Skip to content
Post Views: 1,189
விழாக் காணுமே வானம் 16(02)
நாட்காட்டிக்கு என்ன அவசரமோ ஓடிச் சென்று ஜனவரி 12 ஐ தொட்டிருந்தது.
அன்று காலை பதினோரு மணிக்கு ப்ரெஸ் மீட். ஈ.ஸி.ஆர் நோக்கி இரண்டு கார்கள் சென்று கொண்டிருந்தன.
ஸ்வாதியின் குடும்பம் ஒன்றிலும் அரவிந்த வைஷாலி ஒன்றிலுமாக பயணித்துக் கொண்டிருந்தனர்.
Advertisement
இத்தனை நாட்களிலும் அரவிந்த வைஷாலி இருவருக்கும் இடையில் நடந்த வெகு சாதரண தினசரி பேச்சு வார்த்தைகள் தவிர வேறெதுவும் பரிமாறிக் கொள்ளவில்லை இருவரும். அவன் புன்னகைத்தது கூட கொஞ்சம் குறைவுதான்.
“இன்னும் எத்தனை நாள்தான் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வெச்சிட்டே சுத்துவீங்க?”
“ம்?” அவள் பக்கம் திரும்பி பார்த்தான் அரவிந்தன் “
Advertisement
“என் மோதிரத்தை குடுங்க முதலிலே”
Advertisement
“அதெல்லாம் முடியாது. எனக்கு எப்போ தோணுதோ அப்போதான் தருவேன்”
“எப்போ தோணும்”
“முதல்லே கல்யாணம் முடிஞ்சதும் உங்க அப்பா அர்ரேஞ் பண்ண ஃபர்ஸ்ட் நைட் நீ வேஸ்ட் பண்ணிட்டே. ஒண்ணு அவரை மறுபடியும் அர்ரேஞ் பண்ண சொல்லு இல்லன்னா நீ பண்ணு. அப்போதான் தருவேன்” அவன் சாலையை பார்த்துக் கொண்டே சொல்ல அவள் முகத்தில் அழகாய் பூத்தது வெட்கம்.
Advertisement
அவன் புன்னகையுடன் அதை ரசிக்க அவள் சட்டென ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள். பின்னர் திடீரென்று ஏதோ நினைவுக்கு வர அவசரமாக அவன் பக்கம் திரும்பினாள்.
“ஆமாம் யார் அந்த செல்லம்?”
“செல்லமா யார் அது?” அவன் புரியாமல் கேட்க
“அதான் அன்னைக்கு போன்லே யாரையோ செல்லம்னு கூப்பிட்டீங்களே?” அவள் கேட்க காரை ஓரமாக நிறுத்தி விட்டு விழுந்து விழுந்து சிரிக்கலானான் அவன்.
அவள் புரியாமல் பார்க்க
“அவன் ஒரு வீடு புரோக்கர். அவன் பேர் செல்லத்துரை. செல்லம்ன்னு கூப்பிடுவேன். இங்கே சென்னையிலே ஒரு வீடு பார்த்திட்டு இருந்தேன்.” அவன் இன்னுமாக சிரிக்க அவனை ஓங்கி ஓங்கி அடிக்கலானாள் வைஷாலி.
இங்கே இந்தக் காரில் மௌனமே வடிவமாகத்தான் அமர்ந்திருந்தாள் ஸ்வாதி. அந்த எரிமலை எப்போது எப்படி வெடிக்கும் என்றெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. இத்தனை நாட்களாக இவள் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பற்றி யார் சொன்ன அறிவுரையும் அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை.
அவள் மனதிற்குள் இந்த கடற்கரை வீட்டில் ஒரு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகள் வந்து போய்க்கொண்டிருந்தன.
அன்று பிறந்த நாளை குடும்பத்தினரோடு சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருந்த போது எதையோ பெரிதாக சாதித்து முடித்த ஆனந்தம் இருந்தது ஸ்வாதியிடம். அவளது முகம் ஒரு போதும் வாடி விடக் கூடாது என்பதில் மிகக் கவனம் கொண்டு அவளைக் கையாண்டுக் கொண்டிருந்தான் அவளது நண்பன்.
தனது என்று ஆகிவிட்ட பொருட்கள் துவங்கி தனக்கான உறவுகள் வரை அனைவரும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடும் குழந்தையான குமரி அவள் என்பதை நன்றாக அறிந்தவன்தானே அவன்.
அவளுக்காக, அவளது புன்னகைக்காக தனது சட்டையிலும் கேக்கை போட்டுக் கொண்டு சமாளித்தவன் கடைசி கட்டத்தில் தவற விட்டு விடுவோம் என அந்த நேரத்தில் நினைக்கவில்லை.
அன்று
“நேரமாச்சு, குளிர் வேறு கிளம்பலாம்” என்று பாட்டி சொல்லவும் அனைவரும் எழுந்தனர்.
“நீங்க எல்லோரும் முன்னாடி போங்க. நானும் அர்ஜூனும் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு வரோம். அர்ஜூன் கொண்டு வந்து விடுவான்” ஸ்வாதி சொல்லவும் ருக்மணியும் பார்த்தசாரதியும் விக்ரமோடு செல்லலாம் என அவனை அழைத்தனர்.
“நான் இங்கேயே இருக்கேன். நீங்களும் அப்பாவும் கிளம்புங்க” விக்ரம் சொல்ல ஸ்வாதி முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“நாங்க ட்ரஸ்லாம் சேன்ஜ் செய்துவிட்டு எங்க போட்டோஸ் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிட்டு வந்திருவோம். நீங்க உங்க வீட்டுக்கு போங்க” என அவனிடம் இயல்பாகவே சொன்னாள் ஸ்வாதி.
“சரளாவும் வேந்தனும் பார்த்துப்பாங்க பா” என்று ஸ்ரீதேவியும் கூறினாள்.
அனைவருமே விக்ரம் ஸ்வாதி அர்ஜூனுக்கு உதவ எண்ணியே அப்படி சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டனர்.
“நான் இன்னும் ரெண்டு மூணு நாளுக்கு இங்கேயே இந்த பீச் ஹவுசிலேயே இருக்கேன்ன்னு சொல்றேன்” அழுத்தம் திருத்தமாக கூறினான் விக்ரம். “அர்ஜுனும் என் கூட இருப்பான்”
யாரும் அதற்கு பதில் ஏதும் கூறவில்லை என்றாலும் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்வதைப் போல மணலில் நடக்கத் தொடங்கினர்.
அவனைப் பொறுத்தவரை அந்த கடற்கறை வீடு நிறையவே மன அமைதியை அள்ளிக் கொடுப்பதாகவே தோன்றியது. அவனது காதல் தோல்வி தந்த காயங்களில் இருந்து மனதை மாற்றும் மிகப் பெரிய ஆறுதல் அர்ஜுன். அதனாலேயே அவனுடன் சேர்ந்து இங்கே தங்க நினைத்திருந்தான் விக்ரம்.
அதைப் புரிந்து கொள்ளாமல் ஸ்வாதி பேசப் பேச அவனுக்குள்ளே சுறாவளி வீச ஆரம்பித்தது.
“நீங்க எதுக்கு எங்க பீச் ஹவுஸ்ல டூ டேஸ் இருக்கணும்” ஸ்வாதியின் குரல் கேள்வியாகத் தான் ஒலித்தது. “அதுவும் அர்ஜுனும் எதுக்கு உங்க கூட இருக்கணும்?”
அவள் அப்படிக் கேட்கவும் அனைவரும் இருந்த இடத்திலே நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நான் எதுக்கு இருக்கணும்ன்னு உன்கிட்ட ரீசன் சொல்லணுமா என்ன” விக்ரம் அலட்சியமாக பதில் சொன்னதை அங்கிருந்த அனைவரும் கவனிக்கவே செய்தனர்.
“இது எங்க பீச் ஹவுஸ். நீங்க இங்க ஸ்டே செய்யக் கூடாது. உங்க வீட்டுக்குப் போங்க” ஸ்வாதி குரலை உயர்த்திப் பிடிவாதமாக கூறவும் “ஸ்வாதி” என்று ஸ்ரீதேவி அதட்டினார்.
“எங்க பீச் ஹவுஸ்ன்னா யாரு அந்த எங்க” ஏளனம் தொனித்து விக்ரமின் குரலில்.
“எங்கன்னா என்னோட அர்ஜூனோடன்னு அர்த்தம். இது எங்களோட ஜாயின்ட் ப்ராபர்டி. நாங்க பர்ஸ்ட் விம்பிள்டன் வின் செய்த போது வாங்கினோம்” அவனுக்கு விவரங்கள் தெரியாதோ என்று ஸ்வாதி தெளிவாகக் கூறினாள்.
விக்ரம் இவற்றை எல்லாம் அறிந்தே தான் இருந்தான்.
“அர்ஜூனுக்கும் சொந்தம் தானே. அப்புறம் ஏன் என்னை கேள்வி கேட்டுட்டு இருக்க?” விக்ரம் அவ்வாறு சொல்லவும் அர்ஜூனும் திகைத்துப் போய் பார்த்தான்.
ரங்கநாதன் யோசனையுடன் பார்த்தசாரதியை பார்க்க அவரோ மௌனத்தை கெட்டியாக பற்றிக் கொண்டிருந்தார்.
“அவனுக்கும் சேர்த்து தான் கேட்கிறேன்” கர்வத்தோடு சொன்னாள் ஸ்வாதி.
“அதை அவன் கேட்கட்டும்” இப்போதும் ஒரு வித அலட்சிய பாவனையே விக்ரமின் குரலில் இருந்தது.
அர்ஜூன் தனது பெற்றோரைப் பார்க்க அவர்களோ எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தனர்.
“ஸ்வாதி, எதுக்கு ஆர்கியூ செய்துட்டு இருக்க” ஸ்ரீதேவி அவளை மீண்டும் அதட்டினார்.
ஸ்ரீதேவி ஸ்வாதியை அதட்டியதைப் போல விக்ரமை அவன் பெற்றோர் எதுவும் கேட்காமல் மௌனமாக இருந்தது அர்ஜூனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
“ம்மா, இது எங்க வீடு. யாரோ எல்லாம் இங்க வந்து ஸ்டே செய்வது எனக்குப் பிடிக்கலை” ஸ்வாதி வார்த்தைகளை எய்து கொண்டிருந்தாள்.
“நான் யாரோ இல்லை. விக்ரம். இந்த வீட்டுக்கு சரிபாதி சொந்தக்காரனோட அண்ணன். என்னை யாரோ எல்லாம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை” விக்ரம் கறாராக சொல்ல ஸ்வாதி வெகுண்டாள்.
“நான் ஒன்னும் யாரோ இல்லை. இந்த வீட்டுக்கு சொந்தக்காரி” சளைக்காமல் திருப்பி அடித்தாள்.
“ஹ்ம்ம் தப்பு பேபி. பாதிக்கு தான் சொந்தக்காரி” விக்ரம் அவளை பேபி என்றது அவளுக்குள் இன்னும் கனலை தூண்டிவிட்டது.
“நான் வேறே என் பிரண்ட் வேற இல்லை” அவளது நட்பின் மீது தான் அவளுக்கு எவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கை கொடுத்த தைரியத்தில் திமிராகவே சொன்னாள்.
“ஆஹான்” என்றவனின் உதடுகள் வளைந்தன.
“எங்கே உன் பிரண்ட சொல்லச் சொல்லு. இங்கிருந்து வெளியே போடான்னு சொல்லச் சொல்லு. ஜென்மத்துக்கும் இந்தப் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டேன்” சவால் விட்டான்.
அதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சற்று முன் வரை எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்தனர். நிமிட நேரத்தில் அனைத்தும் அடித்துக் கொண்டு போனதை போல ஆகிவிட்டதே.
விக்ரம் அவ்வாறு சவால் விடவும் மிகுந்த நம்பிக்கையோடு ஸ்வாதி அர்ஜுனின் முகம் பார்த்தாள்.
அர்ஜூன் கல்லாய் உறைந்து போயிருந்தான். மீண்டும் ஒரு முறை அவன் விழிகள் அவனின் பெற்றோரின் பக்கம் சென்று யாசித்தது.
விக்ரமை வெளியே போ என்று அவனால் எப்படிச் சொல்ல முடியும். அதே சமயம் ஸ்வாதியையும் அவனால் ஒன்றும் கூற முடியாது. அவளைப் பற்றி முழுவதுமாக அறிந்தவன் அவன்.
யார் பக்கம் சாய்ந்தாலும் இழப்பும் வலியும் வேதனையும் அவனுக்குத் தான்.
அங்கே அர்ஜுனின் மனநிலையை புரிந்து கொண்ட ஓரே நபர் ஸ்ரீதேவி தான். ஏழு வயதில் இருந்து பெற்றவரைப் போல வளர்த்தவர் அல்லவா.
“அவன் சொல்ல மாட்டான். ஏன்னா நான் அவன் அண்ணன். நீ ஜஸ்ட் பிரண்ட் தான்” என விக்ரம் கூற ஸ்ரீதேவிக்கும் அவன் மீது கோபம் வந்தது.
‘ஜஸ்ட் பிரண்ட்” என்று விட்டானே. அர்ஜூன் எனக்கு ஜஸ்ட் பிரண்டா’ ஸ்வாதி இப்போதும் அர்ஜூனின் முகத்தை தான் ஏக்கமாகப் பார்த்தாள்.
வார்த்தை என்று எதை அவன் உதிர்த்தாலும் இந்த சமயத்தில் அது பேரழிவை தந்து விடும் என்று தெரிந்தவன் மௌனமாகவே இருந்தான்.
ஸ்வாதியின் பக்கம் சாய்ந்தால் விக்ரம் எதை வேண்டுமானலும் செய்வான். அவன் தோல்வியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டான். அதே சமயம் விக்ரம் பக்கம் சாய்ந்தால் ஸ்வாதி நொறுங்கிப் போவாள். உடைந்து போவாள். அர்ஜூனின் மனம் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது.
ஆனாலும் அவனுக்கு ஒரே ஒரு நம்பிக்கை. அது ஸ்வாதி அவன் மீது கொண்டிருந்த ஆழமான அன்பின் மீதான நம்பிக்கை. அவள் எப்படியும் அவனை புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை அர்ஜூனின் மனதில் சிறு ஒளிக்கீற்றாய் முளைத்தது.
“குஷ்பூ” அர்ஜூனின் அழைப்பில் ஸ்வாதி மிகுந்த சந்தோஷம் கொண்டாள். அவன் அடுத்து சொல்லப் போகும் வார்த்தைகளுக்காக ஆர்வமாய் அவனையே பார்த்திருந்தாள்.
அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான் அர்ஜூன்.
“வா வீட்டுக்குப் போகலாம்” என்று அவளை அவன் இழுக்க அவள் ஆவேசமாக அவன் கையை தட்டி விட்டாள்.
விக்ரம் ஸ்வாதியை வெற்றிக் களிப்புடன் பார்க்க ஸ்வாதி எரிமலை ஆனாள்.
“முதல்ல அவரை இங்கிருந்து போகச் சொல்லு. அப்புறம் நாம வீட்டுக்கு போகலாம்”
“அவன் என் அண்ணன்டா.. நான் எப்படி அவனை?” அவளிடம் புரியவைத்து விடலாம் எனும் எண்ணத்தில் அவன் சொல்ல ஆரம்பிக்க அதோடு எல்லாம் முடிந்திருந்தது
அங்கேயே மொத்தமாக ஜெயித்திருந்தான் விக்ரம் அவனது பார்வையில் அப்படி ஒரு எகத்தாளம்.
“அப்படி சொல்லுடா என் தம்பி “ அவனது வார்த்தைகள் அவள் செவிகளை அடைய
“அப்போ நான் உனக்கு ஜஸ்ட் பிரண்ட் தான் இல்லையா”
“அப்படி இல்லடா குஷ்பூ, மத்தவங்க சர்டிபிகேட் கொடுக்குற மாதிரியா இருக்கு நம்ம பிரண்ட்ஷிப்?” அர்ஜூன் அவளிடம் எடுத்துச் சொல்ல முயற்சிக்க அது காதிலே வாங்காமல் யாரையும் சட்டை செய்யாமல் அங்கிருந்து ஓடியவள் அவளது ஹோண்டா சிடியை எடுத்துக் கொண்டு சீறிப் பாய்ந்தாள்.
அர்ஜூன் தலையை இரு கரத்தாலும் பிடித்துக் கொண்டு அப்படியே மணலில் அமர்ந்து விட்டான்.
“அர்ஜூன்” ருக்மணி அவனின் அருகில் வர அவரை கையால் தடுத்தான்.
“வேண்டாம். உங்களுக்கு அர்ஜூன் வேண்டாம். விக்ரமை மட்டும் கொண்டாடுங்க” அவன் பொங்கினான்.
“டேய் அவ பேசினது தப்புடா” அம்மா விக்ரமுக்கு பரிந்து கொண்டு வந்தார்.
தலை முதல் கால் வரை ஆத்திரம் பெருக்கெடுத்தது அர்ஜுனுக்கு
“அப்போ விக்ரம் பேசினது ரைட்டா?” பதிலே இல்லை பெற்றவர்களிடம்
“சொல்லுமா. அவ கிட்டே கூட சொல்ல வேண்டாம். ஒரே ஒரு தடவை உன் பெரிய பையன்கிட்டே சொல்லு அவன் செஞ்சது தப்புன்னு”
பெற்றவர்கள் இருவரும் பெரிய மகனின் முகத்தை பார்த்தனரே தவிர அவர்களால் சொல்ல முடியவில்லை. எப்போதும் அவனை எதுவும் சொல்லி அவர்களுக்கு பழக்கமே இல்லையே. அதுவும் ஸ்ரீதேவி ரங்கநாதன் முன்னால் மகனை அவர்களால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.
“ஸோ… எதுவும் சொல்ல மாட்டீங்க இல்லையா:?”
…………………………………………..
“அவனுக்கு விட்டுக் கொடுத்திடு அர்ஜூன். அவனுக்கு விட்டுக் கொடுத்திடு அர்ஜுன்ன்னு சொல்லி சொல்லி என்னை வளர்த்த்துட்டீங்க. விட்டுக் கொடுத்திடறேன். எல்லாத்தையும். இந்த வீடு, என் சொத்து, ஏன் டென்னிஸ கூட விட்டுக் கொடுத்திடறேன். என் குஷ்பூவையே விட்டுக் கொடுத்துட்டேன். இனி எனக்கு எதுவும் தேவையில்லை. யாரும் தேவையில்லை” கண்ணீர் கூட உறைந்து போயிருந்தது. அத்தனை வேதனையில் அவன் உழன்றான்.
“ஸ்வாதி அவன் கிட்ட அப்படி சொல்லியிருக்கக் கூடாது அர்ஜூன். அவன் உன் அண்ணன். உன் வீட்டில் அவனுக்கு உரிமை இருக்கிறது தானே” இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி நியாயத்தை எடுத்துரைத்தார்.
“என் இடத்தில் ஸ்வாதி இருந்திருந்தா அவ என்னை எப்போதும் விட்டுக் கொடுத்திருக்கவே மாட்டா அத்தை” அவனுக்கு வேறு எதுவும் இப்போதைக்கு மனதில் ஏறாது என்று உணர்ந்த ஸ்ரீதேவி அவனை வீட்டுக்குப் போகச் சொன்னார்.
“அவங்களை போகச் சொல்லுங்க. இல்லைனா அவன் கூட இங்கேயே இருக்கட்டும். நீங்க வீட்டுக்குப் போங்க. நான் எங்கேயாவது போறேன்” என்றவன் அங்கிருந்து வேகமாய் வெளியேறினான்.
தொடரும்
error: Content is protected !!