Skip to content
Post Views: 4,936
புஷ்பாஞ்சலி…
சுருக்கமாக அஞ்சலி…
Advertisement
மதுரை பாத்திமா கல்லூரியில் அறிவியல் துறையில் எம்எஸ்சி எம்ஃபில் முடித்தவள்.
சிரித்த இதழ்களும் துடுக்கு பேச்சுமாக ஒரு காலத்தில் வளைய வந்து கொண்டிருந்தவள்தான் அஞ்சலி. அவளுக்கு ஒரு அண்ணன்… அவன் பெயர் கபிலன். அவளுக்கு முன்பே அவனுக்கு திருமணம் முடிந்து மனைவி குழந்தையோடு பூனாவில் வசிக்கிறான். கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்பவர்கள். மனைவி அனிதாவின் தாய் அவர்களுடனே இருந்து குழந்தையை கவனித்துக் கொள்ள கணவன் மனைவி இருவரும் நிம்மதியாக பணியாற்றுகின்றனர். வருடம் இருமுறை பெற்றவர்களை பார்க்க வந்து சென்றால் அது பேரதிசயம்.
Advertisement
Advertisement
குடும்பத்தின்மேல் பற்றில்லாதவன் கபிலன் என்று கூற முடியாது. அவனது பணி… கூடுதலாக அவனுக்கென்று தனி குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் சராசரி மனித வாழ்க்கைதான். அவனுக்கும் பெற்றவர்களின் மீதும் தங்கையின் மீதும் பாசம் உண்டு. அவர்களது தேவைகளை தீர்த்து வைக்கக் கூடியவன்தான். அனிதாவும் நல்ல பெண்தான்.
அவன் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அஞ்சலிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆசிரியப்பணியின் மேல் ஆர்வம் கொண்டவள் படிப்பை முடித்து ஒரு ஆண்டு ஒரு தனியார் பள்ளியில் வேலையில் இருந்தாள். அதன்பின் திருமண பேச்சு வார்த்தை எழ பெற்றவர்களின் எண்ணத்திற்கு தடை எதுவும் அவளும் தெரிவிக்கவில்லை. நிறைய கனவுகள் கற்பனைகள் அவளுக்கும் உண்டு. வீட்டில் பார்த்த வரன்தான் அவளது கணவன் அசோக்.
Advertisement
புகைப்படத்தில்தான் அவனைப் பார்த்தாள் அஞ்சலி. மிகவும் பிடித்துப் போனது. அழகாக ஆளுமையாக நிறமாக ஸ்டைலாக இருந்தவனை பார்க்கும் போதே கண்களுக்குள் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பறந்தன. அவள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களுடன் அவர் எதிர்கால நாயகன். அத்தனை மகிழ்ச்சியாக திருமணத்திற்கு தயானாராள் அஞ்சலி.
வெளிநாட்டில் வேலையில் இருந்த அசோக் கைப்பேசி வழியாக மட்டுமே அவளுடன் பேசிக்கொள்வான். அவனுக்கும் அவளை மிகவும் பிடித்துவிட இரு தரப்பிலும் திருமண வேலைகள் ஜரூராக ஆரம்பித்திருந்தன. ஒரே மாதத்தில் அனைத்தும் ஏற்பாடாகி முடிந்திருந்தது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்புதான் விடுப்பில் வந்திருந்தான் அசோக். வீடியோ காலிலும் புகைப்படத்திலும் மட்டுமே பார்த்தவனை நேரடியாக அவள் பார்த்தது திருமணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தத்தின் போதுதான்.
நேரில் இன்னும் அழகாக தெரிந்தவனின் மேல் இன்னும் கூடுதல் ஈர்ப்பு எழுந்தது. இனிக்க இனிக்க மணக்க மணக்க இதே மதுரையில் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அவளது அண்ணனும் உடன் இருந்து தனது கடமையை செவ்வனே செய்து முடித்திருந்தான்.
20 நாட்கள் விடுப்பில் மட்டுமே வந்திருந்தான் அசோக். திருமணம் முடிந்து கணவனின் சொந்த ஊரான தேனிக்கு பற்பல கனவுகளோடு பயணப்பட்டு இருந்தாள் அஞ்சலி. புதுமண தம்பதியருக்கே உரித்தான மகிழ்வுகள், விருந்துகள், தனிமைகள் என்று அந்த 20 நாட்களும் இனிமையான சுவாரசியமான வாழ்க்கைதான் அவனோடு.
விடுப்பு முடிந்து மனைவியை பிரிய மனமே இல்லாமல் மீண்டும் வெளிநாடு கிளம்பியிருந்தான் அசோக். கணவனின் பிரிவில் பெரிதும் வாடித்தான் போனாள் அஞ்சலி. இருபதே நாட்கள்… இன்னும் முழுதாக பேசி பழகி புரிதல் என்பது எழுந்ததா என்பது தெரியவில்லை. ஆனாலும் அவனுடனான இந்த நாட்களில் சுவாரசியத்தை அனுபவித்திருந்தாள். ஆனால் இன்னும் நீளப் போகும் காலத்தில் அவனோடு வாழ்ந்து தெரிந்து கொள்ள வாய்ப்பு குறைபாட்டுடன் அவனது பிரிவினை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
“உனக்கு பாஸ்போர்ட் விசா எல்லாமே அப்ளை பண்ணியாச்சு. அதுவும் ரெடி ஆகட்டும். சீக்கிரமே உன்னை என்னோடே கூட்டிட்டு போயிடுவேன்… கொஞ்சநாள் பொறுத்துக்கோ…” மனைவியை கொஞ்சி தீர்த்து சமாதானம் கூறி கிளம்பி இருந்தான் அசோக்.
கணவனின் வீட்டில் மாமியார் சச்சிதானந்தன் மாமியார் லட்சுமி கொழுந்தன் அருண் என்று அனைவருமே அவளிடம் அன்பாகத்தான் நடந்து கொண்டனர். கணவனின் பிரிவு தாக்காதவாறு அவளை சிறப்பாகவே கவனித்துக் கொண்டனர். அவனும் தினமும் ஒருமுறை அவளுக்கு அழைத்து பேசிவிடுவான். பெற்றவர்களும் அடிக்கடி மகளை சென்று பார்த்துக் கொண்டனர்.
நாட்கள் இப்படியே நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் அழைத்து பேசுபவன் பின்பு வாரத்திற்கு மூன்று நாட்களாகி, பின் இரண்டு நாட்களாகி, பின் ஒரு நாளாக அவனது அழைப்பும் குறைந்து கொண்டிருந்தது. வேலைப்பளு அதிகம் என்று கூறினான். அந்த தனிமைக்கும் அவனது பிரிவிற்கும் அஞ்சலியும் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க இனிமையை சுமந்த ஒரு செய்தி மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆம்… அஞ்சலி கர்ப்பம் தரித்திருந்தாள். 20 நாட்கள் இல்லற வாழ்க்கையில் தங்களது தாம்பத்தியத்தை ஊர்ஜிதப்படுத்தி சென்றிருந்தான் அசோக்.
குடும்பமே மகிழ்ச்சியை கொண்டாடித் தீர்த்தது. அவள் கணவனும் அவளுக்கு வீடியோ காலில் அழைத்து மகிழ்ச்சியோடு பேசினான். அவள் வருந்தி கேட்டதால் வாரம் ஒருமுறை அழைத்தவன் அதனை இருமுறையாக மாற்றிக் கொண்டான். இந்த சமயத்தில் கணவனின் அருகாமையை இயல்பாகவே மனம் நாடியது. அதை அவனிடம் வெளிப்படையாகவும் கேட்டிருந்தாள்.
“கல்யாணத்துக்கே கஷ்டப்பட்டுதான் 20 நாள் லீவு வாங்கினேன்… உன்னை எப்படியாவது இங்கே கூட்டிட்டு வந்துடலாம்னு பார்த்தா இப்போ நீ கன்சீவா இருக்க. இந்த நேரத்துல உன் அம்மாவும் என் அம்மாவும் உன்னை இங்க அனுப்ப இஷ்டப்படல. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் பெருசு பண்ணிட்டு நீ இங்க வர்ற மாதிரி பிளான் பண்ணிக்கலாம். இப்போ நான் லீவு போட்டுட்டு வந்தா குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் உன்னோட வந்து என்னால இருக்க முடியாது. நான் தினமும் உனக்கு கால் பண்ணி பேசுறேன். வளைகாப்புக்கு எப்படியாவது வர முயற்சி பண்றேன். எனக்கு மட்டும் ஆசை இல்லாமலா போயிடும். எனக்கும் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு அவ்வளவு ஆசை. பொருத்துகோடா… வளைகாப்புக்கு கண்டிப்பா வருவேன்… உன்கூட ஒரு மாசமாவது தங்கற மாதிரி பிளானோட வர்றேன்…”
அன்றாடம் அவளுக்கு அழைத்து இனிக்க இனிக்க நிறைய சமாதானங்கள் கூறினான். நாட்கள் நகர்ந்து முழுதாக ஐந்து மாதங்கள் அவளுக்கும் நிறைவடைந்து இருந்தன. ஏழாம் மாதம் வளைகாப்பு என்று முடிவு செய்யப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. கணவனின் வருகைக்கான நாளை எதிர்பார்த்தபடி ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
முழுதாக ஆறு மாதங்கள் நிறைவடைந்து இருந்த நிலையில் பெரும் இடியை தாங்கிய ஒரு செய்தி அவள் வாழ்வையே சுழற்றிப் போட்டிருந்தது.
முதல்நாள் இரவு நடந்த ஒரு சாலை விபத்தில் அவள் கணவன் அகால மரணம் அடைந்தான் என்ற செய்திதான் அது. மொத்த குடும்பமும் உடைந்து போய் இருக்க அழகூட தோன்றாமல் அதிர்ச்சி தாக்கியதால் சிலையாக அமர்ந்துவிட்டாள் அஞ்சலி. இரண்டு நாட்கள் கழித்து அவனது உடலை போராடி பெற்றிருந்தான் அவனது தம்பி அருண்.
சவக்கோலத்தோடு கூடத்தில் கிடந்த கணவனை பார்த்தவளுக்கு கண்ணீர் வரவில்லை… அவன் கொடுத்துச் சென்ற தண்டனை காலம் முழுக்க ஆராத ரணம் அல்லவா… இதயம் இரும்பாய் மாறி இளகும் தன்மையற்று இறுகிக் கிடந்தது. அவனோடு அவள் என்ன வாழ்ந்து விட்டாள்..? நேரில் பேசி சிரித்தவற்றை விட கைப்பேசி வாயிலாக அவன் குரலை கேட்ட நாட்கள்தானே அதிகம். எத்தனையோ கனவுகளை சுமந்து வந்தவள்… அவனோடு இன்னும் வாழ்ந்து கழிக்க காலங்கள் எத்தனையோ இருந்தும் ஒரே நாளில் அனைத்தும் மடுவாய் சரிந்திருக்க மேடிட்ட தனது வயிற்றை மெல்ல வருடியவளுக்கு இதயம் துண்டு துண்டாய் உடைந்து போனது.
மொத்தமாக அவளது வாழ்க்கை முடிவிற்கு வந்திருக்கிறது. வயிற்றில் இருக்கும் கரு தந்தையின் முகத்தை காணாமலேயே உருப்பெற்று உருவாகி கொண்டு இருக்கிறது. தந்தையின் முகமறியா குழந்தையாக பிறந்து வளரப்போகிறது. இனி இந்த சமூகம் அவளை என்ன சொல்லும்..? இவர்களை கடந்து எப்படி வாழ்வாள்..? இனி என்ன செய்வாள்..? இனி அவளது எதிர்காலம்..? பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலம்..? இனி அவளை நோக்கிய இந்த சமூகத்தின் பார்வை..??
சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவளுக்கு கண்முன் எதிர்கால காட்சிகள்தான் விஸ்வரூபம் எடுத்து விரிந்தன. அவனை கட்டி அணைத்து கதறும் அளவிற்கு காதல் மழையில் நனைந்ததில்லையே. கணவன் கைப்பிடித்தவன் என்ற உரிமையோடு அவனோடு வாழ்ந்தது சொற்ப நாட்கள்தான். அதன் பின்னான நாட்களிலும் ஓர் அந்நியத்தன்மையான உரையாடல்கள்தானே. அவளிடம் பீறிட்ட காதல் நெஞ்ச முழுக்க நிறைந்து இருந்தால் கதறி துடித்து உருண்டு புரண்டு இருப்பாளா என்னவோ..?
நிதர்சனத்தோடு வாழ்ந்து பழகியவளுக்கு நடிக்க தெரியவில்லை. கணவனோடு அந்த அளவு இன்னும் நெருக்கம் கொண்டதில்லையே… எதிர்காலமும் ஏனைய பிரச்சினைகளும்தான் கண்முன் காட்சியாக மாறி பயமுறுத்திக் கொண்டிருந்தன. நிதர்சனத்தைதானே யோசிக்கிறாள்.
ஒவ்வொன்றாக நடந்து முடிந்தது… கதற கதற சில சடங்கு சம்பிரதாயங்களும் செய்யப்பட்டன. வயிற்றில் குழந்தையோடு இருப்பவள் என்ற காரணத்தை தாங்கி சில பல கொடுமைகள் தவிர்க்கப்பட்டன. அய்யோ என்னை பேசும் உலகம் என் குழந்தையை பற்றியும் பேசுமோ என்று ஆழ்மனதில் பெரும் பயமும் பீதியும் நெஞ்சம் முழுக்க நிறைந்து போனது.
எதை நினைத்து அழுவது..? எதை நினைத்து யோசிப்பது..? சிலையாக சமைந்து போனவளுக்கு இனி தான் விதவை என்ற அந்த ஒற்றை எண்ணம் தோன்றிய அந்த நொடியில் உடைப்பெடுத்து கண்ணீர் ஊற்றியது. நான் விதவையா..? அமங்கலியா..? தனக்குள் ஓராயிரம் முறை இதே வார்த்தைகளை மாற்றி மாற்றி உள்ளுக்குள் கூறி உடைந்து சிதறி கதறி அழுதாள் பெண்ணவள்.
போதையில் கார் ஓட்டி சென்றதால்தான் அவள் கணவனுக்கு மரணம் ஏற்பட்டது என்ற தகவலும் கிடைத்தது. மனம் வெம்பி போனாள் அஞ்சலி. அவனுக்கு இந்த பழக்கமும் உண்டா..? இப்பொழுதுதானே அதுகூட அவள் செவிகளை எட்டுகிறது. அவன் செய்த அந்த ஒற்றைத் தவறு ஒரு பெண்ணின் வாழ்க்கையை மொத்தமாக முடித்துவிட்டதே.
பெற்றோர்கள் தங்களோடு மகளை அழைத்து மதுரைக்கு வந்துவிட்டனர். குழந்தையை சுமந்து கொண்டிருப்பவள் அங்கு அமர்ந்து என்ன செய்வாள்..? வளைகாப்பிற்கு கணவனை எதிர்பார்த்தவள் அவனுக்கு வாய்க்கரிசி போட்டு மொத்த வாழ்க்கையையும் முடித்துவிட்டு மூலியாக பிறந்த வீடு வந்து சேர்ந்திருந்தாள். பெற்றவர்களும் பிறந்தவனும் துடிக்காமல் போவார்களா..? அழுகையும் வேதனையுமாக நாட்கள் நகர சவியும் பிறந்திருந்தாள்.
குழந்தை பிறந்தபின் தங்கள் வீட்டு வரிசை அசோக்கின் பெற்றோர் வந்து பார்த்துச் சென்றனர். குழந்தையை பார்க்க அடிக்கடி வந்தும் சென்றனர். முடிந்து போன உறவினை முறிய விடாமல் மீண்டும் பந்தத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறாளே பிறந்த குழந்தை. வேண்டாம் என்று ஒதுக்க முடியாது… போனவன் போய்விட்டான்… ஆனால் இந்த குழந்தை இரு குடும்பத்துக்கும் உரிமையானதுதானே. யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
நாட்கள் மெல்ல நகர வலிகளை தனக்குள்ளே புதைத்து குழந்தையை பெற்றவர்களிடம் விட்டு வேலைக்கு சென்று வருவதாக கூறினாள் அஞ்சலி. அவள் மன அமைதிக்கும் நிம்மதிக்கும் இதுதான் சரி என்று பெற்றவர்களும் சம்மதித்தனர்.
சங்கவிக்கு ஒரு வயது நெருங்கும் வேளையில்தான் அசோக்கின் பெற்றோர் வேறு ஒரு மார்க்கத்தோடு அவளை அணுகினர். அசோக்கின் தம்பி அருண் அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினர். அடுத்த இடி அவள் தலையில்.
“உனக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கு… இப்படி யோகம் எல்லாம் யாருக்கு வரும்..? இவ்வளவு பெரிய மனசு வேற யாருக்குதான் இருக்கும்..? வேற ஒருத்தரா இருந்திருந்தா உன் மேலயும் உன் குழந்தை மேலயும் எத்தனை பலி பாவங்களை போட்டிருப்பாங்க. ஆனா எங்க குடும்பத்து ஆளுங்க யாரும் அப்படிப்பட்டவங்க இல்ல. அவனே மனசார உன்னை கட்டிக்கிறதா சொல்லிட்டான். இதைவிட யோகம் உனக்கு என்ன வேணும்..? குழந்தையை வச்சுக்கிட்டு தனியா இருக்கவும் முடியாது… வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணினாலும் நிம்மதி இருக்காது… எங்க வாரிசு எங்க கூடவே இருக்கும். எந்த பிரிவினையும் இல்லாம மனத்தாங்கலும் இல்லாம நீ எங்க வீட்டு மருமகளாவே இருக்கலாம். வேணாம்னு சொல்லவோ மாட்டேன்னு சொல்லவோ உன் பக்கம் எந்தவிதமான நியாயமான காரணங்களும் இருக்க வாய்ப்பே இல்ல. அடுத்த மாசமே நல்ல முகூர்த்தநாள் வருது. அன்னைக்கு பண்ணிடலாம்னுதான் நாங்க பெரியவங்க எல்லாரும் பேசி இருக்கோம்…”
அவளது மாமியார் அவளிடம் அனுமதி கேட்கவில்லை… அறிவிப்பு மட்டுமே கொடுத்திருந்தார்… அவரது வார்த்தைகளில் அவளுக்கு வாழ்க்கை பிச்சை போடுவது பூடகமாக வெளிப்பட்டிருந்தது. இதைத் தாண்டிய வேறு விதி உனக்கு இல்லவே இல்லை என்ற ஏளனமான எண்ணமும் ஒளிந்திருப்பது தெரிந்தது.
‘கணவன் செத்துப் போயிட்டா எனக்கான உணர்வுகளும் தனிப்பட்ட எண்ணங்களும் விருப்பங்களும் இருக்கவே கூடாதா..? எனக்கு வாழ்க்கை பிச்சை போடுகிறார்களா..? என் புருஷனோட தம்பியை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா..?’
நினைக்கும்போதே உடல் கூசி அறிவெறுத்தது.
திருமணமாகி அந்த வீட்டில் மருமகளாக அவள் வளைய வந்து கொண்டிருந்த நாட்களில் அண்ணி என்று ஓயாது அவன் அழைத்த அந்த அழைப்புகள்தான் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அண்ணி என்பவள் அன்னைக்கு சமம் அல்லவா… அவளை எப்படி மனைவியாக எண்ண முடியும்..? அவனால் எப்படி முடிந்தது..? அவனால் முடியலாம். என்னால் முடியுமா..? அண்ணனோடு வாழ்ந்த நான் இனி தம்பியோடு வாழ வேண்டுமா..?’ நினைக்கும்போதே உடல் நடுங்கியது.
“இது ஒன்னும் அதிசயமான விஷயம் இல்ல… எத்தனையோ இடத்தில இந்த மாதிரி நடந்திருக்கு. அந்த மனுஷன் பெரிய மனசு பண்ணி உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு சொல்றார். இதைவிட நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கிறதா எங்களுக்கு தோணல. நாங்க யோசிக்காததை அவங்களே யோசிச்சு பண்றாங்க. நீ மறுக்குறதுக்கு என்ன காரணம் இருக்கு..? அப்படி பார்த்தாலும் அந்த ஆள்கூட நீ வாழ்ந்தது இருபதே நாள்தான். இதைவிட வாழ்ந்து பொழைச்சவங்க எல்லாம் இன்னொரு வாழ்க்கையை தேடிக்கிறது இல்லையா..? நீ சம்மதிக்கிறதுதான் இதுக்கு சரியான வழி…”
அவள் தந்தையும் ஆணித்தரமாக அடித்து கூறி இருந்தார்.
இருக்கலாம்… நிறைய இடங்களில் நடந்து இருக்கலாம்… நிறைய பெண்கள் தங்களை மனதை மாற்றி இதற்கு இசைந்து இருக்கலாம். ஆனால் இவளால் முடியவில்லை… கொழுந்தனை கணவனாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் சிந்தனையும் அவளுக்கு எழவே இல்லை… அதற்கு தீ வைத்து தன்னை எரித்துக் கொண்டால் என்ன என்றுதான் தோன்றியது.
உடன்பட மறுத்தாள். இருதரப்பிலும் மாறி மாறி வாக்குவாதங்கள் எழுந்தன… பெற்றவர்களும் கணவன் விட்டாரும் அவளை விடாமல் தொந்தரவு செய்யத் தொடங்கினர்.
முதலில் இரங்கிப் பேசிய அருண் ஒரு கட்டத்தில் மிரட்டவே தொடங்கினான்.
மிரட்டி உருட்டி அண்ணனின் மனைவியை தானே திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அவன் எண்ணம் உறுதியாக இருக்கிறது என்றால் அவன் அத்தனை நல்லவனா..? அல்லது அவள் மேல்தான் அத்தனை காதலா..?
படித்தவள் யோசித்தாள்… விஷயங்களை கிரகித்தாள்… உண்மைகள் ஒவ்வொன்றாக தெரியவந்தன.
(தொடரும்)
error: Content is protected !!