Skip to content
Post Views: 4,709
“ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று
மு.வ உரை: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.”
கைப்பேசியின் அழைப்பில் தான் சுயத்திற்கு வந்திருந்தான் ருத்ரேஸ்வரன். வெகு அரிதாய் நடப்பது மனைவியிடம் இருந்து வரும் அழைப்பு.
ஆனால் இப்போது அந்த அழைப்பு ஒருவித தனி சுகத்தைக் கொடுத்தது அவனுக்கு.
Advertisement
ஆனாலும் அழைப்பை ஏற்க மனமில்லாதவனாய் கைப்பேசியை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு வண்டியைக் கிளப்பியிருந்தான்.
வீட்டிற்கு ருத்ரேஸ்வரன் வந்த நேரம் செங்காந்தள் மாமியாருக்கு இரவு உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
வாசலில் நின்ற படியே அவளைத் தான் பார்த்திருந்தான். தற்செயலாய் தலையைத் திருப்பியவளின் முகம் அழகிய புன்னகையோடு பிரகாசித்தது.
Advertisement
எதுவெல்லாம் அவளை நிராகரிக்க காரணமாய் இருந்ததோ அதே அழகிய மஞ்சள் முகமும் நடுத்தரப் பொட்டும் விபூதி குங்குமமும் இரட்டை மூக்குத்தியும் இன்று மங்களத்தின் மொத்த வடிவாய் தோன்றியது ருத்ரேஸ்வரனுக்கு.
Advertisement
புடவையைத் ஒரு புறம் தூக்கி சொருகியிருந்தவள் கணவன் உள்ளே வராமல் நிற்பதைக் கண்டு அதை இழுத்து விட்ட வண்ணம் வாசல் நிலைப்படியை அடைந்திருந்தாள்.
“என்னாச்சு மாமா? உள்ளே வராம நிக்குறீக?”
“ஆங்ங் வரேன். இந்தா ரம்யா உனக்கும் பாப்பாவுக்கும் கொடுக்கச் சொன்னா.”, என்றதில் பையைப் பார்த்தவள் கணவனிடம்,
Advertisement
“நாம அவுகளுக்கு ஒண்ணுமே வாங்கி கொடுக்கலையே மாமா?”
“நானும் நினைச்சேன். இதுக்கு அப்பறம் கடைக்கு போய் எங்கே வாங்குறது. காலையிலே நாலு மணிக்கெல்லாம் கிளம்பிருவா.
பார்த்துக்கலாம் விடு.”, என்றவன் தங்களறைக்குச் சென்று விட செங்காந்தளுக்கு கணவனின் பேச்சு சற்றே பொதுப்படையாய் இருப்பதாய் தோன்றியது.
நேற்றைய இரவில் அனைத்தும் மாறி விட்டது என்று நினைத்திருந்தவளுக்கு இப்போது கணவனின் அமைதி கலக்கத்தோடு சேர்த்து அழுகையையே வர வைக்கும் போல் இருந்தது.
உணவு வேளையிலும் மகளோடும் தாயோடும் பேசிய படியே அவன் போக்கில் உணவை முடித்து அறைக்குள் சென்றிருந்தான்.
செங்காந்தள் வேலையை முடித்து மகளைப் பார்த்து விட்டு தங்களறைக்கு வந்த போது ருத்ரேஸ்வரன் கட்டிலில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்திருந்தான்.
செங்காந்தள் ஒன்றும் பேசாமல் இரவு உடையை கையில் எடுத்துக் கொண்டு ஓரமாய் நின்று புடவையை மாற்ற எத்தனித்த நேரம் கணவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
பின்னிருந்து அவளை அப்படியே இறுக்கியிருந்தான் ருத்ரேஸ்வரன்.
ஒரு நொடி ஒன்றும் புரியாதவளின் கரத்திலிருந்து புடவை நழுவியிருக்க அவளது கழுத்து வளைவில் தனது முகத்தை மொத்தமாய் புதைத்திருந்தான்.
உள்ளுக்குள் பெரும் அதிர்வும் படபடப்பும் பெண்ணவளை பயமுறுத்த கணவனின் இருதுளி கண்ணீர் தனது தோள் தொட்டதில் அனைத்தும் மறந்தவளாய் சட்டென அவன்புறம் திரும்பி முகத்தை தனது சிறு கைகளில் ஏந்தியிருந்தாள்.
“மாமா! என்னாச்சு?”
“..”
“எதுவும் பிரச்சனையா மாமா.. ஏன் உங்க கண்ணு கலங்கிருக்கு?”
“..”
“சொல்லுங்க மாமா பயமா இருக்கு எனக்கு..”, என்றவளின் குரல் லேசாய் நடுங்க அதை உணர்ந்தவன் தன்னை தேற்றிக் கொண்டு அவளின் அதரங்களைத் தனதாக்கியிருந்தான்.
ஆசை என்பதற்கு அருகில் கூட செல்லாத முத்தம். அவளை அவளுக்காக அவளாகவே தன்னோடு சேர்த்துக் கொண்ட மகிழ்ச்சியைக் கடத்துவதான முத்தம்.
இதுபோன்று என்னால் வேறு யாரிடத்திலும் உரிமை எடுத்துக் கொள்ள முடியாது எடுத்துக் கொள்ளவும் மாட்டேன் என்பதான முத்தம்.
எனக்காக நீ செய்யும் அனைத்திற்கும் உபகாரமாய் என்னை மொத்தமாய் உன்னிடத்தில் ஒப்படைத்து விடுகிறேன் என்பதான முத்தமாய் இருந்தது.
செங்காந்தளின் கரங்கள் அவனது முகத்தை அழுந்தப் பற்றியிருக்க கணவனின் எண்ணங்கள் எல்லாம் தெளிவாய் அவளுள் கடத்தப்பட்டதில் இன்னுமாய் தன்னோடு அழுத்திக் கொண்டாள்.
அவனை விட பல மடங்கு அன்பை உள்ளே வைத்திருப்பவளுக்கு இந்த முத்தமெல்லாம் எந்த மூலைக்கு?!
ருத்ரேஸ்வரன் முத்தத்தை முடித்த நொடி அவனது முகம் மொத்தத்தையும் தனது முத்தங்களால் நிரப்பியிருந்தாள் செங்காந்தள்.
அந்நேரத்து தனது உணர்வுகளை மொத்தமாய் கொட்டி முடித்தவள் சுயத்திற்கு வந்த போது அவளால் கணவனை எதிர் கொள்ள முடியாமல் தலையை குனிந்து விட அவளது முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டவன் அவள் காதருகில் முணுமுணுப்பாய்,
“என்னை விட்டு கண்ணை நகர்த்தாத டி. அந்த பார்வை எனக்கு வேணும்.”
“மாமா…”
“உனக்கு சம்மதம் தான?”
“…”
“நான் நானாவே இல்ல. உன் சம்மதம் எனக்கு வேணும் டி. எதுவாயிருந்தாலும் சொல்லு..”
“கொஞ்சமா பயமா இருக்கு மாமா..”
“இது நமக்குள்ளே புதுசா என்ன?”
“ஆனால் நீங்க இன்னைக்கு புதுசா இருக்கீகளே..”
“பொண்டாட்டி கிறுக்கு பிடிச்சுருக்கு இத்தனை வருசத்துக்கு பிறகு. நான் என்ன செய்ய?”
“என்னை நிசமாவே பிடிச்சுருக்கா உங்களுக்கு?”
“என் காந்தாவைத் தவிர யாரையும் எனக்குப் பிடிக்காது டி.”
“எப்பவும் என்னை விட்டு கொடுத்துர மாட்டீகளே?”
“செத்தாலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் காந்தா.”
“எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமா..”, என்றவளை அப்படியே கைகளில் ஏந்தியிருந்தான் ருத்ரேஸ்வரன்.
அவனது கழுத்தைக் கட்டியிருந்தவள் மொத்தமாய் அவனது மார்பில் முகம் புதைத்திருந்தாள்.
கட்டிலில் கிடத்தியவன் அப்படியே அவள்மேல் படர்ந்திருக்க அதன் பின்னான நிமிடங்கள் அனைத்தும் வேறு உலகத்தில் சஞ்சரிப்பதாய்.
கணவனின் வேகமும் தாபமும் அதை விட தன்னை முழுதாய் அறிந்து கொள்ளும் ஆர்வமும் அவனின் கண்களிலும் பிரதிபலிக்க நேரமாக ஆக அவள் பயந்தது போலவே இந்த ருத்ரேஸ்வரன் புதியவனாகத் தான் இருந்தான்.
அவள் எதிர்பார்த்த அனைத்துமே இப்போது அவனிடத்தில் இருந்து கிடைக்கிறது ஆனால் அவளால் கணவனின் விழி நோக்க முடியவில்லை இன்று.
நொடிக்கு நொடி சிவந்து போகும் அந்த முகத்திலிருந்து விழியகற்றாமல் இருப்பது இப்போது ருத்ரேஸ்வரனின் முறையானது.
கணவனாய் அவனது வாய் ஓயாத பேச்சுகளும் உளறல்களும் பெண்மையை மேலும் கூசச் செய்வதாய்.
ஒரு கட்டத்தில் அவளே அவனது இதழ்களை கரம் கொண்டு மூடிவிட்டிருந்தாள்.
“ஏன் எதுவும் பேச மாட்ற?”
“…”
“என்னைப் பாரு டி..”
“மாமா..”, என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வர மறுத்தது. இருவருமே ஓய்ந்து போய் கட்டிலில் விழ சட்டென கணவனின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டாள் செங்காந்தள்.
அவளின் கண்ணாடி வளையலில் ஒன்று உடைந்து கட்டிலில் விழுந்திருக்க அது குத்தியதில் கையில் எடுத்தவன் ஓரமாய் வைத்த வண்ணம் அவளது கரத்தை ஆராய்ந்தான்.
லேசாய் செங்காந்தளின் கையிலும் அது குத்தியிருக்க மெதுவாய் அதை வருடியவனாய் தன் மீது முகத்தை மறைந்திருந்தவளைத் தான் பார்த்திருந்தான்.
“காந்தா..”
“..”
“என்னை மன்னிச்சுரு.. ரொம்ப கஸ்டமா இருக்கா?”, என்றதற்கு இடவலமாய் தலையசைத்தாள்.
“ஏன் டி என்னைப் பார்க்க மாட்ற? என்னனு நினைக்குறது?”, என்றவன் அவளது தலையை நிமிர்த்த கண்கள் இரண்டும் கண்ணீரில் நிறைந்திருந்தது.
“காந்தா சாரி. என்னாச்சு? எதுவும் பண்ணுதா? ஏன் அழற?”
“மாமா எல்லாமே கனவு மாதிரி இருக்கு..”, என்றதில் இன்னுமாய் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
“எத்தனையோ நாள் நீங்க தூங்கின பிறவு உங்களைப் பார்த்துட்டே உட்காந்துருக்கேன். நீங்கனால் எனக்கு அம்புட்டு இஸ்டம் மாமா..”
“..”
“உங்ககிட்ட சொல்ல நினைச்சது இல்ல. மனசுக்குள்ளேயே வைச்சு ஆசையை வளர்த்துக்குறது மனசை ரொம்ப சுமையாக்கும் சில நேரம்.”
“..”
‘இன்னைக்கு அதெல்லாம் வெளியில் கொட்டிட்ட மாதிரி இருக்கு. ரொம்ப நிம்மதியா இருக்கேன். சந்தோசமா இருக்கேன்.”
“உன்னை மாதிரியே அன்பு வைக்க எனக்கும் சொல்லி குடு காந்தா..”
“இத்தனை வருசத்து என் வேதனையை புரிஞ்சுகிட்டீகளே அது போதாதா உங்க அன்பு எம்புட்டு பெருசுனு தெரியுறதுக்கு?”
“…”
“எனக்கு சின்னதா ஒரு மூக்குத்தி வாங்கி தரீங்களா?”
“ஏன்?”
“இல்ல இது பெருசா இருக்கே.. உங்களுக்கு பிடிக்காதுனு தெரியும் எனக்கு.”
“இத்தனை நாள் பிடிக்காததா இருந்தது. இனி இல்ல..”, என்றவன் அவளது மூக்குத்தியின் மீது முத்தம் வைத்தான்.
“அடுத்த பிள்ளை வந்துருமோ?!”, என்று கேட்டவளின் பாவனையில் லேசாய் சிரித்திருந்தான் ருத்ரேஸ்வரன்.
“ஏன் சிரிக்குறீக?”
“பாப்பாவே வந்துட்டா. இதுக்கு அப்பறம் எப்படி வராம போகும்?”, என்றதன் பொருள் புரிந்தவளுக்கு முகம் செவ்வானமாகி விட்டிருந்தது.
“இத்தனை நாள் இதெல்லாம் உங்களுக்குத் தேவைப் படலையா மாமா?”
“இதுக்காக மட்டும் பொண்டாட்டினு யோசிச்சா அசிங்கமா இருக்கும் எனக்கு. அதனால அப்படியே விட்டுட்டேன்.”
“நீங்க கேட்டுருந்தா நான் கட்டாயமா மறுத்துருக்க மாட்டேனே..”
“அதனாலதேன் அந்த நினைப்பு எனக்கு வரலை. எனக்காக நடக்குறதுக்கும் நம்ம விரும்பி நடத்திக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு காந்தா..”
“இனி அப்படியெல்லாம் யோசிக்காதீக..”
“அப்போ இனியும் நீயா என்கிட்ட வர மாட்டியா?”
“ஐயோ என்ன இப்படி பேசுறீக?”, என்றவள் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொள்ள அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டவனாய்,
“உனக்கு இருக்குற அதே எண்ணம் எனக்கும் இருக்கும்ல?”, என்றதில் சட்டென அவன் புறம் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.
“என்ன பார்க்குற? அந்த பார்வைக்கு அர்த்தம் உன் மேல இருக்குற ஆசை கொஞ்சமாவது என் கண்ணில் தெரியுதாங்கிறது தானே?”
“!!!”
“அப்போ எனக்கும் என் பொண்டாட்டி என் மேல ஆசை வைச்சுருக்காளானு தெரிஞ்சுக்க ஆசை இருக்காதா?”
“…”
“பேசாம இருந்து தப்பிக்க பார்க்காத டி..”, என்றவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.
“பரவால்ல என்னைத் தேடி என் பொண்டாட்டி வர எத்தனை நாள் ஆனாலும் நான் காத்திருப்பேன்”, என்றவன் தனது கைப்பேசியைத் தேடி எடுத்த படி,
“உனக்குப் பிடிச்ச பாட்டு கேட்கலாமா?”
“எனக்குப் பிடிச்சதா!!!”
“ம்ம்..”, என்றவன் பாடலை ஓட விட்டு கட்டிலின் ஓரத்தில் இருக்கும் ஜன்னல் திண்டில் வைத்தான்.
“அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே”
அன்று அவள் கேட்டிருந்த பெண் பாடிய பாடலுக்கு பதில் கூறுவதாய் ஆணின் குரலில் இந்தப் பாடலை இப்போது கேட்க இறுதி இரண்டு வரிகளில் கணவனையேப் பார்த்திருந்தவள் எவ்வித தயக்கமுமின்றி அவன் மீது சரிந்திருந்தாள்.
பெண்ணவளின் கைப்பாவையாய் இயங்கிய கணவனை கண்களாலேயே மிரட்டி கெஞ்சினாலும் அவளிடமே மொத்தப் பொறுப்பையும் ஒப்படைத்தவனாய் கண்சிமிட்டி புன்னகைத்தான்.
ஆரம்பம் அவளானாலும் ஒரு கட்டத்தில் அவளின் தடுமாற்றம் உணர்ந்தவனாய் பெண்மையை பத்திரமாய் தன்னிடத்தில் சேர்த்திருந்தான் ருத்ரேஸ்வரன்.
ஒரு நொடி கூட தூங்காத அந்த இரவு மொத்தமும் பேச்சும் சிரிப்பும் கூடலும் ஓய்வும் என அவர்களைப் புதுமண தம்பதிகள் போன்ற நிலைக்குக் கொண்டு வந்திருந்தது.
“நாளைக்கு அத்தை கண்டிப்பா கண்டு பிடிச்சுருவாக மாமா..”, என்றவளின் சிணுங்கலில் சிரிப்பு எழுந்தது அவனிடத்தில்.
“உங்க அத்தைக்கு வேற பொழப்பே இல்லையா?”
“நீங்க வேற அதனாலதேன் பாப்பாவை அங்கேயே படுக்க வைச்சுக்குறாக இப்போ எல்லாம்..”
“ஏதே?!”
“ம்ம் அடுத்த பிள்ளை பெத்துக்கலையானு கேட்டாக அன்னைக்கே..”, என்றவள் தலையைக் குனிந்து கொள்ள அவளது தாடைப் பற்றி உயர்த்தியவனாய்,
“பத்து மாசம் பொறுக்கச் சொல்லு பெத்துகிடலாம்.”
“போங்க மாமா நீங்க ரொம்ப மோசம்..”
“பொண்டாட்டிகிட்ட நல்லவனா இருந்து நான் என்னத்தை சாதிக்க?”
“..”
“நாளைக்கு இந்த வளையலை எல்லாம் கழட்டி வை டி. அப்பறம் உங்க அத்தை ராத்திரியில் மோகினி பிசாசு அலையுதுனு சொன்னாலும் சொல்லுவாக.”, என்றதில் இருவருமாய் சிரித்திருந்தனர்.
“காந்தா..”
“??”
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.”, என்றவன் நெற்றியிலும் கன்னத்திலும் அழுத்தமாய் இதழ் பதித்து புன்னகைத்தான்.
“உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா.”, என்றவள் அவனது அதரங்களில் மென்மையாய் இதழ் பதித்து நகர்ந்தாள்.
“இன்னும் பல வருசம் நாம இரண்டு பேரும் சேர்ந்து இதே மாதிரி பிறந்த நாள் கொண்டாடணும்.”, என்றதில் கண்களை அகல விரித்தவள் முகத்தை மூடிக் கொண்டாள்.
error: Content is protected !!