Skip to content
Post Views: 1,059
விழாக் காணுமே வானம் 13 (01)
வத்சலா ராகவன் – மது ஹனி
விண்மீன்கள் உலா; அலைக் கரையில் விழா!
Advertisement
இன்னும் கொஞ்ச நேரம் அவனுடனே இருக்க வேண்டுமென்று கூட தோன்றியது அர்ஜுனுக்கு. இதற்கு பெயர்தான் ரத்த பாசமா தெரியவில்லை.
“நாளை வருவாயா” என்று அர்ஜூன் அவனிடம் கேட்கவில்லை. விக்ரமும் வருகிறேன் என்று சொல்லவில்லை.
நடந்தவைகள் எதையும் ஸ்வாதியிடம் சொல்லிக்கொள்ளவில்லை அர்ஜுன். இருந்தாலும் அவள் சொன்னாள்.
Advertisement
“விக்ரம் கண்டிப்பா வருவான்”
Advertisement
“எப்படி சொல்ற” அர்ஜூன் கேட்டான்.
“தெரியல, ஆனா வருவான்” என்றாள்.
அவள் கோப்பையை உயர்த்தி பிடித்த போது அர்ஜூன் மற்றும் தந்தை அமர்ந்திருந்த புறம் தான் பார்வையை செலுத்தினாள்.
Advertisement
விக்ரமின் முகம் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் வெற்றுத் தாளைப் போல இருந்ததை கண்டு விட்டாள். எதுவென்று விளங்காத ஒரு உள்ளுணர்வு அவளுக்கு உணர்த்தியது. அவன் நிச்சயம் வருவான் என்று.
அதே போல மறுநாள் வந்தான் விக்ரம்.
மேட்ச் செல்லும் முன் ரங்கநாதன் அர்ஜூனுக்கு வழக்கமான அறிவுரைகளை கூறினார்.
ஆனால் ஸ்வாதி அவனிடம் வேறு சொன்னாள்.
“நாம சின்ன வயசில் இருந்து வியந்து ரசிச்சு பார்த்த லெஜன்ட் கூட ஆடப் போற” ஸ்வாதி சொல்லவும் அர்ஜூன் உற்சாகமாக ஆம் என்றான்.
“என் கூட ஆடும் போது எப்போதும் என்ன சொல்வியோ அதை நியாபகம் வச்சுக்கோ” என்று மட்டும் சொன்னாள்.
ஸ்வாதியும் அர்ஜூனும் ப்ராக்டீஸ் செய்யும் போது எதிரே நிற்பது யார் என்பதை மறந்து பந்து ஒன்றின் மீது மட்டும் கவனமாக ஆட்டத்தை வெல்வதை மட்டுமே லட்சியமாக கொண்டு ஆடுவார்கள்.
“உனக்காக எதையும் விட்டுக் கொடுப்பேன். ஆனால் மேட்ச்ன்னு வந்துட்டா விட்டெல்லாம் கொடுக்க மாட்டேன். ஏன்னா நான் தோற்றுப் போனா உனக்குப் பிடிக்காதே” என்பாள்.
“நானும் அப்படித் தான். மேட்ச்ன்னு வந்துட்டா நீ என்னோட எதிராளி தான்” என்று சளைக்காமல் ஆடுவான்.
“மகாபாரத போரில் அர்ஜூனனுக்கு கண்ணன் இதை தான் அட்வைஸ் செய்தாராம். எதிரே நிற்பது பிரியமானவளாக இருந்தாலும் மேட்ச்ன்னு வந்துட்டா ஜெயிப்பது தான் குறியா இருக்கணும் ” அர்ஜூன் சொல்ல “கண்ணன் அப்படியா சொன்னார். எப்படி மாத்தி சொல்லிட்டு இருக்கான்” என்று சிரிப்பாள் ஸ்வாதி.
மேட்ச் ஆரம்பமாகியிருந்தது. ரங்கநாதனின் இருபுறமும் ஸ்வாதியும் விக்ரமும் அமர்ந்திருந்தனர்.
முன்தினம் பார்த்த ஆட்டம் மற்றும் அர்ஜூன் சொன்னவை அனைத்தும் அரைகுறையாக காதில் விழுந்தாலும் கேம் போகப் போக ஓரளவு கிரகித்துக் கொண்டான் விக்ரம்.
அர்ஜூன் முதல் செட்டை 7 -6 என டை ப்ரேக்கில் தோற்று விட நிறையவே ஏமாற்றம் விக்ரமிடத்தில்.
ஆண்கள் மேட்ச் மொத்தம் ஐந்து செட்களை கொண்டது. ஐந்து ஆறு மணி நேரங்கள் கூட மேட்ச் நீடிப்பதுண்டு.
அரங்கமே ஒரு வித அமைதியோடு பார்த்துக் கொண்டிருந்தது.
அடுத்து அர்ஜூன் ஒரு செட்டை வெற்றி கொள்ள அனைவரும் ஆரவாரம் செய்ததை கண்ட விக்ரமுக்கு எல்லையில்லா ஆனந்தம். ஸ்வாதியோ எழுந்து நின்று கைதட்டிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அதே சமயம் எதிராளி வென்ற போதும் அரங்கத்தோடு சேர்ந்து அவளும் ஆரவாரம் செய்ததை அவனால் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியவே இல்லை. ‘அர்ஜூன் இந்த செட் தோற்றுப் போனதிற்கு இவள் என்ன கை தட்டிக் கொண்டு இருக்கிறாள்’ என்றே நினைத்தான்.
அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை!. சென்ற வருடம் பிரஞ்சு ஒபனில் ஸ்வாதி செமி பைனல் ஆட்டத்தில் டென்னிஸின் முடி சூடா ராணியோடு விளையாடிய போது அர்ஜூனும் இதே போல இருவருக்கும் உற்சாகமாக கைதட்டினான் என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
வெற்றி தோல்வி தாண்டி விளையாடுவதை முழுமையாக அனுபவிக்கும் மனநிலை அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
அன்று அவள் செமி பைனல்ஸ் தோற்ற போது தோல்வியின் சாயல் துளியும் இல்லாமல் தனது ஆதர்ச வீராங்கனையிடம் ஆட்டோகிராப் வாங்கியதும் அவர் அர்ஜூன் ஸ்வாதி இருவரையும் வாழ்த்தியதையும் அடுத்த யூ எஸ் ஒபனில் அவரை கால் இறுதியிலேயே ஸ்வாதி வென்று அந்த கிராண்ட் ஸ்லாமை வெற்றி பெற்றதையும் விக்ரம் அறிந்திருக்கவில்லை.
விக்ரம் போல வெற்றி தோல்விக்கெல்லாம் கவலைப் படுபவர்கள் இல்லை ஸ்வாதியும் அர்ஜுனும்.
நான்கு செட்களை மாறி மாறி வென்றிருந்த நிலையில் ஐந்தாவது செட் ஆரம்பம் ஆனது. அரங்கமே ஒரு வித எதிர்பார்ப்பும் பரபரப்பும் கொண்டது.
இருவருமே சளைக்காமல் மிகவும் டஃப் பைட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஐந்தாவது செட் ஆரம்பம் ஆனதும் எதற்கும் அசையாத விக்ரம் பதற்றம் கொண்டது அவனுக்கே வியப்பாக இருந்தது.
எப்படியாவது அர்ஜூன் வென்று விட வேண்டும் என்ற வெறி அவனுக்குள் எழுந்தது.
அவனுக்கும் அர்ஜூனுக்கும் நடுவில் பெரிதாக போட்டிகள் எழ வாய்ப்புகள் அமையவில்லை. விக்ரமிற்கு அவனது சிறு உடல் நல குறைபாடு காரணமாக ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருந்ததே இல்லை.
படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான். நேஷனல் லெவல் குவிஸ் போட்டிகளில் வென்றான் அவன்.
அதனால் அர்ஜூன் டென்னிஸ்ஸில் வென்றது அவனுக்கு பெரிய விஷயமாக தோன்றியதில்லை.
ஸ்போர்ட்ஸ் வீக்லி அட்டைப்படத்தில் அர்ஜூனின் படம் வந்ததென்றால் எகானமிக் டைம்ஸ்ஸில் விக்ரமின் புகைப்படம் அட்டைப்படத்தை அலங்கரிக்கும்.
அர்ஜூன் போட்டிகளில் ஈட்டும் பரிசுத் தொகையை விட பிஸ்னஸில் விக்ரம் குவிக்கும் லாபம் பலமடங்கு.
எப்போதும் அர்ஜூனை விட ஒரு படி மேல் இருந்ததால் விக்ரம் அர்ஜூனை போட்டியாக நினைக்கவில்லை.
முன்தினம் நடந்த நிகழ்வுகள் அவனை புரட்டிப் போட்டிருக்க இன்று அர்ஜூனின் வெற்றி அவனுக்கு முக்கியம் வாய்ந்ததாக ஏனோ தோன்றியது.
விக்ரம் இவ்வாறான மனநிலையில் இருக்க இரண்டு ஆட்டக்காரர்களும் சமநிலை என்ற நிலையில் டை ப்ரேக் செட் ஆடப்பட்டது.
யார் சம்பியன் என்று நிர்ணயிக்கும் செட்.
அர்ஜூன் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற ஸ்வாதியின் வேண்டுதலும் தவிப்பும் அவளை அறியாமல் அவள் கண்களில் குளமாக நிறைந்திருந்தது
அதை தற்செயலாக பார்த்து விட்டிருந்தான் விக்ரம். அவன் மனம் சற்று அமைதி கொண்டது.
யார் சாம்பியன் என்று நிர்ணயிக்கும் கடைசி கேமில் அர்ஜூன் எம்பி அடிக்க அந்த பந்தை எதிராளி தவற விட்டார்.
ரீப்ளேவில் முடிவு அர்ஜூனுக்கு சாதகமாக அமையவில்லை.
ஆனாலும் அரங்கம் முழுவதும் அர்ஜூன் பெயரையும் சேர்த்து கரகோஷமிட்டது தான் அவனது மாபெரும் வெற்றியாக இருந்தது.
அர்ஜூனை கட்டித் தழுவிய டென்னிஸ் லெஜன்ட் ‘இது போல ஒரு ஆட்டத்தை உன்னோடு ஆடியதில் பெருமை கொள்கிறேன்’ என்று கூறியது சாம்பியன்ஷிப்பை விட அர்ஜூனுக்கு பொக்கிஷமான தருணமாக அமைந்தது.
விவிஐபி பகுதியை நோக்கி அவன் வர விழிநீரை துடைத்துக் கொண்ட ஸ்வாதி மிகவும் மகிழ்ச்சியோடு அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
“கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்” என அவள் சொல்ல “யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது” என்று அவன் முடித்தான். “
ஐ ஆம் சோ ப்ரவுட் அண்ட் ஹாப்பி” என்று ஸ்வாதி கூறியது தெள்ளத் தெளிவாக விக்ரமின் காதில் விழுந்தது.
முயலை வேட்டையாடி வெற்றி பெறுவது பெருமை அல்ல. யானையிடம் மோதி அதில் தோல்வி கொண்டாலும் அது தான் பெருமை என்ற ரீதியில் தான் ஸ்வாதி மகிழ்ச்சி கொண்டது.
அங்கே வெற்றி தோல்வியை தாண்டி சிறப்பான ஆட்டத்தை அர்ஜூன் ஆடியது இனி வரும் காலம் முழுவதும் பேசப்படும் என்பதை அறிந்திருந்தாள் அவள்.
அதே நேரத்தில் அதை ஏனோ தாங்கிக் கொள்ளவே முடியாத மனநிலையில் ஊன்றுக் கோலை இறுக பிடித்தபடி நின்றிருந்த விக்ரமின் அருகில் புன்னகையுடன் வந்தான் அர்ஜுன்.
“இவ்வளவு நல்லா விளையாடிட்டு என்னடா இப்படி தோத்துட்டே?” ஆதங்கத்தின் உச்சியில் விக்ரமின் குரல். “கஷ்டமா இல்லையா உனக்கு”
அழகாய் சிரித்தான் அர்ஜுன் “ஸீ விக்ரம். ஒரு விஷயத்திலே தோத்துட்டா அதையே நினைச்சிட்டு இருக்கக் கூடாது. அதை விட பெரிய வெற்றியை தேடிப் பிடிக்கணும். அதுதான் ரியல் ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப் புரியுதா”
அவனது கண்களுக்குள் பார்த்து தம்பி சொல்லாமல் சொன்ன பாடம் அண்ணனின் மனதில் ஆழப் பதிந்தது.
அதன் பிறகு அடிக்கடி அவன் துணை தேடியது விக்ரமின் மனது. இத்தனை வருடங்கள் இல்லாமல் உடன் பிறந்தவர்கள் இருவருக்குள்ளும் அழகாய் ஒரு பந்தத்தை உருவாக்கி இருந்தது இந்தக் காதல் தோல்வி. அது வரை எல்லாம் சரியே.
ஆனால்….
பழைய நினைவுகளின் தாக்கத்தில் அவனுக்குள் சூடான மூச்சு. சற்று முன் கிடைத்த அர்ஜுனின் ஸ்பரிசம் மட்டுமே அவனுக்கு சாமரம் வீசி அமைதியின் பக்கம் தள்ளிக் கொண்டு சென்றது.
அதே நேரத்தில்
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தனது வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி மகாலக்ஷ்மி.
“எல்லாம் கூடி வர நேரத்துல்ல இந்த விக்ரம் வந்து எல்லாத்தையும் சின்னா பின்னமாக்கி விட்டு போயிட்டானே” வெளியே சென்றிருந்த ரங்கநாதன் அப்போது தான் வீட்டிற்கு வந்திருந்தார்.
அங்கே ஸ்ரீதேவியை பார்த்தும் ஆச்சரியம் கொண்டவர் என்ன ஏது என்று விசாரிக்க நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லி முடித்தார் அவர் மனைவி.
“எந்த ஒரு நிகழ்வுக்கும் காரணம் என்று ஒன்று நிச்சயம் இருக்கும்” ஸ்ரீதேவி நம்பிக்கையோடு சொன்னார்.
கோபத்திலும் ஆற்றாமையிலும் உடைந்து போன மகளை மெல்ல சமாதானம் செய்து அப்போது தான் தூங்க வைத்திருந்தார் ஸ்ரீதேவி.
“ஒரு வருஷம் கழிச்சு என் பொண்ணு என்னை அம்மான்னு கூப்பிட்டு இருக்கான்னா விக்ரம் வந்து புயலை வீசிவிட்டு போனதினால தானே” என்று சொன்ன மனைவியை பார்த்தவரின் முகம் சற்றே தெளிந்திருந்தது.
“ஸ்வாதி தூங்கறா. எழுந்தா அம்மா கோயிலுக்கு போயிருக்கான்னு சொல்லுங்க. நீங்க அவ பக்கத்திலே இருங்க” கணவரிடம் சொன்ன ஸ்ரீதேவி வெளியே கிளம்ப ஆயத்தம் செய்தார்.
“பொய் சொல்லச் சொல்றியா” மனைவி எங்கே போகிறாள் என்று தெரிந்து கொண்ட ரங்கநாதன் ஸ்ரீதேவியிடம் கேட்டார்.
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். வள்ளுவரே சொல்லியிருக்கார், நீங்களும் சொல்லுங்க தப்பில்ல” என்று புன்னகைத்தபடியே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அனைத்தையும் மௌனமாக பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தார் பாட்டி. இனி எல்லாம் நன்மையாக முடியும் என்று அவர் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.
காலிங் பெல் விடாமல் அடிக்க சோபாவில் சுருண்டு கிடந்த அர்ஜூன் உணர்வு பெற்று கதவை திறக்க அங்கே ஸ்ரீதேவி மகாலக்ஷ்மி நின்று கொண்டிருந்தார்.
“அத்தை அவளை தனியா விட்டுட்டு இங்க எதற்கு வந்தீங்க” வாசலிலேயே நிற்க வைத்து கேள்வி கேட்டவனை பிரியத்தோடு பார்த்தார்.
அவனது சிவந்த கண்களும், கலைந்திருந்த கேசமும், கரகரத்த குரலும் இரண்டு மணி நேரமாக அவன் அழுது கொண்டிருந்திருக்கிறான் என்று அவருக்கு தெளிவாக உணர்த்தியது.
ஆனாலும் அவனது வலியை மறந்து அவளுக்காக கவலை கொள்ளும் இவனது அன்பு தான் எத்தகையது. அதை ஏன் பெற்ற மகள் புரிந்து கொள்ளவில்லை என்று தான் அவருக்கு ஆயாசமாக இருந்தது.
“வீட்டுக்குள்ள விடுவியா மாட்டியா” அவனை சற்று இலகுவாக்க முயற்சித்தார் ஸ்ரீதேவி.
“என்ன அத்தை இப்படி கேட்கிறீங்க. இது உங்க வீடு” கதவைத் திறந்து வழி விட்டான்.
“நம்ம வீடு இப்போ உங்க வீடு ஆகிருச்சு அப்படித் தானே. அவ சொல்றது தான் உனக்கு முக்கியமா போச்சு. நாங்க எல்லாம் உனக்கு ஒண்ணுமே இல்லை” வேண்டுமென்றே தான் அப்படி சொன்னார் ஸ்ரீதேவி.
“அத்தை நீங்களும் இப்படி எல்லாம் பேசினா எப்படி. உங்களை அங்கிளை நான் அப்படி நினைப்பேனா” அவசரமாக மறுத்துச் சொன்னான் அர்ஜூன்.
ஏழு வயதில் இருந்து இந்த நிமிடம் வரை அவனது அன்னையையும் விட அதிகமாக அவன் மேல் அன்பும் அக்கறையும் கொண்டவர் அல்லவா அவன் அத்தை.
“அந்த கண்ணனுக்கு யசோதையைப் எனக்கு நீங்க அத்தை” மகளை விட்டுட்டு அவனோடு அவர் வந்து தங்கியிருந்த ஒரு வருடத்தில் அவன் அடிக்கடி சொன்னதுண்டு.
“தேவகியோட சூழ்நிலை அப்படி. பெற்ற மகன் எங்கிருந்தாலும் சீரும் சிறப்புமா வாழணும்னு தான் ஒரு தாய் நினைப்பா அர்ஜூன். ருக்மணியும் அப்படித் தான். நீ அவங்ககிட்ட பேச மாட்டேன்னு முகத்தை திருப்பிக் கொண்ட போதும் அப்போ இருந்து இப்போ வரை ஒரு நாள் தவறாம உன்னை பற்றி விசாரிக்காம இருந்திருக்காங்களா சொல்லு” அர்ஜூனுக்கு எடுத்துச் சொல்வார் மகாலக்ஷ்மி.
“இருந்தாலும் அவங்க செய்ததை என்னால ஏற்றுக் கொள்ள முடியலை அத்தை” அர்ஜூனின் ஆற்றாமை அவருக்குப் புரிந்தது தான்.
சில நேரங்களில் யோசிக்காமல் வெளிவிட்டு விடும் வார்த்தைகள் சிக்கல்களை உருவாகிவிடுகின்றன. சில நேரங்களில் பேச வேண்டிய நேரத்தில் பேசப்படாத வார்த்தைகள் சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றன.
“முதல்ல வந்து சாப்பிடு. மதியத்திற்கு சமைத்து வச்சிருக்கேன். நைட் உன் அங்கிள்கிட்ட கொடுத்து விடறேன்” என்றவர் டைனிங் டேபிளில் பதார்த்தங்களை எடுத்து வைத்தார்.
“அவ சாப்பிட்டாளா அத்தை” அப்போதும் ஸ்வாதியைப் பற்றி தான் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தான்.
“நான் இன்னும் சாப்பிடலைடா” சிரித்துக் கொண்டே ஸ்ரீதேவி கூறவும் அவரது முகத்தில் தெரிந்த தெளிவிலும் புன்னகையிலும் அர்ஜூன் சற்றே ஆறுதல் கொண்டான் அர்ஜுன்
எப்படியோ இன்றைய பொழுதை இரவு வரை நகர்த்தியாகி விட்டது. உறங்கி எழுந்த பிறகு யாரிடமும் பேசவும் இல்லை அறையை விட்டு வெளியே வரவும் இல்லை. ஸ்வாதி.
பொதுவாக மொட்டை மாடிக்கெல்லாம் அதிகம் போக மாட்டாள் ஸ்வாதி இன்று ஏனோ செல்ல வேண்டுமென தோன்றியது அவளுக்கு. மொட்டை மாடிக்கு சென்று அங்கே ஒரு ஓரத்தில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு கைப்பேசியை குடைந்து அதிலிருந்த பழைய புகைப் படங்களை பார்க்கலானாள் ஸ்வாதி.
அங்கே இன்னொரு ஓரத்தில் நின்றிருந்த அரவிந்தை அவள் கவனிக்கவில்லை, அப்போது.
அவளது கைப்பேசியில் புகைப்படங்களை அவள் நகர்த்திக் கொண்டே வர அப்போது அவளது கண்ணில் பட்டது அந்தப் புகைப்படம், முன்பு எப்போதோ எடுத்த புகைப்படம்.
அவர்கள் பயிற்சியின் போது ஒரு முறை இவள் கைப்பேசியில் பதித்து வைத்துக் கொண்ட புகைப்படம்.
அன்று நூறு மீட்டர் தூரம் கொண்ட அவர்களின் ஓடுகளத்தை சுற்றி இருபது முறை தொடர்ந்து ஓடி முடித்திருந்தான் அர்ஜுன். பயிற்சி என்று வந்துவிட்டால் அவன் எதற்கும் தயங்க மாட்டான்.
உடல் மொத்தமும் வியர்வை மழையில் குளித்திருக்க ஓடி முடித்து அப்படியே அங்கிருந்த புல் வெளியின் மீது கை கால்களை நீட்டிப் படுத்திருந்தான் அர்ஜுன்.
“ஹேய்.. கிரேட் அர்ஜுன்” கட்டை விரல் உயர்த்தி பாராட்டினாள் ஸ்வாதி.
சில நிமிடங்கள் அப்படியே படுத்திருந்தவன் எழுந்துக் கொள்ள அவனுடைய வியர்வை புல்லின் மீது படித்து அவனுடைய உருவத்தின் பிரதியை அங்கே பதிய வைத்திருந்தது.
“அர்ஜுன் அங்கே பாரேன்” கூவினாள் ஸ்வாதி. அவனே அதை ஆச்சரியமாக பார்க்க புல்லின் மீதிருந்த அவனது பிரதியை அழகாக படம் பிடித்துக் கொண்டாள் பெண்.
அவை எல்லாம் அவளது மனதை வருடிச்சென்ற குளிர் நாட்கள். சென்ற பிறந்தநாள் வரை எல்லாம் சரியாகத் தான் சென்றுக் கொண்டிருந்தது. அதன் பிறகு?
அந்த பிறந்தநாளுக்கு ஒரு மிகப் பெரிய விழா ஏற்பாடு செய்ததுதான் தவறா அல்லது அதற்கு விக்ரமை அழைத்ததுதான் தவறா?
error: Content is protected !!