Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேற்று பார்த்த நிலா முகம்

நேற்று பார்த்த நிலா முகம் – 25 (Final & Epilogue)

தன் முன்னே வைக்கப்பட்ட பத்திரங்களைத் தொட்டுக் கூட பார்க்காமல்,

“இத எதுக்கு என்கிட்ட கொண்டு வந்து கொடுக்குறீங்க?” என்றாள் மகி ராமுவைப் பார்த்து.

“இல்ல.. ராஜு சொன்னான். நாங்க உங்க கடைக்கு வந்து உட்காருவதில் உனக்கு விருப்பம் இல்லன்னு. வேண்டாம்னு சொல்றேன்னு.

உனக்கு எங்க மேல ரொம்ப சந்தேகம் இருக்கும். இருக்கும் தான்.



Advertisement

நான் அத தப்பு சொல்லல.

ஆனா, நாங்க இப்ப உனக்கு உதவனும்னு தான் நினைக்கிறோம்.

 ஒன்னுக்கு ரெண்டா கைக்குழந்தையை வச்சுக்கிட்டு, ஒன்னுக்கு ரெண்டு பிசினசை எப்படி ரன் பண்ணுவீங்க?

Advertisement

உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் நான் வர்றேன்னு சொன்னேன்.

Advertisement

உன் புருசனோட அண்ணனா கூட இல்ல. வேலை செய்யற எம்ப்ளாயி போல கூட நினச்சுக்கோ.

வேணுமின்னா ஒரு சம்பளம் கூட போட்டுக் கொடுத்துடு!” என்றான் ராமு.

“ஆமாம்மா.. நானும் அதையே தான் சொல்றேன்” என்றாள் ப்ரியாவும்.

Advertisement

“நீங்க இதுக்கு என்ன அம்மாச்சி சொல்றீங்க?” என்றாள் மகி கமலா அம்மாவைப் பார்த்து.

அவர் கொஞ்சம் தயங்கி விட்டு,

“இல்ல.. முன்ன மாதிரியே இவங்கல்லாம் இருந்தா, நான் தான் முதல் ஆளா இவங்கள வெளியே போக சொல்லி இருப்பேன்.

ஆனா.. இப்ப..

அவங்க கிட்ட மாற்றம் தெரியுதும்மா.

சாவோட விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்திட்டான் ராமு.

அதனால இப்ப அவன் நல்லா உணர்ந்து திருந்தி இருப்பான்னு தான் நான் நம்புறேன்.

அப்புறம் ப்ரியா, ரொம்ப பெரிய அசிங்கத்துல இருந்து அவ புள்ளையை தப்ப வச்சு, மீட்டு எடுத்து வந்திருக்கான் ராஜு.

அதனால அவளும் மனசு திருந்தி இருப்பான்னு தான் நான் நம்புறேன்.

என் பிள்ளைங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துமையா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா, ஒருத்தர் கை பிடிச்சு ஒருத்தர் முன்னேறனும் தான் நான் ஆசைப்பட்டேன்.

ஆனா இதுவரை எல்லோரும் ராஜுவை சுரண்டி தான் பிழைச்சாங்களே தவிர, அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைய விடாம பார்த்துட்டு இருந்தாங்க.

 அதனால தான் நான் பெத்த பிள்ளைங்கன்னு கூட பார்க்காம அவங்க கிட்ட கடுமையா நடந்துக்கிட்டேன்!

அப்ப நான் செஞ்சது சரி தான்.

ஆனா, இப்பவும் அவங்கள ஏத்துக்காம இருக்க இந்த பெத்தவளால முடியல.

நான் ஏத்துகிட்டேன்.

நீ ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன் விருப்பம்!

எப்ப கல்யாணம்னு ஒண்ணு ஆகி, ஒருத்தி அவன் வாழ்க்கையில வந்துட்டாளோ,, இனி அவன் நல்லது கெட்டது அவங்க ரெண்டு பேரும் பேசி முடிவெடுக்க வேண்டியது தான்!

நான் இருக்கப் போறது இன்னும் கொஞ்ச நாள் தான்!

ஆனா அவன் கூட கடைசி வர கூட வரப்போற உறவு நீ தான்!

 நீ என்ன முடிவு எடுக்கணுமோ எடுத்துக்கோ!” என்று சொல்லி விட்டார் கமலா அம்மா.

“அம்மாச்சி, போன தலைமுறை ஆளா இருந்தாலும், நீங்க என்கிட்ட ஒரு மாமியார நடந்துக்காம, நிஜமாலுமே ஒரு அம்மாச்சியா தான் இருந்துருக்கீங்க.

இப்ப கூட உன் விருப்பம்னு சொல்லி கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்க.

கொஞ்சம் இடைவெளி விட்டு நகர்ந்து நிக்கறீங்க.

இது தான்.. இந்த இடைவெளி தான் நானும் இவங்க கிட்ட கேக்குறேன்.

ரொம்ப ஒட்டவும் வேண்டாம். அப்புறம் ஒரேடியா பிரியவும் வேண்டாம்.

ப்ளீஸ் என்னை யாரும் தப்பா நினைக்க வேண்டாம்.

நான் கொஞ்சம் வெளிப்படையா பேச நினைக்கிறேன். பேசலாமா?” என்று ராமுவைப் பார்த்துக் கேட்டாள் மகி.

 தலையசைத்தான் அவன்.

“கொஞ்சம் இருங்க..” என்று உள்ளே போய், இரண்டு மூன்று டைரிகளை எடுத்து வந்தாள்.

அதில் முழுக்க முழுக்க ராஜூவின் வரவு செலவு கணக்குகள்!

ராஜு என்ன தான் குடும்பத்திற்கு வாரி இறைத்த வள்ளலாக இருந்தாலும் அவனிடமும் ஒரு நல்ல பழக்கம் இருந்தது.

அது அவன் அம்மாவிடமிருந்து வந்த பழக்கம்!

செய்கிற செலவு கணக்குகள், அனுப்பிய பணம் பற்றி தினமும் டைரியில் எழுதி வைப்பான்.

அதைக் கொண்டு வந்து காட்டிய மகி,

“நீங்க அவர் கிட்ட இது வரை வாங்கி இருக்கும் பணத்துக்கும் வீட்டுக்கு செலவு செய்து இருக்கும் பணத்துக்கும் இடையில இருக்கிற வித்தியாசத்தை.. இதோ.. இந்த யாழினி பாப்பா கூட கண்டுப் பிடிச்சுடும்!

ஏன்னா.. அத்தனையும் பொய்க்கணக்கு! எல்லாத்துலயும் நீங்க கொஞ்சமா பணத்தைக் கமிசன் அடிச்சு தனியா வச்சுகிட்டு தான் செலவு பண்ணி இருக்கீங்க! இல்லையா?”

“அத தான் நானே ஒத்துகிட்டேனேம்மா.. அதனால தான் எல்லா பத்திரத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டேனே” என்றான் ராமு.

“நீங்க கொடுத்துட்டா.. அவர் திரும்ப வாங்கிப்பாரா? அவர விடுங்க.. நானே வாங்கிக்க மாட்டேன்.

அது எங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவர் சம்பாரிச்ச பணம். அது அவர் விருப்பம்.

நான் தலையிடப் போறதில்லை!

ஆனா.. இப்ப உருவாக்கி இருக்கிற தொழிலில் என்னோட பங்கும் இருக்கு!

ஒரு தம்பியா அவர் உங்கள, பிரியா அண்ணிய மறுபடி நம்பி ஏத்துக்கலாம்.

அம்மாச்சியும் ஏத்துக்கலாம்.

ஏன்னா.. அவங்களுக்கு உங்க ரெண்டு பேத்தையும் சின்ன வயசுல இருந்து தெரியும்!

ஆரம்பத்தில் நல்லபடியா எல்லா அக்கா அண்ணன்கள மாதிரி பாசமா இருந்தப்போ,

அப்புறம் அவர் சம்பாரிக்க ஆரம்பிச்ச பின்னே, நீங்க குணம் மாறினத..

இதோ இப்போ மறுபடி மனசு மாறி நல்லபடியா வந்திருக்கிறதை எல்லாம் அவங்களால புரிஞ்சி ஏத்துக்க முடியுது!

ஏன்னா.. நீங்க எல்லோரும் ஒரே ரத்தம். ரத்த உறவு!

ஆனா என்னால் முடியாது!

ஏன்னா எனக்கு உங்கள பத்தின ஃபர்ஸ்ட் இம்ப்ரேசனே  ரொம்ப மோசமா தான் இருந்துச்சு.

என்ன இருந்தாலும் நான் வெளியில் இருந்து வந்தவ!

எனக்கு உங்க மேல எல்லாம் அவரை மாதிரியே நம்பிக்கை வர பல வருஷம் ஆகும்!

இப்போ.. நீங்க நம்ம சர்வீஸ் ஸ்டேசனுக்கு வந்து உட்கார்ந்து நிர்வாகம் பண்ணினா, எனக்கு உங்க மேல கொஞ்சம் டவுட் இருந்திட்டே தான் இருக்கும்!

கணக்கு எல்லாம் சரியா இருக்கா.. இல்ல.. இதிலயும் எதுவும் கமிசன் அடிச்சுருப்பாரான்னு.

என்னால அத கேக்கவும் முடியாது.

ஆனா உள்ளுக்குள்ளே வச்சுக்கிட்டு ஸ்ட்ரெஸ் தான் ஆகும்!

இல்ல.. கணக்கை செக் பண்ணினாலோ, நீங்க எதுவும் தப்பா செய்திருக்காத பட்சத்தில், உங்களுக்கு அது அவமானமா இருக்கும்!

கோபம் ஸ்ட்ரெஸ் கூட உங்களுக்கும் கூட வரலாம்.

அது அப்புறம் இப்ப நல்லா போய்ட்டு இருக்கிற உறவையும் கெடுத்திடும்!

அதே மாதிரி தான் ப்ரியா அண்ணிக்கும்.

உங்க யாருக்காவது என் அம்மா வீட்டில் இருந்து  எத்தனை பவுன் போட்டுட்டு வந்திருக்கேன்னு தெரியுமா?

என் வீட்டுக்காரருக்கு சுத்தமா தெரியாது. அம்மாச்சி அதைக் கண்டுக்கவே இல்லை!

ஆனா பிரியா அண்ணிக்குத் தெரியும்!

என்ன அண்ணி தெரியும்தானே?”

“ம்ம்” என்று சங்கடத்துடன் தலையாட்டினாள் ப்ரியா.

“ஆமா.. எப்படி தெரிஞ்சது?”

“அது.. அது வந்து… நீ ஆடிக்கு போய் இருந்தப்போ, ஒரு நாள் நான் வீட்டுக்கு வந்தேன்.

அப்போ உன் பீரோவைத் திறந்துப் பார்த்து என்ன நகை வச்சுருக்க என்னன்னு பார்த்தேன்.

அப்புறம் அம்மா குளிச்சுட்டு வர சத்தம் கேட்டு, பூட்டி வச்சுட்டு வந்திட்டேன்.” என்றாள் பிரியா அன்று செய்த தப்பிற்கு இன்று அவமானப்பட்டு!

“அது அன்னிக்கு சாயந்திரமே எனக்கு தெரியும்!

முன்னாடி வீட்டு அக்கா, நீங்க பண்ணித பார்த்துருக்காங்க, உறை மோர் கேட்டு வந்தவங்க.

நீங்க பீரோவைத் பார்த்துட்டு இருக்கிற பார்த்துட்டு பயந்து போய், குளிச்சுட்டு இருக்கிற அம்மாச்சிய வெளியே பாத்ரூமில் வெளியில் நின்னு கூப்பிட்டு விட்டு போய்ட்டாங்க!

இத எதுக்கு சொல்றேன்னா.. இப்ப நீங்க நம்ம ஃபுட் ஸ்டாலில் வந்து உட்கார்ந்து, அங்க வர்ற லாபம் பத்தி கணக்கு போட்டுட்டு இருக்கீங்களோன்னு எனக்கு தோண ஆரம்பிச்சுடும்!

என் அத்தை மட்டும் நினைக்க மாட்டாங்களான்னு நீங்க கேக்கலாம்.

அவங்க ஏற்கனவே டீக்கடை வச்சு நடத்திட்டு இருந்தவங்க.

ஒரு ஃபுட் பிசினசில் இருக்கும் எல்லா நல்லது கெட்டதும் தெரிஞ்சவங்க.

எனக்கு உதவி செய்ய தான், இப்பவும் நல்லா ஓடிட்டு இருக்கிற அவங்க கடைய லீசுக்கு விட்டுட்டு இங்க வந்து இருக்காங்க.

இந்த ஃபுட் பிசினெஸ் நல்லா லாபம் போல இருந்தாலும், அத நடத்துறவங்க உடல் பொருள் ஆவி அத்தனையையும் கடை மேல போடணும்!

அவ்வளவு டெடிகேட்டடா இருந்தா தான் நல்லபடி கொண்டு போக முடியும்! ஆனா வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு அதில் இருக்கிற லாபம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்!

அது உங்களுக்கு சரி பட்டு வராது அண்ணி!

நீ உன் அண்ணிய மட்டும் உன் தொழிலில் சேர்த்துகிட்டன்னு நீங்க அடுத்த கேள்வி கேக்கலாம்!

நான் கும்பகோணத்தில் என் அம்மாவின் வீட்டில் வைத்து நடத்தும் பேக்கரி சப்ளைஸ் ஏஜென்சி பத்தி!

அதயும் நானே சொல்லிடறேன் இப்ப.

நான் எனக்கு தானா வந்தா வாய்ப்பான அந்த பேக்கரிகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் டீலர்ஷிப்பை, என் அண்ணனை நம்பி தான் எடுத்து இருக்கேன்!

ஏன்னா அவனுக்கு தான் டிஸ்ட்ரிபியூஷன் சைட் அனுபவம் ஜாஸ்தி.

நானும் என் அம்மாவும் இருந்த வீட்டில் வைத்து நடத்துறேன்.

என் அண்ணி அங்க ஒரு எம்ப்ளாயி தான்.

சம்பளம் வாங்கிட்டு தான் வேலைப் பார்க்கிறாங்க.

ஏன்னா அவங்களுக்கும் அதில் அனுபவம் இருக்கு!

அதுவும் இல்லாம, எல்லாமே கம்ப்யூட்டர் சிஸ்டம் அங்க.

இன்னும் சொல்லப் போனா எல்லாமே ஆன்லைன் பில்லிங்.

நான் இங்க இருந்துட்டே பார்த்துக்க முடியும்.

கூடவே வைபை கேமரா வேற அங்க இருக்கு.

எனக்கு தெரியாம ஒரு அட்டைபெட்டி கூட  வெளியே போக முடியாது.

இத ஏற்பாடு பண்ணிதே என் அண்ணன் தான்!

நாளைக்கு யாரும் தங்கச்சி காசை எடுத்துக்கிட்டான்னு சொல்லிட கூடாதுன்னு!

என் அண்ணனுக்கு கூட கன்சல்டிங் பீஸ் கொடுத்துட்டேன்.

அப்புறம் அந்த வீட்டுக்கும் ஒரு வாடகை போட்டு அத என் அம்மா அக்கவுன்ட்டுக்கு அனுப்பிடறேன்!

இத எல்லாம் நான் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன்னா,  நீங்க யாரும் அவ வீட்டு ஆளுங்கள மட்டும் தொழிலில் பங்கு எடுத்துக்க வச்சுட்டு இருக்கா.

நம்ம வீட்டு ஆளுங்கள தான் உள்ளே விட மாட்டேன்கிறா என்ற பேச்சு பேசிடக் கூடாதுன்னு தான்!

நான் அவங்க கிட்ட பேசின மாதிரி உங்க தம்பி உங்க கிட்ட இப்படி கட் அண்ட் ரைட்டா இருப்பாரா?

இருக்கவும் மாட்டார்.

கேள்வி கேக்கவும் மாட்டார்.

உங்களுக்கே நல்லா தெரியும்.

ஒரு குழந்தையைப் பெத்து அதுக்கு ஒரு மூணு வயசு ஆகுற வரைக்குமே பெத்தவளுக்கு நல்ல தூக்கம் கிடையாது!

நேரத்துக்கு சாப்பாடு கூட சாப்பிட முடியாது. இதில எனக்கு இரட்டைக் குழந்தைகள் வேறு!

நாம எங்கியாச்சும் அடுத்த வீட்டில் இப்படி ரெட்டைக் குழந்தைங்கள பார்த்தா, கன்னத்தைக் கிள்ளி கொஞ்சி விட்டு வந்திருப்போம்!

ஆனா அந்த மாதிரி ரெட்டைக் குழந்தைங்க பிறந்த வீடுகளுக்கு போய் பாருங்க.

 அவங்க பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறாங்கன்னு  தெரியும்!

ஏற்கனவே இந்த ஸ்ட்ரெசில் இருக்கும் எனக்கு இன்னமும் ஸ்ட்ரெஸ் வேண்டாமே!

நான் உங்கள ஒதுக்கியோ விலக்கியோ வைக்கல.

ஒரு சின்ன இடைவெளி.. அது தான் நமக்குள்ள வேணுமின்னு கேக்குறேன்!

மத்தபடி நாளு கிழமைன்னா நாங்க உறையூர் வீட்டுக்கு வந்திடறோம்! ஒண்ணா கொண்டாலாம்!

ஒண்ணா கோவிலுக்கு போகலாம்!

டூர் போகலாம்! சந்தோசமா இருக்கலாம்.

என்ன சொல்றீங்க” என்றாள் மகி.

கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் யோசனை!

“நான் இன்னொரு விசயமும் யோசிச்சுட்டு தான் சொல்றேன்.

அது அடுத்த தலைமுறை! நிச்சயம் சினேகாவோ, யாழினியோ அவங்கள பெத்தவங்க இப்படி சொந்தக்காரங்க கிட்ட வேலை செய்றத விரும்ப மாட்டாங்க!

அப்படி தான் யாழினி? உங்கப்பா உன் சித்தப்பா கம்பெனியில் வேலை செய்றது உனக்கு பிடிச்சுருக்கா?” என்று அவளை நோக்கி கேட்டாள்

“வேண்டாம். அப்பா வேற எங்கியாச்சும் வேலைக்குப் போகட்டும்” என்றாள் யாழினி டக்கென்று.

அவளுக்கு தானே தெரியும்!

கூடப் படிப்பவர்களும் அக்கம் பக்கம் இருப்பவர்களும் எப்படியெல்லாம் அவள் அப்பா அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார்கள் என்று!

கூடப் பிறந்த தம்பிய ஏமாத்தி.. பெத்த தாயை முதியோர் இல்லத்தில் விட்டு.. செஞ்ச பாவத்துக்கு தான் இப்படி ஆக்சிடன்ட் ஆக்கி கடவுள் ஆப்பு வச்சுட்டான் என்று பல்வேறு ஏச்சுக்களை அவள் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறாள்!

எனவே உடனே “வேண்டாம்” என்றே சொல்லி விட்டாள் அவள்!

“பார்த்தீங்களா.. இதுக்கு தான் நான் இவ்வளவு பேசினேன்”.  என்றாள் மகி.

எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜு,

“அண்ணே.. மகி சொல்றது எனக்கும் சரின்னு தானே படுது. நாம குடும்பத்தையும் பிசினஸையும் ஒண்ணா ப்லென்ட் பண்ணக் கூடாது!

அப்படி பண்ணினா ரெண்டுமே கெட்டுப் போய்டும்!

எனக்கு நீங்க எல்லோரும் வேணும்ணே.

அதனால மகி சொன்ன அந்த சின்ன இடைவெளியோடவே இருந்துக்குவோம்” என்று சொன்னான் ராஜு.

ரொம்ப நேரம் யோசித்த ராமு, பின்,

“ஓகே.. மகி சொன்ன மாதிரியே இருந்துப்போம்” என்று சொல்லி ஒத்துக் கொண்டான்.

“அப்ப.. ப்ளீஸ்.. இந்த பத்திரத்தை எல்லாம் எடுத்துட்டுப் போண்ணே” என்றான் ராஜு.

“இருங்க. அது இருக்கட்டும்” என்று சொல்லி வாங்கி வைத்துக் கொண்டாள் மகி.

கேள்வியாக பார்த்தவர்களுக்கு அன்று மாலையே விடைக் கிடைத்து விட்டது.

இவ்வளவு பேசிய மகி அடுத்து சும்மா இருக்கவில்லை.

அவர்கள் கார் ஸ்பாவைத் திறந்து வைத்த அந்த சினிமா டைரக்டரின் மாமனார், அந்த உள்ளூர் அரசியல் பிரமுகரை,

குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ராஜு, ராமு வனிதா சகிதம் அவர் வீட்டுக்கே போய் சந்தித்தாள்.

அவரின் மனைவிக்கு மகியை மிகவும் பிடித்து இருந்தது ஏற்கனவே!

இப்போது அவர் வாய் நிறைய வரவேற்றார் குழந்தைகளுடன் வந்திருக்கும் அவளை!

குழந்தைகளைத் தூக்கி கொஞ்சி விட்டு பின் கேட்டார்கள்.

மகி, தற்போது ராஜுவின் பிளாட்கள் விற்க முடியாதபடிக்கு ஆகி விட்டதை சொல்லி,

“நீங்க ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்க,

சற்று நேரம் யோசித்த அவர்,

“ம்ம் யார் அட்வான்ஸ் கொடுத்தது?” என்று கேட்டு விவரங்கள் அறிந்து கொண்டவர், தன் உதவியாளரை அழைத்து சம்பந்தப்பட்ட ஆளை போனில் அழைக்க சொன்னார்.

உதவியாளர் ராமுவிடம் போன் நம்பர் வாங்கி பேசி விட்டு,

“அண்ணே.. இது நம்ம ஈஸ்வரன்ண்ணே!” என்றார்.

“அவனா.. அவன் நம்ம சொந்தக்காரன் தான் தம்பி” என்று ராஜுவிடம் சொல்லி விட்டு, போனை வாங்கி அவரே பேசினார்.

“ முடிவா என்னடா சொல்ற இப்போ.. சொன்ன மாதிரி கிரயம் பண்ணப் போறியா இல்லையா? இல்ல நான் என் வழியில கவனிக்கட்டுமா?”

“அண்ணே என்ன அண்ணே.. என்ன இருந்தாலும் நாம் எல்லாம் சொந்தக்காரங்க” என்று அவரிடம் பம்மினான் அவன்.

“ஒழுங்கா கிரயம் பண்ணு. பேசினத விட அஞ்சு பர்சண்டேஜ் கூட போட்டுக் கொடுக்கணும்.

இப்ப விலை எல்லாம் ஏறிடுச்சு” என்று அவனை மேலும் மிரட்டி ஒரு வழியாய் பேசின தொகைக்கு வழிக்கு வந்தான் அவன்!

இப்படி அவர் உதவியுடன் இரண்டு பிளாட்களையும் விற்று வந்த பணத்தில் ராமுவுக்கு கட்டடப் பொருட்கள், கான்க்ரீட் கலவை செய்யும் இயந்திரம் உட்பட மேலும் பல அதி நவீன கட்டிடம் கட்டுவதற்கான சாதனங்களை வாங்கி, நல்ல ஒரு இடத்தில் கடையையும் பிடித்து அவற்றை எல்லாம் வாடகைக்கு விடும் தொழில் ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்தார்கள்.

ப்ரியாவிற்கு அருகில் இருந்த இருபாலர் கல்லூரி ஒன்றின் அருகில் ஒரு ஜவுளிக்கடை வைத்துக் கொடுத்து விட்டார்கள்!

ப்ரியாவிற்கு துணிகளின் தரம் கண்டறியும் திறமையும் நல்ல விற்பனைத் திறமையும் இருந்தது!

இருவருக்குமே நிரந்தர வருமானம் வரும் தொழில்களை அமைத்துக் கொடுத்து விட்டு, மீதிப் பணத்தை கமலா அம்மாவின் பெயரில் டெபாசிட் செய்து விட்டார்கள்.

அவர் காலத்துக்குப் பின் அனைத்து பேரக்குழந்தைகளுக்கும் அது சேரும்படியான ஏற்பாட்டில்!

ஆச்சரியப்படும் வகையில் ராமு ப்ரியா இருவருமே தொழிலை நன்குப் பிடித்துக் கொண்டு விட்டார்கள்!

என்ன.. உழைக்க வேண்டி இருந்தது!

ஆனால் அந்த உழைப்பின் மூலம் கிடைத்த பணம், ஒரு விதமான நிம்மதியும் உறுத்தல் இல்லாத சந்தோசத்தை,  ஒரு விதமான போதையைக் கூட கொடுத்தது இருவருக்கும்!

அதை நன்கு அனுபவிக்க தொடங்கினர் இருவரும்!

மக்கள் மூவரும் ஒற்றுமையாக , சந்தோஷமாக யாரும் யாரையும் ஏமாற்றிப் பிழைக்காமல் வாழும் வாழ்க்கையை எண்ணி எண்ணி பெற்ற வயிறு குளிர்ந்தது கமலா அம்மாவுக்கு!

சுபம்!

—–

சின்ன எபிலாக்

மகி ராஜு திருமணத்திற்கு பிள்ளையார் சுழிப் போட்டு ஆரம்பித்து வைத்த பாலு தாத்தாவின் சதாபிஷேக விழாவை எடுத்து நடத்தினான் ராஜு.

அவருக்கு குழந்தைகள் இல்லாததால், கமலா அம்மா சொல்படி ராஜு தான் முன்னின்று ஏற்பாடு செய்தான்.

நிறைய கூட்டம், அந்த முதிய தம்பதிகளிடம் ஆசியைப் பெற!

ராஜுவோடும் இன்னும் சிலரும் செலவை பகிர்ந்து கொள்ள வேண்டி விரும்பி வந்திருந்தார்கள், பாலு தாத்தாவால் நல்ல குடும்பம் அமையப் பெற்றவர்கள்!

விழா நல்ல படியாக முடிந்து, இதோ எல்லோரும் உறையூர் வீட்டில் தான் இருக்கிறார்கள்!

குழந்தைகள் நிலா நிலவனை யாழினியும் சினேகாவும் வைத்துக் கொண்டு இருக்க, இரவு சமையல் நடந்து கொண்டிருந்தது.

பெண்கள் ஆளுக்கொரு வேலையாக செய்து  கொண்டிருந்தனர்.

கமலா அம்மா கீழே உட்கார்ந்து கொண்டு சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருக்க, சற்றுத்தள்ளி டைனிங் டேபிளில் அமர்ந்தவாறு ப்ரியா காய்கறிகள் வெட்டிக் கொடுக்க வனிதா சப்பாத்தி போட்டு எடுத்துக் கொண்டிருந்தாள்.

“ஃபேனை போட்டுக்கோ மகி, நான் வெங்காயம் உரிச்சி முடிச்சுட்டேன். ஃபேனுக்கு நேரா நின்னு ஆத்தினா தான் பால் சீக்கிரம் ஆறும்” என்றாள் ப்ரியா குழந்தைகளுக்கு பால் ஆற்றிக் கொண்டு இருந்த மகியிடம்!

“இதோ ஆறிடுச்சு” என்று அதை இரு பாட்டில்களில் ஊற்றி மூடினாள் மகி.

“நீ.. சாலிட் ஃபுட் கொடுக்க ஆரம்பிச்சுடு மகி.

ராகி கூழ் மாதிரி.

நான் யாழினிக்கு ரெடி பண்ணின ரெசிப்பி எல்லாம் உனக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றாள் வனிதா சப்பாத்தி சுட்டுக் கொண்டே!

“சரிங்கக்கா” என்று பால் பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஒன்றை சினேகாவின் கையில் கொடுத்து விட்டு, யாழினி கையில் இருக்கும் இன்னொரு குழந்தைக்கு கையை நீட்டினாள் மகி.

அவளோ, “சித்தி, உங்களை சித்தப்பா தேடிட்டு இருந்தார். உங்கள் மாடிக்கு வர சொன்னார்” என்றாள்.

“அவர் சந்துரு அண்ணன் கிட்ட பேசிட்டு இல்ல இருந்தாரு எப்ப மாடிக்குப் போனார்?”.

“இல்ல சந்துரு மாமா இன்னோவா எடுக்க தான் வந்தார்.

இப்ப எடுத்துட்டு போய்ட்டார். மாமா உங்கள ஏதோ ப்ராஜெக்ட் விஷயமா பேசணும்னு சீக்கிரம் வர சொல்லுன்னு சொல்லிட்டு போனார்” என்றாள் சினேகா.

அந்த இன்னோவா காரை சந்துருவுக்கே கொடுத்து விட்டார்கள். அவன் தான் அதை இப்போது ஓட்டிக் கொண்டு இருக்கிறான்!

ப்ராஜெக்டா.. என்ன ப்ராஜெக்ட்? ஒரு வேளை சந்துரு அண்ணன் ஏதும் புதுசா ஐடியா கொடுத்துருக்குமோ?

என்னவாயிருக்கும் என்று வடிவேல் போல யோசித்துக் கொண்டே மாடியில் இருந்த அவர்கள் இங்கு வந்தால் தங்கும் அந்த அறைக்குள் சென்றாள் மகி!

உள்ளே நுழைந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டன ராஜுவின் கரங்கள்!

“என்ன இது.. எதுவா இருந்தாலும் நம்ம வீட்டில் வச்சு தான்” என்றாள் மகி.

“நோ வே. நம்ம வீட்டுக்கு போய்ட்டா.. என்னையவா பார்ப்ப.. பசங்கள தான் நீ பார்ப்ப.. என்னைக் கொஞ்சம் கூட கண்டுக்க மாட்ட!

இப்ப தான் அவங்கள பார்த்துக்க இத்தனை ஆள் இருக்கே! ப்ளீஸ்டி மகி.”

“அடப்பாவி.. ஏதோ ப்ராஜெக்ட் விஷயமா பேசணும்னு சொன்னீங்கன்னு தானே நான் இங்க வந்தேன்.

குழந்தைங்கள கூட இன்னும் தூங்க வைக்கல! சரியான பொய்சொல்லி..” அவன் தலையில் செல்லமாக குட்டினாள்!

“ப்ராஜெக்ட் தாண்டி.. நம்மோட அடுத்த ப்ராஜெக்ட்.. நிலா நிலவனுக்கு கூட விளையாட இன்னொரு தம்பியோ, தங்கச்சியோ உண்டாக்குற ப்ராஜெக்ட்!

நான் ஒண்ணும் பொய் சொல்லல” என்றான் ராஜு உல்லாசமாய் சிரித்துக் கொண்டே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!