Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

51.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 51.2

..

“பேபி இன்னும் வரலியா?” என்றவன் பார்வை யசோதராவின் அறையை நோக்கிச் சென்றது.

“எங்க அடங்கறா அவ? நீயும் அவ அப்பா மாதிரியே, அவ சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுற. உன்ன என்ன பாடுபடுத்தப் போறாளோ? இவ ஃப்ரெண்ட்ஸ் எவளும் பக்கத்துல கல்யாணம் பண்ண மாட்டாங்க போல. மூணு நாள் ஆச்சு குன்னூர் போய். இன்னைக்கு வரவ, நேரத்தோட வந்தாளா? என்னவோ ரகு!



Advertisement

உன் ஐயா கூப்பிட போய் ஒரு மணி நேரம் ஆச்சு… வர நேரம் தான். நீ உக்காரு, சாப்பிடலாம்” என்றவர், “நீ வருவேன்னு தெரியாது. எனக்கும் சமைக்க… சாப்பிட மனசில்லையா… அதுதான்…” என ஏனோ தானோவென சமைத்த உப்புமாவை அவனுக்குப் பரிமாற, அந்தச் சுவையற்ற உணவை அமைதியாக உண்டு எழுந்தவன்,

“என்ன சாப்பாடு இது? என்ன சத்து கிடைக்குதுன்னு இத சாப்பிடுறீங்க? ஒழுங்கா சமைச்சு சாப்பிடணும் சரியா?” என அன்னைக்குப் பாடமும் எடுத்தான்.

நன்றாகத் தன்னை பேணிக் காக்கும் ரகுவிற்கு ஏன் இப்படி? “ஒரு கெட்ட பழக்கம் இல்லையே டா உனக்கு. ஏன் டா ரகு…” என்றவருக்குத் தொண்டையை அடைத்தது.

Advertisement

“ம்மா” என்றவனால் என்ன செய்திட முடியும்? அன்னையின் கண்களைத் துடைத்து, “உங்க முகத்த பார்த்ததும் பேபி என்னன்னு கேட்பா. பிளீஸ் மா. அவ அழுதா என்னால சுத்தமா முடியாது. பிளீஸ் மா” என்றவனைப் பார்த்த சந்திரிகா, “ம்ம்” எனக் குளியலறையை நோக்கி நடந்தார்.

Advertisement

இருக்கும் சூழலில் தன்னால் பேபியிடம் பேச முடியாது எனத் தோன்றவும், “மா… நான் கிளம்பறேன். நாளைக்குப் பார்ப்போம்” எனக் கூறி, பதில் வரும் முன்பே கிளம்பினான்.

உறக்கமின்றி அந்த இருட்டு அறையில் படுத்திருந்தவன் கரத்தில் அவன் பந்து உருண்டு கொண்டிருந்தது.  மெத்தையில் கிடந்த கைப்பேசி அமைதியாக ஒளிர்ந்தது.

இரவு பதினொன்றிற்கு யாராக இருக்கக் கூடும்? அவன் யட்சனியே தான். எடுத்தவன் காதினுள் வைக்கும் முன்பே, “மாடிக்கு வா” எனக் கூறி அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

Advertisement

“இவள…” எனச் சலித்தவனுக்கு, அவளின் அருகில் இருக்கக் கசக்குமா என்ன?

இரவை அழகாகிக் கொண்டிருந்தது, கட்டிலில் காலாட்டிக் கொண்டிருந்த பெண் நிலா. “வாங்க சார்… ஒருவழியா வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுடுச்சு போல” என்றவள் காலுக்கு மேல் இருந்த காலை நகர்த்தவும் இல்லை, காலாட்டுவதை நிறுத்தவும் இல்லை.

“தள்ளிப் படு” என்றவன் வார்த்தையை மதிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை போலும்.

“நீ என் பொண்டாட்டி… பின்னி பிணைஞ்சு வாழணும்ன்னு ஏதேதோ கதை எல்லாம் சொன்ன காதல் மன்னனை சாருக்குத் தெரியுமா?” என்றவளின் கோபம் ரகுவிற்கு புரியாது இல்லை.

“தள்ளிப் படு டி…” என இடித்துக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தவனுக்குத் தள்ளிப் படுத்து இடம் கொடுத்தாள்.

“சாரி” என்றவன், அவனையே பார்த்து படுத்திருந்தவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைக்க, அடுத்த கன்னத்தையும் திருப்பிக் காட்டி அதிலும் ஒற்றை இதழ் தீண்டலை வாங்கிக் கொண்டாள்.

படுத்தவன் கரத்தில் தலையை வைத்தவள் சண்டை போடுவாள் என நாம் நினைத்தால் அது தவறு. “ல..குஊஊ” எனச் செல்லம் கொஞ்சியவளின் வழிகள் அவன் முகத்தை அவலாகப் பார்த்தன.

“ம்ம்?” என்றது தான் தாமதம், “நான், நம்ம கல்யாணத்துக்கு கியூட்டா ஒரு பத்திரிக்கை பார்த்து வச்சிருக்கேன். நாளைக்குப் போய், நம்ம ஃபிரெண்சுக்கு கொடுக்க அந்த டிசைன்ல செலக்ட் பண்ணலாமா?” எனக் கொஞ்சினாள்.

“நீ சும்மா கேட்டா போதாதா? இப்படி கொஞ்சணுமா?”

“சொல்லு லகு. நாளைக்கு ஈவ்னிங் போகலாமா?”

“எனக்கு சென்னைக்கு நாளைக்கு போகணும் பேபி”

“ப்ச்… அவசர வேலையா?”

“ம்ம்ம்… மார்னிங் போவோமா?”

“போலாம். எனக்கு தெரியாம உனக்கு சென்னைல என்ன வேல மிஸ்டர்?”

“அருண்ன்னு ஒரு நியூரோ சர்ஜன்…”

“இப்பவும் வலி வருதா?”

“ம்ம் எப்பவாது… கொஞ்சமா”

“தனியா போகலையே? அப்பாவோட தானப் போர?” என்றவளை ஆழப் பார்த்தவன், “நான் என்ன சின்ன குழந்தையா பேபி?” என்று, தான் தனியாகப் போகப் போவதை உணர்த்தினான்.

“நோ வே. உன் ஐயாவோட போ. இல்ல என்னை கூட்டிட்டுப் போ”

ஆழ மூச்சை இழுத்துவிட்டவன் பதில் ஏதும் கூறவில்லை. மனதில் ஏதேதோ தோன்றினாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து அவளோடான அந்த நேரத்தை மட்டுமே உள்ளுக்குள் இறக்கிக் கொண்டிருந்தான்.

“ஸ்டார்ஸ் எல்லாம் சரியா இருக்கா? இந்த ரெண்டு மாசத்துல ஒண்ணும் காணாம போகலியே?” எனக் கேட்டவளை அவன் கேள்வியாகப் பார்க்க, “இல்ல ரொம்ப நேரமா கண்கொட்டாம வானத்தையே பார்த்திட்டு இருந்தியா… அதுதான் கேட்டேன்” என்றாள்.

“முடிஞ்சு போன நிமிஷத்தோட நிழல பார்த்திருக்கியா, பேபி?”

“என்ன லகு பேசற?”

“பாஸ்ட்ட பிரசன்ட்ல பார்க்கிறத பத்தி கேட்கிறேன்.”

“டைம் டிராவல் பத்தியா பேசற?”

“ம்ம் அப்படி தான் வச்சுகோயேன்.”

“இல்லியே”

“அதத் தான் பார்த்திட்டு இருக்கேன் பேபி. அதோ தெரியுதே நட்சத்திரங்கள்… அது எவ்வளவு ஆயிரம் லைட் இயர் தூரத்துல இருக்கோ தெரியல. அது என்னைக்கோ அனுப்பின ஒளிய இன்னைக்கு நாம பார்த்துட்டு இருக்கோம்.

இன்னைக்கு நம்ம கண்ணுக்கு தெரியற நட்சத்திரம் உண்மையில இல்லாம கூட இருக்கலாம் தெரியுமா?”

“இருக்கலாம். இதோ இருக்க சூரியன்ல இருந்து வர ஒளி உலகத்துக்கு வரதுக்கே 8நிமிஷம் ஆகும் போது… நீ சொல்றதும் ஏத்துக்கிற மாதிரி தான் இருக்கு. இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி?”

“ஆராய்ச்சி எல்லாம் இல்ல… சும்மா தோணிச்சு. நமக்கும் டைம் டிராவல் இருக்கலாம். பின்னாடி போய் மாத்த முடிஞ்சா நல்லா இருக்கும்.”

“அப்படி என்னத்த உனக்கு மாத்தணும்?”

எதை மாற்ற வேண்டும்? இதே நட்சத்திரங்களைக் கண்டு மலைத்த இரவுக்குச் செல்லலாம். மறுதினம் அதே மலையில் உருண்டு புரண்டு பாறைகளைக் குசலம் விசாரிக்காது இருந்திருக்கலாம். அன்று அப்படி அடிபடாது இருந்திருந்தால்… ப்ச்! ரகுவால் எண்ணாதிருக்க முடியவில்லை.

“இருக்கலாம். ஆனா அதுனாலத் தான்னு சொல்ல முடியாது. ரேடியேஷன் எக்ஸ்போஷர், கெட்ட பழக்கங்கள், எதிர்ப்புச் சக்தியின்மை, பேட் ஹெல்த், ஜெனிட்டிக்ஸ்… இப்படி என்ன வேணும்னாலும் இருக்கலாம்” என மருத்துவர், கட்டிக்கான காரணங்களைக் கூறியிருந்தாலும், இந்தத் தலை வேதனையின் ஆரம்பப்புள்ளி அந்த விபத்தாகத் தான் இருக்கும் என்பது ரகுவை அரிக்கும் எண்ணம்.

“லகு… தூங்கிட்டியா? பதிலே காணம்?” எனத் தலையைத் தூக்கி அவன் முகம் பார்க்க, அவனும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“நடந்ததோட விளைவுகள மட்டும் தான் பாக்க முடியும். எதையும் மாத்த முடியாது பேபி. அது வானமே ஆனாலும் அப்படித் தான்.” என்றான் விரக்தியாக.

“நீ ரொம்ப அறிவாளியா இருக்கது நல்லதுக்கா கெட்டதுக்கான்னே தெரியல லகு. எனக்கு நீ பேசறது சில நேரம் புரியவே மாட்டேங்குது”

“கிராப் நெபுலா (crab nebula) தெரியுமா?”

“என்ன?”

“ஆயிரம் வருஷம் முன்ன, அதாவது 1054-ல, புதுசா ஒரு ஸ்டார் வானத்துல வந்துது, அதுக்கு ‘கெஸ்ட் ஸ்டார்’ன்னு பேரும் வச்சாங்க. அது எவ்வளவு பிரகாசமா இருந்துன்னா… ரெண்டு வாரத்துக்கும் மேல பகல் நேரத்துலயே தெரிஞ்சுதாம். சுமார் ரெண்டு வருஷம் நைட் ஸ்கைல தெரிஞ்சு, அப்பறம் அது காணாம போயிடுச்சு.”

“யார் திருடினா?” அவள் சிரித்தாள்.

“ஏழாயிரத்தி ஐந்நூறு வருஷங்க முன்ன நடந்த சூப்பர் நோவாவோட வெளிச்சத்தைத் தான், ஆயிரம் வருஷம் முன்ன பூமியில இருந்தவங்க பார்த்தாங்க.”

“என்ன ரகு பேசற?”

“அதாவது, வான மண்டலத்துல ஏதோ ஒரு மூலையில, என்னைக்கோ வெடிச்சு சிதறி இறந்து போன நட்சத்திரக் கூட்டத்தோட ஒளி நம்மள வந்து சேர 6500 வருஷம் தேவைபட்டிருக்கு. ஆகாயம் எவ்வளவு விந்தையை ஏந்தி இருக்கு பாரேன். இறந்து, காணாம போன பிறகும் ஒரு நட்சத்திரத்தால மட்டும் தான் ஷைன் ஆக முடியும் இல்ல?”

“இல்ல… நான் செத்த பின்னாடி கண் தானம் செய்றதா சொல்லி இருக்கேன். சோ… நானும் இறந்த பிறகு ஷைன் ஆவேனாக்கும்” எனப் பெருமை பேச… சத்தமாகச் சிரித்தான் ரகு.

“எதுக்குச் சிரிக்கிற?”

“நீ கிழவியாகி, கண்ணு மங்கி, கண்ணாடி போட்டுட்டு சுத்துவ. அதுக்கு அப்பறம் உன் கண்ண எடுத்து எந்த ஊரு கிழவிக்கு வைப்பாங்களாம்?”

சிரிக்கும் ரகுவை ஆசை பொங்கப் பார்த்த யசோதரா, “நீ ரொம்ப அழகா இருக்க லகு. புதுசா என் மேல சிடுசுடுன்னு விழறியே… அப்படி இல்லாம இதே மாதிரி நல்ல மூட்ல, சிரிச்ச முகமா இருக்கணும் சரியா?” என்றவள் எம்பி அவன் நாடியில் தன் இதழை ஒற்றி எடுத்தாள்.

“சரி பேபி… நீ என் கூடவே இரு. நான் இதே மாதிரி என்னைக்கும் ஹேப்பியா இருப்பேன்” என்றவன் அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.

அன்று இரவு, எங்கோ பற்றி எரிந்து கொண்டிருக்கும் பெரிய வானத்து நட்சத்திரங்களைப் பற்றிப் பேச முடிந்த ரகுவால், தன் மூளைக்குள் இருக்கும் சிறு கட்டியைப் பற்றிப் பேச முடியவில்லை.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!