Skip to content
Post Views: 280
”ஏன் என்னை இப்படி பார்க்கற” என கண்மணி திக்கி திக்கி பேச குணாவோ
”சும்மா” என மென்மையாகச் சொல்லி சிறு குறுநகை பூக்க அவளோ கோபமுற்று
”என்ன நான் சொல்றது உனக்கு கிண்டலா தெரியுதா”
Advertisement
”சே சே இல்லையே“
”அப்புறம் எதுக்கு நான் சீரியஸா பேசறப்ப நீ இப்படி சிரிச்சிக்கிட்டு நின்னா என்ன அர்த்தம்”
”ஒரு சின்ன குழப்பம் இருந்தது, அது நீ பேசினது கேட்டப்பின்னாடி தீர்ந்துப் போச்சி, இப்ப என்ன உனக்கு மட்டும்தான் கனவு இருக்கா எனக்கும் இருக்கு, நானும் படிக்கனும் பெரியாளாகனும், என்னை கேலி செய்த சொந்தங்காரங்க முன்னாடி பெரிசா வாழ்ந்துக் காட்டனும்னு லட்சியத்தோட இருக்கேன்”
Advertisement
”இவ்ளோ பெரிய லட்சியவாதியா இருக்க அப்புறம் உனக்கு எதுக்கு இந்த காதல் எல்லாம்”
Advertisement
”அப்போ காதலே வேணாம்ங்கறியா” என அவன் மனம் உடைந்துக் கேட்க அதற்கு அவள் துடித்துப் போனாள், இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை, அவனே மௌனத்தை கலைத்தான்
”வா உன்னை ஹாஸ்டல்ல விட்டுடறேன்”
”வேணாம் என் லட்சியத்துக்கு நடுவில நீ வரவேண்டாம்“
Advertisement
”நான் உதவி செய்யலாம்னு”
”வேணாம், அப்புறம் என் கவனம் சிதறும், கனவை விட காதல் பெரிசுன்னு தோணும், முடியாது காதலா லட்சியமான்னு கேட்டா நான் லட்சியம்தான்னு சொல்வேன்” என சொல்லிவிட்டு அவனை பாவமாக பார்த்து வைத்தாள்
அவனோ அந்த பாவப்பட்ட முகத்தை வைத்தே அவளின் மனதை எளிதாக புரிந்துக் கொண்டு தனது பைக்கில் ஏறி வேறு பக்கமாக சென்றுவிட அவன் சென்றுவிட்டதை நினைத்து கண்ணீருடன் தன் ஹாஸ்டல் நோக்கி நடந்தாள் கண்மணி.
நடக்க நடக்க கால் வலித்தது, மனதோ பாரமாக இருந்தது, எதற்கோ ஆசைப்பட்டு எதையோ இழந்துவிட்டதுபோல உயிர் இருந்தும் ஜடம் போல நடந்தாள், ஹாஸ்டல் வந்து தன் அறைக்கு வந்தும் அவள் இயல்புக்கு வரவில்லை, அவனிடம் அவ்வளவு தூரம் பேசிவிட்டாள் ஆனால் அதன்பின் தான் பேசியதை நினைத்து வருந்தினாள், அவளது வருத்தமே அவளை பலவீனமாக்கியது.
சாப்பிட கூட மனமின்றி படுக்கையில் படுத்தவளுக்கு துளி உறக்கம் வரவில்லை, குணாவின் அருகாமை, பேச்சு, சிரிப்பு, அணைப்பு, கோபம் அனைத்தும் கண் முன் வந்து வந்து சென்றது, அந்த நினைவுகளை சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் இயலாமல் கண்ணீருடன் அந்த இரவை கழித்தாள் கண்மணி
மறுபக்கம் குணாவோ மிகவும் உற்சாகமாக இருந்தான், அவன் பார்த்ததிலேயே இப்படி ஒரு பெண்ணை அவன் பார்க்கவில்லை, அனைவரும் அவனிடம் பழகும் விதமே வேறு கண்மணி பழகும் விதம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது, யார் மீதும் வராத காதல், அவள் மீது தாறுமாறாக வந்துவிடவே அவனுக்கு வெட்கம் வந்தது.
தனக்கென என்ன இருக்கிறது எதுவும் இல்லை என விரக்தியில் இருந்தவனுக்கு இப்போது தனக்காக ஒரு உறவு வந்திருக்கிறது, அந்த புது உறவு அவனை முற்றிலும் மாற்றிவிட்டது, அவளால் தனது படிப்பு வீணாகாது என்பதை தெளிவாக புரிந்துவிட்டான், யாருக்காக வாழ்வது என தெரியாமல் விட்டேத்தியாக வாழ்ந்தவனுக்கு அவளுக்காக வாழ வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது, என்றும் இல்லாமல் இன்று மகிழ்ச்சி கடலில் நீந்தியபடியே உறங்கலானான்.
மறுபக்கம் கவினும் கமலியும் காலேஜ்க்கு ஒருவாரம் வராமல் போனதால் அங்கு என்ன நடக்கறது என தெரியாமல் தவிப்புடன் ஒருவரை ஒருவர் சண்டையிட்டு ஓய்ந்துப் போனார்கள்
”சாரி கவின் எல்லாமே என்னாலதான்”
”முட்டாள் உன்னோட சைக்கோ தனத்தால இப்ப என்னாச்சிப் பாரு, நீ அவங்களை பழிவாங்க நினைச்ச ஆனா கடைசியில அந்த குணாவும் கண்மணியும் எப்படி ரியாக்ட் பண்ணாங்க பார்த்தியா, அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க, அவங்களுக்குள்ள இந்த ஜென்மத்தில காதலே வராது, ஆனா நமக்குதான் இப்ப ப்ளாக் மார்க் விழுந்திருக்கு, இதனால நம்ம படிப்புல பிரச்சனை வர வாய்ப்பிருக்கு, கேம்பஸ் இன்டர்வியூல எந்த சொதப்பலும் இல்லைன்னா நல்ல வேலை கிடைக்கும், ஆனா உன்னால எனக்கு படிப்பே கெட்டுடும் போல இருக்கு”
”கவின் நான் தெரிஞ்சே அப்படி செய்யலை, காலேஜ்ல சிசி கேமரா இருக்குன்னு எனக்கெப்படி தெரியும் நீயாச்சும் சொல்லலாம்ல“
”ஆமாம் இவ்ளோ திட்டம் போட்ட உன்னால யாரும் கண்டுபிடிக்க முடியாத மாதிரி செய்திருக்கனும், சுவத்துல எழுதினதுக்கே நம்மளை ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க, இதுல நான் பாத்ரூம் சுவத்தில வேற எழுதி வைச்சேன் அதை பார்த்து என்ன சொல்வாங்கன்னு தெரியலை, நாமதான் இதை செய்தோம்னு காலேஜ்ல தெரிஞ்சது மத்த மாணவர்கள் நம்மளை கேலி பண்ணுவாங்க, போச்சி என் மானம் மரியாதை எல்லாம் போச்சி, இப்ப உனக்கு சந்தோஷம்தானே”
”ப்ச் நிப்பாட்டு நாம ஒரு லட்சியத்தில இறங்கியிருக்கோம், அதுல வெற்றி தோல்வி வர்றது சகஜம்தான், அதுக்காக சும்மா ஒப்பாரி வைக்காத, யார் கேலி பண்ணாலும் சரி நான் உன்னை காப்பாத்தறேன் போதுமா“
”அம்மா தாயே இனிமேலயாவது மாட்டிக்காத மாதிரி திட்டம் போடு“
”அதுசரி, குணா ஏன் எந்த ரியாக்ஷனும் காட்டலை, ஒண்ணு கோபப்பட்டிருக்கனும் இல்லையா பிரின்சி கிட்ட புகார் தந்திருக்கனும், எதையும் செய்யாம அவன் பாட்டுக்கு அமைதியா போறானே, அவனுக்கு நிஜமாவே கண்மணி மேல காதல் வரலையோ”
”அவனைப் பத்தி தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா, நான் அப்பவே சொன்னேன்ல, காதல்னாலே என்னன்னு தெரியாத இரண்டு பேருக்கும் காதலை வரவழைக்கறது ரொம்ப கஷ்டம்னு, நீதான் எப்படியாவது அவங்களை காதலிக்க வைக்கனும்னு சபதம் போட்ட, இப்ப பாரு என்னாச்சின்னு, குணா அமைதியா போயிட்டான், ஆனா கண்மணி பரவாயில்லை, கேலி செய்த மாணவர்களுக்கு சரியான பதிலடி தந்துட்டு போயிட்டா, இனி ஒருத்தன் கூட என் கண்மணியை கேலி செய்ய மாட்டான்”
”என்னது என் கண்மணியா, என்கிட்ட நீ உதை வாங்கப் போற பாரு, கண்மணி குணாவோட லவ்வர்“
”அட போ கமலி நீதான் சொல்லிக்கனும், காலேஜே இதை நம்ப மாட்டேங்குது“
”யாரும் நம்பலைன்னா என்ன, கண்மணியும் குணாவும் நம்பனும், அதுதான் எனக்கு முக்கியம் இந்த விசயத்துக்கு அப்புறம் பாரு குணாவும் சரி கண்மணியும் சரி ஒருத்தரை பத்தி ஒருத்தர் கவனிக்க ஆரம்பிப்பாங்க”
”எப்படி சொல்ற”
”இதுவரைக்கும் விசயம் பெரிசாகலை, இப்ப விசயம் காலேஜ் வரைக்கும் போயிடுச்சில்ல, இனிமேல பாரு அவங்க தன்னால பார்ப்பாங்க, பேசுவாங்க, காதலிப்பாங்க”
”இது நடக்காது“
”நடக்கும் எனக்குத் தெரிஞ்சி அவங்களுக்குள்ள காதல் வந்திருக்கனும், என் உள்மனசு சொல்லுது”
”ஒருவேளை அவங்களுக்குள்ள காதல் வரலைன்னா”
”வந்திருக்கனும், எனக்கு நம்பிக்கையிருக்கு, ஒரு வாரம் கழிச்சி போய் பார்க்கலாம், அவங்களுக்குள்ள ஏதாவது சின்ன வித்தியாசம் இருக்கும், அதுவே அது காதல்ன்னு காட்டிக் கொடுத்துடும், எனக்கு நம்பிக்கையிருக்கு” என கமலி நம்பிக்கையுடன் பேச அதில் கவினுக்கும் சிறு நம்பிக்கை வந்தது.
மறுநாள் கல்லூரிக்கு செல்ல அழகாக ரெடியானாள் கண்மணி, ஏற்கனவே அவள் அழகிதான் என்றுமே தன்னை அழகாக்க நினைக்க மாட்டாள், முகம் கழுவி பொட்டு வைத்தால் அதுதான் அவளது அலங்காரமே, ஆனால் இன்று அப்படியில்லை, தினமும் காக்கா குளியல் குளித்தவள் இன்று நிதானமாக குளித்து வந்தாள், பவுடர் கூட அலர்ஜி என நினைத்தவள் இப்போது கூட தங்கும் பெண்ணிடம் கேட்டு பவுடர் வாங்கி அதை தன்முகத்தில் அப்பிக் கொண்டாள், அலர்ஜி என ஒதுக்கிய பவுடர் வாசனை இப்போது அவளுக்கு நறுமணமாக வீசியது.
வழக்கம் போல சுடிதார் எடுத்து அணிந்துக் கொண்டாள், ஹாஸ்டலில் பூத்த ஒற்றை ரோஜாவை தன் தலையில் வைத்தாள், ஏதோ அவளுக்கு அந்த பூ கிரீடம் போல அழகு தந்தது, தன்னை கண்ணாடியில் பார்த்து பிரமித்தாள், அவளுக்கே அவளின் அழகு பிடித்திருந்தது. பேரழகி போல தெரிந்தாள், அதில் சட்டென அவளுக்கு குணாவின் நினைவே வந்தது, உடனே அவளுக்கு நாணமும் வந்தது, வெட்கத்துடனே தனது புத்தகபையை எடுத்துக் கொண்டு சாப்பிட சென்றாள், தனக்கென சாப்பிட்டு ஒரு டிபன் பாக்ஸ் கட்டிக் கொண்டு புறப்பட்டாள்.
கல்லூரி வரும் வரை எங்காவது குணா தெரிகிறானா என பார்த்தபடி வந்தாள், எங்கும் அவன் இல்லை ஏமாற்றத்துடன் வந்தவள் சரி கல்லூரிக்குள் இருப்பான் என வந்து பார்த்தாள், சுவற்றில் எழுதியிருந்த வார்த்தைகள் எல்லாம் அழித்திருந்தார்கள், சுத்தமாக இருந்த அந்த இடத்தைக்கண்டு அவளுக்கு சின்ன ஏமாற்றம் வந்தது.
அதில் நேற்று வரை குணா லவ்ஸ் கண்மணி, கண்மணி லவ்ஸ் குணா என இருந்தது, ஆனால் இப்போது வெள்ளை சுவராக மாறியிருக்க அவளுக்கு துக்க பெருமூச்சே வந்தது, கல்லூரி வளாகத்தில்தான் குணா இல்லை சரி வகுப்பில் இருப்பான் என ஆசையாக வகுப்பிற்குள் வந்து பார்த்து ஏமாந்துப் போனாள், அங்கும் குணா இல்லை
”ரொம்பத்தான் அலட்டிக்கறான் நாமளா இறங்கிவரவும் தலைக்கு மேல ஏறி நிக்கறானா போகட்டும், எனக்கொன்னும் அவனை பார்க்கனும்னு ஆசையில்லை” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டாளே தவிர அவளின் கண்கள் வாசலையே பார்த்தது
குணா வருவான் வருவான் என அவளின் மனது கூச்சலிட்டதுதான் மிச்சம், யார் யாரோ வந்தார்களே தவிர அவன் வந்தபாடில்லை, பெல் அடிக்கவும் அவளே நொந்துப் போய் இனி அவன் வரமாட்டான் என நினைத்து தலையை திருப்பிக் கொண்ட நேரம் மின்னல் போல உள்ளே வந்தான் குணா
ஆளே மாறியிருந்தான், ஜீன்ஸ் டீசர்ட் என அசத்தலாக இருந்தான், கையில் புத்தக பை அதை படு ஸ்டைலாக சுழற்றிக் கொண்டு வந்தான், முகத்திலும் ஒரு பிரகாசம், ஹேர் ஸ்டைல் மாற்றியிருந்தான், நடை உடை என அனைத்திலும் புதுமை தெரிய அவனைக்கண்ட மாணவ மாணவிகள் அனைவரும் ஆஆ என வாய் பிளந்தார்கள்
அவனோ அங்கிருந்த அனைவரையும் பார்த்து ஒரு சின்ன புன்னகை வீசினான், அதில் அனைவருக்குமே ஆச்சர்யம், பெண்கள் அவனது சிரிப்பில் மயங்கித்தான் போனார்கள், ஆண்கள் அவனின் மாற்றத்தைக்கண்டு பொறாமையில் வயிறு எறிந்தார்கள், இத்தனையும் நடக்க கண்மணி மட்டும் எதுவும் அறியாதவள் போல புத்தகத்தை படித்துக் கொண்டிருக்க அதைக்கண்ட குணாவிற்கு சிரிப்புதான் வந்தது
”எல்லாரும் ஒரு வழின்னா நம்மாளு எப்பவும் தனிவழியாதான் இருப்பா போல, இதுவும் நல்லாதான் இருக்கு” என நினைத்துக் கொண்டே வழக்கம் போல கடைசி வரிசைக்கு செல்லாமல் முதல் வரிசையில் அதுவும் கண்மணிக்கு பக்கத்தில் மாணவர்கள் அமரும் வரிசையில் சென்று அமர்ந்தான், அவன் சென்று அமர்ந்தது கூட அவள் கவனிக்கவில்லை, வாத்தியார் வரவும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்து அமர்ந்தார்கள், வாத்தியாரோ குணாவின் மாற்றத்தைக்கண்டு
”குணா என்னப்பா உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுதே, ஆளே மாறிட்ட இதுவும் நல்லாயிருக்கு” என சொல்ல அவனும் மென்மையாக சிரித்தான்
குணா என்ற பின்புதான் கண்மணி சட்டென மின்னல் தாக்கியது போல சட்டென பின்பக்கம் திரும்பி பார்த்தாள், வழக்கமாக அவன் அமரும் இடத்தில் இல்லாமல் போகவே ஏமாற்றத்துடன் திரும்பியவள் பக்கத்தில் குணா அமர்ந்திருப்பதைக்கண்டதும் வியப்பின் உச்சிக்கு சென்றாள்
அதிலும் அவனின் புதிய மாற்றம் அவளை அசரவைத்தது, சில நொடிகளில் அவள் தன்னிலை மறந்து அவனிடம் மதி மயங்கிய நேரம் வாத்தியார் பாடம் எடுக்கவே அவளின் கவனம் கலைந்து சட்டென வாத்தியார் நடத்தும் பாடத்தை கவனிக்கலானாள், அவளின் செயல்களை அனைத்தும் கவனித்தும் கவனிக்காதபடி நடந்துக் கொண்ட குணாவுக்குதான் வேடிக்கையாக இருந்தது
வாத்தியார் பாடம் எடுத்து முடித்து சென்றதும் சட்டென கண்மணி குணாவை பார்த்தாள், அவனோ சின்சியராக எதையோ எழுதிக் கொண்டிருக்க அவளோ
”காலேஜ்க்கு வர்றது லேட்டு இவ்ளோ சின்சியரா படிக்கற மாதிரி நடிக்கறதை பாரு” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் படி அது அவனுக்கு தெளிவாக கேட்டு அவன் ம் கொட்டினான்
”ஏன் லேட்டாம்” என அவள் புத்தகத்தை பார்த்தபடி பேச அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு
”பவுடர் மூஞ்சி ஓவரா அழகாயிட்ட போல”
”எது பவுடர் மூஞ்சியா” என கோபம் கொள்ள
”பின்ன எதுக்கு இப்படி பவுடரை அள்ளி கொட்டிக்கிட்டு வந்திருக்க, இயல்பாவே நீ பால் போல அழகுதான், அழகுக்கு மேலும் அழகு எதுக்கு? நீ எப்பவும் போல வந்தாலே நான் மயங்கிடுவேன், இதுல இப்படி வந்தா நான் என்னாவேன் சொல்லு” என சொல்ல அவளுக்கு வெட்கம் வந்தது.
”வேர்க்குதுன்னு லைட்டா பவுடர் போட்டேன்”
”வேணாம் உனக்கு இது செட்டாகாது”
”ஆமா அங்க மட்டும் என்ன வாழுதாம், புதுசா கெட்டப்பெல்லாம் மாத்தியிருக்க, யார் உன்னை பார்க்க இவ்ளோ கூத்து”
”எல்லாரும் பார்க்கனும்தான்”
”ம்க்கும் இங்க யாரும் உன்னை பார்க்கலை ரொம்ப அலட்டிக்காத“
”அப்படியா” என சொன்னவன் உடனே திரும்பி அவளுக்கு பின் வரிசையில் இருந்த பெண்ணிடம்
“ஹாய் என்னோட கெட்டப் எப்படியிருக்கு” என இனிமையாக கேட்க அவளுக்கோ கூச்சம் வந்தது
”சூப்பர்” என்றாள் அதையே வெட்கத்துடன் சொல்ல அவனோ
”நீங்க வெட்கப்படறது ரொம்ப அழகாயிருக்கு” என சொல்லிவிட்டு திரும்பும் போது கண்மணியை பார்த்து எப்படி என கெத்தாக சைகை செய்துவிட்டு திரும்ப அவளோ கோபத்தில் தன் கையில் இருந்த நோட்டில் இருந்த பேப்பரில் குணா என கொட்டை எழுத்தில் எழுதி அதை கிழித்து நார் நாராக்கி கசிக்கி முடிந்தவரை அந்த பேப்பரை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ அத்தனையும் செய்து முடித்து ஜன்னல் வழியாக வீசியெறிந்து கையை தூசு தட்டுவது போல தட்டினாள்.
அவளின் செயலைக்கண்டதும் குணாவிற்கு பயமே வந்தது, அந்த பேப்பர் இடத்தில் தான் இருந்திருந்தால் தன் நிலைமை என்னாயிருக்கும் என ஒரு நொடி நினைத்துப் பார்த்து அச்சத்துடன் அவளைப் பார்க்க அவளோ கெத்தாக அமர்ந்திருந்தாள்.
”பவுடர் மூஞ்சி பொறாமையில வேகாத”
”அய்யோ அய்யோ சே வர வர காமெடிங்கற பேர்ல ஜோக்கடிக்கறாங்கப்பா சிரிப்பே வரலை”
”ம்க்கும் ஆமா என்ன ரோஜா பூவெல்லாம் வைச்சிருக்க“
”ஹாஸ்டல்ல பூத்தது”
”இத்தனை நாளும் வைக்கலை இப்ப மட்டும் வைச்சிருக்க இது என்ன மாற்றம்“
”ஓ அதுவா நான் இன்னிக்கு காலேஜ்க்கு கிளம்பும் போது இந்த ரோஜா என்னைப் பார்த்து என்னையும் கூட்டிட்டுப் போ நானும் படிக்கனும்னு சொல்லிச்சி அதான் கொண்டு வந்தேன்”
”ஓஹோ ரோஜாப்பூ படிக்கனும்னு சொல்லிச்சாமா“
”ஆமாம்”
”சரி நல்லா படிக்கட்டும் படிச்சி பாஸாகட்டும்” என வெறுப்பாகச் சொல்ல அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
”உன்னைப் பார்த்தா படிக்க வந்தது போல தெரியலையே ஆளும் உடையும், இப்படியிருந்தா படிப்பு எப்படி மண்டையில ஏறுமாம்”
”ஓ என்னை சைட் அடிக்கற அளவுக்கு முன்னேறிட்டியா, சரி சரி சைட் அடிச்சிக்க, நீ அடிக்கதானே இந்தளவுக்கு ரெடியாகி வந்தேன், எப்படி இருக்கேன், ஹீரோ போல இருக்கேனா” என அவன் தன் காலரை எடுத்துவிட்டு சொல்ல அவளோ இளப்பமாக சிரித்து
”யாரு நீயா அதுவும் ஹீரோவா கால கொடுமை“
”ஏன் எனக்கென்ன குறைச்சல்”
”எதுன்னு சொன்னா வருத்தப்படுவ எதுக்கு வேண்டாமே“
”வருத்தப்படற மாதிரி என்ன சொல்லப்போற”
”விடு“
”இல்லை நீ சொல்லு நான் தெரிஞ்சிக்கனும்”
”இந்த படங்கள்ல வர்ற ஹீரோயினை கல்யாணம் செய்துக்கனும்னு ஆசைப்பட்டு சின்ன ரோல்ல நடிப்பாங்கள்ல வெளிநாட்டு மாப்பிள்ளை, நண்பர் கதாபாத்திரம் அது போல இருக்க அவ்ளோதான் உன் ரேஞ்ச்“
”ஏன் சொல்ல மாட்ட உனக்கு நான் ஹீரோவோ தெரிஞ்சா போதும் தெரியறேனா”
”ஏதோ”
”கஷ்டப்பட்டு 2 மணி நேரமா ரெடியானேன் நல்லதா சொல்லமாட்டியா“
”நானா உன்னை இப்படி வர சொன்னேன்”
”இல்லை ஆனா நான் இப்படி வந்தா நீ சந்தோஷப்படுவன்னு நினைச்சேன்”
”நான் உன்னை முதல்ல இப்படியா பார்த்தேன், இல்லையே தனியா ஓரமா உட்காரந்திருப்ப யார்கிட்டயும் பேச மாட்ட, படிப்புல மட்டும் கவனமா இருப்ப, பெரிசா அலங்காரம் செய்துக்க மாட்ட, அப்புறம் உன்கிட்ட இருந்து வரும் பாரு ஒரு வாசம், அது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்ப ஏதோ கெட்ட நாத்தம் அடிக்குது என்னது அது”
”சென்ட் அடிச்சிக்கிட்டு வந்தேன், விளம்பரத்தில பொண்ணுங்க இந்த சென்ட் அடிச்சா லைக் பண்ற மாதிரி இருந்தது, அதான் நானும் ட்ரை பண்ணேன், நீ என்னடான்னா அதை நாத்தம்ன்னு சொல்ற”
”வேற என்ன சொல்றது, நீ இயல்பா இருந்தாதான் எனக்கு பிடிக்கும், எனக்கு பிடிக்கனும்ங்கறதுக்காக எதுக்கு இப்படி ஜோக்கர் போல வந்திருக்க”
”போ கண்மணி, ஆசை ஆசையா உன்னை அசத்தலாம்னு வந்தேன் இப்படி கேலி பண்றியே”
”சாரி குணா நான்தான் நேத்தே சொன்னேனே எனக்கு படிப்புதான் முக்கியம்னு”
”நான் இல்லைன்னு சொல்லலையே தாராளமா படி”
”அப்புறம் ஏன் என்னை அசத்தனும்னு நீ இப்படி ரெடியாகி வந்த”
”ஒரு நப்பாசைதான்”
”எதுக்கு”
”இப்படியெல்லாம் வந்தா நீ என்னை பார்ப்பன்னு”
”பார்த்தவரைக்கும் போதும் இனிமேல இப்படி வராத”
”ம் சரி நாளையில இருந்து எப்பவும் போலவே வரேன், அப்புறம் என்னைப் பார்த்து உனக்கு போர் அடிச்சிடும்”
”நான் என்ன உன் அழகை பார்த்தா விரும்பினேன்” என மேற்கொண்டு சொல்ல வாய் எடுத்து சட்டென நிறுத்த அவனுக்கு ஆர்வம் அதிகமானது
”ஏன் நிறுத்திட்ட பேசு பேசு”
”சார் வந்துட்டாரு அடங்கு” என அவனை அதட்டிவிட்டாள் வாத்தியார் வரவும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்து அமர்ந்தார்கள். அவனுக்கோ ஆர்வம் அதிகமானது
”சொல்லு கண்மணி“ என்றான் மெதுவாக
”ஷ் அமைதி” என்றாள் ரகசியமாக
”ப்ச் சொல்லு”
”அடிவாங்கப் போற” என அதட்ட அதில் அவன் அடங்கிப் போனான் அவளின் பேச்சைக் கேட்டு அவன் அடங்கிப் போனது கூட அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தது.
வாத்தியார் பாடம் எடுக்க சமர்த்துப்பிள்ளைகளாக இருவரும் பாடத்தை கவனித்தார்கள், அதோடு மதிய இடைவேளைக்கான பெல் அடிக்கவும் அனைவரும் கிளம்பிச் சென்றார்கள், அனைவரும் கிளம்பும் வரை காத்திருந்த குணாவோ அவளை பார்த்தபடி அமர்ந்தான்
”எப்படி பார்த்தாலும் நான் சொல்லமாட்டேன்” என சொல்லிக் கொண்டே அவள் டிபன் பாக்ஸ் எடுத்து பிரிக்க அதை லபக்கென பிடுங்கினான் குணா
”ஏய் என்ன செய்ற” என கேட்பதற்குள் அவன் சாப்பிடலானான்
”ப்ச் என்னோடதை சாப்பிட்டா நான் என்ன சாப்பிடறது”
”அவ்ளோ அக்கறையிருந்தா இரண்டு டிபன் பாக்ஸ் கொண்டு வரனும், இப்ப உனக்குதானே நஷ்டம்“
“அதுசரி நானே ஹாஸ்டல் கான்டீன் சாப்பாடு கொண்டு வந்தேன் அது என்ன நல்லாவாயிருக்கு, அதை போய் இப்படி விரும்பி சாப்பிடறியே”
”ம் பட்டினி கிடக்கறதுக்கு ஏதோ இப்படி ஒண்ணு கிடைச்சதே அதுவே எனக்கு பெரிசு” என அவன் சொல்ல அவளுக்கு மனம் வலித்தது
”உனக்கு குடும்பம் இல்லையா” என அவள் நேரடியாக கேட்க சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் சட்டென சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பாதி சாப்பாடு இருந்த டிபன் பாக்ஸை அவளிடம் தந்துவிட்டு கைகழுவ சென்றான்.
…. தொடரும்
error: Content is protected !!