் வரும்.

அது தான் மனுஷ இயல்பு. எனக்கு ஏன் இப்படி? நான் என்ன தப்பு பண்ணேன்னு ஒரு கோபம் ஆத்திரம் வரும் தான?”

“!!”

“அதுக்கு காரணமானவங்க உங்க கண்ணு முன்னாடியே உங்க கூடவே ஒரே அறையிலேயே இருக்காங்க. நாள் கணக்கில் மாச கணக்கில் வருசகணக்கில்.

உங்களால அவங்க மேல அந்த ஆத்திரத்தை காட்டாம இருந்திட முடியுமா?”

“!!”

“ஆனால் அவுகளால முடிஞ்சுது. இப்பவும் முடியுது. இது போதாதா அவுகளை எனக்குப் பிடிக்குறதுக்கு?”

“செங்கா!! இந்த உலகத்திலேயே உன்னால மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும்னு நினைக்குறேன்.

அப்போ உன் வாழ்க்கையைப் பத்தி உனக்கு ஒரு ஆசை இருந்துருக்குமே? அது இப்போ போயிடுச்சே. அது அவனால தான?!”

“உங்களை மாதிரி மெத்த படிச்சு டவுண்ல இருந்திருந்தா நீங்க சொல்றது சரிக்கா.

ஆனால் எனக்கு அப்படியெல்லாம் எந்த ஆசையும் இல்ல. அதனால பெருசா எதுவும் தோணலை.”

“உன் மனசிலிருக்குறதை அவன்கிட்ட எப்போவாவது சொல்லிருக்கியா?”

“ம்ஹூம்.”

“அது ஏன்?!”

“அவுகளுக்கே எப்போவாவது புரியும். நானா எதாவது பேசி அவுகளைக் கஷ்டப்படுத்த விரும்பலை.”

“நல்லா எதாவது சொல்லிற போறேன்.”, என்றதில் செங்காந்தளிடத்தில் மீண்டுமாய் புன்னகை.

“பொம்பளைங்களுக்கு ஒருத்தனுக்கு நம்மை பிடிச்சுருக்குனு அவங்க பார்வையை வைச்சே கூட புரிஞ்சுரும். அதே மாதிரி உன்னை எனக்குப் பிடிச்சுருக்கு டா மடப் பயலேனு ஆயிரம் வழியில் உணர்த்தவும் முடியும்.

ஆனால் இந்த ஆம்பளைங்களுக்கு நேரடியா நாமளே போய் உங்களை எனக்குப் பிடிச்சுருக்குனு சொல்லாத வரைக்கும் அது எப்பவும் புரியாது. அப்படி ஒரு மர மண்டைங்க”

“அப்படியா சொல்லுதீக?”

“பின்ன இல்லைனால் இந்நேரத்துக்கு உன் புருசனுக்கு புரிஞ்சுருக்கணுமே. நடக்கலைல?”

“!!”

“ஆக மொத்தம் சிட்டியோ கிராமமோ காதலிக்கவே தெரியாத ஒருத்தனுக்கு தான் அழகா காதலிக்க தெரிஞ்ச துணை கிடைக்குது.”

“..”

“உனக்கு அவன் மேல கோவமே வரலையா ஒரு தடவை கூட? உண்மையைச் சொல்லு..”

“ம்ஹும். அவுகளை ரொம்ப பிடிக்கும் அப்பறம் எப்படி கோபம் வரும்.”

“அடிப்போடி..”, என்றதற்கும் புன்னகை தான் செங்காந்தளிடத்தில். அந்நேரம் மற்றவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த தீப்தி வந்து தாயின் மடியில் அமர்ந்து கொண்டாள்.

மகளின் தலையை ஆதரவாய் வருடியவளைப் பார்த்த படியே ரம்யா அமர்ந்திருந்தாள்.

“என்னக்கா?”

“எனக்கு அவன் மேல கோவம் கோவமா வருது. எதுவுமே பிடிக்கலையாம். ஆனா..”, என்றவள் குழந்தையின் பொருட்டு பேச்சை அப்படியே நிறுத்தியிருந்தாள்.

“பாப்பா போய் பொன்னி அக்காவை இரண்டு இளநீர் வாங்கியாற சொல்லுறியா?”

“ம்ம் சரி ம்மா..”, என்ற சின்னவள் அங்கிருந்து ஓடியிருக்க செங்காந்தள் புன்னகையோடு,

“பாப்பா என்னைக் கட்டாயப்படுத்தி வந்தவ இல்லக்கா..”

“!!”

“எங்க ஊர் மாதிரி கிராமத்திலெல்லாம் கல்யாணம் எப்படி கௌரவமா பார்க்கப் படுதோ அதே மாதிரி தான் குழந்தையும். ஆனால் அது உருவாகுற சூழ்நிலைகள் பலவிதமா இருக்கும்.

முக்கியமா அதில் பொண்ணுகளோட விருப்பம்னு ஒண்ணு கண்டிப்பா இருக்காது.

ஆனால் என் மாமா அப்படியில்ல. அதே நேரம் குழந்தைனு ஒண்ணு பெத்துக்காம இருக்குற சூழ்நிலையும் எங்களுக்கு அமையல.”

“என்ன வேணாலும் சொல்லு.. என்னால..”, என்றவள் இடவலமாய் தலையசைத்து தூரத்தை வெறித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!