Skip to content
Post Views: 1,796
அத்தியாயம் 9.2
“அம்மா.. அம்மா.. அம்மா…” என்று அலறிக்கொண்டு உள்ளே ஓடி வந்தான் ஹிருதய்.
Advertisement
எப்பொழுதுமே பதற்றப்படாத மகன் இப்படி அடித்து பிடித்து கொண்டு வரவும், சமையலறையில் வேலையாக இருந்த பூம்பாவை விரைந்து வெளியே வந்தார்.
அவரை இடித்துக்கொண்டு இவன் உள்ளே ஓடினான்.
Advertisement
Advertisement
“எதுக்கு ஹாசி இப்படி விடிகாலையில ஓடறான்?” என்றார் அங்கே அமர்ந்து ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்த மகளிடம்.
“நானே இந்த கணக்கு வரலைன்னு உட்கார்ந்து மண்டைய பிச்சிட்டு இருக்கேன் போம்மா.. அப்புறம் உங்க ப்ரண்ட் திட்டுவாங்க”
Advertisement
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வெளியே புல்லட் சத்தம் கேட்டது.
“பெரியப்பா வந்திருக்காங்க போல”, என்று பூம்பாவை வாசலை நோக்கி நடக்க திரும்பினார்.
“அம்மா, தாத்தா கேட்டா நான் வீட்ல இல்லைன்னு சொல்லிடுங்க” என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தான் ஹிருதய்.
“வாங்க பெரியப்பா…” என்று கந்தசாமியை இன்முகமாக வரவேற்றார் பூம்பாவை.
இந்த மூன்று மாதங்கள் இவர்கள் வாழ்வில் வசந்த காலம் என்றே சொல்லுமளவிற்கு தாயும் மக்களும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
முதலில் நாற்பத்தி எட்டு நாட்கள் தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக வைத்தியர் வீட்டிற்கு சென்று, மருந்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பி விடுவார்கள்.
வந்ததும் எளிமையான உணவுடன் ஹாசினியை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பி வைப்பார் பூம்பாவை. தஞ்சாவூரில் ரம்யா படிக்கின்ற தனியார் பள்ளியில் ஹாசினியையும் சேர்த்திருந்தார்கள். பள்ளி பேருந்து இவர்கள் கிராமத்திற்கே வந்துவிடும். அக்கம் பக்கம் உள்ள ஆறு கிராமங்களுக்கு இவர்கள் பள்ளி பேருந்து வருகிறது.
பள்ளி முடிந்ததும் நேரே மாலதியிடம் டியூஷன் சென்றுவிடுவாள் ஹாசினி. பின் மாலை, ஹிருதய் சென்று தங்கையை அழைத்து வந்துவிடுவான்.
ஹிருதய்யை தனது பிஏவாக சேர்த்துக்கொண்டிருக்கிறார் கந்தசாமி. எப்பொழுதும் அவனை கூடவே அழைத்து சென்றுவிடுவார்.
மகனுக்கு வெளியுலகத்தை பழக்கி விடுவதற்கு இவரை விட சிறப்பானவர் யார் இருக்க முடியும்? என்று மகிழ்ச்சியாகவே அனுப்பி வைத்தார் பூம்பாவை.
கந்தசாமி ஹிருதய்க்கு அனுபவப் பாடம், வாழ்க்கை பாடம், விவாசயம், கிராமத்து வாழ்க்கை, வியாபாரம், அதில் உள்ள நெளிவு சுளிவு என்று அனைத்தும் கற்றுக்கொடுக்கிறார்.
முதலில் சேற்றில் காலை வைக்க தயங்கியவன் இப்பொழுது இறங்கி அழகாக வேலை செய்கிறான்.
இவர்கள் அங்கே ஜூன் மாதம் முதல் இருக்க தொடங்க, அப்பொழுது தான் நாற்றங்கால் போடுதல், வயல் உழுதல், வயல் பாய்ச்சல்சேறு மிதித்தல், நாற்று பிடுங்குதல், நாற்று நடுதல் என்று வரிசையாக அனைத்தும் நடந்தது.
ஒவ்வொரு அடியையும் அழகாக விளக்கி அவனை பழக்கிவிட்டார் தாத்தா.
வயலில் வேலை செய்வதை போல உற்சாகம் தருவது வேறு எதுவுமே இல்லை எனும் அளவிற்கு ஹிருதய்யும் அங்கு பிடித்து இருந்துகொண்டான்.
கொழுகொழு அமுல் பேபி மாதிரி இருந்த அவனை அங்கு அனைவருக்குமே பிடித்துவிட்டது. இந்த மூன்று மாதங்களிலே அனைவரது செல்ல பிள்ளை ஆகிப்போனான்.
பூம்பாவையோ வாரம் ஒரு முறை அவர்கள் குலதெய்வமான காந்தலட்சுமி தாயார் கோவிலுக்கும், முத்தாயி அம்மாச்சி கோவிலுக்கும் சென்று வருகிறார். துணைக்கு ராஜாத்தியையாவது அவர் பெரியம்மாவையாவது உடன் அழைத்து கொள்வார்.
சிவங்கரிக்கு தான் பொறுக்கவே முடியவில்லை. “அவனும் போய் சித்தி வீட்ல உட்கார்ந்து இருக்கான்.. நீயும் நாற்பத்தியெட்டு நாள் வைத்தியம்னு சொல்லிட்டு உங்க அப்பன் வீட்லயே டேரா போட்டுட்ட.. என்ன பத்தி யாருக்காச்சுச்சும் அக்கரை இருக்கா சக்கரை இருக்கா?” என்று ஒரே ரகளை.
பிரதமேஷும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இங்கே வந்து செல்கிறான்.
நடுவில் ஒரு முறை சிவங்கரியையும் அழைத்து வந்திருந்தான்.
“இங்கயே இருங்களேன் அத்தை” என்றார் பூம்பாவை.
ஏனோ மற்றவர்களை போல அவருக்கு இந்த கிராமத்து வாழ்வில் பிடித்தம் ஏற்படவே இல்ல..
பூம்பாவையின் முகம் இப்பொழுது தெளிந்திருப்பதாக தோன்றியது அவருக்கு. திருமணமான புதிதில் அவரிடம் இருக்கும் தேஜஸ் திரும்ப வந்திருப்பதாக பட்டது. ஹாசினியும் பூம்பாவையை போல அழகாக மாறிக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரது ஆரோக்கியத்தின் முன்னேற்றம் தோற்றத்திலே தெரிந்தது. அதனால் சிவங்கரி இம்முறை எதுவும் எதிர்பதமாக கூறவில்லை.
“ஒரு வருஷம் இங்க இருங்க, அப்புறம் சென்னைக்கு வந்துடனும்” என்று கூறி ப்ரதமேஷுடன் சென்னைக்கு திரும்பி விட்டார்.
ஆனாலும் பேரனின் மீது மனத்தாங்கல் தான்.
“ஒழுங்கா படிப்புக்கு ஏத்த வேலையில் சேரும் வழியை பாருடா ஹிருதய். இங்க அம்மாவும் தங்கச்சியும் பார்த்துப்பாங்க.. பயம் ஒன்னும் இல்லையே.. தோட்டக்காரன் சமையல்காரம்மான்னு வசதியா இருக்காங்க. நானுயும் நீயும் அங்க சென்னை வீட்ல இருப்போம், நான் உன்னை பார்த்துகிறேன். அங்க இருந்தே வேலை தேடு” என்று எவ்வளவோ எடுத்து கூறினார்.
ஹிருதய்யோ அமைதியாக இருந்தானே தவிர அவருடன் செல்லவில்லை.
இப்படியாக ஊரோடு ஒன்றிவிட்டனர் மூவரும்.
“காபி குடிக்கிறீங்களா பெரியப்பா?” என்றார் பாவை கந்தசாமியிடம்.
“இல்ல.. இல்ல.. நானும் இதயாவும் இன்னிக்கு ஊரணியில் குளிக்க போகப்போறோம், நேரமாயிடும்” என்று கூறி கொண்டே செய்கையால் அவன் எங்கே என்று ஹாசினியிடம் கேட்டார்.
ஹாசினியும் பதிலுக்கு ரூம் பக்கம் செய்கை காட்டினாள்.
“ஏம்மா பாவை உங்க அப்பா உனக்கு வேற நல்ல பெயரா வச்சிருக்காலம் போ” என்றார்.
“ஏன் பெரியப்பா?”
“இல்ல ரெண்டு பிள்ளைகளையும் இப்படி பூவாட்டம் வளர்த்து வச்சிருக்கியே?”
பதில் கூறாமல் சிரித்து கொண்டார் பாவை.
“இதயா, சீக்கிரமா வா நான் வண்டியில இருக்கிறேன்” என்று ரூமை நோக்கி குரல்கொடுத்துவிட்டு, ரூம் கதவையும் இரண்டு முறை தட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
“எப்படி கண்டுபிடிச்சாரோ?”, என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தான்.
“தாத்தா கேட்டா நான் வீட்ல இல்லைன்னு சொல்ல சொன்னேன் இல்ல ம்மா” என்று சினுங்கினான்.
“அவர் கேக்கவே இல்லையே டா..” என்றார் பாவை சிரித்துக்கொண்டே.
அதற்குள் வெளியில் இருந்து அவர் ஹார்ன் அடிக்கவும், உம்மென்று சென்று வண்டியில் ஏறிக்கொண்டான்.
இரண்டு வாரங்களாக அவனை கூப்பிட்டு கொண்டிருக்கிறார் கந்தசாமி. அவனும் ஏதோ ஒரு காரணத்தை கூறி தப்பித்து கொண்டிருந்தான். இன்று வசமாக மாட்டிக்கொண்டான்.
இவர்கள் இரு ஊருக்கும் பொதுவாக இரண்டு ஊரின் பொது எல்லையில் ஒரு ஊரணி (ஊர் குளம்) இருந்தது.
“ஒரு நாள் இங்கன குளிச்சு பாரு இதயா, அப்புறம் நீயே தினமும் இங்க வந்திடுவ பாரு” என்றார் வண்டியில் செல்லுகையில்.
“இந்த காலத்துல போய் யாராவது இப்படி ஓப்பன்ல குளிப்பாங்களா தாத்தா.. ப்ளீஸ் எனக்கு பிடிக்கல, நீங்க குளிங்க நான் இங்க உட்கார்ந்துகிறேன்” என்று படியில் அமர்ந்துகொண்டான்.
அப்பொழுது தான் சூரியன் மெல்ல எட்டிப்பார்க்க தொடங்கி இருந்த நேரம். உண்மையில் சூரிய கதிர்கள் மெல்ல ஊரணி நீர் மேல் பட அது பொண்ணாக மின்னியது.
ஏற்கனவே அங்கே நான்கைந்து ஆண்கள் குளித்து கொண்டிருந்தார்கள்.
“என்ன கந்தசாமி அண்ணே ரொம்ப நாளா ஊரணிப்பக்கம் உங்களை காணும்? வீட்ல மதனியே முதுகு தேய்ச்சு விடுறாங்களோ?” என்று பகடி பேசினார் ஒருவர்.
“தேச்சிட்டாலும் …”
“இல்லைங்குறீங்களா?”
“இல்லைனா நீ இப்ப தேச்சு விட போறீரோ?” என்று கூறிக்கொண்டே வேஷ்டியை கழட்டி படிக்கட்டின் மேல் வைத்துவிட்டு, உள்ளாடையோடு உள்ளே இறங்கினார்.
சிறிது நேரத்தில் மற்றவர்கள் சென்று விடவும், வலுக்கட்டாயமாக அவனை உள்ளே இழுத்துக்கொண்டார்.
முதலில் சங்கோஜமாக இருந்தது ஹிருதய்க்கு.
“நீச்சல் தெரியமா உனக்கு?”
“அது எல்லாம் நான் ஸ்கூல்ல கோல்ட் மெடல்” என்றான் பெருமையாக.
எங்க இந்த ஊரணியை மூனு தடவை யார் முதல்ல நீச்சல் அடிக்கிறான்னு பாரப்போமா?
யாரும் இல்லாது போகவே அவனும் உற்சாகமாக ஒத்து கொண்டான்.
கந்தசாமி விட்டுக்கொடுத்து எல்லாம் எதுலயும் போட்டி இட மாட்டார்.
இருவருக்கும் கடுமையான போட்டி.
சில வினாடிகள் வித்தியாசத்தில் ஹிருதய் தான் முதலில் முடித்தான்.
அவன் ஸ்கூலில் கோல்ட் மெடல் வாங்கினபொழுது கூட இவ்வளவு மகிழ்ந்தது கிடையாது.
“நான் ஜெயிச்சிட்டேனே ஜெயிச்சிட்டேனே” என்று கூத்தாடினான்.
“நாளைக்கு பாப்போம் வா..” என்று அவனை அழைத்து கொண்டு புறப்பட்டார்.
இப்படி அவனை கொஞ்சம் கொஞ்சமாக அவன் கூட்டில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறார் தாத்தா.
ஹிருதய்யை அவன் வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினார் கந்தசாமி.
“அப்படி அந்த பட்டணத்து பிள்ளைக்கிட்ட என்ன கண்டீரோ.. இப்படி கக்கத்துல பிடிச்சிகிட்டே சுத்துறீரு” என்றார் உள்ளே நுழைந்ததும் அவரது மனைவி.
“பார்றா டீச்சர்க்கு பொறாமையை “
“உக்கும்.. பசி காதை அடைக்குது.. சீக்கிரம் வாங்க சாப்பிடுவோம்”
அதன் பிறகு இருவரும் சேர்ந்து காலை உணவை உண்டார்கள் சிரிப்பும் பேச்சுமாக.
——————-
error: Content is protected !!