Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 5

அன்பு – 5



Advertisement

“ப்ச்!! சீக்கிரம் கட்டு டா பிரபா!! என்ன யோசனை???” என அதட்டிய கவியை மிரட்சியுடன் ஏறிட்ட பிரபஞ்சன்,

“வேணாமே கவி!!! உங்க வீட்டுல தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும்” என பயந்தான்.

Advertisement

Advertisement

“தெரியும் போது பார்த்துக்கலாம்.. பயந்து சாகாம ஒழுங்கா கட்டு இப்போ!! நல்ல நேரம் முடியப்போகுது” என அவசரப்படுத்தினாள் கவி.

தான் என்ன சொன்னாலும் கவி கேட்கப்போவதில்லை என்று உணர்ந்து கொண்ட பிரபஞ்சன்,

Advertisement

அங்கே சந்நிதானத்தில் சந்தமாக இங்கு நடக்கும் அனைத்தையும் மௌனமாய் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த முருகப்பெருமான் மீது அனைத்து பாரத்தையும் போட்டுவிட்டு,

‘ எனக்கென்னமோ மனசே சரியில்லை!!! ஆனாலும் உன் மேல இருக்க நம்பிக்கையில என் கவி கழுத்துல இந்த தாலியை கட்டுறேன்.. இதுனால என்ன பிரச்சனை வந்தாலும், அதே எனக்கே கொடுத்திரு!!! என் கவி என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்.. அதுக்கு நீதான் பொறுப்பு!!!’ என் மானசீகமாக முருகனிடம் வேண்டுதல் வைத்தான்.

அங்கே தன் எதிரில் கண்களில் காதலுடன் கூடிய எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த கவியைக் கண்டு பிரபஞ்சனின் முகத்தில் மென்முறுவல் மலர்ந்தது.

அவனின் புன்னகையைக் கண்டு எப்பொழுதும் போல் பெண்ணவளின் மனம் மயங்க,

“அழகன் டா நீ!!!!” என அவனின் கன்னம் பற்றி கொஞ்சிக் கொண்டாள் பாவை.

“கவி!! கோவில்ல என்ன பண்ற?? யாரும் பார்க்கப் போறாங்க!!” என கூச்சம் கொண்டு இரண்டடி பின்னே சென்ற பிரபஞ்சனைக் கண்டு கவியின் புன்னகை பெரிதாய் விரிந்தது.

“யாரு பார்த்தா எனக்கென்ன?? என் பிரபா!! என் உரிமை!! யாரு என்ன சொல்லிடுவா???” என அவள் உரிமை வேறு கொண்டாட,

பிரபஞ்சனின் முகம் கனிந்தது அவள் காதலை எண்ணி!!!

“சரி!! சரி!! வந்து தாலியை கட்டு!! லேட் ஆச்சு எனக்கு!! மத்தியானம் லேப் இருக்கு!! இன்னும் ரெகார்ட் வேற எழுதலை!!” என நேரத்தைக் கண்டு அவள் மீண்டும் அவசரப்படுத்த,

அவளின் வார்த்தைகள், மீண்டும் அவனைத் தயங்க செய்தது.

“கவி!! இப்போதான் இருபது வயசே ஆகுது!! ரொம்ப அவசரப்பட வேணாமே!!” என அவன் மீண்டும் சொன்னதையே சொல்ல,

கவி தன் பிடிவாதத்தில் இருந்து கொஞ்சமும் அசைந்து கொடுத்தாள் இல்லை.

அவள் ஒன்று நினைத்துவிட்டால், அதை நிறைவேற்றிக் கொள்ளாமல் ஓய மாட்டாள் என அவளை நன்றாக அறிந்திருந்த பிரபஞ்சனுக்கும் புரிந்து போக,

இதற்கு மேல் இவளுடன் போராடுவது வீண், என்றுணர்ந்து, தன் சட்டைப்பையில் இருந்த மஞ்சள் கிழங்கால் ஆன தாலிச்சரடை நடுங்கும் கரங்களுடன் எடுத்தவன், மீண்டும் ஒரு முறை முருகனை வேண்டிக்கொண்டு, அவள் கழுத்திற்கு அருகில் கொண்டு போக,

“மறுபடியும் எதுவும் ஆரம்பிக்காம.. பிளீஸ் ஒழுங்கா கட்டு!!  இல்லை நான் வாங்கி உனக்கு கட்டிருவேன்” என கண்களை உருட்டி மிரட்டிய கவியை காதலுடன் நோக்கியவன், முழுமனதுடன் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

நண்பகல் நேரம் என்பதால், அந்த மிகச்சிறிய கோவிலில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் போக, அவர்களின் திருமணத்திற்கு மௌன சாட்சியாய் மாறிப் போனது முருகன் மட்டுமே!!!

“லவ் யூ பிரபா!!!” என சந்தோஷ மிகுதியில் கவி அவனை கட்டிக்கொள்ள, பிரபஞ்சனுக்குத் தான் ஆனந்த அவஸ்தையாகிப் போனது.

“கவி!! யாராச்சும் வந்துடப் போறாங்க கவி!!” என அவளின் அணைப்பில் நெளிந்து கொண்டே கூறிய பிரபஞ்சனின் தலையில் நறுக்கென கொட்டியவள்,

“ஒரு மொமென்டை பீல் பண்ணி என்ஜாய் பண்ண விடுறியாடா நீ!!! உன்னை வச்சிட்டு!!!” என அலுத்துக் கொண்டவள்,

அவனை மேலும் சோதிப்பதைப் போல், அவனின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்து விட்டே அவனை விட்டுப் பிரிய,

பட்டென கண் விழித்துக் கொண்ட பிரபஞ்சனுக்கு முகமெல்லாம் முத்து முத்தாய் வியர்த்திருந்தது.

“ப்ச்!! கனவா!!!” என சுற்றும் முற்றும் பார்த்து தூக்கத்தில் இருந்து  தெளிந்து கொண்ட பிரபஞ்சனுக்கு, இன்னும் கன்னத்தில் அவள் தந்த முத்தத்தின் ஈரத்தை உணர முடிய,

அவன் உணர்ந்த இதழின் ஸ்பரிசம் உண்மையாகாதோ என அவனின் விரல்கள் கன்னத்தைத் தடவ, சட்டென பிரபஞ்சனின் மூளை விழித்துக் கொண்டது.

“ச்சே!! முட்டாள்!! என்ன காரியம் பண்ற!! இதெல்லாம் தப்பு டா!!” என நிதர்சனம் உணர்ந்து தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டவன்,

இதற்கு மேல் படுத்திருந்தால் வீணான சிந்தனை தான் வரும் என நினைத்து எழுந்து கொண்டவன், தன் நாளைத் துவங்கியிருந்தான்.

இன்னும் இரண்டு நாட்களில், கவினுக்கும் மதுவிற்கும் மிக எளிமையாக திருமணம் நடக்கவிருந்தது.

அன்று மதுவிடம் அதிகப்பிரசங்கித்தனமாக பேசிவிட்டு வந்த பின், அவர்கள் என்ன முடிவெடுப்பார்களோ என பயந்து கொண்டே இருந்த பிரபஞ்சனிடம், அவனின் பயம் அவசியமற்றது என்பதைப் போல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தங்களின் முடிவைக் கூறியிருந்தனர் கவின் – மது தம்பதியர்.

அவர்களின் முடிவைக் கேட்டு, பிரபஞ்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். முன்பே அவர்களின் லிவ் – இன் கலாச்சாரத்தில் அதிருப்தியில் இருந்தவனுக்கு, அவர்களின் இந்த முடிவு மகிழ்ச்சியைக் கொடுத்ததென்றால், குழந்தையை அழிக்காமல் அவர்கள் பெற்றுக்கொள்ளப்போவது பெருத்த நிம்மதியைக் கொடுத்திருந்தது.

என்னவோ, பெரியவர் செய்த பிழைக்காக இன்னும் உலகத்தையே பார்த்திராத சிசுவைக் கலைப்பதா?? என அந்த மருத்துவர் சொன்னதில் இருந்து அவன் மனம் பட்ட பாடு அவனிற்கு மட்டுமே தெரியும். இப்போது தான் அவனின் அனைத்து அலைப்புறுதல்களும் நீங்கி, மனம் அமைதியாக, உற்சாகத்துடன் திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் தான் பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டான்.

விஷயம் அறிந்த கவின் மற்றும் மதுவின் பெற்றோர், அவர்கள் மீது இன்னும் கோபம் கொண்டு, இருந்த கொஞ்ச நஞ்ச பேச்சுவார்த்தையையும் துண்டித்துக்கொண்டனர்.

எனவே, நெருங்கிய நண்பர்கள் சூழ, மிக எளிமையாக ஒரு பீச் ரிசார்டில் அவர்களின் திருமணம் ஏற்பாடாகி இருந்தது.

மிகவும் மகிழ்வுடன் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டிருந்த பிரபஞ்சனை,

“நாங்க கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீ ஏன்டா இவளோ எக்ஸைட் ஆகி சுத்திட்டு இருக்க??” என மெத்திருக்கையில் சாய்ந்தவாறு மது கேட்க,

அங்கே திருமணத்தன்று ஆர்டர் கொடுத்திருக்கும் உணவு வகைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டிருந்த பிரபஞ்சன், மதுவின் கேள்வியில் திருதிருவென விழித்தான்.

“ஓய்!! என்ன இந்த முழி முழிக்குற?? ஒழுங்கா சொல்லு!!” என மது அவனை கண்டுகொண்டு மிரட்ட,

“சொன்னா திட்டுவீங்க!!!” என தலையை குனிந்து கொண்டே பிரபஞ்சன் சொல்ல,

“நீ சொல்லலைனா அடிப்பேன்” என்றாள் மது!!

“இல்லை!! கல்யாணம் பண்ணிக்காம ஒன்னா இருக்கது தப்பு தானே!!!” என அவன் இழுக்க,

‘ நினைச்சேன் டா!!’ என்பதைப் போல் மது பார்த்திருந்தாள்.

“அதுவும் இல்லாம!! குழந்தை!!!” என தயங்கியவன்,

“எங்க.. குழந்தையை கலைச்சிருவீங்களோன்னு ரொம்ப பயந்துட்டேன்.. இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டா குழந்தையை பெத்துக்குவீங்க தானே” என்றவனின் குரலில் தன்னையும் மீறி உற்சாகம் வெளிப்பட,

“சரியான பத்தாம்பசலி டா நீ!!!” என சலித்துக் கொண்ட மது,

பின் ஏதோ தோன்ற, குறும்புப் புன்னகையுடன்,

“ஆமா இப்போ கல்யாணம் பண்ணாலும், இன்னும் ஏழு மாசத்துலயே குழந்தை பிறந்தா எல்லாரும் என்னைத் தப்பா பேச மாட்டாங்க.. அதுனால” என மது இழுக்க,

பதறிப்போன பிரபஞ்சன்,

“கண்டதையும் யோசிக்காதீங்க.. பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க.. மத்தவங்களுக்காக வாழ முடியுமா?? அது உங்க குழந்தை.. அதை நல்லபடியா பெத்து வளர்க்கணும்னு மட்டும் யோசிங்க..”  என பேசிக்கொண்டே போக,

சமையற்கட்டில் இருந்து மதுவிற்காக தோசை சுட்டுக்கொண்டு வந்த கவின்,

“டேய் பிரபா!! அவ தான் கலாய்க்கிறானா, நீயும் அதை சீரியஸா எடுத்திட்டு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க??? லிவ் இன்ல இருந்தப்போ பேசாத பேச்சையா இப்போ பேசிட போறாங்க… இவ போய் மத்தவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து ஒரு முடிவு எடுப்பான்னு நம்பிட்டு இருக்கியா இன்னும்??” என்றவன்,

மதுவிடம் திரும்பி, “மது!!! பேபி வச்சு விளையாடுறது இதுவே லாஸ்டா இருக்கட்டும்..” என கண்டிப்பான குரலில் கூறியவன்,

மதுவின் முகம் வாடுவதைக்கண்டு,

“இரு பொடி மசால் தோசை செஞ்சு எடுத்துட்டு வரேன்.. கை கழுவிராத!!!” என்று சொல்ல, மதுவின் முகம் உடனே மீண்டும் மலர்ந்துவிட்டது.

இருவரின் புரிந்துணர்வோடு கூடிய அன்பை, ரசனையாக பார்த்திருந்த பிரபஞ்சன், கவின் உள்ளே சென்றதும்,

“எது எதுல விளையாடுறதுன்னு விவஸ்தை இல்லையா உங்க..ப்ச்.. உனக்கு??” என மதுவிடம் பொய்யாய் கோபம் கொள்ள,

“நான் எங்க விளையாடினேன்.. நான் சென்டன்ஸ் கம்ப்ளீட் பண்றதுக்கு முன்னாடியே நீயா ஒன்னு கற்பனை பண்ணிக்கிட்டு பேசுனா அதுக்கு நானா பொறுப்பு?? பாரு உன்னால அவன் என்னைய திட்டிட்டு போறான்.. ” என மூக்கைச் சுருக்கிக் கொண்டு அவளும் பதிலுக்கு முறுக்கிக் கொள்ள,

“செய்யுறதையும் செஞ்சிட்டு இதுல பாவமா மூஞ்சியை வச்சிக்க வேண்டியது” என மெல்லமாய் முணுமுணுத்துக்கொண்ட பிரபஞ்சன், இதற்கு மேல் அங்கு அமர்ந்தால், மதுவிற்கும் தனக்கும் சண்டை வருவது நிச்சயம் என்றுணர்ந்து,

“அண்ணா!! இந்த மெனு ஓகே வா பாருங்க!!” என கேட்டுக்கொண்டே கவினிடம் சென்றுவிட்டான்.

“என்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு ஓடிட்டியாடா பாடிசோடா!!!” என மதுவின் சப்தம் அவனை பின் தொடர்ந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் புன்னகையுடன் ஓடி விட்டான்.

****

“இந்த பிளவுஸ் இன்னும் கொஞ்சம் கிராண்டா டிசைன் பண்ணிருக்கலாம்” என குறைபட்டுக்கொண்டே தயாராகிய மதுவை பொய்யாய் முறைத்த கவின்,

“இதுக்கு மேல வொர்க் பண்ண அந்த பிளவுஸ்ல இடமே இல்லை மது!!” என அலுத்துக்கொள்ள,

“ப்ச்!! போடா!! உனக்கெங்க இதைப்பத்தி தெரியும்.. நான் ஷோவுக்கு(show) போடுற டிரஸை விட என் வெடிங் ட்ரெஸ் ரொம்ப சிம்பிளா இருக்கு..  வெடிங் ட்ரெஸ் பொண்ணுங்களோட ட்ரீம் தெரியுமா?? அதைக்கூட ஒழுங்கா ஸ்டிட்ச் பண்ண டைம் தராம.. அவசரம் அவசரமா!!” என அவள் புலம்பிக் கொண்டே, காதில் அந்த பெரிய ஜிமிக்கியை மாட்டிக் கொண்டிருக்க,

அவளிடமிருந்து, இயல்பாய் ஜிமிக்கியை வாங்கி, அவளுக்கு அணிவித்துக்கொண்டே,

“நான் அவசரப்படலை மா!!! உன் பேபி தான்.. நீ ஆசைப்பட்ட மாதிரி பொறுமையா ட்ரெஸ் ஸ்டிட்ச் பண்ணி கல்யாணம் பண்ணா, ‘நான் இங்க தான் உள்ளேன் அய்யான்னு’ உன் பேபி பம்ப் எல்லாருக்கும் காட்டி கொடுத்திரும்.. பரவாயில்லையா” என புருவம் உயர்த்தி கவின் கேட்க,

கண்ணாடியில் தெரிந்த அவனின் முகத்தை முறைத்துக் கொண்டே,

“அந்த பேபிக்கும் நீ தான காரணம்.. எல்லாம் உன்னால தான்” என குற்றம் சுமத்தினாள் அவனின் காதலி.

ஜிமிக்கியை அணிவித்துவிட்டவன், அவள் கழுத்தை கட்டிக்கொண்டு தாடையை அவளின் இடப்பக்க தோள்பட்டையில் பதித்தவன்,

“அப்போ மேடமுக்கும், இதுக்கும் சம்மந்தமே இல்லை.. அப்படித்தான??” என அவளின் வயிற்றை ஒரு கையால் தாங்கிப் பிடித்தபடி அவன் ஆழ்ந்த குரலில் கேட்க,

இரண்டு நாளாக சவரம் செய்யப்படாத தாடியின் குறுகுறுப்பை கன்னத்தில் உணர்ந்தவளுக்கு, அவனின் பார்வையும், அந்தக் குரலும் வெட்கத்தை வேறு வர வைக்க,

“நீ ஃபர்ஸ்ட் கிளம்பு!! உன் தங்கக்கம்பி அப்போவே போன் பண்ணிட்டான்.. கெஸ்ட் எல்லாம் வந்துட்டாங்களாம்” என எழுந்து கொள்ளப் பார்த்தாள் மது.

“பிரபா கிட்ட நான் பேசிட்டேன்.. இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வந்தா போதும்னு சொல்லிட்டான்” என கண்ணடித்துச் சொன்னவன்,

எழுந்து கொண்ட மதுவை அப்படியே தன் கையணைப்பில் கொண்டு வந்து விட, மதுவிற்கும் அந்த நொடி அவனின் அணைப்பு தேவைப்பட்டதால் பாந்தமாய் அவன் கைகளுக்குள் அடங்கினாள்.

பேச்சற்ற ஒரு மௌனம் இருவருக்குள்ளும்!!!

பிடித்தம் எனும் பேர் கொண்டு தொடங்கிய உறவை, அடுத்தகட்டத்திற்கு  எடுத்துச்செல்ல முயலாமல்(முடியாமல்) பல காலங்கள் நீட்டித் தள்ளியவர்கள்,

ஒருகட்டத்தில் ஒன்றாக இருந்தால் நாளடைவில் இந்த பிடித்தம் கூட பின்னால் சென்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடுமோ எனும் நப்பாசையில் பெற்றவர்களை எதிர்த்துக்கொண்டு, சமுதாயம் போட்டுவைத்த கோட்பாடுகளைத் தாண்டி, தாலி எனும் வேலி இல்லாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து பார்த்தவர்களுக்கு, இந்த பிடித்தம் எப்போதோ காதலாய் உருமாறிவிட்டது என்பதை உணரவே ஒரு உயிர் அவர்களின் வாழ்க்கையில் உருவாகவேண்டி இருக்கிறது!!!

எந்த பொறுப்புகளுக்கு பயந்து திருமணத்தைத் தவிர்த்தார்களோ, இன்று தங்களால் உருவாகி, உலகத்தைக் காணப்போகும் உயிரின் முழுப் பொறுப்பையும் மனதார ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் அடுத்த பரிணாமத்தில் காதலோடு கால் பதிக்க முடிவெடுத்துவிட்டனர்.

“நம்மளால முடியுமா டா???” என கலக்கத்துடன் அவன் கண்களை நோக்கி கேட்ட மதுவின் நெற்றியில் ஆதுரமாய் முத்தமிட்ட கவின்,

“ஐ லவ் யூ மது!!!!” என்றான் ஆத்மார்த்தமாக!!!

திருமணம் வரை வந்துவிட்டாலும், தன் முடிவின் மீது ஒரு தெளிவில்லாமலே இத்தனை நாளும் சுற்றிக் கொண்டிருந்த மதுவிற்கு, அந்த நொடி மனம் சமன்பட,

அணைப்பை மேலும் இறுக்கி, தன் காதலை அவனுக்குள் கடத்தினாள்!!

அவர்களுக்கு மேலும் தனிமை வழங்காமல், நேரமாகிறது என பிரபஞ்சன் அழைத்துவிட,

இருவரும் முகம் முழுக்க புன்னகையுடன் அறையிலிருந்து வெளியேறினர்.

மிகவும் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் சூழ, மிக எளிமையாக கவின் – மதுவின் திருமணம் இனிதே நடந்தேற,

பிரபஞ்சனின் மனம் அவர்களுக்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும், மனதின் ஓரம் அவனின் கவியை எண்ணி சிறிதாய் ஒரு ஏமாற்றத்தின் வலி எழுவதை என்ன முயன்றும் அவனால் தடுக்க முடியவில்லை.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின், மணமக்களை சாப்பிட அனுப்பி வைத்துவிட்டு தனியே வந்துவிட்ட பிரபஞ்சன், அங்கே அலைபாய்ந்து கொண்டிருக்கும் கடலை வெறித்தவண்ணம் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றுவிட்டான்.

சொல் பேச்சு கேட்டு ஓரிடத்தில் நிற்காமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் கடலைப் போல் தான் அவனின் மனமும் அவனின் பேச்சைக் கேட்காமல், ஏதேதோ எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

விட்டுச்சென்றாலும், மீண்டும் ஓடி வந்து தொட்டுச் செல்லும் கடல் அலைகளைப் போல் தான் சில நினைவுகளும், அந்த நினைவுகளைத் தந்த மனிதர்களும் என அப்போது பிரபஞ்சனுக்குத் தெரியவில்லை!!!

யாரைத் தொலைத்துவிட்டோம் என அவன் இத்தனை காலம் மருகித் தவிக்கிறானோ, அவளே கூடிய விரைவில் அவனைத் தேடி வரப்போகிறாள்!! அவன் தொலைத்த இன்பத்தை இரட்டிப்பாய் அவன் கையில் தரப்போகிறாள்..

பூவைச் சுற்றும் வண்டு போல் 

 உன்னைச் சுற்றியே என் உலகம் சுழல்கிறது!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!