Skip to content
Post Views: 1,778
அத்தியாயம் 18.2
முத்தாயி காதம்பரி வீட்டில் இருந்தாலும், வாரம் ஒரு முறை சென்று சிவங்கரியை பார்த்துவிட்டு வந்துவிடுவாள். இல்லை என்றால், அவரை இங்கே அழைத்து கொள்வாள். சிவங்கரிக்கு முத்துவின் இந்த பாங்கு மிகவும் பிடித்து விட்டது. அவளது துணிச்சல் தன்னம்பிக்கை கலகலப்பு, என்று அனைத்தும் அவருக்கு பிடித்துவிட்டது.
Advertisement
திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் ஹிருதய் தன்னுடைய பிஸ்னஸ்ஸை தொடங்கினான். பூம்பாவையின் அப்பா வீட்டின் பின் பக்கத்திலே குடௌன் அமைத்து கொண்டார்கள். பூம்பாவை மகனின் தொழிலுக்கு பல வகையில் உறு துணையாக இருந்தார். ஸ்டாக் எல்லாம் அவர் தான் மேற்பார்வை பார்த்து கொள்கிறார். அம்மாவிடம் இவ்வளவு திறமை இருக்கிறதா? என்று அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதே போல தேவைகேற்ப பேக்கிங் செய்வதற்காக இப்பொழுதைக்கு இரண்டு பெண்களை வேலைக்கு சேர்த்து கொண்டார்கள்.
லோன் சம்பந்தமாக அனைத்து உதவிகளையும் கேசவன் தான் செய்தார். அவர் வங்கியில் பணி புரிந்ததால் அவருக்கு இதில் நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. முத்து தான் இந்த யோசனை கூறினாள்.
Advertisement
Advertisement
அது மட்டுமில்லாமல் ஹிருதய்க்கு ஆன்லைனில் தான் பெரிய அளவில் வியாபாரம் என்றாலும், நேரடி விற்பனை இருந்தால் தான் தொழிலில் நிலைத்து நிற்க முடியும் என்று கந்தசாமி கூறவே, சென்னையிலும் தஞ்சவூரிலும் இரண்டு சிறிய அரிசி கடைகளை திறந்தனர்.
தஞ்சாவூரில் உள்ள கடையை ஹிருதய்யும் பாவையும் சேர்ந்து பார்த்து கொள்கிறார்கள். அங்கேயே அவனது ஆபிஸ் ரூமையும் செட் செய்து கொண்டான். சென்னையில் உள்ள கடையை தான் பார்த்து கொள்வதாக தணிகாச்சலம் முன்வந்தார். அவருக்கு இதில் மிகுந்த ஆர்வம். சொல்லப்போனால், அவருக்காக தான் சென்னையில் இந்த கடையை திறந்தனர்.
Advertisement
அவர் அவர் வேலைக்கு ஏற்ப சம்பளம் கொடுத்து விடுவோம் என்று கூறி விட்டான் ஹிருதய். பூம்பாவைக்கும் கொடுத்து விடுகிறான்.
‘எதுக்கு டா அம்மாக்கு கொடுக்கிற?’ என்று அவர் சுணங்கவும், “உங்க உழைப்புக்குக்கானது தான் கொடுக்கிறேன். என் உழைப்புக்கான காசும் எடுத்துக்கிறேன் இல்லம்மா” என்று கூறவும் சரி என்றுவிட்டார்.
தொழில் சூடு பிடிக்க கொஞ்ச நாள் ஆகும் என்று நினைத்திருக்க, ஒரே மாதத்திலே நல்ல வியாபாரம் ஆக தொடங்கியது. வியாபாரம் நன்றாக நடந்த போதிலும் காலையில் அவனது நேரம் என்னவோ கந்தசாமி தாத்தாவுடன் தான்.
ஹாசினியின் பொது தேர்வும் வந்தது. மிகவும் நன்றாக செய்திருந்தாள். இப்பொழுது நீட் தேர்வுக்காக படித்து கொண்டிருக்கிறாள். முத்துவும் அவளது இறுதி ஆண்டு தேர்வுகளை சிறப்பாக எழுதி முடித்திருந்தாள். இன்னும் ரிசல்ட் வர சில மாதங்கள் ஆகும்.
அதன் பிறகு இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) அமைப்பின் கீழ் உள்ள மாநில பார் கவுன்சில்லில் (State Bar Council) வழக்கறிஞர் (Advocate) ஆவதற்கு பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பிறகு அகில இந்திய வழக்கறிஞர் தகுதித் தேர்வு ( All India Bar Examination (AIBE)) எழுத வேண்டும்.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே
ஒருவர் அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடலாம்.
ரிசல்ட் வந்ததும் தான் இதை செய்ய முடியும். அதனால் தேர்வு முடிந்ததும் முத்து ஊருக்கு கிளம்பினாள். அவளுடன் ஸ்ரீகாந்த்தும் அந்த வார இறுதியில் கிளம்பினார். இவர்களுடன் ப்ரதமேஷும் இணைந்து கொண்டான்.
“ஹலோ ப்ரோ.. நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போறோமோ இல்லயோ.. நீங்க வாராவாரம் போயிடறீங்க” என்றாள் முத்து ப்ரதமேஷிடம்.
“ஆமா ப்ரோ.. அப்புறம் எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ணி இருக்கீங்க? “
“அது எல்லாம் சூப்பரா எழுதி இருக்கேன் ப்ரோ”
இவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த்.
“அப்புறம் ப்ரோ உங்க பிரண்ட் எப்படி இருக்காங்க?”
“என் பிரண்டா? யாரு?”
“அதாங்க உங்க பாட்டி வீட்டுக்கு விருந்துக்கு போனப்ப, ஒருத்தவங்க கூட பேசாம இருந்தீங்கன்னு உங்களையே சுத்தி சுத்தி வந்தாங்க இல்ல.. ஹிருதய் கூட பஞ்சாயத்து பேசி சேர்த்து வச்சானே..”
“ஓ சுசீயா? நான் அவக்கூட அதுக்கு அப்புறம் பேசலயே ப்ரோ”
“ஏன் ப்ரோ?” என்றான் ப்ரதமேஷ் அதிர்ச்சியாக.
அவனது அதிர்ச்சியே முத்துவிற்கும் ஸ்ரீகாந்த்திற்கும் சுவாரஸ்யத்தை கொடுத்து.
“ஏன்னா? நான் பொதுவாவே யார்கிட்டயும் அதிகமா போன்ல பேச மாட்டேன்”
“ஓ..” என்றான் இறங்கிவிட்ட குரலில்.
“சரி, அவங்க கூட தஞ்சாவூர்ல தானே இருக்காங்க”
“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அசட்டையாக.
மறைமுகமாகவும் நேரடியாகவும் பலவாறு கேட்டு பார்த்துவிட்டான் ப்ரதமேஷ், முத்து வாயில் இருந்து ஒன்றும் வாங்க முடியவில்லை.
பல சமயம் ஸ்ரீகாந்த்தும் முத்துவும் பேசி கொண்டு வந்தனர்.
உர்ரென்றே வந்து சேர்ந்தான் ப்ரதமேஷ்.
இவர்களை அழைக்க கந்தசாமியும் ஹிருத்யயும் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.
ஹிருதய்யும் முத்துவும் கண்ணெடுக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்தே நின்றனர்.
“அப்புறம் காந்த்தா.. எப்படி இருக்கீங்க? போன தடவைக்கு இந்தத்தடவ ஒரு சுத்து குண்டான மாதிரி இருக்கீங்க?” என்றார் கந்தசாமி ஸ்ரீகாந்த்திடம்.
‘தாத்தாக்கும் பேத்திக்கும் குசும்பு மட்டும் ஒரே மாதிரி..’ என்று மனதிற்குள்ளே முனங்கிக்கொண்டு வெளியே சிரித்து வைத்தார்.
அனைவரும் வீட்டிற்கு வந்தனர். “என்ன ப்ரதம்.. ஏன் இப்படி உன் முகமே வாட்டமா கிடக்கு?” என்று முதலில் அவனை தான் கவனித்தார் பூம்பாவை.
“நீ மட்டும் தான் அத்தை என்னை பத்தி யோசிக்கிற.. இவங்க ரெண்டு பேரும் ட்ரெயின்ல என்கிட்டே ஒழுங்காவே பேசலை தெரியுமா? சேர்ந்து வந்தா ஜாலியா இருக்கும்னு இவங்க கூட வந்தா, அவங்க ரெண்டு பேருமே பேசிட்டு வந்தாங்க” என்றான் அத்தையிடம்.
“என்ன முத்து இது.. தம்பி இப்படி கவலை படுது? தப்பு தானே?” என்றார் கந்தசாமி.
ஹிருதய் புன்முறுவலுடன் அமைதியாக இருந்து கொண்டான்.
“பார்த்தீங்களா தாத்தா, நீங்க என் மேலே காட்டுற அன்பு கூட கூடவே வளர்ந்த இவனுக்கு இல்லை.. பொண்டாட்டியை ஏன்னு ஒரு வார்த்தை கேட்குறானா?” என்றான் ப்ரதமேஷ் தாத்தாவிடம்.
“டேய், உன் மேல இருக்கிற அன்பாலே தான் அமைதியா இருக்கான்.. நீ வேற.. தானா வந்து சிக்குறியே?” என்றார் ஸ்ரீகாந்த் மெல்ல, அவனுக்கு மட்டும் கேட்பது போல.
“ஆமா தம்பி, உலகமே இப்படித்தான்.. விடுப்பா.. இனி உன்கூட இந்த தாத்தா பேசிட்டு இருக்கேன்..”
“ங்கே “
“தாத்தா, ப்ரோ சாதாரணமா பேசுனா பேசலாம்.. அவர் நம்ம கிட்ட விஷயத்தை வாங்க முயற்சி செய்றாரே?”என்றாள் முத்து.
“அப்படியா சங்கதி.. நீ விடு முத்து.. நான் எதுக்கு இருக்கேன், இனி நான் பார்த்துக்கிறேன்”
ப்ரதமேஷ் கலவரமாகினான் தாத்தா பேத்தி உரையாடலில்.
“அது எல்லாம் ஒன்னுமில்ல தாத்தா, நான் சாதாரணமா தான் பேசிட்டு இருந்தேன் “
முத்து ஏதோ சொல்ல வரவும்,
“சரி சரி, மூனு பேரும் போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க..” என்று மூவரையும் அனுப்பி வைத்தார் பாவை.
முத்துவோடு ஹிருதய்யும் நைசாக உள்ளே செல்ல திரும்பவும்,
“ஹிருதய், ஒரு நிமிஷம் நில்லு.. இரண்டு பேருக்கும் காஃபி தரேன், எடுத்திட்டு போயிடு” என்று அவனை தடுத்து நிறுத்தினார்.
அவன் அசடு வழிந்து கொண்டே திரும்பி, அவர் கொடுத்த காபி கோப்பைகளை எடுத்து கொண்டே அறைக்குள் சென்றான்.
“இந்தாங்க பெரியப்பா.. உங்களுக்கு” என்று கந்தசாமிக்கும் ஒரு கோப்பையை கொடுத்தார்.
“இன்னிக்கு மதியம் பெரியம்மாவையும் கூட்டிட்டு இங்கன வந்துடுங்க பெரியப்பா..”
“இல்ல பாவை, நீ எல்லாரையும் கூப்பிட்டு இழுத்து விட்டுக்காதே.. இங்கன பாரு.. நான் போற வழியில, மீனுக்கு சொல்லிட்டு போயிடுறேன். அவன் கொடுத்து விடுவான்.”
“சரிங்க பெரியப்பா”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ப்ரதமேஷும் ஸ்ரீகாந்த்தும் வந்துவிடவே அவர்களுக்கும் காஃபி கொடுத்தார்.
“அப்புறம் ப்ரதமா, வேலை எல்லாம் எப்படி போகுது? அடுத்து உனக்கு தான் கல்யாணம்? சொல்லு எப்படி பொண்ணு வேணும்னு.. இந்த தாத்தா கொண்டு வந்து லைன்ல நிப்பாட்டி புடுறேன்..”
“நீங்க வேற பெரியப்பா.. எங்க மாமியார் சபதம் போட்டிருக்காங்க. அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணை தான் இவனுக்கு கட்டி வைப்பேன்னு” என்றார் பாவை.
“எந்த பேச்சு எடுத்தாலும் உனக்கு எங்க அம்மாவை இழுத்து விடணும் ஹனி” என்றார் ஸ்ரீகாந்த் உர்ரென்று.
“அத சொல்லு காந்த்தா.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..
மாமியாரை பிடிக்காத மாதிரியே பேசுவாங்க.. ஆனா அவங்கள பத்தியே தான் பேசுவாங்க..”
‘இவர் நமக்கு சபோர்ட்டா பேசறாரா?’ என்று சந்தேகமாக பார்த்து வைத்தார்.
“அய்யா தனக்காக தான் வந்திருக்கிறார், என்று புரிந்து முத்தாயி ஹிருதய்யை அழைத்து கொண்டு ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து விட்டாள்.
“என்ன அய்யா?அப்புறம் என்ன விஷேசம்?”
“நம்ம ப்ரதமனுக்கு பொண்ணு பார்க்கவான்னு கேட்டிட்டு இருந்தேன். பாவை சொல்லுது அவங்க மாமியார் தான் பார்க்கணுமாம்”
“அதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்ல அய்யா.. பொண்ணு எல்லாம் பார்த்தாச்சு போல”
“அய்யோ, ப்ரோ.. ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன். ஆரம்பிக்கிறதுக்கு முன்னவே கும்மி அடிச்சிடாதீங்க” என்றான் ப்ரதமேஷ் முத்துவை பார்த்து.
பாவை குறுகுறுவென ப்ரதமேஷை பார்க்கவும்,
‘அப்புறமா பேசலாம் அத்தை’ என்று அவர் காதை கடித்தான். அதன் பிறகு பாவை வேறு பேச்சு பேசி அனைவரையும் திசை திருப்பி விட்டார்.
காலை உணவு தயாரிக்க உள்ளே சென்ற பாவையை தடுத்து நிறுத்தினாள் முத்தாயி.
“அநியாயம் பண்ணாதீங்க அத்தை, மாமா உங்களை பார்க்க ஆசையா வந்திருக்காங்க.. நீங்க மாமாவை கொஞ்ச நேரம் கவனிங்க.. இன்னிக்கு சமையலை நான் பார்த்துகிறேன்”
“இல்ல தங்கம்.. நீயே ட்ராவல் செஞ்சு வந்திருக்க.. இங்க வேலைக்கு ஆள் இருக்கு, நான் பார்த்துக்கிறேன்”
“எனக்கு முடியலைன்னா உங்களை கூப்பிடறேன், போங்க இப்ப குளிச்சு நீங்களும் மாமாவும் வெளியே போய்ட்டு வாங்க” என்று அவரை வம்படியாக அனுப்பி வைத்தாள்.
“அய்யா இங்கன சாப்பிட்டு போங்க சரியா..”
“சரி காலையில இங்கன சாப்பிடுறேன், நான் டீச்சர்கிட்ட சொல்லிடறேன். மதியத்துக்கு மீன் வாங்கி கொடுக்கிறேன்னு பாவைகிட்ட சொன்னேன். நீ மீன் சமைக்கிறீயா?இல்ல வேற வேணுமா முத்து?”
“மீனே சமைக்கிறேன் அய்யா, வாங்கிட்டு வாங்க..”
“என்ன முத்து, அய்யாகிட்ட சொல்ற? நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று வந்தான் ஹிருதய்.
ஹாசினி அப்பொழுது தான் எழுந்து வந்தவள், “வாங்க தாத்தா” என்று கூறிக்கொண்டே வந்தாள்.
“வாங்க அண்ணி” என்று முத்துவை சினேகமாக வரவேற்று,
“ஹாய் ப்ரதம்ஸ்..” என்று ப்ரதமேஷ் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
“ஹாசி நீ என்ன குடிப்ப?”
“ராகி மால்ட் அண்ணி.. நீங்க இருங்க, அம்மா வரட்டும்”
“இன்னிக்கு உங்க அம்மா அப்பா டே அவுட்.. நானே தரேன்” என்று பேசிக்கொண்டே அவளுக்கு பதமாக ராகி மால்ட்டை கலந்து கொடுத்தாள்.
பேத்தியின் இந்த செயல்கள் கந்தசாமிக்கு மனதிற்கு இதமாக இருந்தது.
முக்கால் மணி நேரத்தில் சுட சுட காலை பலகாரத்தை தயார் செய்து முடித்துவிட்டாள்.
பின் அனைவரும் சேர்ந்து காலை உணவை உண்டவுடன், பூம்பாவையும் ஸ்ரீகாந்த்தும் வெளியே கிளம்பினார்கள்.
தாத்தா மதியம் வேலை இருப்பதாக கூறி , மீன் மட்டும் வாங்கி கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.
ப்ரதமேஷ் ஹாசினியோடு பேசிக்கொண்டிருந்தான்.
மதியம் சமையலுக்கு மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தான் ஹிருதய்.
“என்ன தயா உங்களுக்கு வெங்காயம் கூட உரிக்க தெரியல?”
பாதி வெங்காயம் தோலோடு சேர்த்து குப்பையில் போட்டு கொண்டிருந்தான்.
“நீ வேற ஈசியா ஏதாவது வேலை கொடு”
“தேங்காயை திருகி கொடுக்கிறீங்களா?” என்று கேட்டுக்கொண்டே தேங்காய் மூடி, தேங்காய் துருவி அனைத்தையும் கொடுத்தாள்.
அவன் தேங்காய் மூடியை துருவியின் அருகில் பிடித்து கொண்டு மிகவும் கவனமாக துருவியின் கைப்பிடியை பிடித்து சுழற்றினான். மெதுவாக… பத்திரமாக…
“என்ன முத்து இது? இதுல இருந்து தேங்காய் வரவே இல்லை” என்றான் கவலையாக.
முத்து இடுப்பில் கை வைத்தது அவனை பார்க்கவும்,
“நீயே பாரு” என்று மீண்டும் மிகவும் கவனமாக சுழற்றினான்.
“எல்லாம் உங்க அம்மாவை சொல்லணும். என்ன இப்படி பிள்ளையை வளர்த்து வச்சிருக்காங்க.. மூடியை இன்னும் பக்கத்தில பிடிங்க.. கெட்டியா பிடிச்சு, வேகமா சுத்துங்க..” என்று பாடம் எடுத்தாள்.
“கையில பட்டுட்டா?”
“நீங்க என்ன குழந்தையா? சரியா பிடிச்சா ஒன்னும் ஆகாது..”
‘தெரியலைன்னா விடுங்க’ என்று சொல்லாமல், இப்படி செய்யணும் என்று சொல்லி கொடுத்தே விட்டாள்.
“ப்ரதம்ஸ்.. இது எல்லாம் உனக்கு தெரியுமா?” என்றாள் ஹாசினி ரகசியமாக.
“தெரியாதே ஹாசி.. உனக்கு?”
“எனக்கும் தெரியாது, உனக்கு தான் அடுத்து கல்யாணம். அதனால இது எல்லாம் நீ முதல்ல கத்துக்கோ”
“அத்தைகிட்ட கேட்டு கத்துக்கணும் ஹாசி” என்றான் அவனும் சீரியஸ்சாக.
அன்று இரவே பூம்பாவையிடம் தனிமையில், “அத்தை மதுரையில் அன்னிக்கு பார்த்த பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா அதுக்கப்புறம் அவங்களை பார்க்கவும் இல்லை. வேற எதுவும் அந்த பொண்ணை பத்தி தெரியாது. நீ தான் எப்படியாவது அந்த பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்”
“யார் ப்ரதம், எனக்கு நியாபகம் இல்லையே.. பெயர் என்ன? முத்துவுக்கு சொந்தமா?”
“பெயர் சுசீலா.. எனக்கு வேற ஒன்னும் தெரியாது. ஆனா முத்துக்கு பிரண்ட்.. ரம்யாக்கு தெரியும்”
“சரி .. முத்து கிட்ட விஷயத்தை வாங்க முடியாது. ஆனா ரம்யா கிட்ட வாங்கிடலாம். நான் பேசிட்டு சொல்றேன்”
“தேங்க்ஸ் அத்தை..”
“ஆனா, நம்ம ராஜ மாதாவை எப்படி சமாளிக்க?”
“நீ பொண்ணை மட்டும் பாரு அத்தை. மத்ததை நான் பார்த்துக்கிறேன்”
அத்தையிடம் பேசிய பிறகு மனதிற்குள் நிம்மதியாக உணர்ந்தான்.
————————————–
error: Content is protected !!