Skip to content
Post Views: 1,719
அத்தியாயம் 17.2
திருமணம் முடிந்து அப்பாடா என்று உட்கார முடியவில்லை மணமக்களால். வரிசையாக விருந்துக்கு சென்று வந்து கொண்டிருந்தார்கள்.
Advertisement
சௌந்தர் வீட்டின் பக்கம் அவரது அண்ணன், அக்கா, அம்மாச்சி வீடு என்று முதலில் சென்று வந்து விட்டனர்.
இன்று காலை மதுரைக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். இப்பொழுது கந்தசாமி தாத்தா வீட்டில் தான் இருக்கின்றனர். பொண்ணும் மாப்பிள்ளையும் மட்டும் அனுப்பி வைக்கிறோம் என்று மாலதி கூறியதற்கு, குடும்பமாக கிளம்பி வந்து பஞ்சாயத்தை கூட்டி விட்டனர்.
Advertisement
Advertisement
‘அது எப்படி பொண்ணு மாப்பிள்ளை மட்டும் தனியா வருவாங்க.. எல்லாரும் வரணும், சம்பந்தகாரங்க சொந்தகாரங்க எல்லாரையும் கூட்டிட்டு வரணும்’ என்று மாலதியின் அண்ணன்கள் ஒரே ஆர்ப்பாட்டம்.
உண்மையில் அவர்களது அன்பை பார்த்து பயந்து போயிருந்தான் ஹிருதய்.
Advertisement
காலை ஆறு மணிக்கு எல்லாம் பஸ் அனுப்பி வைத்திருந்தனர். ஒவ்வொருவராக கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள். முத்து, ஹிருதய், தாத்தா மூவரும் வாசலில் நின்று பேசி கொண்டிருந்தார்கள்.
“ஏன் முத்து, விருந்துக்கு பஸ் அனுப்பின முதல் ஆளுங்க உங்க மாமாங்களாத்தான் இருக்கும்” என்றான் ஹிருதய் மனைவியிடம்.
“கொஞ்சம் நல்ல பஸ்சா அனுப்பியிருக்கலாம் தயா..” என்றாள் முத்து.
“இங்க பாரு இதயா, பார்த்து சூதனமா இருக்கணும் அங்க.. எல்லாம் கிறுக்கு பயலுக.. கொஞ்சம் அசந்தோம் அம்புட்டுதேன்” என்று தன் சிஷ்யனை நூறாவது முறையாக எச்சரித்தார் கந்தசாமி.
உஃப்.. உஃப்… என்று ஒரு சத்தம் பின்னிருந்து கேட்டது.
“என்ன முத்து எதோ அனல் காத்து அடிக்கிற சத்தம் கேக்குது” என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்தார் கந்தசாமி.
அங்கே மாலதி தான் நின்று கோவமாக இவரை முறைத்து கொண்டிருந்தார்.
“ஆத்தி கணக்கு டீச்சரு..”
“என்னடி நின்னுட்டே இருக்கீங்க, நேரமாச்சு போய் வண்டியில ஏறுங்க”
என்றார் கடுப்பாக.
இவர்கள் வீட்டில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு, அப்படியே செல்லும் வழியில் பூம்பாவை வீட்டில் நிறுத்தி அங்கேயும் அனைவரையும் ஏற்றி கொண்டார்கள். அடுத்து கார்மேகம் தாத்தா வீட்டில் அவர்களையும் ஏற்றி கொண்டார்கள்.
அடுத்து அங்கங்கே நிப்பாட்டி அவர்களது உறவுக்கார்களை ஏற்றிக்கொண்டு சென்றது பேருந்து.
“என்ன மிருது இது டவுன் பஸ் மாதிரி நிப்பாட்டி நிப்பாட்டி ஆளை ஏத்துறாங்க” என்றார் சிவங்கரி மிருதுளாவிடம்.
“சும்மா இரும்மா.. யாராவது கேட்டா தப்பா நினைக்க போறாங்க.. அவங்களுக்கு அவ்வளவு சொந்தக்காரங்க இருக்காங்க.. என்ன செய்றது?” என்றார் மிருதுளா மெல்ல.
“நம்ம ப்ரதம்க்கு ஆச்சும் சிட்டில இருக்க பொண்ணா பார்க்கணும்.. அப்பப்பா என்ன கும்பல்?”
“ப்ளீஸ் ம்மா சும்மா இரு” என்றார் மிருதுளா. அவருக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் அம்மாவை திரும்ப வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று ஒரே டென்ஷன்.
“ஹாசினி, நீங்க எல்லாம் மட்டும் இங்க இப்படி ஜாலியா இருக்கீங்க. நான் மட்டும் சென்னைக்கு போகணுமேன்னு இருக்கு” என்றான் ப்ரதமேஷ்.
“இதுக்கு எல்லாம் எதுக்கு ப்ரோ கவலை படறீங்க? நீங்களும் பேசாம இங்கேயே வேலை தேடிகிட்டு வந்துடுங்க” என்றான் ப்ரேம் இலகுவாக.
“அப்படியா சொல்ற? பார்ப்போம்” என்றான் ப்ரதம்.
“நீங்க வர்றது இருக்கட்டும், இப்ப அக்காவும் அத்தானும் என்ன பண்ணுவாங்க? அத்தான் சென்னை போவாங்களா? இல்ல அக்கா இங்கன வருவாளா?” என்றாள் ரம்யா.
“இது ஒரு நல்ல கேள்வி” என்றான் ப்ரதமேஷ்.
மூவரும் அவனையே பார்க்கவும், “நல்ல கேள்விக்கு எல்லாம் நாட்டுல பதில் இருக்காது ப்பா.. சும்மா மொக்கை போடாம வேற எதாவது பேசுங்க” என்றான்.
சிறியவர்கள் அனைவரும் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு அரட்டை அடித்து கொண்டு வந்தனர்.
அனைவர் மனதில் இந்த கேள்வி இருக்கத்தான் செய்தது. ஆனாலும் பிள்ளைகளே முடிவு செய்யட்டும் என்று அமைதி காத்தனர்.
———————
மாலதியின் அம்மா வீட்டில் ஏக வரவேற்பு இவர்களுக்கு.
“அனைவரும் காபி குடிச்சிட்டு மீனாட்சி அம்மனை கும்பிட்டு வந்துடுங்க.. ஏன்னா, அப்புறம் கவிச்சி சாப்பிட்டதும் போக முடியாதுல்ல?” என்று கூறி மறுபடியும் அவர்களை கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.
“உலகத்துல கோவிலுக்கு போக இப்படி ஒரு காரணத்தை சொல்றது இவைங்களா தான் இருக்கும்” என்றார் கந்தசாமி முத்துவிடம்.
இவர்களுக்காக அன்று சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கண்குளிர மீனாட்சி அம்மனை தரிசித்திவிட்டு வந்தனர்.
காலையிலே இட்லி நண்டு குழம்பு, இடியாப்பம் பாயா, கொத்து பரோட்டா, ஊத்தப்பம் கோழி குழம்பு என்று அசத்தி இருந்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டினர் உணவிற்கு அமருவதற்கு முன்பே மிரண்டு விட்டனர்.
ஹாசினி அண்ணனிடம், “அண்ணா, எப்படிண்ணா காலையில இவ்வளவு சாப்பிட முடியும்?” என்றாள் பாவமாக. அவனுக்கும் அதே எண்ணம் தான்.
இவர்களை பார்த்த முத்துவிற்கு கொஞ்சம் பாவமாக இருந்தது. அவள் மாலதியின் அப்பாவிடம் சென்று “அய்யா, இவங்க எல்லாம் காலையில இவ்வளவு நான் வெஜ் சாப்பிட மாட்டாங்க போல.. அதுவும் இப்படி எல்லாரும் சுத்தி முறைச்சிகிட்டு நின்னா எப்படி சாப்பிடுவாங்க? ஏதாவது செய்யுங்க” என்று கூறி சத்தமின்றி வந்து அமர்ந்துகொண்டாள்.
பாசக்கார மாமன்கள் பரிமாறுவதற்காக நின்றுகொண்டிருந்தார்கள்.
“இம்புட்டு பேர் நின்னா, எப்படி ? நீங்க எல்லாம் உட்காருங்க .. மருமகள்ங்க பரிமாறுவாங்க” என்றார் அவர் அதட்டலாக.
“இல்லப்பா நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க.. நாங்க கவனிக்கணும் இல்ல” என்றார் மூத்த அண்ணன்.
“ஒன்னும் தேவை இல்லை.. போங்க போய் உட்காருங்க..”
அதன் பிறகு அவர் மேற்பார்வையில், இவர்களுக்கு தேவையானதை பார்த்து பக்குவமாக பரிமாறச் செய்தார்.
மருமகளின் இந்த செயல் பூம்பாவைக்கு மிகவும் பிடித்திருந்தது. “நம்ம மனநிலையையும் புரிஞ்சு சூழ்நிலையை பக்குவமா கையாள்ற இல்லங்க” என்றார் ஸ்ரீகாந்த்திடம்.
“ஆமா ஹனி..” என்றார் அவரும் பெருமையாக.
சௌந்தரும் மாலதியும் உறவினர்களை கவனித்து அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வப்பொழுது இவர்களிடமும் வந்து எதாவது தேவையா என்று பார்த்து கொண்டார்கள்.
மாலதியின் அம்மா சிவங்கரியிடம் நல்ல உறவை ஏற்படுத்தி கொள்ள அவரை சிறப்பாக கவனித்து கொண்டார். அனைவரிடமும் அவரை தனியாக அறிமுக படுத்தி வைத்தார். அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு கவனிக்கவும், சிவங்கரிக்கே மனம் குளிர்ந்து தான் போனது.
சிறியவர்கள் அனைவரும் தனியே மாடிக்கு சென்று விட்டனர். அங்கே கார்ட்ஸ் , கேம்ஸ் என்று நேரம் சென்றது. மணமக்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.
முத்துவின் பெரிய மாமாவிற்கு இரண்டு மகன்கள். இரண்டாவது அண்ணனுக்கு ஒரு மகள் ஒரு மகன். அனைவரும் பள்ளியில் தான் இருக்கிறார்கள். அதே போல மற்ற மாமாவின் பிள்ளைகள் எல்லாம் சிறியவர்களே.
டாக்டர் மாமா மருதுவின் மனைவியும் டாக்டர். அவரது அக்கா குடும்பமும் வந்திருந்தார்கள். அவர்களும் டாக்டர்களே. அவர்களுக்கு இரண்டு மகள்கள். பெரியவள் வெளிநாட்டில் எம்.எஸ் படித்து கொண்டிருக்கிறாள். சின்னவள் சுசீலா இவர்களுடன் மாடிக்கு வந்திருந்தாள்.
அவள் ரொம்ப நேரமாக முத்துவிடம் பேச முயற்சி செய்துகொண்டிருக்கிறது அனைவருக்குமே தெரிந்தது. ஆனால் முத்துவோ கண்டு கொள்ளவே இல்லை.
“ரம்யா, யாரு அது, அவங்க அண்ணி பின்னாடியே சுத்திட்டு இருக்காங்களே?” என்றாள் ஹாசினி ரம்யாவிடம்.
“அவங்க சுசீலா அக்கா. அந்த அக்கா ரொம்ப நல்லா படிப்பாங்க ஹாசி.. அவங்க வீட்ல எல்லாருமே டாக்டர்ஸ். இவங்களையும் கண்டிப்பாக டாக்டர் படிக்கணும்னு சொல்லிட்டாங்க. ஆனா இவங்களுக்கு பிடிக்கலை.”
“ஓ..”
“அவங்களும் தஞ்சாவூர் தான். அக்காவும் அவங்களும் கிளாஸ்மேட்ஸ், எப்படி டாக்டர் படிக்காம தப்பிக்கிறதுன்னு வருத்தமா எங்க அக்கா கிட்ட கேட்டிருக்காங்க. எங்க அக்கா ஒரு ஐடியா கொடுத்தா.. நம்ம படிக்கிறது நமக்கு தெரியும்.. நீ அம்பது மார்க்குக்கு மட்டும் எக்ஸாம் எழுது போதும்னு”
“அச்சச்சோ, இப்படி யாராவது செய்வாங்களா?”
“அப்புறம் என்னாச்சுன்னு கேளு”
“என்னாச்சு?”
“அந்த அக்காவும் ஜஸ்ட் பாஸ் ஆனாங்க.. அவங்க வீட்ல எல்லாரும் திட்டி, உண்மையா சொல்லு ஏன் இப்படி மார்க் வந்துச்சுன்னு மிரட்டவும், பயந்து எங்க அக்கா ஐடியான்னு போட்டு கொடுத்துட்டாங்க..”
“அச்சச்சோ. அப்புறம்?”
“அப்புறம் என்ன, அன்னைக்கு எங்க அம்மாவும் அப்பத்தாவும் எங்க அக்காவை ஓட ஓட அடி வெளுத்துட்டாங்க.. அதுக்கப்புறம் எங்க அக்கா அவங்க கூட பேசுறது இல்ல.. அதான் எங்க அக்கா பின்னாடியே சுத்திட்டு இருக்காங்க..”
“அவங்க செஞ்சதும் தப்பு தானே?” என்றாள் ஹாசினி.
“அவங்க பொய் சொல்லலையே, பயத்துல உளறிட்டாங்க…அடி வாங்கறது எல்லாம் எங்க அக்காவுக்கு தூசி மாதிரி.. நான் கூட பாவம் பேசுன்னு சொல்லி பார்த்தேன்..
அக்காவுக்கு கோவம் வராது. வந்தா இப்படித்தான்..”
“இப்ப என்ன செய்றாங்க?”
“அவங்க இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கிறாங்க..”
ரம்யாவும் ஹாசினியும் பேசுவதை ப்ரதமேஷும் கேட்டுக்கொண்டிருந்தான்.
அதன் பின்னே சுசீலாவை கவனித்து பார்த்தான்.
பார்த்தும் சுசீலாவின் முகம் அவனை கவர்ந்தது. அவளுக்கு உதவி செய்யலாம் என்று முத்துவிடம் சென்று பேசி பல்ப் வாங்கி வந்தான்.
ஹிருதய் முத்துவிடம் என்ன விஷயம் என்று கேட்டு, “தப்புன்னு தெரிஞ்சு சாரி கேக்குறாங்க.. உன்னை சமாதான படுத்த தானே திரும்ப திரும்ப வராங்க. அவங்களும் வேணும்னே செய்யல, அந்த வயசுல ஒரு பயத்துல தானே உளறி இருக்காங்க.. என்னை கேட்டா, நீ அவங்க கூட பேசலாம்ன்னு தான் தோணுது.“ என்றான் மெல்ல. அவனது குரல் அவ்வளவு மிருதுவாக இருந்தது. அந்த குரலிலே முத்து மயங்கினாள் என்பது தான் நிஜம்.
இருந்தாலும் கெத்தை விடாமல்,“கல்யாணம் ஆனதும் முதல் முதலா ஒரு விஷயம் சொல்றீங்க.. எனக்கும் கேட்கணும்னு தோணுது.. ஆனா எல்லா விஷயத்துலயும் நீங்க சொல்றதை கேட்பேன்னு நினைக்க கூடாது.. சரியா?” என்று கூறி, சுசீலாவிடம் சென்று பேசினாள்.
ஓகேவா என்று கணவனிடம் ஒற்றை புருவத்தை தூக்கி செய்கையாலே கேட்டாள்.
ஹிருதய் சந்தோசம் என்று கண்களாலே பதில் கூறி, மனைவியை பார்த்து மந்தகாசமாக ஒரு சிரிப்பு சிரித்தான்.
ஒரு சின்ன சிரிப்பு தன்னை இவ்வளவு பாதிக்குமா? என்று ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கே
வைத்த கண் வாங்காமல் ஹிருதய்யையே பார்த்து கொண்டிருந்தாள்.
மனைவியின் பார்வையில் ஹிருதய்க்கு மிகவும் லஜ்ஜையாக இருந்தது. அவன் முகமே சிவந்து விட்டது.
அது மேலும் அவனுக்கு ஒரு தேஜஸ்ஸை கொடுத்தது. அதன் பிறகு முத்துவால் தன பார்வையை திருப்பவே முடியவில்லை.
“அடிக்கிற வெய்யிலும், இவங்க விடற ஜொல்லுல நாம மூழ்கி போய்டுவோம் போலயே? சுத்தி சின்ன பிள்ளைகளா வேற இருக்குது, வாங்க எல்லாரையும் கீழே கூட்டிட்டு போகலாம்” என்றான் ப்ரதமேஷ் சுசீலாவிடம்.
அவளுக்கு முத்து தன்னிடம் பேசியதே மிகவும் மகிழ்ச்சி. அதனால் நல்ல மன நிலையிலே இருந்தாள்.
“கீழே ஜிகர்தண்டா கொடுக்கிறாங்களாம், வாங்க கீழே போகலாம்” என்று அனைவரையும் கீழே அழைத்து கொண்டு சென்றனர் ப்ரதமேஷும் சுசீலாவும்.
மீண்டும் மதிய உணவை முடித்துக்கொண்டு, நிறைந்த மனதுடன் அனைவரும் பஸ்சில் ஊர் திரும்பினார்கள்.
—————-
error: Content is protected !!