Skip to content
Post Views: 1,178
விழாக் காணுமே வானம் 16 (01)
வத்சலா ராகவன் – மது ஹனி
கடந்து போனது ஈர்ப்பெனும் மேகம்
“இவன் எப்படி இங்கே வந்தான்? ஒரு வேளை அரவிந்தன் அழைத்திருப்பானோ?” என இதயம் படபடக்க விக்ரமை பார்த்த மாத்திரத்தில் அரவிந்தனின் முகத்தில் தெரிந்த கசப்பான மாற்றத்தில் அவன் அழைக்கவில்லை என்பது தெளிவாக புரிந்து போனது.
Advertisement
சில நொடிகள் விக்ரமை பார்த்திருந்தவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை அவசரமாக எழுந்து ஓடி வந்து அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அரவிந்தனின் பார்வை முழுவதும் வியப்பு மேகங்கள்.
அடுத்த சில நிமடங்களில் சொல்லி வைத்தார் போல் அவர்களுக்கு அருகில் இருந்த மேஜையில் வந்து அமர்ந்துக் கொண்டான். விக்ரம். அவன் இவர்களை கவனித்ததாகவே தெரியவில்லை.
Advertisement
யாரையோ எதிர்ப்பார்க்கும் பாவத்துடனே அமர்திருந்தவனின் பார்வை கைப்பேசியின் மீதே மையம் கொண்டிருந்தது. அரவிந்தனோடு சற்றே ஒட்டி அமர்ந்துக் கொண்டாள் வைஷாலி. தோள்கள் உரசிக் கொண்டிருக்க அவனது கையை இழுத்து வைத்துக் கொண்டாள் தனதோடு.
Advertisement
மெல்லத் திரும்பி அவளது முகம் பார்த்தான் அரவிந்தன். அவள் படபடப்பை பார்த்தவனின் இதழோரம் ஒரு ரகசிய புன்னகை.
“அவனுக்கு எதை நிரூபிக்க வேண்டுமாம் அவளுக்கு?”
அதே நேரத்தில் விக்ரமின் மனம் அலைபாய்ந்து கிடந்தது. அவன் அர்ஜுனை எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
சற்று முன் விக்ரம்தான் அர்ஜுனை அழைத்திருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் அர்ஜுனுக்கு நன்றி சொல்லி அனுப்பிய குறுஞ்செய்திக்கு எந்த எதிர்வினையும் இல்லை அவனிடமிருந்து.
பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு இன்று காலையில் அழைத்திருந்தான் தம்பியை. மூன்று முறை அழைத்து முடித்த பிறகும் அழைப்பை ஏற்கவில்லை அர்ஜுன்.
அதன் பிறகு விக்ரம் தொகுத்தான் குறுஞ்செய்தியை.
“இன்று உன்னை நான் சந்திக்க விரும்புகிறேன். எத்தனை மணி நேரம் கடந்தாலும் நான் ஹோட்டலில்தான் இருப்பேன். உனக்காக காத்திருப்பேன்” என ஆங்கிலத்தில் இருந்தது அந்த செய்தி
தம்பியின் மனதிற்குள் ஆயிரம் குழப்பங்கள் மனதிற்குள் அலைபாய கடைசியில் அண்ணனை சேர்ந்தது அந்த கேள்வி.
“வொய்?”
“அண்ணன் தம்பியை பார்க்குறதுக்கு காரணம் இருக்கணுமா என்ன? நீ வரே அவ்வளவுதான். இந்த ஹோடேலின் பெயரை சொல்லி விட்டு முடிந்திருந்தான் விக்ரம்
எதற்கு அழைத்தான் என்று விக்ரமுக்கே புரியவில்லை. ஏதோ ஒரு தவிப்பு. அவன் இன்று இங்கு தன்னுடன் இருக்க வேண்டுமென ஏதோ ஒரு தவிப்பு. வருவானா இல்லையா என்பது தெரியாமல் இவன் கைபேசியை உருட்டிக் கொண்டிருக்க
அப்போது கண் முன்னே நிழலாட நிமிர்ந்தான் அண்ணன். அவனும் அறியாமல் முகம் மலர்ந்துதான் போனான் விக்ரம். அங்கே நின்றிருந்தான் அர்ஜுன். அண்ணன் அழைத்தவுடன் இன்று அவனுக்கும் ஏனோ மறுக்கத் தோன்றவில்லை.
“வாடா. வா வா. வர மாட்டியோன்னு நினைச்சேன்” படபடத்தான் விக்ரம். அவனது முகம் பார்த்தபடியே எதுவும் பேசாமல் அமர்ந்தான் அர்ஜுன்.
தான் அன்று அந்த அகேடமியில் நடந்து கொண்ட விதத்திற்கு தன்னை மொத்தமாக வெறுத்து விடுவான் அர்ஜுன் என்றே தோன்றிக் கொண்டிருந்தது விக்ரமுக்கு.
“என்கிட்டே எல்லாம் பேச மாட்டியா அர்ஜுன்?” உலகம் முழுவதும் தனது தொழிலால் ஆட்சி செய்யும் சக்கரவர்த்தியின் குரலில் அப்படி ஒரு ஏக்கமும் கெஞ்சலும்.
“அம்மா நீ என்கூட வந்திடு மா” அன்று ஸ்வாதி கெஞ்சிய கெஞ்சலுக்கும். இந்த கெஞ்சலுக்கும் பெரிய வேற்றுமை இருப்பதாக தோன்றவில்லை அர்ஜுனுக்கு. அவனது தலை தன்னாலே அமோதித்து அசைந்தது.
பூலோகமென்ன வான் லோகத்தையே வென்று முடித்து விட்ட ஆனந்தம் விக்ரமிடம்.
“இனி எப்பவும் பேசுவேதானே?” அவனிடம் உறுதி வாங்கிக் கொள்ளும் தவிப்பு அண்ணனிடத்தில்.
“ம்” புன்னகையுடன் தலையசைத்தான் தம்பி.
சிறு வயதில் இருந்தே அண்ணனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும், அனைத்தையும் அவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதும், அவ்வளவு ஏன் வெற்றியைக் கொண்டாடினால் அண்ணன் வருத்தப்படுவான் என்று அவன் வென்ற ஷீல்டுகளை எல்லாம் ஒளித்து வைக்க வேண்டிய சூழ்நிலையும் அப்போதெல்லாம் அர்ஜுனுக்கு குருவி தலையில் பனங்காய் வைத்து போல தான் இருந்தது.
அண்ணன் பாசத்தை அனுபவித்து ரசிக்கும் தருணங்கள் அவனுக்கு வாய்க்கவே இல்லையே இதுவரை.
“அண்ணன் தம்பி பந்தமென்பது இத்தனை அழகானதா என்ன? இத்தனை வருடத்தில் இதை நான் சரியாக உணர்ந்தது இல்லையோ?” இருவர் மனதிலும் அதே கேள்வி
மகிழ்ந்து போனவனாக வெகு இயல்பாக அர்ஜுன் கரத்தை பற்றிக் கொண்டு அவனை நலம் விசாரித்துக் கொண்டே அரவிந்த் வைஷாலியின் பக்கம் திரும்பினான் விக்ரம். மெல்ல ஏறி இறங்கின அவனது புருவங்கள். வைஷாலியின் உடல் மொழியில் சற்றே இறுக்கம்.
அர்ஜுனுமே அண்ணன் பார்வை போன திசையில் திரும்ப சற்றே அதிர்ந்தது அவன் உடல்.
அண்ணன் முகத்தில் இருந்த லேசான அதிர்ச்சி அவன் அவர்களை அழைத்திருக்கவில்லை என்பதை அர்ஜுனுக்கு புரியவைத்தது.
அதற்கு மேல் அங்கேயே அமர்ந்திருந்தால் அவன் விக்ரம் இல்லையே. எழுந்து வந்து இவர்கள் எதிரில் வந்து அமர்ந்தான் விக்ரம்.
ஒரு ஆழ் மூச்சு எடுத்துக் கொண்டு விக்ரமின் அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜுன். அடுத்து என்ன நிகழப் போகிறது என்று அவனால் யூகிக்க இயலவில்லை.
“ஹாய் மிஸ்டர் அரவிந்தன்” அவனது பார்வை அரவிந்தனில் இருந்து வைஷாலிக்கும் வைஷாலியில் இருந்து அரவிந்தனுக்கும் மாறி மாறி தாவியது.
“ஹாய் விக்ரம்” பதில் சொன்னது வைஷாலியாகவே இருந்தது. அவளது குரலில் நிறைய தெளிவு இருந்ததைப் போல் இருந்தது விக்ரமுக்கு. அர்ஜுனுக்கும் ஒரு புன்னகையை பரிசளித்தாள் பெண்.
“ஸோ..” என்றான் விக்ரம் அவளது கண்களுக்குள் பார்த்து “சேம் ஹோட்டல் சேம் டேபிள். சேம் பீபிள் ஆங்?.
“பட் வேறே வைஷாலி” என்றாள் சற்றே நிமிர்ந்து அமர்ந்து. அவளையே விழி அகற்றாது பார்த்திருந்தான் அரவிந்தன்.
“ஆஹான்” இருக்கையில் சாய்ந்துகொண்டு அவளை சுவாரஸ்யமாக பார்த்தான் விக்ரம்
“இந்த வைஷாலிக்கு அரவிந்தனை பிடிக்கும். அரவிந்தனை மட்டும்தான் பிடிக்கும்” குரல் முழுக்க காதலை நிரப்பிக் கொண்டு அவள் சொன்ன விதத்தில் விக்ரம் இமைக்கவில்லை என்றால் சில நொடிகள் சுவாசிக்கவே மறந்திருந்தான் அரவிந்தன்.
அவனே அறியாமல் அவனது உடல் முழுவதும் ஆனந்த கர்வம் பரவுவதை மெல்ல உணர்ந்தான் அரவிந்தன். நூறாயிரம் ஐ லவ் யூ க்கள் தந்துவிடாத ஒரு நிறைவை அவளது இந்தப் பார்வை அவனுக்கு தந்து கொண்டிருந்தது.
அவளோடு மொத்த வாழ்க்கையையும் ஆனந்தமாய் வாழ்ந்து விட்டதை போன்றதொரு உணர்வோடு அவளையே பார்த்திருந்தான் அரவிந்தன். அவர்கள் இடையே இருந்த அந்தத் திரை மெல்ல கரைந்து விலகிக் கொண்டிருந்தது.
கையிலிருந்த ஊன்றுகோலை சற்றே இறுக பற்றிக்கொண்டான் விக்ரம்..
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஸ்வாதியின் அகாடமியில் “இங்கே எல்லாருக்கும் விக்ரமை மட்டும்தான் பிடிக்கும்” என வைஷாலியை வைத்துக் கொண்டு அரவிந்தனின் மனதை லேசாக கீறிப் பார்த்தவன் இப்போது இமைக்க மறந்து அமர்ந்திருந்தான்.
சூழ்நிலையின் தீவிரம் கொஞ்சமாக புரிந்தது அர்ஜுனுக்கு. விக்ரமை மெல்ல அணைத்தது அர்ஜுனின் கரம். சடக்கென அவனது பக்கம் திரும்பினான் விக்ரம். அந்த அணைப்பில் அப்படி என்னதான் மாயம் இருக்கிறது புரியாவில்லை.
“வாழ்வின் உயர்விலும் தாழ்விலும் உனக்கென நான் இருக்கிறேன் என உறுதி அளித்ததோ அது.” விக்ரமின் உடல் மொழியில் அப்படி ஒரு அமைதி வந்திருந்தது.
இவளது திருமண விடியோவை பார்த்து தடுமாறி கீழே விழுந்த அதே விக்ரம் இவனல்ல. அன்றொரு நாள் இதே ஹோடேலில் இதே மேஜையில் அரவிந்தனின் சட்டையை பிடித்த விக்ரம் இவனல்ல.
தோல்விகளை ஏற்றுக் கொள்ளவே முடியாத இந்த சக்கரவர்த்தியின் இதழோரம் இப்போது அழகாய் ஒரு புன்னகை.
‘இவனது அன்பு இருந்தால் இந்த உலகத்தில் எந்த தோல்வியையும் வெகு தைரியமாக கடந்து வருவேன் என ஏன் தோன்றுகிறது எனக்கு? உடன் பிறந்தவனின் அன்புக்கு இத்தனை பலம் இருக்கிறதா என்ன?’
இதழோரம் தேங்கிய சின்ன புன்னகையுடன் எதிரே இருந்த அவர்கள் இருவரையும் விக்ரம் பார்த்திருக்க அவளது வார்த்தைகளில் அர்ஜுன் மனதிலுமே நிறையவே மகிழ்ச்சி வந்திருக்க
“குட்” என்று ஒரு பெண் குரல். அந்த குரலின் வசீகரமும் ஆளுமையும் அவர்கள் நால்வரையும் தரை இறக்கியது.
அவர்கள் அருகே நின்றிருந்தாள் அவள். அவளது இதழ்களில் அப்படி ஒரு அழகான கம்பீரமான புன்னகை. சாக்லேட் நிற ஷிபான் சேலையை மிகப் பாந்தமாக உடுத்தி இருந்தாள் அவள்.
முகம் பார்த்தே மனம் படிக்கும் கலையில் முனைவர் பட்டம் பெற்ற அவளது விழிகள் அவர்கள் நால்வர் முகத்தையும் அழகாய் படித்துக் கொண்டிருந்தது. கையில் இருந்த ஐ போனை இரண்டு கைகளுக்குள் உருட்டியபடியே வைஷாலியை பார்த்து இன்னுமாக புன்னகைத்தாள் அவள்.
“என்ன அப்படி பார்க்கறீங்க மிசஸ் வைஷாலி அரவிந்தன். ஐ ஆம் லாயர் ஆராதனா வாசுதேவன்”
“ஒ.. ப்ளீஸ்டு டு மீட் யூ” சடக்கென எழுந்து அவளுடன் கைக்குலுக்கினாள் வைஷாலி.
வைஷாலியின் கரத்தை ஆராதனா பற்றி குலுக்கிய விதமே அவளது தன்னம்பிக்கையை பறைசாற்றியது. அதே நேரத்தில் இன்னொரு எண்ணமும் வைஷாலியை ஆட்க்கொண்டது.
“இந்த விக்ரமின் முன்னால் இவன் விவாகரத்து அது எதுவென எதையும் உளறாமல் இருக்க வேண்டுமே இறைவா” வேண்டிக் கொண்டாள் தனக்குள்ளே.
“ஓ.. நீங்களும் இங்கேதான் இருக்கீங்களா மிஸ்டர் விக்ரம். கிரேட் மீட்டிங் யூ டூ” என அவனுடனும் கைக்குலுக்கினாள் ஆராதனா. “என்ன அப்படி பார்க்கறீங்க? நான் விக்ரமோட லீகல் அட்வைசர்” அவளை கேள்வியாக பார்த்தவர்களுக்கும் பதில் சொன்னாள் அவள்.
“என்னை ஒரு கன்சல்டேஷன்காக வர சொல்லி இருந்தார் மிஸ்டர் அரவிந்தன். ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லைன்னு தோணுது. இல்லையா மிஸ்டர் அரவிந்தன்” சொல்லிக் கொண்டே விக்ரமின் அருகில் இயல்பாக அமர்ந்த ஆராதனாவின் கூர் பார்வை கொக்கிப் போட்டது அரவிந்தனிடத்தில்.
வைஷாலி கொஞ்சம் தவிப்புடன் அவனது முகம் பார்க்க மெல்ல ஆம் என தலையசைத்தான் அவன். நிம்மதி பெருமூச்சு வைஷாலியிடம்.
“குட்” ஆராதனாவின் முகத்தில் நிறையவே சந்தோஷ ரேகைகள்.
“ஸோ.. இப்போ எல்லாரும் சந்தோஷமா சாப்பிடுவோமா? இட்ஸ் மை ட்ரீட் டுடே” மகிழ்ச்சியாக சொன்னான் அர்ஜுன்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து ஆராதனா விடைப்பெற்று சென்றிருக்க அரவிந்த் வைஷாலி இருவரும் காருக்கு அருகில் வந்த நேரத்தில், அவர்கள் அருகில் வந்து நின்றான் விக்ரம். அவனுடனே வந்தான் அர்ஜுன்.
சில நொடிகள் என்ன பேசுவது என்று சற்றே யோசித்தபடியே நின்றான் விக்ரம் . இருவருமே பேசாமல் விக்ரமின் முகம் பார்க்க
“இன்னைக்கு போல எப்பவும் சந்தோஷமா இருக்கணும் மிசஸ் வைஷாலி அரவிந்தன்” என்றான் அழகான புன்னகையுடன். அரவிந்தனே கொஞ்சம் திகைத்துப் போனான்.
நானா இப்படி எல்லாம் பேசுகிறேன். அவனுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது. ஒரு முறை அர்ஜுனின் முகம் பார்த்து புன்னகைத்துக் கொண்டான் அண்ணன்.
“ஸீ யூ” இருவருக்குமாக தலையசைத்துவிட்டு அகன்றான் அவன்.
வியப்பின் உச்சியில் உறைந்திருந்தான் அர்ஜுன். விதி எப்படி இவர்கள் நால்வரையும் அதே இடத்தில் ஒன்று சேர்த்து வைத்தது எனும் வியப்பு ஒரு புறம் என்றால் விக்ரமின் நடவடிக்கைகள் தந்த ஆச்சரியம் மறுபுறம்.
விக்ரமின் கரத்தை பற்றிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை அர்ஜூனால்
“யூ ஆர் கிரேட்” என்ற தம்பியை புன்னகையுடன் பார்த்தான் அண்ணன்.
“நான் இல்லடா யூ ஆர் கிரேட்”
“நான் என்னடா பண்ணேன். எனக்கு புரியலை”
“புரியலை இல்லையா? ரொம்ப நல்லது விட்டுடு” ஒரு சின்ன சிரிப்புடன் அவன் முதுகில் தட்டியவன் “தேங்க் யூ டா” என்றான்.
அர்ஜுனின் விழிகளில் வியப்பு நிரம்பிக் கிடக்க
“சரிடா ஸீ யூ” என அவனிடம் விடைப்பெற்று கொண்டு காரில் ஏறி அமர்ந்திருந்தான் விக்ரம். அவனது டிரைவர் காரை இயக்க அந்த கார் சென்ற திசையையே இமைக்காமல் பார்த்திருந்தான் அர்ஜுன்.
வீட்டுக்கு திரும்பும் வழியிலும் எதுவுமே பேசவில்லை அரவிந்தன்.
“அப்பா உங்களை பார்க்கணும்னு சொன்னார். உங்களாலே இப்போ வீட்டுக்கு கொஞ்சம் வர முடியுமா?” ஒரு கட்டத்தில் அவளே கேட்க அடுத்த சில நிமிடங்களில் கார் அவளது வீட்டுக்கு செல்லும் பாதையில் திரும்பியிருந்தது.
வீட்டுக்குள் நுழைந்த இருவரையும் மகிழ்ந்து போய் வரவேற்றனர் அனைவரும். அவளது தந்தை அணைத்துக் கொண்டார் மருமகனை.
“இந்தாங்கப்பா உங்க மாப்பிள்ளை. கூட்டிட்டு வந்திட்டேன்.. இதுக்கு மேலே எல்லாம் அவருக்கு வேப்பிலை அடிக்க முடியாது. நீங்க பேசிகோங்க. இனி அவரா முடிவெடுத்து என்னை எப்போ எங்கே கூட்டிட்டு போனாலும் நான் போகத் தயார்” சொல்லிவிட்டு தனது அறைக்குள் நுழைந்திருந்தாள் வைஷாலி.
சிறிது நேரம் அனைவருடனும் பேசிக் கொண்டு இருந்து விட்டு அவன் கிளம்பும் நேரத்தில் “உங்க பொண்ணோட இப்போவே சந்தோஷமா இருந்துக்கோங்க மாமா. நான் திரும்ப கூட்டிட்டு போயிட்டேனா அதுக்கு அப்புறம் இங்கே விடவே மாட்டேன்” சற்றே சத்தமாக ஒலித்த அரவிந்தனின் குரல் அவளை சேராமல் இல்லை.
error: Content is protected !!