Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 9

அத்தியாயம் : 9

​வைத்தியசாலைக்குக் கிளம்பும்போது மிகுந்த உற்சாகத்தோடு வந்தவள், இப்போது எதுவுமே பேசத் தோன்றாமல் ஒருவித அமைதியோடு வருவதைக் கண்டு செல்வா வருந்தினான். ‘அவசரப்பட்டு உண்மையைச் சொல்லி விட்டோமோ?’ என்ற எண்ணம் அவனை வாட்டியது. இவளை இப்படியே கொண்டு போய் வீட்டில் விட்டால், இதையே நினைத்துக் கொண்டு மனவேதனைப்படுவாள்; ஒருகட்டத்தில் இந்த ஊரில் வசிப்பதற்கே அவளுக்கு விருப்பம் இல்லாமலும் போகலாம் என்று அவனது ஆழ்மனம் எச்சரித்தது. நிலைமையைப் புரிந்துகொண்டு, தன் கைப்பேசியை எடுத்து யாரிடமோ சுருக்கமாகப் பேசிவிட்டு அவளிடம் திரும்பினான்.

​“ஹாய் ஆனந்தி, கொஞ்சம் இருட்டிடுச்சு. இனி வயல்காட்டு வழியா நடந்து போக முடியாது. என் பைக் எடுத்துட்டு நம்ம ரெண்டு பேரும் அதிலேயே போயிடலாம்” என்றான்.

​அவள் “ம்ம்…” என்று மட்டும் பதிலளித்தாள். மறுபடியும் அவளது பேச்சு குறைந்து விட்டதை அவன் உணர்ந்தான். கவலையைச் சுமந்து வரும் அவளைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, நேராக ஒரு வீட்டிற்கு முன்பாக வந்து நிறுத்தினான்.



Advertisement

​அங்கு ஒரு பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனந்தி விழிகள் விரிய ஆச்சரியத்துடன் வெளியே பார்த்தபடி இருக்க, அங்கிருந்த சிறுமிகள் அனைவரும் அவளைக் கண்டதும் ஓடி வந்து சுற்றிக் கொண்டனர்.

​மெல்லிய இசை ஒலிக்க, “முகுந்தா முகுந்தா…” பாடலுக்கு அவர்கள் நடனமாடத் தொடங்க, ஆனந்தியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்தச் சிறுமிகள் ஒவ்வொருவரும் ஆடும் அழகை அவள் இமைக்காமல் ரசித்தாள். செல்வா மெல்ல அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஒரு நாற்காலியில் அமர வைத்தான்.

வீட்டிற்குள் நுழைந்த ஆனந்தியை அங்கிருந்த அனைவரும் வியப்புடன் பார்த்தனர். வெளியூரில் வசித்து வந்தாலும், தங்களைப் போலவே உடை அணிந்து, தெய்வாம்சக் கலையுடன், முகத்தில் வசீகரம் பொருந்தி, அடக்கமே உருவாக அவள் அமைதியுடன் இருப்பதைக் கண்டபோது, அம்மன் திருவுருவமே நேரில் நடந்து வந்து அங்கு அமர்ந்திருப்பதைப்போல அவர்களுக்குத் தோன்றியது. அவளது அந்தத் தோற்றம் அவர்களை அப்படியே கட்டிப்போட்டது.

Advertisement

​செல்வாவின் பேச்சுக்கு அவள் மென்மையாகத் தலையசைப்பதைக் கண்டதும், தாங்களும் அவளிடம் உற்சாகமாகப் பேசலாம் என்றுதான் முன்வந்தனர். ஆனால், அவளது அந்த அமைதியான முகப்பொலிவும், ஒருவிதமான கம்பீரமும் அவர்களைச் சட்டென்று தடுத்து நிறுத்தியது. ஆச்சரியம் விலகாமல் அவளைத் தள்ளி நின்றே பிரமிப்புடன் வேடிக்கைப் பார்த்தனர்.

Advertisement

​ ‘வெளியூரில் வசித்து வரும் பெண் நம்மைப் போலவே இவ்வளவு அடக்கமாகவும், பண்பாகவும் இருக்கிறாளே!’ என்று அவர்கள் ஒருவருக்கொருவர் ரகசியமாகப் பேசிக்கொண்டனர்.

​செல்வா அவர்களுடன் நின்றிருந்த இரு பெண்களைப் பார்த்து ஜாடை காட்ட, அவர்கள் இருவரும் அவனை நோக்கி வந்தனர்.

​“ஆனந்தி, இவங்கதான் என்னோட அம்மா ஜெயலட்சுமி. இது என் ஒரே தங்கை சுபாஷினி” என்று அறிமுகப்படுத்தினான்.

Advertisement

அவள் ​மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று அவர்களுக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்தாள். செல்வாவின் அம்மா நெகிழ்ச்சியில் அவளை அப்படியே அணைத்துக் கொண்டார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரையாக வழிந்தது. இதழ்கள் துடிக்க, பேச வார்த்தைகள் வராமல் அவர் தடுமாறினார்.

​செல்வாவின் தங்கை அவளது கைகளைப் பற்றிக்கொண்டு உரிமையுடன் நலம் விசாரித்தாள். இதற்கு முன்பே அவளை நன்கு தெரிந்து கொண்டவள் போல அவள் அருகில் அமர்ந்து உரையாடினாள். செல்வா தன்னைப் பற்றி ஏற்கனவே அவர்களிடம் விவரித்திருப்பான், அதனால்தான் அவர்கள் இப்படிப் பழகுகிறார்கள் என்று ஆனந்தியும் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

பிறந்தநாள் கொண்டாட்டம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. ஒருபுறம் மேஜையில் கேக் அலங்கரிக்கப்பட, மறுபுறம் பலூன்கள் தோரணமாகக் காற்றில் அசைந்தாடின. பாடல்களும் நடனமுமாக அந்த இடமே களைகட்டியிருந்தது. இதையெல்லாம் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தியிடம், அவள் இழந்திருந்த உற்சாகம் மெல்ல மெல்ல வந்து ஒட்டிக்கொண்டது. ஆனந்தியின் முகத்தில் இன்னும் முழுமையான சிரிப்பு வரவில்லை என்பதை உணர்ந்த செல்வா, அவளைப் பழையபடி மாற்ற ஒரு அதிரடித் திட்டத்தைச் செயல்படுத்தினான்.

திடீரென செல்வா பெண் வேடமிட்டு, பளபளக்கும் புடவையைக் கட்டிக்கொண்டு மேடைக்கு வந்தான். அவனை அந்த அலங்காரத்தில் பார்த்ததுமே ஆனந்திக்குத் தூக்கி வாரிப்போட்டது. அடுத்த நொடி, அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினாள். செல்வாவும் சும்மா இருக்கவில்லை. அவளது ஒவ்வொரு அசைவையும் நையாண்டி செய்வது போல, புடவைத் தலைப்பை இடுப்பில் சொருகிக்கொண்டு, நளினமாக விரல்களை நீட்டி அவளையே பார்த்துப் பார்த்து ஜாடை காட்டி நடனம் ஆடினான். அந்த வினோதக் கோலத்தையும், அவன் செய்த சேட்டைகளையும் கண்ட ஆனந்தி, வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். அங்கிருந்த அனைவரின் சிரிப்பொலியிலும், கைத்தட்டலிலும் அந்த இடமே ஒரு மாபெரும் கொண்டாட்டக் களமாக உருவெடுத்தது.

இவை அனைத்தையும் அவளது கைப்பேசி அழகாக தன்னுள் படமாக சேகரித்தது. திடீரென செல்வா ஆட்டத்தை நிறுத்திவிட்டு, ஆனந்தியைத் தன்னுடன் ஆடுமாறு சைகை காட்டினான்.

அவள் முதலில் தயங்கி, “ஐயோ… எனக்கு ஆடத் தெரியாதே!” என்று மறுத்தாள். ஆனால், அங்கிருந்த துறுதுறுப்பான சிறுமிகள் அவளை விடவில்லை. ஒருகட்டத்தில், அமெரிக்காவில் தன் தோழிகளுடன் சேர்ந்து ஆடிய நினைவுகள் அவளுக்குள் மின்னி மறைய, மெல்லத் தாளத்திற்கு ஏற்பக் கால்களை நகர்த்தினாள். அவளது நளினமான அசைவுகள் அங்கிருந்தவர்களை வியக்க வைத்தன.

ஆனால், சட்டென்று வந்த வெட்கத்தில், பாதியிலேயே சிரித்துக்கொண்டே ஓடிச் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாள் ஆனந்தி. அனைவரும் கைகளைத் தட்டி அவளது ஆட்டத்தைப் பாராட்ட, நாணத்தில் அவளது முகம் அப்படியே சிவந்து போனது. குறிப்பாக, செல்வா கைதட்டி ஆரவாரம் செய்து அவளைப் பார்த்துச் சிரித்த அந்த நொடி, அவளது இதழ்களில் ஒரு அழகான புன்னகையை உறைய வைத்தது.

பிறந்தநாள் விழா ஆரம்பமானது. செல்வா அவளை அழைத்துச் சென்று முன்வரிசையில் நிறுத்தினான். இரண்டு வயது நிரம்பிய அந்தச் சிறுமி, வண்ணமயமான கேக்கை வெட்டித் தன் பிறந்தநாளைக் கொண்டாட, சுற்றியிருந்தவர்கள் உற்சாகமாகப் பாடல்களைப் பாடினர். அந்தச் சின்னஞ்சிறு மழலை, ஒரு சிறு துண்டு சாக்லேட் கேக்கை எடுத்து வந்து ஆனந்தியின் வாயில் ஊட்டிவிட்டது.

கண்கலங்க அதைப் பெற்றுக்கொண்டவள், அந்தப் பாப்பாவுக்குப் பரிசுப் பொருள் எதுவும் கொடுக்க முடியாமல் தவித்தாள். அவளது நிலையைப் புரிந்து கொண்ட செல்வா, சத்தமில்லாமல் அவளது கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தான்.

புன்னகையுடன் அதைப் பெற்றுக்கொண்டு அச்சிறுமியிடம் கொடுத்தவள் நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழுமாறு வாழ்த்தினாள். அந்தச் சிறுமி கை குவித்து “நன்றி” சொன்ன அழகைக் கண்டு, நெகிழ்ச்சியுடன் அவளது உச்சியை மென்மையாக வருடி விட்டாள்.

அனைவருக்கும் இரவு உணவிற்காக ஒரு நல்ல ஹோட்டலில் இருந்து செல்வா ஏற்பாடு செய்திருந்தான். முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் மறுப்புத் தெரிவிக்கும் ஆனந்தி, இன்று செல்வா செய்த ஏற்பாடுகளைத் தட்டாமல், அவர்களுடன் அமர்ந்து மனநிறைவோடு உணவருந்தினாள். அவளது பிடிவாதம் தளர்ந்து, அவள் மெல்ல மெல்லப் பழைய நிலைக்குத் திரும்புவதை அவன் திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் தங்கை சுபாஷினி, ஆனந்தியின் அருகில் அமர்ந்து கொண்டு அவளது படிப்பு, வீடு, வேலை என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். செல்வா அவளைப் பார்த்துக் கண்ணைக் காட்ட, அவளும் அவனது ஜாடையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போலவே பேச்சைத் தொடர்ந்தாள்.

“எங்க வீடு பக்கத்துலதான் இருக்கு. வாங்க, ஒருமுறை போயிட்டு வரலாம்!” என்று ஆசையோடு அழைப்பு விடுத்தாள்.

“இல்லை சுபா… நான் வந்து ரொம்ப நேரமாயிடுச்சு. வீட்டுல அங்கிளும் ஆண்ட்டியும் தேடுவாங்க. நான் இன்னைக்கு கிளம்புறேன், கண்டிப்பா இன்னொரு நாள் வர்றேன்” என்று மென்மையாக மறுத்தாள் ஆனந்தி.

“நீங்க எங்ககூட வந்தா சித்தப்பா எதுவும் சொல்ல மாட்டாங்க. நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம், அண்ணாவே பேசிப்பாங்க!”

“அச்சச்சோ! அப்படியெல்லாம் இல்லை”

எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் அவள் சங்கடமாக உணர, “ப்ளீஸ் அண்ணி… சாரி, உங்களை எப்படி கூப்பிடுறதுன்னு தெரியல. எங்க அத்தை பொண்ணு பேரும் இதுதான். உங்களைப் பார்த்ததும் அவங்க ஞாபகம் வந்ததால் அப்படிச் சொல்லிட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க” என்று பதற்றமாகச் சொன்னாள் சுபாஷினி. ஒருவேளை அண்ணன் கோபித்துக்கொள்வானோ என்ற பயம் அவளிடம் இருந்தது.

ஆனந்தி புன்னகையுடன், “பரவாயில்லை சுபா, நீங்க என்னை ‘ஆனந்தி’ன்னே தாராளமா கூப்பிடலாம். ஆமாம், உங்க அத்தை பொண்ணு என்னைப் போலவே இருப்பாங்களா? இப்ப அவங்க எங்கே இருக்காங்க?” என்று ஆர்வமாக விசாரித்தாள்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சுபாஷினி திகைக்க, நிலைமையை சீராக்கும் பொருட்டு அத்தனை நேரமும் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த செல்வா, சட்டென்று அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான்.

“ஹே டாக்டர்… என்னைப் பார்க்க உங்க அத்தை பொண்ணு போல இருப்பதால்தான் இவ்வளவு விளையாட்டா பேசுறீங்களா?”

அவன் சன்னமாகச் சிரிக்க, “ஆனா அதுக்காக என்னையும் அந்தப் பொண்ணுன்னு நினைச்சுடாதீங்க!” என்றாள் அவள் குறும்பாக.

செல்வா வாய்விட்டுச் சிரிப்பதைக் கண்டு, அங்கிருந்த அனைவரும் நகைத்தனர். அந்த இடமே மீண்டும் ஒரு இனிய கலகலப்பில் நனைந்தது.

அவர்கள் தன்னிடம் இத்தனை நெருக்கமாகப் பேசுவதற்கான காரணம் என்னவென்று புரிந்துகொண்டதால், ஆனந்தி அதன் பிறகு சுபாஷினியின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

செல்வாவின் அம்மா ஜெயலட்சுமி, அவளிடம் சற்று நேரம் மனம் விட்டுப் பேசியவாறு, தங்கள் வீட்டிற்கு ஒருமுறை வருமாறு அன்போடு அழைத்தார். ஆனந்தியும் நாளை மறுநாள் கண்டிப்பாக வருவதாக வாக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று எழுந்தாள்.

ஜெயலட்சுமியும் சுபாஷினியும் அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் அருகிலேயே நிற்க, அவர்கள் காட்டிய அந்தத் தூய்மையான பாசம் ஆனந்தியை நெகிழ வைத்தது. ‘நமக்குன்னு ஒரு சொந்தம் இருந்தா இப்படித்தான் இருக்குமோ?’ என்று அவளது அடிமனதில் ஒரு ஏக்கம் மின்னி மறைந்தது.

பைக்கில் காற்று முகத்தில் படர்ந்து வர, அந்த அமைதியான சூழலில், “ஏன் டாக்டர், இங்கெல்லாம் பிறந்தநாள் விழா இப்படித்தான் கலகலப்பா கொண்டாடுவார்களா?” என்று கேட்டாள் ஆனந்தி.

“நமக்குத் தெரிஞ்ச பிள்ளைகளா இருந்தா, நாங்க இந்த மாதிரி சேர்ந்து கொண்டாடுறது வழக்கம் தான் ஆனந்தி”

“ரொம்ப நல்லா இருக்கு! கிராமப்புற வாழ்க்கை இத்தனை கலாட்டாவும் சந்தோஷமும் நிறைஞ்சிருக்கும்னு இப்பதான் முதல்முறை நேர்ல பார்க்கிறேன். ஒரு வகையில் நீங்க கொடுத்து வச்சவங்கதான்” என்று உண்மையை ஒப்புக்கொண்டாள்.

செல்வா அவளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசத் தொடங்கினான். “ஆனந்தி, பிரச்சனை இல்லாத இடமே இல்லை. நகரமா இருந்தாலும் சரி, கிராமமா இருந்தாலும் சரி, நாம எப்பவும் கவனமா இருந்தா போதும். புல் தடுக்கி விழுந்து செத்தவங்களும் உண்டு, தூக்கத்திலேயே உயிர் விட்டவங்களும் உண்டு. விபத்துல மரணமடைஞ்சவங்க இருக்காங்க, வஞ்சகர்களால காயப்பட்டு உயிர் போனவங்களும் உண்டு. இதெல்லாம் விதியோட போக்கு; அந்த ஆண்டவன் எதை முடிவு பண்றானோ அதுதான் நடக்கும்.

​கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க ஹாஸ்பிடலுக்கு வந்து கேட்டப்போ, நான் ஒருவித மன அழுத்தத்துல இருந்ததால் உண்மையைச் சொல்லிட்டேன். மத்தபடி நல்லவங்களும் கெட்டவங்களும் எல்லா இடத்துலயும் நிறைஞ்சுதான் இருக்காங்க. அவங்க நம்ம கூட பழகுறது வெளிய தெரிஞ்சா, அது அவங்க குடும்பத்துக்கே ஆபத்தா முடிஞ்சிரும்னு பல பேரு மனசுக்குள்ளயே ஆசைகளை அடக்கி வச்சிருக்காங்க. இல்லன்னா, யாருக்கும் தெரியாம வெளியூர் போற இடத்துல பார்த்து பேசிக்குவாங்க.

​இதையெல்லாம் மறந்துட்டு நீங்க ரிலாக்ஸா இருங்க. நான் சொன்ன மாதிரி அந்த குறிப்பிட்ட ஏரியாவுக்கு போனா மட்டும்தான் ஆபத்து. மத்தபடி அவங்களால நம்ம ஊருக்கு எந்தப் பாதிப்பும் வராது. ஊரைச் சுத்தியும் ஆட்களைப் போட்டு நானே கண்காணிச்சுட்டு வர்றேன்” என்று உறுதியளித்தான்.

உண்மையில், அவன் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தபோது சிலர் சொன்ன வார்த்தைகள் செல்வாவின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருந்தது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் இப்படி வம்பு செய்கிறார்களே என்ற ஆத்திரம் அவனுள் கொந்தளித்தது. அந்த நேரத்தில் ஆனந்தி கேட்டதால் தான் கோபத்தில் உண்மையை அப்படியே கொட்டிவிட்டான். சொல்லப்போனால், பொய் சொல்லத் தெரியாதவர்கள் எப்போதும் இப்படித்தான் உண்மையை மறைக்காமல் பேசிவிடுவார்கள்; செல்வாவும் அந்த ரகம்தான்!

உண்மை தெரிந்த பிறகு ஆனந்தியின் முகத்தில் சிரிப்பு தொலைந்து போனதைக் கண்டு அவன் பதறிப்போனான். அவள் அவசரப்பட்டு இங்கிருந்து சென்று விடக்கூடாது, தம்பியை இங்கு அனுமதித்ததை நினைத்து வருந்தி விடக்கூடாது என்பதற்காகத்தான், தனக்கு வேண்டப்பட்ட சிறுமியின் பிறந்தநாள் என்று சொல்லி உடனடியாக இந்த ஏற்பாடுகளைச் செய்தான்.

அவசர அவசரமாக அனைத்தையும் செய்து, அவள் மனதை மாற்றியதில் அவனுக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சி. தனது எதார்த்தமான பேச்சால் அவளை இயல்பாக மாற்ற முயன்ற செல்வாவின் முயற்சி வீண் போகவில்லை. அவனது அக்கறையை உணர்ந்துகொண்ட ஆனந்தி, மெல்லிய புன்னகையுடன் பேசிக்கொண்டே வீடு வரை வந்து சேர்ந்தாள்.

“ஆனந்தியை எங்கே செல்வா வீட்டுக்குக் கொண்டு வந்து விடமாட்டானோன்னு நினைச்சுட்டேன்!”
​பாரதி விளையாட்டாக அப்படிச் சொன்னதும், ஆனந்தி கலகலவெனச் சிரித்துவிட்டாள்.
​“ஒருவேளை கொண்டு வந்து விடாம இருந்தா, நீங்க என்ன செஞ்சிருப்பீங்க சித்தி?” என்று செல்வா கிண்டலாக வினவ, “நானே நேர்ல தேடி வந்து என் மருமகளைத் தூக்கிட்டு வந்திருப்பேன்!” என்றார் பாரதி.
​“ஆனந்தியை நான் தர மாட்டேன்னு சொன்னா நீங்க என்ன செய்வீங்க?”
பாரதி சிரித்துக்கொண்டே, “அப்படி நீ சொல்ல மாட்டேன்னு எனக்குத் தெரியும்… கொஞ்ச நாள் பழக்கத்துலேயே உனக்கு அவள் மீது இத்தனைப் பாசமும், பரிவும் இருந்தா, பிறந்ததிலிருந்து அவளைப் பத்தித் தெரிஞ்சு வச்சிருக்கற எங்களுக்கு எவ்வளவு இருக்கும்னு நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்லை…” என்றார்.
​அவன் மௌனமாக இருக்க, பாரதி தொடர்ந்தார், “இவங்க அப்பா உயிரோடு இருந்தப்போ கபிலனுக்கும் ஜீவாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமானு கேட்டோம். ஆனா, ‘அவங்க ரெண்டு பேரும் நண்பர்களாத்தான் பழகுறாங்க, வேற பேச்சு வேண்டாம்’னு அவர் அப்பவே தவிர்த்துட்டார். இப்ப அவளைத் தினம் தினம் பார்க்குறப்போ மனசுல வர்ற ஆசையை அடக்க முடியல… இதை என் கணவர்கிட்ட சொன்னா, அவர் மறுக்கிறார்” என்று ஆற்றாமையுடன் சொன்னார்.
​ஆனந்தி மெல்ல அருகில் சென்று அவரது தோளைப் பற்றினாள். பாரதியின் நாசி விடைத்து, கண்களில் கண்ணீர் அரும்பியது.
​“உன்னைக் கடைசி வரை எங்க கூடவே வச்சுப் பார்த்துக்கணும்னு ஆசையா இருக்குமா. ஆனா, முடியலையே!” என்றவர் கண்ணீரைச் சிதறவிட்டார்.
தன் மீதான அவரது அன்பை நினைத்து நெகிழ்ந்துப் போய், “அத்தை… நான் உங்க மகனைக் கட்டிக்கிட்டால்தான் மருமகள்னு இல்லை. எப்பவும் நான் உங்க மருமகள்தான்! என்கிட்ட பேசவோ, எதையாவது கேட்கவோ தயங்க வேண்டாம். அதுபோல, கபில் என் நண்பன்; நாங்க நட்பைத் தாண்டி வேற எந்த எண்ணத்துலயும் பழகல. உங்ககிட்ட என் அம்மாவோட அன்பைப் பார்க்கிறேன். மாமாவோட பாசத்துக்கு முன்னாடி நான் எப்பவும் சின்னக் குழந்தைதான். ஆனா, இப்ப நான் இருக்கிற சூழ்நிலை உங்களுக்கே தெரியும்… அப்புறம் ஏன் அத்தை நடக்காததை நினைச்சுக் கவலைப்படணும்?” என்று நிதர்சனத்தைச் சொன்னாள் ஆனந்தி.

​அவள் சொல்வது புரிந்தாலும் மனம்தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அதேநேரம் கணவர் அறிந்தால் தன் மீது கோபப்படவும் வாய்ப்புள்ளது என்பதால், அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டார் பாரதி.

​“சரி, சரி! விடுங்க. அவருக்கு நான் இப்படிப் பேசினாலே பிடிக்காது. அப்புறம் சத்தம் போடுவார். ஏதோ மனசுல இருந்ததைச் சொன்னேன்”

அவள் சிரித்ததும், “உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். எல்லாரையும் போலக் கணவன், குழந்தையோடு சேர்ந்து வாழ்றதைப் பார்த்துச் சந்தோஷப்படணும். நீ எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்” என்றார் பாரதி.

​ஆனந்தி அதை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டாள். “கபிலன் என் நண்பன். நீங்க எல்லாரும் சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரிஞ்சவங்க. அதனாலதான் நான் இவ்வளவு உரிமையா பேசுறேன். இதுவே வேற யாராவதா இருந்தா நான் இப்படிப் பழகியிருக்க மாட்டேன் ஆண்ட்டி. அங்கிள்கிட்ட சொல்லிக் கபிலனுக்கு ஒரு நல்ல பெண்ணாப் பார்த்து முடிக்கச் சொல்லுங்க. நான் இங்கிருந்து கிளம்பியதும் நேராக அமெரிக்காவுக்குப் போயிடுவேன். அங்க டாக்டர் என்ன சொல்றார், தம்பியோட உடல்நிலை எப்படி இருக்குன்னு பார்த்துட்டுத்தான், அப்புறம் இந்தியாவுக்கு வர்றதா வேண்டாமான்னு முடிவு பண்ணுவேன்” என்றாள் உறுதியாக.

அந்த வார்த்தையைக் கேட்டதும் செல்வா உள்ளுக்குள் அதிர்ந்தான். ஆனால் அடுத்த நொடியே ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொண்டான். ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆனந்தி இங்கிருந்து போவதை நினைக்கவே கூடாது. அந்த அளவுக்கு அவளது மனதை மாற்றி, நம்மோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். தங்கை சுபாவை வரவழைத்து இவளுடனேயே இருக்க வைக்க வேண்டும்; அம்மாவிடமும் பேசி ஆனந்தியை அடிக்கடி வீட்டிற்கு வரச் செய்ய வேண்டும்.’

நாட்கள் மிகக் குறைவாக இருப்பதால், அதற்குள் எதையாவது செய்தாக வேண்டும் என்று அவன் கணக்குப் போட்டான்.

“ஆனந்தி, நான் நாளைக்கு வர்றேன். சுபாவை உங்களுக்குப் பேச்சுத் துணைக்கு அனுப்பி வைக்கிறேன். எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்குங்க. குட் நைட்!” என்றான் செல்வா.

அவளும் இரவு வணக்கத்தைக் கூற, அவன் புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினான். அத்தையின் தோளில் கையைப் போட்டபடி, அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் ஆனந்தி.

 

One thought on “ஜீவ தாளம் : 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!