Skip to content
Post Views: 4,902
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து
மு.வ உரை: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.”
சமையலறைக்குள் நுழைந்தவள் வேக மூச்சுகளை எடுத்த வண்ணம் சமையல் மேடையை அழுந்தப் பிடித்த படி நின்றிருந்தாள்.
என்னவோ கணவனின் பேச்சும் செயல்களும் அவளை படபடக்க வைத்துக் கொண்டிருந்தன.
Advertisement
இந்த எட்டு வருடத்தில் காதுக்கு வலிக்காத வண்ணம் அவன் சற்று முன் அழைத்த “டி” உடல் சிலிர்ப்பை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு முறையாவது டி என்று அவர் அழைத்தால் எப்படியிருக்கும் என்று பல நாட்கள் செங்காந்தள் யோசித்ததுண்டு.
இன்று தன் பார்வைக்குள் தொலைந்து போன வண்ணம் அவன் கூறிய விதத்தை நினைத்து நினைத்து திக்கு முக்காடிக் கொண்டிருப்பவளின் மிக நெருக்கத்தில் அரவம் கேட்டு சட்டென திரும்பினாள்.
Advertisement
அவளை உரசி விடும் தூரத்தில் நின்றவனை கண்டு கைகளில் சிறிது நடுக்கமே வந்திருந்தது.
Advertisement
“மாமா!!”, காற்றுக்கும் வலிக்காத அந்தக் குரல் இன்னுமாய் மனைவியின் பக்கம் அவனை இழுப்பதாய்.
“நான் கிளம்புறேன்.”
“போ..போய்ட்டு வாங்க மாமா..”, என்றவள் தவறியும் அவனது கண்களைச் சந்திக்கவில்லை.
Advertisement
“நேரமாகுது டி வரேன்.”, என்றவன் அவளிடம் கூறுவதாய் தனக்குத் தானே கூறிக் கொண்டு கிளம்பியிருந்தான்.
அன்று முழுவதுமே செங்காந்தளிற்கு வேலையே ஓடவில்லை.
தாம்பத்தியத்தின் அழகே தன்னிலை மறக்கும் கூடலை விட இது போன்ற சிறு சிறு சேட்டைகளும் செல்லக் கொஞ்சல்களும் தானே. இவை எதையுமே இத்தனை நாட்களில் உணர்ந்திராதவளுக்கு கணவனின் நினைவுகள் மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தது.
இந்த பரிணாமமெல்லாம் அவனிடம் இருக்குமா என்பதே சந்தேகம் அவளுக்கு.
கூடலில் தன்னைத் தாங்கியவன் தான் அதில் முதல் முறைக்கான பதட்டமும் அவளைக் காயப்படுத்தி விடக் கூடாது என்ற உணர்வுமே அவனின் கண்களில் மொத்தமாய் இருந்தது.
அதைத் தாண்டி அவள் எதிர்பார்த்த பெயர் தெரியாத ஏதோ ஒன்று இன்று கணவனின் கண்களில் கொட்டிக் கிடந்தது.
அதன் பெயர் தன் இணையின் மீதான விருப்பமும் காமமும்.
ஏற்கனவே கணவனுக்காக உருகிக் கொண்டிருப்பவள் இப்போது மொத்தமாய் கணவனிடம் தன்னைத் தொலைத்து விட்டிருந்தாள்.
அங்கு ருத்ரேஸ்வவரனுக்கும் அதே நிலை தான். வேலையில் தன்னைத் தொலைத்தாலும் மனைவியின் பார்வை உள்ளுக்குள் தீயை எரிய விட்டுக் கொண்டு தான் இருந்தது.
அவளருகில் சுத்தமாய் தன்னிலை தொலைத்து நின்றது ஏனோ கோபத்தை வர வைப்பதற்கு பதில் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
அப்படி இப்படியென அன்றைய வேலைகளைக் கவனித்தவன் மாலை ரம்யாவைப் பார்த்து வருவதற்காக தோட்டத்து வீட்டிற்கு வந்திருந்தான்.
அத்தனை பேரும் வெளித் திண்ணையிலும் வெளியில் நாற்காலியிலும் அமர்ந்து லேப்டாப்பையும் மொபைலையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ரம்யா..”
“ஹே வா ருத்ரா. உட்காரு.”
“எல்லாம் வசதியா இருக்கா? பொன்னி சமைச்சு கொடுத்தாளா?”
“ம்ம் இப்போ தான் கிளம்பி போனா. ரொம்பவே வசதியா இருக்கு டா.
அக்கம் பக்கத்து கிராமங்கள் அவங்களோட வாழ்வாதாரம் விவசாயம் இதெல்லாம் பத்தின ஒரு ப்ரோக்ராம் இன்னைக்கு ப்ளான் பண்ணின வேலைகள் எல்லாமே முடிஞ்சுது.”
“ஓ. சாப்டீங்களா எல்லாரும்?”
“ஆச்சு இப்போ தான். நீ?”
“இல்ல. வீட்டுக்குப் போயிட்டு தான்.”
“வாயேன் சாப்பிடு நான் போட்டு எடுத்துட்டு வரேன்.”
“இருக்கட்டும் காந்தா சாப்பிடாம காத்துட்டு இருப்பா.”
“காலையிலேயே சொல்லணும்னு நினைச்சேன். உன் வைஃப் ரொம்ப அழகாயிருக்காங்க.”
“…”
“வாயேன் அப்படியே கொஞ்சம் நடந்துட்டு வருவோம்.”, என்றவளுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்து அவளுடன் நடந்தான் ருத்ரேஸ்வரன்.
“என்ன பிரச்சனை உன் கல்யாணத்தில்? சாரி இத்தனை வருஷமும் பேசாம எதுவுமே தெரியாம இருந்துட்டேன்.”
“பிரச்சனை என்ன.. நம்ம மனுஷங்க தான் பிரச்சனையே. நானும் அவனும் ஒரே சேனல்ல தான் வேலை பார்த்தோம்.
பேசி பழகி காதலாச்சு. அப்போ எல்லாம் அழகா தெரிஞ்ச என்னோட படிப்பும் ஆளுமையும் பொண்டாட்டி ஆன பின்னாடி திமிரா தெரிய ஆரம்பிச்சுருச்சு.”
“!!”
“இதை பண்ணாத இப்படி பேசாதனு தொட்டதுக்கு எல்லாம் சண்டை. இரண்டு பேரும் படிச்சுருக்கோம் இரண்டு பேரும் வேலைக்கு போறோம் அப்போ இரண்டு பேருக்குமே ஈகோ இருக்கும் தான?”
“…”
“எங்க விஷயத்திலேயும் அது தான் நடந்தது. உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால இருக்க முடியாதுனு நான் ஒரு பக்கம் பொம்பளை நீயே இவ்வளவு இருந்தா எனக்கு இருக்காதானு அவன் ஒரு பக்கம் பிடிச்சு இழு இழுனு இழுத்து ஒரு கட்டத்தில் உறவு முறிஞ்சே போச்சு ருத்ரா”
“..”
“இப்போ யோசிச்சு பார்த்தா யார் சரி யார் தப்புனு ஆராய்ச்சி பண்ணி அதனால அந்த உறவை காயப்படுத்தி அசிங்கப்படுத்தி ஒரு கட்டத்தில் விட்டும் கொடுக்குற மாதிரி ஆகிடுது.”
“..”
“ஹே நான் பாட்டுக்கு ஏதோ உளறிட்டு இருக்கேன்.”
“அவரை மிஸ் பண்றனு நினைக்குறேன். ஆமா வா?”
“ம்ம் விட்டுக் கொடுத்துருக்கலாமோனு தோணும். ஆனால் அந்த யோசனை எனக்கு வர்றதுக்குள்ளேயே அவன் அடுத்த வாழ்க்கைகுள்ளே போயிட்டான்.”
“வேற கல்யாணத்தைப் பத்தி நீ யோசிக்கலையா ரம்யா?”
“இல்ல டா யோசிச்சு பார்த்தேன். ஒரு வேளை அந்த கமிட்மெண்ட்க்கு நான் ஒத்து வர மாட்டேனோனு தோணிடுச்சு. சோ அப்படியே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”
“நம்ம பசங்க எல்லாம் எங்கே எப்படியிருக்கானுங்க?”
“மோஸ்ட்லி எல்லாருமே சென்னை தான். ஒவ்வொருத்தர் வாழ்க்கை ஒவ்வொரு விதமா போகுது டா. ஆனால் எல்லாரும் உன் மேல கொலை காண்ட்ல தான் இருக்கானுங்க.”
“…”
“யார்கிட்டேயும் பேசணும்னு கூட தோணலையா ருத்ரா உனக்கு?”, என்ற நேரம் ஒரு திண்டின் அருகில் வந்திருக்க ருத்ரேஸ்வரன் அப்படியே அதில் சாய்ந்து நின்றிருந்தான்.
“பழைய ருத்ரேஸ்வரன் காணாம போய் எட்டு வருஷம் ஆச்சு ரம்யா. நான் ஏன் இப்படி இருந்தேன்னு யோசிக்குற நிலைமைக்கே இப்போ தான் வந்துருக்கேன்.”
“…”
“இந்தக் கல்யாணத்தில் சுத்தமா விருப்பமில்ல எனக்கு. எவ்வளவோ சொல்லியும் அம்மாவும் அப்பாவும் பிடிவாதமா இந்த கல்யாணத்தை நடத்திட்டாங்க.”
“என்ன டா நீ ஒரு கதை சொல்ற? இப்போ எல்லாம் ஓகே தான?”
“ஓகேனு சொல்லணும்னு எனக்கும் ஆசை தான்.”, என்றவன் முகத்தை அழுந்தத் துடைத்து கைகளை மார்பின் குறுக்கில் கட்டிய படி நின்றிருந்தான்.
“என்ன டா? நம்ம பேட்ஜிலேயே தெளிவான ஒருத்தன் நீ தான். உன் குணம் யாருக்குமே கிடையாது. நீயே இப்படி சொல்ற?”
“இதுக்கெல்லாம் இப்போ நான் தகுதியானவனே இல்ல ரம்யா. ஒட்டு மொத்த பாவத்தையும் அவளுக்கு பண்ணிருக்கேன்.
தினம் தினம் பெரிய குற்றவுணர்ச்சியா இருக்கு.”, என்றவன் சுருக்கமாய் தங்கள் வாழ்க்கையைப் பற்றி கூறியிருந்தான்.
“ருத்ரா நீயா டா இப்படி?!”
“..”
“அந்த பொண்ணு இடத்தில் நான் இருந்திருந்தா சரி தான் போடானு போயிருப்பேன். உன்னை நம்பி எப்படி டா ஒரு குழந்தையை வேற பெத்துருக்கு அந்த பொண்ணு?!”
“…”
“பண்ண தப்பை எல்லாம் சரி பண்ணணும்னு தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.
ஆனால் அவ மனசில் என்ன இருக்குனு என்னால கண்டு பிடிக்க முடியலை. ஓபனா எதுவும் பேச மாட்டேங்குறா.
அவளுக்குப் பிடிச்ச மாதிரி வேற வாழ்க்கை அமைச்சுகிட்டா கூட நான் அதுக்கு குறுக்க நிக்க மாட்டேன்.”
“எதாவது சொல்லிற போறேன். குடும்பமா சேர்ந்து ஒரு சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பாங்களாம் இவரு கல்யாணம் பிடிக்கலைனு மூஞ்சியைத் திருப்பிட்டு அலையுவாராம்.
இதுக்கு நடுவில் ஒரு பிள்ளையையும் கொடுத்துருவாராம். இப்போ வந்து அவளுக்கு வேற வாழ்க்கையாம். அசிங்கமா பேச வைச்சுறாத என்னை..”
“..”
“இதென்ன சென்னையா? சென்னையிலேயே நீ சொல்ற விஷயத்தைப் பண்றது ஒண்ணும் சாதாரணம் இல்ல.
அத்தனை பேரும் பொண்ணா பொறந்த பாவத்துக்கு எங்களை தான் பழி பேசுவாங்க. இதில் இங்கே இதெல்லாம் ஆகுற காரியமா? அதுவுமில்லாம..”
“??”
“எனக்கென்னவோ அவ உன் மேல ரொம்ப அன்பு வைச்சுருக்கானு தோணுது.”
“ம்ம் பத்தே நிமிஷத்தில் எல்லாத்தையும் கண்டு பிடிச்சுட்டியாக்கும்?”
“டேய் ஒரு பொண்ணோட பார்வை அவளுக்கு உரிமைபட்டவன் மேல பதியுற விதம் ஒண்ணு போதாதா இதைத் தெரிஞ்சுக்க?”
“..”
“இங்கே பாரு ருத்ரா நல்ல வாழ்க்கையை விட்டுடாத. உன் படிப்பும் அழகும் வயசும் ஒரு பைசாக்கு ப்ரயோஜனம் கிடையாது.
வயசாக ஆக நமக்கான ஒரு துணை இருந்தா நல்லாயிருக்குமேங்கிற நினைப்பு மட்டும் தான் இருக்கும்.”
“எனக்கும் அவளை யாருக்கோ விட்டுக் கொடுக்குற எண்ணமெல்லாம் இல்ல ரம்யா.
அதே நேரம் பிடிக்காத வாழ்க்கைகுள்ளே ஊருக்காக அவளை கட்டிப் போட்டு வைச்சுருக்கேனோனு தோணுது.”
“..”
“எனக்காக எல்லாமே பண்ணுவா. என் வீட்டுக்கு எல்லாமே அவ தான். ஆனால் அவ மனசில் என்ன இருக்குனு என்னால புரிஞ்சுக்க முடியலை. அந்த குழப்பத்தோட அவளை நெருங்கவும் மனசு முரண்டு பிடிக்குது.”
“நாசமா போச்சு. ஆக மொத்தம் எங்க எல்லாரையும் விட நீ தான் மொத்தமா நல்லாயில்ல போலேயே டா.”
“..”
“சரி விடு உனக்கு அவ பக்கத்து நியாயம் புரியுற அளவுக்கு வந்துருக்கே அதுவே முன்னேற்றம் தான். எல்லாம் சரியாயிடும். கவலைப் படாத.”
“ம்ம் சரி நேரமாச்சு நான் கிளம்புறேன். அப்பறம் நான் சொன்னதெல்லாம் பசங்ககிட்ட..”
“சொல்ல மாட்டேன் டா. இப்போ பேசின எதுவும் நம்மளைத் தாண்டி வெளியே போகாது.”
“தேங்க்ஸ் ரம்யா.”, என்றவன் அவளைத் தோப்பு வீட்டில் விட்டு விட்டு தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
காலையிலிருந்து இருந்த மோனநிலை மாறி ரம்யாவுடனான பேச்சுகளால் பழைய எண்ணங்கள் மனதை அலைகழிக்க ஆரம்பித்திருந்தது.
வாசலில் அமர்ந்திருந்த செங்காந்தள் ஆர்வமாய் எழுந்து நிற்க கணவனின் யோசனை தாங்கிய முகம் அவளைச் சற்று அமைதிப் படுத்தியிருந்தது.
முகத்தில் எவ்வித உணர்வுகளுமின்றி எப்போதும் போல் சாதாரணமாய் நின்றவளைக் கடந்து அவன் போக்கில் உள்ளே சென்றிருந்தான் ருத்ரேஸ்வரன்.
கணவனின் அருகில் சென்று கன்னம் தாங்கி என்னவாயிற்று என்று கேட்க ஆசை தான் ஆனால் அவள் அதை செய்ய முயற்சிக்கவில்லை.
உணவு நேரமும் அமைதியாய் கடந்திருக்க அறைக்குள் வந்தவனும் அவன் போக்கில் கட்டிலில் படுத்திருந்தான்.
மாடிக்குப் போக காத்திருந்தவள் கணவன் படுத்ததும் என்ன செய்வதென புரியாமல் அவளிடத்தில் படுத்து விட்டிருந்தாள்.
சில நொடிகள் அமைதியிலேயே கரைய சட்டென கேட்ட ருத்ரேஸ்வரனின் குரலில் எழுந்தர்ந்திருந்தாள் செங்காந்தள்.
“மாடிக்கு போகலாமானு கேட்க மாட்டியா காந்தா?”
“அது உங்களுக்கு அசதியா இருக்கோ என்னவோ..”
“எப்பவுமே புருஷனா எல்லா உரிமையையும் நீ கொடுத்துற. ஆனா பொண்டாட்டியா உன்னால உரிமையா என்னோட எதுவுமே பேச முடியலை இல்ல?”
“!!”
“அப்படி பேசுறதுக்கான உரிமையை நான் கொடுக்கலை. அதான் உண்மை.”, என்றவன் அப்படியே திரும்பி படுத்திருக்க செங்காந்தளோ என்ன செய்ய வேண்டும் என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
error: Content is protected !!