Skip to content
Post Views: 1,761
அத்தியாயம் 7
வசீகரன் இன்னொரு பெண்ணின் அணைப்பில் மகிழ்ந்து சிரிப்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அந்தப்பெண் அவனுக்கு கேக்கை ஊட்டிவிட்டு பின் கொஞ்சம் கிரீமை எடுத்து அவன் கன்னத்தில் தடவ அங்கே கூடியிருந்த அனைவரும் “ஹேய்..” என்று கூச்சலிட்டனர்.
அதிதி வசீகரனின் அருகில் அழகே பொறாமைக்கொள்ளும் பேரழகாக நின்றிருந்தவளைப் பார்த்தாள். அந்தப்பெண்ணை இதற்கு முன்பு எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று மனம் ஒருபுறம் யோசிக்க.. சட்டென்று நினைவு வந்தது.
Advertisement
அன்று ஒருநாள் கல்லூரி கலை விழாவில் வசீகரன் இவளைப்போன்ற பெண்ணைத்தான் விரும்புவான் என்று வர்ஷினியிடம் மேடையில் ஆடிய பெண்ணைக்காட்டிக் கூறினாளே அதே பெண்தான்.
“அன்றே கணித்தார்…” என்று கூறுவதைப்போல அன்று எதோ எதேச்சையாக கூறியது இப்படி தன் தலையில் வந்து விடியும் என்று அவள் என்ன கனவா கண்டாள்..?
அதிதியின் கண்முன்னே அவளது உலகம் நொறுங்கி உடைந்ததுபோல் இருந்தது, என்னதான் வசீகரன்மேல் தனக்கு ஆசையில்லை, அவன் தனக்குக்கிடைக்க மாட்டான் என்று தனக்குத்தானே சொல்லிகொண்டு இருந்தாலும், ஏதோ ஒரு மூலையில் அவனுக்கும் தன்னைப் பிடிக்கும் என்று ஒரு சிறிய நப்பாசை ஒட்டிக்கொண்டிருந்தது..
Advertisement
அது இப்போது முற்றிலும் தகர்ந்து இல்லாமல்போனது.
Advertisement
“என்ன நினைத்தேன் நான்..? வசீகரன் போன்ற காலேஜ் ட்ரீம் பாய்க்கு கேர்ள்ஃப்ரண்ட் இருக்காது என்றா? எவ்வளவு வடிகட்டின முட்டாள்தனம்..”
அதிதிக்கு கண்ணைக்கரித்து அழுகை வரும் போல் இருந்தது..அப்போது அவள் கையை மென்மையாக பற்றி
“ஹே.. ஆர் யூ ஓகே..?” என்றாள் வர்ஷினி கவலையாக
Advertisement
இமைகளை அழுத்தமாக மூடித் திறந்து விழி நீர் வழியாமல் தடுத்த படி.
“யா ஐம் ஓகே..” என்றாள் சிரமத்துடன்.
அப்போது.. “என்ன ஜூனியர் அப்படியே உறைஞ்சிப்போய் நின்னுட்ட..?ஆமா நீ என்ன நினைச்ச..??வசி உன்கிட்ட மயங்கிடுவான்னா? அய்யோ பாவம்..” என்று ஏளனமுடன் கேட்டுக்கொண்டே அவளருகில் வந்து நின்றான் கேசவ்.
அதிதி முயன்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.
அவன் முகத்தில் ஏளனத்துடன் அடுத்தவர் படும் கஷ்டத்தைப் பார்த்து ரசிக்கும் குரூரத்தன்மையும் தெரிந்தது.
‘போன ஜென்மத்தில் இவனுக்கு எதேனும் கடன்பாக்கி வைத்துவிட்டேனா இப்படி கடன்காரன் மாதிரி எங்கே போனாலும் என்னையே சுத்தி சுத்தி வந்து அடிக்கிறானே..
அதுவும் என்ன மாதிரியான கீழ்தரமான பழியை எல்லாம் போடுகிறான்..’ என்று ஆயாசமாக உணர்ந்தாலும்.. இப்படி தன்னை கஷ்டப்படுத்தி பார்த்து அதில் குரூர இன்பம் காணும் இந்த சாடிஸ்ட் முன்பு தன் பலவீனத்தைக் காட்டிவிடக்கூடாது என்ற வைராக்கியமும் மனதில் பிறந்தது அதிதிக்கு.
“நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல சீனியர்..” என்றாள் சாதாரணமான குரலில்.
“ஆமா.. உனக்கு ஒன்னும் புரியாதுதான்..அதான் கூப்பிடாத இடத்துக்கெல்லாம் அழையா விருந்தாளியா முதல் ஆளா வந்து நிக்கிறியே.. அதுவும் கும்பல சேர்த்துகிட்டு..” என்றான் உதட்டில் ஏளனவளைவுடன்.
“அழையாவிருந்தாளியா..?வசீகரன் சீனியர் அவரே நேர்ல பார்த்து கண்டிப்பா வரனும்ன்னு கம்பெல் பண்ணிக் கூப்பிட்டதால தான் நாங்க வந்தோம்..” என்றாள் அதிதி நிமிர்வுடன் வார்த்தைகளில் அழுத்தத்துடன்.
ரெண்டு வார்த்தை அவமரியாதையாக பேசினால் உடைந்து அழுது விடுவாள் என்றுதான் அதிதியை எடைபோட்டிருந்தான் கேசவ்,ஆனால் அவள் அசராமல் எதிர்த்துப் பேசுவதைப் பார்த்து சற்று கடுப்பானான். அவளை எப்படியும் உடைத்துவிட வேண்டும் என்று உறுதியெடுத்தான்.
“வசி அப்படிதான்.. யாரு எவருன்னு தராதரம் பார்க்காம எல்லார் கிட்டையும் சகஜமா பேசிடுவான். அதையே மத்தவங்க அட்வாண்டேஜ்ஜா எடுத்துப்பாங்கன்னு கூடயோசிக்க மாட்டான். அதனால வசி எதோ உன்கிட்ட ரெண்டு வார்த்தை சிரிச்சி பேசிட்டதால இந்த சாம்ராஜ்ஜியத்துக்கு ராணி ஆகிடலாம்ன்னுலாம் கனவுலயும் நினைச்சிடாத.. அதோ அங்க அவன் பக்கத்துல நிக்குறாளே வைஷாலி அவதான் அவனோட ராணி.. ஈரோடுல பெரிய ஜுவல்லரி ஷாப் ஓனரோட ஒரே பொண்ணு..
அவங்கதான் காலேஜோட பவர்கப்புள் (power couple) ரெண்டு வருஷமா லவ் பண்றாங்க.. தேவையில்லாம ஆசைய வளர்த்துகிட்டு ஏமாந்து போகபோறியேன்னு.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.” என்றான் குரலில் சிறிதும் பச்சதாபம் இல்லாமல் எகத்தாளத்துடன்.
அவன் பேசபேச அதிதியின் இதயத்தில் ஈட்டி பாய்ந்ததுபோல் வலித்தது. ஆனால் அதனை மறைத்து முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டாள்..
கண்ணைவிரித்து அவனை ஆச்சரியமாக பார்த்து
“என்ன சீனியர் சொல்றீங்க?? நான் எந்த சாம்ராஜ்ஜியத்த புடிக்க ப்ளான் போட்டேன்?? இங்க பர்த்டே பார்ட்டின்னு தானே கூப்ட்டாங்க.. எதுவும் ஷூட்டிங்கா? கேமரா எதுவும் செட் பண்ணி இருக்கீங்களா??சீரியல் கதையெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க….” என்று ஆச்சரியப்படுவது போல ஏளனமாகவே திருப்பிக்கேட்டாள்.
நடுவில் குறுக்கிடலாம் என்று நினைத்த வர்ஷினி கூட அதிதி பேசுவதை பார்த்து அவளே சமாளித்து விடுவாள் போலும் என்று நினைத்து அமைதியானாள்.
அதிதியை குத்தி காயப்படுத்த நினைத்தவனால் அவள் திருப்பி தருவதைத் தாங்க முடியவில்லை..
“சும்மா நடிக்காத.. ஸ்டேஜ்ல வசி வைஷாலிக்கு கேக் ஊட்டும் போது உன் முகம் போன போக்கைதான் நான் பார்த்தேனே..அப்படியே காத்து போன பலூன் மாதிரி புஸ்ஸுன்னு வாடி சுருங்கி போச்சே..” என்று நேரடியாகவே தாக்கினான்.
“பின்ன வாடி போகாம என்ன பண்றது, வந்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா..? இவங்க எப்ப கேக் ஊட்டி முடிச்சி எப்ப ஃபுட் கவுண்ட்டர ஓப்பன் பண்றது..பசி உயிர் போகுது..” என்றவள் அருகில் குளிர்பானம் நிறைந்த தட்டுடன் வந்த சர்வரை அழைத்து, ஒன்றை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டு மற்றொன்றை எடுத்து அருகில் இருந்த வர்ஷினியிடம் கொடுத்தாள்.
சற்று திகைத்தது போல் நின்ற அந்த சர்வர், பணிவாக இவளிடம்
“திஸ் இஸ் கேப் காடர் (cape corder) மேம்” என்றான். அந்த பணியாள் வட மாநிலத்தவன் போல, அவன் பேசும் ஆங்கிலமே சரியாக புரியவில்லை.. அருகில் கேசவை வைத்துக்கொண்டு அவனிடம் விளக்கம் கேட்கவும் விருப்பமில்லாமல்.
“யா ஐ நோ.. தாங்க்ஸ்..” என்று தேவைக்கதிகமாகவே சிரித்துவைத்தாள். பிறகு தன் அருகில் நின்ற கேசவை சிறிதும் சட்டை செய்யாமல்
வர்ஷினியிடம் “சியர்ஸ்..” செய்துவிட்டு, ஸ்டைலாக அருந்தத்தொடங்கினாள்.
அதிதியை கூனிக்குறுகிப்போக செய்ய நினைத்தவனுக்கு அவள்பாட்டுக்கு தன்னை பொருட்படுத்தது அலட்சியம் செய்ததைப் பார்த்து அவன்தான் மூக்குடைந்து திரும்பினான்.
அவன் சென்றதும் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்செறிந்தாள். பின் மெதுவாக கையிலிருந்த பானத்தை அருந்தினாள், அது ஒருவித வித்தியாசமான சுவையுடன் இனிப்பாக இருந்தது.
அருந்தி முடித்ததும், கிளாசை வாங்க வந்த சர்வரிடம் அதே பானம் வேண்டும் என்று மீண்டும் கேட்டு வாங்கிக்குடித்தனர். மூன்றாவது முறையாக் இருவரும் அதையே கேட்க,
சந்தேகம் கொண்ட விஷால்
“ஹே போதும் அது என்ன ஜூஸ்ன்னே தெரியல இப்படி மொடாக்குடி குடிக்காதீங்க..” என்றான்.
“அதெல்லாம் நல்ல ஜூஸ்தான்.. இரு என்ன பேருன்னு கேக்கறேன்..” என்றுவிட்டு
“எக்ஸ்கியூஸ் மீ..” என்று அந்த சர்வரை மீண்டும் அழைத்து, “வாட் ஜுஸ் இஸ் திஸ்?” என்றாள் வர்ஷினி.
“கிரேன்பெர்ரி மேம்..” என்றான் அவன்.
“ஓகே தாங்க் யூ” என்று அவனை அனுப்பிவிட்டு விஷாலிடம் திரும்பி..
“சீ.. இது கிர்ரேன்ன் பெர்ரி ஜுஸ்தான்..” என்று சிரித்துக்கொண்டே கூறினாள்,அதிதியும் அந்தசிரிப்பில் இணைந்துகொள்ள… எதோ சரியில்லை என்று மட்டும் விஷாலுக்கு புரிந்தது.
வசீகரன்னுக்கு உள்ளுக்குள் களைப்பாக இருந்தது. ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாமல் எல்லோரிடமும் முடிந்த அளவு உற்சாகத்துடனே பேசி சிரித்துக்கொண்டிருந்தான்.
பார்ட்டி கிட்டத்தட்ட முடிவடைந்திருந்தது. வந்தவர்களில் பாதிக்கும்மேல் கிளம்பிவிட மிச்சம் இருப்போரை பத்திரமாக திருப்பி அனுப்பும் வேலையை செய்துகொண்டிருந்தான்.
சொந்தகாரில் வந்த சிலரைத் தவிர பெரும்பாலும் ஹாஸ்ட்டல் மாணவர்கள்தான் என்பதால் அவர்களை பத்திரமாக கொண்டுவிட டிராவல்ஸிலிருந்தும் சில கார்களை ஏற்பாடு செய்திருந்தான். எதற்கும் இருக்கட்டும் என்று அவர்கள் வீட்டிலிருந்த கார்களையும் டிரைவர்களையும் தயாராக இருக்கச் சொல்லியிருந்தான்.
ஒவ்வொருவராக கிளம்பக் கிளம்ப வாகனங்கள் கல்லூரியை நோக்கி விரைந்து கொண்டிருந்தன.
அடுத்து ஒரு கார் பயணப்பட தயாராக இருக்க இரண்டு பேர்மட்டுமே அதில் இருக்க இன்னும் இரண்டு பேரை ஏற்றிக்கொள்ளலாம் என்று டிரைவர் கூற, வேறு யாரும் ஹாஸ்ட்டலுக்கு செல்வோர் இருக்கிறார்களா என்று வசீகரன் தேடும் போதுதான், தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்த விஷால் அவன் கண்ணில் பட்டான்.
வசீகரனுக்கு அவனது பெயர் தெரியாவிட்டாலும் அவன் அதிதியின் உடன் வந்த நண்பன் என்றவரையில் தெரியும், இவன் ஏன் இப்படி அமர்ந்திருக்கிறான் என்று அவன் அருகில் சென்றான்.
“ஹேய் ப்ரோ.. எவ்ரிதிங் ஓகே..?”என்றான்.
திடுக்கிட்டு நிமிர்ந்த விஷால், வசீகரனைப் பார்த்ததும் முகத்தில் சிறு ஆசுவாசத்துடன்..
“நோ ப்ரோ.. இவங்கள பாருங்க..என்ன குடிச்சாங்கன்னு தெரியல.. ரெண்டு பேரும் இப்படி மட்டையாகி கெடக்கறாங்க..” என்றான் அருகில் டேபிளை தலைக்கு முட்டுகொடுத்து முகம் மறைத்து அமர்ந்திருந்த இருவரையும் காட்டி..
வசீகரன் இருவரையும் பொதுவாக பார்த்துவிட்டு அருகில் இருந்த காலி கண்ணாடி கிளாஸை எடுத்து முகர்ந்து பார்த்தான்.
“மை காட் ..இது வோட்கா..இதை ஏன் குடிச்சாங்க..?” அதிர்ச்சியில் அவன் குரல் சற்று உயர்ந்து ஒலிக்க..
அவனது குரலில் தலையை நிமிர்த்தி பார்த்த அதிதி..
“வோட்கா இல்ல.. இது க்ரேன்பெர்ர்ரி ஜூஸ்..” என்றாள் குழறலாக..
“ஆமா ஏதோ க்ரேன்பெர்ரி ஜூஸ்ன்னுதான் சொன்னாங்க..” என்றான் விஷால்.
“இது கேப் கார்டர்.. வோட்காவுல க்ரேர்பெர்ரி ஜூஸ் மிக்ஸ் பண்ணிகுடிக்கற டிரிங்க்..” என்று விளக்கினான் வசீகரன்.
“ஐயோ கடவுளே.. இது தெரியாம நல்லா வாங்கி மொடாக்குடி குடிச்சிட்டாங்க.. இப்ப ரெண்டு பேராலையும் எழுந்து கூட நிக்க முடியல..என்ன பண்றதுன்னே தெரியல..” என்றான் விஷால் செய்வதறியாத தவிப்பில்.
“ஹே..டோண்ட் வொர்ரி ப்ரோ.. கார் ரெடியா இருக்கு, ஹாஸ்ட்டல்ல டிராப் பண்ணிடுவாங்க.. நீங்க கெளம்புங்க..” என்றான்.
விஷால் வர்ஷினியை கைத்தாங்கலாக எழுப்பி நிறுத்த,
வசீகரன் அதிதியின் பக்கம் சென்றான், அந்த மாலை முழுவதுமே அவனுக்கும் அவனது அப்பாவிற்கும் நடந்த வாக்குவாதம் மனதின் ஓரத்தில் அழுத்திக்கொண்டே இருக்க, அவர் கூறிய சொற்கள் கூர் ஊசிகளாக அவனை குத்தி வலிக்க செய்துகொண்டே இருந்தது, அந்த வலியை மறைத்துதான் அவன் வெளியே சகஜமாகக் காட்டிக்கொண்டிருந்தான்.
ஆனால் அவன் தன் தந்தையின் முன் கூனிக்குறுகி நின்றதை பார்த்த அதிதிக்கு தெரியும்தானே அவன் மறைத்த வலி.
அவன் மறைக்க நினைக்கும் அவனது இன்னொரு பக்கத்தை அதிதி காணும்படி நேர்ந்தது அவனுக்கு வலியையும் தாண்டி அவமானத்தைத் தந்தது.
‘என்னை ஒரு ஹீரோ மாதிரி பார்த்த பொண்ணு.. அவ முன்னாடி இப்படி ஜீரோவாக நிற்கும்படி ஆகிவிட்டதே என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்..? இனியும் என்னை அதே மதிப்புடன் பார்ப்பாளா? அவள் தன்னைப் பார்க்கும் பார்வையில் வித்தியாசத்தை பார்த்துவிட்டால் அதைத்தன்னால் தாங்க முடியுமா?’ என்று ஏதேதோ தோன்ற, அதன் பிறகு அவளை நிமிர்ந்தும் பாராமல் முழுவதுமாக அவளைத் தவிர்த்தான்.
ஆனால் இப்போது அது முடியாதே.. அருகில் சென்று அவள் தோளைப்பிடித்து தூக்கிவிட்டான்.. யாரோவென்று ஒரு கணம் திமிறியவள் இவனைப்பார்த்ததும் அமைதியானாள். இதை கவனித்த வசீகரனுக்கு உள்ளுக்குள் ஒரு இதம் பரவியது.. இன்னும் தன்னிடம் அந்த மதிப்பும், நம்பிக்கையும் இருக்கிறது என்ற எண்ணமே அவனுக்கு பெரும் பலத்தையும் நிம்மதியையும் தந்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவுக்கா இந்த சின்னப்பெண்ணின் மதிப்பீடு எனக்கு முக்கியம்? என்று தன்னையே வியந்து கேட்டுக்கொண்டான்.
காரின் அருகில் சென்றதும் வர்ஷினிக்கு குமட்டல் எடுக்க அவளை சற்று ஒதுக்குப்புறமாக கூட்டிப்போனான் விஷால், வாந்தி எடுத்துவிட்டு நிற்க முடியாமல் தள்ளாடியவளை சமாளிக்கத் திணறியவனைப்பார்த்த வசீகரன்..
“ப்ரோ கார்ல ரெண்டு பேருக்குதான் இடம் இருக்கு,நீங்க மொதல்ல அவங்கள கூட்டிட்டு கிளம்புங்க.. ரொம்பமுடியாம இருக்காங்க பாருங்க..அதிதிய நான் கூட்டிட்டு வரேன்..” என்றான்.
“இல்ல வேண்டாம் நாங்க அட்ஜஸ்ட் பண்ணிப்போய்டுவோம்..” என்றான்.
“என்ன அட்ஜஸ்ட் பண்ணுவீங்க, ரெண்டு பேரை உங்களால மேனேஜ் பண்ண முடியாது, சொன்னா கேளுங்க.. நான் பின்னாடியே அதிதிய கூட்டிட்டு வரேன்..”
“இல்ல இது உங்க பார்ட்டி நீங்க எப்படி விட்டுட்டு வர முடியும்.. நானே பாத்துக்கறேன் ஒன்னும் பிரச்சனையில்ல..” என்று மீண்டும் மறுத்தான் விஷால்.
“பார்ட்டி ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சி.. இங்க நான் இனி இருக்கனும்ன்னு அவசியம் இல்ல, ஆளுங்க இருக்காங்க பாத்துப்பாங்க.. பாருங்க அவங்க மயங்கறாங்க ஷி நீட்ஸ் ஸ்லீப்.. இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க, கார்ல ஏறி கிளம்புங்க..” என்றான் பொறுமையிழந்த குரலில்,
‘என்ன இவன்.. சொன்னா புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறான்’ என்று உள்ளுக்குள் எரிச்சலுடன் நினைத்தான்.
அப்போதும் விஷால் தயங்க..
தன் பெண் தோழியை ஒரு அந்நியனிடம் விட்டு செல்லவே தயங்குகிறான் என்பது அப்போதுதான் அவன் புத்திக்கு உறைத்தது. தன்னை அவன் நம்பவில்லையா என்ற கோபம் எழுந்தாலும், அவன் நடந்துகொள்வது நியாயமே என்பதும் புத்திக்கு தெரிந்தது. இப்போது அவன் செய்ய வேண்டியது அவனது நம்பிக்கையை பெறுவது மட்டுமே என்றும் புரிந்தது.
“உங்க பேர் என்ன ப்ரோ..” என்று பொறுமையாக கேட்டான்.
“விஷால்..” என்றான் அவன்.
“நான் வசீகரன், நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கறேன். உங்க தயக்கம் எனக்கு புரியுது. ஆனா இப்ப நமக்கு ஆர்கியூ பண்ணிட்டு இருக்க டைம் இல்ல, தே போத் ஆர் பாஸிங் அவுட் ( they both are passing out), சோ வீ ஹேவ் டு மேக் ய டெஷிஷன் ஹியர்.. உங்களுக்கு எப்படியோ அப்படித்தான் எனக்கும் அதிதி ரொம்ப முக்கியமான ஃப்ரண்ட், அவளோட வெல் பீயிங்ல எனக்கும் அக்கறை இருக்கு,சோ நீங்க என்னை நம்பலாம், நீங்க இந்த கார்ல ஏறிப்போங்க, என்னோட கார கொண்டு வர சொல்றேன் என்றவன் “பாபுண்ணா.. என்னோட கார எடுத்துட்டு வாங்க..” என்று சற்று உரக்க அழைத்து சொல்ல அந்த பாபுண்ணாவும் “இதோ பத்து நிமிஷம் தம்பி..” என்று உடனே காரை எடுக்க விரைந்தார்.
“என்னோட நம்பர் எடுத்துக்கோங்க..”என்று விஷாலிடம் தன் நம்பரைக் கொடுத்து அவனது நம்பரையும் சேவ் செய்துகொண்டான்.
“நீங்க ரீச் ஆனதும் கால் பண்ணுங்க, நடுவுல வேற எதுனாலும் கால் பண்ணுங்க..நானும் இப்ப கிளம்பிடுவேன்.” என்று முடிந்த வரையில் பொறுமையாகவே பேசினான்.
அப்போதும் விஷால் அரைமனதாகவே கிளம்பி சென்றான்.
அவனது கண்ணில் தெரிந்த தவிப்பையும் நிச்சயமற்ற தன்மையையும் பார்த்த வசீகரன்..
“கிட்டி நீ ஒரு நல்ல ஃப்ரண்ட்டதான் சம்பாதிச்சிருக்க..” என்றான் மெச்சுதலாக.
என்ன புரிந்ததோ என்னவோ ஈஈ.. என்று சிரித்தாள்.
கார் வருவதற்காக காத்திருந்த நேரத்தில் அதிதி நிற்க முடியாமல் தள்ளாட ஒரு ஆதாரத்திற்காக அவளைத்தன் தோள் மீது சாய்த்துக்கொண்டான்.
சரியாக அந்த தருணத்தில்தான் வைஷாலி அவர்களைக் கண்டாள்.
அவள் கண்களில் கனல் எழ நிற்பதை பார்த்து அவள் அருகில் வந்த கேசவ்..
“பாத்தியா வைஷு..அந்த ஃபர்ஸ்ட் இயர்.. அவதான் உனக்கு போட்டியா வர பாக்குறா..நீ உஷாரா இல்லைன்னா உன்னோட ஆள கொத்திட்டுப் போய்டுவா.. வசியும் ஒன்னும் சும்மா இல்ல , அவனுக்கும் அவ மேல ஒரு அட்ராக்ஷன் இருக்கு பார்த்தாலே தெரியல..?” என்று நன்றாக கொளுத்திப்போட்டான்.
கேசவ் மூட்டிய நெருப்பு உள்ளே எரிய அதே கொதிப்புடன் வசீகரனிடம் சென்றாள்.
“யாரு வசி இது..ஏன் இப்படி நிக்குறா?”என்றாள் கோபத்தை மறைக்காத குரலில்.
“இது அதிதி, என்னோட ஃப்ரண்ட்..பாவம் ஜூஸ்ன்னு நெனைச்சி தெரியாம வோட்காவ குடிச்சிட்டா..அதான் கொஞ்சம் மயங்கிட்டா..” என்றான்.
“மயங்கிட்டாளா..? போதையாகிட்டான்னு சொல்லு.. தெரியாம யாராவது குடிப்பாங்களா? அதெல்லாம் சும்மா.. இந்த மாதிரி பொண்ணுங்கள்லாம் குடிக்கறதுக்குதான் பார்ட்டிக்கே வருவாங்க..இவளும் அப்படித்தான்..”
என்றவளை இடைமறித்து,
“ஸ்டாப் இட் வைஷு..நடந்தது என்னன்னு தெரியாம யாரையும் இப்படி ஜட்ஜ் பண்ணாத..” என்றான் எரிச்சலை அடக்கிய குரலில்.
வசீகரன் கடுப்பாகிறான் என்று தெரிந்ததும் சற்று தணிந்து பேசினாள் வைஷாலி.
“இல்ல வசி, நீ இப்படி யாரோ ஒரு பொண்ண கட்டிப்புடிச்சிட்டு நின்னுட்டு இருந்தா..பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க..?”
“என்ன நினைப்பாங்க?? ஒன்னும் நினைக்கமாட்டாங்க.. அதோட நான் ஒன்னும் கட்டிப்பிடிச்சிட்டு நிக்கல..” என்று அவளைத் திருத்தினான்.
“உனக்கென்ன ஒரு பிரச்சனையும் இல்ல எல்லாரும் என்கிட்டதான் வந்து கேப்பாங்க..” என்று அலுத்துக்கொண்டாள்.
“அப்படி கேக்குறவங்களை என்கிட்ட வந்து கேக்க சொல்லு..” என்றவன் கார் வருவதைப் பார்த்து கைக்காட்டினான். கார் வந்து நின்றதும்,
“சரி நான் கெளம்புறேன்.. நீ பாத்துப்போ..” என்று வசீகரன் கூறவும்தான் அவனும் அந்தப்பெண்ணுடனே போகிறான் என்று புரிய..
“என்னதிது வசி… நீ எதுக்கு இப்ப இவளை பேபி சிட் பண்ணிட்டு இருக்க? இவ கூட போக வேற யாரும் இல்லையா?” என்றாள் கடுப்புடன்.
“இவளோட ஃப்ரண்ட்ஸ் இப்பதான் போனாங்க, அதிய கூட்டிட்டு வரேன்னு நான் பொறுப்பேத்துட்டு இருக்கேன்.. சோ நான் தான் கூட போகனும்..”
“அதி” என்று முதன்முதலில் தான் கூறியதை வசீகரன் கவனித்தானோ என்னவோ வைஷாலி கவனிக்கத்தவறவில்லை.. அவளுக்குப் பற்றிக்கொண்டுவந்தது.. இருந்தாலும் வசீகரனிடம் இந்த சின்ன விஷயத்திற்கு சண்டைபோடுவது முட்டாள்தனம்.. முதலில் அவன் அந்தப்பெண்ணுடன் தனியே போவதை தடுக்கவேண்டும் அதுதான் முக்கியம் என்று உணர்ந்து..
“அப்போ நானும் உன் கூட வரேன்..” என்றான் வைஷாலி பிடிவாதமாக..
“இங்க பாரு நீ உன்னோட கார்ல தானே வந்த..? உன் ஃப்ரண்ட்ஸ்கூட நீ அதுல போ.. நான் இங்க பார்த்துக்கறேன்..” என்று திட்டவட்டமாக கூறிவிட்டு அதிதியை காரில் ஏற்ற நடத்திச்சென்றான்.
பின் கதவைத் திறக்கப்போனவன் ஒரு கணம் யோசனையோடு அதிதியின் முகம் பார்த்தான், அரைக்கண் மூடிய மயக்கத்தில் எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருந்த அவளின் தன்னிலை இழந்த தோற்றம் அவனை யோசிக்க வைத்தது.
காரோட்டியான பாபு வேறு யாரும் இல்லை ‘பாபுண்ணா..’ என்று அவன் சின்ன வயதிலிருந்து அழைத்து வளர்ந்த அவர்கள் வீட்டில் பல வருடங்களாக பணிபுரியும் குடும்பத்தில் ஒருவரை போன்றவர்தான் ஆனாலும் அதிதியை இந்த நிலையில் அவர் பார்ப்பதையும், அவளை தவறாக நினைப்பதையும் அவன் விரும்பவில்லை, நொடியில் முடிவெடுத்து,
“அண்ணா..நானே டிரைவ் பண்றேன், அப்படியே நானும் ஹாஸ்ட்டல் போயிடுறேன், அப்பாயி கிட்ட சொல்லிடுங்க, அப்புறம் இங்க மத்தவிஷயங்கள நீங்க பார்த்துக்கோங்க..” என்று கூறிவிட்டு அதிதியை முன் இருக்கையில் அமரவைத்து சீட் பெல்ட் போட்டுவிட்டான்.
ஒரு கணம் திகைத்தாலும் மறுப்பு கூறாமல் பாபுவும் காரிலிருந்து இறங்கி
“சரி தம்பி பார்த்து போங்க.. நான் இங்க பார்த்துக்கறேன்..” என்றார் அத்தனை வருட அனுபவத்தில் எந்த சூழ்நிலைக்கும் பழக்கப்பட்டவராக.
அவரிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி சென்றான் வசீகரன்.
இத்தனை நிகழ்வுகளையும் உள்ளத்தில் ஆத்திரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷாலி.
“என்னை அலட்சியம் செய்துவிட்டு, எவளோ ஒருத்திக்கு டிரைவர் வேலை பார்க்கப்போறானா?பாத்துக்கறேன்..” என்று கொதிப்புடன் நினைத்தாள்.
error: Content is protected !!