Skip to content
Post Views: 5,032
தூறல் – 9
அழைப்பை ஏற்று காதில் வைத்தபடியே வாசலில் வந்து நின்றான் குரு. காமாட்சிதான் அழைத்திருந்தார்.
Advertisement
“குரு… விஷயம் தெரியுமா..? அஞ்சலி புள்ளையையும் தூக்கிட்டு வீட்டை விட்டு எங்கேயோ ஓடிப் போயிட்டா… பெத்தவுக நெஞ்சுல அடிச்சுட்டு உக்காந்திருக்காக. எங்க போனாளோ..? என்ன ஆனாளோ தெரியல. ரெண்டு நாளா நம்ம ஏரியாவே சலசலத்துக் கெடக்கு…”
காமாட்சி பதட்டமாக கூற தாடையை தேய்த்தபடியே வீட்டிற்குள் எட்டிப் பார்த்து இன்னும் முன்னால் நகர்ந்து வந்து நின்றான் குரு.
Advertisement
Advertisement
“அப்படி அங்க என்னதான் பிரச்சனை..?”
“அன்னைக்கு அவளைப்பத்தி பேசினோமே… அதே பிரச்சனைதான்… நாளைக்கழிச்சு மீனாட்சி அம்மன் கோயில்ல வச்சு தாலி கட்டுறதா திட்டவட்டமா சொல்லிட்டு போயிட்டாக அவ புருஷன் வீட்டு ஆளுக. கல்யாணத்துக்கு சம்மதிக்கலேன்னா செத்துப் போயிருவோம்னு இவ அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மெரட்டி இருக்காக. பாக்குறவரைக்கும் பாத்துட்டு பிள்ளையை தூக்கிட்டு எங்கேயோ ஓடிட்டா…”
Advertisement
“அக்கா… முதல்ல இந்த ஓடிட்டான்னு வார்த்தையை சொல்லாதீங்க… கேட்கவே நாராசமா இருக்கு…” முகத்தை சுளித்தான் குரு.
“நான் தப்பான அர்த்தத்துல சொல்லலப்பா. பொதுவா சொன்னேன்… இப்ப புள்ள போனதுக்கு அப்புறம் ஐயோ அம்மான்னு நெஞ்சில அடிச்சுட்டு உக்காந்து இருக்குது ரெண்டும். அவ அண்ணனும் ஊர்ல இருந்து வந்துட்டியான்…”
“சொந்த தங்கச்சிக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கும்போது வாய மூடிட்டு உட்கார்ந்து இருந்தானோ வெளியூர்ல..? அவளுக்கு பக்கபலமா அவன் நிக்க மாட்டானா..? என்ன அண்ணன் அவன்..?” கோபத்தோடு கேட்டான் குரு.
“இவளுக்கு சப்போர்ட் பண்ணி காலம் முழுக்க அவனே தங்கச்சியை பார்க்கிற மாதிரி ஆயிட்டா என்ன பண்றது..? பொண்டாட்டி குத்துவாளே… இவனும் அந்த கோஷ்டிதான்…”
“ஆக மொத்தத்துல ஒரு பொண்ணோட உணர்ச்சிக்கு அங்க மதிப்பு இல்ல. அவங்க பிரச்சனை முடியணும். அவளும் அவ குழந்தையும் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்ல… அப்படித்தானே… நல்ல குடும்பம்… அப்படி ஒரு குடும்பத்தில இருந்து அவ வெளியே போனது தப்பே இல்ல…”
“இருந்தாலும் அவளும் ஒரு வயசுப் பொண்ணு… கையிலயும் பொம்பளப் புள்ள இருக்கு. வெளியே போய் என்ன பண்ணுவா.? பாவம் நல்ல புள்ளைய ஆளாளுக்கு சேர்ந்து இப்படி ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க… உசுரோட இருக்காளோ இல்ல வேற எதுவும் பண்ணிக்கிட்டாளோ…”
வருத்தத்தோடு அவர் பேசிக் கொண்டிருக்க இதற்குள் மாமா என்று சத்தமிட்டபடி சவி வீட்டிற்குள் இருந்து ஓடி வந்தாள்.
“அக்கா… கொஞ்சம் வேலை… திரும்ப கூப்பிடுறேன்…” என்று கூறி அழைப்பை துண்டித்திருந்தான் குரு.
அஞ்சலியிடம் அவன் கேட்க நினைத்த விபரங்களை காமாட்சியே தெளிவாக கூறியிருக்க அடுத்து என்ன செய்யலாம் என்ற பலத்த யோசனையுடன் உள்ளே சென்று அமர்ந்தான்.
தப்பிக்க முடியாத கெடுபிடியான சூழ்நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாள். ஆனால் வெளியேறியவள் வாழ வேண்டும் என்று நினைக்காமல் ஏன் சாக நினைத்தாள்..? அதைத்தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ராதா பொதுவாகவே கலகலவென பேசும் பழக்கம் கொண்டவர். அதிலும் அவரது இலங்கைத் தமிழை கேட்பதற்கு அஞ்சலிக்கும் தித்திப்பாக இருந்தது போலும். அவர் கதைகளை எல்லாம் கேட்டபடி கன்னத்தில் கைதாங்கி அமர்ந்திருந்தவளை பார்த்தபடியே சவியை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் குரு.
காமாட்சி தனக்கு அழைத்து கூறிய விபரங்களை அவளிடம் தெரிவித்தான்.
“நான் இங்க இருக்கிறதை சொல்லிட்டீங்களா..?” பதறியடித்துக் கேட்டாள் அஞ்சலி.
இல்லை இன்று இடவலமாக தலையாட்டினான்.
“அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க..?”
“உங்க கதையை கேட்டதுக்கு அப்புறம் சாகணும்னு தோணல. தப்பான ஆளுங்க எல்லாம் சந்தோஷமா வாழணும்னு நினைக்கும்போது தப்பே பண்ணாத நான் ஏன் சாகணும்..? என் குழந்தையும் ஏன் சாகணும்..?”
“நல்ல முடிவு…”
“ராதாம்மா ஒரு பேரிச்சம்பழ ஃபேக்டரிலதானே வேலை செய்றாங்க. அங்கேயே எனக்கும் ஒரு வேலை பார்த்து கொடுக்கட்டும். இதே ஊர்ல இங்கேயேகூட நான் இருக்கிறேன்…”
“பைத்தியமா நீ..?”
சுரீரென பாய்ந்த குரலுடன் அவளை கோபமாக பார்த்தான் குரு.
“எம்எஸ்சி பிஎட் முடிச்சுட்டு பேரிச்சம் பழ பாக்கெட்டை பேக்கிங் பண்ணப் போறேன்னு சொல்ற. அதுவும் இல்லாம இது முகாம். இங்கே அகதிகளுக்கு மட்டும்தான் இடம் இருக்கு. நீ எல்லாம் இங்க தங்க முடியாது…”
“வேற எங்கேயாவது தங்கிக்கிறேன்…”
“முட்டாள்… முட்டாள்…”
பற்களை கடித்து துப்பியவனை கோபமாக திரும்பிப் பார்த்தாள் அஞ்சலி.
“என் அத்தைக்கு பெரிய தேவையில்ல. அதுல வர்ற வருமானம் அவங்களுக்கு போதும். கூடுதலா நான் அவங்களை பார்த்துக்கிறேன். ஆனா உனக்கு அப்படியா..? வளர்ந்து வர்ற பெட்டை குழந்தையை வச்சுட்டு இந்த வேலை செஞ்சு என்னன்னு உன் எதிர்காலத்தை நகர்த்துவ..? பிராக்டிக்கலா யோசிக்க மாட்டியா..?”
உரிமை கலந்த அக்கறையுடன் கோபம் குறையாமல் பேசியவனை அமைதியாக பார்த்தபடி இருந்தாள் அஞ்சலி.
“குமரா… நீ ஏற்கனவே வேலை பார்த்த பாடசாலையிலேயே இந்த பிள்ளையை வேலைக்கு சேர்த்தலாமே. அங்கே பார்த்த வேலையை இங்கே பாத்துட்டுப் போறா…”
“அது சிரமம் அத்தை… இதே ஸ்கூல்ல வேலைக்குப் போனா அந்த ஸ்கூலுக்கு தெரிய வந்துடும். அப்புறமா அவங்க வீட்டுக்கும் விஷயம் போயிடும். அவங்க வீட்டு ஆளுங்க ஈசியா மோப்பம் பிடிச்சு இங்க வந்துடுவாங்க…”
சொன்னவன் சில வினாடிகள் யோசனையில் ஆழ்ந்து மீண்டும் அஞ்சலியிடம் திரும்பினான்.
“நீ இங்க வந்தது வேற யாருக்காச்சும் தெரியுமா..? அது எப்படி ராமேஸ்வரம் போகணும்னு முடிவு பண்ணி வந்த..?”
“வீட்டை விட்டு வெளியேறணும்னு தோணுச்சு. வாழவே கூடாதுன்னு தோணுச்சு. பிள்ளையோட கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்தேன். ராமேஸ்வரம் பஸ் நின்னது. கிளம்பி வந்துட்டேன். இருக்கவே இருக்கு பெரிய கடல். மொத்தமா வேலையை முடிச்சுக்கலாம்னு அங்கே போனேன்…”
விரத்தியோடு பேசியவளை ஆழ்ந்து பார்த்தான் குரு.
மனம் முழுக்க வெறுப்பும் விரக்தியும் மண்டிப் போனதால் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள். அவள் சூழலும் அப்படித்தானே இருக்கிறது. எப்படியேனும் கட்டாயப்படுத்தியாவது அந்த அருணுக்கு அவளை கட்டி வைத்திருப்பார்கள். அவளது உணர்வுகள் மொத்தமாக சாகடிக்கப்பட்டிருக்கும். அதற்கு தனது உயிரையே மாய்த்துக் கொள்வது எத்தனையோ மேல் என்று நினைத்து இருப்பாள். தான் இல்லாத உலகத்தில் தன் குழந்தை மட்டும் தனியாக தவிக்க வேண்டுமா என்றுதான் தன்னோடு சேர்த்து தன் குழந்தையையும் சாகடிக்க மனதை கல்லாக்கி இருக்கிறாள்.
தற்கொலை முடிவு என்பது ஒற்றை நொடியில் மனம் எடுக்கும் முடிவுதானே. அந்த எண்ணத்தில் இருந்து ஒரு நொடி மனம் பிறழ்ந்து மாறிவிட்டால் அதன்பின் எண்ணங்கள் அதை நோக்கி இழுத்துச் செல்லாது. இந்த நொடி அஞ்சலி தற்கொலை என்னும் எண்ணத்தில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டாள். இனி அதைப் பற்றி யோசிக்க மாட்டாள். வாழும் எண்ணம்தான் மேலோங்கி இருக்கிறது. அது வரையில் அவனுக்கு நிம்மதி பிறந்தது.
அவளை சமாதானம் செய்து மீண்டும் அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் எண்ணம் அவனுக்கு அறவே இல்லை. அவனை பொறுத்தவரை அஞ்சலியை சேர்ந்தவர்களை மனிதர்களாககூட நினைக்க முடியவில்லை. இந்த நொடி ஊர் இன்னும் வேறு என்னவெல்லாம் பேசுமோ..? அங்கு சென்று நிம்மதியற்ற ஆட்களோடு நிம்மதியற்ற ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு கண் காணாமல் அவளுக்கென ஒரு வாழ்க்கையோடு அமைதியாக அவளது நாட்களை நகர்த்துவது நல்லது என்பதுதான் அவனுக்கும் சரி என்று பட்டது.
“அஞ்சலி…”
குனிந்து அமர்ந்து ஒற்றை விரலால் தரையில் கோடு இழுத்துக் கொண்டிருந்தவள் அவனது கரகரத்த கணீர் குரலில் நிமிர்ந்தாள்.
“நம்ம ஸ்கூல்ல இருந்து உன்னோட சர்டிபிகேட்ஸை எப்படியாவது நான் வாங்கிடுறேன். அதை கான்ஃபிடன்ஸியலா பார்த்துக்கிறேன். இங்கேயே வேற ஒரு ஸ்கூல்ல உனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணி கொடுக்கிறேன்… போறியா..?”
உயிரைக் காப்பாற்றி, தற்கொலை எண்ணத்தை தவிடு பொடியாக்கி, வாழும் எண்ணத்தை தூண்டி, இனி அடுத்து வாழ்வதற்கும் வழி வகுக்க தயார் என்று நிற்பவனை என்ன மாதிரி கண்ணோட்டத்தில் பார்த்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
அவனது நிதானமான பேச்சு, செயல், நடவடிக்கை அனைத்திலும் ஒரு தெளிவு இருக்கிறது. இல்லையேல் அனைத்தையும் இழந்தவனால் இப்படி திடமாக நின்று வாழ முடியுமா..? ஏனோ ஒரே நாளில் அவள் மனதில் மிகவும் உயர்ந்து போனான் குரு. அவனிடம் இல்லை என்று மறுப்பதற்கோ வேண்டாம் என்று சொல்வதற்கோ எதுவுமே இல்லையே. அவள் வாழத்தானே வழி வகுக்குறேன் என்கிறான்.
சரி என்று உடனடியாக தலையாட்டி இருந்தாள் அஞ்சலி.
“ஆனா நான் இங்கேதான் இருக்கிறேன்னு ஒரு ஆளுக்கு தெரிஞ்சாகூட போதும். கண்டிப்பா எப்படியாச்சும் விஷயம் வெளியில தெரிஞ்சிடும்…” பயந்தபடி கூறினாள்.
“அது தெரியாது… தெரியாம நான் பார்த்துக்கிறேன்…”
“தேங்க்ஸ்… ரொம்ப தேங்க்ஸ்…”
கண்கள் கனிந்து கூறியவளை அமைதியாக ஒரு பார்வை பார்த்து மெல்லியதாய் ஒரு புன்னகையை உதிர்த்தான்.
வெளியே சென்றவன் நெடுநேரம் கழித்து இரவு நெருங்கும் நேரத்தில்தான் வீட்டிற்கு வந்திருந்தான். ஓரமாக ஒரு பாயில் சவி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளையே ஆதுரமாக சில நொடிகள் பார்த்தபடி நின்றவனை ராதா உணவு உண்ண அழைக்க தான் வெளியிலேயே உணவு உண்டு முடித்துவிட்டதாக கூறி அஞ்சலியை தேட உள்ளே இருந்த அறையில் இருந்து வெளியேறி வந்தாள் அஞ்சலி.
தன் கையில் இருந்த சில கவர்களை அவளிடம் நீட்டினான்.
“இதுல உனக்கும் பாப்பாவுக்கும் டிரஸ் இருக்கு. அடுத்த தெருவில உனக்கு ஒரு வீடு பார்த்து இருக்கேன். பாதுகாப்பான ஏரியா. அத்தையும் பக்கத்துல இருக்காங்க. அடிக்கடி உன்னை வந்து பார்த்துப்பாங்க. நான் சொன்ன மாதிரியே அந்த ஸ்கூல்லயும் உனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். சம்பளமும் ஓரளவுக்கு நல்லாவே கிடைக்கும். உனக்குதான் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கே. இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்புறேன். நாளைக்கே ஸ்கூல்ல போய் பேசி உன்னோட சர்டிபிகேட்ஸ் வாங்கி பாதுகாப்பா அனுப்பி வைக்கிறேன். புதன்கிழமை நல்ல நாள். அன்னைக்கே வேலைக்கு போய் ஜாயின் பண்ணிடு. நான் அடுத்த வாரத்தில் இங்கே வரேன்…”
அடுக்கடுக்காக பேசிக் கொண்டிருந்தவனை விழி அகற்றாது பார்த்தபடி நின்றாள் அஞ்சலி. இதயத்தில் ஏதோ உருகி ஓடியது.
“அத்தை…” என்று ராதாவை அழைத்தவன் தன் பாக்கெட்டில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.
“இப்போதைக்கு அஞ்சலிக்கு தேவையான பாத்திரம் சாமான் இதெல்லாம் கூட இருந்து வாங்கி கொடுத்துடுங்க. கூட இருந்து கொஞ்சம் பார்த்துக்கோங்க. ஏதாவது தேவை இருந்தாலும் எனக்கு கூப்பிடுங்க. தனியா இருந்தாலும் இனிமேலாவது இந்த பொண்ணு நிம்மதியா இருக்கட்டும். அப்படிப்பட்ட ஆளுங்க முன்னாடி இவ போய் நிக்க வேணாம். மனிதத்தன்மையே இல்லாத மனுஷங்ககிட்ட பேசி மட்டும் புரிய வச்சுட முடியுமா..? புது இடம்… புது ஊர்… நீங்கதான் கூட இருந்து பாத்துக்கணும்…”
அக்கறையாக பேசிய தன் மருமகனை மெச்சுதலாகப் பார்த்து ஆதுரமாக அவன் முதுகை வருடினார் ராதா.
“அதுக்கு என்ன அப்பு… நான் அருமையா பாத்துக்குவேன்… இந்த ஊருக்குள்ள நாம நுழைஞ்சப்போ எப்படி நுழைஞ்சோம்..? நீ சொல்றதுதான் சரி. அந்த ஊர் பக்கம் இவங்க போக வேணாம். நிம்மதியா போ… நான் பாத்துக்குறேன்…”
அத்தையின் திடமான வார்த்தைகளில் புன்னகைத்தவன் தன் உடைமைகளுடன் தயாராகி வந்தான்.
மாதுளை பிஞ்சுபோல் குட்டி வாயை மெலிதாக திறந்தபடி அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் சவியின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன் குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான். அந்த கண்களில் தெரிந்த நேசமும், ஏக்கமும், தொக்கி நின்ற வலியும் அஞ்சலியை பெரிதாகவே அசைத்தது.
அவளுக்காகவும் அவள் குழந்தைக்காகவும் எதையெல்லாம் யோசித்து ஒரே நாளில் என்னவெல்லாம் செய்திருக்கிறான். இதையெல்லாம் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு என்ன இருக்கிறது..? இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்களைத்தானே தெய்வம் சோதித்து சிரித்து ரசிக்கிறது.
நன்றி என்ற ஒற்றை வார்த்தைக்குள் அவன் அவளுக்காக யோசித்து செய்தவற்றை அடக்கிவிட முடியுமா..?
அமைதியாக அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் அஞ்சலி.
“நான் கிளம்பட்டுமா..?”
அவள் முகம் பார்த்து கேட்க உயிரை உருவி எடுத்ததுபோல் சுருக்கென ஒரு வலி இதயத்தில் அவளையும் மீறி எழுந்து நின்றது.
கலங்கத் துடித்த கண்களை கட்டுப்படுத்தியபடி சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
வெளியேறிச் சென்றவனின் பின்னாலே வேகமாக நடந்தவள் “குரு சார்…” சன்னமான குரலில் அழைக்க திரும்பி அவளைப் பார்த்தான்.
“சாரி…”
“எதுக்கு..?”
“பாப்பாகூட நீங்க விளையாண்டப்போ உங்களை தப்பான வார்த்தை சொல்லி வஞ்சதுக்கு (திட்டினதுக்கு). அதுக்கும் ஒரு காரணம் இருக்கு…”
அடுத்து அவள் பேசும் முன் வேகமாக கையமர்த்தினான் குரு.
“புரியுது… பலவழி தாக்குதல் போல நிறைய இடங்கள்ல உன் மனசு பாதிக்கப்பட்டிருக்கு. அதெல்லாம் இப்போ எதுக்கு..? அதெல்லாம் நான் மறந்துட்டேன்…”
“அ..அடுத்த வாரம் வருவீங்களா..?”
எதிர்பார்ப்போடு அவன் முகம் பார்த்தாள்.
“கண்டிப்பா வருவேன்… இந்த ஊர்ல நீ எப்படி செட் ஆயிருக்கேன்னு தெரிஞ்சுக்கணுமே… சவியை பார்த்துக்கோ…”
சொன்னவன் அவளிடம் தலையசைத்து அங்கிருந்து நடந்து செல்ல தெருமுனைவரை சென்று மறையும்வரை அவன் முதுகையே விழிகள் சிமிட்டாது பார்த்தபடி நின்றிருந்தாள் அஞ்சலி.
(தொடரும்)
error: Content is protected !!