Skip to content
Post Views: 3,033
காதல் எனும் மாயன்
அத்தியாயம்-1
மாலை மயங்கி ஆதவன் தனக்கு பின்னால் மறையத்தொடங்கியிருக்க தன் முன்னால் இரைச்சலாய் பாய்ந்துவரும் அலைகளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் அதிதி.. அந்த கடற்கரையில் கண்ணுக்கொட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. அலையரசனின் பேரரவத்தையும் மீறி
“டொக்.. டொக்..டொக்..” என்ற குதிரையின் குழம்படி தொலைதூரத்தில் கேட்டது. அதுவரை கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவளின் கவனம் தொடுவானத்தைத் தொட்டுக்கொண்டு பாய்ந்துவரும் குதிரையின் மீதும், அந்தக் குதிரையின்மேல் ராஜகுமாரன்போல் மிடுக்காக அமர்ந்து அதனை விரட்டி வருபவன் மீதும் பதிந்தது.. கடற்கரைக் காற்று முகத்தில்மோத தனது நீண்ட கூந்தலும், அழகிய ஆடையும் படபடத்து ஆட, திக் திக் இதயத்துடிப்புடன்,தன் விரிந்தகண்களில் அதிசயத்துடனும், உடலில் சிறு நடுக்கத்துடனும் நெருங்கிவருபவனை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள். வேகமாக வந்த குதிரை அவளுக்கு சற்று தள்ளி நின்றது.. லாவகமாக அதிலிருந்து இறங்கி அவளை நெருங்கினான் அவன்.
கையெட்டும் தூரம் வந்ததும், சற்று நிதானித்து, அவள் முகத்தைத் தன் உள்ளங்கைகளில் ஏந்தினான். என்ன முயன்றும் அவன் முகத்தைப்பார்க்க முடியவில்லை அவளால், சட்டென்று அவள் முகம்நோக்கி அவன் குனியவும், பதற்றத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவன் மூச்சுக்காற்று முகத்தில்பட கண்களோடு சேர்த்து உதட்டையும் இறுக்க மூடிக்கொண்டு மூச்சுவிடாமல் சிலையாகி நின்றாள். இதோ அவன் இதழ்கள் அவளை மென்மையாக வருடியது,
Advertisement
உடல்முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தது அவளுக்கு, இதயம் நின்று துடித்தது, தன்னையறியாமல் லேசாக கண்ணைத்திறந்து பார்த்தாள். அவன் உதடுகள் அவ்வளவு நெருக்கத்தில் அவளிடம் ஏதோ கூற, என்னவென்று உற்று கவனித்துக்கேட்டாள்,
“ஏய் கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சி எந்திரி…”
‘என்னதிது..?’ என்று அவள் புரியாமல் விழிக்கும் போதே..
Advertisement
“ஏய் அதிதி.. லேட் ஆச்சி எந்திரி…” என்று அவளை உலுக்கியது அவளது ரூம்மேட் ஷிவாங்கியின் குரல்..
Advertisement
சட்டென்று தனது கனவுச் சங்கிலி அறுபட அதிதி தூக்கிவாரி எழுந்தது அவளது எட்டுக்குபத்து ஹாஸ்ட்டல் ரூம்மின் பங்க் பெட்டில்..
‘ச்ச.. என்ன மாதிரியான கனவு இது..??’ என்று முனகிக்கொண்டே கைப்பேசியில் நேரம் பார்த்தாள்.
மணி 7
Advertisement
இன்னும் அரை மணி நேரத்தில் காண்டீன் மூடிவிடுவார்கள்..
“முதல் நாளே காலேஜ்க்கு லேட்டாய் போனால் வருஷம் முழுக்க வெளங்கிடும்..”
தனது ரொமாண்டிக் கனவை மூலையில் தள்ளிவிட்டு அவசரமாக கிளம்பினாள்.
சிருஷ்டி…கோயம்புத்தூர் கேரளா பார்டரில் பிரமாண்டமாக அமைந்திருந்த ஒரு பிரபலமான தனியார் டீம்டு டு பீ யுனிவர்சிட்டி, அதில் கம்பியூட்டர் இன்ஜினியரிங் முதல் வருடம் சேர்ந்திருந்தாள் அதிதி.இன்று அவளுக்கு முதல்நாள் வகுப்பு. இரண்டு நாட்களுக்கு முன்பே அவளது பெற்றோர் ஹாஸ்ட்டலில் சேர்த்துவிட்டு பிரியாவிடைபெற்றுச் சென்றிருந்தனர்.
அதிதியின் சொந்த ஊர் சென்னை, அப்பா தனசேகர் தனியார் கம்பெனியில் வேலை, அம்மா சுதா ஹவுஸ் வைஃப் ஓய்வு நேரத்தில் யூ டியூப்பில் (youtube) சமையல் வீடியோ போட்டு அதிலேயே ஓரளவு பிரபலமானவர்.அதிதிக்கு ஒரு தம்பி அனிருத் அவன் பத்தாவது படித்துக்கொண்டிருந்தான்.
அதிதி ரொம்ப படிப்பாளியெல்லாம் கிடையாது அபவ் ஆவரேஜ்(above average) என்பது போல் தான், இந்த காலேஜிலும் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் தான் சீட் வாங்கியிருந்தாள். வருடந்தோரும் பெரியதொகையை ஃபீஸாக கட்டவேண்டும்.. தனக்கே இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்று இவள் வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் அவளின் எதிர்காலத்திற்காக என்று அவளது பெற்றோர் இங்கு சேர்த்துவிட்டிருந்தனர்.
அவளை பொறுத்தவரை அவள் கூட்டத்தில் ஒருத்திபோல் இருப்பவள் தான். கண்ணைப் பறிக்கும் அழகோ, வியந்து பார்க்கும் அளவு படிப்போ எதுவும் இல்லாத சராசரிப்பெண். அவளுக்கென்று பெரிய லட்சியம் எல்லாம் கிடையாது. Go with the flow என்பது போல் தான் இருப்பாள். யாரையும் தொந்தரவு செய்யாமல் அவளையும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் என்று இருப்பவள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது சிறு நட்புவட்டத்தில் நிம்மதியடையும் ஒரு அக்மார்க் இண்ட்ரோவர்ட்.
ஹாஸ்ட்டல் பிளாக்கில் இருந்து காலேஜ் மெயின் பிளாக்கிற்கு வரவே பத்து நிமிட வேக நடை தேவைப்படும். ஓட்டமும் நடையுமாக செல்லும் போதே தூரத்தில் ஹாஸ்ட்டலிருந்து காலேஜுக்கு செல்லும் வழியில் கும்பலாக மாணவர்கள் ஓரிடத்தில் நிற்பது தெரிந்தது.
‘சீனியர்ஸ் ராகிங் ஆ? இன்னுமா அதெல்லாம் இருக்கிறது???’
வளாகத்தை நெருங்க நெருங்க அவளது மனம் படபடக்கத்தொடங்கியது.. மேலோட்டமாக கவனித்ததில் சாதாரணமாக கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பதைப் போல்தான் இருந்தது. ஒருசிலர் மட்டும் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தனர்.
பாட்டுபாடு, நடனம் ஆடு, சினிமா வசனம் பேசிக்காட்டு என்று ஹாஸ்ட்டலில் இருக்கும் சீனியர் மாணவர்கள் ஃபஸ்ட் இயர் ஹாஸ்ட்டல் மாணவர்களை கலாய்த்துக்கொண்டு இருந்தனர்.
சத்தம் காட்டாமல் நழுவிவிட நினைத்து யாரையும் கண்ணெடுத்தும் பார்க்காமல் கூட்டத்தோடு கலந்து மெல்ல முன்னேறினாள், இதோ இன்னும் கொஞ்சம் போனால் இவர்கள் கண்ணில்படாமல் திருப்பத்தில் திரும்பி மெயின் பில்டிங்கிற்குள் நுழைந்து விடலாம் என்று முன்னோக்கி வேகமாக நடக்கையில்
“ஹல்லோ கிரீன் சுடிதார்.. கம் ஹியர்..” என்ற சத்தத்தில் இவள் திடுக்கிட்டு நிற்க, அக்கம் பக்கம் இருந்தவர்களும் கிரீன் சுடிதார் அணிந்திருந்த இவளையே பார்க்க, வேறு வழியின்றி திரும்பினாள்.
“கம் ஹியர்..”என்று சுருட்டை முடியுடன் ஒருவன் அழைக்க..
தயங்கி மெல்ல அருகில் சென்றாள்.
“ஃபர்ஸ்ட் இயர் தானே?”
“ம்..” என்று தலையசைத்தாள்.
“இங்க சீனியர்ஸ் நிக்கறது தெரியலையா.. மரியாதையில்லாம தாண்டி போனா என்ன அர்த்தம்?” என அதட்ட..
அவன் பக்கத்தில் இருந்த பெண் பார்க்க கேரளாவை சேர்ந்தவள் போல் இருந்தாள்,
“கேசவ்.. பாவம்டா அந்த பொண்ணு பயப்படுது பாரு..உன்னோட சீனியர் கெத்தை கொஞ்சம் குறை..” என்று அதிதிக்காக பரிந்தாள்.
“நான் என்ன பண்ணிட்டேன்.. சும்மா பேசகூட கூடாதா ரெமி?” என்று சற்று எரிச்சலுடன் கூறிவிட்டு அதிதியிடம் திரும்பி..
“இங்க பாரு ஜுனியர்.. ஒன்னும் பயப்பட வேண்டாம் இது வெறும் ஃபிரண்ட்லி இண்ட்ராக்ஷன் தான்..சும்மா நாங்க ஃபன்னா ஜாலியா சொல்ற டாஸ்க்க பண்ணிட்டு போய்ட்டே இருக்கலாம்..ஒரு பாண்டிங்க்காக தான் வேற சீரியஸாலாம் ஒன்னும் இல்ல..”என்றவன்.. என்ன டாஸ்க் கொடுக்கலாம் என்பது போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அதிதியின் பின்னால் பார்த்து ஒருவனைக் கைத்தட்டி அழைத்தான்..
“ஏய் மச்சான்.. இங்க வாடா..”
தன்னையறியாமல் கடைக்கண்ணால் பார்க்கும் போதே ஒருவன் அவளை கடந்துபோய் எதிரில் நின்றது தெரிந்தது.
அவன் தோள்மேல் கைப்போட்டு அருகிழுத்தபடி..
“இதோ.. என் மச்சான்.. காலேஜ் பிரின்ஸ்.. இவன பத்தி புகழ்ந்து எதாவது பாட்டு பாடிட்டு போ..” என்றான்.
தயக்கத்துடன் லேசாக நிமிர்ந்து அந்தப் புதியவனைப் பார்த்தவள் திகைத்து உறைந்துபோனாள்.
அதிதி சராசரிக்கும் சற்று அதிக உயரம் தான், ஆனால் அவளே அண்ணாந்து பார்க்கும் உயரம் அவன், கட்சிதமாக வெட்டப்பட்ட கரிய அடந்த முடி,லென்ஸ் வைத்தது போல் பளபளக்கும் கண்கள்..செதுக்கியது போல் நேர் நாசி,ட்ரிம் செய்த தாடி,வில் வடிவில் அழகிய உதடு,அகன்ற தோள், நீண்ட கைகள், மெல்லிய ஆனால் வலுவான தேகம், பொன்னிறம், அனாயசமாக நின்ற தோரணை..
அவள் இதயம் ஒரு கணம் நின்று பின் வேகமாக துடித்தது.. இப்படி ஒரு அழகனை அவள் நேரில் இவ்வளவு பக்கத்தில் இதுவரை கண்டதில்லை.
அவள் பிரம்மித்து பார்ப்பதை கண்டு ‘இது ஒன்றும் புதிதில்லை’ என்பது போல் கேசவ்வும் ரெமியும் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர்.
“என்ன எங்க பிரின்ஸ்ஸை பார்த்து வாயடைச்சி போச்சா..?”என்று நக்கலாக கேட்டான் கேசவ்.
சட்டென்று பார்வையை தாழ்த்திக்கொண்டாள் அதிதி,
இப்படி காணாததை கண்டமாதிரி வெறித்து பார்த்து மாட்டிக்கொண்டோமே என்று அவமானமாக இருந்தது அவளுக்கு.
அவள் முகம் கன்றி சிவப்பதை பார்த்து பரிதாபப்பட்டோ என்னவோ.
“கட் இட் அவுட் கைஸ்..லெட் ஹெர் லீவ்” என்றான் அந்த புதியவன்.
அவன் குரல்கூட அத்துனை ஆழமாக வசீகரமாக இருந்தது.
‘என்ன ஆச்சு உனக்கு? எந்தமாதிரி நிலைமையில இருக்க..இப்ப போய் சைட் அடிச்சிட்டு இருக்கியே பக்கி..’ என்று தன்னையே உள்ளுக்குள் திட்டிக்கொண்டாள் அதிதி.
“ஜஸ்ட் ஒரு சாங் தானேடா பாடிட்டு போகட்டுமே..இந்த பொண்ணோட வாஸ்ச கூட இன்னும் கேக்கல டா..” என்றுவிட்டு இவளிடம் திரும்பி “ம்.. பாடு..க்ளாஸ்க்கு டைம் ஆகுதில்ல..!!”என்றான் கேசவ் என்னும் சுருட்டை முடி.
அதிதி மீண்டும் ஒருமுறை அந்த ஆணழகனை நிமிர்ந்து பார்த்தாள், அப்போது அவனும் அவளையே பார்த்துக்கொண்டிருக்க இருவரின் பார்வையும் மோதிய அந்தகணத்தில் அதன் வீரியம் தாளாமல் சட்டென்று பார்வையை தாழ்த்திக்கொண்டாள், அவளுக்கு பதற்றத்தில் நெற்றியில் வேர்க்கத்தொடங்கியது.
அந்த கவலையிலும் கலக்கத்திலும் கூட..
பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே…
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே…
என்ற பாடல் நுனி நாக்கில் நின்றது.
அவளின் அவஸ்தையை பார்த்த நெடியவன்..
“கேசவ்.. ரெமி,ரெண்டு பேரும் கிளம்புங்க..லேப்க்கு டைம் ஆச்சு.. ஐ வில் டீல் வித் ஹெர்..” என்று அழுத்தத்துடன் கூறி இருவரையும் அனுப்பினான்.
கேசவ் வேண்டா வெறுப்பாக ஏதோ முனகிக்கொண்டே ரெமியுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
இப்போது அவனும் அவளும் மட்டும்தான்,
இப்போது இவன் என்ன செய்ய சொல்லப்போகிறானோ என்று யோசனை ஓடும் போதே..அவன் அவளை நோக்கி ஓர் எட்டுவைப்பது பார்வை வட்டத்தில் தெரிய, திடுக்கிட்டு நிமிர்ந்தாள், அத்தனை நெருக்கத்தில் அவன் முகம் பார்த்ததும், அதிதிக்கு அவளை அறியாமல் காலையில் கண்ட கனவு நினைவில் வந்தது.”ராஜகுமாரன்” என மனம் தானாக நினைத்தது.முகம் தெரியாத அந்த ராஜகுமாரனுக்கு தானாக முகம் முளைத்தது.
“ஹாய்..” என்றான் அந்த புதியவன்.
“ஹ..ஹாய்..”
“வாட்ஸ் யுவர் நேம்?”
அவளுக்கு தொண்டை அடைத்தது.. எச்சிலை விழுங்கியபடி,
“அதிதி..” என்றாள்.
“நைஸ் நேம்.. ஐ அம் வசீகரன்..
“விச் டிபார்ட்மெண்ட் யூ ஆர்?” என்று கேட்டான்.
வசீகரன்.. என்று மனதில் ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டாள்.
‘பிறந்த குழந்தையின் முகம் பார்த்ததும் இந்தப்பெயர் வைத்திருப்பார்களோ? இதைவிட பொருத்தமான பெயர் இவனுக்கு வைத்திருக்க முடியாது’ என்றே தோன்றியது.
இவள் பேசாமல் வாய்பார்த்து நிற்பதை பார்த்து ..சிறு முறுவலுடன்,
“எந்த டிபார்ட்மெண்ட்ன்னு கேட்டேன்”
“ஆ..கம்ப்யூட்டர் சயின்ஸ்..”
“ம்ம் நைஸ்..ஐ அம் மெக்கனிக்கல்..ஃபைனல் இயர்”
“ஓ..”
அவள் தலையசைத்து லேசாக சிரிக்கவும்..அவனும் புன்னகை விரிய..
“வெல்கம் டூ சிருஷ்டி யுனிவர்சிட்டி.. இவங்களையெல்லாம் பார்த்து பயப்பட வேண்டாம்.. தே ஆர் ஜஸ்ட் ஜோக்கிங்.. என்ஜாய் யுவர் டேஸ் ஹியர்..ஆல் த பெஸ்ட்” என்று கை நீட்டினான். சிறு தயக்கத்துடன் நீண்ட இவள் கரத்தை இறுகப்பற்றி குலுக்கினான் வசீகரன்.
“தாங்க் யூ சீனியர்”
“யூ ஆர் மோஸ்ட் வெல்கம்.. நவ் கோ டூ க்ளாஸ்..சீ யூ அரவுண்ட்..” என்று அவன் கையசைக்க
கடைசியாக ஒருமுறை அவனைப்பார்த்து நன்றியுடன் சிரித்துவிட்டு வேகமாக உள்ளே ஓடிப்போனாள், ஆனால் அவள் இதயம் மட்டும் ஏனோ செல்ல மனமில்லாமல் அங்கேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தது…
தொடரும்
error: Content is protected !!