Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-5

அத்தியாயம் 5

செமஸ்டர் முடிந்து விடுமுறையில் ஊருக்குப்போய் வந்து புதிதாக அடுத்த செமஸ்டர் தொடங்கியிருந்தது.

கடைசி வருட மாணவர்கள் எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூ, இண்ட்டர்ன்ஷிப், ப்ராஜெக்ட் வேலை என்று பிஸியாகிவிட, இப்போதெல்லாம் வசீகரனைக் காலைநடையில் பார்ப்பது அரிதாகிக்கொண்டே வந்தது.

தன்னுடைய ஒருதலை  ஈர்ப்புக்கும் ஒரு முடிவு வரப்போகிற நாள் தொலைவில் இல்லை என்றே அதிதிக்கும் தோன்றியது.



Advertisement

அதிதி அன்று வழக்கத்திற்கும் மாறாக சற்று தாமதாமாகவே விழித்தாள், நடைப்பயிற்சிக்கு போகலாமா வேண்டாமா என்று இருமனதாய் இருக்க,

‘அவனைப் பார்க்க முடியாவிட்டால் என்ன? இந்த இயற்கைச் சூழலில் நடப்பது நன்றாகத்தானே இருக்கிறது, அதை ஏன் விட வேண்டும்..? கொஞ்ச தூரமாவது நடந்துவிட்டு வருவோம்’ என்று தன் சிணுங்கிய சோம்பேறி மனதை அடக்கிவிட்டு எழுந்தாள்.

எப்போதும் போல வசீகரனைப் பார்க்கப்போவது போன்ற பரபரப்பில்லாமல் நிதானமாக சுற்றிலும் பார்த்து ரசித்துக்கொண்டே நடந்தாள்.

Advertisement

அங்கே எதிரே நடைபாதையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் வசீகரன் அமர்ந்து தன் கைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

Advertisement

‘அருகே செல்லலாமா..? இல்லை வந்த சுவடே தெரியாமல் அப்படியே திரும்பிவிடலாமா..?’

என்று இவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே எதேர்ச்சையாக நிமிர்ந்தவன் இவளைப்பார்த்ததும் சட்டென்று முகம்மலர்ந்து,

“ஹாய் கிட்டி… கம் ஹியர்..” என்று உற்சாகமாக அருகே அழைத்து அமர வைத்துக்கொண்டான்.

Advertisement

“நான் உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன், வழக்கமா வர்ற டைம் தாண்டிடுச்சா..அதான் நீ வரமாட்டியோன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.” என்று அவன் அதே இன்முகத்துடன் தொடரவும், எதற்காக இவன் தனக்காக காத்திருக்க வேண்டும் என்று ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“நாளைக்கு எங்க வீட்ல ஒரு பார்ட்டி, அதுக்கு உன்னை இன்வைட் பண்ணதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”

“பார்ட்டியா? என்ன பார்ட்டி?”

“என்னோட பர்த்டே பார்ட்டி..”

“நாளைக்கு உங்க பர்த்டே வா?”

“ஆமா, அதான் ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் வீட்ல பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கோம்.”

“பார்ட்டின்னா?என்னமாதிரி இருக்கும்? யாரெல்லாம் வருவாங்க?”

“பார்ட்டின்னா மியூசிக் இருக்கும், சாப்பாடு இருக்கும், ஃபன் கேம்ஸ் இருக்கும், அப்புறம் நம்ம மாதிரியே ரெண்டு கை, ரெண்டு காலு, ஒரு மூஞ்சி இருக்கற மனுஷங்க வருவாங்க..”

“கிண்டல் பண்ணாதீங்க.. நான் இந்த மாதிரி பார்ட்டிக்கெல்லாம் போனதில்ல.. அதான் கேட்டேன்.”

“ஓகே ஓகே , இது க்ளோஸ் சர்க்கிள் மட்டும் இருக்கற பார்ட்டிதான் என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ், டீம்மேட்ஸ்  இவங்க மட்டும்தான், சோ.. ரொம்ப கூட்டமா யாரோ ஏலியன்ஸ்லாம் வருவாங்களோன்னு பயப்படாத..”

“பார்ட்டில ட்ரிங்க்ஸ் பண்ணுவாங்களா?”

“கண்டிப்பா ட்ரிங்க்ஸ் இருக்கும், ஆனா யாரும் மொடாக்குடி குடிச்சிட்டு சீன் கிரியேட் பண்ணமாட்டாங்க.. அது ஒருபக்கம் போயிட்டு இருக்கும், டிரிங்க்ஸ் பண்ணாதவங்களும் ஒருபக்கம் இருப்பாங்க, எங்க வீட்ல வெச்சிருக்கேன் என் பாட்டி, அப்பா இருப்பாங்க, அதனால் நீ நம்பி வரலாம், நாளைக்கு சண்டே ஓபன் டே தானே.. சோ நீ வெளிய வர்றதுக்கும் ஒன்னும் பிரச்சனை இருக்காது..ஓகேவா?

 “அப்பா இருப்பாங்கன்னா? அம்மா எங்கே? என்ற எண்ணம்  மனதில் ஓடும்போதே, மறுபுறம் அதற்கான விடையைத் தெரிந்து கொள்ள பயமாகவும் இருந்தது. அதனால் கேட்காமலே தவிர்த்தாள்.

மேலும் பார்ட்டிக்கு போவதா வேண்டாமா என்ற யோசனையும் ஒருபுறம் ஓட அவள் பதிலளிக்காமல் தயங்கினாள்.

அவள் தயங்குவதைப் பார்த்து,

“உன்ன கட்டாயப் படுத்தல, நீ வந்தா நல்லாருக்கும்ன்னு தோனுச்சு, அதான் கூப்ட்டேன்  அப்புறம் உன் இஷ்டம்.” என்றான்.

 “இல்ல நான் வரேன்.. கூட என்னோட ஃப்ரண்ட்ஸையும் கூட்டிட்டு வரலாமா?”

“கண்டிப்பா.. எத்தனைப்பேரை வேணா கூட்டிட்டுவா.. நான் உனக்கு வாட்ஸாப்ல லொக்கேஷன் ஷேர் பண்றேன்..

பை.. சீ யூ டுமாரோ..”

விடை பெற்றுக்கொண்டு தன் வேக நடையுடன் செல்பவனையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள்.

‘இவன் எப்படிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என்னைப் பேச்சிழந்து போக செய்கிறான்.’

‘இவன் இதெல்லாம் தெரிஞ்சி பண்றானா இல்லை தெரியாம பண்றானா?’

‘நெருங்கிய வட்டத்தை மட்டுமே கூப்பிடும் பார்ட்டியில் என்னையும் அழைக்கிறான் என்றால் வர்ஷினி சொல்வது போல் இவனுக்கு என் மீது நிஜமாகவே ஏதும் சம்திங் சம்திங் இருக்குமா??’ என்று மனதின் ஓரத்தில் ஓர் ஆசை துளிர்விட்டது.

ஷிவாங்கியும் சஞ்சயும் வேறு வேலை இருப்பதாக சொல்லி கழன்று கொள்ள, அதிதி, வர்ஷினியுடனும் விஷாலுடனும் வசீகரன் வீட்டுக்குச் செல்வது என்று முடிவாகியது.

பார்ட்டிக்கு போடுவதற்கு ஆடை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு போராட்டமே நடந்தது.. கட்டில் முழுவதும் தன் ஆடைகளைக் கடை பரப்பிக்கொண்டு எதைப் போடுவது என்று வர்ஷினியை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தாள் அதிதி.

“என்கிட்ட போடுறதுக்கு நல்லதா ஒரு ட்ரெஸ் கூட இல்ல..ப்ச்..” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“ஒரு ட்ரெஸ் கூட இல்லையா..? அப்ப இதெல்லாம் என்ன?” என்று கேட்டாள் வர்ஷினி அறை முழுதும் கொட்டிக்கிடந்த ஆடைகளைப் பார்த்து..

“சும்மா பேசிட்டு இருக்காம ஒரு ஐடியா குடு டீ.”

“எப்பவும் போடுறமாதிரி போடாதடீ, உன்னை பார்த்ததும் உன்ஆள் மயங்கி விழுந்திடனும் அப்படி ட்ரெஸ் பண்ணு..” என்று வர்ஷினி சொல்ல,

“அவன் ஒன்னும் என் ஆள் இல்லை..” என்று மறுத்துப்பேசினாள் அதிதி.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. என்னைப் பொருத்தவரைக்கும் அவன் உன் ஆளுதான்… என்று திட்டவட்டமாக கூறி முடித்தாள்  வர்ஷினி.

“நான் வேணா என்னோட தீபாவளி ட்ரெஸ் போடவா?”

“எது.. அந்த லெஹங்கா வா?அப்படியே கையில ரெண்டு குச்சிய எடுத்துட்டுப் போய் அந்த வசீகரன சுத்தி தாண்டியா ஆடு.. போடீ..”

என்று கிண்டலடித்தவளை முறைத்தாள் அதிதி.

“அப்போ என்ன தான் போடுறது..?”

“மார்டனா அதே சமயம் கியூட்டா எதாவது போடு..”

“டீ-ஷர்ட் ஜீன்ஸ் ஓகே வா?”

“ப்ச்.. நீ என்ன சூப்பர் மார்க்கெட்டுக்கு பால் பாக்கெட் வாங்கவா போற? பார்ட்டி டீ.. அதுவும் உன் ஹீரோவோட பர்த்டே பார்ட்டி..நீ ஹீரோயின் மாதிரி ட்ரெஸ் பண்ணவேணாமா..?”

ஒரு ஆயாச பெருமூச்சுடன் “எனக்கு தெரியல.. நீ என்ன சொல்றயோ அதையே போட்டுக்கறேன்..” என்று சரணடைந்தாள்.

“சரி இரு..” என்று அவளது உடைக் குவியலுக்குள் தேடி எடுத்து ஒவ்வொன்றாக வைத்துப்பார்த்துவிட்டு கடைசியாக

“ம்ம்.. இது ஓகே.. ரொம்ப ஓவராவும் இல்ல.. அதே சமயம் நீ எப்பவும் போடுறது மாதிரியும் இல்லாம.. உனக்கு அழகாவும் இருக்கு..”

மறுத்து பேச தொடங்கியளை ஒருவிரல் காட்டி எச்சரித்து அடக்கி விட்டு

“நீ இதான் போடுற.. நோ மோர் டிஸ்கஷன்ஸ்..” என்று கண்டிப்புடன் முடித்தாள் வர்ஷினி.

பின்க் நிறத்தில் லேஸ் வேலைப்பாடு செய்யப்பட்ட நீ லெங்க்த் ஃப்ராக் மற்றும் இடையில் கோல்டன் நிறத்தில் ஒரு மெல்லிய பெல்ட்  என்று தயாரானாள் அதிதி.

அவளை அப்படி இப்படி திருப்பி பார்த்துவிட்டு,

“டிரெஸ் ஓகே  இப்போ மேக் அப்..” என்று பலவித ஒப்பனை வஸ்த்துக்களை எடுத்து அடுக்கினாள்,

“ஹே.. ரொம்பல்லாம் அப்பிடாதடீ.. அப்புறம் ஒரு மாதிரி இருக்கும்”

“ஷ்ஷ்..நீ எதுவும்பேசக்கூடாது., நான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல.? என்று அதட்டி அவளை அடக்கிவிட்டு தன் கைவண்ணத்தை அவளது முக லாவண்யத்தில் காட்டினாள்

கொஞ்சம் ஃபவுண்டேஷன் கிரீம், லேசாக ஐஷேடோ, ஐலைனர், அடர்பிங்க் நிற லிப்பாம் என்று மிதமான ஒப்பனையிலேயே அழகாக வித்தியாசமாக மாறியிருந்தாள் அதிதி. மேலும் பொருத்தமான காதணி  மற்றும் மெல்லிய சங்கிலியில் கோர்த்த பெண்டண்ட் அணிந்து லூஸ்  ஹேரில் கண்ணாடியில் அவள் தன்னையே யாரோப்போல் பார்த்துக்கொண்டிருக்க..

“சரி.. பர்த்டேக்கு போறியே.. என்ன கிஃப்ட் தர போற..?” என்று கேட்டாள் வர்ஷினி.

“கிஃப்ட்டா? அதை பத்தி நான் யோசிக்கவே இல்லையே..”

“பின்ன.. வெறும் கைய வீசிட்டா போவ..?”

“கிஃப்ட் வாங்கணும் தான்.. ஆனா என்ன வாங்கறதுன்னு தெரியலயே.. அவன் எப்படியும் ப்ராண்டட் ஆ தான் யூஸ் பண்ணுவான், அதெல்லாம் வாங்க என்கிட்ட எங்க காசு இருக்கு?” என்று அதிதியின் முகம் கவலை ரேகை காட்டவும்,

“ஹேய் கூல்.. இங்க பாரு, நீ எவ்ளோ காஸ்ட்லியான கிஃப்ட் குடுக்கறங்கறது முக்கியம் இல்ல, சின்னதா இருந்தாலும் அதுக்கு பின்னாடி இருக்கற இன்டென்ஷன் தான் முக்கியம், புரியுதா..? நீ சொல்றத பார்த்தா அவன் பெரிய பணக்காரனாதான் இருப்பான், அதனால நீ எவ்ளோ செலவு பண்ணாலும் அது அவன் அந்தஸ்துக்கு கம்மியாதான்  இருக்கும், அதனால சின்னது பெருசுன்னு கவலைப்படாம எதாவது மீனிங்ஃபுல்லா குடு”

“மீனிங்ஃபுல்லா என்ன குடுக்கறது?” என்று யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே அவள் டேபிளின் மேலே வீற்றிருந்த  சிறிய பத்துமலை முருகனின் சிலைக் கண்ணில்பட்டது, அது அவளது அப்பா தொழில்முறைப் பயணமாக மலேஷியா சென்றிருந்தபோது வாங்கிவந்தது, இவள் இந்தமுறை ஊருக்குப் போனபோது எடுத்துவந்திருந்தாள்.

அந்த தங்கமுலாம் பூசப்பட்ட சிறு முருகன்சிலை, கையில் வேலுடன், அழகான சிரிப்புடன் அருள்பாலிப்பது போல் இருந்தது,

கண்டிப்பாக இந்தப் பரிசு அவன் வீட்டுப் பூஜையறையில் அல்லது குறைந்த பட்சம் ஷோகேஸிலாவது இடம்பெற்றுவிடும், அதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவள் நினைவும்வரும் என்றும் தோன்றியது. மேலும் எதுவும் அதிக உரிமை எடுத்துக்கொண்டது போல தவறாகவும் தெரியாது..

பத்துமலை முருகரை அழகாக ஒரு டப்பாவில் வைத்து கிஃப்ட் ராப்(gift warp) செய்து எடுத்துக்கொண்டாள்.

இவளை சொல்லிவிட்டு வர்ஷினி சாதாரணமாக

டீ-ஷர்ட் ஜீன்ஸ் இல் கிளம்ப,

“என்னடி என்னை சொல்லிட்டு, நீ என்ன இப்படி வர்ற..?”

“இன்னைக்கு நீதான் மெயின் கேரக்ட்டர், நான் ஹீரோயின் ஃப்ரண்டுதானே எனக்கு இது போதும்..” என்று முடித்துவிட்டாள்.

தனக்காகத்தான் வர்ஷினி இப்படி செய்கிறாள் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

விஷால்,வர்ஷினி,அதிதி.. மூவரும் டாக்ஸியில் கிளம்பி வசீகரன் அனுப்பியிருந்த லொகேஷனை அடைந்த போது  மாலை ஆறு மணிக்குமேல் ஆகியிருந்தது. ஜனவரி மாதக்குளிர், லேசாக இருட்டத்தொடங்கியிருந்தது.

அந்த பெரிய கேட் முன்பு நின்ற செக்கியூரிட்டி இவர்கள் யார் என்று கேட்டுவிட்டு அந்த பிரம்மாண்டமான கேட் கதவை ரிமோட் மூலம் இயக்கி திறந்துவிட்டார்.

கார் உள்ளே நுழைந்ததும்  ஏதோ பெரிய மாளிகைக்குள் நுழைந்ததுபோல் இருந்தது.

காரோடும் பாதையின் இருபுறமும் அழகாக வெட்டப்பட்ட பசும் புல்வெளி இருக்க, முடிவில்லாமல் நீண்டு கொண்டே போன பாதையில் தூரத்தில் அந்த மாளிகை போன்ற வீடு தெரிந்தது.

கார் வீட்டின் போர்ட்டிக்கோவை அடைந்ததும் அங்கே இருந்த பணியாள் இவர்களை வீட்டின் பின் புறமாக செல்ல பணித்தார்.கார் அவர் கைக்காட்டிய திசையில் வீட்டைச் சுற்றிக்கொண்டு போன பாதையில் சென்றது.

 வீட்டின் பின்புறம் கிரிகெட் கிரவுண்டில் பாதி அளவு பெரிய மைதானம் போல பரந்து விரிந்து இருந்தது. அங்கே சுற்றிலும் மரங்களும் ஆங்காங்கே சிறுமலர்ச் செடிகளும் ரசனையுடன் வைக்கப்பட்டிருந்தன.

அந்த பின்புறத் தோட்டம் முழுவதும் தங்க நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேவலோகம் போல் காட்சியளித்தது.

ஆங்கங்கே வட்டமாகப் போடப்பட்ட டேபிள் சேர்கள்,

ஒருபுறம் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த பஃபே உணவு விருந்து, எதிர்புறம் பார் செட் அப் அங்கே பலவகை பானங்கள் அடுக்கப்பட்டிருந்தன.

ஒரு புறம் டிஜே பாட்டு டான்ஸ் ஃப்ளோர் என்று கலைகட்டியது, எதோ சின்ன பார்ட்டி என்று சொன்னானே இதுதான் சின்ன பார்ட்டியா??கண்ணுக்குமுன் தெரியும் ஏற்பாடுகளின் பிரம்மாண்டமே இவளை மிரட்டியது.

அதிதிதிக்கு தெரிந்ததெல்லாம் பிறந்தநாள் என்றால் அக்கம் பக்கம் இருக்கும் எட்டு பத்து பேரை அழைத்து கேக்கும் பப்ஸ்சும் கொடுக்கும் பார்ட்டி அவ்வளவுதான். வசீகரன் வீட்டுப்பார்ட்டி அவளது போல் இல்லாமல் பெரிதாகத்தான் இருக்கும் என்று தெரியும்தான் ஆனாலும் இத்தனை பிரம்மாண்ட்டத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும் இத்தனை ஏற்பாடு செய்திருந்த அளவிற்கு அங்கே இருந்த கூட்டம் ஒன்றும் அதிகம் இல்லை, சீருடை அணிந்த கேட்டரிங் பணியாளர்கள் மற்றும்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவிர்த்து அங்கும் இங்குமாக இருபதுபேர் தான் இருந்தனர். மற்றவர்கள் இனிமேல் தான் வருவார்கள் போல, எத்தனை பேர் வருவார்களே என்று கலக்கத்தோடு நினைத்துக்கொண்டே அதிதி வசீகரனைப் தேடினாள்.

வீட்டின் பின்புற வாயிலின் வழியாக ஒரு மூதாட்டியின் கையைப் பிடித்து அவரை மெதுவாக நடத்திக்கொண்டு வந்தான். அவன் பாட்டி போலும்.. என்று நினைத்தது ஒரு கணம்தான் அடுத்த கணம் அவன் தோற்றம் அவளை முழுமையாக ஆட்கொண்டது.

எப்போதும் டீ ஷர்ட் ஜீன்ஸ் அல்லது ஸ்போட்ஸ் உடையிலேயே இருப்பவன் முதன் முதலாக டிசைனர் உடையில் காட்சியளித்தான்.

வெள்ளை நிறத்தில் தங்க இழையில் டிசைன் செய்யப்பட்ட பளபளப்பான ஷர்ட் அணிந்து இருந்தான் அது உடலை இன்னொரு தோல்போல் ஒட்டியிருப்பதிலேயே அதன் பட்டுப்போன்ற மென்மை தெரிந்தது, மேல் பட்டன் இரண்டும் திறந்திருக்க அவனது ஜிம் பாடி தாராளமாக கண்ணுக்கு காட்சியளித்தது.

கருப்பு நிறத்தில் பாண்ட் மற்றும் தங்க நிறத்தில் பெல்ட் அணிதிருந்தான். அந்த ஒளிரும் நந்தவனத்தில் அவன் தேவன் போல் தெரிந்தான் அதிதியின் கண்களுக்கு.

அவள் மெய்மறந்து பார்த்திருக்க..

வர்ஷினி அவள் கையில் கிள்ளினாள்.

“ஸ்ஸ்..”என்று வலியில் தன்னுணர்வுகொண்டவளை,

“பார்த்து வாயில கொசு போயிட போகுது..” என்று கலாய்த்தாள் வர்ஷினி.

“சும்மா இருடி..”என்று சிணுங்கியவளின் கண்கள் தானாக மீண்டும் வசீகரனிடம் சென்றது.

அவன் அங்கங்கே பார்ப்போரிடமெல்லாம் இன்முகத்துடனும் உற்சாகத்துடனும் முகமன் கூறிக்கொண்டிருந்தான்.

தூரத்தில் இவளைப்பார்த்ததும் அவன் கண்ணும் முகமும் சேர்ந்து மலர சிரித்தான்.

பாட்டியை அருகில் ஒரு நாற்காலியில் அமரவைத்துவிட்டு இவளிடம் வேக நடையுடன் வந்தவன்,

“ஹேய் கிட்டி..வர மாட்டேன்னு நெனைச்சேன்” என்றான்.

“அச்சோ வந்துட்டனே.. சாரி டு டிஸப்பாய்ண்ட்(disappoint) யூ..” என்றாள் விரிந்த விழியால்  அவனைப்பார்த்து குறும்பாக..

“ஐ அம் கிளாட் யூ டிஸப்பாய்ண்ட்டட் மீ..” என்றவன் அவளது புதிய அவதாரத்தை  குறுகுறுப்பாக பார்த்தபடி,

“யூ லுக் டிஃபரண்ட்” என்றான்.

“டிஃபரண்ட்ன்னா? குட் ஆர் பேட்?” என்று தலை சாய்த்துக் கேட்க..

“இன் ய குட் வே ஒன்லி” என்றான் மெச்சுதலாக..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நிற்பதை பார்த்து,

“இவங்க கண்ணுக்கு நாம தெரியவே இல்லைல்ல..?”என்று விஷாலிடம் கிசுகிசுத்தாள் வர்ஷினி.

“இந்த அவமானம் நமக்குத்தேவையா? வா நாம அங்கிட்டு போவோம்…” என்று விளையாட்டாகக் கூறிக்கொண்டே வர்ஷாவின் கையைப்பற்றி அங்கிருந்து கூட்டிப்போனான்.

அவர்கள் சென்றதைகூட கவனிக்காமல் அதிதி

“ஹேப்பி பர்த்டே சீனியர்..” என்று வாழ்த்த கையை நீட்டினாள்.

“ஹே கம் ஆன் “ என்று நீட்டிய அவள் கையை தட்டிவிட்டு அவளை லேசாக அணைத்து

“ தாங்க் யூ” என்று கூறி அவளை விடுவித்தான்.

மிஞ்சிப்போனாள் ஒரு வினாடி நீடித்திருக்கும் அந்த அணைப்பு ஆனால் அதிதிக்கு அது ஒரு யுகமாகத் தோன்றியது.

அடிவயிறு எதோ மீள்வில்லா பாதாளத்தை நோக்கிப்போக..

பேச்சிழந்து உறைந்து போனாள்.

                                  தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!