Skip to content
Post Views: 997
விழாக் காணுமே வானம் 13(02)
வருடா வருடம் பிறந்தநாள் வருகிறது தான். ஆனால் சென்ற வருட பிறந்தநாள் ஸ்வாதி அர்ஜூனுக்கு மிகவும் விசேஷமான நாளாக இருந்தது.
அவர்களின் சில்வர் ஜூப்ளி பிறந்தநாள் என்பது ஒரு விசேஷம். அது மட்டுமில்லாமல் ஒரே வருடத்தில் நாலு கிரேன்ட் ஸ்லாம் மிக்சட் டபில்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதும் இல்லாமல் அந்த வருட விம்பிள்டன் சிங்கில்ஸ்ஸையும் ஸ்வாதி அர்ஜூன் இருவருமே கைப்பற்றியிருந்தனர்.
Advertisement
எப்போதும் போல அதிகாலையிலேயே ஏழுமலையானை தரிசிக்க தங்கள் குடும்பத்துடன் மலை ஏறினர் ஸ்வாதியும் அர்ஜூனும்.
“நான் அர்ஜூன் கூட ஸ்கோடாவில் போறேன். ஆன்டி அங்கிள் நீங்க ரெண்டு பேரும் அம்மா, அப்பா, பாட்டி கூட வாங்க” ஸ்வாதி அர்ஜூனின் பெற்றோரிடம் கூறவும் அவர்களும் சம்மதித்தனர்.
அர்ஜூன் காரை செலுத்த ஸ்வாதி அவனருகில் அமர்ந்தாள்.
Advertisement
“எதுக்கு இப்போ என்னை தனியா கடத்திட்டு வந்திருக்க” அர்ஜூன் ஸ்வாதியை வம்பிழுத்தான்.
Advertisement
திருப்பதி மலையின் வளைவுகளில் அனாயசமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் தோளிலே செல்லமாக இடித்தாள் ஸ்வாதி.
“உன்னை என்னால எப்போவாச்சும் கடத்த முடியுமா. நான் வான்னு சொன்னா நீ தானா வரப் போற” கர்வத்துடன் கூறினாள் ஸ்வாதி.
“ஓவர் கான்பிடன்ஸ் கூடாது மை டியர் குஷ்பூ” முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை ஓவர்டேக் செய்தபடியே கூறினான் அர்ஜூன்.
Advertisement
“இதற்கு பெயர் ஓவர் கான்பிடன்ஸ் இல்லை விஜயனே. உன் குஷ்பூக்கு அவளோட விஜ்ஜூ மேல இருக்கும் பிரண்ட்ஷிப்” அவன் காதைப் பிடித்து திருகினாள்.’
‘நீ மட்டும் என்னை குஷ்பூன்னு செல்லப் பேர் வச்சு கூப்பிடுற, நானும் உனக்கு ஸ்பெஷலா பேர் வைப்பேன்’ என்று ஸ்வாதி சிறு வயதில் அர்ஜூனுக்கு வைத்த செல்லப் பெயர் தான் விஜயன்.
மகாபாரத கதையை சொல்லிக் கொண்டிருந்த போது வில்லுக்கு விஜயன் என்று அர்ஜூனனை குறிப்பிட்டு விஜயன் என்றால் வெற்றி கொள்பவன் என்று பாட்டி கூற ஸ்வாதி அதை பிடித்துக் கொண்டாள்.
அது அவள் மட்டுமாக அவனைக் கூப்பிடும் பெயராம். யாருக்குமே ஏன் அவர்களின் பெற்றோருக்குக் கூட தெரியக் கூடாதாம். ஸ்வாதி மிகுந்த சந்தோஷமான மூடில் இருக்கும் போது விஜ்ஜூ, விஜயா, விஜயனே என்று அவனைக் கொண்டாடுவாள்.
அவள் அவ்வாறு அவனை அழைக்கும் தருணங்கள் மிகக் குறைவே என்றாலும் அந்தத் தருணங்களை அர்ஜூன் மிகவும் விரும்புவான். அப்போதும் அவனை விஜயனே என்று அவள் அழைக்க மிகுந்த ஆனந்தம் கொண்டான்.
“இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. அப்பாவை வேறே காணோம். அடுத்த டர்னிங்ல வண்டியை நிறுத்தி வெயிட் செய்யலாம் விஜ்ஜூ” அன்று ஸ்வாதி மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள்.
அவர்களின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பல நாட்களாக அர்ஜூனோடு ரகசியமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.
ஒரு வாரம் முன்பு ஸ்வாதியின் வீட்டு ஹாலை அலங்கரித்த ஷீல்ட், போட்டோஸ் எல்லாம் ஒவ்வொன்றாக மாயாமகிப் போக பாட்டிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.
“காக்கா தூக்கிட்டு போயிருச்சு பாட்டி. நீ விரட்டி விடாம என்ன செய்துட்டு இருந்தியாம்” என்று பாட்டியோடு சண்டைக்குப் போனாள்.
ஸ்வாதி தான் ஏதோ விஷமம் செய்கிறாள் என்று தெரிந்ததும் பாட்டி நிம்மதியானார்.
“சில்வர் ஜூப்ளி பர்த்டேவை கிரேன்ட்டா கொண்டாடப் போறோம்” என்று ஸ்வாதி சொல்ல பாட்டி கூட பெரிய அளவில் பார்ட்டி வைக்க ஏற்பாடு செய்யப் போகிறாளோ என்று நினைத்தார்.
மற்ற பிரபலங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் பார்ட்டி வைத்து கொண்டாடும் போது அது போல் இல்லாமல் குடும்பத்தினருடன் மட்டுமாக கொண்டாட வேண்டும் என்று ஸ்வாதியும் அர்ஜூனும் விரும்பினார்கள்.
“விக்ரம் ஈவனிங் வந்து ஜாயின் செய்வதா சொன்னான்” என்று அர்ஜூன் தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காதல் தோல்விக்கு பிறகு விக்ரம் அர்ஜுனுடன் நிறைய ஒட்டிக் கொள்வது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
“வருஷா வருஷம் தான் இங்கே வருகிறோம். இந்த வருஷம் மனசுக்கு என்னவோ ரொம்ப நிறைவா இருக்கு” அர்ஜூனின் தாய் ருக்மணி தன்னருகில் அமர்ந்திருந்த ஸ்ரீதேவியிடம் பேசிக் கொண்டே வந்தார்.
ரங்கநாதன் காரை ஓட்ட அர்ஜூனின் தந்தை அவரருகில் அமர்ந்தபடி அவருடன் பேசிக் கொண்டே வர பாட்டியுடன் ஸ்ரீதேவியும் ருக்மணியும் பின்சீட்டில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
“குழந்தைங்க சந்தோஷமா இருந்தா நமக்கு அது தானே பெரிய சந்தோஷம். விக்ரம் ஈவனிங் வருவதா அர்ஜூன் சொன்னானே” ஸ்ரீதேவி ருக்மணியிடம் கேட்க “ஆம்” என்றார்.
“அரவிந்த்தும் வந்தா அவனுக்கும் கொஞ்சம் மனசு ஆறுதலாக இருக்கும். அவன் வாழ்க்கை தான் இப்படி ஆகிப் போச்சு. நீங்க விக்ரமிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கீங்களா” பாட்டி திடீரென கேட்கவும் ருக்மணி என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.
“அதற்கென நேரம் வரும் போது எல்லாம் நல்லபடியா நடக்கும்” ஸ்ரீதேவி ருக்மணியின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டார்.
அப்போது ஸ்ரீதேவியின் மொபைல் அடிக்க வியூ பாயின்ட் அருகில் அவர்களுக்காக காத்திருப்பதாக அர்ஜூன் தகவல் சொன்னான்.
பார்கிங் லைட்டை எரிய விட்டவன், “அவங்க வர இன்னும் பத்து நிமிஷமாவது ஆகும்” என்றவாறே காரை விட்டு இறங்க ஸ்வாதியும் இறங்கினாள்.
“ஸ்ஸ்ஸ் குளிருது” ஸ்வாதி இரு கைகளையும் தேய்த்தபடியே உடலை குறுக்கிக் கொள்ள,
“காரிலேயே இருக்க வேண்டியது தானே” என்று கடிந்து கொண்டவன் அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“இப்போ அவ்வளவா குளிரலை” அவனோடு இன்னும் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.
இரவு வானம் முழுவதும் தனது ராஜ்ஜியம் என்ற கர்வத்தோடு உலாவிக் கொண்டிருந்த வெண்ணிலவு அந்த மலை மீதும் தனது ஆட்சியை நிறுவ ஆசைக் கொண்டது.
நிலவின் ஆசையை அறிந்த மூடுபனி வேண்டுமென்றே மலையை முழுவதும் மறைத்துக் கொண்டது.
“என்னிடம் தானே உன் ஜாலம் எல்லாம். இதோ இன்னும் சற்று நேரத்தில் சூரியன் வந்துவிடுவான். அப்போது என்ன செய்கிறாய் என்று பார்க்கிறேன்” நிலவு சவால் விட்டது.
உங்க சண்டையெல்லாம் ஒரு சண்டையா என்பது போல ஸ்வாதி அர்ஜூனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
அன்று ஸ்வாதி தங்க சரிகையிட்ட வெண்ணிற டிஷூ சில்க் புடவை அணிந்திருந்தாள். அர்ஜூன் அதே வெள்ளை நிறத்தில் வேட்டி சட்டை அணிந்திருந்தான்.
சில்வர் ஜூப்ளி என்பதால் சில்வர் கலரில் தான் ட்ரஸ் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தது ஸ்வாதி தான்.
அர்ஜூனின் அணைப்பையும் மீறி குளிர் ஸ்வாதியை தாக்க அவள் நடுக்கம் கொண்டாள். காருக்குள் சென்று அமரலாம் என்று அர்ஜூன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இன்னும் கொஞ்ச நேரம் என்று அவனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் ரங்கநாதன் காரை ஸ்லோ செய்து குரல் கொடுக்க அவர்களை தாண்டி சென்ற பேருந்தின் சத்தத்தில் ஸ்வாதி அர்ஜூனுக்கு கேட்கவில்லை.
ஜோடிப் புறாக்களைப் போல இருவரும் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தது ருக்மணியின் கண்களை நிறைத்தது. அவரது மனதில் ஆசை துளிர்த்தது.
ஆனால் அவர்கள் குளிரில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த ஸ்ரீதேவிக்கு இருவரையும் நன்றாக மொத்தலாம் என்று தான் தோன்றியது.
“அவளுக்கே குளிரு ஆகாது. இவனும் கூட சேர்ந்து பனியில் நின்னுட்டு இருக்கான்” என்று முணுமுணுத்துக் கொண்டே காரில் இருந்து இறங்கிச் சென்றவர் இருவரின் முதுகிலும் அடி வைத்தார்.
“அத்தை, நான் அப்போ இருந்து காருக்கு போகலாம்னு கெஞ்சிட்டு இருக்கேன். இவ தான் சொல் பேச்சு கேட்காம நின்னுட்டு இருக்கா. என்னை ஏன் அடிக்கிறீங்க” அர்ஜூன் ராகம் இழுத்தான்.
“எல்லாம் நீ கொடுக்கும் செல்லம் தான் அவளுக்கு தலை கால் புரியல. இவன் கெஞ்சிட்டு இருக்கானாம். அவ கேட்கலையாம். பாரு உன் கையும் சில்லுன்னு இருக்கு. போங்க போய் காரில் ஏறுங்க” ஸ்ரீதேவி அதட்டவும் விரைந்து காரில் ஏறி மலையை அடைந்தனர்.
தரிசனத்தின் போதும் ஸ்வாதி அர்ஜூனை ஒட்டிக் கொண்டு நின்றது வழக்கமான ஒன்று தான் என்றாலும் ருக்மணிக்கு இன்று புதிதாக தெரிந்தது.
வீடு வந்து சேர்ந்ததுமே டிபன் சாப்பிட்டு விட்டு பீச் ஹவுஸ் போகிறோம் என்று ஸ்வாதியும் அர்ஜூனும் கூறினர்.
“நாங்க மட்டும் தான் இப்போ போறோம். நீங்க எல்லோரும் ஈவனிங் சிக்ஸ் ஒ கிளாக் ஷார்ப்பா வந்திடணும். அப்புறம் எல்லோரும் ட்ரஸ் கோட் ஃபாலோ செய்யணும். பாட்டி முக்கியமா உனக்கு தான் சொல்றேன்” என்று உத்தரவுகளை அடுக்கிக் கொண்டே போனாள் ஸ்வாதி.
அர்ஜூனும் ஸ்வாதியும் சென்ற பின் பெரியவர்கள் அனைவரும் சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“வாங்க சார் நாம அக்கவுண்ட்ஸ் பார்த்திடலாம். இங்கேயே லஞ்ச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு ஈவனிங் ஒன்றாகவே போகலாம்” ரங்கநாதன் பார்த்தசாரதியை ஸ்டடி ரூமிற்கு அழைத்துச் சென்றார்.
“ஏழு வயசில் உங்ககிட்ட கொண்டு வந்து விட்டோம். நாங்க நினைத்தே பார்க்க முடியாத உயரத்திற்கு அர்ஜூனை வளர்த்து விட்டிருக்கீங்க. உங்க சொந்த பையனை போல பாசம் வச்சிருக்கும் போது ஒவ்வொரு வருஷமும் இப்படி அக்கவுண்ட்ஸ் எல்லாம் காட்ட வேண்டியது அவசியாமா தேவி” ருக்மணி ஸ்ரீதேவியிடம் குறைபட்டார்.
“எங்க ,மேல உனக்கு முழு நம்பிக்கை இருக்கு ருக்மணி. அது எப்போவும் இருக்கும். ஆனா குழந்தைங்களுக்கு வயசாகிருச்சு. நாளைக்கு புது உறவுகள் வரும் போது அவங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்குமா இல்லையான்னு சொல்ல முடியாதில்லையா. ஒரு சொல், ஒரு கேள்வின்னு வந்துட்டா எல்லோருக்கும் சங்கடம் தானேம்மா” பாட்டி ருக்மணியிடம் எடுத்துச் சொன்ன போதும் ருக்மணிக்கு சமாதானம் ஆகவில்லை.
“தேவி நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன். பயண அலுப்பா இருக்கு” என ஓய்வெடுக்கச் சென்றார் பாட்டி.
“அத்தை கொஞ்சம் அப்படி தான் வெளிப்படையா பேசிடுவாங்க” ஸ்ரீதேவி ருக்மணியிடம் கூறிக் கொண்டிருக்க ருக்மணியோ வேறு யோசனையில் இருந்தார்.
“ஸ்வாதியோட கல்யாணம் பத்தி என்ன யோசிச்சு இருக்கீங்க தேவி. காலையில் அம்மா விக்ரமோட மேரேஜ் பத்தி கேட்கவும் தான் எனக்கே பிள்ளைகளோட கல்யாண விஷயம் பத்தி யோசிக்க தோணுச்சு” ருக்மணி திடீரென கேட்கவும் இப்போது ஸ்ரீதேவி விழித்தார்.
“ஸ்வாதிக்கு கல்யாணமா” என்று அவர் திகைத்தாலும் மகளுக்கு இருப்பத்தைந்து வயதாகி விட்டது என்ற உண்மை உரைத்தது.
“நீங்க கேட்ட இந்த நிமிஷம் வரை அதை பத்தி நாங்க எதுவும் யோசிக்கவே இல்லை. அவ அப்பா என்ன யோசிச்சிருக்கார் என்றும் தெரியல” ஸ்ரீதேவி கூறவும் ருக்மணி அவரின் கரங்களைப் பற்றி கொண்டார்.
“ஸ்வாதியை என் மருமகளா ஆக்கிக் கொள்ள எனக்கு ஆசை தேவி” வெளிப்படையாக ருக்மணி சொல்லிவிட ஸ்ரீதேவி திகைத்தார்.
இந்த சம்பாஷணைகள் எதையும் அறியாத ஸ்வாதியும் அர்ஜூனும் பீச் ஹவுஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.
“நான் டிரைவ் பண்றேன்னு சொன்னாலும் கேட்க மாட்டேன்னு பிடிவாதம் பண்ற. இப்போ பாரு சைக்கிளில் போகிறவன் எல்லாம் ஓவர்டேக் பண்ணிட்டு போறான்” பொறுமையாக அர்ஜூன் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க கடுப்பானாள் ஸ்வாதி.
“திருமலை ஏறும் போது மெதுவா போ, மெதுவா போன்னு யாரோ காதில ரத்தம் வரும் அளவு ரம்பம் போட்டாங்களாம்” வேண்டுமென்றே இன்னும் மெதுவாக சென்றான்.
“அது மலை. ஹேர்பின் பெண்ட் எல்லாம் இருக்கு. நீயே கத்துக்குட்டி. அதான் மெதுவா போக சொன்னேன்” அவள் தான் அவனுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தாளாம். அதை சொல்லிக் காட்டினாள்.
“இப்போ மட்டும் நான் கத்துக்குட்டி இல்லையா” அவனும் விடாமல் வாதம் செய்து கொண்டிருந்தான்.
“இப்போ மாட்டு வண்டி போல ஓட்டி வச்சா யாரு இவனுக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்ததுன்னு என்னை தான் கேலி செய்வாங்க”
“என்னவோ இன்னிக்கு உன் கூட இப்படி கார்ல போயிட்டே இருக்கணும் போல இருக்கு குஷ்பூ. சீக்கிரம் போனா இந்த மொமன்ட்ஸ் முடிஞ்சிரும்” அவன் உணர்ச்சிவசப்பட்டான்.
“என்னவோ இனிமே இப்படி சேர்ந்து போகவே மாட்டோம் போல பேசி வைக்கிற. நாளைக்கு திரும்பவும் டிரைவ் போயிட்டா போச்சு” அவனை செல்லமாய் அடித்தபடி சிரித்துக் கொண்டே கூறினாள்.
அடுத்த நாள் மட்டுமல்ல இன்னும் ஒரு வருடம் அப்படி ஒரு டிரைவ் அவர்களுக்கு கொடுத்து வைத்திருக்கவில்லை என்று தெரியாமல் அவனை சீண்டிக் கொண்டே வந்தாள்.
“முதல்ல தோட்டத்தை சுத்தி பார்ப்போம். அப்புறம் கொஞ்ச நேரம் மாமரத்து ஊஞ்சல்ல ஆடிட்டு லஞ்ச் முடிச்சதும் பீச்சுக்கு போய் டெகரேஷன் ஸ்டார்ட் பண்ணிடலாம்” ஸ்வாதி ஒன், டூ, த்ரீ என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டே அன்று செய்ய வேண்டியதை அர்ஜூனிடம் சொல்ல வானம் கர்ஜனை செய்தது.
அதற்குள் பீச் ஹவுஸ் வந்துவிட காரை விட்டு இறங்கிய நொடி வானம் மழைப்பூக்களை அவர்கள் மீது கொட்டிக் கவிழ்த்தது.
“ப்ளீஸ் ப்ளீஸ் விஜ்ஜூ, விஜயா…” மழையில் நனையலாம் என்று கெஞ்சியவளை விடாப்படியாக இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
“காலையிலேயே பனியில் அவ்வளவு நேரம் நின்னுட்டு இருந்த. இப்போ இது திடீர் மழை வேற. ஜூரம் வந்திடும் குஷ்பூ” அவன் அவளது முகத்தை திருப்பிக் கூற அவளோ முகம் திருப்பிக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
“சரளாக்கா சூடா கொஞ்சம் காபி மட்டும் போட்டு கொண்டு வரீங்களா” என்றவன் வேகமாய் எட்டு வைத்து மாடி பால்கனியை அடைந்தான்.
காலை மடக்கி முகத்தை கவிழ்த்துக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் ஸ்வாதி.
அர்ஜூன் அவள் அருகில் அமர்ந்து அவளது தோளை தொட அவள் தட்டி விட்டாள்.
“நாளைக்கு ப்ராக்டீஸ் இருக்குடா குஷ்பூ” விடாப்பிடியாக அவள் முகத்தை நிமிர்த்தினான்.
“எனக்கு ஒன்னும் ப்ராக்டீஸ் போக வேண்டாம்” குழந்தையாய் சிணுங்கினாள்.
“ப்ராக்டீஸ் செய்யாம ஆஸி ஓபன் எப்படி வின் பண்றதாம்”
“எனக்கொன்னும் ஆஸி ஓபன் வின் பண்ண வேண்டாம்”
“அப்புறம் குஷ்பூ எதை வின் செய்வாளாம்” அவன் கேட்கவும் தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்க்கும் படி ஊஞ்சலில் வசதியாக அமர்ந்து கொண்டாள்.
“என் விஜயனை வின் செய்வேனாம்” அவனைப் பார்த்து கண்ணடித்து மழையைப் பார்த்தாள்.
விஜயன் என்றால் அவன் இளகி விடுவான் என்று அவளுக்கு தெரிந்தே தான் அப்படிச் சொன்னாள்.
“நீ உன் விஜயனை வின் பண்ணிக்கோ. ஆனா என் குஷ்பூவை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றவன் சற்று நிறுத்தி “மழையிடம்” என்றதும் அவனை செல்லமாக அடித்தாள். எதைச் சொன்னால் அவள் மகிழ்ந்து போவாள் என்று அவனுக்குத் தெரியாமல் யாருக்குத் தெரியும்.
“நீ வர வர ரொம்ப ஸ்மார்ட் ஆகிட்ட விஜயா”.
“என் குஷ்பூக்கு தெரிஞ்சது என் கேர்ள் ஃபேன்ஸ்க்கு தெரியலையே, யாரும் என்னை திரும்பிக் கூட பார்ப்பதில்லை” அலுத்துக் கொள்வதைப் போல சொன்னான்.
“நீ ஸ்டார். அவங்களால உன்னை அண்ணார்ந்து தான் பார்க்க முடியும். உன்னை திரும்பி பார்க்க ஸ்வாதி ஸ்டாரால மட்டும் தான் முடியும்” அவள் விளையாட்டாகத் தான் சொன்னாள்.
ஆனால் அவள் சொன்னது அவனுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வை தோற்றுவித்தது.
“ஸ்வாதி ஸ்டார்ன்னு யாரு சொன்னது” அவளை சீண்டினான்.
“இது கூட தெரியாமலா ஸ்டார் டாலர் வச்ச செயினை போட்டிருக்க” அவன் கழுத்தில் சிறிய நட்சத்திர வடிவ பென்டன்ட்டுடன் கூடிய மெல்லிய தங்கச் சங்கிலியை பிடித்து ஆட்டியபடியே கேட்டாள்.
தங்களது பதினெட்டாவது பிறந்த நாளன்று அர்ஜூனுக்கு ஸ்டார் கோர்த்த தங்கச் சங்கிலியை வாங்கி அணிவித்தாள் ஸ்வாதி.
அதை ஒரு நாளும் அர்ஜூன் பிரிந்ததே இல்லை. சிங்க்ளிஸ் மேட்ச் ஆடும் போது அடிக்கடி அந்த ஸ்டாரை தொட்டுக் கொள்வது அவனது மேனரிசமாகவே ஆகிப் போனது,
ஆனால் அவன் அவளுக்குப் பரிசென்று எதையும் கொடுத்ததே இல்லை. அவளும் அவன் கொடுக்க வேண்டும் என்று கேட்டதும் இல்லை.
ஆனால் இன்று அவளுக்காக அவன் ஒரு பரிசு வைத்திருந்தான்.
அவளுக்கு அவன் பரிசை கொடுக்கும் வேளையில் வானில் நட்சத்திரங்கள் எல்லாம் வருகை புரிந்திருக்க வேண்டும், அலைகள் அப்படி என்ன பரிசு என்று ஆர்வமாக ஆர்ப்பரிக்க வேண்டும் ; நிலவு எனக்குக் கிடையாதா என்று பொறாமை பட வேண்டும் என ஆசை கொண்டான் அவளது விஜயன்.
அவனது கழுத்துச் சங்கிலியை அவள் இழுத்துக் கொண்டிருந்த போது காபியுடன் வந்தார் சரளா.
பீச் ஹவுஸ் வாங்கிய போதிலிருந்தே வீட்டையும் தோட்டத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை சரளாவும் அவரது கணவர் வேந்தனும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
“அக்கா, இப்படி மழை பெய்யுதே. நாம எப்படி பீச்ல டேபிள் செட் பண்றது” அர்ஜூனின் சங்கிலிக்கு விடுதலை கொடுத்து சரளாவுடன் அளவளாவினாள்.
“மார்கழி மாசத்து மழை எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத் தான். மதியம் எல்லாம் நின்னு போகும்” காபி கோப்பையோடு சூடான பஜ்ஜிகளையும் இருவருக்கும் கொடுத்தார் சரளா.
“லைட்ஸ் வேண்டாம்னு சொல்றியா” அர்ஜூனை பார்த்துக் கேட்டாள் ஸ்வாதி.
“இன்னிக்கு முழு நிலா வரும் பாப்பா. தம்பி சொல்றா போல லைட் தேவையில்லை. விருந்தாளிகளா வரப் போறாங்க. நம்ம குடும்பத்து ஆளுங்க தானே” சரளா சொல்ல
“அதுக்கில்லக்கா போட்டோ எல்லாம் நல்லா வரணுமே” ஸ்வாதி சொல்ல அவள் தலையில் கொட்டினான் அர்ஜூன்.
“மோகினி பிசாசு எல்லாம் போட்டோவில விழாது தானே சரளாக்கா” அர்ஜூன் சொல்லவும் அவனை சரமாரியாக அடித்தாள்.
மழை நின்று விட மதிய உணவை முடித்துக் கொண்டு அந்த பீச் ஹவுசின் வரவேற்பறையில் தாங்கள் அது வரை வாங்கிக் குவித்த கோப்பைகளை எல்லாம் அழகாக அடுக்கிக் கொண்டிருந்தனர். கூடவே இருவரின் போட்டோக்களையும். .
“சரளாக்கா டின்னருக்கு நான் ஹெல்ப் பண்ணவா” அக்கறையாக கேட்டாள் ஸ்வாதி.
“நீ சும்மா இருப்பதே அவங்களுக்கு பெரிய ஹெல்ப். அக்கா பார்த்துப்பாங்க. வா நாம வேந்தன் அண்ணாக்கு போய் ஹெல்ப் பண்ணலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு போனான்.
அவர்களின் பிரைவேட் பீச்சில் ஆங்காங்கே சிறு குச்சிகளை நட்டு அதிலே சில்வர் நிறத்தில் ஸ்டார்களின் தோரணங்களை கட்டிக் கொண்டிருந்தார் வேந்தன்.
வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் மண்ணில் இறங்கி வந்தது போல தோற்றமளித்தது.
“அண்ணா நீங்களே எல்லாத்தையும் செய்து முடிச்சிட்டீங்க. நாங்க ஹெல்ப் செய்யலாம்னு வந்தோம்” என ஸ்வாதி கூறவும் “இருக்கட்டும் பாப்பா” என்றவர் டேபிளை மட்டும் பிறகு கொண்டு வந்து செட் செய்யலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அலைகளில் சிறிது நேரம் கால் நனைத்தபடி கைகோர்த்து உலாவிக் கொண்டிருந்தனர் இருவரும்.
“ஏதாச்சும் விளையாடலாம்” என்றாள் ஸ்வாதி.
அங்கே வாலிபால் ஆட வசதி இருந்தும் வேந்தன் செய்த அலங்காரங்கள் மேல் பந்து பட்டுவிடுமோ என அதை விடுத்தாள்.
“ஒன்னும் விளையாட வேண்டாம். இன்னொரு வாக் போகலாம்” அர்ஜூன் சொல்ல அவனை முறைத்தாள்.
‘நான் வருகிறேன் விளையாட’ என்று அலை ஓடி வந்து ஸ்வாதியின் பாதங்களைப் பற்றி இழுத்தது.
“நீ வரலைன்னா போ. நான் அலை கூட விளையாடறேன்” என்றவள் மணலில் KV என்று எழுதி “ஓடி வா ஓடி வா, எங்களைத் தொடு பார்க்கலாம்” என்று அலைகளோடு விளையாடினாள்.
‘தொடுவதென்ன உங்களை கபளீகரம் செய்கிறேன் பாருங்கள்’ என்று தாவி வந்த அலை கிட்டே வந்ததும் மெல்ல முத்தமிட்டுச் செல்ல அர்ஜுனின் தோளில் தொங்கியவாறே கைதட்டி மகிழ்ந்தாள்.
அவளது உற்சாகத்தை கண்ட அர்ஜூன் “கபடி ஆடலாமா. உனக்கு ஆடத் தெரியுமா” என்று கேட்க அவள் சிலுப்பிக் கொண்டு கட்டம் வரைந்து நடுகோட்டை இழுத்தாள்.
“பர்ஸ்ட் நான் தான்” என்றவள் அர்ஜூனின் கட்டத்திற்குள் பிரவேசம் செய்தாள்.
“கபடி கபடி கபடி” என்று சொல்லிக் கொண்டே அவனைத் தொட முயற்சிக்க அவனோ அவள் கரங்களுக்குள் சிக்காமல் அவளை பிடித்து விட முயன்றான்.
“தொட்டுட்டேன். நான் வின்” என்று துள்ளி குதித்தபடியே அவளது கட்டத்துக்குள் வந்து விட்டாள்.
“முடியை தொட்டது எல்லாம் செல்லாது” அவன் வாதிட அவள் மறுத்து சண்டையிட்டாள்.
“சரி என் டர்ன்” என்றவன் அவளது கட்டத்திற்குள் பிரவேசித்தான்.
அவனது காலை அவள் வாரி விட அவன் ஒரே தாவு தாவி நடுக்கோட்டை தொட்டு விட்டான்.
இப்போது இருவரும் சமநிலையில் இருக்க ஸ்வாதி கபடி கபடி என்று சொல்லிக் கொண்டே நுழைந்தாள்.
அந்நேரம் ஓர் பெரிய அலை அவர்களை நோக்கி வர அதை ஸ்வாதி கவனிக்காமல் அர்ஜூன் மீதே பார்வை பதித்திருந்தாள்.
அலை வந்து மோதவும் “குஷ்பூ” என்று அர்ஜூன் அவளைத் தாவிப் பிடிக்க இருவரையும் அலை மொத்தமாக நனைத்து விட்டிருந்தது.
கபடி கட்டத்தையும் அலை அடித்துக் கொண்டு போக முகம் கை கால் முழுவதும் மணல் படிந்திருக்க நீர் சொட்ட இருவரும் ஒருவரை ஒருவர் இறுக பிடித்த படியே சிரித்துக் கொண்டிருந்த போது “அர்ஜூன்” என்ற குரலில் திடுக்கிட்டனர்.
“விக்ரம் நீ எப்போ வந்தே”
error: Content is protected !!