“என்ன தப்பு.. என்னடா நீ! நான் உன்னை எவ்வளவு நம்பினேன்!
நீ யாராவது ஒருத்தர் கிட்ட பேசினா, அதுக்கு அப்புறம் அவங்க,
நீ வெள்ளைக் காக்கா பறக்கிறதைப் பார்க்க ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னா கூட,
அவங்களும் ஆமா எனக்கும் பிடிக்கும். ரொம்ப அழகா பறக்கும் அதுன்னு சொல்லிடுவாங்க!
அந்த அளவு பேச்சு சாமர்த்தியம் உள்ள ஆள் நீ!
எத்தனை வாட்டி ஹாஸ்டல் வார்டனை ஐஸ் வச்சு ஏமாத்தி இருக்கோம்.
ஏன் ப்ரின்சியவே ஏம்பா நான் சரியா தானே பேசுறேன்ன்ற அளவுக்கு குழப்பி விட்ட ஆள் நீ..
இப்ப என்னடா ரேஷ்மா மேட்டர்ல மட்டும் இவ்வளவு ஹெசிடேசன் உனக்கு?
அப்ப.. ரேஷ்மாவை உனக்குப் பிடிக்கலையா?”
“ச்சே ச்சே..
அப்படி எல்லாம் இல்லடா.. எனக்கு ரேஷ்மாவை ரொம்ப பிடிக்கும்!
அவளுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா, அவ தான் என்னோட வொய்ஃப்!”
“பிடிச்சுருந்தா என்னடா.. அதெல்லாம் பிடிக்கும் அவளுக்கு! உன்னைப் போய் பிடிக்காதுன்னு சொல்ல அவ ஒண்ணும் லூஸு இல்லை!
ஆனா நீ அவ கிட்ட பேசணுமே.. பேசாம எப்படி தெரிஞ்சுக்கிறது?” ரேவந்திற்கு அலுப்பாக போய் விட்டது!
அவனுக்கு அவன் பயம்.
எங்கே பார்வதி ஆண்ட்டியின் தொல்லை தாங்காமல், ஜெயந்திற்கு பெண் கேட்டு ராம் அங்கிளே வந்து விடுவாரோ என்று!
இது வரை அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை! இனியும் ஏற்படப் போவதும் இல்லை தான்!
ஆனால் வீட்டில் சதா தொல்லை செய்யும் பார்வதி ஆண்ட்டி!
தினமும் அவர் செய்யும் வற்புறுத்தல்கள்!
ஏற்கனவே ஒரு முறை கட்அண்ட் ரைட்டாக சொல்லியிருந்தார் மனைவியிடம் அவர்.
“நான் தான் அவங்களுக்கு பின்புலமா இருந்து அவங்க சொத்தையும் சொந்தக்காரங்ககிட்ட இருந்து அவங்களையும் காப்பாத்தினேன்.
இன்னமும் காப்பாத்திட்டு இருக்கேன்!
காரணம் என் நண்பனுக்கு அவன் சாகும் போது நான் பண்ணிக் கொடுத்த சத்தியம்!
அந்த சத்தியத்தை இது வரைக்குமே ஒரு குறையுமில்லாம காப்பாத்திட்டு வர்றேன். இனியும் இருப்பேன்.
ஆனா நீ சொன்ன மாதிரி உன் மகனுக்கு பெண் கேட்டுப் போனா, இலை நிறைய விருந்து சமையல் பரிமாறிட்டு, ஓரத்துல அசிங்கத்தை வச்ச மாதிரி எல்லாமே பாழாகிடும்!
நான் ஒரு நாளும் அந்த வேலைய செய்யவே மாட்டேன்” என்று தீர்மானமாய் சொல்லி விட்டார்!
“அப்போ.. அப்போ.. என் மகனை அசிங்கம்னு சொல்றீங்களா?
அய்யோ இது அடுக்குமா? எங்காச்சும் இப்படி பெத்த அப்பன், தன் பிள்ளைய இப்படி சொல்லுவானா?
ஊரான் வீட்டுப் பிள்ளைய உசத்தியா வச்சுக்கிட்டு, உரிமை உள்ள பிள்ளைய இப்படி கேவலப்படுத்துறீங்களே!” என்று பார்வதி கூச்சலிட்ட போதும் கூட அவர் கண்டுக் கொள்ளவே இல்லை!
ஆனால் வீட்டில் நடக்கும் இந்த மாதிரி தொல்லைகளால் அவருக்கு ரத்தக் கொதிப்பு வந்து விட்டது!
அது தன் நண்பன் நீரிழிவு நோயையும் கூட்டி வந்து விட்டது.
தினமும் இவ்வாறே பார்வதி தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்க,
ஒரு நாள் ரேவந்துடன் அவர் மீட்டிங்கில் இருக்கும் போது அவருக்கு ரொம்பவும் முடியாமல் போய்,
பேச்சுக் குழறி. கையில் இருக்கும் ஃபைல்களைக் கூட தவற விட்டார்.
ரேவந்த் பதறிப் போய் ஹாஸ்பிடல் அழைத்துப் போய் சரியான நேரத்தில் ஊசிப் போடப்பட்டு வரவிருந்த ஸ்ட்ரோக் தடுக்கப்பட்டது!
அது முதல் தான் அவருக்கு ஓய்வுக் கொடுத்து விட்டு, ரேவந்தே திருப்பூர் ஃபேக்டரியையும் சென்னை ஃபேக்டரியையும் தனியே அவனே கவனித்துக் கொண்டிருக்கிறான்.
வீட்டில் இருந்தாலும் ராம் அங்கிளுக்கு பார்வதி ஆண்ட்டி ரேஷ்மவைப் பெண் கேட்க சொல்லி தொல்லைக் கொடுப்பது நின்றபாடில்லை!
என்றவாது ஒருநாள், செய்யவே மாட்டார் என்றாலும் கூட, பார்வதி ஆண்ட்டியின் தொல்லை எல்லை கடந்து,
ராம் அங்கிள் ரேஷ்மாவைப் பெண் கேட்டு விட்டால், ரேவந்த்தால் சட்டென்று முகத்தில் அடித்தாற் போல மறுப்பு சொல்ல முடியாது.
ரேஷ்மாவின் நிலையும் அது தான்!
ஆனால் அதற்காக அவள் அந்த ஜெயந்த்தைக் கல்யாணம் செய்யவும் முடியாது!
கொஞ்சம் கூட நல்ல நடத்தை, குறைந்த பட்சம் நல்ல பார்வை கூட அவனுக்கு கிடையாது!
அவன் தான் ராம் அங்கிளின் மகன் என்றால் நம்புவது கடினம்!
குரு துரோணருக்கு பிறந்த மகன் அஸ்வத்தாமன் போல!
ரேவந்திற்காவது ஒரு வாய்ப்பு இருக்கிறது!
ரேஷ்மா வேறு யாரையாவது விரும்பும் பட்சத்தில்!
“ஸாரி..அங்கிள். ரேஷ்மா மனசுல வேற ஒருத்தன நினைச்சுட்டு இருக்கான்னு” சொல்லி தப்பி விடலாம்.
ஆனால் ரேஷ்மாவின் நிலை தான் பாவம்!
அவரே அப்படி கேட்டு எதுவும் வைத்து விட்டால், மிகவும் சங்கடமாக போய் விடும் அவளுக்கு!
அதைக் கொடுக்க கூடாது என்றால், அப்படி ஒரு சூழ்நிலைக்கு அவள் செல்லாதிருக்க, அவள் நிஜமாகவே யாரையாச்சும் லவ் பண்ணனும்!
சும்மா எவனையாவது விரும்புகிறேன் என்று சொல்ல முடியாதே!
அந்த இடத்தில் ரேவந்த் மனதில் இருப்பவன் யுவநிலவன்!
ஆனால் அவன் மனதில் இருந்து என்ன புண்ணியம்? ரேஷ்மாவின் மனதில் இடம்பெற வேண்டுமே இவன்!
அதுக்கு தான் ஏதாவது செய்வான் என்று எதிர்பார்த்திருக்க, அவனோ, இன்னும் இல்லை என்று சொல்லி கடுப்பு ஏற்றுகிறான்!