Skip to content
Post Views: 2,064
அத்தியாயம் – 2
“அத்து…” என்று உற்சாகமாக கூவிக்கொண்டே அதிதியை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் வர்ஷினி.
அதிதியின் உயிர் தோழி, இருவருக்கும் இரண்டு மாத வித்தியாசம்தான், மற்றபடி ஒட்டிப்பிறந்த ரெட்டைப்பிறவிகள் என்றே சொல்லலாம். அதிதியின் வாழ்க்கை முழுவதும் கூடவே வருபவள் இனியும் வருவாள் என்று அதிதியால் உறுதியாகக்கூறமுடியும் என்றால் அது வர்ஷினியாக மட்டும்தான் இருக்கமுடியும், அவள் மட்டுமே அதிதியின் வாழ்வில் சாஸ்வதம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கொண்டிருந்தாள்.
இருவரும் பக்கத்து பக்கத்து வீடு, இருவர் அம்மாவும் அப்பாவும் நண்பர்கள், இவர்களும் ஒன்றாகவே வளர்ந்து, ஒரே பள்ளியில் படித்து, இப்போது ஒரே கல்லூரியில் சேரும் அளவு அவர்களின் நட்பு ஆழமானது.
ஒரே சூழ்நிலையில் வளர்ந்திருந்தாலும் இருவருமே குணத்திலும் சரி தோற்றத்திலும் சரி நேர் எதிர் துருவங்களே..
Advertisement
இவள் நீர் என்றால், அவள் நெருப்பு, ஒருத்தி தோனி போல் அமைதி என்றால் இன்னொருத்தி கோலி போல ஆர்ப்பாட்டம்.
வர்ஷினி கிளாஸ் டாப்பர், ஒருமுறை பார்த்துக்கடந்து செல்பவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகி,வாயாடி, கலகலப்புக்கு குறைவில்லாத சோசியல் பட்டர்ஃபிளை, லைஃப் ஆஃப் த பார்ட்டி, கலப்பட்டமில்லாத எக்ஸ்ட்ரோவெர்ட்.
அதிதியை பொருத்தவரை வர்ஷினியின் நிழலைப்போலவே இருப்பாள். எதிலும் அவள் வழிநடத்துவாள் இவள் பின்தொடர்வாள்.
Advertisement
வர்ஷினிக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை பார்த்தோ,பாராட்டுகளை பார்த்தோ ஒருநாளும் பொறாமை கொண்டதில்லை அதிதி. அதற்கு முக்கிய காரணம் அவள் பெற்றோர் என்றே கூறலாம்.
Advertisement
கண்ணுக்கு முன்பே சமூகம் வகுத்த முன்னுதாரணத்தின் ஆதர்சபிம்பமாக வர்ஷினி இருந்தாலும், எந்த விதத்திலும் இருவரையும் ஒப்பிட்டு பேசியதில்லை அதிதியின் பெற்றோர், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது, தனித்திறமையுடையது என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர்.
அதனாலேயே இவளுக்குள் இன்செக்கியூரிட்டி போல எதுவும் இருந்ததில்லை. உடன்பிறவா சகோதரிகளாகவே இருவரும் வளர்ந்தனர்.
இப்போது கூட அதிதி மேனேஜ்மெண்ட் சீட் என்பதால் சற்று முன்பே வந்துவிட்டாள், வர்ஷினியின் மதிப்பெண்ணிற்கு ஐஐடி என்ஐடி என்று வடமாநிலங்களில் சீட் கிடைத்தும், அங்கே தனியே போகப் பிடிக்காமல் அடம்பிடித்து அதிதி இருக்கும் காலேஜிலேயே மெரிட் சீட்டில் சேர்ந்திருந்தாள். ஒரு வார காலதாமதமாக இன்று வந்து சேர்ந்தாள்.
Advertisement
அதிதி எந்தவித ஃபில்டரும் இல்லாமல் அவள் அவளாக இருப்பது வர்ஷினியிடம் மட்டுமே..
“வர்ஷ் ஒருவழியா வந்து சேர்ந்தியே, நீ இல்லாம ரொம்ப போரடிச்சி போயிருந்தேன்டீ..”
“அதான் நான் வந்துட்டேன்ல.. இனிமே வைப்(vibe) பண்ணலாம்….”
“ரெண்டு பேரும் சேர்ந்து ஒழுங்கா படிக்கற வேலைய மட்டும் பாருங்க.. இங்க எதுனா ஏழரைய இழுக்காதீங்க..” என்றார் வர்ஷினியின் அம்மா.
“அம்மா.. என்னைக் கூட விடுங்க, இந்த அப்பாவி குழந்தைய பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே..” என்றாள் வர்ஷினி அதிதியின் தாடையை பிடித்து செல்லமாக ஆட்டியபடி..
“எனக்கு அத்துவ பத்தி தெரியும் அவளையும் சேர்த்து நீ கெடுத்துடாதன்னு தான் சொல்றேன். உன்னோட எல்லா சேட்டைக்கும் அவள கூட்டாளியா வச்சிக்குவ எனக்கு தெரியாதா?அவளும்தான் நீ என்னசொன்னாலும் கேட்டுப்பாளே..”
வர்ஷினி அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொள்வதை பார்த்து சிரித்தாள் அதிதி.
“சரி.. சரி.. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட்டா இருங்க, நல்லா சாப்பிடுங்க, ஒழுங்கா படிங்க..கவனமா இருங்க..” என்று அடுக்கடுக்கான அட்வைஸ்களை வாரி இரைத்துவிட்டு வர்ஷினியின் பெற்றோர் விடைபெற்ற பின், தோழிகள் இருவரும் வர்ஷினியின் பெட்டியை அவளது ரூமில் பிரித்து அடுக்கிவிட்டு, அதிதியின் பங்க் பெட்டில் அட்டியை போட்டனர்.
இருவருக்கும் வேறு வேறு அறைதான் கிடைத்திருந்தது, இருந்தாலும் சீக்கிரமே யாரிடமாவது கேட்டு ஒரே அறைக்கு மாறிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.
“சரி சொல்லு..வாட் ஈஸ் த டீ??ஃபோன்ல எதோ பிரின்ஸ் சார்மிங்(prince charming) பத்தி சொன்னியே..” என்றாள் வர்ஷினி வம்பிழுக்கும் தொனியில்.
வெட்கத்தில் முகம் சிவந்த போதும் வசீகரனை பற்றி அவளிடம் சொல்ல அதிதிக்கு தயக்கமாகவே இருந்தது.
பள்ளி நாட்களிலேயே ஒரு வயதிற்குமேல் ஆண் நண்பர்களின் பார்வை வர்ஷினியை ஆர்வமாக பார்க்கத்தொடங்கியபோது,, அவளின் ஆளுமையை கண்டு பயந்தோ என்னவோ பெரும்பாலும் அதிதியின் மூலமே வர்ஷினியை தொடர்புகொள்ள முயற்சிப்பர்,
இவளிடம் நட்பாக பழகுவது, இன்ஸ்டா ஐடி கேட்டு வாங்கி பின் வர்ஷினியை ஃபாலோ செய்வது, வர்ஷினியிடம் அதிதியை தூதுபோக கேட்பது என்று பலவிதமான அனுபவங்கள் அவளுக்கு உண்டு.
சில சமயம் இவளிடம் சாதாரணமாக பேசவருவது கூட வர்ஷினிக்காகத்தானோ என்றுகூட தோன்றும், ஆனால் அதெல்லாம் அவளை பெரிதாக பாதித்ததில்லை, ஆண்களின் கவனத்திலோ பேச்சிலோ அவளுக்கு பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை.
ஆனால் இப்போது அப்படியில்லை, வசீகரனை பற்றிய நினைவுகளைத் தனக்கு மட்டுமே என்று பிரத்யேகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவனைப் பற்றி பகிர்ந்து கொண்டால் அவன் மீதான உரிமையையும் பங்கு போட வேண்டியதாகிவிடுமோ என்று பயமாக இருந்தது.
என்னதான் அவன் அவளுக்கு சொந்தமானவன் இல்லை என்று அறிவுக்கு உறைத்தாலும் மனம் ஏற்காமல் முரண்டியது. நான்தான் அவனை முதலில் பார்த்தேன் எனக்குத்தான் அவன் மீது உரிமை என்று வினோதமான லாஜிக் பேசியது.
இருந்தாலும் உயிர் தோழியிடம் எதுவுமே சொல்லாமல் மறைக்கவும் முடியவில்லை.
“அதான் சொன்னேனே சீனியர்ஸ் ராகிங் பண்ணப்ப வந்து காப்பத்தினான்னு, அவன் பேரு வசீகரன்” என்றாள் முயன்று வரவழைத்த சாதாரண குரலில்.
யாரை ஏமாற்றமுடியும் அவளின் மனசாட்சிபோல் இருக்கும் நண்பியையா??
“என்ன இப்படி நான்ச்சலண்ட்டா(nonchalant) பேசினா நம்பிடுவோமா?ஃபோன்ல நீ பேசின டோனே வேறமாரி இருந்துச்சே..எதோ அழகன் மன்மதன் உலகத்திலேயே இப்படி ஒரு அதிசயபிறவிய பார்த்ததில்லன்ற ரேஞ்ச்க்கு சொன்னியே..”என்று விடாமல் துருவவும்
‘ஐய்யோ ஃபோன்ல எதோ ஒரு ஆர்வத்துல உளறி தொலைச்சிட்டோமே..’ என்று தன்னையே நொந்துகொண்டு…
“ஹே.. பார்க்க நல்லா இருந்தான்டி அந்த ஒருவாட்டிதான் பார்த்தேன் அதுக்கப்புறம் இன்னும் பார்க்கல..” என்று அண்டபுழுகு புழுகினாள்.
கண்ணை சுருக்கி சந்தேகமாக அவளை கூர்ந்து பார்த்துவிட்டு
போனால் போகிறது என்று விட்டுவிட்டு வேறு பேசினாள் வர்ஷினி.
அதிதி,வர்ஷினியிடம் கூறியது போல் வசீகரனை பார்க்காமல் எல்லாம் இல்லை.
வசீகரனை பார்த்த மறுநாளே வாரக்கடைசி சனிக்கிழமை வகுப்பு இல்லை என்று நன்றாக போர்த்திக்கொண்டு தூங்கிய ஹாஸ்ட்டல் மாணவிகளை எழுப்பிய வார்டன்..
“கமான் கேர்ள்ஸ்.. நம்ம காலேஜ் பாஸ்கெட் பால் டீம் வேற காலேஜ் டீமோட மேட்ச் ஆடுறாங்க, நாம நடத்துற டோர்னமெண்ட், நம்ம காலேஜ் டீம்க்கு சப்போர்ட் பண்ணவேணாமா?
ஆடியன்ஸ் யாரும் இல்லைன்னா வெளி டீம் நம்மல பத்தி என்ன நினைப்பாங்க.. நம்ம கிரவுண்டுலயே நமக்கு சப்போர்ட் இல்லைன்னு சொல்லமாட்டாங்களா? வாங்க எல்லாரும் வந்து நம்ம டீமுக்கு சத்தமா சியர் பண்ணுங்க..” என்று தூக்கக் கலக்கத்தில் இருந்தவர்களை இழுத்துக்கொண்டு போனார்.
பாஸ்கெட் பால் பற்றி ஏபீசீ கூட தெரியாமல் யார் பாயிண்டெடுத்தார்கள் என்று கூட தெரியாமல் பாதி பேர் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தனர். அதிதியும் வேண்டாவெறுப்பாகத்தான் இருந்தாள் அவனை காணும் வரை.
பாஸ்கெட்பால் கோர்ட்டில் அத்தனை ஆட்டக்காரர்கள் மத்தியில் நீல நிற காலேஜ் ஜெர்ஸியில் வியர்வை சொட்ட சொட்ட கண்களில் தீவிரத்துடன் அந்த ஆடுகளத்தில் தன் முழு ஆளுமையை காட்டிக்கொண்டு அத்தனை பேரையும் தன் வசியமாக்கிக் கொண்டிருந்தான் வசீகரன்.
எத்தனை பேர் இருந்தாலும் அவன் மட்டுமே அவள் கண்களுக்குத் தெரிந்தான். அவனின் ஒவ்வொரு அசைவும் துல்லியமாக ஸ்லோ மோஷனில் ஹெச் டி துல்லியதில் இவளுக்குத் தெரிந்தது.
வலைப்பந்திற்கே உரித்தாற்போல் எல்லோருமே ஓரளவு அதிகபடியான உயரம்தான் என்றாலும் வசீகரன் மட்டும் தனித்து தெரிந்தான், அவனின் வேகமான அசைவுகள், லாங் பாஸ்கள், எதிர்பாரா மூவ்கள், டங்க்குகள், என்று முழுஆட்டத்தையும் தன் கையசைவில் நடத்தும் சூத்திரதாரியாக இருந்தான்.
மந்திரத்திற்கு கட்டுபட்டதைப்போல் கண்ணிமைக்காமல் இவள் கண்கள் அவனையே பின் தொடர்ந்துகொண்டிருந்தது..
எதோ தோன்ற செல்போனை எடுத்து அவனை படமெடுக்க நினைத்து கேமராவை அவனை நோக்கித் திருப்பி சரியான கோணத்திற்காக காத்திருக்கையில்,
இடைவேளை சமயம் மூச்சிரைக்க ஒருகையை இடையில் வைத்து மறுகையால் நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்தபடி நின்றிருந்தான் வசீகரன், அக்கம் பக்கம் யாரும் இல்லாமல் அவன் மட்டும் ஃபிரேமில் தெரிய அவள் கிளிக் செய்யப்போக அப்போது அவனும் சரியாக அந்த திசையில் பார்க்க, கை பதற்றத்தில் தானாக கிளிக்கியது.
போட்டோவில் அவன் கண்கள் அப்படியே அவளை ஊடுருவுவதுபோல் அத்தனை தத்ரூபமாக பதிந்திருந்தது.
அன்றிலிருந்து புத்தகத்தில் ஒளித்துவைத்த மயிலிறகைப்போல அவ்வப்போது அந்த போட்டோவை திறந்து பார்த்துக்கொண்டாள். பார்க்கும் போதெல்லாம் ஏனோ அவனை நேரிலே பார்ப்பது போன்றே தோன்ற மெல்லிய சிலிர்ப்பும் நடுக்கமும் உள்ளோடியது.
அதிதி இதுவரை யாரைப்பார்த்தும் இப்படி மயங்கியதில்லை, இந்த ஏக்கம், தவிப்பு, சிலிர்ப்பு, வெட்கம் எல்லாமே அவளுக்கே புதிதாக இருந்தது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு காதல் அது இது என்று நினைத்துக்கொள்ளும் அளவிற்கு அவள் விவரமில்லாத முட்டாளும் இல்லை.
வசீகரன் இருக்கும் அழகிற்கும் அவன் ஆளுமைக்கும் அவன் நிச்சயம் தன்னை போன்ற ஒரு சராசரி பெண்ணை விரும்பமாட்டான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும், தான் எந்த வகையிலும் அவனுக்கு பொருத்தமில்லை என்பதையும் அவள் அறிவாள். அதனால் ஆசையை வளர்த்து கொண்டு பைத்தியமாக அலைய அவள் தயாரில்லை.
ஆனால் அதேசமயம் வெறுமனே ஒரு கிரஷ்ஆக சினிமா பிரபலங்களை ரசிப்பதை போல் அவன்மேல் அபிமானம் கொண்டிருப்பது ஒன்றும் தவறில்லை என்றும் நினைத்தாள்..
யாருக்கும் எந்தவித தொல்லையும் தராதவாறு தூரத்தில் இருந்து மனதில் மட்டும் அவனை ரசித்துக்கொள்ள ஆசை கொண்டாள்.
அடுத்த நாள் காலை தூக்கம் வராமல் சீக்கிரமே விழித்துக்கொண்டாள், ரூமில் போர் அடிக்கவே அப்படியே காற்றாட நடக்க வெளியே போனாள்.
அந்த அதிகாலை வேளையில் மிதமான குளிரில் சுற்றிலும் பசும் புல்வெளியையும் அடர்ந்த மரங்களையும் பார்த்துக்கொண்டே எங்கோ கூவும் ஒற்றை குயிலின் ஓசையையும் வண்டுகளின் ரீங்காரங்களையும் கேட்டபடி நடப்பது சுகமாக இருந்தது.
நடைபாதையின் இருபுறமும் அழகுற வைக்கப்பட்டிருந்த பல வண்ண மலர்களை பார்த்துக்கொண்டே நடந்து வரும்போது விளையாட்டு மைதானத்திலிருந்து வரும் பாதையில் இவளின் வலது புறமாக வசீகரன் மெல்ல ஜாகிங் செய்தவாறு வந்து கொண்டிருந்தான்.
திடுமென அவனைப்பார்த்ததில் பதறி, எங்கே ஒளிவது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள், இவள் விரைந்து செயல்படும் முன் அருகில் வந்துவிட்டிருந்தவன் இவளைப் பார்த்ததும் லேசாக புருவம் சுருக்கி யோசித்தவன் சட்டென்று நினைவுவந்தது போல் முகம் மலர்ந்து இவளைப் பார்த்து தன் வெண்ணிற பற்கள் தெரிய விரிந்த புன்னகையுடன்
“குட் மார்னிங்..” என்றுவிட்டு நிற்காமல் கடந்து போனான்.. அதுவரை இழுத்துப்பிடித்திருந்த மூச்சை “உஃப்..” என்று வாய்வழியாக வெளியேற்றினாள் அதிதி.
“இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..” என்று அதிசயித்துப்போனாள்.
தினசரி பயிற்சிக்காக வருவான் போல..,
“யாருசாமி இவன்?? பார்க்க ஹீரோ மாதிரி இருக்கான், பாஸ்கெட் பால் விளையாடுறான்,அதுல டீம் கேப்டன் வேற, கல்ச்சுரல் செகரெட்டரியாம்,படிப்பிலும் கெட்டியாம்..(இதெல்லாம் நேற்றைய பாஸ்கெட்பால் ஆட்டத்தின் போது அக்கம் பக்கம் இருந்தவர்கள் பேசியதை நைசாக ஒட்டுக்கேட்டு அதிதி அறிந்துகொண்டது)
இவ்வளவு இருந்தும் சிறு தலைக்கனமும் இல்லை, சிரிச்ச முகமா பழகறான்.. யாராவது இவன சொல்லி நிறுத்துங்களேன்.. என்னால முடியல.. இப்படி ஒருத்தன் எப்படி சாத்தியம்?? கடவுள் படைத்த யுனீக் பீஸ் இவன்..
இப்படி ஒருத்தன் கிடைக்கமாட்டான் என்று தெரிந்தே அவனை நேசிப்பது எத்தனை கொடுமை.. அப்படி ஒரு கஷ்டத்தில்தான் தானாக போய் சிக்கிக்கொண்டேன் நான்.” என்று உள்ளுக்குள் புலம்பித்தீர்த்தாள்.
அதன்பின் அலாரம் வைத்து காலையில் எழுந்து அவன் வரும் நேரம் சரியாக ஓடிச்சென்று அவன் முன் எதேர்சையாக எதிர்படுவது போல அதிதி போவதும் அவனும் அவளை கண்டுகொண்டு புன்னகைத்து காலை வணக்கம் கூறுவதும் அந்த ஒரு வாரத்தில் வாடிக்கையாகிவிட்டிருந்தது.
இந்த விவரங்கள் எதையும் அதிதி தன் தோழி வர்ஷினியிடம் கூறவில்லை. எப்பொழுதும் அவர்கள் கதையில் வர்ஷினிதான் மெயின் கதாபாத்திரம், இவள் என்றுமே ஸைடு கேரக்டர்தான்.
ஆனால் இந்த கதையில் அவள் அதை விரும்பவில்லை, முதன்முறையாக இந்தக்கதையில் தான் நாயகியாக இருக்க விரும்பினாள்.
தொடரும்
error: Content is protected !!