Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழாக் காணுமே வானம்

விழாக் காணுமே வானம் 10 (02)

விழாக் காணுமே வானம் 10 (02)

முன் தினம் இரவு வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் விழித்திருந்த அரவிந்த் அதிகாலையில் சற்றே கண்ணயர்ந்து விட்டிருந்தான்.

அவன் ஹாலுக்கு வந்த போது அங்கே பாட்டி மட்டும் பேப்பர் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரின் அருகில் அமர்ந்தான்.

“என்ன பாட்டி தனியா உட்கார்ந்திருக்க”



Advertisement

“நான் தனியா தான் உட்கார்ந்துட்டு இருக்கேன். நீ தனியாவே வாழ்ந்துட்டு இருக்க அரவிந்தா” பாட்டி மனத்தாங்கலுடன் கூறினார்.

நேற்று வைஷாலியின் பெயரை ஸ்வாதி சொன்ன போது அரவிந்தின் முக மாறுதலை பாட்டி கவனித்துக் கொண்டே தான் இருந்தார். அதிலும் அவளின் போன் நம்பரை அவன் மனப்பாடமாக சொன்ன போது மிகுந்த யோசனை கொண்டார்.

“உன் பொண்ணு காதில விழுந்திட போகுது பாட்டி. உன் கூட சண்டைக்கு வர போறாங்க” தன் அன்னையை குறிப்பிட்டு சொன்னவன்

Advertisement

“ஸ்வாதி இன்னுமா தூங்கறா. மாமா எங்கே”  எனக் கேட்டான்.

Advertisement

“உன் மாமா  காலையிலேயே கிளம்பி போயிட்டான். ஸ்வாதி காலங்கார்த்தாலேயே அகடமிக்கு போறேன்னு சொல்லிட்டு போனா. உனக்கு டிபன் எடுத்து வைக்கிறேன்” பாட்டி சொல்ல அரவிந்த் வேண்டாம் என மறுத்தான்.

ஸ்வாதி அகடமியில் இருக்கிறாள் என்றதும் ஒரு கேம் ஆடினால் என்ன என்று அவனுக்குள் ஓர் எண்ணம் வர

“காபி மட்டும் போதும் பாட்டி. ஸ்வாதி கூட ஒரு கேம் ஆடிட்டு அவளையும் கூட்டிட்டு வரேன். மணி என்ன எட்டு கூட ஆகலையே” என்றவன் ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து கொண்டு வர பாட்டி ரெடியாக அவனுக்கு காபி தயாரித்து வைத்திருந்தார்.

Advertisement

“உன் பொண்ணுக்கு காபியே போடத் தெரியல பாட்டி” பாட்டியை கொஞ்சியபடியே காபி குடித்து முடித்தான்.

“ஹ்ம்ம். இன்னும் என் பொண்ணு தான் காபி போட வேண்டியதா இருக்கு.  மருமக கையால காபி குடிக்க வாய்க்கல. எனக்கும் தான் இந்த ஒரு வருஷமா அந்த குடுப்பினை இல்லாம போச்சு” பாட்டி புலம்ப அவரிடம் கோபித்து பயன் ஏதும் இல்லை என்று மௌனமாக அங்கிருந்து அகடமி நோக்கி விரைந்தான்.

“எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன. ஒவ்வொரு விடியலையும் என் ஷாலுவுடன் காபி பருகியபடியே ஆனந்தமாக வரவேற்க எனக்கு ஆசையாக இல்லையா. ஆனால் அவளுக்கு அந்த ஆசை இல்லாமல் போனதே” கால் போன போக்கில் அகடமியை அடைந்திருந்தவன் அங்கே அர்ஜுனை ஸ்வாதி அணைத்துக் கொண்டு நின்ற காட்சியில் கோபம் கொண்டான் என்றால் மனதில் நின்றவள் எதிரில் நிற்க திகைத்துப் போனான்.

“நீ மொதல்ல எனக்கு பதில் சொல்லு” என்று கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாதி அரவிந்த் திடீரென மௌனமாகி விட்டதன் காரணம் புரியாமல் திரும்பிப் பார்க்க அங்கே வைஷாலி இவர்களை பார்த்து சற்று பயத்தோடு நின்றிருந்தாள்.

இருவரையும் மாறி மாறி பார்த்த ஸ்வாதி வைஷாலியிடம் ஓடிச் சென்று அவளின் கரம் பற்றி மன்னிப்புக் கேட்டுக்  கொண்டிருந்தாள்.

வைஷாலியின் கையில் இருந்த ரிகார்டர் மற்றும் கேமராவைக் கண்ட அரவிந்த்க்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. சத்தியமாய் அவனுக்குள் வருத்த மேகங்களின் ஊர்வலம்.

“இங்கே பாரு உன் சந்தோஷத்துக்காக எதை வேணும்னாலும் நான் விட்டுக் கொடுக்கத்தயார் போதுமா..” அவனது பழைய வார்த்தைகள் அவனுக்குள் தாளம் போட மௌனமாய் அங்கிருந்து நகரப் போனான் அவன்

“இவ இங்க இருப்பதை கண்டு கொள்ளாம அவன் பாட்டுக்கு போயிட்டு இருக்கான்’ மனதில் நினைத்தவள் அவனை தடுக்கும் விதமாக அவன் பெயர் சொல்லி அழைத்தாள்.

இது நாள் வரை தாங்களுண்டு தங்கள் டென்னிஸ் உண்டு என்று  இருந்த ஸ்வாதி தனது பிரச்சனைகளை மறந்து இவர்களின் பிரச்சனையை எண்ணி கவலை கொண்டாள்.

“எதுக்கு வந்தாய்ன்னு சொல்லாமலே போற” வைஷாலியின் கரத்தை பற்றி அவளையும் இழுத்துக் கொண்டே அரவிந்த்தை நோக்கி வந்தாள்.

“பாட்டி சாப்பிட கூப்பிட்டாங்க” வலுக்கட்டாயமாக வைஷாலியின் பக்கம் பார்வையை பதிக்காமல் பதில் சொன்னான்.

“வைஷூ மணி எட்டு ஆகப் போகுது. இப்போ நாங்க ஒன் ஹவர் ப்ரேக்பாஸ்ட் ப்ரேக்  எடுத்துக் கொள்வோம்” என்றாள்.

“நீங்க போயிட்டு வாங்க. நான் இங்கேயே வெயிட் செய்றேன்” என்று மெல்லியக் குரலில் வைஷாலி கூறினாள்.

“நீங்களும் வாங்க” என்று அவளுக்கு அழைப்பு விடுத்தாள் ஸ்வாதி.

வைஷாலி தயக்கத்தோடு அரவிந்த்தை ஏறிட்டு பார்க்க அது வரை அவளை ஓரப்பார்வையாக பார்த்துக் கொண்டிருந்தவன் முகம் திருப்பிக் கொண்டான்.

“நான் சான்ட்விச் கொண்டு வந்திருக்கேன். தாங்க்ஸ் ஸ்வாதி” என்றவாறே அர்ஜூனின் பக்கம் செலுத்தி  “நீங்க” என்று கேட்டும் வைக்க அரவிந்த் உள்ளுக்குள் வாடிப் போனான்.

“என் அத்தை எனக்கு ப்ரேக்பாஸ்ட் கட்டி கொடுத்து விட்டிருக்காங்க. பேக்ல இருக்கு. இங்கே லவுஞ்ச் இருக்கு. அங்க ரிப்ரஷ் செய்துவிட்டு சாப்பிடலாம்” என்று வைஷாலியிடம் அர்ஜூன் கூறினான்.

‘என் அத்தை’ என்ற வார்த்தையைக் கேட்டதும்  எள்ளும் கொள்ளும் வெடிக்க கோபமாக அவதாரம் எடுக்கும் ஸ்வாதி முதல் நாள் இரவின் நிகழ்வு தந்த குற்றவுணர்வோடு ஒரு வித ஏக்கமும் சேர்ந்து கொள்ள அமைதியாய் நின்றிருந்தாள்.

அந்த சூழ்நிலையை கலைக்க அர்ஜூன் அங்கிருந்து நகர்ந்து செல்ல, “நானும் ப்ரேக்பாஸ்ட் எடுத்துக் கொண்டு வரேனே வைஷாலி. இங்கேயே லவுஞ்சில் சேர்ந்து சாப்பிடலாம். அரவிந்த் நீ வைஷூக்கு  க்ராஸ் கோர்ட்டை காட்டு, அவங்க அதை போட்டோ எடுக்கட்டும்”  என்று  வைஷாலியிடமும் அரவிந்திடமும் சொல்லியவள் அர்ஜூனின் பக்கம் பார்வையை செலுத்தியபடியே அங்கிருந்து அகன்றாள்.

ஸ்வாதி அப்படி சொல்லிவிட்டு போவாள் என்று அரவிந்த் வைஷாலி இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

அர்ஜூனும்  அங்கிருந்து சென்றுவிட்டிருக்க அது வரை எதுவுமே பேசாமல் அங்கே நின்று கொண்டிருந்த அரவிந்த்தை மெல்ல ஏறிட்ட வைஷாலி,

“நீ ….நீ…ங்க சாப்பிட்டீங்களா” என்று கேட்க கூடை மல்லிகையை தலையில் யாரோ கவிழ்த்து விட்டதைப் போல மலர்ந்து தான் போனான்.  இருந்தாலும் எதையும் பேசிவிட தோன்றவில்லை அவனுக்கு.

“இல்ல” உணர்ச்சியற்று ஒலித்தது அவன் குரல்.

“ஏன்” அவன் முகம் பார்க்காமல் கைவிரல்களை கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தாள் அவள்.

அவளின் விரல் ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டிருந்ததை பார்க்கும் ஆவலில் தலையை கீழே குனிந்தவன் பார்வையில் அவளின் இடது மோதிர விரலை தனது பிடிக்குள் வைத்திருந்த மோதிரம் பட்டுவிட்டது.

அது அவன் அணிவித்த மோதிரம் தான் என்று பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டான்.

அவர்களின் நிச்சயதார்த்த விழாவின் போது முதல்முறை அவளின் மெல்லிய விரலை அவன் பற்றிய போது அந்த தீண்டலில் அவள் கொண்ட நடுக்கம் இப்போதும் தித்தித்தது.

‘அப்போ அன்று ஹோட்டலில் நடந்தது. அதை என்னவென்று சொல்வது. அந்த நாள் ஞாபகத்தில் மெல்ல வாடியது அவன் முகம்.. அவள் புறம் பார்க்காமல் திரும்பிக்கொண்டான் அரவிந்தன்

“அரவிந்த்” அவள் மெல்ல அவன் பெயர் சொல்ல சடக்கென அவள் பக்கம் திரும்பினான் அரவிந்த். அவள் விரல்கள் இன்னமும் அந்த மோதிரத்தோடு விளையாடிக் கொண்டேயிருந்தது.

“என் இதயமடி அது. என் இதயத்தை உன் கையில் கொடுத்து வைத்தேன். அதனோடு விளையாடுவதில்தான் உனக்கு ஆனந்தமா. சரி அதுவும் நடக்கட்டும்” ஏனோ அதை விட்டு அவனது பார்வை அகலவில்லை.

“அரவிந்த் நான்..” அவள் ஏதோ சொல்லத் துவங்க

நமக்கு லாயர் நாளை மறுநாள் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்காங்க. நான் கிளம்பும் முன் உன்னை கால் பண்றேன்” என்றான் அந்த மோதிரத்தை பார்த்துக் கொண்டே.

அப்போது சட்டென அவள் விழிகளில் தொற்றிக் கொண்ட கண்ணீரை கவனிக்கவில்லை அவன்.

காலையில் இருந்து  உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தவள் இப்போது கலங்கிய கண்களோடு முகம் வாட நின்றது சரியாக அந்த நேரத்தில் அங்கே வந்து நின்ற ஸ்வாதியை அசைத்தது.

அதற்கு அர்விந்த் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவளுக்கு புரியாமல் இல்லை.

“அரவிந்த். என்ன சொன்ன வைஷூவை. ஒழுங்கா சாரி சொல்லு அவங்ககிட்ட” ஸ்வாதி அரவிந்த்தை அதட்டினாள்.

அப்போது தான் அரவிந்த் வைஷாலியை திரும்பிப் பார்த்தான். அவள் அதற்குள் அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டிருந்தாலும் கன்னத்தில் சுவடுகள் படிந்திருந்தன.

“சாரி சொல்லுன்னு சொல்றேன்ல” ஸ்வாதி மீண்டும் அதட்டினாள்.

“மத்தவங்களுக்கு உபதேசம் செய்யறதுக்கு முன் முதலில் தான் அதை செய்யணும்” அர்ஜூனின் குரல் கணீரென அங்கே ஒலிக்க சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஸ்வாதி.

அவளை தீர்க்கமாக பார்த்தான் அர்ஜூன். அந்தப் பார்வை அவளிடம் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாமல் திணறினாள் அவள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!