Skip to content
Post Views: 3,713
அன்பு – 4
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,
Advertisement
சென்னை நுங்கம்பாக்கம்
Advertisement
Advertisement
அந்த உயர்தர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைந்திருந்த உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ட்ரெட்மில்லில் (Treadmill) வியர்க்க விறுவிறுக்க ஓடிக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
Advertisement
நான்கு வருடங்களுக்கு முன்பு ஒடிசலான தேகத்தோடு, கண்களில் கனவுடனும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடனும் சென்னையில் கால் பதித்திருந்த இளைஞன் பிரபஞ்சன் என்றோ தொலைந்து போயிருந்தான்.
வயதும், அனுபவமும் அவனை பக்குவப்படுத்தியிருக்க, கனவிலும் மறந்திட முடியா சில காயங்கள் அந்த இளைஞனின் இதயத்தை இறுக செய்திருந்தது!!
முன்பும் அவன் கடந்து வந்த பாதை ஒன்றும் மலர் கம்பளத்தால் ஆனதில்லை என்றாலும், அவன் துன்பத்தில் துவண்டு போகாமல், அடுத்தடுத்து முன்னேற பற்றுகோளாய் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ஒரு நாள், அவனின் காத்திருப்பும் எதிர்பார்ப்பும் கானல் நீராகிப் போக, மொத்தமாய் நொறுங்கி விட்டான்.
அவன் வாழ்வதற்கு இருந்த ஒரே காரணமும், இல்லாமல் போக, எதற்கு வாழ வேண்டும் என தவறான பாதையில் சிந்திக்கத் தொடங்கி விட்ட அவனின் மனதை நேர்படுத்தி, சரியான வழியில் வழிநடத்தியது அவனைச் சுற்றியிருந்த சில நல்ல உள்ளங்களே.
இஷ்டமானவளிடமிருந்த அவனின் இதயத்தை இசையின் பக்கம் முயன்று திருப்ப, பயன், இன்று இந்திய திரையுலகில் முன்னணி பாடகரில் ஒருவராக பிரபஞ்சனும் மிளிர்கிறான்.
தனிப்பட்ட வாழ்க்கை அவனுக்கு பலத்த காயங்களை பரிசளித்திருந்தாலும், தொழில்முறை வாழ்க்கையில், அவன் கை வைத்த அனைத்தும் வெற்றி தான்.
இந்த நான்கு வருடத்தில், தன்னுடைய திறமையை சரியான முறையில் பயன்படுத்தி, தமிழ் மட்டுமல்லாது, மற்ற தென்னிந்திய மொழிகளோடு, ஹிந்தி மொழியிலும் தன் குரல் வளத்தால் இசைத்துறையில் உச்சம் தொட்டிருந்தான்.
கையில் பத்து ரூபாய் இல்லாமல், ஒரு நேர உணவிற்கு கஷ்டப்பட்ட போது இருந்த நிம்மதி கூட, இன்று இத்தனை பணத்தையும், புகழையும் சம்பாதித்த பின்பும் அவனுக்கு கிடைக்கவில்லை.
எதற்காக இந்த வாழ்க்கை என இலக்கையில்லாமல் பயணிக்கும் கப்பல் போல், அப்படியே வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான் பிரபஞ்சன்.
நேரம் இரவு பதினொன்றரை மணியை தாண்டியிருக்க, அதைக் கூட உணராமல், ஏதேதோ எண்ணங்களுடன் அவன் கையெடையை (டம்பெல்ஸ் Dumbbells) கணக்கே இல்லாமல் தூக்கி, இறக்கி பயிற்சி செய்து கொண்டிருக்க, அவனைக் கலைத்தது ஒரு குரல்.
“சார்!!! டைம் ஆச்சு!!!” என தயங்கிக் கொண்டே அந்த உடற்பயிற்சி கூடத்தின் பொறுப்பாளர் தலையை சொரிய,
“ப்ச்!!” என தன்னையே நிந்தித்துக் கொண்டவன்,
“சாரி சார்!!! கவனிக்கலை!!” என மன்னிப்பு வேண்டிவிட்டு, உடனடியாக தன் பயிற்சியை முடித்துக்கொண்டு அவரிடம் விடைபெற்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள அவனுடைய வீட்டிற்கு செல்வதற்கு மின்தூக்கியில் ஏறியவன், கைபேசி சப்தத்தில் கவனத்தை அங்கு திருப்பினான்.
“ஹலோ கவின் ண்ணா!!!” என்றவனின் குரல் மென்மையாகியிருந்தது.
அவன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்த சமயத்தில், அவனுக்கு உறுதுணையாக இருந்து அவனை மீட்டுக் கொண்டுவந்தது கவினும் மதுவும் தான்.
எனவே, அவர்கள் மீது இருந்த மதிப்பும் அன்பும் இன்னும் பெருகியிருந்தது பிரபஞ்சனுக்கு.
தனக்கு நெருக்கமானவர்களாய் அவர்களை உணர்ந்த பின், சார், மேடம் எனும் அழைப்புகள் தன்னாலே தொலைந்திருந்தது.
“டேய்!!! ஃப்ரீயா நீ??” என்றான் கவின்.
“ஃப்ரீ தான் ண்ணா.. சொல்லுங்க”
“மது!! மதுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம்.. அவளைக் கொஞ்சம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறியா??? என்.. என்னால வர முடியாது டா.. ஷூட்டிங் போயிட்டு இருக்கு!!! கேன்சல் பண்ண முடியாது!!” என சொல்லியவனின் குரலில் பதற்றமும், தயக்கமும் சரிசமமாய் இருந்தது.
“ண்ணா!! கூட்டிட்டு போன்னு சொன்னா போகப் போறேன்.. எதுக்கு ரீசன் எல்லாம்?? நீங்க எதையும் நினைச்சு பீல் பண்ணாம, அங்க வேலையைப் பாருங்க.. மதுவை நான் பார்த்துக்கிறேன்” என தைரியமளித்த பிரபஞ்சன், தன் வீட்டிற்குச் செல்லாமல் எதிரில் இருந்த வீட்டின் முன் சென்று நின்று அழைப்பு மணியை அழுத்தினான்.
ஆம், மது, பிரபஞ்சன் பிளாட்டின் எதிரில் தான் குடியிருக்கிறாள், கவினுடன்!!!
இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இருவரும், பெற்றவரின் எதிர்ப்பை மீறி, கடந்த இரண்டு வருடமாக லிவ் இன்னில் (திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிப்பது) வாழ்கின்றனர்.
பிரபஞ்சனுக்கு லிவ்- இன் மீது எல்லாம் ஒரு நல்ல அபிப்பிராயமோ, நம்பிக்கையோ இல்லாத போதும், அவர்களின் தனிப்பட்ட முடிவிற்குள் மூக்கை நுழைக்க அவன் முயலவில்லை.
பல வருட உழைப்பிற்கு பிறகு, வலைத்தொடர்(web series) ஒன்றினை இயக்க கவினுக்கு வாய்ப்பு கிடைக்க, தன் திறமையை உலகிற்கு நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக உபயோகிக்க அல்லும் பகலும் அவன் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தான்.
சென்ற மாதம் வெளிநாட்டில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க சென்றிருந்த மதுவிற்கு எதிர்பாராதவிதமாக கையில் அடிபட்டுவிட, லேசாய் எலும்பு முறிவு ஆகிவிட்டது. எனவே வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனித்திருக்கும் மதுவிற்கு தனிமை மிகவும் கொடுமையாக இருந்தது.
தேனீ போல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணவளுக்கு, கடந்த ஒரு மாதமாக வீட்டிலே அடைந்து கிடப்பதும், கவினின் அண்மை இல்லாமல் இருப்பதும் ஒரு வித மனச்சோர்வைக் கொடுக்க, மிகவும் பலவீனமாக காணப்பட்டாள்.
இரண்டு நிமிட காத்திருப்பிற்குப் பின் கதவைத் திறந்த மது, வெளியே நின்றிருந்த பிரபஞ்சனைக் கண்டு முறைத்து விட்டு மீண்டும் உள்ளே சென்று விட, பிரபஞ்சன் அவளைப் பின் தொடர்ந்தான்.
“என்னாச்சு?? உடம்பு முடியலைனா சொல்லிருக்கலாம்ல..” என சோர்வாகத் தெரிந்த மதுவிடம் அக்கறையோடு கேட்டான் பிரபஞ்சன்.
கவினின் சூழ்நிலை புரிந்தாலும், ஒரு வித மன அழுத்தத்தில் இருந்த மதுவிற்கு, கவின் வராதது எரிச்சலைத் தர,
“உனக்கு எதுக்கு சொல்லணும் நான்?? உன் நொண்ணனை வர சொன்னா நீ எதுக்கு முதல்ல வந்த?? லவ் பண்றப்போ மட்டும் உன் அண்ணனுக்கு இனிச்சிதா?? இன்னைக்கு முடியலைனதும் நான் சலிச்சுப் போயிட்டேனா???” என இவனிடம் எரிந்து விழுந்தாள்.
அவள் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட பிரபஞ்சன்,
“மது!!! உங்களுக்கே தெரியும்” என அவன் சமாதானம் செய்ய முனைய,
மேசை மீதிருந்த செய்தித்தாளை எடுத்து அவன் மீது வீசியெறிந்த மது,
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!! வாங்க போங்கன்னு கூப்பிட்டு என்னை கிழவி மாதிரி பீல் பண்ண வைக்காதன்னு.. ஜஸ்ட் உன்னை விட மூணு வயசு தான் அதிகம் எனக்கு!!! இன்னொரு முறை மரியாதை தரேன் மண்ணாங்கட்டி தரேன்னு வந்த!! வகுந்திருவேன் உன்னை!!!” என்றவளுக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது.
இந்த நிலையிலும், எதற்கெல்லாம் இவள் வருந்தி சண்டையிடுகிறாள் என நினைத்த பிரபஞ்சனுக்கு லேசாய் புன்னகை பூக்க,
சிரித்தால் இன்னும் கோபம் கொள்வாள் என்று அஞ்சி, புன்னகையை அதரங்களுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.
“சரி!!! பர்ஸ்ட் ஹாஸ்பிடல் போகலாம்.. வாங்…ப்ச் வா மது!!!” என அவளை நெருங்கியிருக்க,
அதற்குள் மதுவிற்கு மீண்டும் குமட்டிக் கொண்டு வர, வேகமாய் குளியலறை சென்றவள் அங்கேயே குடித்த தண்ணீர் முழுவதும் வெளியே எடுத்திருந்தாள்.
“ஹேய் என்னாச்சு!!!” என அவள் பின்னே சென்ற பிரபஞ்சன், ஆதரவாய் அவள் நெற்றியைப் பற்றிக் கொள்ள,
சற்று நேரத்திற்கெல்லாம் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்த மது, உடலில் இருந்த மொத்த சக்தியும் வடிந்ததைப் போல் அப்படியே அந்த நீள்விருக்கையில் சுருண்டு படுத்துவிட்டாள்.
“மது!!! என்ன பண்ணுது!! சாப்பிட்டது எதுவும் சேரலையா?? இரு லெமன் ஜுஸ் பிழிஞ்சு எடுத்துட்டு வரேன்.. யூ வில் ஃபீல் பெட்டர்” என்று கூறிக்கொண்டே சமையலறை பக்கம் சென்றவனின் கால்கள் மது சொன்ன செய்தியில் அப்படியே அதிர்ச்சியில் நின்று விட,
“என்.. என்ன சொன்ன???” தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என ஊர்ஜிதப் படுத்திக்கொள்ள அவன் மீண்டும் கேட்க,
“உன் காதுல சரியாத்தான் விழுந்தது!!! யெஸ்.. ஐ அம் பிரக்னென்ட்!!!” என மீண்டும் தெளிவாகச் சொன்னவளின் முகத்தில் இருந்த உறுதி, அவள் விளையாடவில்லை என்பதை பிரபஞ்சனுக்கு உணர்த்த, அவன் முகத்தில் ஈயாடவில்லை.
என்னதான் திரைத்துறையில் இருந்தாலும், அவனின் மனம் இன்னும் மதுரை எல்லையை விட்டு தாண்டியிருக்கவில்லை. திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதையே அவனால் இன்னும் சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனும்போது, இப்போது இந்த செய்தியை சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை.
அதற்காக அவர்களை விமர்சிக்கவோ, இல்லை தவறாய் நினைக்கவோ அவன் முனையவில்லை. ஆனாலும் இந்த கலாச்சாரம், ஏனோ இந்தக்காலத்தில் இதெல்லாம் சகஜம் தானே என அனைவரையும் போல் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்வதை விட, அவன் வளர்ந்த விதம், அவனை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை.
ஆக, கவின் பேசும்போது அவன் குரலில் இருந்த தயக்கம் எதனால் என இப்போது பிரபஞ்சனுக்கு பிடிபட, மதுவின் கோபம் நியாயம் தான் என அவனுக்கு விளங்கியது.
நடந்தது நடந்துவிட்டது!!! இது அவர்களின் தனிப்பட்ட விஷயம்!! இதில் தான் பேசவோ, கருத்து சொல்லவோ எதுவும் இல்லை என உணர்ந்திருந்த பிரபஞ்சன், அவளுக்கு குடிக்க எலுமிச்சம்பழச்சாறை பிழிந்து கொடுத்துவிட்டு, அவள் சற்று தெம்பாக உணர்ந்த பின், அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
முன்பே மது மருத்துவருக்கு அழைத்துக் கூறியிருந்தபடியால், நள்ளிரவாக இருந்தாலும் அங்கே வேலைகள் அனைத்தும் துரித கதியில் நடந்தது.
மீண்டும் அங்கே ஒருமுறை கர்ப்பத்தை உறுதி செய்த மருத்துவர்,
“ரெண்டு மாசம் ஆகிடுச்சு!! கவனிக்கலையா மது??” என கேட்டுக்கொண்டே அவளுடைய ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
“இர்ரெகுலர் பீரியட்ஸ்னால , ஐ ஹாவ் நோ ஐடியா மேம்.. அண்ட் நாங்க சேஃபா தான் இருந்தோம்.. எப்படி ஃபார்ம் ஆச்சுன்னு தெரியலை” என மது இயல்பாய் சொல்ல,
பிரபஞ்சனுக்கு தான், அய்யோ என்றிருந்தது.
“நான் வேணும்னா வெளிய இருக்கட்டுமா??” என சங்கடப்பட்டுக்கொண்டு அவன் எழுந்து கொள்ள,
“அடச்சீ உட்காரு!! இருக்க டென்ஷன்ல நீ வேற.. இங்க என்ன பிரசவமா பார்க்கிறாங்க?? வெட்கப்பட்டு ஓடி ஒளிஞ்சுகிட்டு.. உன்னோட பெரிய இம்சை!!! அவனை வர சொன்னா, உன்னை என் தலையில கட்டிட்டு என்னை சாவடிக்கிறான் உங்க நொண்ணன்” என முன்பே மன உளைச்சலில் இருந்தவளிடம் பிரபா வந்து சிக்கிக்கொள்ள, தன் கோபம் மொத்தத்தையும் இறக்கும் வடிகாலாய் அவனை பயன்படுத்திக்கொண்டாள்.
“ஷ்!!! மது!!! ரிலாக்ஸ்!!! இந்த மாதிரி டைம்ல இவளோ கோபம் நல்லதில்லை!!!” என கண்டித்த மருத்துவர்,
“உங்களுக்கு கம்பர்டபிளா இல்லைனா, யூ மே வெய்ட் அவுட்சைட் சார்” என பிரபஞ்சனிடமும் கூற,
மதுவை தனியாக விட மனமில்லாமல், “நோ இஷ்யூஸ் மேம்!!” என மறுத்து மீண்டும் அமர்ந்து கொண்டான்.
“ஓகே மது!! என்ன டிசைட் பண்ணியிருக்க?? பிரோசீட் பண்ணலாமா?? இல்லை அபார்ட் பண்ணிடலாமா?? எதுனாலும் சீக்கிரம் சொல்லு!! வீ டோண்ட் ஹேவ் மச் டைம்”
“என்னது அபார்டா!!!” என பிரபஞ்சன் தன்னையும் மீறி கத்தியிருக்க,
மதுவின் முறைப்பில் வாயை கப்பென மூடிக்கொண்டான்.
“இன்னும் எதுவும் டிசைட் பண்ணலை மேம்.. கவின் கூட பேசிட்டு, வில் லெட் யூ க்நோ!!!” என்ற மது எழுந்து கொள்ள,
“ஓகே எதுனாலும் ரெண்டு நாளுக்குள்ள சொல்லுங்க.. அதுவரைக்கும் இந்த டேப்லெட்ஸ் சாப்பிடு!! வாமிட்டிங் கன்ட்ரோல் ஆகும்!!” என சில அறிவுரைகளுடன் அவர்களுக்கு விடை கொடுத்தார் அந்த மருத்துவர்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வரையில், இருவருக்குமிடையே எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை.
அவர்கள் குடியிருப்பு வளாகத்தில் வந்து கார் நிற்கவும், மது கதவைத் திறந்து இறங்கிக்கொள்ள முனைய,
“நான்.. ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க” என்ற பிரபஞ்சனின் பேச்சு அவளை நிறுத்தியது!!!
‘ நீயே பேசு’ என்பதாய் மது அமைதியாகப் பார்த்திருக்க,
“நான் இதுல கருத்து சொல்லக்கூடாது தான்.. பட் சொல்லாம இருக்க முடியலை… ” என பலத்த தயக்கத்துடன் அவன் மென்று முழுங்க,
“சொல்றியா இல்லை நான் போகவா?? ஐ பீல் சோ டயர்ட்!!” என மது பொறுமையின்றி கடுகடுத்தாள்.
“வந்து!!! பேபியை கலைச்சுராதீங்க!!! என்ன டா நம்ம ரெண்டு பேர் எடுக்க வேண்டிய முடிவுல இவன் கருத்து சொல்றானேன்னு யோசிக்காதீங்க.. என்ன இருந்தாலும் ஒரு உயிர் இல்லையா??? நீங்க ரெண்டு பேர் பண்ண தப்புக்காக ஒரு உயிரைக் கொல்றது பாவம் தான??” என அவளைப் பார்க்காமல் பேசிக்கொண்டே போனவன்,
மதுவிடம் பதிலின்றிப் போக, அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“ஏண்டா நானும் அவனும் அவ்வளவு லவ்வோட லவ் மேக்கிங் பண்ணதை தப்புன்னு சொன்னது மட்டுமில்லாம ஏதோ நான் கொலை பண்ணப்போற மாதிரி பில்டப் கொடுத்துட்டு இருக்க!!! பர்ஸ்ட் உன்னைத்தான் கொல்லணும்!!! ஜாக்கி ஜட்டியும், லூயிஸ் உய்ட்டன் சட்டையும் போட்டு வெளிய மாடர்னா சுத்தினாலும், உள்ளுக்குள்ள அதே பழைய பஞ்சாங்கம் தான் நீ!!! நீயெல்லாம் திருந்தவே மாட்ட!! ஓடிப்போ!! என் கண்ணு முன்னாடி நிக்காத!!!” என பிரபஞ்சன் தோளில் இரண்டு அடி போட்டவள், கோபத்தில் கதவை பட்டென சாற்றிவிட்டு நடந்து முன்னே செல்ல,
அவளின் கோபம் புரிந்தாலும், மீண்டும் மனது கேளாமல்,
“உங்களுக்கு வளர்க்க இஷ்டம் இல்லைன்னா பெத்து என்கிட்டயாச்சும் கொடுத்துடுங்க.. நான் பார்த்துக்கிறேன்” என்று வேறு வாயை விட்டவனுக்கு பதிலாய் தூரத்தில் இருந்து கல் ஒன்று பறந்து அவனை நோக்கி வர,
கடைசி நொடியில் சுதாரித்து அவளின் அடியில் இருந்து தப்பினான்.
மதுவை வீட்டில் கொண்டு பத்திரமாய் விட்டுவிட்டு அவளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்த பிரபஞ்சனுக்கு, அதற்கு மேலும் உறக்கம் வராமல் போக, அங்கே வலப்பக்க மூலையில் அமைந்திருந்த ஒரு சிறிய அறைக்குள் நுழைந்து கொண்டவன், அந்த இரவை அங்கேயே கழித்தான்.
இரவெல்லாம் அவர்கள் என்ன முடிவெடுப்பார்களோ எனும் கவலையிலே கழித்த பிரபஞ்சனுக்கு, கவினும் மதுவும் சொன்ன செய்தியில் நெஞ்சம் நிறைந்து போனது!!!
மழலை வரும் நேரம், பிரபஞ்சனின் வாழ்விலும் வசந்தம் வீசப் போகிறது என அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
“காயம் தந்தவரே மருந்தாகிப் போகும் மாயமெல்லாம்
இந்த பொல்லாத காதலில் மட்டுமே சாத்தியம்!!”
error: Content is protected !!