Skip to content
Post Views: 1,836
அத்தியாயம் 9
நான்கு மணிக்கெல்லாம் வந்துவிட்டான் ஈஸ்வர். ஹாலில் அவன் வரும் பொழுதே பார்த்துவிட்ட தேவி, “காபி கொண்டு வரட்டுங்களா தம்பி?” என்று கேட்க,
Advertisement
“வேண்டாம்க்கா!” என சொல்லி கையையும் ஆட்டிவிட்டு நேராய் அன்னை அறைக்குள் வந்தவன் தான்.
இப்பொழுதும் பல்லவியை தான் வந்ததும் முறைத்தான். “அப்டி பார்த்தா? பயந்துடுவேனா? அன்னைக்கு என் மேல தப்பிருந்துச்சு அமைதியா போனேன். சும்மா சும்மா அமைதியா போக முடியாது லதாம்மா. அதுவும் அந்த பொண்ணுக்காக எல்லாம் அமைதியா போகவே மாட்டேன். அவரையே மடில வச்சு கொஞ்ச சொல்லுங்க!”
Advertisement
Advertisement
எதற்கு அவன் முறைக்கிறான் என்றே தெரியாமல் நிச்சயம் லாவண்யா சென்று சொல்லி இருப்பாள் என நினைத்து பல்லவி லதாவின் காதைக் கடிக்க, மகன் வந்து நின்ற வேகத்திலும் பல்லவியை முறைத்ததிலும் லதாவுமே ஒரு நொடி பல்லவியை எதுவும் பேசிவிடுவானோ என பயந்து தான் போனார்.
“வா ஈஸ்வர்! சீக்கிரம் வந்துட்ட?” என்று லதா கேட்க,
Advertisement
“தலைவலிக்குது ம்மா!” என்று அவன் சொல்லவும்,
“காபி குடி டா. இரு தேவியை கூப்பிடுறேன்” என்று லதா தேவியை அழைக்க,
“சத்தமா பேசி காலை அசைச்சுட்டு இருக்க கூடாது. அதான் நான் நிக்குறேன்ல?” என அன்னையை மிரட்டும் பல்லவியை நிமிர்ந்து ஈஸ்வர் பார்க்க,
“நான் போய் வாங்கிட்டு வர்றேன்!” என்றாள் நகர்ந்தபடி.
“நான் வேண்டாம்னு சொல்லிட்டு தான் வந்தேன் பல்லவி!” என்றவன்,
“என்ன பிரச்சனை? லாவண்யா என்ன சொன்னா?” என நேராய் கேட்க, லதா பதில் சொல்ல வரவுமே,
“நீங்க சொல்லுங்க முதல்ல. உங்ககிட்ட என்ன சொன்னாங்க?” என்றாள் பல்லவி எதிர்கேள்வியாய்.
தனக்கு தான் அவள் ஆகவில்லையோ என்று நினைத்தவனுக்கு இப்பொழுது கண்கள் இருட்டி வர, தலையை உலுக்கிக் கொண்டான்.
“நீ கொஞ்சம் சும்மா இரு பல்லவி!” என்ற லதா,
“பெருசா ஒண்ணுமில்ல டா. ரெண்டு பேருமே தான் பேசினாங்க. யார் மேலயும் தப்பு சொல்ல முடியாது!” லதா பொதுவாய் சொல்ல,
“உங்க மருமகளை விட்டு குடுக்க மாட்டிங்களே! இருந்துட்டு போங்க!” என லதாவிடம் பொங்கிவிட்டு,
“நான் எதுவும் பண்ணல!” என்றவளை இவன் மாறாத பார்வை பார்க்க,
“அவங்க தான் ஆரம்பிச்சாங்க!” என்று நடந்ததை சொல்லி,
“இன்ஃபாக்ட் உனக்கு வேலை பார்க்கவா நான் வந்தேன்.. முடியாது போவியான்னு டீசென்ட்டா சொல்லிருக்கலாம். ஆனா அப்படி கூட சொல்லல. மேனர்ஸ் கத்து குடுக்கும் முன்ன ஈஸ்வர்கிட்ட பேசிக்குறேன்னு வந்துட்டாங்க. இப்ப சொல்லுங்க. உங்ககிட்ட பேச என்ன இருக்கு? பதிலுக்கு பதில் சொல்றது தப்பா?” என்றவளை பெருமூச்சோடு கண்டவன் நெற்றியை அழுந்த தேய்த்துக் கொண்டான்.
“என்ன ஈஸ்வர். கோபப்பட்டுட்டுட்டாளா? அப்பாகிட்ட எதுவும் சொல்லிட்டா பிரச்சனையாகிடுமே டா. பல்லவி மேலயும் தப்பு எதுவும் இல்லை ஈஸ்வர்!” என்று பல்லவி கைகளை இறுகப் பற்றினார் லதா.
மகன் என்ன நினைக்கிறான் என்றே தெரியவில்லை அவருக்கு. லாவண்யாவிற்காக தான் பேச வந்திருக்கிறான் என்றொரு எண்ணம். இப்படி இனிமேல் சிக்கல் வருமளவுக்கு விடக் கூடாது எனுமொரு எண்ணம் என அவர் பல்லவியை ஆதரவாய் கைகள் பற்ற,
“ச்சோ! ம்மா! ஆபீஸ்க்கு வந்து ஆடு ஆடுன்னு ஆடுறா. நல்லவேளை என் ரூம்ல இருந்தேன். வெளில யாராவது பார்த்திருந்தா என்ன ஆகிருக்கும்? இரிடேட்டா இருக்கு!” கீர்த்திஸ்வரன் லதாவிடம் சொல்ல, நல்லபிள்ளையாய் அருகே கைகட்டி நின்றாள் பல்லவி.
“இதையே தான் அவளும் சொன்னா. காபி வேணும்னா தேவி அக்காகிட்ட கேட்க வேண்டியது தானே. உனக்கு தான் அவங்களை நல்லா தெரியுமேன்னு சொன்னேன். இது ஒரு விஷயமான்னு கேட்கவும் நிறுத்தாம பேசுறா. உன் வீட்டுல என்னை மதிக்கல அது இதுன்னு.. என்னம்மா இதெல்லாம்?” என்றவன் கேள்வியில் லதா பல்லவியைப் பார்க்க, இதழ் மூடி கைகளால் வாயை மூடி என சிரித்தவள் செயலில் மகனைக் கண்டுவிட்டு சிரிக்காதே என தலையசைத்தார் லதா அவளிடம் வேகமாய்.
“என்னை ரூல் பண்ணிட்டே இருக்குற மாதிரி… என்னை பேச விடாம.. ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு எல்லாம் இப்படி ரியாக்ட் பண்ணினா நான் எப்படி? இதை நான் என்னனு எடுத்துக்கணும்?” ஈஸ்வர் நிமிர்ந்து அன்னையிடம் கேட்க, அவர் யோசனையாய் மகனைப் பார்த்தார்.
அடுத்தவர்களின் முன் பெரிதாய் எதுவும் பேசிக் கொள்ளாதவன் பல்லவி அங்கே இருப்பதை கூட மறந்து தன் குடும்ப பிரச்சனையிலும் தன் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையைப் பற்றி மகன் பகிர்ந்து கொண்டிருக்கும் போதே அவனின் மனநிலையை உணர முடிந்தது லதாவிற்கு.
“இப்ப லாவண்யா எங்க ஈஸ்வர்? உன்னை தேடி ஆபீஸ் எப்படி வந்தா?” லதா கேட்க,
“அப்பாகிட்ட நான் எங்க இருப்பேன்னு கேட்டு வந்திருக்கா. வந்ததும் பிரச்சனை தான் பண்ணினா. வேற எதுவுமே நான் சொல்லல. இதுக்கு கூட எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டியான்னா? இதெல்லாம் ஒரு விஷயமான்னு கேட்கவும் அவ்ளோ குதிச்சா. அப்புறம் அவளே ஷாப்பிங் போக கேட்டா. வேலை இருக்குன்னு சொல்லவும் எதுவுமே சொல்லாம போய்ட்டா!” என்றான் அங்கே நடந்ததை அப்படியே ஒப்புவிப்பதாய்.
“நீயும் கொஞ்சம் ஓவரா தான் பன்றியோ?” என லதாவே கேட்க,
“ம்மா!” என முறைத்தான் அன்னையை.
“அவ தான் கோபமா பேசுறான்னா நீ சமாதானம் பண்ண வேண்டாமா ஈஸ்வர்?”
“வரலையே! கோபப்படுற விஷயமே இதில்லன்றேன்!” என்று ஈஸ்வர் சொல்லவும் களுக்கென்று சிரிக்கும் சத்தம் பல்லவியிடம்.
ஈஸ்வர் சட்டென திரும்பிப் பார்த்தவன் முறைக்க, “பல்லவி!” என முறைத்தார் லதாவும்.
“நான் கிளம்புறேன் லதாம்மா! நீங்களாச்சு உங்க பையனாச்சு” என்று உடனே தன் பையை அவள் எடுத்துக் கொள்ள,
“ஈஸ்வர்! இவளை எதாவது ஒரு காலேஜ்ல சேர்த்து விட்டுடேன்!” என்றார் அப்போது தான் நியாபகம் வந்தவராய் லதா.
“லதாம்மா கரஸ்!” என்று பல்லவியும் நியாபகப்படுத்த,
“ஆமா! கரஸ் தான் வேணுமாம். அப்போ தான் பார்ட் டைம் வேலைக்கு போய் சின்ன அம்பானி ஆக முடியுமாம்!” என்று அவள் சொல்லியதை அப்படியே சொல்ல,
“ஹ்ம்!” என்றான் எதுவும் சொல்லாமல்.
“கல்யாணம் பண்ணிக்கற பொண்ணை பத்தி வாய் ஓயாம பேசினார். என்னை காலேஜ்ல சேர்த்துவிட சொன்னதும் ஆள் சைலன்ட் ஆகிட்டார். பாருங்க உங்க பையனை” லதா காதுக்குள் சென்று இவள் பேச,
“உனக்கும் கொஞ்சம் வாய் ஜாஸ்தி தான்” என அவள் காதை கிள்ளியவர்,
“அவன் சொல்றவன் இல்ல செய்யுறவன்!” என்றார்.
“ஹ்ம்ம் பார்த்துட்டு தானே இருக்கேன்!” என்றவள் சொல்லில்,
“உன்னை!” என்றவர் அடிக்க ஏதாவது கிடைக்குமா என தேட,
“பை லதாம்மா. பை ஈஸ்வர் சார்!” என்று ஓடி இருந்தாள் பல்லவி.
“சேட்டை தான்!” என்றவர் முகம் சிரிப்பில் இருந்தது.
“எல்லாம் ஓகே தானா ஈஸ்வர்?” லதா மகன் சிந்தனையான முகம் கண்டு கேட்க,
“எதை கேட்குறீங்க ம்மா?” என்றான்.
“லாவண்யா விஷயம் தான்”
“ஹ்ம்!” என்றவன் சில நொடிகளுக்கு பின்,
“எனக்கு எதுவுமே தோணல ம்மா. இப்படி தான் இருக்குமான்னு இருக்கு. அதை எப்படி உங்ககிட்ட சொல்லன்னும் இருக்கு!” என்றவன் மெல்லிய புன்னகையையும் கொடுத்தான் சங்கோஜத்தோடு.
“லாவண்யா உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என அதே கேள்வியை அவன் அன்னையிடம் கேட்க,
“உன் மனைவியா வர்ற பொண்ணு எதுவோ அது எனக்கு பிடிச்ச பொண்ணு தான்” என்றார் லதா.
“ஹ்ம் இப்படி சொல்லிடுங்க. அப்புறம் நான் யாரை இப்படி மாட்டி விடுறது? மாமியார் மருமகள் சண்டைனு ஜஸ்ட் கேள்வி தான் பட்டிருக்கேன். இன்னைக்கு லாவண்யா பேசினதோட சேர்த்து வச்சுப் பார்த்தா கல்யாணம்னு நினைக்கவே பயமா இருக்கு!” என்றவன் சொல்லில் நன்றாய் சிரித்தார் லதா.
“அப்ப என்னையும் ஏதோ சொல்லிருக்கா தானே?” லதா கேட்க,
“ஆமா! நீங்களும் அந்த பொண்ணு பல்லவியை எதுவும் சொல்லலைனு தான் கத்தினா. அதுவும் பல்லவியை அவ வேற மாதிரி பாக்குறா. பல்லவி ஹெல்ப்க்கு தான் வர்றான்னு சொல்லியும் கேட்க மாட்டுறா” என்று ஈஸ்வர் புலம்ப, லதாவிற்குமே பல்லவி போல புன்னகை வந்துவிட்டது.
“ம்மா!” என மகன் முறைத்ததில்,
“நீ இன்னும் டிசைட் பண்ணல ஈஸ்வர். அது மட்டும் எனக்கு நல்லாவே புரியுது. பிடிச்ச பொண்ணு தப்பே பண்ணினாலும் எப்படி சொல்லனு ஒரு தயக்கம் வரும். உனக்கு அப்படி இருக்கா?” என்று லதா கேட்க,
“கடுப்பாக்குதுன்றேன் ம்மா. சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேன் நான் சொல்றது தான் சரினு சொல்லும் போது இருக்குற பொறுமை எல்லாம் பறந்து போகுது!” என்றான் ஈஸ்வர்.
“கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. என்ன காரணம் சொல்லி அந்த பொண்ணை பார்க்கலாம்னு காரணம் தேடும் மனசு. அப்படி எதாவது?“ என்று கேட்ட லதாவிற்கே பதில் தெரியும் காலை அவள் வரும் முன் இவள் அலறி அடித்து ஓடியது. அதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
“ம்மா!” என்றான் பாவமாய்.
“பேசாம பிரண்ட்ஸ் யார்கிட்டயாவது கேளேன். எதாவது அவங்களுக்கு தெரிஞ்சதை சொல்வாங்க இல்ல?” லதா சொல்ல,
“அதனால தானே உங்ககிட்ட கேட்குறேன்!” என்ற ஒரே பதிலில் அமைதியாக்கிவிட்டான் ஈஸ்வர்.
சில நிமிடங்கள் இருவரும் அமைதியாய் இருக்க, “சண்டைக்காரனா சாட்சிக்காரனா? பேசாம லாவண்யாகிட்டயே தெளிவா பேசிடேன்?”
“அதுக்கு நான் பேசாமயே இருக்கலாம். ம்மா நான் பேசினாலும் அவ கேட்க மாட்றா ம்மா!” என்றவன் குரல் இப்பொழுது சிணுங்கலாய் வந்தது.
“அட போ டா. நீ எல்லாம் என்னனு கல்யாணம் பண்ணி…. “ என்று சொல்லும் போதே கீர்த்திஸ்வரன் பார்த்த பார்வையில் அமைதியாகிவிட்டார் லதா.
“நீ ஒண்ணு பண்ணு. உன் அப்பா எதாவது எக்குதப்பா முடிவு பண்றதுக்குள்ள நீ முடிவு பண்ணு. உனக்கு என்ன வேணும். எது பிடிக்கும். உன் லைஃப்ஸ்டைல்க்கு எது எல்லாம் சரியா வரும். இதெல்லாம் யோசி. சும்மா பேருக்கு எல்லாம் தலையை ஆட்டிகிட்டு இருக்காத இப்பவே சகிக்கல!” என்று முடித்தார் லதா.
ஈஸ்வர்க்கும் அது தான் சரி என்றுபட்டது. ஏற்கனவே மனம் ஏற்க தயாராகவில்லை. இதில் இப்படி ஆயிரத்தெட்டு குழப்பங்கள் என அவனுமே ஒரு முடிவை தேடினான்.
“அப்படியே அந்த பல்லவி படிப்பு விஷயத்தையும் கொஞ்சம் கவனி டா. இல்லைனா நாளைக்கும் வந்து என்னை தான் மிரட்டுவா!” என்று கூறி அனுப்பி வைத்தார் லதா.
error: Content is protected !!