Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 15

அன்பு – 15

“பிரபா!!!!! வாடா வாடா வா வா வா!!!” என அந்த பொறியியல் கல்லூரி வாயிலில் நின்று கொண்டு உற்சாகமாக கூச்சலிட்ட கவியை, அவளைக் கடந்து சென்ற மாணவர்கள் அனைவரும் வித்தியாசமாகப் பார்த்துச் சென்றனர்.



Advertisement

ஆனால் அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலை கொள்ளாத கவியின் கண்களோ, அவளின் பிரபாவிடம் மட்டுமே நிலைத்திருந்தது!!!

பின்னே, அவள் கேட்டுக்கொண்ட ஒற்றை வார்த்தைக்கு இணங்கி, பிரபலமான கல்லூரிகளில் இடம் கிடைத்தும், அதை தவிர்த்துவிட்டு, தனக்காக மட்டுமே இந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் பிரபாவைக் காணக்காண கவியின் நெஞ்சம் நேசத்தில் நிறைந்து போனது!!

Advertisement

Advertisement

கவியின் முயற்சியில், அந்த அறக்கட்டளையே பிரபாவின் கல்லூரி செலவு மொத்தமும் ஏற்றுக்கொண்டிருக்க, நன்றியுணர்வுடன் அவளை நெருங்கிய பிரபஞ்சன்,

“ரொம்ப தேங்க்ஸ் கவி!!!” என மனதில் இருந்து நன்றி உரைத்தான்.

Advertisement

“ப்ச்!! எத்தனை டைம் சொல்லுவ?? ஃபர்ஸ்ட் நான் என்ன பண்ணேன்?? நீ நல்லா படிச்ச.. அதுனால உனக்கு அவங்க ஸ்பான்சர் பண்றாங்க..  இதுல எனக்கு எதுக்கு தேங்க்ஸ்??” என முறைத்தவள்,

“சரி அதை விடு!!! வா வா!! ஃபர்ஸ்ட் செம் எல்லா டிபார்ட்மெண்ட் பசங்களையும் ஒன்னா தான் போடுவாங்களாம்.. வெல்கம் ஸ்பீச் முடிஞ்சா தான் தெரியும்!! நம்ம எந்த கிளாஸ்னு!! கடவுள் கிட்ட ஒழுங்கா வேண்டிக்கோ!! நீயும் நானும் ஒரே கிளாஸா இருக்கணும்னு!!” என பட பட பட்டாசாய் பொரிந்தவளை மென் புன்னகையுடன் பார்த்திருந்த பிரபா, சம்மதமாய் தலையசைத்தான்.

“வாயைத் திறந்து பேசிறாதா.. முத்து உதிர்ந்திடும்!!” என அலுத்துக்கொண்ட கவி, அவனின் கையைப் பற்றிக்கொண்டு உள்ளே நடந்தாள்.

“ஷ்!! கவி!! கையை விடு.. எல்லாரும் ஒரு மாதிரி பார்க்குறாங்க.. நான் என்ன சின்ன பையனா!!” என மென்குரலில் கடிந்துகொண்ட பிரபஞ்சன், அவளிடமிருந்து கையை உருவிக்கொள்ளப் பார்க்க,

தன் நடையை நிறுத்திய கவி, திரும்பி அவனை முறைக்க,

தன் கையைப் பிரித்துக்கொள்ளும் முயற்சியை கைவிட்டான் பிரபஞ்சன்.

“இது நல்ல பிள்ளைக்கு அழகு!!!” என மீண்டுவிட்ட சிரிப்புடன் கவி தன் நடையைத் தொடர,

யாரேனும் பார்த்துவிட்டு கவியின் வீட்டில் தெரிந்து பிரச்சனை ஆகிவிடுமோ என சேதுராமனை எண்ணி அச்சத்துடனே கவியைத் தொடர்ந்து சென்றான் பிரபஞ்சன்.

ஆனால் கவிக்கு அந்த பயமெல்லாம் இல்லை போலும்!!! மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரபாவுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்துக் கொண்டு வந்தாள் அவள்!!

அந்த கல்லூரியின் ஆடிட்டோரியத்தை அவர்கள் நெருங்கும் முன்னமே அவர்களை பிடித்துக்கொண்டது சீனியர் பட்டாளம் ஒன்று!!

“அடடா!! இங்க பாருடா!! முதல்நாள் காலேஜ் வரப்போவே ஜோடி ஜோடியா வரதை!!” என இணைந்திருந்த இருவரின் கையைக் கண்டு கேலி செய்த ஒரு சீனியர் மாணவன்,

“எங்க?? எங்க நீங்க பாட்டுக்கு ரொமான்ஸ் பண்ணிட்டு போய்கிட்டு இருக்கீங்க!! வாங்க இங்க!!” என இருவரையும் அழைத்தான்.

அவனின் பேச்சில் உண்டான சங்கோஜத்தில்,

“கவி!! கையை விடு!! பாரு.. தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறாங்க!!” என கவிக்கு மட்டும் கேட்குமாறு பிரபா முணுமுணுக்க,

“யாரோ என்னமோ பேசுறாங்கன்னுலாம் என்னால கையை விட முடியாது.. ஒழுங்கா நில்லு!!” என அவனைப் போலவே கவியும் பதிலுக்கு முணுமுணுத்தாள்.

“அடேய்!! இங்க நான் ஒருத்தன் கூப்பிட்டா, நீங்க என்கிட்ட என்னன்னு கேட்காம உங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டா எனக்கென்ன மரியாதை!!” என அந்த சீனியர் மாணவன் கொந்தளிக்க,

“உன் முகரைக்கட்டைக்கெல்லாம் மரியாதை தர முடியாதுன்னு அர்த்தம்!!” என அவனின் காலை வாரிவிட்டு சிரித்தனர் அவனின் நண்பர்கள்.

அவர்களின் சிரிப்பு கவியையும் தொற்றிக்கொள்ள, அவளும் சேர்ந்து சிரிக்க,

“இவங்களை ரேகிங் பண்ண கூப்பிட்டா, நீங்க என்ன டா என்னை வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க??” என கடுப்பானவன்,

“ஓய்!! என்ன சிரிப்பு!! களுக்குன்னு!! வாயைப் பேத்திருவேன்.. தெரியும்ல!!” என கவியையும் மிரட்டினான் அவன்.

“சரி சரி சிரிக்கலை ப்ரோ!! ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க!! இப்போலாம் ஹார்ட் அட்டாக் பட்டு பட்டுனு எல்லாருக்கும் வருதாம்!!” என சிரியாமல் அவனை கேலி செய்தாள் கவி!!

அவளின் கூற்றில் மற்ற சீனியர் மாணவர்கள் சிரிக்க, பிரபாவிற்கு தான் பயந்து வந்தது.

“ஷ்!! கவி என்ன பண்ற??” என பிரபா அவளை அடக்கப் பார்க்க,

கவியை முறைத்துக் கொண்டிருந்த சீனியர் மாணவனோ,

“வாய் கொஞ்சம் ஓவராத் தான் இருக்கும் போல உனக்கு!!” என்றான் கடுகடுவென.

“இல்லை ப்ரோ!! எல்லாருக்கும் இருக்க சைஸ் தான்.. பெருசா எல்லாம் இல்லை.. “

“என்ன நக்கலா??”

“இல்லை விக்கல் ப்ரோ!!! விக்கல் விக்கலா வருது!!!”

“இங்க நீ சீனியரா நான் சீனியரான்னே டவுட் வருது!!!”  என அந்த மாணவன் சோர்ந்து போக,

பெரிதாய் புன்னகைத்த கவி,

“அதுவே சந்தேகமா?? கிழிஞ்சது போங்க..”

“சரி பொழைச்சுப் போங்க!! ரேகிங் தான பண்ணனும்!! என்ன பாட்டு பாடணுமா?? இல்லை டேன்ஸ் ஆடனுமா??.. என்ன பண்ணணும்னு சொல்லுங்க டக்குனு!! லேட் ஆகுது எங்களுக்கு!!” என குர்தியின் கைகளை மடித்து விட்டுக்கொண்டு சண்டைக்கு கிளம்புவது போல் கவி தயாராக,

“அய்யோ ஆத்தா!! நீ ஒன்னுமே பண்ண வேண்டாம்!! நீ கிளம்பு!!!” என கையெடுத்து கும்பிட்டுவிட்டான் அந்த மாணவன்.

அதில் மொத்த மாணவர் கூட்டமும் ‘கொல்’ எனச் சிரிக்க, பிரபாவிற்குக் கூட லேசாய் புன்னகை எட்டிப்பார்த்தது!!

“ஃபர்ஸ்ட் டே!! காலேஜ்ல பயங்கரமா ரேகிங் பண்ணுவாங்கன்னு கலர் கலரா கனவெல்லாம் கண்டுட்டு வந்தேன்.. கடைசில இப்படி ஒன்னுமே இல்லைன்னு சொல்லி என் பிஞ்சு மனசை பஞ்சர் ஆக்கிட்டீங்களே ப்ரோ!!!” என வராத கண்ணீரை சுட்டுவிரல் கொண்டு சுண்டிவிட்ட கவி,

“சரி!! சரி!! நீங்க எல்லாம் ஜாலியா அடுத்து யாராச்சும் மாட்டுறாங்களான்னு பாருங்க!!! நாங்க கிளம்புறோம்” என மீண்டும் பிரபாவின் கைகளைப் பற்றிக் கொண்டு கவி நகரப்போக,

“அட நில்லுமா!!! உன்னைத்தான் எதுவும் பண்ண வேண்டாம்னு சொன்னேன்… இதோ உன் பின்னாடி பம்மிட்டு இருக்கானே, இவனை ஒரு பாட்டு பாட சொல்லிட்டு கூட்டிட்டு போ” என்ற அந்த சீனியர் மாணவன், கவியிடம் டேமேஜ் ஆன தன் இமேஜை பிரபாவை வைத்து சீர் படுத்திக்கொள்ள நினைத்தான்.

இத்தனை நேரமும், பயம் இருந்தாலும் கவியின் விளையாட்டுப் பேச்சில் பதட்டம் மறந்து லேசாய் புன்னகைத்துக் கொண்டிருந்த பிரபஞ்சனுக்கு, பந்து அவன் பக்கம் திரும்பியதில் மீண்டும் பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது!!

“என்ன!!?? நானா!!???” என அதிர்ந்தவன்,

“வேணாமே கவி!!! பயமா இருக்கு!!!” என அப்போதும் கவியிடமே தன் மறுப்பைத் தெரிவிக்க,

பிரபஞ்சனின் இந்த பயம் அந்த சீனியர் மாணவர்களுக்கு உற்சாகமளிக்க,

“ஓய்!! நான் இங்க பாட சொன்னா அங்க அந்த பொண்ணு காதுல என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருக்க??”

“ஒழுங்கா சீக்கிரம் பாடு!!! இல்லைனா உன்னை உள்ள போக விட மாட்டோம்” என அந்த மாணவன் கெத்து காட்ட,

“ஆமா ஆமா!! நீ பாடாம, இங்க இருந்து உன்னைப் போக விட மாட்டோம்” என மற்ற மாணவர்களும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.

திடீரென்று அனைவரும் அவனின் பக்கம் திரும்பியதும், பிரபாவிற்கு பயத்தில் வியர்வை பெருக்கெடுக்க,

அதைக்கண்டுகொண்ட கவி, பிடித்திருந்த அவனின் கைகளில் அழுத்தம் கொடுத்து அவனை அமைதிபடுத்தினாள்.

“பிரபா!!! இவங்க எல்லாம் ஹார்ம்லெஸ்!! ஜஸ்ட் விளையாடுறாங்க.. இதுக்கேன் நீ இப்படி பயந்து நடுங்குற?? நீ பயந்து விலக விலகத் தான் எல்லாரும் உன்னை டார்க்கெட் பண்ணுவாங்க.. ஒரு டைம்!! ஒரே ஒரு டைம், உன்னைத் துரத்தி வர பிரச்சனையை தைரியமா எதிர்த்து நில்லேன்!!! டிரஸ்ட் மீ!! ஜெயிக்கிறயோ, தோற்கிறையோ அது மேட்டர் இல்லை!!! நீ உனக்காக தைரியமா போராடுறதே பெரிய விஷயம் இல்லையா?? இந்த முறை பயந்து ஓடாத!!! ஜஸ்ட் பாட்டு தானே!! பாடு!! நான் இருக்கேன் உன் கூட!! எதுக்கும் பயப்படாத!!!” என அவன் கண்களைக் கண்டு உரையாடியவள், தன் வார்த்தைகளின் மூலம் பிரபாவிற்கு தைரியம் வழங்க முற்பட,

“அட எவ்வளவு நேரம்!!! சீக்கிரம் பாடு டா தம்பி!! எங்களுக்கே லேட் ஆகுது!!” என்றான் ஒரு சீனியர் மாணவன்.

“அட!! பொறுங்க ப்ரோ!! பைப்பைத் திறந்ததும் உடனே வர இது என்ன தண்ணிக்குழாயா?? பாட்டு ப்ரோ!! நல்லா டைம் எடுத்து பிரீத்திங் கண்ட்ரோல் எல்லாம் பண்ணா தான் வரும்” என அவனை அடக்கிய கவி,

“நீ பாடாம எப்படியும் இவங்க விடப்போறது இல்லை.. ஜஸ்ட் கண்ணை மூடிட்டு ஏதோ ஒரு பாட்டு ரெண்டு வரி பாடிட்டு வந்திடு!! ஓகே வா!!!” என பிரபாவிடம் சொன்னவள்,

“நான் கூடவே இருக்கேன்.. பயப்படாம பாடு!!!” என ஊக்கமளித்தாள்.

பிரபஞ்சனிற்கும் சூழ்நிலை புரிய, உள்ளே பட படவென அடித்துக்கொண்ட மனதை ஆழ மூச்செடுத்து சமன்படுத்திக் கொண்டவன்,

கவி சொன்னது போல், எப்போதும் போல் பயந்து ஓடாமல், ஒரு முறை பயத்தை ஓரங்கட்டி வைத்து துணிந்து எதிர்த்து நின்று தான் பார்ப்போமே என நினைத்துக் கொண்டவன்,

கண்களை மூடி,

“க்கும்!!!” என லேசாய் தொண்டையை சரி செய்து கொள்ள,

“பெரிய சங்கீத வித்துவான் தான்!!!” என்று வந்த கேலிச் சிரிப்புகளைக் கண்டு தடுமாறினாலும்,

“ப்ச்!! அவங்க கெடக்காங்க!! பாடுடா பிரபா.. ” என தைரியமளித்த கவியைக் கண்டு விலகிப் போக முயலும் தைரியத்தை இழுத்து பிடித்துக்கொண்டவன்,

கண்களை மெதுவாய் மூடியபடி,

“அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி!!!”

என உயிரை கரைய வைக்கும் குரலில் பாடத் துவங்க,

கவி தொடங்கி, மற்ற அனைவருமே அவனின் குரல் வளத்தைக் கண்டு பிரமித்துப் போய்விட்டனர்.

ஆனால் அவர்களின் ஆச்சரியத்தை அறியாத பிரபாவோ, இன்னும் இமைகளைப் பிரிக்காமலே, பாடலோடு ஒன்றி விட்டான்.

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி

பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி”

என்று பாடியவனின் முகம் ‘ கவிதாஞ்சலி ‘ என அவளின் பெயரை உச்சரிக்கும் போது மட்டும், அவன் இதழோரம் மலர்ந்த அந்த அழகான புன்னகையில் கவியின் நெஞ்சம் தாளம் தப்பித் துடித்தது!!

“நீயென்ன நிலவோடு

பிறந்தவளா…

பூவுக்குள் கருவாகி

வளர்ந்தவளா…

அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…” 

என்று உணர்வுக் குவியலாக அவன் பாடி முடிக்க, பலத்த கரவோஷம் வந்து அவன் செவியை நிறைத்தது!!!!

அந்த சப்தத்தில் கண் திறந்த பிரபா கண்டதெல்லாம், கண்கள் நிரம்ப நேசத்துடன் அவனையே கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கவியைத் தான்.

அவள் பார்வையில் இருந்தது என்ன???

இதுவரையில் பிரபா கண்டிராத ஒரு உணர்வை தன் பார்வையால் அவனுக்குள் கடத்திட்டாள் கன்னியவள்!!!

அதைப்பற்றி மேலும் அவனை யோசிக்க விடாமல்,

“டேய் தம்பி!! கலக்கிட்ட டா!!! சூப்பரா பாடுன!!!”

“இனி உன்னை வச்சே கல்சுரல்ஸ்ல கப் அடிச்சிடலாம் டா!!!”

“என்ன வாய்ஸ் டா உனக்கு!!! செம்ம போ!!” என ஒவ்வொருவரும் அவனை மனதார வாழ்த்த,

கவி பெருமிதத்துடன் அவளின் பிரபா கொண்டாடப்படுவதை  சிரிப்புடன் ரசித்திருந்தாள்!!!

ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல, கவியின் பேச்சிற்கிணங்கி, தைரியத்துடன் பாடி முடித்தவனுக்கு, உண்மையில் அவன் தான் இத்தனை பேருக்கு மத்தியில் பாடினானா என இப்போது கூட சந்தேகமாக இருந்தது!!

அன்னையின் அழகு மட்டுமல்ல, குரல் வளத்தையும் வாங்கிக் கொண்டே வந்து பிறந்திருந்த பிரபாவிற்கு, பாடல் என்றால் கொள்ளை பிரியம்!!

ஆனால், அந்தப்பாடல் தான் அன்னையின் வாழ்வில் பலத்த சூறாவளி வீச தொடக்கப்புள்ளியாக அமைந்தது என உணர்ந்தவன், தன் திறமையை இதுவரை அவனின் அன்னைக்குக் கூட வெளிப்படுத்தியிருக்கவில்லை!!

யாருமில்லா தனிமையில் மட்டுமே பாடுபவன், இன்று கவியின் உந்துதலில் இத்தனை பேரின் முன்பு பாடிவிட்டது ஒரு வித சங்கோஜத்தைக் கொடுக்க,

“தேங்க் யூ அண்ணா!!” என்றவன்,

விட்டால் போதும் என்பதைப் போல் அவர்களிடமிருந்து தப்பித்துப் பிடித்து கவியையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியிருந்தான்.

“டேய் பிரபா!! இவ்வளவு நல்லா பாடுவன்னு எனக்கு கூட சொல்லலை பார்த்தியா நீ!??” என மனத்தாங்கலுடன் கவி சற்று தூரம் சென்றதும் கேட்க,

“கவி!!! உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லை!!” என உடனே பிரபா தடுமாற,

“சரி அதை விடு!! எப்படியோ இன்னைக்கு தெரிஞ்சிடுச்சுல.. இனி பாரு டெய்லி உன்னை பாட வைச்சு கேட்கிறது தான் என் வேலையே!!!” என சிரிப்புடன் சொல்லியவள்,

“நீ நிஜமா சூப்பரா பாடுற பிரபா!!! உனக்கு நல்ல ஃப்யூச்சர் இருக்கு இதுல!!! நீ கண்டிப்பா பெரிய பாடகரா வருவ பாரேன்!!!” என மனதார அவள் கூறிய சமயம், வானில் சென்று கொண்டிருந்த தேவதைகள் ‘ததாஸ்து’ என்று வாழ்த்திவிட்டுச் சென்றனர்!!

அதன் பின் கவி நினைத்தது போல, இருவருக்கும் ஒரே வகுப்பே அமைந்து விட, கல்லூரி நாட்கள் மிகவும் வண்ணமயமாகச் சென்றது இருவருக்கும்!!

தன்னுடைய ரத்தம் தன்னை மீறி தவறு செய்யாது என நம்பிய சேதுராமனும், பெரிதாய் பிரபஞ்சன் பற்றி அடுத்து யோசித்திருக்கவில்லை!!

எனவே, அவனும் கவியும் ஒன்றாகப் படிக்கும் விஷயமே அவரின் கவனத்திற்கு வராமல் போய்விட, அவரும் புதுத்தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால், மகளை ஊன்றியும் கவனிக்கவில்லை!!

எனவே, சுதந்திரப் பறவையான கவி, பிரபாவுடன் மகிழ்ச்சியாக ஒவ்வொரு நாளையும் கழித்தாள்.

கல்லூரி தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ஒரு சந்தர்ப்பத்தில் கவி தன் காதலை பிரபாவிடம் தெரிவிக்கும் சூழல் உருவாகி விட,

அதைக்கேட்டு அதிர்ந்த பிரபாவின் எதிர்வினை என்னவாக இருக்கும்???

“அனைத்தையும் எனக்காகச் செய்யும் உனது இதயத்திற்காக,

 என்னையே உனக்காகத் தருகிறேன்!! ஏற்றுக்கொள் என்னவனே!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!