Skip to content
Post Views: 261
கமலியோ இளப்பமாக சிரித்தாள்
”என்ன இன்னுமா உனக்குப் புரியலை, எனக்கும் முதல்ல புரியலை, அப்புறம்தான் தெரிஞ்சது நான் ஒரு திட்டம் போட்டா என் அண்ணன் கவின் தனி திட்டம் போட்டு கண்மணியை கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டான்“
”எப்படி”
”உன்கிட்டயிருந்து கண்மணியை காப்பாத்தற மாதிரி அவன் நடிச்சான், என் அப்பா அம்மாவோட வந்து கண்மணியை பொண்ணு கேட்டான், பாவம் கண்மணியோட அப்பா அம்மா என்ன செய்வாங்க, ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஊருக்குள்ள மதிப்பில்லாம இருந்தவங்க, இப்ப பெரிய பணக்கார வீட்டு சம்பந்தம் வரவும் மறுக்கலை, இந்த கல்யாணம் நடந்தா அவங்களுக்கு ஊருக்குள்ள பழையபடி மதிப்பும் மரியாதையும் வரும்னு நினைச்சாங்க, அதுக்காக கண்மணிகிட்ட உருக்கமா பேசி செத்துடுவேன்னு ப்ளாக் மெயில் பண்ணி அவளை சம்மதிக்க வைச்சி இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில கண்மணிக்கு கல்யாணம் ஆகப் போகுது அதுவும் யாரோட என் அண்ணன் கவினோட” என சொல்ல அவன் ஆடிப்போனான், அவனுக்கு தலையே சுற்றியது
Advertisement
”ஓ கல்யாணத்தில இல்லாம நான் ஏன் இங்க இருக்கேன்னு கேட்கறியா, இந்த நல்ல விசயத்தை உனக்கு அவசியம் சொல்லனும்னு நினைச்சேன் அதான் வந்தேன், சரி சரி நான் கிளம்பறேன், தாலி கட்டறப்ப நான் பக்கத்தில இருக்கனும் ஏன்னா நான்தானே கவினோட தங்கச்சி, அவன் கட்டற மூணு முடிச்சில ஒரு முடிச்சி நான் கட்டனும், அதனால நான் கிளம்பறேன்
அப்புறம் இதுக்கு மேலயும் கண்மணிக்காக நீ காத்திருக்கறது பிரயோசனமே இல்லை, ஒருவேளை அவள் கல்யாணத்தை பார்க்கனும்னு ஆசைப்பட்டா தாராளமா வந்து பாரு, காதல் தோல்வியில நீ படற இந்த வலியை பார்க்க பார்க்க எனக்கு ஆனந்தமா இருக்கு குணா, இப்பதான் என் மனசு சந்தோஷத்துல நிறைஞ்சிப் போச்சி” என சொல்லிவிட்டு அவள் செல்ல குணாவிற்கு பைத்தியம் பிடிப்பது போல் ஆனது.
அவசர அவசரமாக கண்மணியை தேடிக்கொண்டு விரைந்தான், கோயிலில் அதற்குள் கல்யாண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடையில் கவின் அமர்ந்திருந்தான் மாப்பிள்ளை போல, மணமகளாக வரவேண்டிய கண்மணியோ நிலைகுலைந்து கண்ணீருடன் இருந்தாள், அவளை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து மேடையில் அமரவைத்தார் அவளது தாய், அவளோ அப்போதும் தாயை பாவமாக பார்த்தாள், பார்வையால் கெஞ்சினாள், ஆனால் அவர்களோ மனம் இரங்கவில்லை, கல்நெஞ்சம் பிடித்த இவர்களுக்காக தன் வாழ்க்கையில் பாதியை இழந்தோமே என நினைத்து அந்நேரம் ஆதங்கப்பட்டாள்
Advertisement
குணா என்னவானான்? எப்படி அவன் முன் நிற்பது? அவனை எப்படி இங்கு வரவழைப்பது? இங்கு நடக்கும் திருமணம் பற்றி தெரிந்தால் அவன் நிலைமை என்னாகும்? என அப்போது கூட குணாவை பற்றியே நினைத்துக் கொண்டு கண்கள் கலங்கிக் கொண்டிருந்தாள் கண்மணி.
Advertisement
கவினோ மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் காதலித்த கண்மணியை கரம்பிடிக்கும் நேரத்திற்காக காத்திருந்தான்.
அதே நேரம் கமலி வந்தாள். அவளைக்கண்டதும் கவினின் முகம் மாறியது, அவளே அவனிடம் வந்தாள்
”கமலி எங்க போயிருந்த”
Advertisement
”குணாவை பார்க்க“
”அடிப்பாவி அவனை ஏன்டி போய் பார்த்த”
”கண்மணிக்கு கல்யாணம் ஆச்சே அதனால அவனுக்கு விசயத்தை சொல்லிட்டு வரப்போனேன்”
”சே நான் நல்லாயிருக்கறதே உனக்கு பிடிக்காதா, இப்ப அவன் வருவான் கண்மணி எழுந்து போயிடுவா, அப்புறம் என் நிலைமை என்னாகும்“
”அப்படி எதுவும் ஆகாது கண்மணி எழமாட்டா“
”எப்படி சொல்ற”
”அவளுக்கு குணாவை விட அவளோட அப்பா அம்மாதான் முக்கியம்“
”அப்படி பார்த்தாகூட குணா கண்மணியை விடமாட்டானே”
”கண்மணி குணாவை நெருங்க விடமாட்டா, நீ பயப்படாத, இன்னிக்கு உனக்கும் கண்மணிக்கும் கல்யாணம், அதை நினைச்சி சந்தோஷமா இரு” என சொல்லிவிட்டு அவள் நகர அவனுக்கோ பயம் வந்தது.
எப்படி? குணா வந்தால் கண்மணி குணாவிடம் செல்வாளா, அல்லது தாய் தந்தைக்காக தன்னை திருமணம் செய்துக்கொள்வாளா, திருமணம் ஆனபின் குணா அழைத்தால் சென்றுவிடுவாளா, அல்லது தன்னுடன் வாழ மறுத்து தற்கொலை செய்துக் கொள்வாளா அல்லது தன்னையே கொன்றுவிடுவாளா, எப்படி இவளுடன் வாழ்வது என நினைத்து அச்சத்துடன் திரும்பி கண்மணியைப் பார்க்க அவளோ கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருந்தாள், அவளைப் பார்க்கையில் அவனுக்கு பயமே வந்தது
குணா வந்தால் தன்னை கொன்றுவிடுவான், இல்லை என்றாலும் இவள் தன்னை கொன்றுவிட்டால் என்ன செய்வது, காதலுக்காக உயிரையா விட முடியும் என நினைத்தவன் கண்மணியிடம்
”கண்மணி” என அழைக்க அவளோ திரும்பி கூட பார்க்கவில்லை, அவன் கூப்பிடுவது கூட அவளுக்கு நாராஸமாக கேட்டது, அவன் பக்கத்தில் அமர்வதை கூட அருவெறுப்பாக நினைத்தாள், அவளின் முகத்தில் தெரிந்த வெறுப்பைக்கண்டு கவின் திடுக்கிட்டான்
”கண்மணி இந்த கல்யாணத்தில உனக்கு சம்மதம்தானே“ என வேண்டாத ஒரு கேள்வியை அந்நேரம் கேட்டு வைக்க, அவளோ அவனை எரித்துவிடுவது போல பார்த்து வைக்க அந்நேரம் கண்மணி அவனுக்கு காதலியாக அல்ல பத்ரகாளி போல தெரிந்தாள்.
அந்நேரம் குணா அவ்விடம் ஓடிவந்து நின்றான், அவன் வந்ததை அனைவரும் கண்டார்கள், கண்மணியோ அவனை உயிர்ப்பில்லாமல் பார்த்தாள், அவனோ அங்கு கலாட்டா செய்வான், சண்டையில் இறங்குவான் என கவின் உள்பட அனைவரும் எதிர்பார்த்தார்கள், ஆனால் அவன் அவ்வாறு எதுவும் செய்யவில்லை
கண்மணியின் உத்தரவுக்கு கீழ்படிந்து அவளின் கட்டளைக்காக காத்திருந்தான், அவனிடம் தெரிந்த அமைதியைக்கண்டு கவின் பயத்தில் வெலவெலத்துப் போனான்
”குணா ஏன் அமைதியா இருக்கான், கண்மணி ஏன் எதுவும் செய்யாம இருக்கா, சந்தேகமா இருக்கே, இப்ப இவளை கல்யாணம் செய்துக்கலாமா வேணாமா, ஒரே குழப்பமா இருக்கே” என அவன் குழம்பிக் கொண்டிருக்க குணா கண்மணியை பார்த்தது பார்த்ததுதான்
கண்மணியோ அவனையே பார்த்தபடி இருந்தாள், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை அங்கிருந்த அனைவருமே கண்டு வியந்தார்கள், கண்மணியோ தனது பரிதாபமான நிலைமையை கண்களால் அவனுக்கு புரிய வைக்க அவனோ தனது பாவப்பட்ட நிலைமையை அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
இருவருக்கும் அவரவர்களின் எண்ணங்கள் புரிந்துப் போனது, ஆனால் என்ன செய்ய முடியும் என நினைத்து உள்ளுக்குள் கலங்கிக் கொண்டிருக்க தாலி கட்டும் நேரம் வந்தது, கவினிடம் தாலி வந்ததும் சட்டென ஏதோ ஒன்று தோன்றி கண்மணி கவினை கேவலமாக ஒரு பார்வை பார்த்து இளப்பமாக ஒரு சிரிப்பு சிரித்து வைக்க அதைக்கண்டு அவனுக்கு திக்கென்றது, உடனே கவின் குணாவை திரும்பிப் பார்த்தான் அவனும் அதே போல அவனை இளப்பமாக பார்த்து கேலியாக சிரிக்க, அதில் கவினுக்கு சந்தேகம் அதிகமானது
”கவின் தாலியை கட்டு” என கமலி சொன்னது காதில் விழுந்தது
அனைவரும் அட்சதை தூவ காத்திருந்தார்கள், ஆனால் கவினால் இயலவில்லை, கைகள் நடுங்கியது, எதை எதையோ நினைத்து பயந்தான், தேவையின்றி கண்மணி மீது சந்தேகம் கொண்டான், தாலி கட்டும் முன் அவளிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டான்
”கண்மணி நீ இப்பவும் கற்போடதான் இருக்கியா” என கேட்டதும் அங்கிருந்த அனைவரின் முகமும் சுருங்கிவிட்டது
அனைவரும் அமைதியாகிவிட்டனர், கண்மணியின் பெற்றோர் கூட இதை எதிர்பார்க்கவில்லை, கமலிக்கு தூக்கிவாரிப்போட்டது, குணாவுக்கு கோபம் எரிமலை போல வெடிக்க கண்மணி மட்டும் பதில் சொல்லாமல் சின்னதாக சிரித்தாள், அந்த சிரிப்பில் கவின் தவறாகவே புரிந்துக் கொண்டான், சட்டென மணமேடையை விட்டு எழுந்துக் கொண்டான்.
அவ்வளவுதான் ஒரே கூச்சல், சலசலப்பு, கமலியோ கவினை திட்டினாள், கவினின் பெற்றோர் கூட அவனை திட்டினார்கள், கண்மணி நிம்மதியாக தன் பெற்றோரிடம் சென்று நின்றுக் கொள்ள குணாவோ அமைதியாக அவ்விடம் விட்டு ஊர் பார்த்துச் சென்றுவிட்டான்
10 நிமிடத்தில் அனைத்தும் நடந்து முடிந்தது, கவின் கண்மணியை திருமணம் செய்துக் கொள்ள பிடிக்காமல் தன் பெற்றோருடன் அங்கிருந்து சென்றுவிட அவ்வளவுதான் ஊர் வாயில் கண்மணியும் அவளது பெற்றோரும் அவல் போல விழுந்து எழுந்தார்கள்
அவர்களின் கேவலமான பேச்சில் கண்மணி கலங்கித்தான் போனாள், அவளது பெற்றோரோ மகளின் திருமணம் இப்படி பாதியில் நின்றுவிட்டதை நினைத்து கலங்கினார்கள், போதாக்குறைக்கு ஊர் பேச்சை வேறு கேட்கும் சூழ்நிலை வந்தது, அந்நேரம் மக்களும் நன்றாக அவர்களை கேவலப்படுத்தி பேசிவிட்டு கலைந்துச் சென்றார்கள்.
விடுமுறை முடிந்ததும் மாணவ மாணவியர் அனைவரும் கல்லூரிக்கு வந்தவண்ணம் இருக்க கமலியோ காலேஜ் வாசலிலேயே தவமாய் தவம் கிடந்தாள், குணா வருவானா, கண்மணி வருவாளா என ஏங்கினாள், அந்நேரம் கவின் வரவும் அவளுக்கு அவனை பார்க்கவே பிடிக்கவில்லை, வெறுப்புடன் முகத்தை திருப்ப கவினோ
”கமலி ஏன் இப்படி என்னை ஒதுக்கற”
”பின்ன நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு மாலை போட்டு மரியாதை செய்வாங்களாமா“
”அப்படி என்ன செய்தேன்“
”என்னவா அறிவில்லை உனக்கு, ஒரு பொண்ணுகிட்ட கேட்க கூடாத கேள்வியை கண்மணி கிட்ட அதுவும் எப்படி தாலிகட்டறப்பதான் கேட்கனுமா, அவளை உசுருக்குசுரா காதலிச்சதா சொன்னியே, இப்படியா அவள் மேல சந்தேகப்படுவ, சே நீயெல்லாம் எனக்கு அண்ணன் சொல்லிக்கவே அருவெறுப்பா இருக்கு”
”கமலி அந்நேரம் எனக்கு பயம் வந்துடுச்சி, குணாவும் சரி கண்மணியும் சரி அமைதியா இருந்தாங்க, எனக்கு சந்தேகமா இருந்தது, அதனால நான் அப்படி கேட்டேன் அதுக்கு கண்மணி சிரிச்சா தெரியுமா“
”பின்ன சிரிக்காம என்ன செய்வாளாம் உன்னை விட முட்டாளை அவள் பார்த்திருக்க மாட்டா“
”அப்ப அவள் சிரிச்சதுக்கு அர்த்தம் என்ன”
”நீ ஒரு முட்டாள்னு நினைச்சி சிரிச்சா, அவள் மட்டும் இல்லை அங்கிருந்த எல்லாரும் அப்படித்தான் நினைச்சாங்க, சே உன்னால எனக்கும் அவமானமாயிடுச்சி, வெளிய தலைகாட்ட முடியலை, நல்லவேளை இந்த சம்பவம்லாம் மதுரையில நடந்ததால காலேஜ்ல எதுவும் தெரியலை, தெரிஞ்சிருந்தா நம்மளை எல்லாரும் காரிதுப்பியிருப்பாங்க”
”தப்புதான் பெரிய தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடு கமலி“
”சே உன் மன்னிப்பு யாருக்கு வேணும் எந்த பொண்ணும் உன்னை மன்னிக்க மாட்டா, இனிமேல கண்மணி மேல நான் உசுரையே வைச்சிருக்கேன், காதலிக்கிறேன், அது இதுன்னு சொன்ன கழுத்தை நெறிச்சி கொன்னுடுவேன்”
”இப்ப எதுக்கு இந்த விசயத்தை இவ்ளோ பெரிசாக்கற”
”பின்ன இது என்ன சாதாரணமான விசயமா இதே கேள்வியை என்கிட்ட எவனாவது கேட்டிருந்தா“
”அவனை கொன்னு புதைச்சிருப்பேன்” என்றான் கோபத்துடன் கவின்
”இப்ப ஏன் உனக்கு கோபம் வருது”
”உன்னைப் போய் சந்தேகப்படலாமா”
”அப்ப நீ மட்டும் கண்மணியை சந்தேகப்படலாமா“
”அவள் குணாவை காதலிச்சவ“
”நானும்தான் குணாவை காதலிச்சேன், அப்ப நானும் கற்போட இருக்கேனா இல்லையான்னு ஏன் கேட்கலை“
”பைத்தியமா நீ, உன்னை குணா காதலிக்கலையே”
”அட போடா, உன்னை எந்த ரகத்தில சேர்க்கறதுன்னு சத்தியமா தெரியலை” என சொல்ல அவனுக்கு அவமானமாகிப் போனது, அதே நேரம் குணா தனது பைக்கில் வந்தான் அவனைக்கண்டதும் கமலி உற்சாகமானாள்
”குணா வர்றான்” என்றாள் கவினோ
”ப்ச் அவன் வந்தா உனக்கென்ன, மறுபடியும் பழிவாங்கற வேலையை ஆரம்பிச்சிட்டியா”
”இனி நான் ஏன் அவனை பழிவாங்கப் போறேன் எல்லாம் முடிஞ்சது”
”புரியலையே“
”உன்னை மாதிரி குணா இல்லை, அவனை பழிவாங்க நினைச்சது என் தப்பு, கெட்ட புத்தி அவனுக்கு இல்லை உனக்குதான் இருக்கு”
”போதும் நிறுத்தறியா ப்ளீஸ்” என கெஞ்ச அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்
குணாவோ தனது பைக்கை ஸ்டான்டில் விட்டுவிட்டு வர கமலி அவனை இன்முகத்துடன் வரவேற்றாள்
”குணா வா வா எப்படியிருக்க நல்லாயிருக்கியா” என நலம் விசாரிக்க அவனோ சிரித்த முகத்துடன்
”எனக்கென்ன குறைச்சல் உன் புண்ணியத்தில நான் நல்லாவே இருக்கேன்”
”ஏன் இப்படி சொல்ற”
”நீ நினைச்சதை சாதிச்சிட்ட அப்புறம் என்ன“
”அதான் கண்மணியோட கல்யாணம் நடக்கலைல்ல”
”ஓ இப்ப கல்யாணம் நடக்கலைங்கறதுதான் உன்னோட கவலையா”
”சே சே இல்லை, அப்படியில்லை, அது வந்து கவின் போன பின்னாடி கண்மணியை நீ கல்யாணம் செய்திருப்பன்னு நான் எதிர்பார்த்தேன், ஆனா நீ ஏன் அப்படி செய்யலை, அங்கிருந்து கிளம்பி வந்துட்ட, அதுக்கு அப்புறம் கண்மணி பக்கம் நீ போகவேயில்லையே ஏன்”
என கேட்க அவனோ கலகலவென சிரித்தான்
”ஒரு பொண்ணோட பரிதாபமான நிலைமையை பயன்படுத்தி அவளை அடைய நினைக்கறது ஒரு ஆம்பளைக்கு அழகில்லை, அவளே விரும்பி என்னை ஏத்துக்கிட்டிருந்தா அப்பவே தாலி கட்டியிருப்பேன், ஆனா அவளோ அப்பா அம்மா சம்மதம் வேணுமேன்னு அமைதியாயிட்டா, அதனால நானும் கிளம்பி வந்துட்டேன், அதுக்காக அவளை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு அர்த்தம் இல்லை, அவள் விருப்பத்தோட அவளோட அப்பா அம்மா சம்மதத்தோட நான் கல்யாணம் செய்துக்குவேன், அவசியம் என் கல்யாணத்துக்கு நீ வரனும்”
”கண்டிப்பா வரேன் இந்த படத்தில காட்டற மாதிரி ஹீரோயிசம் செய்வன்னு நினைச்சேன் ஆனா இல்லை“
”நான் என்ன ஹீரோவா சாதாரண மனுஷன், சினிமால காட்டற மாதிரியெல்லாம் நிஜத்தில நடக்காது கமலி” என சொன்னவன் கவினைப் பார்த்தான்
”உனக்கு ஆயுசு கெட்டி, என்னிக்கு என் கோபத்துக்கு நீ பலியாகப்போறியோ தெரியலை, உன்னை நினைச்சா பரிதாபப்படறதா இல்லை கோபப்படறதான்னே தெரியலை, ஆனா ஒண்ணு நீ ஆம்பளை வர்க்கத்துக்கே கேவலம்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட கவினுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது, அவனால் அவ்விடத்தில் இருக்க கூட முடியாமல் அவசர அவசரமாக வகுப்புக்கு வந்தான்
குணா வழக்கம் போல கடைசி வரிசையில் அமர்ந்திருக்க, கவினோ கடைசி வரிசையில் தலையை தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான், கமலியோ கண்மணியின் வரவிற்காக பார்த்து பார்த்து நொந்துப் போய் குணாவிடம் வந்தாள்
”குணா”
”ம் என்ன கண்மணி இன்னும் வரலையா”
”ஆமாம் நான் எவ்ளோ கவலையா இருக்கேன் நீ என்ன ஜாலியா இருக்க”
”அவள் வருவா”
”எப்படி வருவா பெல் கூட அடிச்சிட்டாங்க இன்னும் வரலையே”
”அவளுக்கு எல்லா விசயத்தையும் விட படிப்புதான் ரொம்ப முக்கியம், அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டா, கண்டிப்பா வந்துடுவா நீ எதுக்கு டென்ஷன் ஆகற“
”இல்லை அவளை நினைச்சா எனக்கு கஷ்டமாயிருக்கு“
”பரவாயில்லையே மத்தவங்களோட கஷ்டத்தைப் பார்த்து நீ கவலைப்படறியா, அவ்ளோ நல்லவளா நீ“
”ப்ச் நான் மாறிட்டேன், திருந்திட்டேன், எனக்குள்ள இப்ப பழிவாங்கற எண்ணம் கூட இல்லை தெரியுமா“
”அதான் பார்த்தாலே தெரியுதே, ஒண்ணு சொல்லவா உன்னை நான் ரிஜக்ட் பண்ணதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது”
”என்னது”
“கண்டிப்பா என்னை உன் வீட்ல ஒத்துக்க மாட்டாங்க“
”ஏன் அப்படி சொல்ற”
”பின்ன பணக்கார வீட்டு பொண்ணு நீ, நான் யாரு ஏழை, எனக்கு அப்பா அம்மா சொந்த பந்தம்னு எதுவும் கிடையாது, கிடைச்ச இடத்தில தங்கிக்கிட்டு ரோட்டோரத்தில கையேந்திபவன்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன், நான் படிச்சி பெரியாளாகி கைநிறைய சம்பாதிக்க இன்னும் நிறைய வருஷம் ஆகும், அதுவரைக்கும் நீ ஏன் காத்திருக்கனும், சொல்லு, என்னை போல ஒருத்தனை உன் வீட்ல யாருக்கும் பிடிக்காது, அவங்க உனக்காக பெரிய பணக்கார வீட்டு பையனா இல்லைன்னா பெரிய தொழிலதிபரைதான் பார்ப்பாங்க
அவங்களை நீ கல்யாணம் செய்துக்கிட்டா உன் வாழ்க்கை நீ ஆசைப்பட்ட மாதிரியே ஜாலியா இருக்கும், இதே என்னை நீ கல்யாணம் செய்துக்கிட்டன்னு வையேன், மிடில்க்ளாஸ் வாழ்க்கையை விட மோசமான வாழ்க்கையைத்தான் நீ அனுபவிக்கனும், நமக்கு கல்யாணம் ஆகி என்கூட வாழ முடியாம நீ கஷ்டப்பட்டு என்னை விட்டு பிரிஞ்சி போயிடுவ
இதெல்லாம் எதுக்கு சொல்லு, நீன்னு இல்லை எனக்கு யாரெல்லாம் ப்ரபோஸ் பண்ணாங்களோ எல்லாருக்குமே இந்த காரணத்தை மனசுல வைச்சிதான் ரிஜக்ட் பண்ணேன், அதனால நீ என்னை தப்பா நினைக்காத, சுயநலமா பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு உன்னை நான் விரும்பியிருந்தா அதுக்கு பேரு காதலே இல்லை, சத்தியமா உன் மேல எனக்கு காதல் வரலை, அய்யோ பாவம்ங்கற நினைப்புதான் வந்தது” என சொல்ல அவளோ மெதுவாக பெருமூச்சுவிட்டு
”இதை புரிஞ்சிக்க எனக்கு இத்தனை நாள் ஆச்சி”
“பரவாயில்லை விடு“
”ஆமா எல்லாரையும் ரிஜக்ட் பண்ண மாதிரி கண்மணியை ஏன் உன்னால ரிஜக்ட் பண்ண முடியலை” என கேட்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது
”என்ன சிரிப்பு பதில் சொல்லு“
”எல்லா பொண்ணுங்களையும் பார்க்கறப்ப எனக்கு பரிதாபம் எழுந்தது, ஆனா கண்மணியை பார்க்கறப்ப எனக்கு காதல் வந்தது, அந்த காதலுக்கு முன்னாடி என்னோட பலகீனம் இயலாமை எல்லாமே காணாம போயிடுச்சி, எந்த ரீசனை மனசுல வைச்சி எல்லாரையும் ரிஜக்ட் பண்ணேனோ அந்த ரீசன் ஏனோ கண்மணியை பார்க்கறப்ப எனக்குள்ள தோணவேயில்லை, அவள் எளிமையானவ, என்னைப் போல வாழ்ந்தவ, நான் வாழற வாழ்க்கையை அவள் விரும்பி வாழ்வா, அரண்மனையில உட்கார வைச்சி அழகு பார்க்கனும்னு ஆசைப்பட மாட்டா, சாதாரண குடிசை வீட்ல கூட சந்தோஷமா இருக்கலாம்னு நினைப்பா அதோட” என நிப்பாட்டினான்
”என்ன” என அவள் ஆர்வமாக கேட்க அவனோ வேறு பக்கம் பார்த்தான், அவன் பார்த்த இடத்தில் கமலியும் பார்த்தாள்
கண்மணி பாவாடை தாவணியில் அழகாக அலங்காரம் செய்து அம்சமாக நடை நடந்து வகுப்புக்குள் வந்து தனது இருக்கையில் அமரும் முன் ஒரு முறை ஓரவழியில் குணாவை பார்த்துவிட்டு இதழில் ஒரு குறுநகை புரிந்துவிட்டு அமர்ந்தாள்.
அதைக்கண்ட குணாவோ ஏக்க பெருமூச்சுவிட்டு
”ரொம்ப அழகாயிருக்கா, அவள் அழகு என்னோட திமிரை விரட்டிடுச்சி, இப்படியொரு பேரழகிக்கு அடிமையா கூட வாழ்ந்துடலாம்”
”அப்போ நீ அவள் அழகை பார்த்துதான் காதலிச்சியா“
“காதலிச்சப்ப அவள் யார்ன்னு தெரியலை அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது”
”எதை சொல்ற ஓ அந்த லவ் லெட்டர்ஸ்தானே அதை எல்லாம் நான்தான் எழுதினேன்”
”அதனால என்ன”
”இல்லை நான் எழுதின லெட்டரை படிச்சிதானே நீ கண்மணியை லவ் பண்ண”
”சினிமால ஒரு பாட்டு வருது அதை பாடினவன் ஒருத்தன், மியூசிக் போட்டவன், ஒருத்தன் பாடல் வரிகளை எழுதினவன் ஒருத்தன், நடிச்சவன் ஒருத்தன், ஆனா நடிச்சவனைதானே மக்கள் எல்லாரும் விரும்பி பார்க்கறாங்க, அவனுக்கு பின்னாடி இருந்த பாடினவனை எழுதினவனையா பார்க்கறாங்க, அதுபோலதான் இதுவும், அந்த லெட்டர்ஸ் எல்லாம் கண்மணி குணாவுக்கு எழுதினது, அதனால அதை படிக்கறப்ப எனக்கு கண்மணிதான் எழுதினதா தோணுமே தவிர கமலி எழுதினதா நினைக்க வராது, ஆனாலும் நீ நல்லாதான் லவ்லெட்டர் எழுதற”
”தாங்ஸ்”
”ம்ம் ஆமா கேட்கனும்னு நினைச்சேன் யாரை கேட்டு அந்த கிப்டை தந்த, அது தப்புன்னு தெரியாதா உனக்கு” என கேட்க அவளோ
”சாரி சாரி சாரி என்னை மன்னிச்சிடு, ஏதோ ஒரு கோபத்தில அப்படி செய்துட்டேன் செய்த பின்னாடிதான் என்னையே திட்டிக்கிட்டேன்”
”நீயும் சரி உன் அண்ணனும் சரி, காதலை ஏன்தான் இப்படி கொச்சைப்படுத்தறீங்களோ, அவன் என்னடான்னா கற்பு இருக்கா இல்லையான்னு சந்தேகப்படறான், நீ என்னடான்னா தேவையில்லாத விசயத்தை கிப்ட்டா அனுப்பற, ஒண்ணு சொல்லவா நீ அதை அனுப்பின பின்னாடிதான் எங்களுக்கு உண்மை தெரிஞ்சது, அதுவரைக்கும் கண்மணிதான் எனக்கு எல்லா லெட்டரும் தந்ததாவே நான் நம்பினேன், அந்த கிப்ட்டுக்கு அப்புறம்தான் யாரோ இப்படி விளையாடறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டோம், அதுக்காக காதலை நாங்க இழக்கலை, அதுதான் காதல்ல இருக்கற ஒரு ஸ்பெஷலே”
”உண்மைதான் என் காதலை விட உங்க காதல்தான் புனிதமானது“
என சொல்ல அவனோ மென்மையாக சிரித்தான்.
…. தொடரும்
error: Content is protected !!