Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே – 2

”ஏன் என்னாவாம் அவளுக்கு, பெரிய அழகின்னு நினைப்பாமா, அவள் பின்னாடி ஆளுங்க அலைஞ்சா திமிரா பேசுவாளா, எப்படியிருந்தாலும் எவனோ ஒருத்தனை கல்யாணம் பண்ணி வாழனும்தானே” என்றாள் கமலி அதற்கு கவினோ

”ஆமாம் அவள் பின்னாடி ஸ்டூடன்ட் மட்டுமில்லை, வாத்தியார்கள் கூட கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டு வீடு தேடிப் போய் பொண்ணு வேறு கேட்டிருக்காங்க ஆனா, அவள்தான் வாத்தியார்ங்கறதால டீசன்டா பேசி அனுப்பிட்டா, யாரையும் அவள் தேர்ந்தெடுக்கலை, படிப்பு முடியறவரைக்கும் கூட அவள் எவனையும் ஏறிட்டு கூட பார்க்கலை” என்றான் வருத்தமாக

”சரி மத்தவங்களை விடு உன்னோட காதல் கதையைச் சொல்லு“ என ஆர்வமாக கேட்ட கமலியிடம்



Advertisement

”உன்னோடது போலதான் என்னோட காதல் கதையும், குணா எப்படி உன்னை அவமானப்படுத்தினானோ அதே போல இவளும் என்னை அவமானப்படுத்தினா, இவளை இம்ப்ரஸ் பண்ணனும்னு 3 வருஷமா படாதபாடு பட்டேன், என்ன செய்தாலும் அவள் என்னை ஏறிட்டு கூட பார்க்கலை, என்னை மட்டும் இல்லை, எவனையும் அவள் பார்க்கலை, அந்தக் குணம்தான் எனக்கு பிடிச்சிருந்தது, அதுக்காகவே அவளை கல்யாணம் செய்துக்கனும்னு  துடிச்சேன், 3 வருஷமும் அவளை தவிர நானும் வேற எந்த பொண்ணையும் பார்க்கலை தெரியுமா, தானா தேடி வந்த லவ் ப்ரபோசலை கூட நான் அவளுக்காக ரிஜக்ட் பண்ணிட்டு அவளுக்காகவே காத்திருந்தேன், மூணாவது வருஷம் ஆண்டுவிழா அப்ப துணிஞ்சி அவள்கிட்ட என் காதலை சொன்னேன், அவ்ளோதான் மத்தவங்களை எப்படி திட்டுவாளோ அதே போல திட்டினா, அது எனக்கு தெரியும்ங்கறதால நானும் அசால்ட்டா நின்னேன், அவளும் திட்டி முடிச்சி என்னை ஏற இறங்கப் பார்த்து ஒரு கேள்வி கேட்டா பாரு அதுல நான் செத்துட்டேன்” என்றான் கவின் மனம் வெறுத்தபடியே

”அப்படி என்ன கேட்டா“ என கமலி ஆர்வத்துடன் கேட்க அதற்கு கவினோ

”நீ என்னை விரும்பறியா இல்லை என் உடம்பையான்னு கேட்டா” என்றான் அதைக்கேட்டதும் கமலியின் முகம் சுருங்கிவிட்டது

Advertisement

”சே இப்படியுமா கேட்பா“ என கமலி வெறுப்பாக பேசிவைக்க அதற்கு கவினோ

Advertisement

”கேட்டாளே அந்த கேள்வியில நான் துடிச்சிப் போயிட்டேன், இதுபோல அவள் யார்கிட்டயும் கேட்டிருக்க மாட்டா, என்கிட்ட அப்படி பேசிட்டா அதுதான், என்னால தாங்க முடியலை“ என்றான் வருத்தமாக அவனது வருத்தத்தை கண்ட கமலிக்கும் அவன்மீது இரக்கம் எழுந்தது அவனுக்கு ஆதரவாக கவினின் தோள்பட்டையில் கைவைத்து மெல்ல தட்டிவிட்டாள் அதில் கவின் துக்க பெருமூச்சுவிட்டான் அதைக்கண்ட கமலி அவனிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்ப அதற்கு கவினும் பதில் அளித்தபடி இருந்தான்.

”அப்புறம் என்னாச்சி நீ என்ன சொன்ன”

”நான் உன்னைதான் விரும்பறேன், உன் மனசுதான் எனக்கு வேணும்னு சொன்னேன்”

Advertisement

”அதுக்கு அவள் என்ன சொன்னா“

”மனசுங்கறது ஒரு மாயை, அது உடம்புல எந்த உறுப்பிலயும் இல்லை, அது நம்மளோட கற்பனை வடிவம் தேவையில்லாத கற்பனைக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழந்திட வேணாம்னு சொன்னா”

“சூப்பர்”

”ஏய் நீயுமா“

”இல்லை கவின், விசயம் புதுசா இருந்தது அவ்ளோதான் அப்புறம் என்னாச்சி“

”நானும் விடலை, எப்படி எப்படியோ அவள்கிட்ட கெஞ்சிப் பார்த்தேன் ஆனா, அவள் என்னை அசரவைக்கற மாதிரி திரும்பவும் ஒரு கேள்வி கேட்டா பாரு வாயடைச்சி போனேன்“

”அப்படி என்ன கேட்டா” என ஆர்வமாக கேட்டாள் கமலி

”நான் அவமானப்படறதை இவ்ளோ ஆர்வமா கேட்கலாமா”

”அதுக்கில்லை நீ சொல்ற கதை ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கு அதான்“

”கதையா இது என் காதல்” என கோபத்தில் பொங்கினான் கவின்.

”சாரி சாரி கவின் நான்தானே, உன் தங்கச்சி தானே கோச்சிக்காத சரி சொல்லு கண்மணி உன்கிட்ட என்ன கேட்டா” என்றாள் ஆர்வமாக

”என்கிட்ட உனக்கு என்ன பிடிச்சிருந்ததுன்னு கேட்டா”

”நல்ல கேள்விதான் அதுக்கு நீ என்ன சொன்ன மறுபடியும் மனசுன்னு சொன்னியா“

”இல்லை அப்படி சொன்னதுக்குதான் பிலாசபி பேசினாளேன்னு நினைச்சி உன்னோட நேர்மை, புத்திசாலித்தனம், உன்னோட திறமை, பாட்டு, டான்ஸ் இதெல்லாம் எனக்கு பிடிச்சிருந்ததுன்னு சொன்னேன்”

”ம்ம் அதுக்கு அவள் என்ன சொன்னா“

”நீ சொன்னதெல்லாம் இந்த காலேஜ்ல இருக்கற எல்லாருக்குமே பிடிச்ச விசயம்தான் ஏன், என்  கூடப்படிக்கற பொண்ணுங்களுக்கு கூட இது பிடிக்கும், என்கிட்ட உனக்குன்னு தனியா பிடிச்ச விசயம் என்னன்னு கேட்டா”

”ம்ம் நீ என்ன சொன்ன“

”யார்கிட்டயும் அடங்காத உன் திமிரு, யாரையும் ஏறிட்டுப் பார்க்காத உன்னோட இந்த குணம், உன்னோட இந்த அசர வைக்கற அழகு, இதெல்லாம்தான் எனக்கு பிடிச்சிருந்ததுன்னு சொன்னேன்“

”ம் அவள் என்ன சொன்னா”

”ஓ அப்படியா சரி நீ சொன்ன மாதிரியே குணத்தோட திமிரோட புத்திசாலித்தனமா திறமைசாலியா என்ன கருப்பு நிறத்துல குள்ளமா குண்டா இருந்திருந்தா அப்பவும் நீ என்னை காதலிச்சிருப்பியான்னு கேட்டா பாரு” என இழுத்து நிறுத்தினான் அதைக் கேட்டு கமலி கலகலவென சிரித்தே விட்டாள்

”ஏய் சிரிக்காத கமலி நானே நொந்துப் போயிருக்கேன்“

”சரி சரி சாரி அப்புறம் நீ என்ன சொன்ன”

”என்னத்த சொல்றது பதில் சொல்ல தெரியாம, திருவிழால காணாம போன குழந்தையாட்டம் பேந்த பேந்த அவள் முன்னாடி நின்னேன்”

”சரியா போச்சு அவள் என்ன சொன்னா”

”இப்ப உனக்கே தெரியுதா நீ எதை விரும்பியிருக்கன்னு, நான் உண்மையை சொன்னதுக்கு நீ கோபப்பட்ட ஆனா, இப்ப நீயே பதில் சொல்ல முடியாம ஒத்துக்கிட்ட, நான் அழகா இருக்கேன், உன் பார்வைக்கு என்னோட அழகு மட்டும்தான் முதலிடத்தில தெரிஞ்சிருக்கு, அழகா இருக்கறதால அடுத்து என்னோட பழக்கவழக்கம் என்னோட குணம் எல்லாம் பார்த்து உனக்கு பிடிச்சிருக்கு, ஒருவேளை நான் அழகா இருந்து குணத்தில மோசமான கேரக்டரா இருந்திருந்தா நீ அப்பவும் என்னை விரும்பியிருப்பியான்னு கேட்டா“

”அதுக்கும் உன்னால பதில் சொல்லியிருக்க முடியாதே”

”ஆமாம் பதில் வரலை, ஏன் வாயே திறக்க முடியலை, அப்ப கேவலமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு இவ்ளோதான் இந்த ஆம்பளைங்க புத்தி, இதனாலயே எனக்கு ஆம்பளைங்களை பிடிக்கலை, நீன்னு இல்லை வேற யார் வந்தாலும் எனக்கு பிடிக்காது, எனக்கு என் குடும்பம்தான் முக்கியம், என் அப்பா அம்மாவுக்காக நான் பெரியளாகனும்னு ஆசைப்படறேன், என்னோட லட்சியம் ரொம்ப பெரிசு அதை அடையறது ரொம்ப கஷ்டம், என்னோட எண்ணங்களும் உன்னோட எண்ணங்களும் எப்பவும் ஒத்துப் போகாது, இதோட என்னை விட்டுட்டு படிச்சி பெரியாளாகற வழியைப் பாருன்னு சொல்லிட்டா”

”இவ்ளோ பேசியும் நீ அவளை விட்டிருக்க மாட்டியே, உனக்குதான் சூடு சுரணையே கிடையாதே”

”அப்படியெல்லாம் இல்லை எனக்கும் அவள் சொன்னதை கேட்டு மனசு சுர்ருன்னு வலிச்சது, ஆனாலும் அவளை இழக்க மனசு வரலை, அவள்கிட்ட அடுத்தடுத்து வந்த நாள் பேசிப் பார்த்தேன், அவளோ நீ என்னென்ன செய்றியோ செய், என்னென்ன சொல்றியோ சொல்ன்னு அவள்பாட்டுக்கு இருந்தா, எனக்கு கோபம் வந்து சட்டுன்னு என் கையை வெட்டிக்க போறேன், நீயில்லைன்னா எனக்கு வாழ்க்கையில்லைன்னு டயலாக் விட்டேன் ஆனா, உண்மையாவே அவள் இல்லைன்னா எனக்கு வாழ்க்கையில்லைங்கற நினைப்புதான் அந்த நேரம் வந்தது ஆனா அவள் அதை நம்பலை

அப்படியா சாகப்போறியா சரி சாவு, நீ சாகறதுக்காக உன்னை என்னால காதலிக்க முடியாது, நீ செத்தா எனக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை, உன்னை போல வேற எவனாவது சாகறேன்னு வந்து நின்னா அவனையும் நான் காதலிக்கனுமா என்ன, காதல்ங்கறது உங்களுக்கு எல்லாம் விளையாட்டா போச்சா, இந்த வாழ்க்கை உன்னோடது, நீ இருக்கறதும் சாகறதும் உன்னோட விருப்பம், இதுல ஏன் என்னை கேட்கற, உன் வாழ்க்கைக்குள்ள நான் வரலை, அதே போல என் வழியில நீ வராத, எனக்கு இந்த காதல் மேலயும் கல்யாணத்து மேலயும் விருப்பம் இல்லை, திரும்பி திரும்பி என்கிட்ட வந்து இது போல பேசினா நல்லாயிருக்காது, பார்த்துக்கன்னு மிரட்டலா சொல்லிட்டு அவள் பாட்டுக்கு போயிட்டா”

”குணாவை விட திமிரா இருக்காளே, அவன் கூட இவள் முன்னாடி குறைவுதான்“

”ரொம்ப முக்கியம் எதுக்கு இப்ப குணாவோட கண்மணியை கம்பேர் பண்ற இது தப்பு கமலி“

”ப்ச் சாரி போதுமா அப்புறம் என்ன செய்த மறுபடியும் அவள்கிட்ட போய் பேசினியா”

”எங்க பேசறது அதுக்கு அப்புறம் என்னால அவள் நிழல்கிட்ட கூட போக முடியலை, எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு வந்துட்டேன், அதுக்கு அப்புறம் அவள் என்ன ஆனாள்ன்னு நான் பார்க்கலை, இப்பதான் பார்க்கிறேன் அவளும் இதே காலேஜ்ல படிக்க வந்திருக்கா, என் நிலைமையை பாரேன் நான் யாரை பார்க்க கூடாதுன்னு நினைக்கிறோனோ, அவங்களோடதான் இனி 2 வருஷம் ஓட்டனும் போல இருக்கு, எல்லாம் என் தலையெழுத்து”

என புலம்ப அந்நேரம் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வகுப்பை நோக்கி விரைந்தார்கள். கமலியும் கவினும் கூட அவசர அவசரமாக முதலாம் வருடம் எம்டெக் வகுப்பு எங்குள்ளது என தேடி ஒரு வழியாக இருவரும் அந்த வகுப்பிற்குள் நுழைந்தார்கள்.

நுழைந்ததும் அதிர்ச்சி காரணம் ஆண்கள் அமரும் பகுதியில் பின்னாடி வரிசையில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான் குணா, பெண்கள் அமரும் பகுதியில் முன் வரிசையில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள் கண்மணி. அவர்களைக் கண்டதும் இவர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது, ஆனால் அவர்களுக்கோ இவர்களை யார் என்று கூட தெரியவில்லை. புதிதாக பார்ப்பது போல பார்க்கவும் அதற்கே கவினும் கமலியும் அவமானம் தாங்காமல் தலை தாழ்த்திக் கொண்டு தங்களுக்கென ஒரு இருக்கையை தேடி பிடித்து அதில் அமர்ந்தார்கள்.

வகுப்புகள் தொடங்கியது ஒரு லெக்சரர் வந்து நின்றார், தன்னை பற்றி சொல்லிவிட்டு அடுத்து வந்திருந்தவர்களை எழுப்பி அறிமுகம் படலம் நடத்தப்பட்டது, அதில் முதலில் கண்மணி எழுந்தாள்

”சார் என் பேரு கண்மணி ஊரு மதுரை” என சொல்லிவிட்டு அமர உடனே லெக்சரர்

”அவ்ளோதானா உன்னோட ஹாபிஸ்லாம் என்னன்னு சொல்லலையே”

”நல்லா படிப்பேன் சார், மதுரை காலேஜ்ல பிடெக்ல கோல்டு மெடல் வாங்கியிருக்கேன் யூனிவர்சிட்டி டாப்பர் சார்”

”வெரிகுட் படிப்பை தவிர வேற உன்னோட திறமை ஏதாவது இருக்கா”

”பாட்டு பாடுவேன், நாட்டியம் ஆடுவேன்”

”நைஸ் எங்க ஒரு பாட்டு பாடு கேட்கலாம்“

”இது க்ளாஸ் ரூம், இங்க எப்படி, காலேஜ்ல ஏதாவது விழா நடந்தா அப்ப நான் பாடறதை, ஆடறதை பாருங்க” என சட்டென சொல்லிவிட சாரின் முகம் வெளுத்துவிட்டது, அதோடு அவளிடம் பேசவே கூடாதென நினைத்துக் கொண்டு அடுத்தடுத்தவர்களை அறிமுகம் செய்யும் போது தேவையில்லாத பேச்சை அவர் பேசவில்லை, டீசன்டாக பேசினார். கவின் கமலிக்கான இடமும் வந்தது, அவர்களும் தங்களை பற்றி சொன்னார்கள் கடைசியாக குணாவின் முறை வந்தது அவனோ எழுந்து நின்று

”என் பேரு குணா” என சொல்லிவிட்டு அமர உடனே லெக்சரர்

”அவ்ளோதானா”

”இதுவே ஜாஸ்தி” என திமிராக சொல்ல லெக்சரருக்கு காண்டானது. குணாவையும் கண்மணியையும் அன்றே அவர் வெறுக்கலானார்.

முதல் நாள் பெரிதாக பாடங்கள் எடுக்காமல் விட மாணவ மாணவிகள் கதை பேசலானார்கள், குணாவும் கண்மணியும் தங்களைச் சுற்றிலும் பார்த்தார்கள், இது வேலைக்காகாது என எண்ணி இருவரும் வகுப்பை விட்டு வெளியேறினார்கள், விசாரித்துக் கொண்டே இருவரும் லைப்ரரிக்கு சென்று எம்டெக் சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாங்கி அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து படிக்கலானார்கள், ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருக்க, அவர்களை பார்த்தபடியே ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்தார்கள் கவினும் கமலியும்

“கமலி இங்க எதுக்காக வந்திருக்கோம், நமக்கும் லைப்ரரிக்கும் என்ன சம்பந்தம்”

”இந்த இடத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை, அதோ இருக்காங்களே அவங்களை பார்க்கதான் வந்தோம்“

”எனக்கு அவளை பார்க்க விருப்பமில்லை” என கவின் சொல்ல அதற்கு கமலி

”அப்புறம் ஏன் அவள் க்ளாஸ் விட்டு போனப்ப ஏக்கமா பார்த்த“

”இல்லை தனியா எங்க போறாள்ன்னு தெரிஞ்சிக்கலாம்னு“

”வழியாத இப்பவும் நீ அவளை லவ் பண்றியா”

”அவள் பேசின பேச்சுக்கு எங்க லவ் பண்றது, ஏதோ ஒரு காலத்தில நாம லவ் பண்ண பொண்ணாச்சேங்கற ஒரு கரிசனத்தில அவளை பார்த்தேன் அவ்ளோதான்“

”உண்மையா அவளை நீ லவ் பண்ணலை“

“இப்ப பண்ணலை“

”சத்தியம் பண்ணு”

”எதுக்கு சத்தியம்லாம் கேட்கற”

”ஒரு முக்கியமான விசயத்துக்காகத்தான்“

”அப்படியா சரி சத்தியம், நான் அவளை லவ் பண்ணலை”

”அப்புறம் சத்தியத்தை மீறி நீ அவளை லவ் பண்ண, அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன், உன்னை கொன்னுடுவேன்“

”அய்யோ அப்படி எதுவும் செய்துடாத ப்ளீஸ்”

”அப்ப ஒழுங்கா இருக்கனும் புரிஞ்சுதா”

”சரி இருக்கேன் ஆமா இதெல்லாம் ஏன் கேட்கற“

”ஏன்னா பொண்ணுங்களை விட ஆம்பளைங்க மனசு அலைபாயற மனசு, உடனே உடனே மனசு மாறிடும், இப்ப வேணாம்னு தோணற விசயம் நாளைக்கு வேணும்னு தோணும்லயா அதனாலதான் சத்தியம் பண்ண சொன்னேன், எனக்கு என் மேல நம்பிக்கையிருக்கு, செத்தாலும் நான் குணாவை இனி லவ் பண்ண மாட்டேன்”

”சரி கமலி எல்லாம் ஓகே, இப்ப எதுக்காக இங்க வந்திருக்கோம், அவங்களை எதுக்காக நோட்டம் போடனும், ஒண்ணும் விளங்கலையே எனக்கு“

”எனக்கு குணாவை பழிவாங்கனும்”

”இதப்பாரு நீ அவனை லவ் பண்ண, அவன் உன்னை ரிஜக்ட் பண்ணிட்டான், இப்ப உனக்கு பிடிக்காத ஒருத்தன் உன்னை லவ் பண்ணா நீ அவனை ரிஜக்ட் பண்றேன்னு வை, அதுக்காக அவன் உன்னை பழிவாங்க நினைச்சா உன்னால அதை ஒத்துக்க முடியுமா சொல்லு“

”குணா என் காதலை ஏத்துக்கலைங்கறதுக்காக பழிவாங்க நினைக்கலை, அவன் என்னை ரொம்ப மட்டமா நினைச்சிட்டான், என்னை அவமானப்படுத்திட்டான், அதுக்காக அவனை பழி வாங்க நினைக்கிறேன்”

”இதனால உனக்கு என்ன கிடைக்கும்”

”நிம்மதி, நான் பட்ட கஷ்டத்தை அவனும் படனும்“

”அதெப்படி முடியும் அவன்தான் யாரையும் லவ் பண்ண மாட்டானே“

”பண்ண வைக்கனும்”

”அதுசரி இதென்ன வம்பா போச்சி, அதெப்படி அவன் லவ் பண்ணுவான், அவனுக்குதான் எந்த பொண்ணையும் பிடிக்காதே”

”பிடிக்க வைக்கனும்“

”உளறாத கமலி, உன் திட்டம்தான் என்ன”

”காதல்னாலே வெறுக்கற இரண்டு பேரையும் காதலிக்க வைச்சி, அவங்களை பிரிச்சி வைக்கனும், அப்ப அவங்க காதல் தோல்வியில கஷ்டப்படுவாங்க பாரு, அதை நான் பார்த்து ரசிக்கனும்”

”ஆஹா என்ன ஒரு சைக்கோ தனம், எப்ப இருந்து இப்படி வில்லியா மாறின, நீ எவ்ளோ அன்பான பொண்ணு, குழந்தை மனசு உனக்கு, இப்படி சைக்கோ மாதிரி பேசறது தப்பு கமலி, பழிவாங்கறதா நினைச்சி உன் வாழ்க்கையை பலி கொடுத்துடாத“

”இல்லை கவின், இதுவரைக்கும் எனக்கு பழிவாங்கனுங்கற எண்ணம்தான் இருந்தது ஆனா, இப்ப அதை செயல்படுத்தியே ஆகனும்ங்கற வெறி வந்துடுச்சி”

”எப்படி செயல்படுத்துவ குணாவை யார் காதலிப்பா”

”கண்மணியிருக்காள்ல”

”அவளை எதுக்கு இப்ப இழுக்கற“

”அவளை வைச்சிதான் குணாவை பழிவாங்கப் போறேன்”

”எப்படி“

”இரண்டு பேரையும் காதலிக்க வைக்கப் போறேன்” என சொல்லவும் கவினால் சிரிப்பை அடக்க இயலாமல் போனது

லைப்ரரி வேறு, சைலன்டாக இருக்க வேண்டும் இவ்வளவு நேரம் ரகசியம் போல குசுகுசுவென பேசியதே பெரிய விசயம், இதில் கமலி சொன்ன ஜோக்கை கேட்டு கவினால் சிரிப்பை அடக்க முடியாமல் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விளையாட்டு மைதானத்திற்கு வந்தவன் கலகலவென சிரித்தேவிட்டான், அவனது சிரிப்பை வெறுத்தாள் கமலி, கோபமாக அவள் முறைக்க அவனோ சிரித்துக் கொண்டே இருந்தான், சிரித்து சிரித்து அவனது கண்கள் கலங்கி கண்ணீர் வேறு வந்தது, எப்படியோ கமலியின் கோபமாக முகத்தைக் கண்டு தனது சிரிப்பை அடக்கிக் கொண்டான் கவின்

”ஆச்சா சிரிச்சி முடிச்சாச்சா இல்லை இன்னும் பாக்கியிருக்கா வேணும்னா, நான் வெயிட் பண்றேன் நீ மொத்தமா சிரிச்சி முடி” என வெறுப்பாக சொல்ல அவனுக்கு திக்கென்றது

”கோச்சிக்காத நீ சொன்ன ஜோக்கை கேட்டு சிரிப்பை அடக்க முடியலைம்மா வெரி சாரி” என கைகூப்பி மன்னிப்புக் கேட்க அவளின் கோபம் சற்று தணிந்து கண்ணீருடன் அவனைப் பார்த்து பேசினாள்

”கவின் நான் சொன்னது உனக்கு ஜோக்கா இருக்கலாம் ஆனா, என்னோட வலி உனக்குப் புரியலை, இப்படி பழிவாங்கனும்னு எனக்கென்ன ஆசையா சொல்லு, என்னைன்னு இல்லை எத்தனை பொண்ணுங்களை அந்த குணா அவமானப்படுத்தினான்னு தெரியுமா, அவனுக்கு ஒரு பாடம் கத்துக்கொடுக்கனும்னு ஆசைப்படறேன், அதுக்காக பாவப்பட்ட பொண்ணை நான் செலக்ட் பண்ணலையே, அவனை போலவே திமிரா எல்லா ஆம்பளைங்களையும் அவமானப்படுத்தற ஒருத்தியை வைச்சிதான் பழிவாங்க போறேன்னு சொன்னேன், இதுல என்ன தப்பிருக்கு”

”சரி தப்பு சொன்னாலும் புரிஞ்சிக்கற நிலைமையில நீயில்லை, இப்ப உனக்கு அட்வைஸ் பண்ணாலும் அது உன் மண்டையில ஏறப்போறதில்லை, நீ ஒரு முடிவு எடுத்த பின்னாடி அதை என்னால மாத்த முடியாது ஆனா, உன்னோட திட்டம் எல்லாம் சரி ஆனா குணாவுக்கு கண்மணியை தேர்ந்தெடுத்ததுதான் சரியா படலை”

”ஏன் உன் முன்னாள் காதலிக்காக பரிஞ்சி பேசறியா“

”அப்படியில்லை கண்மணியை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவளை அவ்ளோ சீக்கிரத்தில காதலிக்க வைக்க முடியாது, அதுவும் குணாவை போல ஒருத்தனை அவள் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டா, அதே போல குணாவுக்கும் வேற ஒரு அமைதியான அடக்கமான பொண்ணை பார்த்தா கூட ஓரளவுக்கு காதல் வயப்பட வாய்ப்பிருக்கு, ஆனாலும் அவன் ஒண்ணும் காதலிக்க மாட்டான், அந்தப் பொண்ணையும் விரட்டுவான்னு வைச்சிக்கயேன், இப்ப என் சந்தேகம் என்னன்னா, ஒரே குணமுள்ள அதுலயும் காதலே பிடிக்காத இரண்டு பேரை எப்படி காதலிக்க வைக்கறது, இது ரொம்ப ரிஸ்க், எனக்கு என்னவோ அவங்க காதலிக்க போறதில்லை, வீணா நீ நம்பிக்கை வைக்காத உன் பழிவாங்கற எண்ணம் நடக்காது“

”இல்லை கவின் என் உள் மனசு சொல்லுது, குணாவை பழிவாங்கனும்னா அதை கண்மணியை வைச்சிதான் செய்யப்போறேன்”

”இதுல குணா பாவமா கண்மணி பாவமான்னு சொல்லத் தெரியலை ஆனா, கடைசியில நீதான் பாவப்பட்ட ஜென்மமா நிக்கப் போற”

”பொறுத்திருந்து பாரு, யாரு பாவம்னு தெரியும், என்னோட இந்த பழிவாங்கற திட்டத்துக்கு நீ எனக்கு உதவி செய்யனும்”

”நானா அய்யோ என்னால முடியாது”

”ஏன் உனக்கு கண்மணியை பழிவாங்கனும்னு எண்ணம் இல்லையா“

”பழிவாங்கற அளவுக்கு அவள் எனக்கு எந்த கெடுதலும் செய்யலை, நான் அவளை காதலிக்கிறேன்னு சொன்னேன், அதுக்கு அவள் கொஞ்சமா என்னை அவமானப்படுத்தி முடியாதுன்னு சொல்லிட்டா, இதே மாதிரித்தான் எனக்கு பிடிக்காத பொண்ணு என்கிட்ட லவ் சொல்லியிருந்தா நானும் அதே போல முடியாதுன்னு சொல்லியிருப்பேன், அதனால நான் அதை பெரிசா எடுத்துக்கலை”

”நீ பெரியமனசோட இருந்துக்க ஆனா, என்னால அப்படியிருக்க முடியலை, நீ எனக்கு உதவி செய்யனும்”

”என்ன அதிகாரமா கேட்கற சாரி கமலி எனக்கு பிடிக்காத விசயத்தை நான் செய்றதாயில்லை”

”நான் உன் தங்கச்சி எனக்காக நீ இதைச் செய்யனும் இல்லைன்னா“

”இல்லைன்னா என்ன செய்வ”

என கேட்டதும்தான் தாமதம் தனது கையில் இருந்த கண்ணாடி வளையல் ஒன்றை அவளே உடைத்து அதை வைத்து அவளின் கையில் கீறிக் கொள்ள இரத்தம் வரவும் அதிர்ந்தான் கவின்

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!