Skip to content
Post Views: 1,362
விழாக் காணுமே வானம் 15
வத்சலா ராகவன் – மது ஹனி
காதல் மொழி பேசிய மெல்லிதழ்கள்.
வைஷாலியும் அரவிந்தனும் அமர்ந்திருந்த மேஜைக்கு சற்றே அருகில் இவர்கள் இருவரும் வந்து அமர அர்ஜுனின் ரசிகர்கள் சிலர் அவனுடன் வந்து கைக்குலுக்கி பேசத் துவங்க சில நொடிகள் இவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விக்ரம்.
Advertisement
அவனைப் பார்த்த மாத்திரத்தில் வைஷாலியின் மனதிற்குள் பல நூறு குழப்ப அலைகள்.
அவனது இதயம் நெருப்பாற்றில் குளித்துக் கிடந்தது. தோல்வியை ஏற்று பழகிடாத மனது எதை எதையோ யோசித்து கிடந்தது. அடுத்த சில நொடிகளில் இவர்கள் மேஜையில் வந்து அமர்ந்தான் விக்ரம். அவன் அருகில் அர்ஜுன் இருந்திருந்தால் கூட சாமாளித்து இருப்பானோ என்னவோ.
“ஹாய்.. அரவிந்தன் கல்யாணம் பண்ணிட்டீங்க போலிருக்கு?” அவன் நக்கலாக கேட்க அரவிந்தன் அவன் முகம் பார்க்க
Advertisement
“யூ நோ உங்க மனைவி வைஷாலிக்கு என்னை ரொம்ப பிடிக்கும்” என்றான் விக்ரம் அவள் முகம் பார்த்துக்கொண்டே அந்த நேரத்தில் அர்ஜுன் அங்கே வந்து நின்றான். அவள்தான் விக்ரமின் காதலியாக இருக்கக் கூடும் என்று சட்டென புரிந்துக் கொண்டு
Advertisement
“விக்ரம் வாட் இஸ் திஸ்?” அவன் அவசரமாக அங்கிருந்து விக்ரமை எழுப்ப முயல
‘இங்கே இருந்து எழுந்து போடா பொறுக்கி ராஸ்கல்” அரவிந்த் நிறுத்தி நிதானமாக சொன்னான்.
“ப்ச் இந்த வாடா போடா எல்லாம் பழைய ஸ்டைல் மிஸ்டர் அரவிந்தன். உங்க மனைவியை கேளுங்க அவங்க இல்லைன்னு சொல்லட்டும் அதுக்கப்புறம் நான் உங்ககிட்டே சாரி கூட கேட்கிறேன்” என்றான் முகம் எங்கும் கேலி இழையோட.
Advertisement
அரவிந்தனின் பார்வை அர்ஜுனையும் சேர்த்து எரித்துக் கொண்டிருந்தது.
“விக்ரம் நீ முதலிலே எழுந்திரு” அர்ஜுன் பரபரக்க
“நீ சொல்லு வைஷாலி” அவனை சட்டையே செய்யாமல் கேட்டான் விக்ரம். அதற்குள் அரவிந்த அவன் சட்டையை பிடிக்க அரவிந்த் முத்தமிட்ட கோபத்தில் உழன்றுக் கொண்டிருந்த வைஷாலிக்கு அவன் விக்ரமின் சட்டையை பிடித்ததை ஏனோ ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அந்த நேரத்தில் அரவிந்தன் அவளுக்கு ஒரு வில்லன் போலவே தோன்றிக்கொண்டிருந்தான்.
“அவரை விடுங்க அரவிந்த்”
“ஷாலு அவன் என்ன பேசிட்டு இருக்கான் புரியுதா?” அரவிந்த் ஆத்திரத்துடன் கேட்க
“நல்லா புரியது. அவர் சொல்றது உண்மைதான் எனக்கு விக்ரமை மட்டும்தான் பிடிக்கும்” எப்படிச் சொன்னாள் என்றே தெரியாமல் அவள் வாய்விட்டு வெளிவந்து விழுந்திருந்தன அந்த வார்த்தைகள்.
விக்ரமின் சட்டையை தன்னாலே விடுவித்திருந்தன விக்ரமின் முகத்தில் அப்படி ஒரு வெற்றிப் புன்னகை. மனம் நிறைய சந்தோஷம்.
அடுத்த சில நிமிடங்களில் அவனை அந்த ஹோடேலில் இருந்து இழுத்துக் கொண்டு வெளியே போயிருந்தான் அர்ஜுன்.
“என்ன பேசறேன்னு புரிஞ்சுதான் பேசறியா ஷாலு” குரல் நடுங்கத்தான் கேட்டான் அரவிந்த்.
“எஸ். எனக்கு உங்களை பிடிக்கலை. நாம டைவர்ஸ் பண்ணிடலாம்” அவன் முகம் பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு சொன்னாள் வைஷாலி.
இதயத்தின் மீது இடி விழுந்த உணர்வு அரவிந்தனுக்கு.
“அதுதான் என் சந்தோஷத்துக்கு எது வேணும்னாலும் செய்வேன்னு சொன்னீங்க இல்ல. நான் கேட்டதை செஞ்சு குடுத்திடுங்க”
அதற்கு எதுவும் பேசும் சக்தி இல்லை அரவிந்தனுக்கு.அவளை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டவன்
“இதுக்கு மேலே என்னாலே அவளோட வாழ முடியாது” என்பதை மட்டுமே எல்லாருக்கும் அறிவித்தான். முடிந்திருந்தது அதோடு எல்லாம் முடிந்திருந்தது.
பழைய நினைவுகளில் இருந்து விடு பட்டவள் பால்கனியில் இருந்து அறைக்குள் வந்து அவனருகில் படுத்துக் கொண்டாள்.
இன்று மதியம் பெரியம்மா சொன்ன சில வார்த்தைகள் அவளை கொஞ்சமாக உலுக்கி இருந்தது நிஜம்.
மதிய உணவு மேஜையில் இவள் அப்பாவிடம் பேசிவிட்டு தனது அறைக்குள் வந்து அமர்ந்து இவள் குழப்ப வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போது உள்ளே வந்தார் பெரியம்மா.
“உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என்னமா பிரச்சனை?”
பதில் சொல்லவில்லை அவள்.
“கல்யாணம் ஆகி ரொம்ப கொஞ்ச நாளிலேயே ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்க அப்படின்னா கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளைக்கு வேறே யாரையும் பிடிச்சிருந்திருக்குமோ என்னவோன்னு தோணிச்சுடா” அவர் மெதுவாக சொல்ல நிமிர்ந்து அவர் முகம் பார்த்தாள் வைஷாலி.
பெரியம்மாவுக்கு அவள் மீது அத்தனை நம்பிக்கை. ஒரு பெருமூச்சை எடுத்துக் கொண்டாள் அவள். பெரியம்மா இத்தனை நிதானமாக பேசி இப்போதுதான் பார்க்கிறாள் அவள்.
“நான் சொல்றது சரியா தப்பான்னு தெரியலை. ஆனா அப்படி எதுவும் இருந்தா நீ பெருசா எடுத்துக்கதேடா. சின்ன வயசிலே எல்லாருக்குமே இது மாதிரி வரும் அதுக்கு ஒரு வித ஈர்ப்பு. நீங்க எல்லாரும் ஏதோ ஒண்ணு சொல்வீங்களே என்னது அது? ஆங்..க்ரஷ்”
வியப்பாக பார்த்தாள் அவரை.
“அப்படின்னா என்னது பெரியம்மா” இவள் குழப்பமாக கேட்க
“எப்படி சொல்றது?” கொஞ்சமாக யோசித்தவர் “ஆங் இப்போ ஒருத்தங்களோட நாம காலம் பூரா வாழ்ந்தா நல்லா இருக்கும்ன்னு நமக்கு தோணினா அது ஈர்ப்பு. க்ரஷ். இவங்க இல்லாம நம்மாலே வாழவே முடியாதுன்னு தோணிச்சுன்னா அது காதல். அதுதான் நிலைக்கும். இப்போ நீயும் மாப்பிளையும் ரெண்டாவது நிலைக்கு வந்திருப்பீங்கன்னு தோணுது மா. இப்போ அவரை பத்தி கொஞ்சம் தப்பா பேச்சு வந்த போது உனக்கு வந்த கோபமே அதைச் சொல்லுது”
இமைக்க கூட தோன்றவில்லை பெண்ணுக்கு.
“பார்த்து நடந்துக்கோடாமா. எல்லாம் சரியா நடக்கும். போய் மாப்பிளையை பார்த்து பேசிட்டு வா’ சொல்லிவிட்டு போய் விட்டார் அவர்.
அவர் சொல்லும் படி பார்த்தால் விக்ரம் மீது வந்தது ஒரு வகை ஈர்ப்பா? அரவிந்த் இல்லாமல் வாழ்வே முடியாது என்று தோன்றுகிறதே. அவன்தான் வாழ்கை என்று புரிகிறதே. இதுதான் காதலா?” அப்போதிலிருந்து உழன்று கொண்டே இருக்கிறது மனம்.
அன்று ஏதோ ஒரு வேகத்தில் பேசிவிட்டாள்தான். ஆனால் எப்படி என்றே தெரியாமல் சில நூறு கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தும் அவளது மனதிற்குள் நுழைந்து ஆட்சி செய்கிறானே அரவிந்தன். இப்போது அவள் என்ன செய்வாள்.
தவறுதான் அவள் செய்தது. அவனது மனதை அவனது காதலை கழுத்தை பிடித்து நெறித்து கொல்லும் படு பாதக செயல்தான்.
விவகாரத்து என்று அவன் எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை. அவளது மனம் அறுதியிட்டது.
இருந்தாலும் எனது மனதை அவனிடம் வெளிப் படுத்திவிடும் எல்லா உரிமையும் எனக்கிருக்கிறதுதானே. ஒரு முறை ஒரே ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.
இரவு விளக்கின் ஒளியில் கண் மூடிக் கிடந்தவனின் விரலில் இருந்த அவளது நிச்சியதார்த்த மோதிரம் அவள் கண்ணில் விழுந்தது.
மெதுவாக தொட்டாள் அதை
“பச்…” கையை விலக்கி கொண்டான்.
“எனக்கு என் மோதிரம் வேணும்”
“தூங்க விடு வைஷாலி”
“மோதிரம் மட்டும் குடுத்திடுங்க. நான் விட்டுடறேன். நான் ஒண்ணும் வேணும்னே கழட்டி வைக்கலை. முகம் கழுவும் போது எப்போதுமே கழட்டி வைக்குறதுதான். அது நீங்க எனக்கு ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்த முதல் கிப்ட். அது மட்டும் எனக்கு கொடுத்திடுங்க” என்றபடியே அதை அவன் விரல்களில் இருந்து கழட்ட முயல
“பச்” என்றபடியே கண்களை திறந்தான் அவன். “சும்மா செண்டிமெண்ட் சீன் எல்லாம் போடாதே”
“இல்ல இது நிஜம்.” அவள் கண்களில் கொஞ்சமாக கண்ணீர்.
“நாளைக்கு நீ சைன் போட்டதும் நான் கழட்டி கொடுக்கிறேன் விடு” அவன் திரும்பிக்கொள்ள முயல அவனது கரத்தை இழுத்துக்கொண்டாள் தன்னிடத்தில்.
“வைஷாலி” அவன் சூடாக சொல்ல அவனே எதிர்பார்க்காத நொடியில் அவன் புறங்கையில் அழுந்த முத்தமிட்டாள்.
“ஹேய்..” கையை அவன் வேகமாக இழுத்துக்கொள்ள அவனது மார்பின் மீது சாய்ந்தாள் வைஷாலி. அவன் கண்களுக்குள் பார்த்தாள் அவள்.
“தப்பு. நான் அன்னைக்கு ஹோடேலில் அப்படி பேசினது தப்பு. உங்க மனசை பத்தி யோசிக்காம பேசினது தப்பு. அதை உடைச்சு போட்டது தப்பு. இப்போ உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது நான் என்ன செய்ய?”
அவள் விழிகளுக்குள் பார்த்தவன்
“போடி” என்றான் அழுத்தம் திருத்தமாக. அவன் விழிகளில் நிறையவே கோபம்.
“நான் உண்மையை தான் சொல்றேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குது” அவள் சொல்ல அவன் விலகி எழ முயல அப்படியே அவன் இதழ்களில் இதழ் பதித்திருந்தாள் வைஷாலி.
சில நொடிகளில் அவளை விலக்கித் தள்ளினான் அரவிந்தன். அவனது முகமெங்கும் அவளது கண்ணீரின் ஈரம்.
.மனதிற்குள் வைத்து ரசித்து ரசித்து மகிழ்ந்தவள் மடி சேர்ந்தும், அவளது அருகாமையும் முத்தமும் கூட அவனது பல நாள் தவம்தான் ஆனால் அவள் அவனவள் என்று அவனது மனம் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்தது.
கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒரு திரை அவர்களுக்கு நடுவில் விரிந்து இருந்ததை போல் இருந்தது அவனுக்கு.
“நான் உங்க மனசைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலைதான். ரொம்ப வலிச்சிருக்கும் ரெண்டு நாள் முன்னாடி நான் அர்ஜுன் கூட கவர் ஸ்டோரி பண்ணது கூட உங்களுக்கு ரொம்ப கஷ்டமாதான் இருந்திருக்கும்.”
எதுவுமே பேசவில்லை அரவிந்தன்.
“இப்போ ஐ ஆம் ரியலி சாரி அரவிந்த். எனக்கு கல்யாணமான போது லவ்ன்னாலே என்னனு புரியலை. ஆனா இப்போ புரியுது. நீங்க யாரையாவது செல்லம்ன்னு கூப்பிட்டா எனக்கு அப்படியே பதறுது. உங்களுக்கும் அப்படிதான் இருந்திருக்கும்“
அவளை விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் அரவிந்தன்.
“இப்போ எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. என் சந்தோஷத்துக்காக எதையும் செய்வேன்னு சொன்னீங்களே. என் சந்தோஷமே நீங்கதான்னு நான் உங்களுக்கு செயலால் உணர்த்திட்டேன். வார்த்தையாலும் புரிய வைக்கிறேன். இனி காலம் முழுக்க உணர்திட்டே இருப்பேன்.”
திரும்பவில்லை அரவிந்தன்.
அவன் முகம் திருப்பி இன்னொரு முறை அழுத்தமாக முத்தமிட்டாள் அவள்
“லவ் யூ”
“சும்மா இரு ஷாலு” அவன் விலக முயல
அதே வேகத்தில் இன்னொரு முறை அவன் இதழ்கள் மீது அழுத்தமாக பதிந்தன அவளது இதழ்கள் “லவ் யூ அரவிந்தா”
இப்போது அவளை விலக்கவில்லை அவன். சில நொடிகள் கழித்து அவளாகவே விலக இப்போது அவனது விழிகளிலுமே கண்ணீர் பூத்திருக்க கட்டிலை விட்டு எழுந்தவன் கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எதுவுமே பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.
மறுநாள் காலை வைஷாலி கண்விழிக்கும் போது நேரம் காலை பத்தை தொட்டிருந்தது இரவு முழுவதும் உறக்கமா விழிப்பா என்று தெரியாத ஒரு நிலையில் படுத்திருந்தவள் அதிகாலையில்தான் கண் அயர்ந்தாள் வைஷாலி. விழுந்தடித்துக் எழுந்தாள் அவள்.
இரவு நடந்தது எல்லாம் ஒன்றொன்றாக அவளுக்குள் வரிசைக் கட்டியது. அவசரமாக குளித்து முடித்து வெளியே வந்தாள் அவள். மற்ற அனைவரும் இருக்க அவன் மட்டும் அவள் கண்ணில் படவேயில்லை.
காலை உணவு என்று கொஞ்சம் கொறித்து முடித்துவிட்டு வர பாட்டி பிடித்துக் கொண்டார் அவளை.
ஏதேதோ கதைகள் பேசியவர் ஒரு கட்டத்தில் அவள் கரம் பிடித்துக் கொள்ள அவள் கையில் மோதிரம் இல்லாததை கவனித்து இருந்தார்/
“நீ மோதிரம் எல்லாம் போட்டுகுற பழக்கம் இல்லையா?”
“போட்டுப்பேனே” அவள் அவசரமாக கையை விலக்கிக் கொள்ள முயன்றாள்.
“அரவிந்த் உனக்கு நிச்சியத்தின் போது ஒரு மோதிரம் போட்டு விட்டான் இல்லையாமா?”
சற்றே பகீரென்றது அவளுக்கு “இந்த ஊரில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் எனது மோதிரத்தை பற்றித்தான் கவலையாடா இறைவா”
அவள் என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள் சோபாவில் அமர்ந்திருந்த அவர்கள் இருவருக்கும் நடுவில் நீண்டது ஒரு கரம்.
“இதோ இருக்கு பாட்டி மோதிரம்” எங்கே இருந்தானோ எப்படி வந்தானோ சட்டென உள்ளே வந்து காப்பாற்றினான் அரவிந்தன்.
கொஞ்சம் நிம்மதி வந்தது அவளுக்கு.
“நீ எதுக்குடா போட்டிருக்க அவ மோதிரத்தை?” பாட்டி அவனை ஊடுறுவ
“யார் போட்டா என்ன பாட்டி, இனிமே நான்தான் போட்டுக்க போறேன் இதை” என்றான் அவளைப் பார்த்துக்கொண்டே. அவன் சொன்னதின் அர்த்தம் சத்தியமாக புரியவில்லை அவளுக்கு.
அவள் திருதிருவென விழிக்க
“ஆங் பாட்டி இன்னைக்கு நானும் வைஷாலியும் லஞ்சக்கு வெளியே போறோம். கரெக்டா ஒரு மணிக்கு கிளம்புவோம்” அவளுக்குமாக சேர்த்து அறிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் அவன்.
“என்ன செய்கிறான் இவன். என்னுடன் பேச மாட்டானாமா? மதிய உணவுக்கு வெளியே செல்கிறோம் என்றானே சந்தோஷமாக அழைத்து செல்கிறானா அல்லது வக்கீலை பார்ப்பதற்காகவா?” சத்தியமாக புரியவில்லை அவளுக்கு.
மதியம் ஒரு மணிக்கு அவனுடன் காரில் கிளம்பியிருந்தாள் வைஷாலி. ஒரு வார்த்தை பேசவில்லை அவன். அவளுமே எதுவும் பேசவில்லை. எங்கே அழைத்து செல்கிறான் என்று கூட அறியவில்லை அவள்.
“பேச வேண்டியது எல்லாம் நேற்றே பேசியாகி விட்டது. இனி அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்” தனக்குத்தானே தலையசைத்துக் கொண்டு சாலையில் பார்வையை வைத்துக் கொண்டாள் அவள்.
அவர்கள் வரவேற்பு நடந்த, அவர்களுக்கும் விக்ரமுக்கான சந்திப்பு நடந்த அதே ஹோட்டலுக்கு சென்று நின்றது அவர்கள் கார்.
“இங்கே எதற்காம்?’ நிஜமாகவே புரியவில்லை அவளுக்கு. அதற்கு மேல் கேட்காமல் இருக்கவும் இயலவில்லை.
“இங்கே எதுக்கு?” அவள் கேட்டு வைக்க
“ம்? லாயரை பார்க்க” வெகு சாதரணமாக சொல்லிவிட்டு நடந்தான் இயல்பாக.
ஒரு நொடி கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டு நடந்தாள் அவள்.
“எதுவரை போகிறானோ போகட்டும்”
அன்று அவர்களுக்கு இடையில் பிரச்சனை உருவான அதே மேஜையை முன் பதிவு செய்து வைத்திருந்தான் அவன்.
“எதற்காம்? ஆரம்பித்த இடத்திலேயே முடிக்க விரும்புகிறானாமா?” கேள்வி கேட்காமல் அவன் எதிரில் அமர்ந்தாள்.
ஏசியின் குளிர் தீண்டல் பணத்திலேயே புரளும் மக்களின் வருகை சிரிப்பு நடவடிக்கைகள் எதையுமே கவனிக்க மனமில்லை அவளுக்கு.
சில நிமிடங்கள் கடந்திருக்க அவர்கள் அருகில் வந்த வெய்ட்டரை கொஞ்ச நேரம் கழித்து வரச் சொல்லி அனுப்பியிருந்தான் அரவிந்தன்.
அப்போது வெகு இயல்பாக
நிமிர்ந்தவளின் மூச்சு நின்று மீண்டது. ஒரு கையில் ஊன்றுகோலை பிடித்தபடி சற்றே தூரத்தில் யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருந்தான் விக்ரம்.
error: Content is protected !!