Skip to content
Post Views: 1,519
வேளை 23
லாலா முடிவை சொல்லிவிட்டாலும் மனத்திற்குள் பயம் பட்டாம்பூச்சியாக படபடத்தது.
Advertisement
முதலில் இருந்து தொடங்க வேண்டும். வாழ்க்கையில் அவன் வயதொத்த நண்பர்கள் எல்லாம் வேலையில் சேர்ந்து, அடுத்த நிலைக்குச் சென்றிருக்க, இவன் அகரத்தில் தொடங்க வேண்டும்.
கரும்புகை சூழ்ந்த உணர்வு! ஆனாலும் இதற்குமேல் இந்த சூழலில் சிக்கி வாழ்க்கையை சிக்கலாக அவன் விரும்பவில்லை. வருத்தம், அதிருந்தது அதிகமாகவே! வேதனையாக இருந்தது, கத்தி அழ வேண்டும் என்று தோன்றியது.
Advertisement
Advertisement
ஆனால், செய்யவில்லை.
லாலா பேருந்தில் வீடு திரும்பினான். சித்தப்பா சொன்ன வார்த்தைகள் மனத்தினுள் ஓடியது.
Advertisement
“இங்க பாருடா லாலா, சித்தப்பா உன்னை மோடிவேட் பண்ண சொல்றேன் நினைக்காத! உனக்கு என்னைப் பார்த்தா லைஃப்ல எல்லாம் அச்சீவ் பண்ண மாதிரி இருக்கும், இப்போ நான் அந்த சந்தோஷத்தைப் ஃபீல் பண்றேன், ஆனா இது நடக்க பதினைஞ்சு வருஷம் மேலாச்சு. அப்படி செஞ்சிருக்கக் கூடாது, இப்படி செஞ்சிருக்கலாம்னு நான் வருத்தப்படாத நாளே இல்லை. உங்க சித்தி சொல்லுவா, ரெக்ரட் இஸ் பார்ட் ஆஃப் லைஃப்னு. அது ரொம்ப உண்மை!”
“உனக்கு அந்த அவசியம் கூட இல்லை. நீ ஆசைப்பட்டதை செய்ய முயற்சி செஞ்சிட்ட, புதுசா ஆரம்பிக்கிறனு நினைச்சிக்கோ, போனதை விட்டுடு! நீ எக்ஸாம்ல ஃபெயிலாகிட்டியே தவிர எக்ஸாம் வாழ்க்கை இல்லை! அதை மட்டும் மனசுல வச்சிக்கோ” என்றான்.
சக்தியும், “எங்ககிட்ட நல்லா வக்கனையா பேசிட்டு, மவனே தனியா உட்கார்ந்து ஃபீல் பண்ணக்கூடாது. உன்னை நீயே குறைவா நினைக்கக் கூடாது!” என்றான் மிரட்டலாக.
நண்பனின் பேச்சை இப்போது நினைக்கையில் புன்னகை வந்தது. எப்போதும் அவனை எங்கும் விட்டுக்கொடுக்காத சக்தி, அவருக்காகக் கூட வீட்டில் பேசாத அவன் சித்தப்பா அவனுக்காக பேசுவார். இதை விட உதயநிலா! எதுவுமில்லையென்றாலும் அவனை அவனுக்காக விரும்புகிறவள்.
வெற்றிகள் சில சமயம் தேக்கம் தந்துவிடும், தோல்வியோ சிலவற்றுக்குத் தொடக்கமாக அமையும். லாலா தேர்வுகளில் தன் தோல்வி வாழ்க்கையின் தொடக்கமாக அமைய வேண்டுதல் வைத்தான்.
வீடு சென்றவனுக்குக் களைப்பாக இருக்க மீண்டும் ஒரு குளியல் போட்டான். இப்போது டீ வைப்பதில் டிகிரி பெற்றவனாகிவிட, இஞ்சி தட்டிப்போட்டு சூடாக அவனுக்கு டீ வைத்துக் குடித்தான். பாத்திரங்களைப் பொறுப்பாக கழுவியும் வைத்தவன் பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்த்தான்.
வானம் வாழ்க்கையைப் போல் விரிந்திருந்தது. அத்தனை பெரிய வானம் பார்க்கையில் அவன் பிரச்சனை சிறிதாக தெரிந்தது. எங்காவது வெளியே செல்ல நினைத்தான்.
மெரீனா கடற்கரை செல்வதாக உதயாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான். அங்குதானே அவர்கள் சந்தித்தது. உதயாவுக்கும் அங்கே போக வேண்டும் என்றெண்ணம் பிறக்க, அவனிடம் சொல்லவில்லை. லாலா கிளம்பிய சிறிது நேரத்தில் அவளுக்கும் அலுவலகம் முடிய மெட்ரோ, ஆட்டோ என்று மாறி கடற்கரை சென்று கணவனுக்கு அழைத்தாள்.
கடலும் வானம் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருந்தன. கூட்ட நெரிசலைத் தவிர்த்து ஒரு ஓரமாக கடலுக்குப் பக்கமாக உட்கார்ந்திருந்தான் லாலா.
முடிவெடுத்துவிட்டான். ஆனால் அதனை மற்றவர்கள் எப்படி விமர்சித்தாலும் வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற கவலை.
சித்தப்பா சொன்ன இடத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்றாலும், அனுபவமற்ற அவனுக்கு எப்படி வேலைக் கிடைக்கும் என்ற குழப்பம். வேலைக் கிடைத்த பின் அகாடெமியில் பணியை விடலாம் என்று எண்ணினான்.
அது முழு நேர பணியல்ல. எடுக்கும் வகுப்புகளின் நேரத்திற்கு ஊதியம். அதனால் அதை விடுவதில் எந்த பிரச்சனையுமில்லை.
முதலிலேயே படித்த படிப்பிற்கான வேலைக்குச் சென்றிருக்கலாம் என்று காலம் கடந்து தோன்றிய கற்பனை கசந்தது. சித்ரஞ்சன் முறைத்தபடி மனக்கண்ணில் தோன்றினான்.
‘ரெக்ரட் இஸ் எ பார்ட் ஆஃப் லைஃப்’ என்று செவிகளில் அவன் வார்த்தை மீண்டும் மோதியது.
உலகில் அத்தனை பிரச்சனைகளும் நமக்குத்தான் என்று நினைப்பதே சராசரி மனிதனின் எண்ணம். வரலாறு, புவியியல், அரசியல், உலக நாடுகளின் உறவு என்று அவன் அறியாதவை அல்ல! எத்தனை மக்கள் அகதிகளாக வாழ்கிறார்கள். கோவிட் கொடுந்தொற்று வந்த நேரத்தில், போட்டி போட்டிக்கொண்டு மக்களைக் காத்து, தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்த நாடுகள் இன்று அவர்களுக்குள்ளாகவே போர் செய்கின்றனர்.
அப்பாவி மக்களை தங்கள் அதிகார பசிக்கு இரையாக்குகின்றனர். அங்கு வாழும் மக்களை, குழந்தைகளை விட அவன் நிலை மோசமில்லையே.
இதற்கு அவன் வாட்ஸப் குழுவில் பார்த்த செய்தியே காரணம். லாலா அடிக்கடி அந்த குழுவைப் பார்க்கவே மாட்டான். மற்றவர்களை விட தான் பின்தங்கி இருக்கிறோம், தன்னை எப்படி பார்ப்பார்கள் என்று அடுத்தவரின் பார்வையே அவனுக்கு அத்தியாவசியமாக இருந்தது.
இன்று ‘சேஃபா இருக்கியா மச்சான்’ என்ற வார்த்தைகள் அவன் கண்ணில் பட, என்னவாகிற்றோ என்று திறந்திருக்க, அரபு நாட்டில் உள்ள அவன் நண்பன் குரல்வழி செய்தியில் புலம்பியிருந்தான்.
நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறான். மனைவி, குழந்தை, வேலை, என்று லாலாவின் கனவினை வாழ்பவன். ஆனால், இன்றோ வேறோரு நாட்டில் போர் பதற்றம் நிகழ்கின்ற இடத்திலிருந்து புலம்பினான்.
அவன் தங்கியிருக்கும் வீடு அருகே தூதரகத்தில் குண்டு வீசப்பட்டு இருக்க, குடும்பத்தோடு உடன் வேலைப்பார்ப்பவர்களோடு மூன்று நாட்களாக தனியே வேறொரு இடத்தில் தங்கியிருக்கிறான். நிலைமை சீராகவில்லை என்று வருத்தமாக பகிர்ந்திருக்க, இந்திய நண்பர்கள் எல்லாம் ஆறுதல் சொல்லியிருந்தனர்.
தன்னை சுற்றிப்பார்த்தான் லாலா. வாழ்க்கை அப்படியொன்னும் மோசமில்லை என்று மனதார நினைத்தான். அதே நேரம் வாழ்க்கை சுலபமில்லை என்ற பயமும் வந்தது.
இனிமேல் சாலையில் மட்டுமே ‘யூ-டர்ன்’ போட வேண்டும் என்ற கொள்கையோடு, நடந்தவைகளை நிகழ்ந்தவைகளாக கடந்துவிட்டு அடுத்தென்ன என்று புது அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என்ற வேகமெழுந்தது.
இப்படி மனத்திற்குள் வெற்றிக்கொடிகட்டு என்று லாலா பாடிக்கொண்டிருக்க, அவன் அலைப்பேசி சத்தம் போட பார்த்தால் உதயா.
“லாலா பீச்ல எங்க இருக்கீங்க?
கடற்கரையின் இரைச்சலில் அவள் பேச்சு சரியாகக் கேட்கவில்லை.
“பீச்’ல இருக்கேன் உதயா” லாலா சொல்ல,
“லோகேஷன் அனுப்புங்க” என்று கத்தி சொன்னவள், குறுஞ்செய்தியிலும் அதையே அனுப்பினாள்.
“என்ன? எதுக்கு?” என்று லாலா புரியாமல் அலைப்பேசியைப் பார்த்தாலும் இடத்தைப் பகிர்ந்தான்.
“நான் பீச்’ல இருக்கேன், உங்ககிட்ட வரேன்” என்ற உதயா பத்து நிமிடத்தில் அவனருகில் இருந்தாள்.
சட்டென்று உலகே விரிந்த உணர்வு லாலாவிடம். நிச்சயம் அவள் வருவாள் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. அதே நேரம் அவள் வந்ததில் அளவற்ற ஆனந்தம்.
புதிதாக கழுவப்பட்டு மெரூகூட்டப்பட்ட அரசு பேருந்து போல ஒரே நொடியில் முகம் புன்னகையில் பளிச்சென்றானது.
“வரேன்னு சொல்லவே இல்லையேடி” என்று பற்கள் தெரிய புன்னகை செய்தான்.
“நீங்க இருக்கீங்க, சரி சேர்ந்து பீச் பார்ப்போமேனுதான்” என்ற உதயாவின் பேச்சில் அவளுக்குக் கடற்கரைப் பிடிக்கும் என்ற ஞாபகம் வந்தது.
கடலை விட அவனைப் பிடித்ததால் அவள் வந்தாள் என்று லாலாவுக்குச் சட்டென்று சிந்தனை போகவில்லை.
“சாரிடி! தீடீர்னு வரணும்னு தோணிச்சு. உன்னோட வந்திருக்கலாம், இப்போ இருட்டிடுச்சு” என்று பாவமாக சொல்ல,
“அதனால என்ன? கொஞ்ச நேரம் இருந்துட்டு போவோம்” என்று எளிதாக சொன்னாள் உதயா.
கடற்கரையின் இரைச்சல் தாண்டி இருவருக்குள்ளும் பேச்சில்லை. உதயா லாலாவின் அருகே இதழில் உறைந்த புன்னகையோடு கடலை கண்டாள். இரவின் கடல் அழகே!
உதயாவிற்குக் கடல் எப்படியிருந்தாலும் பிடிக்கும். யாருமற்ற தனிமையில் கடலே கதி என்று இருந்திருக்கிறாள்.
“உனக்கு பீச் ரொம்பப் பிடிக்கும்னு நீ சொல்லியிருக்க, எனக்கு ஞாபகமே இல்லடி. சாரி, இப்படி முன்னாடியே அழைச்சிட்டு வந்திருக்கணும். எங்கேயும் உன்னோட போகல” என்று லாலா வழக்கம்போல் அவனது சோக ஃபோல்டரை திறந்து, உதயாவிற்கு செய்த சொதப்பலை சொல்ல,
“அதுக்கென்ன இப்போ வந்தாச்சுல” என்று இயல்பாக சொல்ல, லாலா தான் எடுத்த முடிவை அவளிடம் பகிர்ந்தான்.
உதயாவுக்கு அவன் ஒரு நல்ல வேலையில் இருந்தாள் போதும், அது அரசு வேலை என்று அவள் என்றுமே ஆவல் கொண்டதில்லை. அவனுக்காக யோசித்து படிக்க மட்டும் கூட சொல்லியிருக்கிறாள், அப்போதெல்லாம் யோசனை கூட செய்யாது மறுத்தவன் இன்று இப்படி சொல்ல அதிர்ந்து பார்த்தாள்.
கடல்காற்று முகத்தில் மோதியது. அவளது ஷால் பறந்திட, லாலா அதனை வாகாகப் பற்றி உதயாவின் மடியில் வைத்து முகம் பார்த்தான்.
“ஏன் லாலா?” என்றாள் புரியாமல்.
“நம்ம ரெண்டு நாள் முன்னாடி பேசினோமே, அது சரின்னு தோணுச்சு. கொஞ்ச நாள் நீ என்னைப் பார்த்துக்க மாட்டியா?” என்று லாலா கேட்க, அந்த பாவனை கொஞ்சத்தான் சொல்லியது.
சட்டென கண்கள் கலங்கின. பின்னே தி கிரேட் லாலா லஜபதி ராய் தன் ஈகோவை விட்டு, மனைவியிடம் தன்னைப் பார்த்துக்கொள்ள கேட்கிறானே? உதயாவுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.
“அதுக்கென்ன? பார்த்துப்பேன். ஆனா தீடீர்னு என்னாச்சு?”
“ஒன்னுமாகல உதயா, நீ சொன்ன மாதிரி என் மனசை அது ரொம்பப் பாதிக்குது. இதுக்கு மேல போனா அந்த தோல்வியைத் தாங்குற சக்தி கூட இல்லாம போயிடுமோனு எனக்குப் பயமா இருக்கு. சித்தப்பா கிட்ட பேசினேன், அவர் தெரிஞ்ச இடத்துல வேகன்சி இருக்கு சொல்லியிருக்கார்”
“மறுபடி புதுசா தொடங்கணும். அந்த வழி எப்படியிருக்கும் தெரியல, அந்த பயமிருந்தாலும் பழைய பாதையிலேயே போய் தொலைய விரும்பல. எல்லா முடிவையும் எப்பவாச்சும் எடுத்துதானே ஆகணும், ரொம்ப நாளா யோசிச்சேன். இன்னிக்கு உங்ககிட்ட சொல்லிட்டேன்” என்றான் தெள்ளத்தெளிவாக.
லாலா சில நேரம் மட்டுமே இப்படி மிகுந்த கவனமாக பேசுவான். அவன் சொல்வதும் சரிதானே? உதயா கண்ணசைத்து சம்மதம் சொன்னாள்.
“வீட்ல இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு சக்தியும் சித்தப்பாவும் சொன்னாங்க. புது வேலைக்குப் போய்ட்டு அங்க செட் ஆனதும் சொல்லிக்கலாம் இருக்கேன். இப்பவே சொன்னா ஆரம்பிக்கிறப்பவே அர்ச்சனையோடு ஆரம்பிக்கணும்” பழைய லாலா மீண்டிருந்தான்.
அந்த வாரத்தில் லாலா நேர்முகத் தேர்வுக்குச் சென்றான். முதலில் சென்ற இரண்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை. லாலா சோர்ந்து போகவில்லை. இரவும் பகலும் உட்கார்ந்து அதற்குத் தன்னை தயார்ப்படுத்தினான்.
அடுத்த இரண்டு நாளில் வேறொரு நிறுவனத்தில் தேர்வுக்குச் சென்றான். சோழிங்கநல்லூர் பக்கமிருந்தது அந்த கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். லாலா நம்பிக்கையாக அதனை எதிர்கொண்டாலும், அங்கு வந்திருந்த பெரும்பான்மையானோர் அந்தாண்டு கல்லூரி முடித்த மாணவர்கள்.
‘இதென்னடா சோதனை’ என்று அவன் இருக்க, ஏற்கெனவே எழுதிய தேர்வுகளின் பயனாக அவன் அடுத்து சுற்றுத் தேர்வாகினான்.
லாலா உற்சாகத்தையெல்லாம் பூட்டிவைத்து அடுத்தடுத்த சுற்றுகளில் எல்லாம் சிறப்பாக பதில் சொன்னான். மெக்கானிக்கல் பிரிவை அவன் விரும்பியே எடுத்திருந்ததால், பழைய காதலியோடு காதலைப் புதுப்பிக்கும் உணர்வே.
ஆரம்பித்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் பழைய காதல் கைகொடுத்தது.
அந்த சந்தோஷத்திலும் ஆர்வமிகுதியிலும் லாலா அசத்திவிட்டான்.
அவனுக்கான வேலை, வேளை வந்தது.
பேருந்தில் வீடு நோக்கிப் பயணப்பட்டவனுக்கு அன்று அதிர்ஷ்ட அலை ஓயவில்லை போல. ஜன்னல் இருக்கையில் ஜம்மென்று உட்கார்ந்திருந்தான், காற்று தென்றலாக தொட்டுப்போக, புதிதாக ஒரு வெளிச்சம் அவனுக்குத் தெரிந்தது.
புது வழி அத்தனைப் பயங்கரமானதாக இருக்காதென்ற சிறு நம்பிக்கையோடு இருந்தான்.
அப்படியே இருந்திருக்கலாம்?!
error: Content is protected !!