Skip to content
Post Views: 381
”ஏன் இப்படி அடிக்கற“
”பின்ன அடிக்காம என்ன செய்றது, உன்னை கொன்னாலும் தப்பில்லை”
”கொல்ற அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்”
Advertisement
”ஆமா நீ அப்படியே கண்மணிக்கிட்ட போய் மன்னிப்பு கேட்டா மட்டும் அவள் உன்னை மன்னிப்பாளா சே, எல்லாத்தையும் சொதப்பிட்டு இப்ப கண்மணியோட வாழனும்னு நினைக்கறியே அறிவில்லை”
”ஏன் முடியாது எனக்கும் எதாவது வாய்ப்பு கிடைக்கும்”
”ஆமா உன்னால எனக்கு கிடைச்ச வாய்ப்பும் போயிடுச்சி சே“
Advertisement
”எதுக்கு கத்தற கண்மணியை பிக்கப் பண்ணலைன்னா என்ன காலேஜ்ல பேசிக்கயேன்”
Advertisement
”இனி எங்க பேசறது, குணா அவளை கண்காணிச்சிக்கிட்டே இருப்பான், நேத்து அவங்க எங்க போனாங்க, அந்த வீட்டை பத்தி விசாரிக்கலாம்னு இருந்தேன், எல்லாம் போச்சி“
”காலேஜ்ல அவள்கிட்ட கேட்டுப் பாரு, சொல்ல மாட்டாளா என்ன”
”தெரியலை இந்நேரம் குணா உஷாராயிருப்பான், கண்மணிகிட்ட நான் எதை கேட்டாலும் அவள் பதில் சொல்லப் போறதில்லை, குணாதான் அவளுக்கு பதிலா பேசப் போறான், அவனை ஏமாத்தி விசயத்தை வாங்கறது அவ்வளவு சுலபம் இல்லை, அதுக்காக அப்படியே விடவும் முடியாதே, என்ன விசயம்னு தெரிஞ்சிக்கனும்”
Advertisement
”அதுக்கு என்ன செய்யப் போற“
”ம்ம்ம் ஒண்ணு பண்ணு, நீ அந்த வீட்ல இருக்கற யார்கிட்டயாவது போய் என்ன விசயம்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டு வா, அதுவரைக்கும் நான் காலேஜ்ல குணாவையும் கண்மணியையும் கண்காணிக்கிறேன்”
”தனியா அனுப்பறியே எனக்கு ஏதாவது ஆச்சின்னா“
”எதுவும் ஆகாது விசாரிக்கதானே போற போ” என விரட்ட அவனும் பயத்துடனே கிளம்பிச் சென்றான்
கமலியும் காலேஜ்க்கு வந்து சேர்ந்தாள், வகுப்பு நடந்து ஒரு மணி நேரம் முடிந்த உடன் ப்யூன் ஒருவன் கமலியை அழைத்துச் சென்றான், கவினை மருத்துவமனையில் சேர்த்துவிட்டதாக சொல்ல கமலி துடித்துப் போனாள், அவசர அவசரமாக மருத்துமனைக்குச் சென்றாள்
அங்கு கவினோ படுக்கையில் படுத்திருந்தான், யாரோ அவனை அடித்திருக்கிறார்கள், வலியில் அவன் முனக அவளோ கவலையுடன் அவனிடம் பேசினாள்
”கவின் என்னாச்சி கவின், எங்கயாவது விபத்துல மாட்டிக்கிட்டியா”
”அதெல்லாம் இல்லை“
”அப்புறம் இந்த காயம்லாம் எப்படி வந்தது“
”எப்படியா அடிப்பாவி, உன்னை நம்பி நான் அங்க விசாரிக்க போன இடத்தில கிடைச்சது”
”என்னடா உளர்ற புரியலையே”
”நான் நேரா அங்க போனேன், நாலு பொம்பளைங்க காய்கறி தள்ளுவண்டியில காய் வாங்கிக்கிட்டு இருந்தாங்க, அவங்ககிட்ட போய் குணாவை பத்தி சொல்லி வீட்டை பத்தி விசாரிச்சேன், அவ்வளவுதான் 4 பொம்பளைங்களும் சேர்ந்து என்னை அடி அடின்னு அடிவெளுத்துட்டாங்க, அதுலயும் ஒருத்தி எடை போடற எடை கல்லாலயே என்னை அடிச்சிட்டா ஒரே வலி அய்யோ அம்மா”
”அய்யோ ஏன்டா அவங்க அப்படி செய்தாங்க”
”யாருக்கு தெரியும், இதெல்லாம் குணாவோட வேலைதான், அவன்தான் என்னை பத்தி தப்பா சொல்லி இப்படி அடிவாங்க வைச்சிருக்கான், இனிமேல அந்த பக்கம் போறது ஆபத்து, கமலி நான் போகலை, நீ வேணா போய் விசாரிச்சிக்க என்னை விடு”
”உனக்கே இந்த நிலைமைன்னா அப்ப எனக்கு என்னாகும், உன்னை பத்தி குணா சொல்லியிருக்கான்னா, கண்டிப்பா அவன் என்னை பத்தியும் சொல்லியிருப்பான், ஆனா எதுக்காக சொல்லனும் எதையோ மறைக்கறாங்க, ஏதோ ஒரு விசயம் நடந்திருக்கு, அதை நான் தெரிஞ்சிக்க கூடாதுன்னு கவனமா ஆட்களை வைச்சிருக்கான் கண்டுபிடிக்கிறேன்” என அவள் வீரமாக பேசுவதைக்கேட்ட கவினுக்கோ
”இவளால இன்னும் நான் என்னென்ன கஷ்டத்தை அனுபவிக்கப் போறேன்னு தெரியலையே, கண்மணி கிடைக்கறதுக்குள்ள என் உசுரு போயிடும் போல இருக்கே, என்ன ஆனாலும் சரி கண்மணியை நான் விடமாட்டேன், அவள் எனக்குதான், எனக்கு மட்டும்தான், அதுக்காக குணாவை கொன்னாலும் கொல்ல தயார்
ஆனா அவனை கொன்னா கமலி என்னை கொன்னுடுவாளே, அய்யோ சே கமலிக்காக குணா உயிரோட இருக்கனும், அவன் கண்மணியை விடமாட்டான், இப்படி ஒரு சிலந்தி வலையில மாட்டிக்கிட்டேனே, இதுல இருந்து எப்படி நான் தப்பிச்சி கண்மணியை கைபிடிப்பேன்னு தெரியலையே
யாராவது எந்த திட்டமாவது போட்டுக்கட்டும், ஆனா நான் தனிதிட்டம் போட்டு கண்மணியை எனக்கு சொந்தமாக்கிக்குவேன், அவளோட அப்பா அம்மா வேற நடந்த பிரச்சனையில வீட்டை காலி பண்ணிட்டு ஊரை விட்டு எங்க போனாங்கன்னு தெரியலை, அவங்க இருந்தாலாவது அவங்களை உருட்டி மிரட்டி கண்மணியை பணிய வைச்சிருக்கலாம், எல்லாம் போச்சி,
எப்படியாவது அவங்களை நான் கண்டுபிடிச்சி அவங்களை ஒருவழியாக்கியாவது கண்மணியை பிடிக்கனும், ஆமாம் இதுதான் ஒரே வழி, நாளையில இருந்து அவங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிக்கறேன்” என மனதுள் உறுதி எடுத்தான் கவின்.
கமலியோ குணா பார்த்து வைத்த வீடு இருந்த ஏரியாவுக்குள் சற்று தயக்கத்துடனே சென்றாள், கவினுக்கு நடந்தது போல தனக்கு நடக்ககூடாது என ஜாக்கிரதையாக இருந்தாள், குணா பார்த்த வீட்டிற்கு எதிர்புறம் இருந்த வீடு டூலெட் என போர்டு மாட்டியிருக்க உடனே அவ்விடம் சென்று வீட்டு ஓனரை அழைத்தாள்
“சார் சார் யாராவது இருக்கீங்களா சார்” என அழைக்க அவரும் வெளியே வந்தார்
”யார்மா என்ன வேணும் உனக்கு”
”சார் டூலெட் போர்டு போட்டிருக்கு அதை பார்த்து வந்தேன்”
”ஆமாம் மாடி போர்ஷன் காலியாயிருக்கு”
”ஓ நான் பார்க்கலாமா“
“நீ மட்டும் வந்திருக்க”
”முதல்ல நான் பார்த்துட்டு அப்புறம் குடும்பத்தோட வந்து பார்க்கிறோம்” என சொல்ல அவரும் அவளின் பேச்சை நம்பி அவளை அழைத்துக் கொண்டு மாடி போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார் அவள் வீட்டை சுற்றி பார்ப்பது போல பார்த்து ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக
”தண்ணி வசதியெல்லாம் எப்படி சார், கரன்ட் பில் தனித்தனிதானே பார்க்கிங்ல என்னோட வண்டியை வைக்க முடியுமா” என்பது போல கேள்விகளை கேட்டவண்ணம் ஒரு படுக்கையறையின் பால்கனிக்கு வந்தாள். அங்கிருந்து பார்த்தால் எதிரில் இருந்த வீடு நல்ல தெளிவாக தெரிந்தது
”ஆமா சார் அதோ அந்த வீடு கூட காலியாதான் இருக்கா என்ன”
”எதை சொல்ற, அதுவா அது போர்ஷன் வீடாச்சே, எல்லாம் புல்லாயிருக்கு”
”அப்ப அந்த மாடியில இருக்கற வீடு, அதுவும் புக் ஆயிடுச்சா”
”ஆமாம் யாரோ ஒரு பையன் காலேஜ்ல படிக்கறான், அவனும் அவன் பொண்டாட்டியும் தங்கறதுக்காக அந்த வீட்டை பார்த்துட்டு போனாங்க, கூடிய சீக்கிரம் வீட்டுக்கு குடிவந்துடுவாங்க” என சொல்ல அவளுக்கு திக்கென்றது
”என்னது பொண்டாட்டியா? அப்படின்னா கல்யாணம் எப்ப நடந்தது? இல்லை என்னவோ தப்பாயிருக்கு, எனக்குத் தெரிஞ்சி அவங்களுக்குள்ள கல்யாணம் நடக்கலை, அப்படின்னா இங்க வீடு எடுத்து தங்கனும்ங்கறதுக்காகவே பொய் சொல்லியிருக்காங்க, அப்படி தனியா வீடு எடுத்து இரண்டு பேரும் தங்கி என்ன செய்யப் போறாங்கன்னு தெரியலையே, எப்படி தெரிஞ்சிக்கறது” என அவள் பலமாக யோசிக்க ஹவுஸ் ஓனரோ
”மாச வாடகை பத்தாயிரம் 10 மாச வாடகையை அட்வான்ஸா தரனும் கன்டிஷனுக்கு ஓகேவா“ என கேட்க அவளோ
”ஓ தாராளமா தரேன், யாருக்கும் இந்த வீட்டை தர வேணாம் நானே இங்க வந்து தங்கிடறேன்”
“நீ மட்டும்மா”
”இல்லை அப்புறமா அப்பா அம்மா அண்ணன்னு எல்லாரும் வருவாங்க”
”ஓஹோ சரி சரி என்னிக்கு குடிவரப் போற”
”அது நல்ல நாள் பார்த்துட்டு வரேனே”
”வர்ற சன்டேகூட நல்லநாள்தான்”
”ஓ அப்படியா சரிங்க, அன்னிக்கே நான் வந்துடறேன், அப்பவே அட்வான்ஸ் பணம் கொடுத்துடறேன் நான் வரேன் சார்” என சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து செல்ல அவள் வந்ததையும் சென்றதையும்கண்ட போர்ஷன் வீட்டு பெண்கள் குழம்பினார்கள்.
காலேஜ்க்கு வந்த குணாவும் கண்மணியும் அங்கு கமலியும் கவினும் வராமல் இருப்பதைக்கண்டு சந்தேகப்பட்டார்கள்.
”கண்மணி எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு”
“எனக்கும்தான் கமலியும் வரலை, கவினும் வரலை, எங்க போயிருப்பாங்க”
”எதுக்கும் நான் சாயங்காலம் நம்ம புதுசா தங்கப் போற வீட்டை பார்த்துட்டு வரேன்“
”ஏன்”
”கமலி ஏதோ திட்டம் போடறாளோன்னு தோணுது”
”இருக்கலாம் அவள்கிட்ட உஷாரா இருக்கனும்” என்றாள் கண்மணி, குணாவோ அவளது கழுத்தை நோட்டமிட்டான் அதைக்கண்டு அவள் நாணி
”ப்ச் அப்படியெல்லாம் பார்க்க கூடாது”
”இல்லை தாலி எங்க” என அவன் பதட்டமாக கேட்க அவளோ
”கழட்டி வைச்சிட்டேன்” என்றாள் இயல்பாக அதைக்கேட்டவனுக்கு முகம் வெளிறிவிட்டது
”அதுசரி, அது என்ன, நிஜக்கல்யாணமா, அவசரத்தில போட்ட தாலிதானே அதுக்கு முக்கியத்துவம் இல்லைன்னு நினைச்சி நம்ம பேச்சை கேட்டு அவள் கழட்டி வைச்சிருப்பா, இதுக்கு போய் நாம ஏன் கவலைப்படனும், எல்லாமே கொஞ்ச நாளுக்குதான் அப்புறம் ஊர் அறிய அவளை கல்யாணம் செய்துக்கலாம், அதுவரைக்கும் கணவன் மனைவின்னு ட்ராமா பண்ணனும்” என குணா மனதுள் அலுத்துக் கொள்ள கண்மணியோ தனக்குள்
”நல்லவேளை குணா இப்படி கேள்வி கேட்பான்னு தெரிஞ்சே ட்ரஸ்க்குள்ள தாலியை மறைச்சி வைச்சிகிட்டேன், அவனுக்கு வேணும்னா இது ட்ராமாவா இருக்கலாம், ஆனா எனக்கு அப்படியில்லை, அதெப்படி தாலியை அவன் போட்டாலே கல்யாணம்தானே அர்த்தம்
ஐயர் மந்திரம் சொல்லி, கெட்டி மேளம் முழங்க, 3 முடிச்சி போட்டாதான் அது கல்யாணம் ஆகுமா என்ன, அவசரத்துக்கு போட்டாலும் தாலியோட மகத்துவம் மாறிடாது, நடந்தது என்னை பொறுத்தவரைக்கும் கல்யாணம்தான், குணா என்ன வேணும்னாலும் நினைக்கட்டும் ஆனா நான் கரெக்டா இருப்பேன், கடைசி வரைக்கும் குணாவுக்கு காலேஜ்ல நல்ல தோழியா வீட்ல நல்ல மனைவியா வாழ்ந்துக் காட்டுவேன், ஆஹா மனைவின்னு சொன்னதும் ஏகப்பட்ட பொறுப்பு கடமைகள் மனசுக்குள்ள ஓடுதே, இதுவும் நல்லாதான் இருக்கு” என நினைத்துக் கொண்டாள்.
மாலை நேரம் கண்மணியை ஹாஸ்டலில் இறக்கிவிட்டு நேராக புதுவீட்டிற்கு வந்தான் குணா, அவன் எப்போது வருவான் என காத்திருந்த போர்ஷன் பெண்கள் அவன் வந்ததும் கவின் வந்ததும் அதன் பிறகு கமலி வந்ததையும் சென்றதையும் எதற்காக வந்தாள் என்பது வரை விசாரித்து அவனிடம் சொல்லிவிட அவனுக்கு திக்கென்றது, அவனின் முகம் கவலையில் வாடவும் அதைக்கண்டு அவர்கள் இரக்கப்பட்டார்கள்
”குணா தம்பி, நீ கவலைப்படாத, அந்த பொண்ணு என்ன செய்தாலும் சரி எங்களை மீறி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது, வராம நாங்க பார்த்துக்கறோம், கவலைப்படாத சரியா” என அவர்கள் ஆதரவாக பேச அவனுக்கு நிம்மதியாகி வேலைக்குச் சென்றான், வேலை முடித்து வருகையில் கண்மணி சூப்பர் மார்க்கெட்டில் கமலியுடன் பேசிக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ந்து அவசரமாக அவர்களிடம் வந்து நின்றவன் கமலியை பார்த்து
”ஆமா உனக்கு இங்க என்ன வேலை காலேஜ்க்கு ஏன் வரலை”
”அதுவா கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் வரலை“
“இங்க என்ன செய்ற“
“இன்னிக்கு என்ன பாடம் எடுத்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னு கண்மணியை பார்க்க வந்தேன் அவள் நோட்ஸ் கொடுத்தா அதை வாங்கிட்டு போலாம்னு இருக்கேன்”
என சொல்ல குணாவோ சுற்றி முற்றி கவின் எங்குள்ளான் என பார்க்க கமலியோ அதைப்புரிந்துக் கொண்டு
”கவின் இங்க வரலை” என சொல்ல குணாவோ கண்மணியை அழைத்தான்
”கண்மணி வா போலாம்” என சொல்ல அவளும் சரி என அவனுடன் கிளம்பினாள்.
செல்லும் வழியில் கவினும் கமலியும் செய்த செயலை போர்ஷன் பெண்கள் சொன்னதை கண்மணிக்கு சொல்ல கண்மணிக்கு சிரிப்பே வந்தது, அவள் கலகலவென சிரிக்க அவனுக்கு குழப்பம் வந்தது
”எதுக்கு இந்த சிரிப்பு“
”நம்மளை பாதுக்காக்க இப்படி இரண்டு பாடிகார்ட்ஸ் இருக்காங்களே, நாம இப்ப விஐபிக்களாயிட்டோம்“
”கண்மணி விளையாடாத, அந்த கமலியை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேன், ஆனா அவள் மட்டும் அந்த வீட்டுக்கு குடிவந்துட்டாள்ன்னு வையேன், காலையில எழறப்பவும் நைட் தூங்கறப்பவும் அவளை பார்க்கற மாதிரியிருக்கும், அது எவ்ளோ கொடுமை தெரியுமா”
”எனக்கும்தான் கவினை வேற பார்த்து தொலைக்கனுமா சே”
”எனக்கு வர்ற கோபத்துக்கு அவங்களை ஏதாவது செய்யனும்னு தோணுது, ஆனா என்னை நம்பி நீயிருக்கறப்ப உன்னை பாத்துக்கற பொறுப்பு இருக்கு, அதனால அவங்களை விட்டுவைக்கிறேன்”
”ஆனாலும் கமலிக்கு உங்க மேல அளவுக்கடந்த காதல் இருக்கு, உங்களை விட்டுக்கொடுக்க முடியாம எப்படி தவிக்கறா பாருங்களேன், என்னோட லவ்வை விட அவளோடதுதான்” என சொல்லி முடிப்பதற்குள் வண்டியை சடன் பிரேக்கிட்டு நிறுத்தினான் குணா
”என்னாச்சி குணா“
”இதப்பாரு உன் லவ்தான் உசந்தது, கமலியோடது வெறும் ஈகோதான்” என கோபமாக பேச அவளோ புன்சிரிப்பு சிரிக்க
”சிரிச்சி சிரிச்சி என்னை ஒருவழியாக்கற கண்மணி”
”சாரி குணா”
”உன்னோட அந்த கமலியை சேர்த்து வைச்சிப் பேசாத சரியா”
”சரி குணா, அப்புறம் ஒப்புத்தாம்பூலத்துக்காக நீயும் நானும் வாங்கின ட்ரஸ் நகைங்க எல்லாம் என்கிட்ட பத்திரமா இருக்கு”
”சரி சரி பத்திரமா வைச்சிக்க நான் கிளம்பறேன்“
”குணா ஒரு நிமிஷம் இரு” என நிறுத்த அவனும் நின்றான்
”என்ன”
”கையை நீட்டு” என கேட்டதும் உடனே நீட்டினான்
”கையை நீட்டுன்னு சொன்னதும் உடனே நீட்டிட்ட ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டியா“
”கேட்கறது நீயாச்சே மறுக்க முடியுமா உசுரை கேட்டா கூட யோசிக்காம தந்துடுவேன்”
”அந்தளவுக்கு என்னை காதலிக்கறியா“
”என் உசுரே நீதானே கண்மணி” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்து அவனது கையில் அவள் வாங்கிய மோதிரத்தை அணிவித்தாள் அதைக்கண்டவன்
”என்னது இப்பவேவா”
”வேற எப்பவாம்”
”அதுவும் சரிதான் நினைச்சபடி எல்லாம் நடந்திருந்தா நாம இப்படியிருந்திருக்க மாட்டோம்“
”புலம்பாத இந்தா” என சொல்லி அவன் வாங்கிய மோதிரத்தை தர அதை ஆசையுடன் வாங்கி அதை அவளின் கைவிரலில் போட்டுவிட்டான்
”இந்த மோதிரம் உனக்கு அழகாயிருக்கு கண்மணி”
”அப்பாடா இப்பதான் எனக்கு நிம்மதியாயிருக்கு”
”ஏன்“
”இனிமேல நம்மளை யாராவது கணவன் மனைவின்னு சொன்னா கூட எனக்கு பயமிருக்காது, அதான் மோதிரம் மாத்திக்கிட்டோம்ல, இதை காட்டியே நான் தப்பிச்சிடுவேன்” என சொல்ல அவனுக்கு சிரிப்பே வந்தது
கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பி ஹாஸ்டலுக்குச் சென்று கண்மணியை இறக்கிவிட்டு தன் லாட்ஜ்க்கு வந்தான்.
மறுநாள் காலையில் கண்மணியை பிக்கப் செய்ய வந்த குணாவோ அங்கு கமலியிருப்பதைக்கண்டு அதிர்ந்தான்
”இவளுக்கு வேற வேலையே இல்லை போல, எத்தனை முறை இவளை விரட்டினாலும் வந்து வந்து ஒட்டிக்கறா இவளை” என அவளை திட்டலாம் என நினைக்கையில் அதற்குள் கமலி குணாவைக்கண்டதும் தானாக பேச வந்தாள்
”ஹாய் குணா வாழ்த்துக்கள்”
”எதுக்கு”
”உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேனே அதுக்கு”
”ம்”
“என்னவோ அன்னிக்கு சொன்னியே, கண்மணியை கல்யாணம் செய்துக்கலைன்னு எப்ப கல்யாணம் ஆச்சி”
”கல்யாணம் ஆகலை“
”அப்படியா ஆனா நீ பார்த்து வைச்ச வீட்டுக்காரங்க சொன்னாங்களே உனக்கும் கண்மணிக்கும் கல்யாணம் ஆயிடுச்சின்னு”
”நான் வீட்டைப் பார்த்து வைச்சேன்னு உனக்கெப்படி தெரியும் என்னை ஃபாலோ பண்றியா“
”சே சே இல்லை அதே ஏரியால நான் வீடு பார்த்திருக்கேன், அப்ப உன்னை அங்க பார்த்தேன் சரின்னு அக்கம் பக்கம் விசாரிச்சப்ப சொன்னாங்க”
”உனக்கு வேற ஏரியாவே கிடைக்கலையா”
”அங்கதான் நான் எதிர்பார்க்கற எல்லாமே இருக்கு, வர்ற சன்டே நான் அங்க குடிவரப்போறேன்”
”ம்ம் சரி”
”அப்புறம் கல்யாணம் ஆச்சின்னு சொன்ன ஆனா அப்படி எதுவும் தெரியலையே”
”புரியலை“
”கல்யாணம் ஆன பொண்ணு போல கண்மணியில்லையே“
”அப்படியா”
”ஆமாம்” என சொல்லும் போதே கண்மணி வந்தாள்.
குணா உடனே அவளை பார்த்து ஹாய் சொல்ல அதைக்கண்ட கமலியோ திரும்பி பார்க்க உடனே குணா தனது கழுத்தை தடவி தாலி என சத்தம் வராமல் உச்சரிக்க கண்மணி புரிந்துக் கொண்டு கமலியிடம் வந்தாள்
”வா வா மணமகளே எப்படியிருக்க”
“மணமகளா“
”ஆமாம் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேனே பார்த்தா அப்படி தெரியலை, கழுத்தில தாலியில்லை, கால்ல மெட்டியில்லை, நெத்தியில குங்குமம் இல்லை, எப்படித்தான் இப்படி ஊரை ஏமாத்தி பிழைக்கறியோ தெரியலை, உன்னால பாவம் குணாவும் கெட்ட பெயர் எடுக்கனுமா” என பேச குணாவுக்கு கோபம் வந்தது, ஆனால் கண்மணியோ மென்மையாக சிரித்து
”நாங்க எப்படியிருந்தா உனக்கென்ன வந்தது”
”நீ இப்படி நடந்துக்கறது தெரிஞ்சா காலேஜ்ல உன்னை எல்லாரும் கேலி செய்வாங்க“
”கேலி செய்ற அளவுக்கு நான் என்ன செய்தேன்“
”பின்ன கல்யாணமே ஆகலை, ஆனா கல்யாணம் ஆயிட்டதா பொய் சொல்லி நீயும் குணாவும் ஒரே வீட்ல ஒண்ணா தங்கப் போறீங்களே, இது தப்பில்லையா, கலாச்சார சீர்கேடு, இதைபத்தி காலேஜ்ல சொன்னா என்னாகும், பிரின்சிபால் உங்களை சஸ்பென்ட் என்ன டிஸ்மிஸ் கூட பண்ணுவாரு“ என சொல்ல அவளோ
”அப்படியா நான் எந்த பொய்யும் சொல்லலையே, கல்யாணம்னா என்ன கல்யாண மண்டபம் பேசி சொந்தக்காரங்களை வரவழைச்சி மாலை மாத்தி தாலி கட்டி மெட்டி அணிஞ்சி குங்குமம் வைச்சாதான் கல்யாணமா என்ன“
”பின்ன வேற எப்படி கல்யாணம் ஆச்சி“ என கேட்க அவளோ தனது கையை காட்டினாள்
”இங்க பாரு மோதிரம்” என காட்ட அவளும் பார்த்தாள்
உடனே குணாவும் தனது கையில் இருந்த மோதிரத்தைக்காட்ட இரண்டையும் மாறி மாறி பார்த்துவிட்டு கமலி கலகலவென சிரித்தாள்
”இதெல்லாம் ஊரை ஏமாத்தற கதை, நான் நம்ப மாட்டேன், மோதிரம் மாத்தினா கல்யாணம் ஆகுமா என்ன” என சொல்ல கண்மணியோ கமலியிடம்
”கமலி உனக்கே தெரியும், உன் அண்ணன் கவினால நான் எவ்ளோ கஷ்டப்படறேன்னு அவனை நினைச்சாலே எனக்கு பயமாயிருக்கு, என்னை காப்பாத்திக்க குணா போராடறாரு, அதுக்காகதான் என்னை பத்திரப்படுத்த தனி வீடு எடுத்தாரு, கணவன் மனைவின்னு பொய் சொல்லி யாரையும் ஏமாத்தி வீட்டைப் பார்க்கலை, மோதிரம் மாத்தினோம், அதுவே போதும் தாலி கட்டனும்னு அவசியம் இல்லை“
”இதைப்பத்தி உன் அப்பா அம்மாவுக்கு தெரியுமா ஆமா அவங்க எங்க இருக்காங்க“
”அவங்க ஊரைவிட்டு வேற ஊருக்கு போயிட்டாங்க”
”ஏன்?”
“கவினால ஏற்பட்ட அவமானத்தால ஊருக்குள்ள நடமாட முடியலை”
”உங்க கதையை நான் காலேஜ்ல சொல்லப்போறேன்”
”தாராளமா சொல்லிக்க“
”சொன்னா உனக்குதான் அவமானம்“
”எனக்கெப்படி அவமானம் வரும், குணா என் புருஷன்னு எல்லாருக்கும் தெரியட்டும், எனக்கும் நிம்மதி, கவின் என்னை சீண்ட மாட்டான் நாங்க நிம்மதியா படிப்போம்”
”பிரின்சிபால் உன்னை காலேஜ் விட்டு விரட்டிட்டா”
”விரட்டினா விரட்டட்டும் வேற காலேஜே கிடையாதா, அப்படி ஏதாவது ஆனாலும் கோவைக்கு போயிடறோம்” என கண்மணி தெளிவாகச் சொல்ல கமலி அதிர்ந்தாள்
”சரி சரி நான் சும்மா உன்னை பயமுறுத்த அப்படி சொன்னேன், நான் யார்கிட்டயும் உங்களை பத்தி சொல்ல மாட்டேன், நாமதான் இப்போ நண்பர்களாயிட்டோமே, இனி நாம ஒத்துமையா இருக்கலாம், கவினை நினைச்சி நீ கவலைப்படாத, அவன் உன்பக்கம் கூட வரமாட்டான் “
”எனக்கு நம்பிக்கையில்லை கமலி” என கண்மணி சொல்லிவிட்டு குணாவின் பைக்கில் ஏறிச் சென்றுவிட கமலியோ நொந்துப் போனாள்
”சே இவங்களை பத்தின உண்மையை சொன்னாலும் நமக்குதான் நஷ்டம், சொல்லலைன்னாலும் நமக்குதான் நஷ்டம், என்ன செய்றது, இப்ப ஒண்ணும் புரியலையே” என புலம்பிக் கொண்டே கமலியும் கவினை காணச் சென்றாள்.
…. தொடரும்
error: Content is protected !!