Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 25.2

அவளை கவனிக்காது அவனும் தொடர்ந்து, “ஜெகாகிட்ட வாக்கு கொடுத்தாலும்.. அவனுக்கு எதாவது ஏற்பாட்ட பண்ணிட்டு.. இல்ல, நம்ம கூட கூட்டிட்டு சீக்கிரம் இங்கிருந்து போற ஐடியாவுல தான் நா இருக்கேன்.
நீ பண்ண வேலையால அவங்களுக்கு எதாவதுன்னா.. காலத்துக்கும் நம்ம இங்கையே தான் இருக்கற மாதிரி ஆகும்.. புரியுதா..?” என பொறுமையாய் விளக்கம் கொடுக்க கேட்டிருந்தவளுக்கு இப்போது தன் புறமிருக்கும் தவறு புரிய தொடங்கியது.


Advertisement

“நீ என்னோட குறை.. நான் பண்ணற தப்புன்னு சுட்டிக்காட்டினப்போ.. ‘எனக்கு தெரியும்.. நீ என்ன எனக்கு சொல்லறது..?’ ன்னு நா கேட்டேனா.. இல்ல.. ஒரு பார்வையாவது அப்படி காட்டியிருப்பேனா பாப்பா..?” என தீனா கேட்க,

Advertisement

விழி விரித்து அதிர்ந்து அவனை பார்த்தவளை கண்டவன், “ஒரு ஆணா அது எங்க ஈகோவை டச் பண்ணற விசயம். 

Advertisement

ஆனா, தப்பை சுட்டிக்காட்டினதும் அதை மனப்பூர்வமா நா ஒத்துக்கிட்டேன் தானே..? 

Advertisement

ஏன்னு நினைக்கிறே..? நீ என்னோட சரி பாதி. உன் எண்ணத்துக்கு நா மதிப்பு கொடுக்கனுமுன்னு தான்.
நீயோ நா சொல்ல வர்றது என்ன.. ஏன்னு ஒரு கேள்வி இல்லாம.. என்னை எப்படி நீ சொல்ல ஆச்சுங்கற மாதிரி பார்த்துட்டு போறே..” என்றவனின் குற்றச்சாட்டை ஏற்று நிற்கும் நிலையில் தான் யமுனா இருக்க, அதில் உண்டான கழிவிரக்கத்தில் லேசாக விழிகள் கலங்கியது.
“ம்ப்ச் யமுனா.. தயவுசெஞ்சு அழுது வைக்காத என் முன்னாடி.. நீ அழுதா நா தோத்துப்போயிட்டேங்கற ஃபீல் வருது..” என்றவனின் வார்த்தையின் அர்த்தம் அவளுள் இறங்க வழிந்த கண்ணீர் சட்டென நின்றுவிட்டது.
“ஆமா யமுனா.. உன்னோட கண்ணுல கண்ணீர் வந்தா அப்பவே நா இந்த வாழ்க்கையில தோத்து போயிட்டேன்னு தான அர்த்தம். 
இனி என் முன்னே நீ அழுகாத.. ப்ளீஸ்..” என்றவனின் வார்த்தை முடியும் முன் அவனை தாவி அணைத்தவள் அவன் என்னவென உணரும் முன் அவனிதழை சிறை செய்திருந்தாள்.
சில நொடியில் விலக நினைத்தவளின் செய்கையை அவனுடையதாக்கியிருந்தான் தீனா இதமாய்.
நீண்ட நெடிய முத்தமது எவ்வளவு நேரம் நீடித்ததோ.. தோப்புக்குள் ஏதோ ஒன்று விழும் சத்தத்தில் இருவரும் சுயமுணர்ந்து விலகினர்.
யமுனாவிற்கு இப்போது தான், தான்.. செய்த செயல் நினைவில் எழ, வெக்கத்தால் முகம் செக்கசெவேல் என சிவந்து போனது.
தீனாவிற்கோ உலகத்தையே வென்ற உணர்வு.
திருமணமான தினத்திலிருந்து அவள் முத்தமெல்லாம் அன்பாக.. அரவணைப்பான ஒன்றாக மட்டுமே அவனை நிறைத்திருக்க, 
இப்போது தான்.. முதன் முறையாய் காதலாய், மோகமாய் ஒரு இதழ் முத்தம்.. அதும் அவளாக முன் வந்து.. இதை விட என்ன வேண்டும் அவனுக்கு..?
அந்த நிறைவே போதுமென அவனிருக்க அவனை மீண்டும் அணைத்தவள், “சாரிங்க.. நிஜமா இதெல்லாம் நா யோசிக்கல..” என்றிட, வேறென்ன வேண்டும் அவனுக்கு.
அதே நிறைவோடு அவளை விடுவித்தவன், “சரி விடு. நீயும் சிலத புரிஞ்சு நடந்துக்கிட்ட போதும். வா போகலாம்..” என அழைத்து வந்து வண்டியை கிளம்பியவன் சந்தோஷத்தோடு அதே வழியில் சற்று தூரம் செல்ல.. அங்கிருந்த பெயர் பலகை கண்டு அடுத்த ஆனந்த அதிர்வு யமுனாவிற்கு.
‘ஆழியார் அணை உங்களை அன்புடன் வரவேற்கிறது..’ என்பதை கண்டுவிட்டு, 
“தயா, நானும் திருப்பூர் வந்ததுல இருந்து இங்கே வர நினைச்சிட்டே இருந்தேன் தெரியுமா..? இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு..” என்றவளுக்கு அத்தனை குஷி.
அணைக்கட்டோடு இணைந்திருக்கும் பார்க் சென்று சுற்றி பார்த்து.. விதவிதமாக போட்டோவை போனில் கிளிக் செய்து.. மேலேறி அணையை ரசித்து.. படகு சவாரி சென்று, அருகே இருக்கும் குரங்கு அருவி(மங்கி ஃபால்ஸ்) சென்று, 
‘மழை நேரத்தில் அனுமதி இல்லை..’ என்பதால் தூரமிருந்தே அதை ரசித்து.. அதற்கு அருகே இருக்கும் வேதாத்திரி மகரிஷி ஆசிரமம் சென்று.. என நேரம் மின்னலென விரைந்தது இருவருக்கும்.
மதியமே திரும்பிட நினைத்தவர்களுக்கு அவ்வப்போது பெய்த மழைக்கு ஒதுங்கி.. எல்லாவற்றையும் பார்த்து அவர்கள் வீட்டிற்கு வர இரவும் வந்து சேர்ந்திருந்தது.
‘ஜெகா வீட்டிற்கு தனியாக சென்று ஜெயசீலனிடம் மாட்டிக்கொள்ள கூடாது..’ என நினைத்த தீனா, மாலை வாணிக்கு அழைத்து,
“வாணி நாங்க வர லேட்டாகும் போல.. நீ வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் சமாளி..” என்றிருக்க, வாணியும் சக்தியோடு அங்கே தான் இருந்தார் இவர்கள் வரும் வரை.
அதோடு மறுநாள் விருந்துக்கும் அழைப்பை கொடுக்க வேண்டுமே.. என்பதுவும் சேர அவர்களுக்காகவே காத்திருந்தனர்.
லேசான தூறலில் நனைந்தபடி வந்ததால் யாரையும் கண்டு கொள்ளாமல் உடை மாற்றவென உள்ளே சென்றிருந்தனர் இருவரும்.
அவர்களின் முகத்தை பார்த்த சக்தி வாணி இருவருக்கும் புரிந்து போனது காலைக்கும் இப்போதும் இருக்கும் அவர்களின் மாற்றம்.
அதுவே அவர்களுக்கு போதுமானதாய் இருக்க, பாலமுரளியோ முகத்தை உம்மென வைத்து தன்னை பார்க்காமல் உள்ளே சென்ற தன் மாமனை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“டேய் பாலா.. என்னடா ஆச்சு..? எதுக்கு எங்கண்ணன இப்படி பாக்குறே..?” என தனது ஹோம் வொர்க் முடித்துவிட்டு வந்த ஜெகதீஷ் கேட்க,
“போதா குத்தி மாமா.. அச்சுடுவன்..” என சொல்லி மீண்டும் அப்படியே அமர, வாணிக்கும் சக்திக்கும் தங்கள் மகனின் செய்கையில் அத்தனை சிரிப்பு.
உறக்க கலக்கத்தில் தெரியாத விசயம் வாணியோடு தீனா போனில் பேசியதை வைத்து கண்டு கொண்டவன், “என்ன வித்து போச்சு.. வந்துச்சு.. அச்சு.. நானு..” என சொல்லி சுற்றிக்கொண்டிருந்தவன்,
தீனா வந்ததும் தன்னை கொஞ்சி சமாதானம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் முகத்தை அப்படி வைத்து அமர்ந்து கொண்டான்.
ஆனால் அவன் கண்டு கொள்ளாத கடுப்பை ஜெகதீஷிடம் காட்டி கொண்டிருக்கிறான் அவன்.
“டேய் என்ன ஏன்டா அடிப்பேங்கறே..!” என ஜெகதீஷ் அதிர்ந்து போய் கேட்க,
“போதா.. நா பேச்சமாத்தேன்..” என்றதும்,
“பேசிட்டே எப்படிடா பேசாம இருக்கறது..?” என அவனும் விடாமல் சீண்ட,
“ஓ..” வென ஆரம்பித்தான் அழுகையை. 
அதில் பயந்து போன ஜெகதீஷ், “அக்கா.. நானொன்னும் செய்யல..” என வாணியிடம் அவசரமாய் சொல்ல,
“அவனுக்கு அவனோட பெரிய மாமா மேல கோவம். அத உன்றகிட்ட காட்டிக்கிட்டுகெடக்கான்..” என சக்தி விளக்க,
அப்போது அங்கு வந்த தீனா, “என்னது என் மேல கோபமா..? எதுக்கு பாலாக்குட்டிக்கு மாமா மேல கோபம்..” என அவனை தூக்கி கொஞ்சலாக கேட்க,
“நீ வித்து போச்சு..” என்றதும் புரிந்து கொண்ட தீனா, 
“அச்சோ, அதுக்கா அழுதீங்க..? நாளைக்கு முழுக்க மாமா உங்க வீட்டில உங்க கூடவே தான் இருப்பேன். மாமா மட்டுமில்ல உன்னோட அத்தையும் தான்..” என்றதும்,
‘அவர்கள் வந்தால் நாளையும் ஸ்கூலுக்கு மட்டம் போடலாம்..’ என்ற ஒன்றே அவனுக்கு போதுமானாதாய் இருக்க, 
“அய்.. ஜ்ஜாதி..” என முத்துபல் தெரிய சிரித்தான் பிள்ளை.
விருந்துக்கு எல்லாரையும் அழைத்துவிட்டு சக்தியின் குடும்பம் கிளம்ப பார்க்க, “சாப்பிட்டு போலாம் அண்ணா..” என யமுனா வற்புறுத்தி உண்ண வைத்தே அனுப்பினாள்.
“காலல சீக்கிதம் வர்னும் சய்யா.. மாமா..” என்றவன், “டாட்டா பாய்.. அத்தே..” என்றுவிட்டு சமத்தாய் கிளம்பியிருந்தான் இன்று அவர்கள் வீட்டிற்கு.
யமுனா சாப்பிட்டவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட்டு தூங்க வர, ஜெகதீஷ் அவன் படுக்கையிலும் தீனா கீழே பாயிலும் படுத்து ஏதோ மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
“என்ன ஜெகா இன்னைக்கு இன்னும் தூக்கம் வரலையா..?” என கேட்டபடி வந்த யமுனா கதவை அடைத்துவிட்டு தீனா படுத்திருக்கும் பாயருகே அமர்ந்தாள்.
இருவரையும் யோசனையோடு பார்த்தவன், “இல்ல ண்ணி.. அண்ணா ஆழியார் போனீங்கன்னு சொன்னாரா.. அதான் பேசிட்டு இருந்தோம்..” என சொல்ல,
“நீ போயிருக்கீயா ஜெகா..? நா இப்ப தான் பஸ்ட் டைம் போனேன். ரொம்ப நல்லா இருந்துச்சு..” என யமுனா உற்சாகமாக சொல்ல,
“ம்ம், ஒரு தடவ சக்தி மாமா கூட்டிட்டு போனாங்க. ஆனா அப்போ ரொம்ப குட்டி பையன் நான். 
பாலா அப்போ பொறக்கல.. அதுக்கு அப்புறம் யாரோடவும் அம்மா விடல.
அதனால எனக்கு சரியா நியாபகம் இல்ல அண்ணி..” என சொன்னவனை கண்டு பாவமாய் போனது தீனா யமுனா இருவருக்கும்.
“விடு ஜெகா. இனி இங்கே தானே நாங்க இருக்கோம். உனக்கு ஸ்கூல் லீவ் வரும் போது ப்ளான் பண்ணி போலாம்..” என யமுனா சொல்ல சந்தோஷமாக தலையசைத்தவன் சற்று நேரம் பேசி உறக்கத்தை தழுவினான். 
ஜெகாவினுள் உண்டான யோசனையின் விளைவால்.. தீனா யமுனா இருவரின் வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சேர்த்திருந்தது அவர்களே எதிர்பாராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!