Skip to content
Post Views: 2,327
“இன்னும் எவ்வளவு நேரம் லாலா தூங்காம இருக்க போறீங்க?”
உதயா கொட்டாவி விட்டபடி கண்கள் உறக்கத்துக்குக் கெஞ்ச கேட்டாள்.
Advertisement
“நீ தூங்கு உதயா. எனக்குத் தூக்கம் வரல, நான் வெளியே போய்ப் படுக்கிறேன்” என்று எழுந்தவனின் கரம் பற்றி இழுத்து அவன் தோளைப் பிடித்துத் தன் பக்கம் பார்க்க வைத்தாள்.
“என்ன யோசனை?”
Advertisement
Advertisement
“நாளைக்கு அப்பாம்மா இந்த நேரம் விக்கிரவாண்டி வந்துடுவாங்க இல்ல”
“வந்துடுவாங்க லாலா. அதுக்கா தூங்காம இருக்கீங்க?”
Advertisement
உதயாவின் ஆராய்ச்சிப் பார்வையை இரவு விளக்கின் வெளிச்சத்தில் லாலாவால் உணர முடிந்தது.
“அப்பா வந்து கேட்டா என்ன சொல்றது? எப்படி சொல்றதுனு டென்ஷனா இருக்கு உதயா” என்றவன் சோர்வோடு மெத்தையில் மீண்டும் சாய்ந்தான்.
லாலாவின் பார்வை விட்டத்தில் இருக்க, உதயாவின் பார்வை லாலாவிடம் நிலைத்தது.
லாலா ஒரு வாரமாக புது வேலைக்குச் செல்கிறான். பதினைந்து ஆயிரம் சம்பளம், நிலையான வேலை இல்லை, இண்டர்ன் எனப்படும் பயிற்சி நிலை ஊழியன், ஜூனியர் டிசைனர் என்ற பதவி.
ஆனால் லாலா இதை குறைவாக நினைக்கவில்லை. ஆறு வருடங்களாகிற்றே என்று பயந்தாலும், இடையே இரு வருடங்கள் அவன் தொலைதூர கல்வியில் எம்.ஏ ஹிஸ்டரி படித்திருந்தான். யுபிஎஸ்சியில் விருப்பப் பாடமாக வரலாறைத் தேர்ந்தெடுத்திருக்க, அதில் இரண்டு வருடங்கள் கணக்கானது.
எல்லாம் விட, இரண்டு மாதங்களாக அவன் கற்றதை சிறப்பாக கற்றிருந்தான். ஆதலால் இண்டர்னாக அவனைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய சிக்கல் இல்லை. இதே அனுபவம் இருந்திருந்தால் அதை விட நான்கு மடங்கு சம்பளம் கிட்டியிருக்கும். இங்கேயும் ஒரு வருட ஒப்பந்தம்.
வாரத்தில் ஆறு நாட்கள் வேலை. சில நாட்கள் ஷிஃப்ட் இருக்கும், சில நாட்கள் பொதுவான ஷிஃப்ட் உண்டு. ஒரு வாரமாக ஜெனரல் ஷிஃப்ட் எனப்படும் ஒன்பது மணி முதல் ஆறு மணியிலான பணியில் இருந்தான்.
புது வேலை, புது மனிதர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக அதற்குத் தன்னை பழக்கிக்கொண்டிருக்கையில் பெற்றவர்களின் பட்டன பிரவேசம்.
லாலாவின் பக்கம் படுத்திருந்த உதயாவிற்கு அவன் உடலில் ஓடிய பதட்டத்தை உணர முடிந்தது. வருத்தம், கோபம் எல்லாம் சேர்ந்தெழுந்தது.
“ஏன் லாலா? இவ்வளவு டென்ஷனாகுறீங்க?” என்று அதட்டினாள்.
“ப்ச், போடி” என்று அவன் திரும்ப, தன் பக்கமாக அவன் தோளைப் பற்றி திருப்பியவள்,
“நீங்க உங்களை குறைவா நினைக்கிறீங்களா?” என்று கோபமாகக் கேட்க,
“அப்படியில்லடி! ஆனா எங்கப்பா சித்தப்பா இன்ஸ்பெக்டர், ஏசி, இப்போ டி.எஸ்.பியானது வரை பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பார். என் தாத்தாவும் அப்படித்தான்! இப்போ நான் அவங்க கனவை எல்லாம் ஒன்னுமில்லாம ஆக்கிட்டேன்னு நினைக்கிறப்போ தூங்க முடியல, எப்படி அவங்களை ஃபேஸ் பண்ணுவேன்? எங்கம்மா கூட என் பையன் போலிஸ் ஆவான்னு சொல்லிட்டு இருப்பாங்க” என்றான் மிகுந்த வருத்தத்துடன்.
“இப்போ நீங்க செய்ற வேலையில உங்களுக்கு சந்தோஷம் இருக்கா? இல்லை பிடிக்காம செய்றீங்களா? இதுக்குப் பதில் சொல்லுங்க லாலா?” என்று கண்டிப்பான குரலில் உதயா கேட்கவும்,
“பிடிச்சதுதான் உதயா செய்றேன், எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு. சித்தப்பா சொன்ன வேலைக்குப் போயிருந்தா கூட என் மேல நம்பிக்கை வந்திருக்காது. இது நான் போட்ட எண்பதாவது அப்ளிகேஷன்ல கிடைச்ச வேலை, இருபதாவது இண்டர்வியு. என்னோட திறமைக்குக் கிடைச்ச பரிசு” என்றான் உணர்வுப்பூர்வமாக.
உண்மைதான்! லாலா முடிவெடுத்த அடுத்த நாளே வேலைக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க தொடங்கிவிட்டான். பார்த்த எல்லா வேலைக்கும் விண்ணப்பித்தவன், இணையத்தில் தேடி இரண்டு மூன்று கோர்ஸ் படித்தான்.
அவனுக்குப் பிடித்த, அதே நேரம் இன்றைய சந்தையில் அவனுக்குத் தேவைப்படுகின்ற ஆற்றலை வளர்க்கும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்தான். முப்பது நாள், பதினைந்து நாள், ஒரு வாரம் என்று அதில் வகுப்புகள் வெவ்வெறாக இருந்தது. நமது வேகத்திற்குப் படித்து தேர்வெழுதி சான்றிதழ் வாங்கிடலாம்.
கூடவே அவனுக்கென portfolio(உடைமைப் பட்டியல்) தயாரித்தான். கல்லூரி காலத்தில் செய்த ப்ராஜக்டை நினைவு கூர்ந்து அதனைப் பற்றி எழுதியிருந்தான். கூடவே இப்போது கார் உதிர்பாகங்கள் வடிவமைப்பு டிசைன் குறித்து அவன் கற்றதில் சிறிய திட்டத்தின் வரைவையும் சேர்த்தான்.
நிறுவனம் பெரிதாக அனுபவத்தை எதிர்ப்பார்க்கவில்லை. இன்டர்ன் என்பதால் சம்பளம் குறைவாக, அதே நேரத்தில் வேலையைச் சீக்கிரம் கற்கின்ற வேகமுள்ள ஆள் வேண்டும்.
லாலா கச்சிதமாக அதற்குப் பொருந்தினான். இதை எப்படியும் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற தேவையும், கூடவே ஆர்வமும் இருக்க லாலாவிற்கு வேலை கடினமாக இல்லை.
லாலா தன்னை விளக்கவும், “அப்புறமென்ன? முதல்ல நம்ம எடுக்கிற முடிவை நம்ம நம்பணும். அடுத்தவங்களோட அபிப்ராயம் கேட்கிறது தப்பில்லை, அதுக்காக முடிவை சந்தேகப்படுறதெல்லாம் நியாயமில்ல லாலா. எத்தன எக்ஸாம் ஜஸ்ட் மிஸ்ல போயிருக்கு, கட் ஆஃப் கிடைச்சும் கடைசியில வேகன்சி ரெட்யூஸ் பண்ணியிருக்காங்க தானே?” என்ற உதயாவின் கேள்வியில் இருந்த நியாயம் புரிந்தது.
அரசின் திட்டங்களினால் ஏற்படும் மாற்றங்கள், சில சமயம் நேரடியான ஆட்கள் எடுக்கிறோம் என்று தேர்வு வைத்தபின் பதவி உயர்வு பணிகளாக அவை மாற்றப்படுவதும் நடக்கும். லாலாவிற்கு இருமுறை இந்த பிரச்சனைகளால் எட்டிய வேலை கிட்டாது போனது.
“இதெல்லாம் பாஸாகாம இருக்க நான் சொல்ற காரணம்னு சொல்வாங்கடி, இல்லையா இவ்வளவு தூரம் வந்துட்ட இன்னும் ஒரு வருஷம் படினு சொல்வாங்க. இத்தன வருஷம் சின்சியரா படிச்ச என்னால இதுக்கு மேல முடியும் தோணல, டயர்ட் ஆகிட்டேன்” என்றவன் குரல் சோர்ந்தது.
“அதான் சொல்றேன், அவங்க சொன்னா சொல்லிட்டுப் போகட்டும். உங்களுக்கு என்ன இஷ்டமோ அப்படி செய்ங்க” என்றாள் எளிதாக.
“அடிபோடி! சரோ லவ் பண்றேன் சொன்னதுக்கு எங்கப்பா கன்னத்துலயே ஒன்னு விட்டாரு. சின்ன வயசுல அடிச்சது எங்களை. அவருக்குப் பிடிக்காதது செஞ்சா அப்படித்தான் நடப்பாரு. நம்ம கல்யாணம் கூட எங்க வயசு ஆச்சுன்னா எனக்குப் பொண்ணு கிடைக்காதோன்னு பயம், கூடவே நீ நல்ல திறமையான பொண்ணுனு பண்ணி வச்சாங்க. சித்தப்பா கன்வின்ஸ் பண்ணினதால அதுவும்”
“அப்பவே எங்கப்பா, அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடணும்னு சொல்லிட்டே இருந்தாங்க. இப்போ நான் கல்யாணம் பண்ணி, அவங்க கனவை கலைச்சிட்டு இருந்தா எங்க வம்சத்தை வளர்க்கிற வேலையில இதை விட்டேன் சொல்லுவாங்க”
புலம்பிய கணவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலே அவளுக்கு உறக்கம் பறிபோனது.
“அது அவங்க கனவு லாலா! உங்களோடது இல்லை! உங்களோடதாகவே இருந்தாலும் ஒத்துவரலன்னா உதறினா தப்பே இல்லை. வாழ்க்கை ஒன்னு லாலா! அதை உங்க மனசுல பதிய வைங்க” என்றாள் அழுத்தமாக.
“எப்படி உதயா?”
“எப்படின்னா..?” என்று குரல் உயர்த்தியவள் கொஞ்சம் தணிந்து,
“எங்கப்பா இல்லாம போயிட்டார். அதுக்காக அதையே நினைச்சிட்டு இருந்திருந்தா எங்கம்மாவும் நானும் பட்டினி கிடந்து செத்திருப்போம்” என்றவளை முடிக்க விடாது,
“உதயா!” என்று பதறியவனுக்குக் குரலே மாறியது.
அவள் தோள் பற்றியவன், “இப்படி பேசாதடி! என்ன வார்த்தை இது?” என்றான் கலவரமாக.
“ப்ச், ப்ராக்டிலா பேசுறேன். எங்கப்பா அவர் உயிரை விட்டு எங்கம்மாவையும் என்னையும் தண்டிச்சிட்டார் லாலா. என்னை விடுங்க, எங்கம்மாவுக்கு அப்போ என்ன வயசு? அவங்களோட சந்தோஷம் அத்தனையும் பறிச்சிட்டார். இப்போ நான் அதையே நினைச்சா ஒரு நாள் கூட சிரிக்க முடியாது”
உதயாவின் வார்த்தைகள் ஆழமாக லாலாவைத் தாக்கின. அவள் வலியை எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டாள். இவன்தான் எப்போதும் புலம்பிக்கொண்டே இருக்கிறான், அவள் வெகு சில முறை மட்டுமே தன் வேதனைகளை சொல்லியிருக்கிறாளே தவிர அதை அவள் என்றும் எடுத்து வருவதில்லை.
யோசித்துப் பார்த்தால் எட்டு வயதில் அது எட்டக்கூடாத ஒரு துயரம்! மரணத்தை நேரில் பார்க்கும் வயதில்லை. ஆனாலும் உதயா கடந்து வந்திருக்கிறாள்.
“உதயா..? எப்படி டி இவ்வளவு அப்புறமும் நார்மலா பேசுற? எனக்கெல்லாம் வீட்ல ஸ்டீரிக்ட், மத்தபடி நான் சென்னை வந்துதான் கஷ்டப்பட்டேன்” என்றான்.
“வாழ்க்கை எங்கப்பா மட்டுமில்லையே?” உதயாவின் கேள்வி லாலாவை தாக்கியது.
‘வாழ்க்கை’ என்பது ஒரு உறவோ, ஒரு காதலோ, ஒரு வேலையோ, ஒரு வெற்றியோ கிடையாது. அது ஒரு நீண்ட நெடிய பயணம். வெற்றி, தோல்வி, உறவு, காதல், வேலை என்று எல்லாம் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்தில் அவசியமாகவும், அத்தியாவசியமாகவும் ஆகிறது. அதற்காக அதில் தோற்றால் வாழ்க்கையில் தோற்பதாகாதே!
வெற்றி என்பது எப்போதும் தொடருகின்ற ஒரு முயற்சி, வெற்றிகள் தொடர்ந்தால் மட்டுமே வெற்றியாக பார்க்கப்படும். இல்லையென்றால் ‘ஒரு காலத்தில் வெற்றிப்பெற்ற’ என்ற ஒற்றை வாக்கியத்தில் ஒருவரின் வாழ்க்கை முடிந்துவிடும். இதுதான் வாழ்க்கையின் வெற்றி என்று எதையும் சட்டத்துக்குள் போட்டு அடைத்திட முடியாது.
தோல்வி ஒன்றும் அத்தனை மோசமில்லையே. வெற்றி நிரந்தரமில்லை என்பது போலவே தோல்வியும் நிரந்தரமில்லை. வெற்றியோ தோல்வியோ எல்லாம் அந்தந்த நேரத்து அடையாளங்கள்.
“எல்லாமே புரியுதுடி, சொல்றதுக்கு இவ்வளவு சிம்பிளா இருக்கு. ஆனா அவங்களை ஃபேஸ் பண்ணனும் நினைச்சா.. நீ இவ்வளவு நேரம் கொடுத்த மோட்டிவேஷன் எல்லாம் ஆயிரம் ரூபா நோட்டு மாதிரி வேல்யூ இல்லாம போயிடுது” என்றதும் அவன் தோளில் அடித்தவள்,
“சொல்றது கூட அப்போ எனக்கு சிம்பிள் இல்லை லாலா. அப்போ எங்கப்பா செஞ்சது புரியாது. புரிஞ்சப்போ கோவம், ஆத்திரம். ஏன் நானோ எங்கம்மாவோ அவருக்கு வாழ காரணம் கொடுக்கலயான்னு. இப்போ பல வருஷம் ஆனதும் சிம்பிளா சொல்ல முடியுது. அவர் செஞ்ச தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்க முடியாதே!”
“வாழ்க்கையில சில கேள்விக்குப் பதில் இல்லை. எங்கப்பாவோட மரணம் அப்படித்தான். நடந்துடுச்சு, ஏத்துக்கிட்டேன். ஏன் எங்களை விட்டுப் போனாருன்னு யோசிச்சு என் நிம்மதி போய் என்னோட வாழ்க்கையை, அதோட சந்தோஷத்தை இழக்க நான் தயாரா இல்லை”
உதயா பேச பேச லாலாவுக்கு உதிர்ந்த நம்பிக்கையெல்லாம் மெல்ல மெல்ல உதயமாகும் உணர்வு.
அவள் நெற்றியோடு முட்டியவன்,
“உண்மையாவே நீ உதயநிலாதான் டி! நீ சொல்ற மாதிரி ஏன் அந்த எக்சாம்ல இந்த கொஸ்டினுக்கு முதல்ல யோசிச்ச ஆன்சரைப் போட்டிருந்தா இன்னேரம் அந்த போஸ்ட் கிடைச்சிருக்குமேனு பல நாள் யோசிச்சிருக்கேன். எல்லாம் என் வாழ்க்கையில சரியா நடந்திருந்தா நான் உன்னைப் பார்க்காமலே போயிருப்பேன், நீ என் வாழ்க்கையில வரத்தான் நான் ஆசைப்பட்ட வேலை கிடைக்கலன்னா நான் சந்தோஷமா எல்லாத்தையும் ஏத்துக்கிறேன் உதயா” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
வாழ்க்கையில் சிலவை நடந்துவிட்டது என்று சொல்லி கடந்து போவதில் ஒரு நிம்மதி இருக்கத்தான் செய்கிறது. மனிதன் அவன் மனத்தோடு அமைதி கொண்டாலே உறவோடும், உலகோடும் அமைதி கிட்டிடும்.
உதயா நிச்சயம் லாலாவிடம் அப்படியான வார்த்தைகளை எதிர்ப்பார்க்கவில்லை. அவனுக்குக் கிட்டாததையே எண்ணி எண்ணி வருந்தும் அவள் கணவன், இக்கணத்தில் எல்லாம் உதறி, தன் வரவு அவனுக்கு எத்தனை முக்கியம் என்று சொல்லியிருக்க, அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
“இப்போ ஓகேவா? இனிமே பயப்படக் கூடாது” என்று ஆதுரமாக உதயா சொல்ல,
“நீ இருக்கப்ப என்ன பயம்? ஆனா எங்கப்பாவைப் பார்த்து பயம்தான்” என்றதும் லாலாவின் தோளில் பற்கள் அழுந்த கடித்தாள்.
“ஆஆஹ்ஹ்ஹ்ஹ்! அடியே நைட்டி போட்ட தேவதைனு நினைச்சா, ராட்சஷி! ஏண்டி கடிச்ச?” என்று லாலா அலறினான்.
உதயாவிற்கோ அவன் அலறியதில் சிரிப்பு வந்தது.
“பின்ன, இவ்வளவு சொல்றேன் சும்மா அப்பான்னா பயம்னு அதையே சொன்னா?” என்று அதட்டினாள்.
“அது…” என்று பதிலின்றி லாலா இழுக்க, அவனை அருகே இழுத்தவள்,
“சரோ லவ் பண்ணினானு அடிச்சாங்கனு சொன்னீங்களே, இப்போ சரோவும் சக்திண்ணாவும் வாழ்றது பார்த்து சந்தோஷப்படுறாங்கதானே?” என்று கேட்டாள்.
லாலாவின் தலை எல்லா திசையிலும் ஆட,
“அப்புறம் என்ன? அது அந்த நிமிஷக்கோவம். பேச்சு மீறினா பெத்தவங்களுக்கு வர ஈகோ. கூடவே நம்மால உலகத்து வரவங்களை நம்ம பார்த்துக்கணும்னு அவங்களுக்கு வர பயம். எப்பவும் நம்ம அவங்களுக்குக் குழந்தைதான்! எங்கம்மா கூடத்தான் உங்களை லவ் பண்றேன் சொன்னப்போ சண்டைப் போட்டாங்க. இப்போ நார்மலா இல்லையா?”
“வாழ்க்கையில எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது லாலா. அவங்க என்ன சொன்னாலும், உங்க முடிவுல நீங்க சோர்ந்து போகாம இருங்க. உங்க வாழ்க்கையை நீங்கதான் வாழணும்! உங்களை வருத்தி வாழ்ந்து…என்ன செய்யப் போறீங்க? அவங்களுக்குப் பயந்து வேண்டாம்னு நினைக்கிறதை செஞ்சு இன்னும் ரெண்டு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டு அப்போ ஃபீல் பண்ணுவீங்களா? இல்லைதானே? உங்க முடிவை சொல்லுங்க, அதோட பிரதிபலிப்பு அவங்களோட, நீங்க அதை யோசிக்கக் கூடாது.”
“அப்படியே திட்டினா வாங்கிக்கங்க..அவ்வளவுதான்” என்றாள்.
“அவ்வளவுதானா?” என்று கேட்ட லாலாவின் மனநிலை உற்சாகமானது.
அதானே? தாத்தா, அப்பாவின் பேச்சைக் கேட்டு படித்தான். ஒத்துவரவில்லை, உதறிவிட்டான். அவ்வளவுதானே? சித்தப்பாவின் காதலை அப்படி எதிர்த்தவர்கள், சரோஜினியின் காதல் தெரிந்து அடித்தவர்கள் இன்று அவர்களிடம் நன்றாக நடக்கவில்லையா?
“உதயா? அவ்வளவுதானா?” என்று லாலாவின் குரல் பேதம் புரிந்தாலும், தன்னை இறுக்கி இருந்தவன் பிடியிலிருந்து விலகியவள்,
“அரை தூக்கத்தில எழுந்து உட்கார்ந்து அட்வைஸ் பண்ணியிருக்கேன். நாளைக்கு ரெண்டு பேரும் ஆஃபிஸ் போகணும், ஒழுங்கா தூங்குங்க” என்று அதட்டியவள் திரும்பிப் படுத்து உறங்கினாள்.
உறங்கியவளின் கையைப் பற்றிக்கொண்ட லாலாவின் முகத்தில் உதயமானது புது புன்னகை. உறைந்த புன்னகையோடு உறங்கினான்.
அடுத்த நாள் காலை அப்பாவையும் அம்மாவையும் ரயில் நிலையம் சென்று அழைத்து வந்தான்.
error: Content is protected !!