Skip to content
Post Views: 1,206
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 3
சிவராமன் கோபத்தோடு வீடு திரும்பினார்.வாசலில் செருப்பை தெற்கில் ஒன்றையும் வடக்கில் ஒன்றையும் விசிறி அடித்து உள்ளே நுழைய வீடு முழுவதும் சொந்தங்கள்.
கோபத்தை கட்டுப்படுத்தி வாங்க என்றார் மரியாதை நிமித்தமாக, சுத்தி வலைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்து விட்டனர்.
சிவராமனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.வேண்டாம் என்று மூஞ்சியில் அடித்தது போல சொல்ல விரும்பாமல், பிறகு சொல்கிறேன் என சொல்லி விட்டார்.
Advertisement
வந்தவர்கள் கிளம்பிய உடன் சிவராமனின் அண்ணி பானுமதி, தயங்கியவாறே கொஞ்சம் யோசிச்சி நல்ல முடிவா சொல்லுங்க, நம்மளுக்கும் நாலு ஜனம் வேணும், நம்ம வீட்டுக்கு பெரியவங்க யாரும் இல்லை.
எதாவது நல்லது கெட்டதுனா முன்னாடி வந்து நிக்க நாலு பேரு வேணும்,நா நிதர்சனத்தை சொல்றே உங்களுக்கு பிடிச்சா பண்ணலாம் இல்லைனா வேண்டா என்றார்.
இரவு முழுவதும் தூங்காமல் விட்டத்தை பார்த்து யோசித்தார் சிவராமன்.
Advertisement
அண்ணி சொல்வதை போல் நம் வீட்டிற்கும் ஏதாவது என்றால் நிற்க நாலு சொந்தம் வேண்டும்.அந்த வீடு மாமன்,மாச்சான்,அக்கா,தங்கை என நிறைந்த சொந்தங்களால் கட்டமைக்கப்பட்டது.
Advertisement
“லட்சுமியை” தங்கை சிவகாமியின் திருமணத்தில் பச்சை தாவணியில் பார்த்தது உண்டு… மேற் கொண்டு எந்த யோசனையும் அவளை பற்றி வரவில்லை. கூட்டு குடும்பத்தில் பிறந்த வளர்த்தனால் நம் அம்மாவையும் அன்பால் அரவணைத்து பார்த்து கொள்வாள் என்ற எண்ணம்.
இருந்தும் காலையில் தனது ஆஸ்தான தெய்வத்திடம் பூ கேட்போம்.பூ விழுந்தால் மேற்கொண்டு பேசலாம் என முடிவெடுத்தார்.
பூசாரி வெள்ளை பூவையும்,சிவப்பு பூவையும் கட்டி சிவராமன் முன்பு போட,தெய்வத்தை வேண்டிக் கொண்டு பூவை எடுத்து பிரித்தார்.வெள்ளை நிறம் வந்தது.
Advertisement
பூசாரி “பேஸ் பேஸ் நல்ல யோகம்தான் வெள்ளை நிறம் வந்துருக்கு அடுத்த முகூர்தத்துலியே கல்யாணம் செஞ்சிர வேண்டியதுதான்”என்றார்.
தெய்வமும் பூ கொடுத்து விட்டது.இரு வீட்டிலும் கல்யாணம் கலை கட்டியது.
எல்லாம் சரி கல்யாண செலவுக்கு பணம் இடித்தது.மீண்டும் வீட்டின் ஒரு பகுதி விற்கலாம் என விவாதம் வர, சிவராமன் திருமணமே வேண்டாம் என கூறினார்.
லட்சுமியின் தந்தை அடித்துபிடித்து வந்து ஏன்? என கேட்க, விவரம் சொல்லப்பட்டது.
வீடு எல்லாம் விற்க வேண்டாம். மொத்த திருமண செலவையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.சிவராமனுக்கு தன்மானம் குறைவதாக தோன்றியது.
“இங்க பாரு சிவராமா உங்க அம்மா உயிரோடு இருக்கற வரை வீட்டை விற்கறதை பத்தியோ, பங்கு பிரிக்கறதை பத்தியோ யோசிக்காதே.
பாவம் அது வாயும் பேசாது காதும் கேட்காது, மூனு வேளை சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கும் உன் அண்ணன் வீட்டுக்கும் அலைய வைக்க கூடாது.
அது உயிரோட இருக்கற வரைக்கும் வீட்டையும் உங்க அம்மாவையும் விட்றாதே. கல்யாண செலவுதானே நா பாத்துக்கறே…
மூனு பவுன் போடறே கொறைச்சு செய்யறேனு நினைக்காதே, இன்னும் ரெண்டு புள்ளைங்க வீட்டுல இருக்கு,ஆனா எந்த குறையும் வெக்காம எல்லாத்தையும் செய்வேன் என்றார் லட்சுமியின் தந்தை.
சிவராமன் ,”எனக்கும் உங்க பொண்ணு மட்டும் போது வேறு எதுவும் வேண்டாம்”
நா உங்க பொண்ணை கல்யாணம் செய்றதுக்கு முக்கிய காரணம் வீடு நிறைய சொந்தம் வேணும், பெரியவங்க ஆசிர்வாதம் வேணும்னுதா,பணம் நகை எல்லா எதுவும் வேண்டாம் என
தன்னிடம் கொஞ்சம் இருந்த சேமிப்பை திருமணத்திற்கு மாமனாரிடம் தந்தார்.
இதுவரை ஊட்டியில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்த சிவராமன் தனக்கென குடும்பம் அமைவதால் ஊரிலேயே வேலை தேட ஆரம்பித்தார்.
எந்த வேலையும் அமையவில்லை. கடைசியில்தான் பிரபல ரீடு கடை உரிமையாளர் தங்கவேல் மாத சம்பளத்திற்கு சிவராமனுக்கு வேலை கொடுத்தார்.
காலை எட்டு மணிக்கு சாப்பாடு கட்டிக் கொண்டு வேலைக்கு கிளம்புவார்.அவர் வருவதை எதிர் நோக்கி லட்சுமி காத்திருப்பார்.
இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வெல்லாம் மாட்டார்கள் பார்வை மட்டுமே, அதற்காக தண்ணீர் பிடிக்க போவாதாக வீட்டில் பொய்யுரைத்து விட்டு காலை ஏழுமணிக்கெல்லாம் வந்து விடுவார் லட்சுமி.
சிவராமனை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்ல பழனியம்மாள் ஆரம்பித்துவிட்டார்.
“எல்லாரு வேலைக்கு போகனு உன் தம்பி, தங்கச்சிக பள்ளிக்கூடம் போகனு நீ வந்து சட்டுபுட்டுன்னு சோற ஆக்குவனு பாத்தா நீ இவ்வளோ நேரம் தண்ணி கொண்டு வரியா?” என கேட்க …
பைப்ல ஒரே கூட்டம் …வீட்டு லைன்ல தண்ணி இனிமே வாரத்துக்கு இரண்டு நாள்தா வருமாம் என்றார்.
பொது பைப்ல நாலு ஜனம் வந்து தண்ணி புடிக்கதான் செய்வாங்க நீதான் வாய திறந்து கெட்டிகாரத்தனமா பேசி தண்ணி கொண்டு வரனும் .
நீ வரவங்களுக்கும் போறவங்களுக்கும் தண்ணி விட்டுட்டு நிப்பேன். நீ நாளைல இருந்து தண்ணி புடிக்க போக வேண்டாம் அடுப்பு வேலையை மட்டும் பாரு என சொல்லி விட்டார்.
அம்மாவை போல் சண்டை எல்லாம் போட்டு தண்ணீர் கொண்டு வர மாட்டார் லட்சுமி. அவர் கூறியதை போல யாராவது வந்து இரண்டு அதட்டி அதட்டினால் தன் குடத்தில் இருக்கும் தண்ணீரை அவர்களுக்கு கொடுத்துவிட்டு வந்து விடுவார்.
அடுத்தநாள் காலை அம்மாவே தண்ணி எடுக்க செல்ல, வேண்டாம்மா நானே போறே சமையல் எல்லா காலைலே நாலு மணிக்கே முடிச்சுட்டே என தண்ணிர் சுமக்க ரெடியாக வந்தார்.
போன வாரம் அந்த மூணாவது தெருவுல இருக்கறவ ஏதோ வம்பு இழுத்தானு சொன்னியே, வா அவளை இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துட்டு வந்திரலாம் என புடவையை செருகி கிளம்பினார் பழனியம்மாள்.
அவருக்கு சண்டை பிடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல,ஆனால் தனக்கு தெரிந்த வரையில் நீதி, நேர்மை,நாணயத்தை தன் சண்டையில் கடைபிடிப்பவர்.
தானாக எந்த சண்டைக்கும் போக மாட்டார். அதே சமயம் வந்த சண்டையை விடவும் மாட்டார்.
லட்சுமிக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.திருமணம் பேசி முடித்து விட்டது இனி என்ன என்றெல்லாம் யோசிக்க முடியாது.
என்னதான் உறவுமுறை என்றாலும் கழுத்தில் தாலி ஏறும் வரை இருவரும் வேறு வேறுதான்.
பழனியம்மாள் சண்டைக்கு தயாராக வர,அந்த மூணாம் தெருவுக்காரி லட்சுமியின் கல்யாண விஷயத்தை எடுக்க சண்டைக்கு சுபம் போடப்பட்டது.
சிவராமன் தூரத்தில் வருவதை பார்த்ததும்,அம்மா தண்ணி பிடிப்பதில் பிசியாக இருப்பதை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு, அடுத்த சந்தில் சென்று நின்று கொண்டார்.
ஒருவேளை அவர் பார்த்து விட்டால் என்ற பயம்.
பார்வை கிடைத்தது விட்டது. சிவராமனும் வேலைக்கு சென்று விட்டார். மூச்சு வாங்க ஓடிவந்து பழைய இடத்திலேயே நின்று கொண்டார் லட்சுமி.
கல்யாண நாள் நெருங்கியது.ஜவுளி எடுக்க சிவராமன் அவரது அண்ணன், அண்ணி ,திருமணம் முடிந்து சென்ற அவரின் தங்கை சிவகாமி, அவளின் கணவர் எல்லோரும் கிளம்பினர்.
கிளம்பும்முன் ,லட்சுமி வீட்டிற்கு செல்ல அவளுக்கு ஒரே அங்கலாய்ப்பு, பெண் பார்க்கும் படலம், கல்யாணத்திற்கு முன் இரு வீட்டிலும் கை நனைக்கும் விருந்து எதுவும் நடக்காமல் நேரே ஜவுளி எடுக்க செல்கிறார்களே என்று…
இரு வீட்டிற்குமான தூரம் பத்து நிமிடத்தில் நடந்தே சென்று விடலாம். இரு வீட்டையும் பிரிப்பது ஒரு ரோடு மட்டுமே. ரோட்டின் இடதுபுறம் பத்தடி நடந்தால் சிவராமன் வீடு,வலது புறம் பத்தடி நடந்தால் லட்சுமியின் வீடு.
இரு வீட்டு பக்கங்களிலும் இரு மாரியம்மன்கள் தங்கள் காவல் எல்லைகளை பிரித்து இருப்பதால் மட்டுமே இருவரும் வெவ்வேறு ஊரை சேர்ந்தவர்கள் ஆகினர்.
சிவராமனும்,லட்சுமியும் வேண்டுமானால் கணேஷன் திருமணத்தில் சந்தித்து கொண்டிருக்கலாம்,ஆனால் ஒருவர் வீட்டில் மற்றவரை நன்றாகவே அறிந்து இருப்பதால் அந்த சடங்குகள் எதுவும் செய்ய வில்லை.
சரி ஜவுளி எடுக்கவாவது அழைத்து செல்வார்கள் என எண்ணி இருக்க, கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி எல்லாம் வரக் கூடாது. நீ என்ன கலர் வேணும்னு சொல்லு நாங்க எடுத்துட்டு வரோம் என்று அதற்கும் தடை போட்டனர்.
குங்கும கலர்லே புடவை வேணும் என்று சிவராமனின் அண்ணியிடம் சொல்லி அனுப்பினார் லட்சுமி.
புடவையும் ரெடி, பொண்ணும் ரெடி, மாப்பிள்ளையும் ரெடி, சொந்த பந்தங்களும் ரெடி. ஆனால் மாங்கல்யம் வாங்க பணம் இடித்தது.
அந்த நேரத்தில் சிவராமனின் முதலாளி கைகொடுத்தார்.
இரவு மண்டபத்தில் மணமகள் அறையில் இருந்து ஒரு காகித டம்ளரில் மருதாணியை தன் தங்கை கலாவின் மூலம் மணமகன் அறையில் இருந்த சிவராமனுக்கு கொடுத்து விட்டார் லட்சுமி.
இனிமையான காலைப்பொழுது,பஞ்சமி திதியும்,புனர்பூச நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் இருவீட்டு பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நடந்தது.
லட்சுமியும் ஓரக் கண்ணால் சிவராமன் கையில் மருதாணி சிவந்து இருப்பதை பார்த்துக் கொண்டார்.
“பூவு கூட நாரு போல… பூமி கூட நீருபோல… மாமன் கூட
சேர்ந்திருப்பேன் மதுரை வீரன் பொம்மி போலே…
சேலையோட நூல போல சேர்ந்திருக்கும்
பந்தம் தான்… திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான்…
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்….”
இருவரும் நகமும் சதையும் போல,
உயிரும் உடலும் போல,சந்திரனும் ஒளியும் போல,வேரும் கிளையும் போல, மணமும் மலரும் போல வாழ போகிறார்களா? என்றால் அதுதான் இல்லை.
நிறைய சண்டை , நிறைய கண்ணீர், நிறைய தியாகம்,
நிறைய சகிப்புத்தன்மையுடன் ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழப் போகிறார்கள்.
லட்சுமி “அம்மா அப்பா” என அழைத்ததைவிட “மாமா மாமா” என சிவராமனை அழைத்து இனி வரும் நாட்களில் வாழப் போகிறாள்.
மேட் ஃபார் இச் அதர்ஸ்- மனமொத்த தம்பதிகள் என்பது அன்பொழுக ஒருவரை ஒருவர் இமைபொழுதும் விட்டு பிரியாமல் வாழ்வது அல்ல.
ஒருவருக்கு பிடித்ததை எல்லாம் தெரிந்து வைத்து,அதை அவருக்கு செய்வது அல்ல.
திருமண நாள் பிறந்த நாள் போன்ற விஷேச நாட்களில் விலை மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து,மாதம் ஒரு சுற்றுலா செல்வது அல்ல.
வீடு முழுவதும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப் படங்களை நிரப்பிக் கொள்வது அல்ல.
எங்கள் திருமண வாழ்வில் சண்டையே வந்தது இல்லை. என் கணவர் என்னை ஒரு அடி கூட வைத்து இல்லை.என் மனைவி என்னை கேட்காமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டாள் என்று பெருமையாக கூறுவதில் எல்லாம் இல்லை.
ஆயிரம் சண்டை சச்சரவுகள். உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடை வரை எதிலும் எண்ணங்கள் ஒத்துப்போகாமல்,
காலை பல் துலக்குவதில் இருந்து இரவு பாய் போடுவது வரை அனைத்திலும் சண்டை…
நீயா? நானா? என எதிர் எதிர் துருவங்களாக ஒருவரை மற்றவர் திட்டிக் கொண்டே….
“போயும் போயும் உன்னை கல்யாணம் பண்ணுனே பாரு என கணவனும், என்னை தவிர எவளாலையும் உன் கூட குப்பை கொட்ட முடியாது என மனைவியும் ஒருவரை ஒருவர் எள்ளும் கொள்ளும் வெடித்தது போல, முட்டிக் கொண்டும் மோதிக் கொண்டும் இணைபிரியாமல் வாழ்பவர்களே மனமொத்த தம்பதிகள்.
— தலைவன் வருவான்
error: Content is protected !!