Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 9.1

அத்தியாயம் 9 

“இந்தா ஸ்ரீகா, லஞ்ச் எடுத்துட்டு கிளம்பு”, என்று வேலைக்கு செல்ல தயாராகி நின்றுகொண்டிருந்த ஸ்ரீகாந்த்தின் கையில் லஞ்ச் பேக்கை கொடுத்தார் காதம்பரி.



Advertisement

“நான் என்ன சித்தி ஸ்கூல் போற பையனா, வெளிய சாப்பிட்டுக்க மாட்டேனா. நீ வேலைக்கு போற அவசரத்துல எனக்கு கட்டி கொடுக்குணுமா? சொன்னா  கேக்கவே மாட்டேங்கற”

“நீ அப்பப்ப உங்க அம்மாவோட பையன்னு நியாபகப்படுத்திட்டே இருக்க..”

Advertisement

Advertisement

“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?”

“உனக்கே தெரியும், நம்ம ரெண்டு பேருக்கும் லஞ்ச் ரெடி பண்றது பேக் பண்றது எல்லாம் உங்க சித்தப்பா தான்.. அப்புறம் எதுக்கு இப்படி சொல்ற?”

Advertisement

“சித்தப்பா பாவம் தானே சித்தி, காலையில சீக்கிரமா எழுந்து எதுக்கு கஷ்டப்படணும் சொல்லு? அதுக்காக தான் சொன்னேன்”

“அப்ப, நேரடியா சித்தப்பாக்கு கஷ்டம்ன்னு சொல்ல வேண்டியது தானே? உங்க அம்மா மாதிரி சுத்தி வளைச்சு எதுக்கு மூக்கை தொடணும்? அவருக்கு கஷ்டம் எல்லாம் இல்ல, ஆசையா தான் செஞ்சு தர்றாரு, நீ வா”

காதம்பரியின் கணவர் கேசவன் இவர்கள் சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டு உதட்டில் மென்சிரிப்புடன் பேப்பர் படித்து கொண்டிருந்தார்.

அவர் பேங்க்கில் அக்கௌன்டன்ட்டாக வேலை செய்து கொண்டிருந்தவர். சில  ஆண்டுகள் முன்பு ரிட்டையர் ஆகி இருந்தார்.

காதம்பரி கேசவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். வீட்டை எதிர்த்து தான் திருமணம் நடந்தது. வீட்டினரின் எதிர்ப்புக்கு காரணம் அவர்  வாய் பேச முடியாதவர்.

ஆனால் யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அத்தனை அழகாக தன் குறை வெளியே தெரியாதவாறு சமாளிப்பார்.

‘அவர்கிட்ட நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு, ரொம்ப புத்திசாலி, அன்பானவர், அவர் பேங்கில் வேலை செய்றார்’ என்று காதம்பரியும் எடுத்து கூறத்தான் செய்தார்.

‘அனுதாப கோட்டால்ல வேலை வாங்கி இருப்பார்.. அப்படி வேலைக்கு சேர்றதுல என்ன பெருமை வந்திடபோது? அதை வச்சு என்ன செய்ய முடியும்?’ என்று குடும்பத்தார் கேசவனை அவமதித்து பேசவும், வீட்டை எதிர்த்து திருமணத்தை செய்து கொண்டார்.

குழந்தை பிறந்தால் எல்லாம் சரி ஆகி விடும் என்ற நிலைமை வரவே இல்லை. இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

சிவங்கரிக்கு மிருதுளா பிறந்து இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீகாந்த்தும் பிறந்துவிடவே, இரண்டு குழந்தைகளையும் சமாளிக்க முடியமால் திணறினார். அவரது பெற்றோர்கள் கைகொடுக்க வில்லை. அப்பொழுதுதான் தங்கையின் நியாபகம் வந்து அவரை சேர்த்துக்கொண்டார். 

ஸ்ரீகாந்த்தின் முதல் மூன்று வருடம் அவருடன் தான். கேசவன் காதம்பரி வாழ்க்கையில் வண்ணங்களை சேர்த்தான் குட்டி ஸ்ரீகாந்த். இருவரும் அவனிடம் அன்பை கொட்டி  வளர்த்தனர்.

மூன்று வயதாகியும் ஸ்ரீகாந்த் நன்றாக பேசாமல் போகவும், 

“உன் புருஷன் காத்து பட்டு தான் எம்புள்ள பேச மாட்டேங்கிறான்” என்று ஏகத்திற்கும் பேசி, ஸ்ரீகாந்த்தையும் வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து பிரித்து இழுத்து வந்துவிட்டார் சிவங்கரி.

வளர்த்த பாசத்தில் இவர்கள் வீட்டிற்கு வந்த போது, கேசவனிடம்  “நீங்க என் பையனை தூக்க கூடாது, அவன் நல்லா பேசி பெரிய ஆளா வளரணும்னு நினைசீங்கன்னா அவன் கூட பழகாதீங்க… ” என்று முகத்தில் அடித்தது போல கூறிவிடவே, அன்று முதல் இவர்கள் வீட்டு படி மிதிக்க மாட்டார் கேசவன்.

காதம்பரி மட்டும் அவ்வப்பொழுது வந்து செல்வார். அவரை தடுக்க மாட்டார்.

குழந்தை இல்லாமல் மன அழுத்தத்திற்கு சென்று கொண்டிருந்த காதம்பரியை, கேசவன் தான் நர்சிங் படிக்க வைத்தார். வேலைக்கு சென்றால் உனக்கு ஒரு பிடிப்பு கிடைக்கும் என்று  வற்புறுத்தி வேலைக்கும் அனுப்பி வைத்தார்.

பழைய கதைகளை அசைபோட்டுக்கொண்டே பேப்பர் படித்து கொண்டிருந்தார் கேசவன்.

——–

“என் கிட்ட கார் இருந்தா உன்னை ட்ராப் பண்ணிட்டு போய்டுவேன் சித்தி… இப்ப சித்தப்பா உன்னை டிராப் பண்ணலாம் தானே? நீ பஸ் பிடிச்சு போறது எனக்கு கஷ்டமா இருக்கு”

“இந்த தெரு முனைக்கு போனா பஸ் ஸ்டாப். அதுவும் எங்க ஹாஸ்பிட்டல் இரண்டே ஸ்டாப்.. போற எல்லா பஸ்ஸும் அங்கே நிற்கும். போறப்ப நான் நாலு பேருகிட்ட ஜாலியா பேசிட்டே போவேன்னு தான் அவர் வரலை..”

“நீ எப்போ சித்தப்பாவை விட்டு கொடுத்திருக்க சொல்லு?”

“நிஜமாலுமே ஸ்ரீகா, உன் கிட்ட பேசுனா எனக்கு எங்க அக்கா நியாபகத்தை நிறுத்தவே முடியறது இல்ல. நீ உன் பொண்டாட்டிய தாங்கறதை விட என் புருஷன் என்னை தங்கமா தாங்குறாரு … “

பேசிக்கொண்டே கேசவனுக்கு டாட்டா காட்டிவிட்டு சித்தியும் மகனும் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.

வெள்ளை நிற உடையில் சிரித்த முகமாய் இருக்கும் காதம்பரி என்றாள் அங்கே அனைவருக்கும் மிகவும் இஷ்டம். வழியில் காண்போருக்கு எல்லாம் ஒரு குட் மார்னிங்.. ஒரு சின்ன சிரிப்பு கொடுத்துவிட்டே நகருவார்.

“சித்தி நாளையில இருந்து நான் தனியாவே போறேன், உன்கூட வந்தா இந்த தெருவை தாண்டவே பத்து நிமிஷம் ஆகுது”

“ஆனா என்ன டா இப்ப? பத்து நிமிஷத்துல பத்மஸ்ரீ அவார்ட் மிஸ் ஆயிடுமா?”

இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தார்கள். 

ஸ்ரீகாந்த்தின் காரை ஊரிலே விட்டு வந்திருந்தார் மனைவி மக்களுக்காக.

இங்கே வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இந்த புது வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள்  ஆகிவிட்டது… முன்பு பார்த்த வேலை போல இல்லை. சம்பளமும் அதில் பாதியே. இருந்தாலும் வீட்டில் சும்மா  இருப்பது அவருக்கு மன அழுத்தை தரவே, இந்த வேலைக்கு ஒத்து கொண்டார்.

இது நான்கு இளைஞர்கள் சேர்ந்து ஆரம்பித்திருந்த மென்பொருள்  நிறுவனம். ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. அவர்களுக்கு ஒரு அனுபவம் வாய்ந்த நிர்வாகி தேவைப்பட்டது. 

கேசவனின் சிபாரிசில் தான் இந்த வேலை கிடைத்திருந்தது.

“அந்த ஆளே ஒன்னுத்துக்கும் உதவாத ஆளு, அவர் சொல்றாருன்னு இந்த வேலையில சேராத ஸ்ரீ” என்று எதிர்ப்பை தெரிவித்தார் சிவங்கரி.

என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டிருந்தவனுக்கு தானே முன் வந்து உதவி செய்த சித்தப்பாவை அம்மா இப்படி கூறவும், முதன் முதலாக அம்மாவிடம் மன சுணக்கம் ஏற்பட்டது ஸ்ரீகாந்த்திற்கு.

“அப்ப நீ வேற வேலை ஏற்பாடு செஞ்சு தாயேன்? வேலை போன நாள்ல இருந்து சும்மா என்னை குத்தி குத்தி பேசிட்டு இருக்க” என்று பதிலுக்கு ஸ்ரீகாந்த்தும் கோவமாக கூறிவிட்டு அந்த வேலையில் சேர்ந்தும் விட்டார்.

ஒரு வகையில் அவருக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது. அவரது அனுபவம் அவர்களுக்கும் தேவையாக இருந்தது. அவரை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள்.

காதம்பரியும் ஸ்ரீகாந்த்தும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அடுத்த இரண்டாவது நிமிடமே காதம்பரியின் பேருந்து வரவே அவர் அதில் ஏறி சென்றுவிட்டார். ஸ்ரீகாந்த் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரை கடந்து சென்ற ஒரு ஸ்கூட்டி இவரை பார்த்ததும் கொஞ்சம் முன்னே சென்று பிரேக் போட்டு நின்றது.

“ஹலோ லட்சுமி சார்.. லட்சுமி சார்” என்று இவரை பார்த்து கை அசைத்து கூப்பிட்டாள் அதில் இருந்த பெண்.

‘யாரை கூப்பிடறாங்க?’ என்று ஸ்ரீகாந்த் திரும்பி இந்த பக்கமும் அந்த பக்கமும் பார்த்தார்.

“உங்களை தான் லட்சுமி சார்… ஹலோ..” என்று மீண்டும் இவரை பார்த்தே கிட்டத்தட்ட கத்தினாள் அந்த பெண்.

இப்பொழுது பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த அனைவரும் இவரை குறுகுறு வென பார்த்தனர்.

எப்பொழுதும்  ஸ்டைலாக இருக்க நினைக்கும் ஸ்ரீகாந்த்திற்கு சங்கடமாக போனது.

அதற்குள் அந்த பெண் பேருந்து நிறுத்தத்தின் ஓரத்தில் இருந்தவரிடம், “அந்த லட்சுமி சாரை கூப்பிடுங்கள்” என்றாள்.

அவர் பக்கத்தில் இருந்தவரிடம் கூறினார்.

இப்படியே வரிசையாக  ஸ்ரீகாந்த்திடம் வந்தது அழைப்பு.

வேறு வழி  இல்லை என்று அவர்,

“நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்னை கூப்பிடறீங்க” என்றார் பதிலுக்கு.

அந்த பெண் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவருக்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை.

பத்து  நிமிடங்களுக்கு மேலே பேருந்து எதுவும் வராததால் அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் அனைவருக்குமே போராக தான் இருந்தது. அதனால் ஸ்வாரஸ்யமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.

“என்ன சார், பார்த்து ரெண்டு  மாசம் தானே ஆகுது? அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா காந்தலட்சுமி சார்” என்றாள்.

காந்தலட்சுமி என்ற பெயரை கேட்டதும் அவருக்கு சற்று புரிவது போல தெரியவும், அவர் யாரிது என்று அந்த பெண்ணை உற்று நோக்கினார்.

“டேய் இந்த அங்கிள் பெரு காந்த லட்சுமியாம் டா” என்று அங்கே இருந்த ஸ்கூல் மாணவன் ஒருவன் பக்கத்தில் இருந்த மாணவனிடம் கூறி சிரித்தது இவருக்கு கேட்டது.

ஸ்ரீகாந்த்  பல்லை கடிப்பது அந்த பெண்ணுக்கு நன்றாகவே கேட்டது.

சிரித்துக்கொண்டே ,“நான் தான் சார்”, என்று ஹெல்மெட்டை கழட்டினாள் முத்தாயி.

அவர் உர்ரென்று முறைத்து நிற்கவும்,

“உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு தானா? உங்களைத் தான் கூப்பிடுச்சா?” என்றார் பக்கத்தில் நின்றிருந்த வயதானவர் நமட்டுச் சிரிப்புடன்.

அவர் நடந்து அவள் அருகில் வந்து, “என் பெயர் ‘ஸ்ரீகாந்த்த்…’” என்றார் அழுத்தமாக.

“அது வந்து சார், நான் உங்களை காந்தலட்சுமி கோவில்ல தானே பார்த்தேன். அந்த சாமி பேரு தான் உங்களுக்கு வச்சிருக்கிறதா சொன்னாங்க..  என்ன மாதிரியே உங்களுக்கும் சாமி பெயர்ன்னு கேட்டதுமே எனக்கு அந்த பெயர் மனசுல பதிஞ்சுடுச்சு சார்…” 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அமைதியாக இருந்தார்.

“இன்னும் பஸ் வரலையா, அந்த பக்கம் ஏதோ ஆக்ஸிடெண்ட் மாதிரி தெரியுது. இன்னும் அரைமணி நேரம் ஆகும் க்ளியர் ஆக. அதான் உங்களை இங்க பார்த்திட்டு விட்டுட்டு போக மனசு வரல..” 

“ஓ… “ 

“நான் வெயிட் பண்ணி போயிக்கிறேன், நீ கிளம்பும்மா” 

“அது எப்படி சார் இப்படி உங்களை விட்டுட்டு போறது, வாங்க நான் காலேஜ் போற வழியில தான் உங்க ஆபிஸ், நான் உங்களை ட்ராப் பண்ணிட்டே போறேன்”

“என் ஆபீஸ் எங்க இருக்குன்னு உனக்கு எப்படி தெரியும்?”

“இங்க பாருங்க லட்சுமி சார், நிஜமாலுமே நேரமாயிடுச்சு.. போற வழியில் பேசிக்கலாம் வாங்க” என்று அவரை கட்டாயப்படுத்தி வண்டியில் ஏற்றினாள்.

“லட்சுமி சார் பாய்..” என்று ஸ்டாப்பில் இருந்த பசங்க கூறவும், இவர் மேலும் உர்ரென்று வந்தார்.

“நான் நாலாவது வருஷம் லா காலேஜ்ல படிக்கிறேன் சார்.. மூணு வருஷம் ஹாஸ்டல் தான். சாப்பாடு ரொம்ப கொடுமையா இருக்கும், இந்த வருஷம் தான் தனியா தங்க பெர்மிஷன் கிடைச்சுது வீட்ல. ட்ரெயின்ல நம்ம நர்ஸ் அம்மா கிட்ட பேசுனப்ப இங்க அவங்க வீட்டு பக்கத்துல பிஜி இருக்குன்னு சொன்னாங்க.. நல்ல பாதுகாப்பான இடம்ன்னு சொன்னாங்க. அவங்க மூலமா தான் அந்த பிஜில சேர்ந்திருக்கேன்.

நர்ஸ் அம்மாகூட பேசுனப்ப தான் உங்க ஆபிஸ் பத்தி தெரிஞ்சுது. இனி எப்ப வேணும்னாலும் சொல்லுங்க சார், நானே உங்களை ட்ராப் செஞ்சிடறேன்” என்று சலசலத்து கொண்டே வந்தாள்.

‘அப்பப்பா என்ன பேச்சு? வாய் வலிக்குமா வலிக்காதா? இந்த பொண்ணுக்கு’ என்று நினைத்து கொண்டார்.

பின் அவரின் ஆபிஸ் முன்பு வண்டியை நிறுத்தினாள்.

“தேங்க்ஸ் மா” என்றார் அவரும் உணர்ந்து. இன்று ஒரு முக்கியமான ப்ரெசெண்டேஷன் இருந்தது, இவள் வர வில்லை என்றால் தாமதமாகி இருக்கும்.

“ஓகே லட்சுமி சார், ஆனா ஒன்னே ஒன்னு உங்களுக்கு தெரியலை”

“என்னது?”

“நான் பேசுனத்துக்கு எல்லாம் நீங்க தலையை ஆட்டிட்டே வந்திருப்பீங்க போல. வண்டி ஒட்டும்போது பின்னாடி திரும்பி திரும்பி பார்க்க முடியுமா சொல்லுங்க? இனிமே வாய் திறந்து பதில் சொல்லுங்க சார்.. நான் வரேன்” என்று கூறி பறந்து விட்டாள்.

அவர் பதில் பேசாமல் அமைதியாக வந்ததை எப்படி கூறி செல்கிறாள் என்று நொந்துகொண்டு அலுவலகத்துக்கு உள்ளே சென்றார்.

———–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!