யுகத்தின் தலைவன் அத்தியாயம் 6
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 6
கல்யாண கொண்டாட்டம் இருவீட்டிலும் ஆரம்பமானது.திருமணத்திற்கு முந்தையநாள் மணமக்கள் இருவரும் நாள் முழுவதும் விரதம் இருப்பர்.பின் மாலை அவரவர் வீட்டு சொந்தங்கள் கூடி நலங்கு வைத்தபின் உணவு அருந்துவர். இது பட்டினி சீர் எனப்படும்.
அதன்பிறகு வீட்டில் சாமி படங்கள் முன் தீபம் ஏற்றி, பெரியவர்களிடம் ஆசி வாங்கிய பின் மாப்பிள்ளையையும் பெண்ணையும் மண்டபத்திற்கு அழைத்து வருவர்.
சிவராமன்தான் இங்கு துணை மாப்பிள்ளை. மாப்பிள்ளையான செல்வம் ஒரு பிள்ளையார் கோவிலில் தன் சொந்தங்களுடன் அமர்ந்து கொண்டார். பெண் வீட்டார் மேளதாளத்துடன் சகல மரியாதையாக மாப்பிள்ளையை அந்த கோவிலில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
Advertisement
மண்டப வாசலில் கல்யாண பெண்ணின் தங்கை ஆரத்தி தட்டுடன் ரெடியாக நின்றார்.பின் பாத பூஜை செய்து ஆரத்தி எடுத்து உள்ளே செல்ல மாப்பிள்ளை வீட்டார் தயாராக, அவர்களை பெண்ணின் தங்கை வழிமறித்து,”நாங்க எங்க அக்காவையே உங்களுக்கு தரோம், நீங்க என்ன வெறும் ஆயிரம் தட்டுல போட்டுட்டு போறீங்க, தங்க மோதிரமோ செயினோ போடுங்க அப்போதா உள்ள விடுவோம்” என வம்பிழுத்தார்.
இப்போதைக்கு இன்னொரு ஆயிரம் தரே,அப்பறோம் தங்க செயின் தரே என வாக்களிக்க சுற்றி இருந்த சொந்தங்களின் சிரிபொலியோடு உள்ளே நுழைந்தனர்.
இரவு இருவீட்டு பங்காளிகளின் முன்னிலையில் நிச்சயம் செய்து, முகூர்த்த கால் பிடிப்பது வழக்கம்.
Advertisement
சிவராமன் மச்சினனுக்கு சீர் செய்ய தன்னுடைய சம்பளத்தை வாங்கி வருவதாக கூறி தனது சைக்கிளில் சென்றார்.
Advertisement
நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.நல்ல நேரம் முடிவதற்குள் நிச்சயம் செய்ய வேண்டும் என உறவினர்கள் சொல்ல, அவிநாசியப்பன் மறுத்து விட்டார்.
எல்லாருக்கு மூக்குக்கு மேலே கோபம் வரும் சிவராமனுக்கு மட்டும் தலைக்கு மேலே கோபம் வரும். இப்பதா மலை இறங்கி வந்துருக்கான் மறுபடி எதாச்சுனா அவ்வளவுதா,பொறுமையா இருங்க துணை மாப்பிள்ளை வரட்டும் என்றார்.
நேரம் போனதே தவிர சிவராமன் திரும்பிய பாடில்லை.நல்ல நேரம் போய்விடக் கூடாது என அவிநாசியப்பனின் அண்ணன் வேறு ஒருவரை துணை மாப்பிள்ளையாக நிற்க வைத்து நிச்சயம் செய்ய ஆரம்பிக்க சிவராமன் வந்துவிட்டார்.
Advertisement
தன்னிடத்தில் இன்னொருவர் நிற்க கோபம் வந்துவிட்டது. எதுவும் பேசாது கங்காவை தூக்கிக் கொண்டு வந்து விட்டார்.
பின்னாடியே லட்சுமியும் சென்று விட்டார்.அடுத்த நாள் காலை முகூர்த்த நேரம் நெருங்க,ஒரு கூட்டம் சிவராமனை சமாதான படுத்த வீட்டிற்கு வந்தனர்.
இந்தமுறை சிவராமனின் தலையில் கிரீடத்தை லட்சுமியே வைத்து விட்டார்.அவர் வாய் திறப்பதற்குள் இவரே,” மாமா வரதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்? இவரை துணை மாப்பிள்ளைனு சொல்லிட்டு கடைசிலே இன்னொருத்தரே நிக்க வைக்கறதுக்கு எங்கள நீங்க கூப்படாமையே இருந்திருக்கலாம்” என்றார்.
வந்தவர்கள் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் இருவரும் பிடிவாதமாக திருமணத்திற்கு செல்ல மறுத்து விட்டனர்.இவர்கள் இல்லாமலே திருமணம் நடந்து முடிந்தது.
இதில் எந்த பக்கம் நியாயம் சொல்ல என யாருக்கும் தெரியவில்லை. துணை மாப்பிள்ளையாக சிவராமனை முடிவு செய்து ,பின் வேறு ஒருவரை நிற்க வைத்தவர்களையா?இல்லை தாமதமாக வந்த சிவராமனையா?இல்லை யாருக்காகவும் காத்திருக்காத காலத்தையா?சென்ற இடத்தில் சிவராமனுக்கு என்ன தாமதமோ?
உள்ளூர் அரசியல், உலக அரசியல் எல்லாம் கூட தோற்றுத்தான் போகும் சிவராமனின் குடும்ப அரசியல் முன்… வீட்டில் விஷேசம் என்றால் அதற்கு திருஷ்டி கழிப்பது போன்று ஏதாவது ஒரு குறை வேண்டுமல்லவா…
பத்திரிக்கையில் பெயர் போடவில்லை என ஒருவர் முகம் திருப்ப,காபி,” பேப்பர் கப்லே தராங்க” ஏன் சில்வர் டம்ளர் இல்லயா?என இன்னொருவர் முகம் திருப்ப,வரவங்கள வாய் நிறைய ரெண்டு கையையும் எடுத்து கும்பிட்டு வாங்கனு சொல்லனு அது என்ன ஸ்டைலோ ?வாயை கோணச்சுட்டு வாங்கனு பட்டு படாம சொல்லறதுனு ஒரு பெரிசு முகம் திருப்ப , சோறு நல்லா இல்ல குழம்பு நல்லா இல்ல என மற்றொரு பெரிசு முகம் திருப்ப… என நிறைவாய் முடிந்தால் மட்டுமே விஷேசம் முழுமையடைந்த திருப்தி தரும்.
மீண்டும் லட்சுமி தாய் வீடு செல்வது தடை பட்டது.என்னதான் கணவருக்காக தாய் வீட்டை எதிர்த்தாலும் அண்ணன் திருமணத்தை காண முடியாத வருத்தம் மனதில் ஒரு ஓரமாய் தேங்கி நின்றது.
நாட்கள் உருண்டோட பொங்கல் பண்டிகை வந்தது.லட்சுமிக்கு வீடு செல்ல ஆசை. இருந்தும் சிவராமனுக்காக எதையும் வெளியே காட்டவில்லை.
வீட்டிற்கு வெள்ளை அடித்து,சாணம் தெளித்து வண்ணப் பொடிகளால் கோலம் போட்டார் லட்சுமி .இந்த வேலைகளை ஒவ்வொன்றாக செய்ய செய்ய யாராவது தன் குடும்ப ஆட்கள் தென்படுகிறார்களா? என அவர் வீட்டு திசையை நொடிக்கு ஒருமுறை பார்த்துக் கொண்டார்.
யாரும் வருவதாக தெரியவில்லை.ஒரு பெரும் மூச்சு விட்டுக் கொண்டு உள்ளே வர,சிவராமன் கங்காவிற்கு சாம்பிராணி புகையை தலைக்கு காட்டிக் கொண்டிருந்தார்.
பின் புதுத்துணி அணிவித்து, கட்டிலில் கங்காவை படுக்க வைத்தார். நாலாபுறமும் தலையணை சுற்றி வைக்கப்பட்டது. இருவரும் பொங்கலுக்கு முறுக்கு சுட ஆரம்பித்தனர்.
சிவராமன் முறுக்கு பிழிய,லட்சுமி அதை எண்ணெயில் பொறித்து எடுத்து,ஒரு பெரிய அண்டாவில் போட்டு வைத்தார்.
என்னதான் முறுக்கு பிழிவதில் கவனம் இருந்தாலும் கங்காவை ஒரு கண் பார்த்துக் கொண்டார் சிவராமன்.
வலதுகால் பெருவிரலை வாயில் வைத்து மேலே சுற்றிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் அலங்கார பொருளை உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.
“ஆமா எங்க அண்ணன் கல்யாணத்துல எதுக்கு கங்காவை மட்டும் தூக்கிட்டு வந்தே, என்னை வான்னு ஒரு வார்த்தை சொல்லுலே” என லட்சுமி கேட்டார்.
“உன்ன வான்னு சொன்ன எங்க அண்ணன் கல்யாணத்தை பாக்க விடமாட்டிங்கறேனு ஒரு பேரு வரும். அதுவே புள்ளையை தூக்கிட்டு வந்தேனா நீ தன்னபோல வருவே, அதுமட்டுமல்ல அன்னைக்கு உங்க சின்ன அண்ணன் பணத்தை திரும்ப கொடுக்க போகும் போது நீ கங்காவை தூக்க போன நா வேண்டானு சொன்னதும் அதுக்காகத்தான்.
கங்காவை விட்டுட்டு நீ இருக்க மாட்டே” என்றார்.
“கங்காவை விட எனக்கு நீதான் வேணும். நாளைக்கு அவ வளர்ந்து பெரிசான ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்துருவோம். அவளும் போய்ருவா. ஆனா நீதான் எனக்கு கடைசி வரைக்கும் வேணும்.
நம்ம ஆயிரம் சண்டை போட்டாலும், ஒருத்தரை ஒருத்தர் விட்டுட்டு இருக்க மாட்டோம். எனக்கு எங்க அம்மா, அப்பா,கூட பிறந்தவங்க, கங்கா எல்லாரையும் விட நீதான் ஒசத்தி.
என்னைய நீ எப்படி தாங்கி பாத்துக்கறே, கோபம் வந்து அடிச்சு காயம் ஆனாலும்,அந்த காயத்துக்கு மருந்தும் நீயே போட்டு விடறே.
எங்க வீட்டுல ஆறு புள்ளைங்க எங்க அம்மாவும் அப்பாவும் எல்லாத்தையும் சரிசமமா பாத்துக்குவாங்க ஒருத்தரை கூட்டியோ குறைச்சோ பாத்துக்க மாட்டாங்க.ஆனா இங்க அப்படி இல்லையே என்னை மட்டுமே நீ முழுசா தாங்கி பாத்துக்கறே அதுவே எனக்கு போதும் என கண்களில் நீர் பெருக்கெடுக்க கூறினார் லட்சுமி.
“வீல்” என்று கத்தி கொண்டு கங்கா கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டாள். சிவராமன் பதறி அடித்துக் கொண்டு வந்து கையில் ஏந்தி மார்போடு அணைத்துக் கொண்டு அவளை ஆசுவாசப்படுத்தினார்.
இரண்டு நாட்களாகவே குப்புற விழுக எந்தி எந்தி பார்த்துக் கொண்டிருந்தவள். இன்று கட்டிலில் இருந்த தலையணையை தாண்டி கீழே குப்புற விழுந்து விட்டாள்.
ஆசை மகள் குப்புற விழுந்து விட்டாள். சிவராமன் கடைக்கு சென்று இளந்தேங்காயை வாங்கி வந்து அவள் தலைமாட்டில் சிதறு தேங்காய் உடைத்து,எல்லோருக்கும் கொடுத்தார்.
அப்படியே மாமனார் வீட்டிற்கும் ஒரு தூக்கு போசி நிறைய முறுக்கும் சிதறு தேங்காயும் எடுத்துச் சென்று கொடுத்தார்.
அதுவரை எப்போது இவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு நிஜ பொங்கல் பண்டிகை வந்துவிட்டது.
பழனியம்மாளை தவிர மற்ற அனைவரும் எடுத்துக் கொண்டனர். நான்கைந்து மாதங்கள் கழித்து இருவீட்டு சொந்தங்களும் மீண்டும் இணைந்து கொண்டது.
அன்றைய நாள் சிவராமன் வீட்டில் மட்டன்,சிக்கன்,தலைக்கறி,மீன் என அசைவ விருந்து இரு மச்சினன்களுக்கும் திருமண விருந்தாக போடப்பட்டது.
அடிக்கடி கங்காவிற்கு நலங்கியது. என்னேரமும் சினுங்கி கொண்டே இருந்தாள்.மாலை ஆறு மணி ஆனால் காலை முதல் உண்ட அனைத்தும் வாய் வழியாக வெளியே வந்துவிடும்.
ஊரில் உள்ள எல்லா ஹாஸ்பிடலும் அவளை தூக்கி அலைந்து விட்டனர். இரவெல்லாம் யாரையும் தூங்க விடுவதில்லை.இரு சித்திகளும், அத்தைகளும் மாறி மாறி தொட்டிலை ஆட்டி சலித்து விட்டனர்.
சிவராமன் கோவில் குளம் என சுற்றி ,யந்திரம் வாங்கி கட்டினார்.அதோடு குழிமேட்டு தலையை (ஒருவகை இலை) எடுத்து வந்து தலைக்கு தேய்கும் அரப்பு பொடியுடன் கலந்து குளித்துவிட ஒருவழியாக சரியானாள்.
கண்ணிற்குள் பொத்தியே கங்காவை வளர்த்து வந்தார்.
இரண்டு வருடம் வளர்ந்த கங்காவிற்கு ஒரு குட்டி தங்கை விளையாட கிடைத்து விட்டாள்.அவளை ஆசையாக தொட்டு பார்ப்பது, தலையை வருடுவது என நாளும் பொழுதும் தங்கையின் பக்கத்திலேயே கழித்தாள். “அப்பா பாப்பா எப்போ என்கூட விளையாட வருவா?”என நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.
இந்த முறை சிவராமனும்,லட்சுமியும் உஷார் ஆகி விட்டனர்.இந்த கங்காவை தாங்குன மாறி இவளையும் கைக்குள்ளையே வெச்சு வளர்த்துனோம் அவ்வளவுதான். அப்புறோம் கங்கா மாதிரி இவளும் நலங்கிட்டே இருப்பா என இரண்டாவது பிள்ளையை அவள் போக்கில் வளர்த்த திட்டமிட்டனர்.
தற்போது இரண்டாவது மகளுக்கு பெயர் வைக்க அலசல்.நல்ல நேரம்,கெட்ட நேரம், ஜாதகம், தெய்வ நம்பிக்கை இதிலெல்லாம் அதித பக்தி கொண்டவர் சிவராமன். உள்ளுர் ஜோதிடர் க,கீ,கெள வரிசையில் பெயர் வைக்க சொல்ல, எந்த பெயரும் பிடிக்கவில்லை.
லட்சுமியின் அண்ணன் அருணாசலமும், கஸ்தூரியும் “கெளசல்யா” என்ற பெயரை சொல்ல பிடித்து விட்டது அவருக்கு.இது பெயருக்கான சம்மதம் மட்டுமல்ல .அவரது திருமணத்தால் இருந்த சங்கடம் போய்விட்டதற்கான சமாதானமும் கூட என்றுதான் சொல்ல வேண்டும்.
சிவராமனின் ஆஸ்தான கோவிலில் பெயர் சூட்டு விழா நடந்தது.மதிய விருந்து முடிந்ததும் கோவிலின் முன்பு இருந்த ஆலமரத்தடியில் சொந்தங்கள் இளைப்பாற வெற்றிலை, சுண்ணாம்புடன் அமர்ந்தது கதை பேச ஆரம்பித்தனர்.
அப்போது அருகில் இருந்த, கிளிஜோதிடரிடம் அவிநாசியப்பன் மருமகனின் பெயருக்கு ஆருடம் பார்த்தார்.
கூண்டில் இருந்து வெளியே வந்த கிளி ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தது.அதை பிரித்து காட்டினார் ஜோதிடர்.
ராமபிரான் காவி உடை தரித்து வனவாசத்திற்கு செல்லும் போட்டோ வந்தது.உடன் சீதையும் இல்லை, லட்சுமணனும் இல்லை. தனியாக ராமபிரான் மட்டும் வனவாசம் செல்வது போல வந்தது. அவிநாசியப்பனுக்கு ஏதோ தவறாக நடக்க போவதாக உள்ளுணர்வு உணர்த்தியது.
— தலைவன் வருவான்.
