Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

உடைந்த மனங்கள் ஒட்டாதா?… அத்தியாயம் 10

உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம் 10
 மீனா பிள்ளையை தூக்கி கொண்டு தன் வீட்டுக்கே வந்து விட்டாள். அதில் அவள் தாய்க்கு கொஞ்சம் சடவு தான். அவர் எவ்வளவோ சொல்லியும் மீனா கேட்க வில்லை.
“சின்ன சின்ன பிள்ளைகளை வச்சுக்கிட்டு தனியா எப்படி சமாளிப்ப மீனா. அம்மா சொன்னா கேளு” என்றார் பரமு..


Advertisement

“அம்மா எங்களால உங்களுக்கு வீணா செலவு வேணாம். அண்ணன்கள் எவ்வளவு நாளைக்கு பார்ப்பாங்க”
“அது எங்க கடமை மீனா. நான் பெத்த மகளுக்கு செய்ய கணக்கு பார்ப்பாங்களா?” கொஞ்சம் கோபமாகவே சொன்னார்.
நிதர்சனம் தாய்க்கு புரியவில்லை. அவளுக்கு கணவன் குடிக்கிறான் என்று சொல்ல தயக்கம். அந்த விசயம் தெரிந்தால் அவ்வளவு தான் பரமு ஒரு ஆட்டமே ஆடி விடுவார். ஜெகனுக்கும் மாமியார் வீட்டுக்கு தெரியாத வரை இருக்கும் பயம் தெரிந்த பின் துணிந்து விடுவான். அத்தோடு மீனாவுக்கு கணவனின் கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை.

Advertisement

குடும்ப பொறுப்பு அதிகரித்து விட்டது. இரண்டு பிள்ளைகள் அவர்களின் தேவை, கடமை என்று கணவன் மாறி விடுவான் என்று நம்பினாள். தற்போது கொஞ்சம் வழி மாறி இருந்தாலும் மனைவி, பிள்ளைகள் என்று பாசமுள்ளவன். நிச்சயம் மாறி விடுவான். மாற்றி விடலாம் என்று தைரியமாக இருந்தாள்.

Advertisement

 பரம அழுத்தி கேட்கும் போது கூட, “அம்மா, நானும் வந்துட்டா அவர் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாரு. பிள்ளைகளும் கூட இல்லாமல் தனியா ஆயிருவாரு. அவருக்கு கஷ்டம் “ என்று ஏதேதோ சொல்லி சமாளித்தாள்.
மகள் பிடிவாதமாக இருக்க, மருமகனும் மகளை அழைத்து செல்ல உறுதியாக இருக்க, வேற சொல்ல முடியாமல் பரமு அமைதியானார். அவருக்கு மகளை தனியாக விடவும் மனதில்லை. அன்று ஜெகன் பெரிய மனுசி என்று கூட பார்க்காமல் பேசியதை மறக்கவும் முடிய வில்லை.
அதனால் இரவு மட்டும் மகள் வீட்டில் தங்க மாட்டார். காலையில் மகளோடு இருந்து அவளுக்கு வேண்டியதை செய்பவர், இரவு தன் வீட்டுக்கு திரும்பி விடுவார். மாமியார் உடன் இருக்கவும் ஜெகனுக்கும் பெரிதாக வீட்டில் தொந்தரவு இல்லை. இரவு மட்டுமே பிள்ளையை பார்த்து கொள்வான். நல்ல சத்தான உணவுகளை சமைத்து கொடுக்க, வீட்டு வேலைகள் செய்ய, தமிழை பார்த்து கொள்ள என்று தாய் இருந்ததால் மீனா சமாளித்தாள்.

Advertisement

மாமியாரும், மருமகனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லையே தவிர, வீடு நன்றாக போனது. ஜெகன் தான் புகழ் வேந்தன் என்று மகனுக்கு பெயர் வைத்தது. குழந்தை பிறந்து ஒரு மாதம் முடியும் போது குடும்பமாக கோவில் சென்று வந்தார்கள். மீனா தன் தாயிடம் தெளிவாக சொல்லி விட்டாள்,
“அம்மா, ரெண்டு குழந்தை போதும்.. இப்போ நான் நல்லா இருக்கேன். குடும்ப கட்டுப்பாடு பண்ணிடலாம்” என்று,
ஜெகனுக்கும் மறுப்பு இல்லை. ஆண், பெண் என்று இரு பிள்ளைகள் இருக்க, மனைவியின் முடிவை அங்கிகரித்தான்.
மறுநாளே மீனா, தன் தாயோடு மருத்துவமனை செல்ல,
“மீனா, உனக்கு இரத்தம் கம்மியா இருக்கு.. இப்போ வேணாம். ஒரு வருசம் போகட்டும். அதுவரை ஜாக்கிரதையா மட்டும் இருந்துகோங்க” என்று விட்டார் மருத்துவர்.
வேற வழியின்றி மீனாவும் அமைதியாகி விட்டாள். திருமணம் முடிந்த மூன்று வருடத்தில் இரண்டு பிள்ளைகள் என்று மீனா உடல் தளர்ந்து போய் இருந்தாள். பரமு, மகளை நன்றாக பார்த்து கொண்டாலும் எவ்வளவு நாளைக்கு அவரும் அலைய முடியும். ஓரளவு மீனா வீட்டு வேலை பார்க்க தொடங்கியதும் வாரத்தில் ரெண்டு நாள் மட்டும் வந்து போனவர். மாதம் கடக்க, எப்போதாவது தான் வந்தார். வயது ஒத்துழைக்கவில்லை, அவரும் என்ன செய்வார்.
மீனா தற்போது கொஞ்சம் தெளிந்தாள். வீட்டு நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டாள். முன்பு போல எல்லாவற்றுக்கும் கணவன் முகம் பார்ப்பது இல்லை. அனாவசிய செலவுகள் செய்வது கிடையாது. இரண்டு பிள்ளைகள் என்றான பின் நிறைய பொறுப்புகளை கைக்கொண்டாள்.
 தற்போது கணவனின் பக்கமும் சிரமங்கள் இருக்குமோ என்று யோசித்து அவன் நிலையை புரிந்து கொள்ள தயாராக தான் இருந்தாள். ஆனால், என்னவோ ஜெகன் தான் எதையும் மனைவியிடம் சொல்ல தயாராக இல்லை. மகனுக்கு மூன்று மாதங்களுக்கும் மேலான போதும் ஜெகன் தன் மனைவியை நாடவே இல்லை. மீனாவுக்கு தாம்பத்தியத்தை பொருத்தவரை பெரிதாக கணவனிடம் தயக்கம் எல்லாம் கிடையாது. அவர்களிடம் எந்த ஒளிவு, மறைவும் இல்லை. ஆனால், என்னவோ ஜெகன் தள்ளி நிற்பது போலவே ஒரு எண்ணம்.
தற்போது தான் குழந்தை பெற்றிருக்கிறாள். அதனால் தள்ளி நிற்கிறானா? இல்லை இவளை ஒதுக்கி வைக்கிறானா? புரியவில்லை அவளுக்கு.. அதற்காக பிள்ளைகளிடம் அவன் எட்டி நிற்கவில்லை. அவன் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் பிள்ளைகளை நன்றாகவே பார்த்துக் கொண்டான்.
மீனா இது தேவை என்று கேட்காமலே அவனாகவே நிறைய வாங்கி போட்டான். அதற்காக எல்லாம் கணவன் மாறி விட்டான் என்று மீனா நினைக்கவில்லை. மெல்ல கணவனை நெருங்கினாள்.
“என்ன மீனா?”
“என்னாச்சு மாமா உனக்கு.. நான் இல்லன்னா தூக்கமே வராதுன்னு சொல்லுவ?” முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்டாள்.
ஜெகன் மெதுவாக பிள்ளைகளை எட்டிப் பார்த்தான். இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல உன் மகன் அழுவான்” லேசான சிரிப்போடு ஜெகன் சொல்ல,
“அதான் இன்னும் கொஞ்ச நேரம் இருக்குல்ல” மூக்கை தூக்கி மீனா சொல்ல,
அந்த மூக்கில் லேசாக முத்தம் கொடுத்தவன்,
“என்னை தேடுரையா மீனா” என்றான் ஆழ்ந்த குரலில்,
“ரொம்பவே மாமா” என்று அவன் கண் பார்த்து சொல்ல,
ரெண்டு கைகளையும் விரித்து மேலே பார்த்து படுத்து கொண்டான். சமீபமாக அவன் குடிக்காமல் வீடு வர, நிறையவே நிம்மதி மனைவிக்கு…
அவன் மார்பில் தலை வைத்தவள், “எதுவும் கஷ்டமா மாமா? நீ ரொம்ப சிரமப்படுறியா” என்று கலங்கிய குரலில் மனைவி கேட்க.
அவளை மேலும் தன் மார்பில் அணைத்தவன்,
“எனக்கு என்ன? நல்ல பொண்டாட்டி, முத்து முத்தா ரெண்டு பிள்ளைகள். நிறைவான வாழ்க்கை”
கணவன் வார்த்தையில் இருக்கும் நிறைவு, முகத்தில் இல்லை என்று கண்டு கொண்டாள். மீனாவுக்கு கலக்கமாக இருந்தது. எதுவும் வாய் திறந்து சொல்ல மாட்டேன் என்கிறானே…
“தள்ளி போகாதா மாமா”
“நான் எங்கடி போவேன். என் குடும்பம் நீங்க தானா?”
அவன் மார்பில் இருந்த படியே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்,
“எனக்கு சொல்ல தெரியல. ஆனா உணருறேன். நீங்க என்னை விட்டு தள்ளி போறத”
மனைவியை அழுத்தி பிடித்தவன், மனதில் நிறைய அழுத்தம். வாழ்க்கையை சரியாக கையாள தெரியாத கையாலாகாதவன். அப்படித்தான் தன்னையே சொல்லிக் கொண்டான். பெரிதாக மனைவியின் நகைகளை எல்லாம் தூக்கி உள்ளே போட்டு எதையும் சரியாக செய்யவில்லை.
தன்னை சுற்றி நிறைய கடனை வாங்கிக் கொண்டிருக்கிறான். மனைவி முழுதாக கணவனை நம்புகிறாள். தன் மனதில் அவ்வளவு கள்ளம் இருக்க நேர்கொண்டு தன்னை நம்பும் மனைவியை பார்க்க முடியவில்லை.
ஜெகன் உணர்ந்தே இருந்தான் மீனா நிறைய மாறிவிட்டாள். முன்பெல்லாம் வாரத்துக்கு ரெண்டு சினிமா, நான்கு நாள் ஹோட்டல் சாப்பாடு என்று என்ன வருமானமோ அதில் தங்களது சந்தோஷத்தை பெரிதாக கொண்டாடுவார்கள். தற்போது கணவனுக்கு சிரமம் வைக்கக்கூடாது என்று பிள்ளைகளின் தேவையை தவிர அவளுக்காக கூட எதுவும் வாங்கவில்லை. ஜெகனாக பாத்து தான் வீட்டுக்கு அசைவம் வாங்கிட்டு வருவது கூட.. அவ்வளவு தூரம் மனைவி கணவனை தாங்கி பிடித்தாள். ஆனால், காலம் கடந்து விட்டதை உணரவில்லை.
பதில் எதுவும் பேசாமல் ஜெகன் படுத்து இருக்க.. மீனாவுக்கு தான் மனதில் சொல்ல முடியாத பயம். என்னவாக இருக்கும். எதுவாக இருந்தாலும் நிச்சயம் கணவன் தவறான வழிக்கு செல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது.
மெல்ல ஜெகன் மார்பில் இருந்து நகர்ந்து அவன் நாடி குழியில் முத்தம் வைக்க, கண்ணை மட்டும் கிழ் இறக்கி மனைவியை பார்த்தான். அவள் பார்வையில் அவ்வளவு காதல் தெரிந்தது.
வெகு நாட்கள் கழித்து மனைவியின் அழைப்பு, மற்றதை மறக்க செய்தது. எந்நேரமும் மனதில் வண்டாக குடையும் கடன் பிரச்சனை கூட மூலையில் ஓடிப் போக மனதிலும், பார்வையிலும் மனைவியின் பூமுகம் மட்டுமே நின்றது.
அவளோடு ஒன்றிணைந்தால் அவனின் அழுத்தங்கள் குறையும். ஆனாலும் தள்ளியே நின்றவன். இன்று தன்னை மீறி விட்டான். மீனாவுக்கு நன்றாக தெரியும் கணவன் தன்னிடம் எதையோ மறைக்கிறான் என்று… அவன் வாய் திறந்து எதுவும் சொல்லாவிட்டாலும், அவனை ஆற்றுப்படுத்தவே நினைத்தாள். தள்ளி நின்று ஏற்படும் விரிசலை பார்த்து நிற்பதை விட நெருங்கி நின்று உறவை பலப்படுத்த நினைத்தாள்.
ஆம், தங்களுக்கான உறவு பலம் இழக்கிறது என்பதை கண்டாள் பெண். திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் பெற்றால் மட்டும் கணவன் மனைவிக்கான உறவு பலமாகிவிடுமா? உன் மனதில் என்னவோ அழுத்தங்களும், வலியும்.. சொல்லாவிட்டாலும் உன் மருந்து நான் அல்லவா.. தள்ளி நின்றாலும் ரோசம் பார்க்கும் உறவில் பிணைக்கப்படவில்லையே..
ஜெகனை விலகி நிற்க விடவில்லை மீனா. வீட்டிலும் பிள்ளைகளை கவனிப்பதிலும் தொடர்ந்து வேலை இருந்தாலும் நொடிக்கு ஒரு முறை கணவனுக்கு அழைத்து பேசி விடுவாள். எங்கிருக்கிறான்? எப்போது சாப்பிட வருவான்? என்ன சாப்பிட வேண்டும்? என்ன சமைக்க என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு கணவனை நெருங்கியே இருப்பாள்.
இவன்தான் கணவன் என்று ஆனபின் இந்த வாழ்க்கை இவனோடு தான் என்று பிணைக்கப்பட்ட பின், பின் வாங்க நினைக்கவில்லை. முடிந்த அளவுக்கு இவனோடு சேர்ந்து வாழ்க்கையையில் முன்னேறி விடும் வேகம் வந்தது.
ஜெகனும் கொஞ்சம் கொஞ்சமாக பழையபடி மனைவியிடம் அன்யோன்யமாக வாழ ஆரம்பிக்க, மெல்ல அவன் தொழில் விவரத்தை கேட்டால் பெண். இதற்கு முன்பு வரை வீட்டு நிர்வாகத்தை தாண்டி அவனின் தனிப்பட்ட வேலையில் தலையிட்டது கிடையாது. தற்போது அவனின் வருமானம் வரவு செலவு எல்லாவற்றையும் மனைவியாக மீனா கேள்வி கேட்க. அவள் நியாயம் புரிந்தாலும் பதில் சொல்ல ஜெகனிடம் எதுவுமில்லையே…
“இங்க பாரு மீனா, நான் பாக்குறது சொந்த தொழில். நான் என்ன மாசம் சம்பளமா வாங்கி வரேன். ஒண்ணாம் தேதியானா உன் கையில கொடுக்க. இது சொந்த தொழில். எவ்வளவு பணம் எடுக்குறோமோ அது முழுசையும் திரும்ப தொழில்ல போடணும்”
 “தினமும் வார வருமானத்தை உன் கையில குடுத்துட்டு அஞ்சுக்கும், பத்துக்கும் உன்னை எதிர்பார்த்து நிற்க முடியாது. ஒரு மாசம் நிறைய வருமானம் வரும். ஒரு மாதம் சுத்தமாக வராது. வெளில வாங்கி திரும்ப கடையில போடுவேன், அடுத்த மாசம் மொத்தமா எடுத்து எல்லாத்தையும் சரி செய்வேன் இதெல்லாம் உனக்கு புரியாது” கொஞ்சம் சத்தமாக பேசியவன்,
“வீட்டுக்கு அரிசி இல்லை, காய் இல்லை, பிள்ளைகளுக்கு டயாப்பர் இல்லை, பால் பவுடர் இல்லைன்னு சொல்றதோட நீ நிப்பாட்டிக்கோ. நான் என்ன பண்றேன்ற ஆராய்ச்சி எல்லாம் உனக்கு தேவையில்லை” என்று கத்தி விட்டு செல்ல, தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள் மீனா.
சந்தேகமாக கூட இல்லை சாதாரணமாக கேட்ட கேள்விதான். சராசரி மனைவியாக வருமானத்தை அறிய முயன்றாள். அதற்கு இவ்வளவு கோபப்பட்டு சத்தமாக பேசுகிறான் என்றால்? என்னவோ இருக்கு? என்ன சிக்கலை உண்டாகி வைத்தான். திரும்பி பிள்ளைகளை பார்த்தாள்.
ஒன்று தொட்டியில் உறங்கிக் கொண்டிருக்க, மற்றொன்று விளையாடிக் கொண்டிருந்தது. இரு பிள்ளைகளை நினைத்து பார்த்தவுடன் எதிர்காலம் பயமாக இருந்தது.
அன்று இரவே ஜெகன் குடித்துவிட்டு வந்தான்.. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு திரும்ப குடித்திருக்கிறான்.
“என்ன மாமா பழக்கம் இது? நல்லா தான் இருந்தீங்க. திரும்ப ஆரம்பிச்சாச்சா?”
“உன்னால தாண்டி” போதையில் உடல் தள்ளாடியது.
“நான் என்ன பண்ணேன்?”
“வேலைக்கு போற ஆம்பளைக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும். ஒவ்வொன்னுக்கும் உனக்கு விளக்கம் சொல்லனுமா?”
மீனாவுக்கு புரிந்து போனது. அவன் கொண்டு வரதை வாங்கி வைத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் குடும்பம் நடத்தினால் நல்ல மனைவி. என்ன ஏதென்று கேள்வி கேட்டால்.. இப்படி குடித்துவிட்டு வருவான். ஆக, மனைவிதான் காரணம்.
எதுவும் பேசவில்லை மீனா. பட்டென்று உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டாள். நிதானம் தவறி தள்ளாடும் அளவுக்கு குடித்தாயிற்று. இவனிடம் பேசுவது வீண்.
மறுநாள் தெளிவாக இருக்கும் போதே சொல்லி விட்டாள்.
“நான் உங்க பொண்டாட்டி. நான் உங்களைக் கேள்வி கேட்பேன். நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்”
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. பொண்டாட்டினா என்ன வேணா கேட்கலாமா?” ஒரு வாரத்துக்கு முன்பிருந்த இதம் இருவரிடமும் காணாமல் போயிருந்தது.
 தன் தப்பை மறைக்க ஜெகன் கையில் எடுத்த ஆயுதம் கத்தி பேசுவதும், அரட்டி அவளை பயமுறுத்துவதும், விதண்டவாதம் பண்ணுவதும்…
“நான் கேட்பேன். நீங்க கணக்கு சொல்லணும்?”
“சொல்ல முடியாது”
“அப்போ என்ன மறைக்கிறீங்க. ஏதோ தப்பு பண்ணுறீங்க”
“நான் என்ன தப்பு பண்றேன். உனக்கு தான் என் மேல நம்பிக்கை இல்லை. உண்மையா காதலிச்சு இருந்தா என்னை நீ நம்பி இருப்ப?”
“என் காதலை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை” பிடி குடுக்க வில்லை மீனா.
“நீ உன் இஷ்டத்துக்கு பேசுவ. உனக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என்றான் காட்டமா,
“அப்போ வேற யாருக்கு பதில் சொல்லுவீங்க?”
“யாருக்கும் கிடையாது வழிய விடு மீனா. என்னை மிருகமாக்காத” குரலில் உக்கிரம் கூடியது.
“நான் யாரு உங்களுக்கு? எந்த கேள்வியுமே கேட்காம நீங்க என்ன கொண்டு வாரிங்களோ அதுல குடும்பம் நடத்துவதற்கு பொண்டாட்டி எதுக்கு?” மீனா தன் எல்லையை கடந்து விட்டாள்.
“வாய மூடு இதுக்கு மேல உனக்கு மரியாதை கிடையாது?” கோபம் அவன் முகமெங்கும்…
“அதை தான் நானும் சொல்றேன். நாளையிலிருந்து நானும் உங்க கூட கடைக்கு வாரேன். நீங்க வெளி வேலைக்கு போனா கடையில நான் இருக்கேன்” என்றாள் பிடிவாதமாக.
 ஜெகனிடம் நொடியில் ஒரு பதட்டம், “உன் விருப்பத்துக்கு என்னை ஆட்டி வைக்க நினைக்காத. இப்படி பேச சொல்லி உங்க அம்மா சொல்லிக் கொடுத்தாங்களா?”
 “எங்க அம்மாவ பத்தி ஒரு வார்த்தை பேசினீங்க” என்றாள் விரலை உயர்த்தி,
“என்னடி பண்ணுவ? பெரிய இவளா நீ? உனக்கு நான் பயப்படனுமா? நான் என்ன கொண்டு வாரேனோ அதை வச்சு குடும்ப நடத்தி என் கூட வாழ முடிஞ்சா இரு” என்றான் அவளை அழுத்தமாக பார்த்து,
“இல்லைன்னா?” என்றாள் மீனா கண் கலங்க,
“உங்க வீட்டுக்கு போயிடு” என்றான் கணவன் கொஞ்சமும் யோசிக்காமல்,
இரண்டு வருட காதல், மூன்று வருட தாம்பத்திய வாழ்க்கை, ஆண், பெண்ணாக இரு பிள்ளைகள் எதையும் யோசிக்காமல் நொடியில் வெளியேறு என்று விட்டான். தாங்கிக் கொள்ளவே முடியவில்லை அவளால்…
“அவ்வளவு தானா நான்? உனக்கு நான் யார்? உங்களை எந்த கேள்வியும் கேட்க கூடாதுன்னா.. அப்புறம் எனக்கு என்ன பேரு? ஒரு குடும்ப பொண்ணுனா நாலுந்தான் யோசிக்கணும். எனக்கு காசு கொடுத்தா போதும் நீ எப்படி போன்னு சொல்றவளுக்கு வேற பேரு”
“மீனா…” என்றான் சத்தமாக. உறங்கிய பிள்ளை எழுந்து அழுதது. மீனா பார்வை கூட திருப்ப வில்லை.
“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா கொஞ்சம் யோசிக்காம என்னை போக சொல்லுவீங்க. என் வாய மூட வைக்க நீங்க எடுத்த ஆயுதம் இதுதானா? அப்புறம் நான் எதுக்கு இந்த வீட்ல இருக்கணும்.. உங்கள பொறுத்த வரைக்கும் நான் யாரு?” நேர் நின்று அவன் முகத்தை பார்த்து கேட்க, ஜெகனால் பதில் சொல்ல இயலவில்லை.
“தள்ளி போடி”பற்களை கடித்தான்.
“சொல்லுங்க நான் யாரு? நான் எதுக்கு இந்த வீட்ல இருக்கணும். உங்களோட ராத்திரி தேவைக்கும், உங்களுக்கு பிள்ளை பெத்து கொடுக்கவும் தான் நான் இருக்கேனா? அப்போ அதுக்கு பேரு”என்று ஆரம்பிக்கும் போதே, மனைவி சொல்ல வருவதன் அர்த்தம் புரிந்து ஓங்கி விட்டான் ஒரு அறை.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!