Skip to content
Post Views: 5,941
ஒரே நாளில் குமரகுருவுடன் நெருக்கமாகிப் போனார் ராமலிங்கம். கோரிப்பாளையத்தின் முக்கிய பகுதியில் உரக்கடை வைத்திருக்கிறார். திருப்திகரமான வருமானம். ஒரே மகன்… கல்லூரி படிப்பை முடித்து கேம்பஸ் மூலம் தேர்வாகி சென்னையில் பணியில் இருக்கிறான். சொந்தமாக மூன்று வீடுகள் உண்டு. அதில் ஒன்றில்தான் தற்போது குமரகுரு குடி வந்திருக்கிறான்.
அத்தை மகளான காமாட்சியை திருமணம் செய்துள்ளார். 12-ஆம் வகுப்புவரை படித்தவர் முழு குடும்பத் தலைவியாகி அவ்வப்போது கணவனுக்கு கடையிலும் சென்று உதவிக் கொள்வார். மிகவும் வெள்ளந்தியான எதார்த்தமான பெண்மணி. ராமலிங்கமும் அப்படித்தான். வசதி வாய்ப்பிற்கு குறைவில்லை. ஆனால் எளிமையான வாழ்க்கை நடத்துபவர்கள்.
Advertisement
குமரகுருவின் அகதி என்ற அந்த ஒற்றை வார்த்தைதான் அவரை அதிகமாக பாதித்ததுவோ என்னவோ. அப்படி ஒரு எண்ணம் அவன் ஆழ்மனதில் எழவே கூடாது என்று யோசிக்கிறார். முதல் பார்வையிலேயே அவனை மிகவும் பிடித்தும் போனது. அவனது கம்பீரம், தோற்றம், பேச்சு, படிப்பு, பார்வையின் தன்மை என்று அனைத்திலுமே அவனின்மீது ஒரு பிடித்தம் ஏற்பட்டிருந்தது.
அவன் எத்தனையோ மறுத்தும் கேட்காமல் இரண்டு வேளை உணவுகளை அவர் வீட்டில்தான் உண்ண வைத்திருந்தார்.
Advertisement
Advertisement
“ஞாயித்துக்கிழமைனா கறிக்கஞ்சி இல்லாம எங்களால இருக்க முடியாது தம்பி… கறிப் பையோட வீட்டுக்கு வரலேன்னா கைய கடிச்சு வச்சுருவா என் பொண்டாட்டி…”
சிரித்தவரின் மேல் பனை ஓலை விசிறி பறந்து வந்து விழுந்தது.
Advertisement
“யாரு..? நானு..? அக்கம் பக்கம் கேட்டு பாக்கலாமா..? கறியா தின்னு கொழுப்பு கட்டி தொந்தி தொங்குது. இதுல பழி என் மேலயாக்கும்… அவர் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க தம்பி…”
கமகமக்கும் வாசனையோடு சாப்பாடும் கறிக் குழம்பும் வேக வைத்த முட்டையுமாக நிறைந்த மனதோடு பரிமாறினார் காமாட்சி.
அவனுக்குத்தான் சங்கோஜமாக இருந்தது. ஆனால் அவர்களிடம் அப்படி ஒரு எதார்த்தம்.
“அங்கன மெஸ் வச்சு நடத்துறவேன் என் நண்பன்தேன்… சாப்பாடு பிரமாதமா இருக்கும் தம்பி… வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கும்… உடம்பையும் கெடுத்துறாது… நீங்க நம்பி அங்க சாப்பிடலாம்…”
அவனை நேரில் அழைத்துச் சென்று அந்த மெஸ்கார நண்பனிடம் அறிமுகம் செய்து வைத்து விட்டு தான் வந்திருந்தார் ராமலிங்கம். இருவரும் பேசியபடியே வீதியில் நடந்து வர எதிரில் ஸ்கூட்டியில் அவர்களை மெல்ல கடந்து போனாள் அந்த உருண்டை முகத்துப் பெண். முன்னே அந்த குட்டி பாப்பா சிரித்த முகமாக அமர்ந்திருந்தது.
தன்னையும் மீறி அவர்களை திரும்பிப் பார்த்தான் குமரகுரு. அருகில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்குள் குழந்தையின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு நுழைந்திருந்தாள் அவள். அவனை திரும்பி பார்த்த குட்டிப் பாப்பா சுட்டு விரலை கடித்தபடி ஒருவித வெட்கச் சிரிப்புடன் நடக்க அந்த குழந்தையை ஓடிச் சென்று அள்ளிக் கொள்ள வேண்டும் போல் ஆசை தோன்றியது இவனுக்கு.
இரண்டு கண்களையும் ஒன்றாக சிமிட்டி அழகாய் சிரித்து மெல்ல விரல்களை வளைத்து வா என்று அழைத்தான்.
சட்டென தாயின் கையை உதறிக் கொண்டு அவனிடம் ஓடி வந்திருந்தாள் அந்த குட்டிப் பெண்.
இதை அவனே எதிர்பார்க்கவில்லை.
ஓடி வந்தவள் அவன் கால்களை கட்டிக் கொள்ள பட்டெனத் தூக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டிருந்தான்.
ராமலிங்கம் சாலையை கடந்து அந்தப் பக்கமாக இருந்த தனது நண்பர் ஒருவரிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார்.
தன் கையை சட்டென உதறி ஓடிச் சென்று அந்த நெட்டை மனிதனின் கையில் பாந்தமாக அடங்கிக் கொண்ட மகளை பார்த்தவளோ திக்கென அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.
“சவீஈஈஈ…”
கத்தி அழைத்தாள்.
அந்த அழைப்பில் ஆடிப் போனது என்னவோ குமரகுருதான். இதயத்திற்குள் அதிர்ந்து வெளிவந்தது அந்த குரல்… அந்தப் பெயர்.
வேகநடை போட்டு வந்தவள் தீயென அவனை முறைத்தாள்.
“எறங்கு…”
பற்களுக்குள் வார்த்தை அரைபட்டு வெளிவந்தது.
காலையில் வாங்கிய அடி மூளையில் பயத்தை ஏற்படுத்தியது போலும். பட்டென அவன் கைகளில் இருந்து தாவி இறங்கி இருந்தாள்.
அவனை சில நொடிகள் அழுத்தமாய் முறைத்தவள் மகளையும் அதே முறைப்புடன் பார்த்து வெடுக்கென அவள் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்து கொண்டாள்.
இழுத்து பெருமூச்சு விட்டவன் ‘இவளுக்கு சிரிக்கவே தெரியாதுபோல… ஒன்னு அழறா… இல்லேன்னா அடிக்கிறா… இல்லேன்னா முறைக்கிறா…’
தனக்குள் எண்ணியபடியே திரும்பி நடக்க ராமலிங்கமும் பேசி முடித்து அவனோடு வந்து இணைந்து கொண்டார்.
அன்றைய நாள் அப்படியே கழிந்திருந்தது.
அன்று இரவே பள்ளி இருக்கும் பகுதியை பார்வையிட்டுதான் வந்திருந்தான். வீட்டிலிருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரம்தான். முதல்நாள் என்பதால் முந்நேரமாகவே கிளம்பி தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு காலை உணவினை அந்த மெஸ்ஸில் முடித்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்திருந்தான்.
முதல்வர் அறைக்குள் நுழைந்து தனது பணி நியமன ஆணையை நீட்ட சிரித்த முகத்தோடு அவனை வரவேற்றார் அப்பள்ளியின் முதல்வர் கஜேந்திரன்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நான்கு கிளைகள் உள்ள மிகவும் பிரபலமான தனியார் பள்ளி அது. தலைமை கிளை இருக்கும் இடம்தான் மதுரை. கஜேந்திரனின் சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால் அங்கு இரண்டாவது கிளையை ஆரம்பித்து இருந்தார். பள்ளியின் தொடர் வெற்றி மாணவர்களின் நிறைந்த மதிப்பெண்கள் என்று இன்னும் தமிழ்நாட்டின் வேறு பெரிய நகரங்களிலும் இரு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
மதுரை கிளையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அதற்கேற்றபடி ஆசிரியர்களின் தேவையும் அதிகம் இருந்தது. சிறந்த ஆசிரியர்களை சல்லடை போட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நேர்முகத் தேர்வு மூலம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
மதுரை கிளையில் பணியில் இருந்த கணித ஆசிரியை திருமணம் முடித்து வெளிநாட்டிற்கு சென்று விட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது.
ராமேஸ்வரம் கிளையில் குமரகுருவிற்கு நல்ல பெயர் உண்டு. அவனது கற்பித்தலில் மாணவர்களின் மதிப்பெண் தரம் வெகுவாகவே உயர்ந்திருந்தது. மிகவும் திறமைசாலியான அவனது சேவை மதுரை கிளைக்கு தேவையாகிப் போனது. இன்னும் கூடுதல் சம்பளத்துடன் அவனை அங்கே அழைத்துக் கொண்டனர்.
அவனுக்கு ராமேஸ்வரம் தாண்டி இன்னும் தமிழ்நாட்டின் வேறு இடங்களுக்கும் பயணிக்கும் எண்ணம் இருந்து கொண்டுதான் இருந்தது. மதுரையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் மறுக்காது கிளம்பி வந்துவிட்டான்.
பள்ளியின் தாளாளரும் வந்திருக்க அறிமுகம் முடித்து துணை முதல்வரின் உதவியுடன் அவனுக்கான வகுப்புகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டான்.
பள்ளியின் அமைப்பு மிகவும் பிரம்மாண்டம்தான். 2000 மாணவர்கள் அங்கு படிக்கின்றனர் என்பதை அறிந்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. தனித்தனி பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு வெகு நேர்த்தியாக வகுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணித ஆசிரியன் அவன். இருபாலரும் இணைந்து படிக்கும் பள்ளி.
தடையோ தடுமாற்றமோ இன்றி அழகான அறிமுகப் படலத்துடன் தனது பணியை அன்றே துவங்கி இருந்தான் குமரகுரு.
மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் ஓய்வு அறைக்குள் நுழைந்த பியூன் அன்று மாலை 4 மணிக்கு மேல் ஆசிரியர்களுக்கான மீட்டிங் இருப்பதாக அறிவுறுத்தி சென்றிருந்தான்.
மாலை 4 மணிக்கு மேல் பெரிய வகுப்புகளுக்கு வழக்கம் போன்றே பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பமாகி இருக்க அவர்கள் ஆங்காங்கே அமர்ந்து படிக்க தொடங்கியும் இருந்தனர். ஆசிரியர்கள் அனைவரும் மீட்டிங் நடைபெறும் ஹாலுக்குள் நுழைந்திருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள். அனைவரும் பாலினம் வாரியாக பிரிந்து அமர்ந்து கொண்டனர்.
தாளாளரும் முதல்வரும் உள்ளே நுழைந்தபின் முதல் விஷயமாக அன்றைய நாள் புதிதாக அந்த பள்ளிக்கு நுழைந்திருந்த குமரகுருவுக்கு கைத்தட்டலுடன் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
“போன வருஷம் பிளஸ் ட்டூ ரிசல்ட்ல கணிதத்துல ராமேஸ்வரம் கிளையிலே இருக்கிற நம்ம பள்ளிக் குழந்தைகள் மாநிலத்தில் தொடர்ந்த 5 முதல் இடங்களை வாங்கி இருக்காங்க. அதிலும் மூன்று குழந்தைகள் சென்டம் எடுத்திருக்காங்க. அதுக்கு முழுக்க முழுக்க மூல காரணம் மிஸ்டர் குமரகுரு.
அவரோட சேவை இப்போ நம்மளுடைய இந்த கிளைக்கு தேவைப்படுது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி இங்கே இருக்கிற குழந்தைகளையும் அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துட்டுப் போவார்னு நம்புவோம்…”
என்று கூறிய தாளாளர் அவனுக்கு கை கொடுக்க அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
“நமது கணித ஆசிரியருக்கு அறிவியல் ஆசிரியை பூங்கொத்து கொடுத்து கௌரவப்படுத்துவார்…”
முதல்வர் கூற கையில் பூங்கொத்துடன் அவன் முன் வந்து நின்றிருந்தாள் அவள்..
ஆம்… அவள்தான்… அதே அண்டை வீட்டு உருண்டை முகத்துப் பெண்.
அவள் முகத்தில் கலவரம்…
அவன் முகத்தில் ஆச்சரியம், அதிர்ச்சி…
“மிஸ்..”
உதவி முதல்வர் அவளை அழைக்க தனது கவனத்தை மாற்றி பூங்கொத்தினை அவனிடம் கொடுத்து “வெல்கம் சார்…” மெல்லிய குரலில் கூறியிருந்தாள்.
‘டப்பிங் வாய்ஸோ..? இவ்வளவு மெல்லிசா இருக்கு…’
அவனது மைண்ட் வாய்ஸ்.
வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் “தேங்க்யூ மேம்…” என்றபடி பெற்றுக் கொண்டான் குமரகுரு.
“குரு சார்… இவங்க அஞ்சலி… நம்ம ஸ்கூல் சயின்ஸ் டீச்சர்… 9th 10th இவங்கதான் கிளாஸ் எடுக்குறாங்க…”
அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர்.
“அ..ஞ்..ச..லி…”
மூடிய இதழ்களுக்குள் ஒவ்வொரு எழுத்தாக பிரித்து உச்சரித்துக் கொண்டான்.
புன்னகையோடு தலையசைத்தவன் தனது இடத்தில் சென்று அமர்ந்து கொள்ள அவளும் அவளுக்கான இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பள்ளியின் வளர்ச்சி, கல்வி முறை, அடுத்தடுத்த பருவ தேர்வுகளுக்கான விதிமுறைகள் என்று அடுத்தடுத்த பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அனைவரின் கவனமும் அங்குதான் இருந்தது. தங்களது கவனத்தையும் தாண்டி தங்களையும் மீறி மெல்ல திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் குமரகுருவும் அஞ்சலியும்.
அவள் கண்களில் தெரிந்த மிரட்சியில் இவனுக்குள் குறுஞ்சிரிப்பு எழுந்தது.
முதல் நாள் காலை முதல் அவளை அவன் பார்த்தவரையில் தெரிந்த பரிமாணத்திற்கும் இந்த நொடி இங்கு ஒரு ஆசிரியையாக அவள் அமர்ந்திருக்கும் பரிமாணத்திற்கும் மலையளவு இடைவெளி. நம்ப முடியாத மாற்றுத் தோற்றம்.
மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேறி இருந்தனர். அவன் தனது இருசக்கர வாகனத்தை கிளப்பி திருப்ப அவளும் தனது வாகனத்தில் அமர்ந்து கிளம்பி இருந்தாள். அவளை பின்தொடர்ந்தபடியேதான் இவனது வாகனமும் வெளியேறியது.
அவளுக்கு பின்னே மிதமான வேகத்தில்தான் தனது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் குமரகுரு.
நெரிசல் மிகுந்த பகுதியிலும் அநாயாசமாக வண்டி ஓட்டி செல்பவளை பார்த்தவனுக்கு மெச்சுதல் எழுந்தது.
இருவரும் அடுத்தடுத்து தங்களது தெருவுக்குள் நுழைந்தனர்.
அவள் தன் வீட்டு வாசலை நெருங்கும்போதே வண்டியின் சத்தத்தில் கேட்டை திறந்து கொண்டு “அம்மா…” என்று சத்தமிட்டபடி வேகமாக ஓடி வந்தாள் அவள் மகள்.
அவசரமாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவள் “சவி… எத்தனை தடவை சொல்றது இப்படி வேகமா ஓடி வராதேன்னு…” கோபமாய் பேசியபடியே கை தூக்கிய மகளை தூக்கி வண்டியின் முன்னே அமர்த்திக் கொண்டாள்.
அவள் பிரேக் போட்ட வேகத்தில் சாவதானமாக பின்னே வந்து கொண்டிருந்தவன் வேகமாக சற்றே நிதானித்து வேறு மார்க்கத்தில் திருப்பி நிறுத்தி இருந்தான். கொஞ்சம் கவனம் தப்பி இருந்தாலும் அவள் வண்டியில் நிச்சயமாக மோதி இருப்பான்.
‘நல்லவேளை தப்பிச்சேன்…வண்டி மோதி இருந்தா அஞ்சலி அருக்காணி அவதாரம் எடுத்திருப்பா…’
தனக்குள் பேசிக் கொண்டவனுக்கு சிரிப்பு வந்துவிட மீசைக்குள் சிரிப்பை மறைத்தபடியே அவளை கடந்து தனது வீட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து இருந்தான் குமரகுரு.
அவளோ அவனை ஒரு சிறு பார்வை பார்த்து மகளோடு ஒரு சிறு உலா கிளம்பி இருந்தாள்.
“சவி…”
பெயரை உச்சரித்தபடியே அவர்கள் சென்ற பாதையை பார்த்தவனின் விழிகளில் ஏதேதோ உருவத் தடுமாற்றங்கள்…
கீற்றாய் உருண்டு வரத் தயாரான கண்ணீரை விழிகள் சிமிட்டி உள்ளே இழுத்துக் கொண்டவன் எச்சிலை கூட்டி விழுங்கி வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்.
(தொடரும்)
error: Content is protected !!