Skip to content
Post Views: 2,195
ஒரு நாள், கல்லூரி முடிந்து வீடு திரும்பினாள் மதுரா.
கீழ் வீட்டில் ஆடியோ பயங்கரமாக அலறிக் கொண்டிருந்தது!
மேலே இனியா பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பாள் இந்நேரம்.
இது என்ன இப்படி அலற விட்டுட்டு இருக்காங்க என்று கடுப்பாகி மேலே சென்றவள், வீட்டில் இனியா இல்லாததைக் கண்டு,
Advertisement
“இனியா எங்கேப்பா?” என்று அருளிடம் கேட்டாள்.
“கீழ் வீட்டு ஆண்டி கூட்டிட்டுப் போனாங்க” என்றாள் லக்கி.
“கீழ் வீட்டுக்கா எதுக்கு?” என்று கீழே போய் காலிங் பெல்லை அழுத்தினால், உள்ளே அலறிய ஆடியோ சப்தத்தில் அது கேட்கவே இல்லை!
Advertisement
எனவே வீட்டைச் சுற்றிக் கொண்டு பின் பக்க வழியே அவர்கள் வீட்டு கிச்சனுக்கு சென்றவள் அதிர்ந்தாள்.
Advertisement
அங்கு கீழே ஒரு முக்காலியில் அமர்ந்து கொண்டு முறுக்கு பிழிந்து கொண்டிருந்தாள் இனியா.
கேஸ் ஸ்டவ்வை கீழே எடுத்து வைத்துக் கொண்டு இனியா பிழிந்து தரும் முறுக்கை எண்ணெயில் போட்டு எடுத்துக் கொண்டிருந்தார் அந்த ஆண்ட்டி!
உள்ளே ஹாலில் அவரது பெண், அவள் மதுரா வயதுடைய பெண் ஆடியோவை அலற விட்டு பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, அடுத்த வீட்டுப் பெண்ணை வேலை வாங்கி கொண்டிருந்தார் அவர்!
Advertisement
மதுராவிற்கு கோபம் தலைக்கேறியது!
“இனியா..ஆ” என்று கத்தினாள்.
அக்காவைக் கண்டவுடன் மாவு கையுடன் பதறி எழுந்து இருந்தாள் இனியா.
ப்ளார்.. என்று ஓங்கி ஒரு அறை இனியாவின் கன்னத்தில்!
அந்த ஆண்ட்டி கன்னத்தைத் தடவிக் கொண்டார் பயத்தில் தன்னையறியாது!
“இங்க என்ன பண்ணிட்டு இருக்க? நாளைக்கு உனக்கு எக்ஸாம்! ஞாபகம் இருக்குல்ல?”
“இருக்குக்கா..” அவள் பயந்து போய் சொல்ல,
மதுரா முறைக்கவும் ஏதும் சொல்லாமல் அவள் பின்னே சென்றவளை,
மேலே வீட்டுக்கு போன பின்னே,
“ ஏண்டி.. இப்படி இருக்க.. இவ்வளவு இளிச்ச வாயா இருந்தா நம்மைத் தூக்கி சாப்பிட்டுட்டு போயடுவாங்கடா..
சாரி.. உன்னை அடிச்சதுக்கு.. அவங்கள அடிக்க முடியல என்னால! நீ எதுக்கு அங்க போன?”
“இல்லக்கா.. உன் அக்கா பயங்கர சிக்கனம். அந்த கைராசி உனக்கும் இருக்கும்.
நான் முறுக்கு சுடப் போறேன். நீ வந்து எண்ணெய் சட்டியில் எண்ணை மட்டும் ஊத்தி விட்டுப் போ.
அப்போ தான் பலகாரம் எண்ணெய் குடிக்காம வரும்னு சொல்லி கூட்டிட்டுப் போனாங்க அக்கா.
அங்க போன பின்னே, உனக்கு முறுக்கு பிழிய வருமான்னு கேட்டு ஒரு வாட்டி பிழிய சொல்லிட்டு,
“சூப்பரா பிழியறே இனியா. நீட்டா, ஒரே மாதிரி.. அடைசலா இல்லாம. இதெல்லாம் ஒரு கலை.
எல்லோருக்கும் வராது.
தோ.. இருக்கே தண்டம் என் பொண்ணு.
அவளுக்கு எல்லாம் வரவே வராதுன்னு சொல்லி இரண்டு மணிநேரமா உக்கார வச்சுட்டாங்க அக்கா.
கையே வலிக்குது” என்று சிவந்த அவள் கையைக் காட்டினாள் இனியா.
அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் மதுரா.
அவள் கைக்கு தைலம் தடவி விட்டு, இரவு உணவைக் கூட ஊட்டியும் விட்டாள் அந்த அன்பு அக்கா.
அடுத்த மாதமே அவர்களை காலி செய்ய சொல்லி விட்டாள்.
ஏற்கனவே நினைத்துக் கொண்டிருந்தது தான்!
ஒவ்வொரு முறை வாடகைப் பணம் கொடுக்கும் போதும் அந்த அம்மாவின் பேச்சே சரியிருக்காது.
ஏதோ, கஷ்டப்படுகிற மதுராவிற்கு பண உதவி செய்வதைப் போல இருக்கும் அவர் பேச்சு.
“நான் அங்கிள் கிட்ட சொல்லிட்டேன் மதுரா.
சம்பளம் வந்தவுடனே முதல்ல மதுராவுக்கு வாடகைப் பணம் கொடுத்துடணும்னு.
இல்லைனா அந்த பொண்ணுக்கு கஷ்டம்னு!”
மதுராவுக்கு கடுப்பாகியது.
“என்னோட பணம் கஷ்டம் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்.
மாசம் ஆனா வாடகைப் பணம் சரியா கொடுக்க வேண்டியது உங்களோட கடமை!”
“அதுவும் சரி தான். நீ என்ன வாடகைப் பணம் வாங்கி நகை நட்டா செஞ்சு போட்டுக்க போறே!
அத்தனையும் ஆசுபத்திரிக்கு தானே போவுது” என்று சபிப்பவர் போல தான் வாடகையே தருவார் அந்த பெண்மணி.
ஏற்கனவே அவர் மேல் கடுப்பில் இருந்தவள்,
இந்த திருட்டை..
பணமாக பொருளாக திருடினால் தானா? இப்படி உழைப்பைத் திருடுவதும் திருட்டு தானே!
அதுவும் எப்போது?
நாளை அவளுக்கு எக்ஸாம் இருக்குன்னு தெரிஞ்சும் அவங்க பெண்ணை டிவி பாக்க வச்சுட்டு,
ஊரான் வீட்டுப் பெண்ணை வேலை வாங்குவது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம்!
முடியாதவங்களுக்கு உதவி செய்யறது வேறே! ஆனா இவங்க மாதிரி ஆளுங்களுக்கு?”
அடுத்த மாதமே காலி செய்ய சொல்லி விட்டாள் மதுரா.
அத்தனை கடுமை காட்டாவிட்டால் அவ்வளவு தான்!
அடுத்து ஒரு குடும்பம் வீடு கேட்டு வந்து அருளிடம் அட்வான்ஸ் கொடுத்து விட்டு சென்றது.
அருளிடம் பேசியதில் அவர்கள் தூரத்து சொந்தம் என்று அறிந்த பின் வீடு இப்போ வாடகைக்கு விடல. ரேனோவேசன் செய்யப்போறோம்னு சொல்லி வாங்கிய அட்வான்ஸையே திருப்பிக் கொடுத்து விட்டாள்.
“ஏன்மா..?” என்ற அருளிடம்.
“வாடகை ஒழுங்கா வராதுப்பா. அது மட்டும் இல்லை..
அப்புறம் மாப்பிள்ளை பார்க்கிறேன் ஜாதகம் கொண்டா.. அது இதுன்னு தொல்லைகள் வேற இருக்கும்!
நமக்கு இப்ப இருக்கிற பிரச்சினைகள் போதும்” என்று தீர்மானமாய் சொல்லி விட்டாள்.
இப்படியே நாட்கள் சென்றன.
பிகாம் முடித்த பின்னே, வீட்டுக்கு அருகிலே இருந்த ஒரு நர்சிங் ஹோமில் அட்மின் ஆபிசராக வேலைக்கு சேர்ந்து விட்டாள் ஆடிட்டர் ஆத்மநாதன் சிபாரிசில்!
வேலையில் மிகவும் கறாராகவே இருந்தாள் அவளின் சுபாவத்தின் படி!
அவள் வேலையில் மிகவும் சரியாக நடந்து கொண்டதால், யாரும் ஒன்றுமே சொல்ல முடியவில்லை!
ஒழுங்காக வேலைப் பார்ப்பவர்களின் பாராட்டையும் ஓபி அடிப்பவர்களின் எதிர்ப்பையும் நிறையவே சம்பாதித்தாள் மதுரா அங்கும்.
ஒருநாள் மதுராவை லீவு கொடுக்க சொல்லி முதலாளியான டாக்டர் அம்மாவிடம் சிபாரிசுக்கு இருவர் வந்து நின்றார்கள்.
இது மாதிரியான வினோதங்கள் மதுராவிடம் மட்டுமே நடக்கும்!
வந்தவர்கள் ஏற்கனவே மதுராவிடம் பொய் சொல்லி ஏமாற்றி லீவ் எடுத்து விட்டு மாட்டிக் கொண்டவர்கள்.
அப்போது நிஜமாகவே லீவு தேவைப்பட மதுராவை அணுகவே பயந்தார்கள்!
அப்படி பயந்து போய் முதலாளி அம்மாவிடம் வந்து நிற்கையில் தான், ஆடிட்டர் ராமனாதனின் கவனத்துக்கு வந்திருந்தாள் மதுரா.
டாக்டர் தையல் நாயகியின் தம்பி அவர்.
“என்னக்கா நடக்குது இங்க? யாரு அந்த மதுரா?”
“மதுரா நம்ம ஹாஸ்பிட்டல் அட்மின்.
ரொம்ப சின்சியர்! ரொம்ப லாயல்!
ரொம்ப ஸ்ட்ரைட் ஃபார்வர்ட்!
ஒரு நாள் உங்க மாமாவையே நீங்க சொல்றது தப்பு சார்ன்னு அவர் முகத்துக்கு நேரா சொல்லிட்டா ஒரு முறை!”
“அய்யோ அப்புறம் என்னாச்சு? அவரே ரொம்ப ஈகோ பிடிச்சவராச்சே? சும்மாவா விட்டாரு அவளை?”
“அங்க தான் எனக்கும் ஒரே ஆச்சர்யம்! ஒண்ணுமே சொல்லல அவர்! அதுக்கு பதிலா,
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்”
அப்படின்னு திருக்குறள் சொல்லிட்டு, இப்படியும் நமக்கு ஆள் தேவை தான்னு சொல்லிட்டு போய்ட்டார். என்று சொல்லி சிரித்து விட்டார்.
அதன் பின் ஹாஸ்பிட்டலில் வைத்து மதுராவை சந்தித்த ராமநாதன் அவளிடம் தன் விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு அவள் நம்பரையும் வாங்கி சென்றிருந்தார்.
அடுத்து சில வருடங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் செல்ல, இனியா டிகிரி படித்து முடித்து விட்டிருந்தாள்.
ஆனால் அப்பா அருள் மொழியின் உடல்நிலை மட்டும் இத்தனை வருடங்களில் இன்னும் மோசமாகி விட்டிருந்தது!
நேரங்காலம் இல்லாமல் வயலில் வேலை செய்யும் போது, அருளிற்கு இருந்த அந்த தடை செய்யப்பட்ட பாக்கு போடும் பழக்கம், அவரை கேன்சர் நோயில் தள்ளியிருந்தது!
அவருக்கான மருத்துவ செலவுகளையும் சிக்கனமாக இருந்து தான் மதுரா சமாளித்தாள்.
தங்கைகளும் அதற்கு துணையிருந்தார்கள். அதுவும் இனியா. ரொம்பவும் நல்லப் பெண்.
அக்காவின் கஷ்டம் அறிந்து நன்கு படித்து,
அடுத்து எம்.சி.ஏ சேர சொன்ன அக்காவை மென்மையாக மறுத்து விட்டு பிஎஸ்சி படிக்கும் போதே ஒரு கேம்ஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலைக்கும் சேர்ந்து விட்டாள்.
பெங்களூர்க்கு வேலைக்கும் சென்று விட்டாள்.
ஆயிரம் பத்திரம் சொல்லியே அனுப்பி வைத்திருந்தாள் மதுரா!
அவளை அப்படியே கூட்டுக்குள் வைப்பது போல வைத்து இருக்க கூடாது என்று நினைத்தே!
கொஞ்ச நாட்களிலேயே அருளின் உடல்நிலை மிகவும் மோசமாகி இறந்து விட்டார்.
அவர் ரொம்பவும் முடியாமல் இருக்கும் போது கூடவே வந்து ஒட்டிக் கொண்டார் அருளின் தூரத்து சொந்தமான தங்கை ஒருவர்.
கணவரை இழந்த அவருக்கு ஒரே மகன்!
அவனும் அவரை மனைவியின் சொல் கேட்டுக் கொண்டு சரியாக நடத்த வில்லை.
ஒழுங்கா சாப்பாடு கூட போட மாட்டேங்கிறான் என்று இங்கு வந்து அழ,
மதுராவுக்கும் கொஞ்சம் இரக்கம் தோன்றி அவரைக் கூடவே வைத்துக் கொண்டாள் துணைக்கு என்று.
அருள் இறக்கும் வரை நன்றாக இருந்த அவர்,
அதன் பின் யாருமில்லாத பெண்கள் என்று இவர்களிடம் அதிகாரம் செலுத்த முயன்றார்.
மதுரா கேட்காத போது, அவள் சோற்றைத் தின்று விட்டே அவளையே சொந்தக்கார்களிடம் குறை கூறி வந்தார்.
“ஆயி அப்பன் இல்லாத பொண்ணுங்க.. நான் தான் கண்டிச்சு வளர்க்கணும்!” என்று இனியாவை லக்கியை அவர் இஷ்டத்துக்கு வேலைகள் ஏவவும் அதிகாரம் செய்யவும் ஆரம்பித்தார்.
அதுவில்லாமல் கை சுத்தமும் இல்லை அவரிடம்! வீட்டில் நிறைய பொருட்கள் காணாமல் போக தொடங்கின!
மதுரா அடுத்து சென்னைக்கு குடி பெயரும் போது அவரைப் பெரும்பாடு பட்டே கழற்றி விட்டு வந்தாள்.
அதன் பின், அவளே அவள் வீட்டின் தலைவி!
தாய் கோழி, தன் கோழி குஞ்சுகளைக் காப்பது போல தங்கைகளைப் பார்த்துக் கொண்டாள் மதுரா.
அப்படியே இனியாவிற்கு நல்லபடியே திருமணம் நடத்தியும் விட்டாள்.
இனியாவை வெளியூருக்கு அனுப்புவதில் இருந்த அந்த தைரியம் ஏனோ லக்கியிடம் மட்டும் அவளுக்கு இல்லாமல் போனது.
அவள் பார்வையில் அவள் இன்னமும் குழந்தை தான்!
அதனால் தான் அவள் சென்னையில் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட போது,
அவளும் டாக்டர் தையல் நாயகி மூலமே ஆடிட்டர் ராமநாதனிடம் பேசி ரேஷ்மாவிடம் பிஏ வேலைக்கு சேர்ந்தாள்.
லக்கியைப் பொறுத்தவரை எல்லாமே ரொம்பவும் ஸ்மார்ட் தான் !
பெரியா அக்கா மாதிரி வெறும் பிகாம் வேலைக்கு ஆகாது இன்றைய நிலையில்!
அதே போல இனியா அக்கா மாதிரி கோடிங் எழுதி கஷ்டப்பட்டு மண்டையை பிச்சுக்கவும் வேண்டாம் என்று சொல்லி இரண்டும் கலந்த மாதிரியான ஒரு படிப்பை தேர்வு செய்து இருந்தாள் அவள்!
B com specialization in Data Analytics!
லக்கி அவள் ஆசைப்பட்ட பிகாம் வித் ஸ்பெசலைசேசன் ஆக டேட்டா அனலிடிக்ஸ்(B com specialization in Data Analytics) எடுத்துப் படிக்கிறாள்.
அவளின் மற்றொரு ஆசையான விளையாட்டிற்கும் அவளே ஒரு ஏற்பாடு பண்ணிக் கொண்டு விட்டாள்!
வெளியூருக்கு டோர்னமென்ட் எல்லாம் விளையாட போய், திரும்பி நல்லபடியே வந்து சேரும் வரை டென்சனாக இருக்க போகும் அக்காவை எண்ணியே, அக்காவை பதற அடிக்காத வகையில் ஏற்பாடு செய்து கொண்டு விட்டாள்.
அது தான் இந்த பார்ட்டைம் ஸ்போர்ட்ஸ் ட்ரைன்ர் அவதாரம்!
லக்கியைப் பொருத்த வரை பெரிதாக கவலைக் கொள்ள தேவையில்லை என்றே இப்போதெல்லாம் ஒரு நேரம் தோன்றினாலும், ஒரு நேரம் பயமாகவும் இருந்தது அவளுக்கு!
எதுக்கு இத்தனை கவலைப்படணும்? ஒரு நாள் லக்கியின் அந்த மூத்த வயது நண்பனை, அந்த ரேவந்த்தை சந்தித்து பேசி விட்டால் போதுமே!
அந்த ரேவந்த்தை சந்திக்க போறே? ஆனா உன் ஊட்டி ரேவந்த்தை எப்போது சந்திக்க போறே அவள் உள்மனம் கேட்டது!
ச்சீ.. சும்மா இரு. அவன் எல்லாம் கல்யாணம் ஆகி செட்டில் ஆகி இருப்பான்.
சும்மா தேவையில்லாத நினைப்பு வேண்டாம் என்று மனதுக்கு சொல்லியபடி இருந்தாள்.
இத்தனை நேர பழைய நினைவுகளோடு சமையலும் முடிந்து விட்டிருக்க, பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள்.
கண்ணாடியில் அவள் நெற்றியின் நடுவே இருந்த அந்த சிறிய தழும்பு, மீண்டும் அவனின் நினைவைக் கொண்டு வந்தது!
அது அவன் கிட்டிப்புள் விளையாடும் போது தவறுதலாக அவள் நெற்றியில் உரசி விட்டு போன காயம்!
அது மட்டுமா? இன்னொரு தழும்பும் இருக்கிறது அவள் தோள் வளைவில்!
என்றைக்கும் அவனை மறக்க முடியாமல் பண்ணுவதற்கு!
என்ன.. இத்தனை வருடங்கள் இல்லாமல், இப்போது அடிக்கடி அவன் நினைவு வருகிறது?
அடிக்கடி ரேவந்த் என்ற பெயர் காதில் வந்து விழுவதாலா?
அவள் கைகள் தன்னைப் போல அந்த வார்ட்ரோப் டிராவில் இருந்த ஒரு பழைய பர்சை எடுத்து அதில் வைத்திருந்த ஒரு வோட்டர் ஐடி கார்டை எடுத்தது!
ரேவந்த் சித்தார்த்.
பழைய ப்ளாக் அண்ட் ஒயிட் படத்தில் இருபது வயது ரேவந்த் கண்களில் சிரிப்போடு இருந்தான்!
error: Content is protected !!