ஜீவ தாளம் : 3
அத்தியாயம் : 3
நண்பன் கபிலனுடன் பேசிக்கொண்டே, புகைப்படக் கருவியில் இயற்கை அழகுகளைப் படம் பிடித்து வந்தவற்றை, பெரிய அளவிலான புகைப்படமாக மாற்றிச் சுவற்றில் அழகுபடுத்தப் பார்த்தவாறு இருந்தான் ஆனந்த்.
அதைப் பார்த்து, “இதை எல்லாம் நீயே செய்யணுமா? ஆபீஸ்ல தான் ஏகப்பட்ட ஆள் வொர்க் பண்றாங்களே அவங்களை வரவச்சுச் செய்யலாமே! இல்லையா, இன்டீரியர் டெகரேடர்கிட்ட சொன்னா சுலபா செய்து தந்திட்டுப் போகப் போறாங்க” என்றான் கபிலன்.
“ஏற்கனவே அழகுபடுத்தியது போதும். எப்போவும் செயற்கையாய் மின்னும் அழகை விட, இயற்கை அழகுக்குத் தனி ரசனை உண்டு. அலுவலக வேலையில் மூழ்கி ஒரே அறைக்குள் அடஞ்சு கிடக்குறப்போ, மூச்சு முட்டுவது போன்ற உணர்வு ஏற்படும். அப்போ இதைப் பார்த்தா மனசுக்கு இதமா இருக்கும்” என்றான் ஆனந்த்.
Advertisement
கபிலன் சிரித்துக்கொண்டே, “என்னதான் வெளி இடத்துல வசித்து வேலை பார்த்தாலும், நீ ஒரு கிராமத்தான்றதை அடிக்கடி ஞாபகப்படுத்திடுவே!” என்க, “ஏன் கிராமத்தான்னு சொல்வதில் என்ன குறை வந்துடப் போகுது? சொல்லப் போனால் எனக்கு அது புடிச்சிருக்கு. இங்கே இருந்து தூசி வெயிலில் கஷ்டப்படுவதை விட, அங்கு ஜில்லென வீசும் குளிர் காற்றை அனுபவிச்சுச் சுகமா இருக்கலாம்” என்று ரசனை சொட்டச் சொன்னான்.
“இவ்வளவு ஆசைப்படுறவன் சொந்த ஊர்லயே அத்தனை பெரிய தொழிற்சாலை இருந்தும் விட்டுட்டு எதுக்கு இங்க வந்து இருக்கியாம்? பேசாம அதையும் கவனிச்சிட்டு, உன் அத்தை பெண்ணையும் கல்யாணம் செய்வது தானே!”
ஆனந்தின் உதட்டோரம் குறுநகை பூத்தது.
“நீ வேற! என் அத்தைப் பொண்ணைக் கல்யாணம் பண்ண சொன்ன நேரம் கட்டியிருந்தா, இப்ப இப்படிச் சுதந்திரமா நடக்க முடியுமா? அவளுக்குத் தான் நான்; எனக்குத் தான் அவள்னு வீட்டுல உள்ளவங்க எல்லாரும் சேர்ந்து தான் முடிச்சுப் போட்டு வச்சுருக்காங்களே! பிறகும் என்ன அவசரம்? மெதுவாகவே கட்டிக்கலாம்” என்று சொல்ல, “இப்படி ஒரு சாக்கு போக்கைச் சொல்லித்தான் நீ ரெண்டு வருஷத்தைத் தள்ளிட்டே! இனியும் ‘விடாது கருப்பு’ என்பதாய் உன் கல்யாணத்தைச் சீக்கிரமே நடத்தப் போறதா தகவல் வந்திருக்கு” என்று கண் சிமிட்டினான் கபிலன்.
Advertisement
பதிலுக்குப் புன்னகைத்து, “என்னை மட்டும் சொல்றியே நீ எப்படியாம்? அங்கு உனக்குன்னு யாரையோ பார்த்து ரெடி பண்ணி வச்சுருப்பதா கேள்விப்பட்டேனே! யார் அந்தப் பொண்ணு? உறவினரா, வெளியூரைச் சார்ந்தவரா?” என்று விசாரித்தான்.
Advertisement
கபிலனும் புன்னகையை உதட்டிற்குள் மறைத்து, பதில் கூறாமல் இருக்க, “அட சொல்லுப்பா! நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்குறேன். பொண்ணு யாரு உங்க ரிலேஷனா? இல்லை தரகர் மூலம் எதுவும் பார்த்ததா?” என்றான் ஆனந்த்.
“அவளைப் பத்திச் சொன்னா இன்னைக்கு பூராவும் சொல்லிக்கிட்டே இருக்கலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கு.”
“ஓ!! அந்த அளவுக்குப் பெரிய ஆளா?”
Advertisement
“பின்னே, அவளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினா காலம் போவதே தெரியாது. அவளது மேனி நிறம், அந்தியில் சாயும் சூரியன் மேகக்கூட்டங்களுக்குத் தானமாய் வழங்கிச் சென்ற தங்க நிறம். நெற்றியில் மின்னும் அந்தச் சிறிய பொட்டு, நடுக்கடலில் திசை காட்டும் துருவ நட்சத்திரத்தைப் போலத் துல்லியமானது. அவள் பேசும் தமிழ் இருக்கிறதே… அது செவிகளில் தேனாகப் பாய்வதோடு நில்லாமல், நரம்புகளுக்குள் ஒருவிதமான ரீங்காரத்தையே உண்டாக்கும். சந்தனக் காட்டில் வீசும் தென்றல் போல, அவள் கடந்து போகும்போது ஒரு இனம் புரியாத நறுமணம் அந்த இடத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும்.
முக்கியமா அந்தப் புருவ நெளிப்பு! எதையாவது விவாதிக்கும் நேரம் அவள் புருவங்களைச் சற்றே உயர்த்திப் பார்ப்பாள் பார், அப்போது அவளது அறிவின் செருக்கு அந்த முகத்தில் அப்படியே அப்பட்டமாகத் தெரியும். அவளது ஒரு சொல்லுக்காக, சாம்ராஜ்யங்களையே தாரை வார்த்துத் தரலாம். அவள் ஒரு சாதாரணப் பெண் அல்ல ஆனந்த், அவள் ஒரு வாழும் காவியம்!” என்று இன்னும் ஒரு படி மேலே போய் சிலாகித்துப் பேசினான் கபிலன்.
ஆனந்த் இப்போது வியப்புடன், “ஏதேது! நீ பேசுவதைப் பார்த்தா வீட்டுல பார்த்து வச்சுருக்கும் திருமணம் போல் தெரியலையே! எனக்குத் தெரியாம ஏதாவது ரகசியம் இருக்குதாடா?” என்க, கபிலன் மறுப்பாகத் தலையசைத்தான்.
அவனோ கண்களை சுருக்கி, “நம்புற மாதிரி இல்லையே! ம்ம்… கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வரத்தான் செய்யும். அப்போ உன்னை வச்சுக்கிறேன்” என்றான்.
இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறிக் கேலி செய்தபடியே வேலையில் கவனத்தைச் செலுத்த, அப்போது புகைப்படக் கருவியில் சேகரித்து எடுத்து வந்து, அதைப் புகைப்படமாக மாற்றி வைத்திருந்த இயற்கை காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கபிலன், அதற்கு கீழாக இருந்த ஜீவாவை கண்டதும் அதிர்ந்து போனான்.
‘அவள் எப்படி இங்கு வந்தாள்? ஆனந்த் ஏற்கனவே அவளைப் பார்த்து விட்டானா? இதை எப்படி அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?’
யோசனையுடன் புகைப்படத்தைக் கையில் வைத்திருந்தவன், சிரித்த முகமாக இருப்பவளைப் பார்த்துக்கொண்டே அவன் அருகில் சென்றான்.
“ஆமாம்! இயற்கைக் காட்சியைப் படம் பிடிக்கப் போறதா சொல்லிட்டு, வேறு எதோ காவியத்தையே சுமந்து வந்த மாதிரி தெரியுது. சுவரில் ஓவியம் வரையத் தேவை தூரிகை; அதுபோல், அந்த அழகைத் தீட்டும் ஓவியனுக்குத் தேவை இந்தக் காரிகையா?” என்று கபிலன் குறும்புடன் கேட்க, ஆனந்தின் கண்கள் புரியாமல் நோக்கின.
“என்ன அப்படிப் பார்க்குறே? இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுப்பதற்குப் பதிலா பார்க்கில் விளையாடிக்கிட்டு இருந்த பிள்ளைகளையும் கன்னிகையையும் எடுத்து வந்து இருக்கியே? யார் இந்தக் காரிகை? ஏற்கனவே உனக்குப் பரிச்சயமானவரா?” என்று கிண்டலாக வினவினான்.
‘என்ன ஆச்சு இவனுக்கு? எதனால் இப்படிப் பேசிக்கிட்டு இருக்கான்?’ புரியாமல் அவன் அருகில் வந்து கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த பின்னரே விஷயம் தெளிவாகியது. அடுத்த கணமே அலட்சியமாகப் புகைப்படத்தைத் தூக்கி விட்டெறிந்தான் ஆனந்த்.
ஜீவாவின் புகைப்படம் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டதும், அவர்களுக்கு இடையில் எதுவோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டு, உடனே அதைக் கையில் எடுத்தான் கபிலன்.
“என்ன நடந்தது? உனக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இப்படி அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணின் போட்டோவைத் தூக்கி எறிகிறே?”
அவன் சொல்ல மறுக்கவே மறுபடியும் கபிலன் கேட்க, “ம்ம்… சம்பந்தம்! அன்னைக்கு ஒரு நாள் ஏர்போர்ட்ல வச்சு என் ஃபோனை உடைச்சுப் போட்டுட்டுத் திரும்பி கூடப் பார்க்காம போனான்னு சொன்னேனே அந்தத் திமிர் புடிச்சவள் இவதான்…” என்றான்.
“என்ன? இவங்களா அதைச் செய்தது?”
அவன் நம்ப முடியாமல் கேட்க, “நானும் கூட முதல் நாள் அந்தப் பெண்ணின் முகத்தைச் சரியா பார்க்காததால் தான் இது வேறாக இருக்கும்னு நினைச்சு, அவள் முகத்தை ரசனையோடு பார்த்துப் போட்டோ எடுத்தேன். ஆனா, அந்தச் சிரிப்புக்குள் அத்தனை வில்லங்கம் ஒளிஞ்சிருக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.” என்றான் ஆனந்த்.
அவன் உதடு சுளிந்த விதத்தைப் பார்த்ததும், ‘அப்படி என்னதான்டா உங்க ரெண்டு பேருக்கும் இடையில் நடந்தது?’ என்று தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது கபிலனுக்கு.
“ஆனந்த், நீ இப்படிச் சுத்தி வளைச்சுப் பேசுற ஆள் இல்லையே!”
அவன் ‘ஆம்’ என்று தலையசைத்தவனாக, இரண்டு முறையும் அவளைச் சந்தித்தபோது நடந்ததைச் சொல்லிவிட்டு, ”பார்க்க அழகா இருந்தாப் போதுமா? குணத்தில் ஒழுக்கமானவளா இருக்க வேண்டாமா? திமிர் அகம்பாவம் நிறைஞ்சவளை எந்த ஒரு ஆணும் ரசிக்க மாட்டான்” என்று விட்டேற்றியாகச் சொன்னான்.
அந்த வார்த்தைகள் கபிலனைச் சுருக்கெனத் தைத்தது.
“ஆனந்த்! ஒருவேளை அன்னைக்கு பார்த்தது வேற ஆளா கூட இருந்திருக்கலாமே! நீ தவறுதலா சொல்வதாய்த் தெரியுது.”
“ம்ப்ச்… அன்னைக்கு ஃபோனை கீழே விழ வச்சு உடைச்சுட்டு, மரியாதைக்கு ஒரு சாரி கூடக் கேட்காம வேகமாப் போயிட்டா… அப்புறம், இன்னொரு முறை அவளை ஒரு இக்கட்டிலிருந்து நான் காப்பாற்றி விட்டும் கூட ஒரு நன்றி சொல்லத் தெரியாம, என் கேள்விக்கும் பதில் தராம விறுவிறுன்னு போயிட்டா… நானும் கூட நீ சொன்ன மாதிரி ஒரு பேரழகியைக் கண்டுட்டதாதான் நினைச்சேன். ஆனா அது அழகு அல்ல; விபரீதம் என்பதைத் தெரிஞ்ச பிறகு யாராவது ரசிப்பார்களா?”
எப்படிச் சொல்லித் தெளிவுபடுத்துவது என்று புரியாமல் கபிலனுக்குக் குழப்பம் அதிகரித்தது. ஜீவா கண்டிப்பாக அவனது கைப்பேசியை வேண்டுமென்று இடித்துப் போட்டு இருக்க வாய்ப்பில்லை. அதேநேரம் கவனக்குறைவால் ஏற்பட்ட சிறிய விபத்தாகவும் இருக்கலாம். அவள் மனதில் உள்ள காயமும் கஷ்டமும் அறிந்ததால், ஆனந்திடம் பேசாமல் விலகிச் சென்று இருக்கலாம்.
இவன் மனதில் உள்ள அவள் மீதான கசப்பான அனுபவத்தை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் அவன் முழிக்க, “அதை விட்டுத் தள்ளு. உங்க அப்பாகிட்ட நான் சொன்ன விஷயமா பேசிட்டியா? எப்ப அவரைச் சந்திக்க வரணும்?” என்றான் ஆனந்த்.
“ம்ம்… ஏற்கனவே பேசித் தான் வச்சுருக்கேன். அதுக்கு முன்னாடி ஒரு சில விஷயங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்தச் சொன்னாங்க எங்க அப்பா.”
“என்ன?”
“அது வேறு ஒண்ணும் இல்லை. உங்க குடும்பத்திற்கும் எங்க குடும்பத்திற்கும் ஏற்கனவே இருந்த பேச்சுவார்த்தை குறைந்து இப்பத்தான் கொஞ்சமாப் பேசி வாங்கி இருக்காங்க. இந்த நேரத்துல நீ எங்களோடு சேர்ந்து பிசினஸ் செய்ய ஆரம்பிச்சா, அதுக்கு அவங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்களா?”
“ம்ம்… அதனால்தான், அவங்க யாரையும் இதுல இணைக்காம, நீயும் நானும் மட்டுமே நடத்தலாம்னு நான் ஆரம்பத்திலிருந்து சொன்னேன். இப்ப எனக்கு உங்க அப்பாவால் ஒரு சில உதவி மட்டும் தேவைப்படுது. அதுக்கு வழி செஞ்சா போதும்” என்றான் ஆனந்த்.
அவன் ‘சரி, அப்பாவிடம் பேசுகிறேன்’ என்றதும், “நான் ஒரு பெரிய பார்ட்டி தொழில் ரீதியா வைக்கலாம்னு இருக்கேன். அதுக்கு உங்க அப்பாவையும் மரியாதை நிமித்தம் அழைக்கணும். அப்படி வர்றப்போ எனக்குத் தெரிஞ்சவரை அவர் சந்திக்கவும், அவருக்கு வேண்டப்பட்டவர் நமக்கு அறிமுகமாகவும் வாய்ப்பிருக்கு.”
“கண்டிப்பாக!” என்று ஒப்புதலளித்து, அத்துடன் அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு, பணி நிமித்தமான உரையாடலை ஆரம்பித்தான்.
ஜீவா அமெரிக்காவிலிருந்து அதிகப்படியான ஆடைகளை எடுத்துக் கொண்டு வராமல் போக, தினமும் அணிவதற்கு ஆடைகள் குறைபாடு ஏற்பட்டது. அதனால் பாரதி மகனிடம் சொல்லி அவர்கள் இருவரையும் ஜவுளிக் கடைக்கு அனுப்பி வைத்தார்.
காரில் சென்று வரலாம் என்று தான் அவன் கூறினான்.
அவளோ, ஆனந்தின் பார்வையும் பேச்சும் பிடிக்காமல் இருக்கவும், பார்க்கிற்குப் போவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருந்து வந்தாள். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. அதனால்தான் பைக்கில் சென்று வரலாம், சற்று நேரம் சுதந்திரக் காற்றை ஆழ்ந்து சுவாசிக்கலாம் என்று நினைத்துக் கபிலனிடம் கூறினாள்.
அவள் அவ்வளவு தூரம் செல்லும்போது அவன் மறுக்கவா போகிறான்!
இருசக்கர வாகனம் சாலையில் மிதமான வேகத்தில் செல்ல, இரண்டு கால்களையும் இருபுறமும் தொங்கவிட்டபடி, இருள் சூழ்ந்த ஆகாயத்தையும் சாலையின் இரு மருங்கிலும் தெரிந்த கடைகளையும் பார்த்துக்கொண்டே சென்றாள்.
அப்போது ஒரு பெரிய ஜவுளி கடையின் முகப்பில் இருந்த பொம்மையில் அணியப்பட்டு இருந்த புடவை அவளது கண்ணில் விழுந்தது. உடனே கபிலனின் தோளைத் தட்டிச் செவியோரம் கிசுகிசுத்தாள். அவனும் சரி என்று இரு சக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு வந்து, அவளுடன் இணையாக நடந்து கடைக்குள் சென்றான்.
கடையில் பணிபுரியும் நபர் என்ன வேண்டும் என்று கேட்க, அவள் பொம்மையைக் கைகாட்டி அந்தப் புடவை வேண்டும் என்று சொன்னாள். “அதே மாடலில் வேறு புடவைகள் உள்ளே இருக்கு. எடுத்து வரச் சொல்றேன். நீங்க பார்க்கிறீர்களா?” என்று கேட்க, அவளும் உடனே சரி என்று ஒத்துக் கொண்டாள்.
அந்த மனிதர் அங்கிருந்த பணியாளிடம் சொல்லி, அவள் சொன்னது போன்ற புடவையில் வெவ்வேறு நிறங்களில் உள்ள அனைத்தையும் எடுத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்தில் அவள் முன்பு அனைத்து புடவைகளும் வைக்கப்பட்டன. ஜீவா பட்டுப் புடவை வேண்டாம் தான் கேட்டது மட்டும்தான் வேண்டும் என்று கோரிக்கை விடுக்க, அதே போன்ற சிறு பயறு பச்சை நிற காட்டன் புடவையை எடுத்து வர பணியாளை ஏவினார்.
அவள் அந்தப் புடவை வந்ததும் வாங்கித் தன்மீது போட்டுப் பார்த்துக் கண்ணாடியில் நோக்கினாள். அவளுக்கு அது அத்தனை பாந்தமாகப் பொருந்தி இருந்தது. அதையே தனக்குத் தருமாறு சொல்லிவிட்டு, இன்னும் தேவையானவற்றை வாங்கிக் கொண்டிருக்க, கபிலன் அவளைத் தொந்தரவு செய்யாமல் அங்குக் கிடந்த நாற்காலியில் அமர்ந்து, கைப்பேசியில் மூழ்கினான்.
அந்த நேரம் அதே ஜவுளி கடையின் மாடியில் ஆண்களுக்கான பிரிவில் இருந்த ஆனந்த், பார்ட்டி அன்று அணிவதற்கான சில ஆடைகளை எடுத்து விட்டுப் பணத்தைச் செலுத்திக் கொண்டு மின்சாரப் படிக்கட்டு வழியாகக் கீழே வந்தான்.
பெண்களுக்குரிய பிரிவில் இருந்த ஜீவா தனக்குரியதை வாங்கிவிட்டு மேல் மாடிக்குச் செல்ல முயல, அந்த நேரம் இருவரின் தோள்களும் மோதியதில் கையிலிருந்த துணிகள் அடங்கிய பைகள் கீழே விழுந்தன.
அவள் அவசரமாகத் தனக்குரியதை எடுத்து விட்டு நிமிர்ந்து பார்க்க, ஆனந்த் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
மறுபடியும் அவனைப் பார்த்ததும் அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அடுத்த கணமே இதழ்கள் கோபத்தில் இறுகின. நேற்று நடந்தது தற்செயலானது; ஆனால், இன்று அப்படி அல்லவே! அவன் வேண்டுமென்றே தன் மீது வந்து மோதிவிட்டு, ஒரு சிறு மன்னிப்புக் கூடக் கேட்காமல் நிற்கிறான். அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? என்று அவள் நினைக்க, அவனும் அவளைப் பற்றி அதையேதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது பாவம் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
வேறு யாராக இருந்தாலும் கூட அவன் மன்னிப்பைப் பெற்றிருப்பான். ஆனால், அவன் மோதிய நபர் ஜீவா என்பதால் கண்டு கொள்ளாமல் தனக்குரிய சாதனத்துடன் விலகி நடந்தான்.
‘இடியட்’ என்று மனதிற்குள் திட்டிக் கபிலனின் அருகில் வந்தவள், முகத்தில் இருப்பதைக் காட்டாமல் “போகலாம்” என்றாள்.
“ம்ம்… உனக்கு வேண்டியது எல்லாம் வாங்கிட்டியா? வேறு ஏதாவது வாங்கணுமா?” எனக் கேட்க, அவள் செப்பல், பேக் வாங்க வேண்டும் என்றாள்.
அவனும் அங்கே அழைத்துச் சென்று அவளுக்கான அனைத்தும் வாங்கி விட்டு, இரவு உணவையும் உணவகத்தில் முடித்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வீட்டிற்கு வந்ததும், கபிலனின் அம்மா பாரதியிடம் சற்று நேரம் பேசிவிட்டுத் தனது அறைக்குள் வந்தவள், அங்கிருந்து வாங்கி வந்திருந்தவற்றை மேஜையின் மீது வைத்து விட்டுச் சுவராஸ்யம் இல்லாமல் சென்று படுக்கையில் சாய்ந்தாள்.
பெற்றோர் இருந்த நாட்களில் அவர்களின் வாழ்க்கை ‘ஆனந்தக் குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே…’ என்பது போல் இருந்து, இப்போது வெறுமை படர்ந்து காணப்பட்டது.
இதிலிருந்து விடுதலை பெறவே முடியாதா? என்று கேட்கும் மனதிற்கு, ‘ஆம்! இப்படித்தான் கடைசி வரை வாழ்ந்தாக வேண்டும்’ என்ற பதில் கிடைக்க, அவள் மனதில் ஏக்கம் எட்டிப் பார்த்தது.
மனம் முழுவதும் ஏற்படும் பாரத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை. இதில் ஆனந்தைச் சந்திக்க நேர்ந்தபோது ஏற்பட்ட காரணமில்லாத எரிச்சலும் வெறுப்பும், அவளுக்குள் எஞ்சியிருக்கும் நிம்மதிக்கு உலை வைக்கின்றன.
அன்று அவன் பார்த்த பார்வையும், வருணனை செய்த விதமும், அவனது சிரிப்பும், அவள் பேசாமல் சென்றபோது அவன் வாயாடி நின்ற விதமும் அன்று இரவு அவளது உறக்கத்தைப் பறித்திருந்தன. இன்னும் சில நாட்களில் இங்கிருந்து அமெரிக்காவிற்குச் சென்று விடுவதால், அதுவரை அவனைப் பற்றி நினைக்கக் கூடாது, அவன் இருக்கும் பக்கம் போகவே கூடாது என்று மனதிற்குத் தாழிட்டு அவள் இறுக்கமாகக் காட்டிக்கொள்ள, அதற்கு அடுத்த நாளும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட சந்திப்பு அவளுக்குப் பிடித்தமானதாக இல்லை.
அன்று சிரிப்பும் புன்னகையுமாகத் தெரிந்த முகம், இன்று கடுமையாகவும் உதாசீனமாகவும் தெரிகிறது. ஒருவேளை, அன்று அழைக்க அழைக்க நிற்காமல் சென்ற கோபத்தில் இருக்குமோ?
தலையை உலுக்கிக்கொண்டாள் ஜீவா. ‘அவன் எப்படிப்பட்டவனாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், நமக்கென்ன வந்தது? இனிமேல் ஏதாவது வம்பு செய்யட்டும், அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று மனதிற்குள் நினைத்து, அந்த எண்ணங்களிலிருந்து வெளியே வரத் தன் கைப்பேசிக்குள் சரணடைந்தாள்.
