Skip to content
Post Views: 337
வாத்தியார் வரவும் கமலி தன் இடத்திற்கு சென்றுவிட குணாவின் பார்வை கண்மணி பக்கம் தாவியது, வாத்தியார் பார்க்காத போது கண்மணி சற்று திரும்பி குணாவைப் பார்த்து ஒரு புன்னகை பூத்தாள், அந்த புன்னகைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பதை அந்நேரம் உணர்ந்து அவளுக்கு தான்தான் காதலன் என நினைத்து கர்வம் கொண்டான்.
மதிய இடைவேளை எப்போது வரும் என ஏங்கித்தவித்தான் குணா, பெல் அடித்த மறுநொடி வாத்தியார் கூட வகுப்பை விட்டு சென்றிருக்க மாட்டார், அவசர அவசரமாக குணா கண்மணியிடம் வந்து நின்று ஈஈஈ என இளிக்க அவளுக்கு அவனின் செயல் சிரிப்பை தந்தது, மாணவ மாணவியர் உணவு சாப்பிட வெளியே செல்ல கமலியோ கவினைப் பார்த்தாள், அவனோ தலைகுனிந்தபடியே இருக்க
”கவின் நீ தனியா போய் சாப்பிட்டுக்க, இனிமேல உன்கூட நான் சேர்றதாயில்லை, நான் தனியாவே இருக்கேன்” என சொல்லிவிட கவினுக்கு தூக்கிவாரிப் போட்டது
Advertisement
”ஏன் கமலி எதுக்கு இப்படி சொல்ற”
”உன் மேல நான் கோபத்தில இருக்கேன் இனிமேல உன் தங்கச்சின்னு கூட என்னால வெளிய சொல்ல முடியாது”
”ஏன் சொன்னா என்ன உனக்கு அவமானம் வந்துடுமா”
Advertisement
”ஆமாம் நீ செஞ்ச வேலைக்கு எனக்குதான் அவமானமா இருக்கு”
Advertisement
”போதும் இதோட நிப்பாட்டிக்க”
”சரி நான் குணாகிட்ட போறேன்“
”இரு இப்ப எதுக்கு நீ அவன்கிட்ட போற”
Advertisement
”தப்பா நினைக்காத, இப்ப நான் திருந்திட்டேன், எனக்குள்ள எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை, குணாவை நண்பனா பார்க்கறேன், அங்க பாரு குணாவும் கண்மணியும் சாப்பிடப் போறாங்க, நானும் அவங்களோட சேர்ந்துக்க போறேன்” என சொல்ல கவின் தடுத்தான்
”முடியாது அவங்களோட உனக்கென்ன வேலை, அவன் என்னை எப்படியெல்லாம் பேசி அவமானப்படுத்தினான், எனக்கு தலையே நிமிர்த்த முடியலை”
”நீ செய்த தப்புக்கு இப்படிதான் அவமானப்படனும், குணா மேல தப்பில்லை அவன் சரியான ஆம்பளை“
”அப்போ நான் ஆம்பளையில்லையா”
”நீ கோழை” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட கவினால் அதை தாங்கிக் கொள்ள இயலவில்லை.
கமலியோ குணா கண்மணியிடம் சென்று கலகலப்பாக பேச அதற்கு அவர்கள் சிரிக்க அதைக்கண்டு எரிமலையாக பொங்கினான் கவின், அங்கிருந்து செல்லாமல் அவர்களையே கோபமுடன் பார்க்கலானான்.
”கண்மணி நீ எங்க வரமாட்டியோன்னு நினைச்சி நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா” என்றாள் கமலி
”எதுக்கு பயந்த” என கண்மணி கேட்க
”பின்ன நடந்த விசயத்தை வைச்சி எங்க உன் அப்பா அம்மா உன்னை படிக்க அனுப்ப மாட்டாங்களோன்னு நினைச்சிட்டேன்”
”ப்ச் படிப்புதான் எனக்கு முக்கியம் இது அவங்களுக்கும் தெரியும்”
”இப்பதான் உன்னை நான் நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன், கவின் உன்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லிட்டான், அவன் பேச்சை நம்பி உன்னையும் நான் பழிவாங்கிட்டேன், சாரி என்னை மன்னிச்சிடு”
”பரவாயில்லை விட்டுத்தள்ளு”
”உனக்கு என்மேல கோபம் வரலையா“
”இதுல கோபப்பட என்ன இருக்கு, உன்னாலதானே எனக்கு குணா கிடைச்சான், அதுக்கு நான்தான் உனக்கு நன்றி சொல்லனும்” என சொல்ல கமலி வியந்தாள்
”நிஜமாவே சொல்றேன், நீ ரொம்ப நல்லவ, உன் அருமை குணாவுக்கு தெரிஞ்சிருக்கு ஆனா அந்த கவின் இருக்கானே ராஸ்கல், உன் மனசை நோகடிக்கற மாதிரி பேசிட்டான் அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்கறேன்“
”அய்யோ விடு எத்தனை மன்னிப்புதான் கேட்பியாம்”
”ஆமா கல்யாணம் நின்னதை நினைச்சி நீ வருத்தப்படலையே“
”இல்லை சந்தோஷப்பட்டேன்”
”நிஜமாவா”
”ஆமாம்”
”அந்த நேரம் குணா உன்னை கல்யாணம் செய்திருந்தா உனக்கு அவமானம் வந்திருக்காதுல்ல“
“மானம் அவமானம்லாம் காதலுக்கு முன்னாடி ஒண்ணுமேயில்லை, குணா அப்ப என்னை கல்யாணம் செய்ய முன் வந்திருந்தா நான் ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன், முடியாதுன்னு சொல்லியிருப்பேன்”
”அப்படியா“
”ஆமாம் என்னோட விருப்பமும் என் அப்பா அம்மாவோட சம்மதத்தோடதான் எங்க கல்யாணம் நடக்கனும், அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் குணாவும் காத்திருப்பான்னு நம்பறேன்”
என சொல்லிவிட்டு குணாவை பார்க்க அவனோ
”தாராளமா காத்திருக்கேன்” என சொல்லி சிரிக்க கண்மணியோ மென்மையாக சிரித்தாள்.
கமலியோ அவர்கள் சாப்பிடும் உணவைக்கண்டு வெகுண்டாள்
”என்ன சாப்பாடு இது, இதை போய் சாப்பிடறீங்க வாங்க கான்டீன்ல போய் சாப்பிடலாம்”
“வேணாம் கமலி அங்க பணம் அதிகமாகும்”
”அதுக்காக இப்படியா சாப்பிடுவீங்க“
”இது பழகிடுச்சி“
”இது நல்லாயில்லையே ஊசிப் போன வாசனை வருது”
”ஆமாம் லைட்டாதான் வருது பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”
”அய்யோ என்னால முடியலை, ஏன் ரெண்டு பேரும் இப்படியிருக்கீங்க“
”நாங்க இயல்பாதான் இருக்கோம் உனக்குதான் புதுசா தெரியுது”
”இதை எப்படி சாப்பிடறீங்க எனக்கு கஷ்டமாயிருக்கு இருங்க நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்“
“வேணாம் கமலி அதுக்கு அவசியம் இல்லை நாங்க சாப்பிட்டோம்”
“ப்ச்” என அவள் அலுத்துக் கொள்ள குணாவோ கண்மணியிடம்
”அப்புறம் கண்மணி நீ சொன்னதை எப்ப செய்யப் போற”
”எதை சொல்ற”
”அதான் எனக்கு சமைச்சி போடறன்னு சொன்னியே”
”ஓ அதுவா முதல்ல டெஸ்ட் ரிசல்ட் வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்”
”ம் சரி“
”என்ன என்ன பேசிக்கிறீங்க என்ன ரிசல்ட் புரியலையே”
”ஓ அதுவா இந்த சாப்பாடு சரியில்லைல்ல அதனால நான் உனக்கு சமைச்சி போடறேன் நீ ஒரு வீட்டை பாருன்னு சொன்னேன்”
”ஓ அந்தளவுக்கு போயாச்சி சூப்பர் லிவ்விங் டூ கெதரா”
”அதெல்லாம் இல்லை, சாப்பாடு மட்டும் செய்ய போறேன் அவ்ளோதான், இப்ப லாட்ஜ்ல தங்கறாரு அங்க சரியான வசதிகூட இல்லை, சாப்பாடும் சரியில்லை, இப்படியிருந்தா எப்படி படிப்பு ஏறும்“
”எப்பபாரு படிப்பு படிப்பு படிப்புதானா வேற எதுவும் இல்லையா”
”வேற என்ன”
”காதலிக்கறவங்க என்னவெல்லாம் செய்வாங்க தெரியுமா, ஆனா உங்களைப் பார்த்தா காதலிக்கற மாதிரியே தெரியலை, ஏதோ நண்பர்கள் போல பழகறீங்க“
”காதலுக்குள்ள நட்பு இருக்கறது ஆரோக்கியமான விசயம், சண்டை வரும் போது நட்பாகவும் சந்தோஷம் வரும் போது காதலர்களாகவும் நாங்க வாழ்க்கையை என்ஜாய் பண்றோம்”
”வாவ் இது நல்லாயிருக்கே“
”பொறாமைப்படாத கமலி, உன்னையும் ஒருத்தன் காதலிப்பான் அவன்கூட நீ நல்லபடியா வாழ்ந்து காட்டு போதும்“
”நிச்சயமா உங்களை பார்த்து கத்துக்கறேன்”
”எதை”
”காதலிக்கறது எப்படின்னு“ என சொல்ல அம்மூவரும் கலகலவென சிரிக்க பெல் அடிக்க சரியாக இருந்தது, அனைவரும் தங்கள் இருப்பிடத்தில் அமர்ந்துக் கொள்ள வாத்தியார் வரவும் பாடம் தொடங்கியது.
மாலை வேளை கல்லூரி முடிந்ததும் குணா பைக் ஓட்டிக் கொண்டு கண்மணியிடம் வந்து நின்றான், அவளோ கமலியுடன் இருந்தாள்
”டைம் ஆச்சி போகலாமா” என அவன் அழைக்க கண்மணியும் சரியென்றாள் கமலியோ
”ஓ ஹாஸ்டல்ல ட்ராப் பண்றியா பரவாயில்லையே இந்தளவுக்கு முன்னேறியிருக்கீங்க”
”ட்ராப்தான் ஆனா ஹாஸ்டல்ல இல்லை”
”பின்ன வேற எங்கயாவது அவுட்டிங் போறீங்களா“
”அதெல்லாம் இல்லை, நாங்க பார்ட் டைம் ஜாப்க்கு போறோம்”
”அப்படியா இது எனக்குத் தெரியாதே”
”ஏன் தெரிஞ்சிருந்தா அங்கயும் வந்து குழப்பம் பண்றதுக்கா“
”குணா ப்ளீஸ் நான்தான் மாறிட்டேன்ல ஏன் என்னை கேலி செய்ற”
”சும்மாதான்”
”ஆமா என்ன வேலை செய்றீங்க”
”நான் சூப்பர் மார்க்கெட்ல பில் கவுண்டர்ல வேலை செய்றேன், குணா கம்ப்யூட்டர் கோச்சிங் சென்ட்ர்ல பாடம் சொல்லித் தரான்”
”ஓ நைஸ் ஆமா நீங்க போற இடம் எங்க இருக்கு”
”இரண்டு பேருமே ஒரே இடத்துக்குதான் போறோம், சூப்பர் மார்க்கெட் எதிர்க்க இருக்கற பில்டிங்க்லதான் நான் கோச்சிங் சென்டர்ல வேலை செய்றேன், அதனால அவளை பிக்கப் பண்ணி ட்ராப் பண்றேன்”
”சரி கமலி நாங்க கிளம்பறோம் டைம் ஆயிடுச்சி” என கண்மணி சொல்லிவிட்டு குணாவின் பைக்கில் ஏறிக் கொள்ள அவனும் பைக்கை ஓட்டிக் கொண்டு சென்றான்.
அவன் சென்றதும் கமலியின் சிரித்த முகம் அப்படியே மாறி கோரமாகியது, கவின் வந்தான்
”கமலி சாரி கமலி என்னை வெறுக்காத” என அவன் கெஞ்ச அவளோ கோபத்துடன் அவனைப் பார்த்து
”முட்டாள், உன்னாலதான் இப்ப அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்க, நீ மட்டும் அன்னிக்கே கண்மணியை கல்யாணம் செய்திருந்தா குணா தன் வாழ்க்கையை தொலைச்சிட்டு பைத்தியம் போல அலைஞ்சிருப்பான், என் ஆசையை இப்படி நடக்கவிடாம கெடுத்துட்டியே சே”
”ஏய் கமலி நீயா இப்படி பேசறது”
”வேற எப்படி பேசறது, எனக்கு வர்ற கோபத்துக்கு அவங்க ரெண்டு பேரையும் கொல்லனும்னு இருக்கு, ஆனா அவங்களை சுலபமா கொல்லக்கூடாது, அவங்க கஷ்டப்படனும் அதை பார்த்து நான் ரசிக்கனும்”
”இன்னுமா நீ பழிவாங்க துடிக்கற, அதான் முடிஞ்சவரைக்கும் எல்லாம் செய்தாச்சே, இனிமேல என்ன செய்றது, அவங்க ரொம்ப தெளிவா உறுதியா இருக்காங்க அவங்களை பிரிக்கமுடியாது”
“பிரிக்கறேன் பிரிச்சிப் காட்டறேன்”
”எப்படி“
”நமக்கு தெரியாத சில விசயங்கள் அவங்க பேசினப்ப தெரிஞ்சிக்கிட்டேன்”
“என்ன அது“
”இரண்டு பேருமே ஒரே இடத்தில பார்ட் டைம் வேலை பார்க்கறாங்க, கண்மணி சூப்பர் மார்க்கெட்ல பில் கவுண்டர்ல இருக்கா, குணா சூப்பர் மார்க்கெட் எதிர்க்க இருக்கற பில்டிங்க்ல கம்ப்யூட்டர் கோச்சிங் நடத்தறான்”
”அப்படியா இந்த விசயம் எனக்குத் தெரியாதே”
”அதுதான் நாம செய்த தப்பு, அவங்களை காலேஜ்ல கண்காணிச்சதோட விட்டிருக்க கூடாது, அவங்க என்ன செய்றாங்க ஏது செய்றாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு இருக்கனும், தப்பு பண்ணிட்டோம் அதனாலதான் அவங்க உண்மையை கண்டுபிடிச்சாங்க”
”சரி இப்ப என்ன செய்றது”
”அவங்களை வாழ விடக்கூடாது நான் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை கண்மணி வாழறா அதை பார்க்க பார்க்க கோபம் வருது, குணா எனக்குத்தான் எனக்கு மட்டும்தான்”
”பைத்தியம் அவனை போய் ஆசைப்படற, அவனை விட்டுத்தள்ளு வேற ஆளுங்களா இல்லை“
”முட்டாள் குணாவை பத்தி உனக்கென்ன தெரியும், அவன் என்கிட்ட என்னெல்லாம் பேசினான் தெரியுமா, அவன் பேசினபின்னாடிதான் அவனை போல காதலிக்க யாராலயும் முடியாது, அவனை விட்டுட கூடாதுங்கற முடிவுக்கே வந்தேன்”
”அப்படி என்ன பேசிட்டான் சொல்லு கேட்போம்” என கவின் சொன்னதும் காலையில் குணா கமலியிடம் பேசியதை ஒன்றுவிடாமல் ஒப்பித்தாள், அதைக்கேட்ட கவினே வாய் பிளந்தான்
”பார்த்தல்ல இந்த மாதிரி காதலிக்க யாரால முடியும் உன்னால கூட முடியாது”
”கரெக்ட்தான், அவன் என்ன இப்படியிருக்கான், சான்ஸே இல்லை, இப்படி காதலிச்சா கண்மணி ஏன் அவனை வேணாம்னு சொல்லப்போறா”
”குணாவோட கண்மூடித்தனமான உண்மையான காதல் அது எனக்கு மட்டும்தான் வேணும்”
”சூப்பர் அதானே பார்த்தேன், நீயாவது திருந்தறதாவது, நானாவது கண்மணியை கைபிடிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சது அதை நானே தவற விட்டேன், ஆனா குணா எப்படி உனக்கு கிடைப்பான்”
”கிடைக்க வைப்பேன், அதுக்கு அவங்களோட நான் பழகனும், அவங்களை பத்தி நான் நிறைய தெரிஞ்சிக்கனும், அதுக்கு அவங்களோடவே நட்பா பழகி அவங்க முதுகுல குத்தப்போறேன்”
”அவங்க புத்திசாலிங்க உன் எண்ணத்தை கண்டுபிடிச்சிட்டா என்ன செய்வ”
”இல்லை இந்த முறை அவங்களுக்கு சந்தேகம் வராது அதுக்கு நீ என் பக்கம் கூட வரக்கூடாது”
”சரி ஆனா நடக்கறதை நீ எனக்கு சொல்லனும்”
”எதுக்கு”
”எதுக்குன்னா என்ன அர்த்தம் கண்மணி எனக்கு வேணும்”
”கண்மணி உனக்கு ஈசியா கிடைச்சா அப்ப தவறவிட்டுட்டு இப்ப அவள் வேணும்னு சொல்ற, உன்னை கொன்னாலும் தப்பில்லை“
”கோச்சிக்காத ஒருமுறை அவளை மிஸ் பண்ணிட்டேன், அடுத்த முறை அவளை நான் விடறதாயில்லை“
”இப்ப மட்டும் அவள் மேல உனக்கு சந்தேகம் இல்லையா“
”இல்லை அவளை நான் முழுசா நம்பறேன், அவள் நல்ல பொண்ணு”
”இப்பவாச்சும் புரியுதே, இதப்பாரு குணா எனக்கு வேணும், அவனை நான் கல்யாணம் செய்துக்கிட்ட பின்னாடி நீ கண்மணிக்கிட்ட போ, அவசரப்பட்டு நீ கண்மணியை பார்த்து குணாவை என்கிட்ட பிரிச்சன்னு வையேன்” என கோபத்தில் பொங்க
”இல்லை நானா இனிமேல எந்த திட்டமும் தீட்டப்போறதில்லை, நீ என்ன சொல்றியோ அதையே செய்றேன்”
”சரி இப்ப இருந்து நாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்” என அவர்கள் இருவரும் கைகோர்த்து பேச அதை தூரத்தில் இருந்து குணாவும் கண்மணியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கவினும் கமலியும் தங்களை குணாவும் கண்மணியும் கண்காணிப்பதை கவனிக்காமலே கிளம்பி சென்றார்கள், அவர்கள் சென்றதும் குணா கண்மணியிடம்
”பார்த்தியா அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா பேசிக்கறாங்க” என்றான் குணா அதற்கு கண்மணியோ
”ஆனா கமலி சொன்னாளே கவினோட சேரலைன்னு“
”அவள் பேச்சை நம்பாத அவளாவது திருந்தறதாவது, மறுபடியும் நம்மளை பிரிக்க திட்டம் தீட்டறாங்க“
”அய்யோ இனிமேல அவங்களோட நாம பழக கூடாது”
”இப்பதான் அவளை நம்மகூட நட்பாகிக்கனும்”
”எதுக்கு ரிஸ்க் எடுக்கனும்”
”எதிரியை கூட தூரத்தில வைச்சிக்கலாம் ஆனா துரோகியை பக்கத்தில வைச்சிக்கனும் அதுதான் நமக்கு பாதுகாப்பு”
”எனக்கு கவினை நினைச்சா வெறுப்பா இருக்கு அவன் எப்படி அப்படியொரு கேள்வியை கேட்கலாம்”
”அவன்லாம் ஒரு ஆளா, அவனைப் போய் உனக்கு பேசினாங்களே உன் அப்பா அம்மா அவங்களை சொல்லனும்”
”ப்ச் அவங்க பாவம் எல்லாரையும் நம்பி ஏமாந்துப் போயிட்டாங்க“
”ஆனா நீ புத்திசாலியா இருக்க, ஆனா உங்கப்பா அம்மா ரொம்ப வெகுளியா இருக்காங்க, எல்லாரையும் எப்படி கண்மூடித்தனமா அவங்களால நம்ப முடியுதோ”
”அப்படியே பழகிட்டாங்க“
”ஆமா அவங்களுக்கு கோவை வீடு பிடிச்சிருக்கா“
”ஆமாம் எங்க நீ அந்த வீட்டை வித்துடுவியோன்னு பயந்தேன், ஆனா சட்டுன்னு என் குடும்பத்தை கோவை வீட்டுக்கு ஷிப்ட் பண்ணிட்ட”
”சேப்டிக்குதான், வேற யாராவது நடுவில வந்து குழப்பிடக்கூடாதுல்ல, அதுக்குதான், உன்னை நம்ப முடியாதே மறுபடியும் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு என்னை விட்டுட்டா என்ன செய்றது”
“அதுக்குதான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டேன், கூடவே ஆயிரம் முறை உனக்கு முத்தமும் தந்தேன்ல, அப்புறம் என்ன” என அவள் வெட்கத்தில் சிணுங்க
”ஆமாமாம் தந்த தந்த ஒண்ணு சொல்லவா கண்மணி, நீ அடிக்கடி இப்படி தப்பு பண்ணிக்கிட்டே இருக்கனும் கண்மணி, அதை சாக்கா வைச்சி நீ மன்னிப்பு கேட்கனும், எனக்கு நிறைய முத்தம் கொடுக்கனும்“
”ஆசையை பாரு இனிமேல நான் தப்பே செய்ய மாட்டேன்“
”பார்க்கலாம் அப்புறம் உன் அப்பா அம்மாவுக்கு அந்த வீட்ல வேற ஏதாவது வசதி வேணும்னா தயங்காம கேட்க சொல்லு, நான் பணத்தை அனுப்பறேன், அதை வைச்சி அவங்க நல்லபடியா இருக்கட்டும்“
”இந்தளவுக்கு நீ எங்களுக்கு உதவனும்னு அவசியம் இல்லையே“
”இது என்னோட கடமை, உன் குடும்பத்தை என் குடும்பமா நான் பார்க்கிறேன் அவங்களுக்கு நான் செய்றதை தடுக்காத”
”தடுக்கலை இப்பதான் அவங்களுக்கு உன் அருமை தெரிஞ்சிருக்கு”
”அருமை தெரிஞ்சா போதாது, உன்னை எனக்கு கல்யாணம் செய்து வைக்கனும்”
”கண்டிப்பா செய்வாங்க, அதுக்கு முன்னாடி நாம படிச்சி முடிச்சி வேலைக்கு போய் லைப்ல செட்டில் ஆகனும், எப்படியும் கோவையில வீடு இருக்கு, பேசாம படிச்சி முடிச்சதும் கோவையிலயே ஏதாவது வேலை பார்த்துடலாமா“
”ஓ கண்டிப்பா பார்க்கலாமே, இதுவும் நல்ல யோசனைதான், நீ, நான், உன் அப்பா, அம்மா எல்லாரும் ஒண்ணா ஒத்துமையா இருக்கலாம்”
”சரி நேரமாச்சி கிளம்பலாம்”
”நாளையில இருந்து பாரு, இந்த கவினையும் கமலியையும் நான் பொம்மலாட்டம் பொம்மைங்க போல ஆட்டி வைக்கிறேன்”
”கவனம் அவங்க எந்த எல்லைக்கும் போவாங்க”
”போகலாம் ஆனா அவங்ககிட்ட ஒரு பலகீனம் இருக்கு”
”என்ன அது”
“கமலிக்கு நான் வேணும், கவினுக்கு நீ வேணும், அதனால நமக்கு சேதாரம் தரமாட்டாங்க”
”சரி வா நேரமாச்சி வேலைக்கு போகலாம்” என கண்மணி சொல்லவும் குணாவும் அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான், அவரவர்கள் தங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
மறுநாள் கல்லூரிக்கு கிளம்ப கண்மணி ஹாஸ்டல் விட்டு வெளியே வர அங்கு கமலி தயாராக காத்திருந்தாள், கவினுடன் வரக்கூடாது என்பதற்காக புது ஸ்கூட்டியை வாங்கியிருந்தாள், அந்த வண்டியுடன் அவள் புன்னகை பூத்தபடி
”வா கண்மணி என்னோட புது வண்டி எப்படியிருக்கு”
“நல்லாயிருக்கு”
”இனிமேல நீயும் நானும் ஒண்ணாவே காலேஜ்க்கு போகலாம்“
”எதுக்கு உனக்கு சிரமம், காலேஜ் பக்கத்திலதானே இருக்கு நான் நடந்தே போயிடுவேன்”
”இதுல எனக்கு எந்த சிரமமும் இல்லை வா வா“
”இல்லை வேணாம் நல்லாயிருக்காது நீ போ நான் நடந்தே வரேன்“
”நட்புக்குள்ள எதுக்கு தயக்கம் வா“
”இல்லை அது வந்து“
”அட வா கண்மணி” என அவளின் கையை பிடிவாதமாக இழுத்து நிறுத்த அவளால் எதுவும் செய்ய இயலவில்லை, பெருமூச்சுவிட்டு வண்டியில் ஏறிக் கொள்ள கமலியும் வண்டியை ஓட்டினாள்
”இன்னிக்கு இவள் என்ன செய்யப் போறாளோ தெரியலையே” என கண்மணி மனதுள் நினைத்து பயத்துடன் இருக்க கமலியோ மெதுவாக பேச்சைத் தொடங்கினாள்
”அப்புறம் கண்மணி குணா என்ன சொல்றாப்ல“
”எதுவும் இல்லையே”
”அட கூச்சப்படாத, நான் என்ன வேத்தாளா, உன் தோழிதானே குணாவை பத்தி உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும்”
”ஓ அப்படியா”
”ஆமாம் அவனை உனக்கு இங்க வந்த பின்னாடிதானே தெரியும், ஆனா எனக்கு முன்னாடியே தெரியும், கோவையில நாங்க ஒரே காலேஜ்ல ஒண்ணா படிச்சோம்”
”ஓ எனக்குத் தெரியாது”
”ஏன் இதை எல்லாம் குணா சொல்லலை“
”இல்லையே”
”என்னை பத்தி எதுவும் சொல்லலையா“
”இல்லையே”
”நிஜமாவா”
”நான் ஏன் பொய் சொல்லப்போறேன்”
”அப்படின்னா சரி, நானே குணாவை பத்தி எல்லாம் சொல்றேன், அந்த காலேஜ்ல குணாதான் ஹீரோவே, எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்கற மாதிரியே அவன் நடந்துக்குவான், அவனை எத்தனை பொண்ணுங்க காதலிச்சாங்க தெரியுமா, அதுல எத்தனை பேர் அழகா இருப்பாங்க தெரியுமா, பெரிய பெரிய பணக்கார வீட்டு பொண்ணுங்க கூட அவனை விரும்பினாங்க, ஆனா அவன் எல்லாரையும் ரிஜக்ட் பண்ணிட்டு உன்னை செலக்ட் பண்ணான், அதுதான் எனக்கு சந்தேகமே”
”இதுல என்ன சந்தேகம்”
”இல்லை மத்த பொண்ணுங்ககிட்ட இல்லாதது எது உன்கிட்ட இருக்குன்னு எனக்குத் தெரியலை, அழகா இருக்க ஆனா உன்னை விட அழகான பொண்ணுங்க கூட அவனை விரும்பினாங்க தெரியுமா, உன்கிட்ட வசதி வாய்ப்பு கூட இல்லை ஆனா உன்னை விட பணக்கார பொண்ணுங்க கூட அவனை விரும்பினாங்க, நீ நல்லா படிக்கற ஆனா உன்னை விட புத்திசாலி பொண்ணுங்களை கூட அவன் வெறுத்திருக்கான், உன்னை விட எல்லாத்திலயும் பெஸ்ட்டா இருக்கற எல்லா பொண்ணுங்களையும் அவன் ரிஜக்ட் பண்ணிட்டு எப்படி உன்னை செலக்ட் பண்ணான்னுதான் எனக்குப் புரியலை”
”இதைபத்தி நீ குணாகிட்டதான் கேட்கனும், அவர் ஏன் என்னை செலக்ட் பண்ணார்ன்னு நான் எப்படி சொல்றது”
”சரி நீ கூடதான் நிறைய பேரை ரிஜக்ட் பண்ணியிருக்க, ஏன் கவினை கூட விரட்டியிருக்க ஆனா குணாவை மட்டும் எப்படி நீ விரும்பின?” என கேட்க கண்மணி மென்மையாக சிரித்தாள்
…. தொடரும்
error: Content is protected !!