Skip to content
Post Views: 5,395
அந்த வாரம் ஓடிய வேகம் தெரியவில்லை.
அந்த பள்ளியில் ஆசிரியனாக நுழைந்து முழுதாக ஐந்து நாட்கள் முடிந்திருந்தன. இந்த ஐந்து நாட்களில் குருவுக்கு அத்தனை பரிச்சயமாகிப் போயிருந்தது அந்த கோரிப்பாளையம் பகுதி.
Advertisement
உணவு சமைக்கும் வேலை ஒன்று இல்லாததால் காலை எழுந்தவுடன் வேறு ஏதேனும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருப்பான். குறிப்பாக அவன் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கைதேர்ந்தவன் குரு.
பின்வாசலில் கவனிப்பாரற்று கிடந்த செடிகளை ஒதுக்கி சரிசெய்து பதியம் போட்டிருந்த பூச்செடிகளை நர்சரியில் இருந்து வாங்கி வந்து ஆங்காங்கிருந்த மண் குழிகளில் ஊன்றி தோட்டப்பணிகளில் இறங்கி விடுவான்.
Advertisement
Advertisement
தனது உடைகளை தானே துவைத்து இஸ்திரி செய்து உடுத்திக் கொள்ளும் பழக்கம் கொண்டவன். அதனால் அந்த வேலையையும் இழுத்துப் போட்டு செய்வான்.
அவன் பின்வாசலில் நடமாடும் சமயங்களில் அஞ்சலியின் பரபரப்பான நடையையும் ஏதேனும் வேலை செய்தபடி அங்கும் இங்கும் திரிவதையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டுதான் இருப்பான்.
Advertisement
முதல் சந்திப்பை இருவருக்கும் முறைப்பும் விறைப்புமாகிப் போனதால் பள்ளியிலும் கூட பார்வையோடு நிறுத்திக் கொள்வதுண்டு. சிரிப்பதற்கு கூட இருவருக்கும் யோசனைதான். புன்னகைக்கலாமா என்ற எண்ணம் இருவரின் இதழ்வரை வந்து இதழுக்கு உள்ளேயே அமிழ்ந்தும் போய்விடும். அவனுக்காவது அந்த யோசனையாவது தோன்றும். அவளிடம் அதுகூட இருப்பது போல் தோன்றியது இல்லை.
இருவரும் வெவ்வேறு துறை என்பதால் தேவையற்று பேச வேண்டிய சூழலும் ஏற்பட்டதில்லை. ஆனால் அடிக்கடி எதிரில் பார்க்கும் போதும் சந்திக்கும் போதும் அமைதியாக கடந்து விடுவதுண்டு.
அவனது வீட்டை ஒட்டிய காம்பவுண்ட் சுவர்தான் அவளது வீடும் என்பதால் பல நேரங்களில் தாய் தந்தையுடன் உரத்து அவள் வாதிடுவது பேசுவது என்று அவனையும் மீறி காதுகளில் ஒலிக்கத்தான் செய்யும்.
தினமும் ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுவது போல் தோன்றும். சமயங்களில் இவள் உரத்து கத்துவதும் உண்டு… அழுவதும் உண்டு.
“நான் இருக்கிறது பிடிக்கலேன்னா சொல்லுங்க… வேற பக்கம் போயிடறேன். என்னை ஏன் இப்படி இம்சை பண்றீங்க..? பிடிக்காத விஷயத்தையே சதா ஏன் பேசுறீங்க..?”
குரல் தழுதழுக்க அழுகையோடு பேசுபவளின் குரல் அறையில் அமர்ந்து அடுத்த நாள் பாடத்துக்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருப்பவனின் காதுகளில் தானாகவே வந்து விழும்.
“உன் நல்லதுக்கு சொல்றது இம்சையா தெரியுதா..? வாயை திறக்கவே விட மாட்டேங்கறியே…” பதிலுக்கு தானும் கத்துவார் அவளது தந்தை கர்ணன்.
“புள்ளையை பத்தி யோசிக்க மாட்டியாடி..?” தானும் குரல் கொடுப்பார் அவள் தாய் லதா.
“என் புள்ளைய பாத்துக்க எனக்கு தெரியும். அவளுக்காகத்தான் என் வாழ்க்கையே… என்னை என் போக்கில அமைதியா விடுங்க. எனக்கு பிடிக்காத விஷயத்தை பேசவும் வேண்டாம் அதை செய்யணும்னு நினைக்கவும் வேண்டாம்னூ பல தடவை சொல்லியாச்சு. இப்படி தொடர்ந்து தொந்தரவு பண்ணினா ஒரு நாள் சொல்லாம கொள்ளாம என் பிள்ளையோட இங்க இருந்து போயிடுவேன்…”
அன்றைய நாள் சற்று சூடாகவே கூடத்தில் அவள் உரத்து கத்திக் கொண்டிருந்தது அறையில் நின்று இஸ்திரி செய்து கொண்டிருந்தவனின் காதுகளில் தேவையாகவோ தேவையற்றோ விழுந்து தொலைத்தது.
அவள் முகத்தில் சந்தோஷ சிரிப்பை அவன் பார்த்ததில்லை. எந்நேரமும் ஒருவித இறுக்கம் குடி கொண்டிருக்கும். மகளிடம் மட்டும் சிரிப்பாள்… விளையாடுவாள்… சமயத்தில் அவளிடமும் கோபத்தை வெளிப்படுத்தி சீறுவாள். பரபரவென வேலைகளை செய்து முடித்து குழந்தையை பெற்றவர்களிடம் ஒப்படைத்து பணிக்கு ஓடினால் அங்கு ஒரு முழுமையான ஆசிரியையாகவே மாறிவிடுவாள்.
சிறந்த திறமையான ஆசிரியை என்ற பெயர் அவளுக்கு அங்கு உண்டு என்பது அவனுக்கும் தெரியும். தனது ஆசிரிய பணியை நேசித்துதான் செய்கிறாள்.
அவன் விருப்பமின்றியே அவன் மூளை அறிந்து வைத்திருந்த விஷயம் அவள் தாய் தந்தையுடன் தன் குழந்தையோடு அங்கு இருக்கிறாள்.
அப்படி என்றால் அவள் கணவன்..??
தேவையற்றுதான் சிந்தித்து செயலாற்றுகிறது அவனது மூளை. ஆனாலும் மூளையின் சிந்தனைகளுக்கு கடிவாளமிட மனிதனால் முடியாதல்லவா.
அவ்வப்போது அவளது கோபத்தை தூண்டும் வகையில் இவன் வீட்டை நோக்கி ஓடி வருவாள் குட்டிப்பெண்.
“சவி…” கத்தியபடி துரத்தி ஓடி வருபவள் இவன் வீட்டிற்குள் அவள் நுழையும் முன்பே அள்ளி தூக்கி சென்று விடுவாள்.
‘குழந்தையை நான் என்ன பண்ணிடப் போறேன்..? என்னை பார்த்தா பூச்சாண்டி மாதிரியா தெரியுது… ரொம்பத்தான் பண்றா…’
சில நேரங்களில் ஜிவ்வென கோபம் கிளர்ந்தெழும்.
ஆனாலும் அன்னைக்கு தெரியாமல் தலை சாய்ப்பதும், கண்களை சிமிட்டுவதும், பச்சரிசி பால்பற்கள் தெரிய சிரிப்பதும், உதடு கடித்து நாணப் புன்னகையோடு அவனைப் பார்ப்பதுமாக அந்த குழந்தை ஒவ்வொரு நாளும் அவனை வசீகரித்துக் கொண்டுதான் இருந்தாள்.
ஆனால் அந்த மகராசி கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி மகளை அவன் கண்களில் கூட காட்டக்கூடாது என்பது போல் ஒளித்து வைப்பதிலேயே குறியாக இருப்பதில் இவனுக்கு இன்னும் கூடுதல் கோபம் எழும்.
கர்ணனும் லதாவும் அண்டை வீட்டுக்காரர்கள் என்ற முறையில் அவ்வப்போது இவனிடம் பரிச்சயமாக நலம் விசாரித்து பேசிக் கொள்வது உண்டு. ஆனால் இவள் பார்வையில் அவன் முதலில் பார்த்த அதே முறைப்பு இருப்பது போல்தான் தோன்றும்.
ஒரே பள்ளியில் பணிபுரியும் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஆசிரியர்கள் என்ற முறையில்கூட இருவரிடமும் இன்னும் ஒரு சிறு இணக்கமும் ஏற்பட்டிருக்கவில்லை.
மன நிம்மதியின்றி இருக்கிறாள் என்பதுவரை மட்டும் அவனால் யோசிக்க முடிகிறது. இப்பொழுதும்கூட பின்வாசலில் அடிக்கடி கண்களை துடைத்தபடியேதான் வேலை செய்து கொண்டிருப்பாள். வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
‘அவளோட பிரச்சனையை கதைக்கிறதுக்கு சரியான ஆள் இல்ல போல. அவளுக்கு அவளே கதைச்சுக்கிறா. அதுதான் அவளுக்கு ஆறுதல் போல…’ இவனும் தனக்குத்தானே கூறிக் கொள்வான்.
அன்று சனிக்கிழமை.
பெரிய வகுப்புகளை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை. அதிலும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு மாலை 4 மணிக்கு மேல் வழக்கம் போல் உண்டு. ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அவரவர் பாடப்பிரிவுகளுக்கு தகுந்தபடி மாலை 6:30 மணி வரை வகுப்பு எடுப்பது அந்த பள்ளியின் நடைமுறை வழக்கம்.
அதன்படி அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடப் பிரிவின் பிரத்தியேக வகுப்பு இருந்தபடியால் அஞ்சலிக்கு ஆறு முப்பது வரை பள்ளியில் வேலை இருந்தது. குரு வழக்கம் போன்று பணி முடிந்து நான்கு முப்பது மணிக்கு எல்லாம் வீடு வந்து சேர்ந்திருந்தான்.
பொதுவாக இருவரும் அடுத்தடுத்து தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்து கொள்வதுதான் வழக்கம். இந்த ஒரு வார காலமாக அப்படித்தான் நடந்திருக்கிறது. குருவின் பிரத்தியேக வகுப்பு அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கும். அவன் தனது வீட்டின் கேட் வாசலை நெருங்கும் போதே வழக்கம் போன்றே பாட்டியோடு தங்கள் வீட்டு வாசலில் நின்று விளையாடிக் கொண்டிருந்தாள் சவி.
அவனைப் பார்த்தவள் தன் பாட்டியிடம் திரும்பி “அம்மா..?” என்று கேட்டிருந்தாள்.
தினமும் ஒருவர் பின் ஒருவராக இருவரும் நுழைவதை அவளும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்.
“அம்மாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு… வந்துருவா…”
பாட்டி சமாதானம் கூற குருவை பார்த்து பயமற்று வசீகரமாய் சிரித்திருந்தாள் சவி. அவள் அம்மா பக்கத்தில் இல்லை என்ற தைரியம் போலும் என்று எண்ணிக் கொண்டான் அவனும்.
லதாவும் அவனைப் பார்த்து சினேகமாய் புன்னகைக்க அவரிடம் இருந்து குருவை நோக்கி ஓடி இருந்தாள் சவி.
வண்டியில் அமர்ந்தபடியே இரு கால்களையும் தரையில் அழுத்தமாய் ஊன்றி ஓடி வந்தவளை அள்ளி தூக்கிக் கொண்டான் குரு.
“ஏய் சவி. இங்க வா… மாமாவை தொந்தரவு பண்ணாதே…” என்றபடியே நெருங்கி வந்தார் லதா.
“இருக்கட்டும்ங்க… இதுல என்ன தொந்தரவு இருக்கு..?” என்றவன் அவளை முன்னால் அமர்த்திக் கொள்ள அவனோடு உலா செல்ல தயாராகி இருந்தாள் சவி.
“தினமும் அவங்க அம்மாகூட இந்த ஏரியாவை ஒரு சுத்து சுத்திட்டு வரணும். அப்படியே பழகிட்டா… அவளும் நல்லா பழக்கி வச்சுட்டா…” என்றபடியே அவளை தூக்கப் போன லதாவை வேகமாக தடுத்தான் குரு.
“சின்ன குழந்தைகளுக்கு இதெல்லாம் சாதாரணமா இருக்குற ஆசைதானே… இருக்கட்டும்…” என்று சிரித்தவன் மெல்ல வண்டியை கிளப்பி அவளோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்க அவளுக்கோ சந்தோஷம்… தாள முடியாத சந்தோஷம்.
தன் அன்னையோடு ஸ்கூட்டியில் முன்னால் நின்றபடி உலா செல்பவளுக்கு பெரிய வண்டியில் தோரணையான ஒரு ஆண்மகனின் முன்னே பாதுகாப்பாக அமர்ந்து யானையின் அம்பாரி மீது அமர்ந்து செல்வது போல் ஒரு தனி சுகம் அவளுக்கும்.
மகிழ்ச்சியில் அமர்ந்தபடியே துள்ளி குதித்தாள் சவி. ரதம் போன்று மெல்ல ஓட்டியபடி அந்த குட்டிக் குழந்தையின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து ஒரு கையால் வண்டியை மெல்ல முறுக்கியவன் மறு கையால் மென்மையாக அவள் முதுகையும் வருடினான். அந்த மகிழ்ச்சியிலும் சிரிப்பிலும் அவனுக்குள் ஒரு மெல்லிய இதம்.
ஐஸ்கிரீம் பார்லரை கடந்து வண்டி செல்ல அங்கேயே திரும்பி திரும்பி பார்த்தபடி இவள் அமர்ந்திருக்க பட்டென பார்வையை திருப்பியவன் வண்டியையும் திருப்பிக் கொண்டு பார்லரின் முன் சென்று வண்டியை நிறுத்தினான்.
“குட்டிமா… ஐஸ்கிரீம் சாப்பிடலாமா.?”
அவள் காதோடு குனிந்து மெல்லிய குரலில் கேட்க அவனை அண்ணாந்து பார்த்தவளின் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்து கொண்டன.
சில்க்கி கூந்தல் நர்த்தனமாட சரி என்று வேகமாக தலையாட்டினாள். அவளை அள்ளித் தூக்கிக் கொண்டு கடைக்குள் நுழைந்தவன் அவள் சுட்டிக்காட்டிய ஐஸ்கிரீமை வாங்கி அவளை மேஜைமேல் அமர்த்தி ஐஸ்கிரீமை தானே எடுத்து அவளுக்கு ஊட்டினான். ரசித்து உண்டவளை மனம் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தான் குரு.
“போதுமா..? இன்னொன்னு சாப்பிடலாமா..?”
டிஷ்யூ பேப்பரால் அவள் வாயை துடைத்தபடியே கேட்டான்.
“போதும்…” வழக்கமான அந்த நாணச் சிரிப்புடன் சொன்னவளை கன்னம் பற்றி நெற்றியில் முத்தம் வைத்தவன் மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.
அவர்கள் வீட்டினை நெருங்கும்போது வாசலிலேயே நின்றிருந்தார் லதா.
அவனிடம் இருந்து வேகமாக அவளை இறக்க வர அவளோ பட்டென பின்னோக்கி அவன் வயிற்றில் சாய்ந்து இரு கைகளை மேலே உயர்த்தி அவனது சட்டையை பிடித்துக் கொண்டாள்.
“ஏய் அடி போட்டனா..? இன்னும் என்ன..? அதான் மாமா கூட ஊர் சுத்திட்டு வந்தாச்சுல்ல… சும்மா தொந்தரவு பண்ணக்கூடாது… வா…”
மிரட்டும் தொணியில் லதா கூற அவனை விட்டு விலக மனம் இல்லாதவள் போல் முகத்தை சுருக்கிக் கொண்டு பாட்டியுடன் இறங்கினாள்.
“அம்மா.. சவி என் கூடவே இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே…”
அவளைப் பிரிய மனம் இன்றி அவனும் கேட்டான்.
“துறுதுறுன்னு இருப்பா தம்பி…நீங்களே அலுத்து சலிச்சு வந்திருக்கீங்க… இதோ ஊர்வலமும் கூட்டிட்டு போயிட்டு வந்துட்டீங்க… அப்புறம் என்ன..?”
“இல்ல பரவால்லம்மா… எனக்கு ஒன்னும் பெரிய வேலை எல்லாம் இல்ல… வீட்ல சும்மாதான் இருக்கப் போறேன்… பாப்பா கூட கொஞ்ச நேரம் விளையாடுறேன்… உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணையா..?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி உங்களை தொந்தரவு பண்ணுவாளேன்னுதான்…”
“அதெல்லாம் ஒரு தொந்தரவும் இல்ல…”
சொன்னவன் வா என்று அவளை நோக்கி மீண்டும் கை நீட்ட மீண்டும் தாவிக் கொண்டு அவனிடம் ஓடினாள் செவி. அவளை தூக்கி வண்டியில் அமர்த்தி தனது வீட்டிற்குள் நுழைந்து நிறுத்தி அவளையும் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டான் குரு.
“தம்பி…” லதாவின் அழைப்பில் திரும்பினான்.
“நான் கடைவரைக்கும் கொஞ்சம் போயிட்டு வந்துடறேன். அவ தாத்தா வந்துருவார்… பாப்பாவை அவர்கிட்ட கொடுத்துடுங்க…”
“சரிங்க…”
அதன்பின் உடையைகூட மாற்றாமல் கூடத்தில் அமர்ந்தபடி அவளோடு விளையாடத் தொடங்கி இருந்தான் குரு.
மழலை தமிழில் மணக்க மணக்க பேசியவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
“உன் பெயர் முதல்ல சொல்லு குட்டி…”
“சங்கவி…”
“ஓ… அதுதான் சவியா..?” என்றவன் மீண்டும் அந்த பெயரை உச்சரித்துக் கொண்டான்.
அந்த இதழ்கள் வேறு ஒரு பெயரையும் உச்சரித்துக் கொண்டன.
நேரம் போவதே தெரியாமல் அவளோடு விளையாடிக் கொண்டிருந்தான் குரு.
அவன்மேல் விழுந்து புரண்டு குலுங்கி குலுங்கி சிரித்தவளை தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு சிரிப்போடு அழுகையும் பீறிட்டு வந்தது.
“என்னாச்சு மாமா..?” மழலையோடு கேட்டபடி அவன் கண்ணீர் துடைத்தாள் சவி.
“மாமா கண்ணுல தூசு விழுந்துடுச்சு…” என்றவன் அவளை முதுகோடு அணைத்து தன்மேல் போட்டு உச்சியில் முத்தமிட்டிருந்தான்.
“சவீஈஈ…”
கடுமையான குரல் ஒன்று வாசலில் கேட்க கூடத்தின் நடுவில் மல்லாக்க கிடந்தவனின் மேல் இருந்தவள் வேகமாக நிமிர்ந்தாள் உடன் குருவும் திரும்பிப் பார்த்தான்.
கண்கள் முழுக்க ரௌத்திரத்துடன் அங்கு நின்றிருந்தாள் அஞ்சலி.
(தொடரும்)
error: Content is protected !!