Skip to content
Post Views: 1,811
நதி 32
“யமுனா பால எடுத்துட்டு போய் சாமி படத்துக்கு முன்னாடி வை.. தீனா தேங்காய் உடச்சு பூஜைய பண்ணு..” என வாணி ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டிருக்க,
Advertisement
அதன் படி செய்த தீனா, தீபாராதனை காட்ட.. அங்கிருந்த அனைத்து நல் உள்ளங்களின் வேண்டுதலும், ‘இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் இவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்..’ என்பதே.
“யமுனா, போய் டம்ளர் எடுத்துட்டு வந்து இந்த பால ஊத்தி எல்லாருக்கும் கொடு.. பசங்க பாத்துட்டு இருக்காங்க பாரு..” என்றதும் பாலை ஊற்றி எடுத்தவள் அதை சகுந்தலாவிற்கும், ஜெகதீஷூக்கும் கொடுக்கும் போது அவ்வளவு தவித்து போனாள்.
Advertisement
Advertisement
அவர்கள் இயல்பாக இருந்தாலும், ‘எல்லாம் என்னால் தானே..! நான் அவரிடம் எதிர்த்து பேசாமல் இருந்திருந்தால் இப்படி ஒன்று நடக்காமல் போயிருக்குமோ..?
ஒரு செயலை செய்யும் முன் அதன் பின் விளைவை யோசித்து செய்.. என தயா சொன்னதை நான் இவர் விசயத்தில் கேட்காததால் தான் இதெல்லாமுமா.?’ என்ற குற்ற உணர்வு அவ்விருவரையும் பார்க்கும் போதெல்லாம் அவளை ஆட்டுவிக்கிறதே..
Advertisement
அதனாலேயே அந்த பார்வை. அது அங்கிருந்தவர்களுக்கு புரியும் என்பதால் அதை கண்டு கொள்ளவில்லை யாரும்.
பாலை குடித்த தங்கமணி தம்பதிகள், “தீனா, நாங்க கிளம்பறோம். இன்னைக்கே வேலைக்கு வர்றேன்னு வந்து நிக்காத.. இங்க என்ன வேணுமுன்னு பாத்து பண்ணு..” என சொல்ல,
“அண்ணே, டிப்பனுக்கு சொல்லியிருக்கு.. சாப்பிட்டு போங்க..” என வற்புறுத்தி சாப்பிட வைத்தே அனுப்பினான்.
அவர்கள் சென்றதும் வாணியின் யோசனை படி இங்கு வந்து வாங்கிய எலக்ட்ரிக் பொருட்களையும், ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த கட்டில், பீரோ போன்றவற்றை ஒழுங்கு படுத்த துவங்கினர் தீனா மற்றும் சக்தி இருவரும்.
சமையல் செய்ய தேவையானதை
யமுனாவிற்கு பொருட்களை எடுக்க வாகாக அவளையே அடுக்க சொன்ன வாணி, பொருட்களை எடுத்து கொடுக்க நின்றார்.
பிள்ளைகள் இருவரும் ஒரு அறையில் அவர்களுக்கான உலகில் மூழ்கியிருந்தனர்.
இந்த வேலையெல்லாம் முடிக்கும் போது மதிய உணவு வேளை நெருங்கியிருக்க, “மாமா, போய் சாப்பாடு எடுத்துட்டு வந்திடுறேன்..” என கிளம்பியவனை தடுத்த வாணி,
“ஏன்டா, இருக்கற ரெண்டு ஊட்டு ஆளுங்களுக்கு போய் வாங்கி தான் சாப்பிடனுமா..? ஆளுக்கு ஒரு வேலைன்னு செஞ்சா அரமணி நேரத்துல சோறு ஆகிடப்போவுது..” என்றுவிட பெண்கள் மதிய சமையலில் மூழ்கினர்.
சகுந்தலா சமைக்க தேவையான காய்கறிகள் வெங்காயம் அனைத்தையும் வெட்டி கொடுக்க.. சொன்னது போலவே அரை மணி நேரத்தில் சமையல் முடிந்து அனைவரும் உண்டு ஓய்வுக்கென அமர்ந்தனர்.
“யமுனா காலைல நேரமே தம்பியும் நீயும் பால் காய்ச்ச ஏற்பாடு செய்யன்னு முன்னே வந்தது அலுப்பா இருக்குமில்ல.. நீ போய் உள்ள சித்த நேரம் தூங்கு..” என வாணி சொல்ல,
“பரவாயில்ல அண்ணி இங்கையே இருக்கேன்..” என சொன்னவள், பார்வை முழுவதும் சகுந்தலாவிடமே.
அவளின் நிலையை உணர்ந்த சகுந்தலா, ‘நாம இங்கன இருந்தா அவ அவ வாழ்க்கைய பாக்க மாட்டா..’ என நினைத்தவர்,
“சக்தி வெயிலு தாழ கிளம்பினா ராவுக்கு ஊட்டுக்கு போயிடலாமில்ல..?” என்றிட,
அவசரமாக இடையிட்ட யமுனா, “கிளம்பறீங்களா..! அதுக்குள்ளவா..? ஏன்..?” என்றாள் ஒரு வித தயக்கத்தோடு.
“கிளம்பாம இங்கே இருந்து என்ன செய்ய யமுனா..? பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு. அவருக்கு மில்லுக்கு போகனும்..” என வாணி சொல்ல,
“ஒரு ரெண்டு நாள் இருக்கலாமே.. அண்ணி..” என்றாள் தயங்கி.
“ரெண்டு நாள் கழிச்சும் போய் தானே ஆகனும்டா. பசங்களுக்கு லீவு விட்டா அடுத்த நாளே இங்க இருப்போம்.. சரியா..?” என்ற வாணி,
அறைக்குள் அவளோடு இருந்த நேரம், “இது உங்களுக்கான வாழ்க்கை.. இத மட்டும் மனசுல தெளிவா பதிய வச்சிட்டு சந்தோஷமா வாழுங்க..
இப்போ உனக்கு இருக்கற குற்ற உணர்ச்சி தேவையே இல்ல.
சித்தி அன்னைக்கு சொன்னத கேட்ட தானே..?” என்றதும் மனக்கண்ணில் அன்று சகுந்தலா,
“அவ உயிரோட இருந்தாக்க என்னையு ஒரு நா என்ற புள்ள கூட இண கூட்டி பேசினாலும் பேசிப்புடுவான்.. அவ செத்து ஒழிஞ்சதுல எனக்கு எந்த வெசனமும் இல்ல..
இனியாச்சும் என்ற புள்ளங்க எல்லா நிம்மதியா வாழ்ந்தா அதுவே போதுங்கண்ணு..” என்றது நினைவில் எழுந்தடங்கியது.
“அவுங்களே அந்த ஆள நினச்சு ஃபீல் பண்ணாதப்போ நீயேன் அதையே கட்டிக்கிட்டு அழறே..?
அவனுக்கு இவ்வளவு சீக்கிரமா நல்ல சாவு வந்துடுச்சேன்னு நானே வெசனத்துல இருக்கேன்..
என்னோட அம்மா, “அய்யோ எரியுதே..” ன்னு அன்னைக்கு என் கண்ணு முன்னாடி கதறின சத்தம் இன்னும் என் காதுல ஒலிக்குது யமுனா.
அது ஒரு விபத்து. எதிர்பாராத விதமா நடந்து போச்சு ன்னு இருந்த வரை தெரியல..
இப்போ அவுங்க சாவ காரணம் என்னன்னு தெரியும் போது இருக்கற வலி..
தீனா சொன்ன மாதிரி அது காலத்துக்கும் போவாது.. என்ன செய்ய.. அதையும் கடந்து தானே நம்ம வாழ்க்கைய பார்க்க வேண்டி இருக்கு..
உனக்கு நா சொல்றது ஒண்ணே ஒண்ணு தான்.. இதுவரை நடந்தது எல்லாமே முடுஞ்சு போனது.. அத தோண்டி எடுத்து அதுக்கு யாரு காரணமுன்னு நோண்டினா நமக்கு தான் வலி மிஞ்சும்.
அத கெடப்புல போட்டுட்டு நீயும் சந்தோஷமா இரு.. என்ற தம்பியையும் சந்தோஷமா வச்சுக்கோ.. எனக்கு தேவ அது மட்டுந்தான்..” என்றிட,
சரியென தலையசைப்பதை தாண்டி வேறென்ன செய்ய முடியும் அவளால்.
கிளம்பும் நேரம் வந்ததும் பாலமுரளி வழக்கம் போல, “மாமா கூத.. அத்தே வேணு..” என அழுது ஆர்ப்பாட்டம் செய்ய.. அவனை ஒரு வழியாய் சரி கட்டி காரில் ஏற்றுவதற்குள் போதும் போதுமென்றானது.
அது கூட.. தீனா அவனை அழைத்து சென்று அருகே இருந்த கடையில் அவனுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி கொடுத்து,
“உனக்கு ஸ்கூல் லீவ் விட்டா இங்கே வந்திடு.. ரொம்ப நாள் அத்த கூட இருக்கலாம்..” என சொன்னதால் மட்டுமே கிளம்பியிருந்தான் அந்த பெரிய மனிதன்.
“போயிட்டு வர்றேன் ண்ணா..” என வந்து நின்ற தம்பியின் தலையை வாஞ்சையாய் கோத பளிச்சென்ற புன்னகையை தந்த ஜெகதீஷ்
“அண்ணா ஃபீல் பண்ணாதீங்க. எனக்கு லீவ் விட்டா உடனே இங்கே வந்துடுவேன்..” என்றிட,
“நானூ குத்தி மாமா..” என அதிலும் போட்டிக்கு வந்தான் பாலா.
“சரிடா. ரெண்டு பேரும் சேந்தே வரலாம்..” என சொல்ல, குஷியாய் தலையாட்டிய பிள்ளை தாயோடு சேர்ந்து கொள்ள,
“அண்ணி, எங்க அண்ணன பத்திரமா பார்த்துக்கோங்க..” என்ற ஜெகதீஷை கண்டு கண்கள் கலங்கியது யமுனாவிற்கு.
இதுவரை தாய் வீட்டு உறவுக்கு மாற்றாய்.. தன்னை தேற்றிய பிள்ளை.. இனி தன்னோடு இல்லை என்பது ஒரு பக்கம்..
தனக்காக தானே தன் அண்ணனை விட்டுக்கொடுத்து போகிறான் இவன்.. என்ற வேதனை ஒரு பக்கம்.
அதிலிருந்து மீளாமலேயே தலையாட்டியவளை எப்போதும் போல லேசாக அணைத்து விடுவித்த ஜெகதீஷ், “வர்றேன்..” என்றுவிட்டு கிளம்பியிருந்தான்.
சகுந்தலாவும் முறையாக விடைபெற்று செல்ல.. வழியனுப்பிய இருவருக்கும் நெஞ்சத்தில் ஒரு சிறு வலி உண்டானது என்னவோ உண்மை.
****
வாடகைக்கு பிடித்திருந்த காரில் ஏறிய சகுந்தலாவிற்கு ஜெயசீலன் இறந்த போது நடந்த அனைத்தும் கண் முன் உலா போனது.
ஜெயசீலனின் இறப்பு அப்படி ஒன்றும் கவலையையோ.. வேதனையையோ.. அந்த குடும்பத்தில் யாருக்கும் அளித்திருக்கவில்லை.
நரகாசுரன் அழிந்தான்.. என கொண்டாடும் தீபாவளி பண்டிகை போலான மகிழ்ச்சியையும் தந்துவிட வில்லை.
அந்த மனிதனின் வார்த்தைகளால் மனதின் உண்டான காயத்தின் வடுக்கள் காலத்துக்கும் உள்ளே குத்திக்கொண்டிருக்க.. எங்கிருந்து கொண்டாடும் எண்ணம் வரும்.
அந்த மனிதருக்கு கொள்ளி போடக்கூட வாணி தீனாவை விடவில்லை.
“ஜெகாவும் செய்ய வேணாம் மாமா..” என சக்தியிடம் வாணி அழுகையோடு சொல்ல,
அவளின் வலி உணர்ந்தவன்.. போஸ்ட்மார்ட்டம் முடித்து கொடுத்ததும் நேரடியாக மின் மயானத்திற்கு கொண்டு சென்று, எந்த சடங்குமின்றி தகனத்திற்கு அனுப்பியிருந்தான் அவர் உடலை.
ஒன்றுக்கு இரு ஆண் வாரிசு இருந்தும் அநாதை பிணமாய் எரிந்து சாம்பலாய் போனது அந்த உடல்.
ஒரு மனிதன் வாழும் வாழ்வு எப்படியானது என்பது அவனின் இறப்பில் கிடைக்கும் மரியாதையே தீர்மானிக்கும்.
சொந்த ரத்த உறவுகள் கூட கண்ணீரை சிந்தாத ஒருவரின் இறுதி.. அதை விட வேறு என்ன தண்டனை அவனுக்கு கிட்டிட முடியும்.
உறவுகளின் சொல்லிற்காக மட்டும் சில சடங்குகளை சகுந்தலாவிற்கு செய்ய வைத்த சக்தி, ‘வேறு எதுவும் வேண்டாம்..’ என்றுவிட, சிறு சலசலப்பு எழுந்த போதும் அதை கண்டு கொள்ள தான் ஆட்கள் இல்லை.
நாட்கள் நகர்ந்து வாரங்கள்.. மாதங்கள்.. என்றாக ஒரு நாள் நள்ளிரவில் அவசர தேவைக்காக எழுந்து வந்த சகுந்தலாவின் காதில் யமுனாவின் அழுகை சத்தம் நன்றாக விழுந்தது.
“ஏ இந்த புள்ள இப்புடி அழுகுது..? உடம்புக்கு எதாச்சும் பண்ணுதா..?” என்ற எண்ணத்தோடு நின்றவரின் காதில் விழுந்த வார்த்தையில் எடுத்த முடிவே இந்த தனிக்குடித்தனம்.
“நா வேணாம் தயா உங்களுக்கு.. நீங்க விலகி போனப்போ கட்டாயப்படுத்தி உங்கள கட்டிக்கிட்டு.. இப்போ உங்கள இப்படி பட்டினி போட்டு வச்சிருக்கேன். நா உங்களுக்கு வேண்டாம்..” என்றவளின் கதறலுக்கு,
“பாப்பா இங்கே பாரு.. உன்னைய வருத்திட்டு அப்படி எனக்கு எந்த தேவையும் பூர்த்தி ஆக வேண்டாம்..” என தீனா சமாதானம் செய்ய,
“எத்தன நாள் தயா..? நாளில்ல மாசமே போச்சு..!
ஆனா, அவரு சொன்ன வார்த்தைங்க என்னை என்னமோ பண்ணுதே..!
நீங்க.. இந்த வீட்டுல இருக்கும் போது கிட்ட வந்தாலே.. அந்த மனுஷன் எங்கையோ நின்னு வக்ரமா பார்க்கற மாதிரி.. சிரிக்கிற மாதிரி இருக்கு..
எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு போல.. இல்லாத உருவத்தை இருக்கறதா நினச்சு நானும் வேதனை பட்டு உங்களையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்..
இந்த வீட்டுல இருக்கற வரை நா உங்களுக்கு நல்ல பொண்டாட்டியா இருக்க முடியுமுன்னு தோணல..
உன் கண்ணுல தண்ணீ வந்தா நா இந்த வாழ்க்கையில தோத்துட்டதா அர்த்தமுன்னு சொன்ன உங்க வார்த்தைய காப்பாத்தாம தினம் தினம் உங்கள கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்.
இப்படி அழுகையோட உங்கள திருப்தியும் படுத்த முடியாம இருந்து.. ஏதோ ஒரு கட்டத்துல உங்க வெறுப்பை சம்பாதிக்கறதுக்கு இப்பவே நா விலகி போறேன்..
நம்ம அந்தரங்கத்த அத்தன தூரம் கவனிச்சு பேசின வார்த்தை எப்பவுமே என்னை உங்ககிட்ட நெருங்க விடாது போல.
இதுக்கும் முன்னே எப்படியோ இப்போ அவங்க ரெண்டு பேரோட பொறுப்பும் நம்மகிட்ட.. அவங்கள தனியா விட்டுட்டு போக முடியாது..
அதனால தான் சொல்றேன்.. நா உங்களுக்கு வேணாம்..” என அவளின் புலம்பலும், தீனாவின் பரிவான ஆறுதலும் என அவர்கள் சம்பாஷணை தொடர,
அதற்கு மேல் அங்கு நின்று அதை கேட்க முடியாமல் அறைக்குள் வந்தவருக்கு அன்றைய தூக்கம் தூரம் போனது.
error: Content is protected !!