Skip to content
Post Views: 300
-
என் ஆயுள் ரேகை நீயடி…
chapter 1
என்னை விட்டு விலக நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னையறியாமல்
Advertisement
என்னைஅதிகமாக நெருங்கி கொண்டிருக்கிறாய்…
முகத்தில் மோதிய காற்று அவள் காதோரம் கதை சொல்லி செல்ல, இடது கை விரல்கள் அன்னிச்சையாக கற்றை குழலை பிடித்து காதுக்கு பின் ஒதுக்கி கொண்டது. எதிரே இருந்த கருப்பு சாலை மதிய நேர வெயில் பட்டு தகித்து கொண்டிருந்தது. இளம் பிங்க் நிற காட்டன் குர்தி, அதில் இருந்த சந்தன நிற பூக்களுக்கு இணையான நிறத்தில் லெக்கின்ஸ் அணிந்திருந்தாள், போனி டெய்ல் எனப்படும் குதிரை வால், நெற்றியில் இந்த காலத்து பெண்களுக்கே உரிய விதத்தில் கடுகு சைஸ் பொட்டு, காதில் ஒற்றை கல் தோடு, கையில் வாட்ச் என கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள் மேகவினி. மேகத்தின் பெயரை வைக்க வேண்டும் என்று அவள் தந்தை தேடி தேடி வைத்த பெயர். அதில் அவளுக்கு அத்தனை பெருமை உண்டு, தனித்துவமான அவள் பெயரை கொண்டவர்கள், அவளை தவிர யாரும் இல்லை என்று.
அவள் ஒரு சட்ட கல்லூரி மாணவி, இன்று கல்லூரியில் விழா என்பதால் இந்த கலர் உடை இல்லை என்றால் கருப்பு வெள்ளை சுடிதார் தான். அவள் அப்பா சுகுமாரன் ஒரு லாயர், தனது மகளையும் அதே போல லாயர் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார். அவளுக்கும் அப்பாவின் மீது இருந்த அலாதி அன்பினால் அதையே விருப்பமாக கொண்டு படிக்கிறாள். இது மூன்றாம் வருடம், படிப்பு முடிந்ததும் அப்பாவிடமே கொஞ்சம் நாள் பிராக்டிஸ் முடித்து கொண்டு தனியாக கேஸ் எடுத்து வாதாட வேண்டும், அப்படியே ஒரு லா ஃபர்ம் வைக்க வேண்டும் அது தான் அவளது கனவு.
Advertisement
கனவுகளுடனேயே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலை நெருங்குகையிலேயே வாசலில் நிற்கும் அவளது அப்பாவின் கருப்பு நிற ஸ்கார்பியோ மிஸ்ஸிங் ஆனதில், ‘இன்னுமா இந்த அப்பா வரலை’ என மனதிற்குள் சிணுங்கியபடியே உள்ளே சென்றாள்.
Advertisement
கிச்சனில் இருந்து அசைவ சமையல் வாசனை வரவும் அப்பா தான் வரலையே என்ன ஸ்பெஷல் சமையல் நடக்குது என எட்டி பார்த்தாள். வழக்கத்தை விட மகிழ்ச்சியான முகத்துடன் அம்மா அருணா சமையல் செய்து கொண்டிருந்தார்.
“என்னம்மா முகத்துல இவ்வளவு சந்தோஷம், அப்பா வேற ஊர்ல இல்லை” என அவள் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்தாள். புன்னகை மாறாமலே அவளை பார்த்த அருணா, “ஏண்டி நான் சந்தோஷமா இருக்க கூட உங்கப்பா அனுமதி வாங்கணுமா” என்று கேட்டாள். அந்த கேள்வியில் இருந்த வலியும் வேதனையும் மகள் அறிந்திருக்க நியாயமில்லை.
“அதே தான்மா நானும் சொல்றேன், ஏன் எப்பவும் முகத்தை சோகமாவே வச்சிகிட்டு இருக்கற, நல்லா கலகலப்பா இருக்க வேண்டியது தானே” என்றாள் மகள் சாதாரணமாக.
Advertisement
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடி” என கூறியவள் முகம் சட்டென வாடி போனது.
“அதென்ன புரியாது, எனக்கும் அதெல்லாம் புரிஞ்சுக்கிற வயசு ஆகிடுச்சு, சொல்லு புரிஞ்சுக்கிறேன்” என்றாள் சமையல் மேடை மீது ஏறி அமர்ந்தபடியே.
மகளை ஆதூரமாக பார்த்தவள், “அதெல்லாம் இருக்கட்டும் சொல்ல வேண்டியதை சொல்ல விடாம பண்ற பாரு, நம்ம வீட்டுக்கு முக்கியமான ஆள் வந்திருக்காங்க” என்றாள் கண்கள் மின்ன.
“விருந்தாளியா, நம்ம வீட்டுக்கு வர ஒரே விருந்தாளி உன் நாத்தனார் அந்த குண்டு கல்யாணி தான், அது வந்தா நீ இவ்வளவு சந்தோஷமா சமைக்க மாட்டியே, வேற யார் வந்திருக்கா” என கேட்டபடியே, அருணா பொரித்து வைத்திருந்த சிக்கன் 65 ல் இருந்து ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டாள்.
“விருந்தாளின்னு சொன்னேனா, அவங்க இல்லைடி” என கூறினாள் அருணா.
“வேற யாரும்மா” என கேட்டு கொண்டிருக்கும் போதே கிச்சன் வாசலில் வந்து நின்றான் அவன், நான் தான் என சொல்லாமல் சொல்லிக்கொண்டு. மேடை மேல் அமர்ந்து இருந்தாலும் சற்று நிமிர்ந்து பார்க்க வைத்தான். அவன் பார்த்த பார்வையில் ஊஞ்சல் ஆடிகொண்டிருந்த அவள் கால்கள் சட்டென இயக்கத்தை நிறுத்தி விட தொப்பென கீழே குதித்து இறங்கி கொண்டாள்.
அவனை கண்டதும் மின்னலாக ஒளிர்ந்தது அருணாவின் முகம், “வீரா வா சாப்பிடலாம் எல்லாம் ரெடி ஆகிடுச்சு” என கூறிக்கொண்டே உணவை எடுத்து கொண்டு வெளியே வந்தார்.
“என்ன அவசரம் அத்தை மெதுவா சாப்பிட்டுக்கலாமே” என்று அத்தையிடம் பேசிக்கொண்டே மகளை விழிகளால் அளந்து கொண்டிருந்தான் அந்த வீரா.
புதியவனை யார் என கூறாமல் செல்லும் அன்னையை பார்க்க கோபமாக வந்தது மேகவிக்கு, உணவை எடுத்து கொண்டு அம்மாவின் பின்னேயே சென்றாள் அவளும்.
அதற்குள் அந்த நெடியவன் ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டிருக்க, அன்னை அவனிடம் பேசியபடியே உணவை பரிமாறிகொண்டிருந்தார். இன்று அவள் கண்ணிற்கு மகள் எல்லாம் தெரிய போவதில்லை போல.
மெதுவாக நெருங்கி வந்த மேகவி அன்னையின் கையில் சுரண்டினாள். பேச்சு சுவாரசியத்தில் அன்னை அவளை கவனிக்கவில்லை என்றாலும், அந்த வீரா அதை கவனித்து விட்டான் என்பது அவனது பார்வை அவள் கைக்கு சென்று திரும்பியதுமே அறிந்து கொண்டாள். என்ன இது சின்ன பிள்ளை போல நடந்துகிட்டு இருக்கேன் என தன்னையே திட்டி கொண்டவள் அங்கிருந்து மெதுவாக கிச்சன் சென்று நின்று கொண்டாள்.
அந்த வீராவிடம் வளவளத்து பேசிக்கொண்டிருந்த அன்னை வித்யாசமாக தெரிந்தார் மேகவிக்கு. இதற்கு முன் அன்னை இப்படி படபடத்து பேசி அவள் பார்த்தது இல்லை. அதுவும் தந்தை இருக்கும்போது அன்னை ஏதேனும் வேலை தான் செய்து கொண்டிருப்பாள். குடும்பத்துடன் அமர்ந்து பேசுவதோ சிரிப்பதோ அருணாவிற்கு பழக்கமே இல்லை. ஆனால் அன்னைக்கு மாறாக தந்தை எப்போதும் அவர்களுடன் சகஜமாக பேசிக்கொள்வார். ஒரு நண்பனை போல அதற்கும் மேலே என்று கூட சொல்லலாம். அவளுக்கும் அவள் தம்பி சஞ்சய்க்கும் அப்பா தான் செல்லம். அவரிடம் அத்தனை சலுகைகளும் உண்டு. எது வேண்டும் என்றாலும், ஏதேனும் ஆலோசனை கேட்க வேண்டும் என்றாலும் கூட அப்பா தான் வேண்டும். அவரும் அவர்களுக்கு ஏற்ப சொல்லுவார். ஆனால் அருணா “எனக்கு தெரியாதே உங்க அப்பாகிட்ட கேட்டுகோங்க” என ஒதுங்கி கொள்வாள்.
முதலில் எல்லாம் அன்னையிடம் இதே பதில் திரும்ப திரும்ப வரவும் சலித்து போன அக்காவும் தம்பியும் சாப்பாட்டை தவிர வேறு எதுவுமே அன்னையிடம் கேட்பது இல்லை. அவளும் அவளுடைய உலகம் சமயலறை மட்டுமே என்பது போல இருந்து கொள்வாள். எங்கேனும் வெளியே சென்று வரலாம் என்றால் கூட வர மாட்டாள். இரண்டொரு முறை கூப்பிட்டு அவள் வராமல் போக, “அவளுக்கு அதெல்லாம் பழக்கம் இல்லைடா நாம போகலாம்” என தந்தையும் கூறிவிட, அம்மாவிடம் டாடா காட்டிவிட்டு சென்று விடுவார்கள். அக்கம் பக்கத்தில் கூட யாருடனும் பேச மாட்டாள். சமையல் வேலை முடிந்தால் ஏதேனும் வீட்டு வேலை செய்து கொண்டிருப்பாள். அவ்வளவு தான், அருணா இப்படி சகஜமாக பேசி இப்போது தான் பார்க்கிறாள். அதுவும் இந்த புதியவனிடம். அவளுக்கு தான் அவன் புதியவன் அம்மாவிற்கு அதிகம் தெரிந்தவன் போல, என நினைக்கும் போதே நம்மகிட்ட பேசாத அம்மா அவன்கிட்ட மட்டும் எப்படி பேசலாம் என்று அவன் மீது சிறு பொறாமை எட்டிபார்த்தது.
யோசனையோடு சிக்கன் சாப்பிட்ட கையை கழுவிகொண்டிருக்க, அவள் தோள் பற்றி நகர்த்தி விட்டு கையை கழுவினான் அவன். சிறு தீண்டல் தான் என்றாலும் ரிக்டர் அளவுகோலில் குறிப்பிட தகுந்த அளவு உடல் அதிர்வை உணர்ந்தாள் பெண். அவனை காண முடியாமல் அவள் தலை தாழ்ந்து நிற்க, அவனோ சாதாரணமாக கையை கழுவிகொண்டு சென்று இருந்தான்.
அவன் தான் போய்ட்டானே அம்மாவை போய் கேட்போம் என டைனிங் டேபிள் வர, அங்கே இன்னொரு அதிசயமாய் அம்மாவை அமரவைத்து அவன் பரிமாறிகொண்டிருந்தான். அம்மாவும் எதுவும் சொல்லாமல் உணவை உண்டு கொண்டிருந்தாள். வழக்கமாக எல்லாரும் சாப்பிட்ட பிறகு தான் அம்மா சாப்பிடுவாள். இருக்கும் நான்கு பேருக்கு ஒருவர் பரிமாறுவதா, நாமே போட்டு கொண்டு சாப்பிடலாமே என்று தோன்றும் ஆனால் அதை கேட்டால் “நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறிவிடுவாள் அன்னை.
சுட சுட தோசை, பூரி, வடை என சூடாக சாப்பிட வேண்டிய பொருட்களை கூட ஆறி போன பிறகு உண்ணும் அன்னையை பார்த்து என்ன தான் ரசனையோ என எண்ணிக்கொண்டிருக்கிறாள் மேகவி.
“போதும் வீரா, என்னால இவ்வளவு சாப்பிட முடியாது” என அருணா மறுக்க,
“அதெப்படி அத்தை வீட்டு வேலை அத்தனையும் ஒத்தையா செய்யறீங்க இவ்வளவு கூட சாப்பிடலைன்னா எப்படி” என கேட்டு கொண்டே இன்னும் சில பதார்த்தங்களை அருணாவின் தட்டில் வைத்தான்.
அவனுடன் ஏதோ ஊர் கதை பேசிக்கொண்டே மொத்த உணவையும் உண்டு முடித்திருந்தாள் அருணா. அம்மாவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி அவளுக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்கியது. அப்படி இவன் யாராக இருப்பான், அம்மாவை விழுந்து விழுந்து கவனிக்கிறான். அவளும் அவனிடம் ஆர்வமாக பேசிக்கொண்டிருக்கிறாளே என நினைத்தபடியே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டு டிவியை உயிர்பித்தாள்.
அருணா உண்டு முடிக்கவும் அந்த வீரா எழுந்து வந்து இவள் பக்கவாட்டு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு போனில் ஏதோ பார்த்து கொண்டிருந்தான். ‘இதென்ன விருந்துக்கு வந்த மாப்பிள்ளை மாதிரி இவ்வளவு தோரணை’ என எரிச்சல் வர கையில் இருந்த ரிமோட்டில் ஒன்றில் இருந்து நூறு வரைக்கும் சென்று மீண்டும் அதே போல நூறில் இருந்து ஒன்றுக்கு என மாற்றி மாற்றி பட்டனை அழுத்தி கொண்டிருந்தாள் அவள்.
உண்டு முடித்து கை கழுவி வந்த அருணா, கவி வந்து சாப்பிடு என அழைக்க, இருந்த எரிச்சல் எல்லாம் அம்மாவிடம் திரும்பியது, “என்னம்மா இப்போ தான் நான் உன் கண்ணுக்கு தெரியறேன் போல” என்றாள் கிண்டலாக.
அதில் அப்படியே அருணா முகம் நித்திய மல்லி பூ போல வாடி போனது, “உங்களுக்கு எல்லாம் இதுநாள் வரைக்கும் அம்மான்னு ஒருத்தி இந்த வீட்டுல இருக்கறதே தெரிஞ்சது இல்லையே” என்றான் போனை பார்த்து கொண்டே அவன் குத்தலாக.
இவன் என்ன என்னோட வீட்டுல இருந்துகிட்டு என்னை அதிகாரம் பண்றது என கோபம் எழ, “நான் எங்கம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றாள் அவள் அழுத்தமாக. இடையில் நீ வராதே என்பதை குறிக்கும் இடைசொருகல் அதில் இருந்தது.
“ஆனா நான் உன்கிட்ட தான் சொன்னேன்” என அவளை விட அழுத்தமாக கூறியவன் போனில் இருந்து பார்வையை விலக்கி அவளை பார்த்தான். “இத்தனை நாள் இந்த வீட்டுல அவங்க சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட யாரும் கேட்டது இல்லையே, உண்மையை சொன்னா உணக்கெல்லாம் கோபம் வேற வருது” என நக்கலாக கூறினான். எடுத்த எடுப்பிலேயே ஒருமை பேச்சும் ஏளனமும் செய்யும் அவனை பார்க்க பார்க்க கோபம் தான் வந்தது.
அவன் கூறிய விதமும் அம்மா அதற்கு பேசாமல் நின்ற நிலையும், ஏதோ அவள் அன்னையை அங்கே கொத்தடிமை போல வைத்திருப்பதாக அவன் குற்றம் சாட்டுவது போல இருந்தது. அதெப்படி அம்மா இந்த வீட்டில் மகாராணி அல்லவா, ஒரு கடைக்கு சென்றால் கூட அம்மாவிற்கு புடவையோ நகையோ வாங்காமல் அவர்கள் வந்தது இல்லை. வாரம் ஒரு புது சேலை கட்டும் அளவிற்கு புடவைகள் இருந்தாலும் கூட, அவள் அணிவது என்னவோ சாயம் போன சாதாரண புடவைகளை தான். தந்தை வாங்கி கொடுத்திருக்கும் நகைகள் எல்லாம் அப்படியே லாக்கரை அலங்கரித்து கொண்டு இருக்கின்றனவே தவிர எதுவும் அருணாவின் உடலில் அவள் பார்த்தது இல்லை. அவள் என்ன சின்ன குழந்தையா, இழுத்து பிடித்து போட்டு விடுவதற்கு. சரி அப்படியே இருந்தாலும் இவன் யார் இதெல்லாம் கேட்க என கோபம் வர, “அவங்க எங்கம்மா எங்களுக்கு தெரியும் அவங்களை பத்தி, இன்னைக்கு வந்த நீங்க சொல்லி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என கூறி அவன் மூக்குடைக்க முயன்றாள்.
ஆனால் அவனோ நிதானமாக அவளை பார்த்து, “அவங்க உன்னோட அம்மா அப்படிங்கறது வரைக்கும் தெரிஞ்சிருக்கே அதுக்கே உனக்கு அவார்ட் கொடுக்கனும்” என போலியாக பாராட்டினான்.
என்ன நக்கல் நையாண்டி, விட்டால் பேசிக்கொண்டே போகிறானே, “இங்கே பாருங்க மிஸ்டர்” என அவள் சீறிக்கொண்டு எழ, கையை உயர்த்தி அவளை அமருமாறு சைகை செய்தவன், “இந்த பொங்கற வேலை எல்லாம் உங்கப்பா கிட்ட காட்டு என்கிட்ட காட்டின” என உதட்டை கடித்து அவளை உறுத்து விழித்தான்.
இவளுக்கு கண்களில் கண்ணீர் மளுக்கென திரண்டு கொண்டது, அன்னை முன்னேயே ஒருவன் அவளை மிரட்டிக்கொண்டிருக்கிறான், ஆனால் அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறாளே என ஆதங்கம் எழ, சட்டென அங்கிருந்து தனது அறைக்கு வேகமாக சென்று கதவை அடைத்து கொண்டாள்.
மகள் ஓடி சென்று கதவை அடைத்து கொண்டதும், அருணா சங்கடமாக வீராவை பார்க்க, அவனோ கண்ணை மூடி திறந்து அவளுக்கு சமாதானம் கூறினான்.
அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தவளுக்கு ஆற்றாமையாக இருந்தது, அவள் தந்தை இல்லாத நேரத்தில் எவனோ ஒருவன் அவள் வீட்டிற்குள்ளேயே வந்து அவளை மிரட்டிக்கொண்டிருக்கிறான். பெற்றவளும் ஏதும் சொல்லாமல் அவனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறாள். இத்தனைக்கும் அவன் யார் என்ன என்று கூட இவளுக்கு தெரியாது. அதை தெரியப்படுத்தவும் அவள் அன்னை முயலவில்லை. அப்பா மட்டும் இங்கே இருந்திருந்தால் இப்படி யாரோ ஒருவன் அவர் மகளை கேள்வி கேட்க விட்டு விடுவாரா, அல்லது அவர் முன்னிலையில் இவன் தான் அவளை ஏதேனும் கூறிவிட முடியுமா, உண்டு இல்லை என்று ஆக்கி விட மாட்டார். அதுவும் அவர் ஒரு லாயர், ஏதேனும் வழக்கை போட்டு அவனை உள்ளே கூட தள்ள முடியும் அதெல்லாம் இந்த நெடியவனுக்கு தெரிந்திருந்தால் இப்படி எல்லாம் பேசியிருக்க மாட்டான். அப்பாவை கண்டதும் பயந்து பதுங்கி கொள்வான் என மனம் போன போக்கில் நினைத்து கொண்டிருந்தவளுக்கு, அப்படியா அவனை பார்த்தால் அப்படி பயந்து நடுங்குபவன் போலவா தெரிகிறது என மனசாட்சி கேட்க, அவன் அமர்ந்த தோரணையும், பேசிய கம்பீரமும், சாதாரண விஷயத்தை கூட அழுத்தமாக சொன்ன விதமும் மனகண்ணில் வந்து போனது.
அப்படியே ஏதோ மகாராசனை போன்ற தோரணையில் அமர்ந்து அவளை குற்றவாளி போல இமைகள் சுருக்கி கூர்ந்து பார்த்து பேசிய விதம் இப்போது நினைத்தாலும் நெஞ்சில் சிலிர்ப்பை உண்டாக்கியது.
இவன் யாராக இருக்கும், அம்மாவை அத்தை என்று அழைக்கும் அளவிற்கு அவளுக்கு நெருக்கமான உறவு என்று யாரும் இதுவரை வந்து போனது இல்லை. இவன் திடீரென்று எங்கிருந்து முளைத்தான் என எண்ணிக்கொண்டே படுத்து கிடந்தாள்.
கதவு தட்டப்பட, அதை தொடர்ந்து, “கவி வந்து சாப்பிடும்மா” என அன்னையின் குரல் கேட்கவும் எழுந்து குளியலறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.
கதவை திறந்து கொண்டு அருணா உள்ளே வருவதும் அதை தொடர்ந்து குளியலறை கதவை இரண்டு முறை தட்டுவதும் கூட காதில் தெளிவாக விழுந்தாலும் இவள் அமைதியாக இருந்து கொண்டாள். அது அந்த நெடியவன் அவளை பேசும்போது சும்மா இருந்ததற்கு அம்மாவிற்கு கொடுக்கும் தண்டனை என எண்ணிக்கொண்டாள்.
கதவை தட்டி பார்த்த அருணா, திரும்ப வெளியே செல்லுவது வரை கவனித்து கொண்டிருந்தவள், அவள் வெளியே சென்றதை உறுதி செய்து கொண்டவள் வெளியே வந்து அமர்ந்து கொண்டாள்.
சோகமாக திரும்ப செல்லும் அம்மாவின் முகம் கற்பனையில் வந்து போனாலும், அவளிடம் சென்று பேச தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அப்படியே படுத்து உறங்கி போனாள். இடையில் அருணா இருமுறை வந்து போனதும், ஒரு முறை கதவை திறந்து வீரா எட்டி பார்த்ததும் அவள் அறியாதது. மதியம் வெய்யிலில் வந்த களைப்பும், சாப்பிடாத சோர்வுமாக அடித்து போட்டது போல உறங்கி இருந்தாள் மேகவினி.
error: Content is protected !!