Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…19

தூறல் – 19
மறுநாளும் குளுகுளுவென அவளது கோபமழையில் நனைந்து அன்று இரவு மதுரை நோக்கி பயணிக்க தயாராகினான் குரு. வழக்கம் போன்ற சவியின் அழுகை அவனது சமாதானம் என்று முடிந்து பிள்ளையை அஞ்சலியிடம் ஒப்படைத்து அவள் முகம் பார்க்க எப்பொழுதும் இன்முகமாக புன்னகைத்து தலையசைத்து வழியனுப்பி வைப்பவள் முகத்தை வேறுபுறமாக திருப்பிக் கொண்டு நின்றிருந்தாள்.


Advertisement

“நான் கிளம்பட்டுமா…?”
அவள் முகம் பார்த்து மெல்லிய குரலில் கேட்டான். 

Advertisement

Advertisement

பதிலில்லை.
“பேச மாட்டியா..?”

Advertisement

அவனையும் மீறி அந்த கரகரத்த குரலில் ஒருவித ஏக்கம் தெரிந்தது.
“பரசுராமனை உனக்கு பேசல… போதுமா..?”
“ஏன்..? மதுரையில ஏதாவது கோதண்டராமனை பார்த்து வச்சிருக்கீங்களா..?”
அவளது கேள்வியில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட புன்னகைத்தபடியே அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அவன் விழிகள் அவள் விழிகளை கொக்கி போட்டு இழுக்க அவளால்தான் அவனை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை. அலைப்புறும் கண்களோடு எங்கெங்கோ கண்களை சுழற்றினாள்.
“உனக்கு எந்த மாப்பிள்ளையும் நான் பாக்கல… பாக்கவும் மாட்டேன்… போதுமா..?”
“ம்க்கும்…” 
தலையை ஒரு மார்க்கமாக ஆட்டி புருவத்தை உயர்த்திக் கொண்டவளை அவன் விழிகள் ரசனையோடு விழுங்கின.
“வரட்டுமா..?” 
கேட்டவன் நகரவே இல்லை… அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
“இன்னும் எம்புட்டு நேரந்தேன் பிள்ளையை தூக்கிட்டு இங்ஙனயே நிக்கட்டும்… கை நோகுது…”
அவன் பார்வை தந்த குறுகுறுப்பில் தனக்குள் தோன்றும் கிளர்ச்சியை மறைத்து தடுமாறியபடி அவனை அரைப் பார்வை பார்த்தபடி சொன்னாள் அஞ்சலி.
“போயிட்டு வான்னு சொல்லேன்…” அவனையும் மீறி குழைந்திருந்தது குரல்.
“போயிட்டு வா…” என்றவள் படக்கென திரும்பி வீட்டிற்குள் நுழைந்திருக்க பற்கள் தெரிய சிரித்தபடியே துள்ளலான நடையோடு அங்கிருந்து கிளம்பி இருந்தான் குரு. 
வீட்டிற்குள் நுழைந்தவள் மெல்ல தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள். வீட்டின் முனைவரை சென்றவன் அவனும் தலையை பின்னால் நகர்த்தி எட்டிப் பார்த்தான். இருவரும் ஒரே நேரத்தில் தலையை நீட்டி இருந்தனர். நாக்கை கடித்துக் கொண்டு படக்கென தலையை உள்ளே இழுத்து அவள் கதவை சாத்திக் கொள்ள, 
“செல்ல கிறுக்கி…” 
வாய்விட்டு சொல்லிக் கொண்டவன் ஒற்றைக் கையை காற்றில் வீசி காதுவரை இதழ்களை விரித்து சிரித்தபடி விசில் அடித்தபடியே வேகமாக பேருந்து நிலையத்தை நோக்கி நடையை எட்டிப் போட்டான்.
முதலிலேயே ராதாவிடம் விடைபெற்று வந்ததால் போனில் அழைத்து தான் கிளம்பிவிட்டதை தெரிவித்து ஜன்னலோர இருக்கையில் தலையை நன்கு சாய்த்து அமர்ந்து கொண்டான். இரவு நேரப் பயணம்… விளக்குகள் அணைக்கப்பட்டு காற்றின் ஓசையோடு எதிரில் வரும் வாகனங்களின் வெளிச்சத்தோடு ஆங்காங்கே உறங்கி வழிந்து கொண்டிருக்கும் பயணிகளோடு பேருந்துப் பயணம் தொடங்கி இருந்தது. 
இவனுக்குத்தான் அறவே உறக்கம் வரவில்லை. கண்மூடினாலே அவன் செல்லக் கிறுக்கியின் நினைப்புதான். இரண்டே நாட்களில் அவன் மனதுக்குள் என்னென்னவோ மாயவித்தை நிகழ்த்திவிட்டாளே… இருபது வயது விடலைப் பையனாக அல்லவா மனம் மாறி நிற்கிறது. சிரிக்க மறந்திருந்தவனின் இதழ்கள் வலிக்க வலிக்க விரிந்தே கிடந்ததே. இந்த நொடியும் அதே நிலைதான். 
வலது கை நடுவிரலை செல்போன் வெளிச்சத்தில் ஆராய்ந்தான். அவள் தூக்கி எறிந்த மத்து பட்டதால் நடுவிரல் முந்தைய நாள் முழுக்க வீங்கிதான் இருந்தது. பாதிக்கு மேல் மடக்கவே முடியவில்லை. வலியோடு கூடுதலாய் ஒருவித இனிமை. மெல்ல அந்த விரலை வருடினான்.
“உன் பொண்டாட்டியை வேற ஒருத்தனுக்கு கட்டி வைக்க பாப்பியா..?”
“என் புள்ளைய இந்த குரங்கு மூஞ்சிகிட்ட ஒப்படைச்சிட்டு அந்த பன்னி மூஞ்சியை நான் கல்யாணம் பண்ணனுமாம்…”
“யார் அந்த பன்னி மூஞ்சி வாயன்..?” 
“இந்த முகரக் கட்டைக்கு நான் குறைச்சலா தெரியிறானோ..?” 
“உச்சி மண்டையில ஆடிக்கிட்டு இருக்கிற அத்தன முடியையும் கொத்தா புடுங்கிப் போட்டுட்டா கெழட்டுப் பையன்னு எவளும் வரமாட்டா… ஆளும் மொகரையும் பாரு…”
“32 மாசம் அதிசயமா சுமந்து பெத்தாளாம் அவங்க ஆத்தா… அம்ம்ம்புட்டு நல்லவனாம் அவன்…”
அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வரிசையாய் இதயத்தில் எதிரொலிக்க தன்னையும் மீறி கடகடவென சிரித்திருந்தான் குரு. அருகில் அரைத் தூக்கத்தில் தலையை நெஞ்சோடு நட்டு வைத்துக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது நபர் அரைக் கண்களுடன் அவனை நிமிர்ந்து ஒரு மார்க்கமாக பார்த்து‌ தனது இடப்பக்க தோளில் தலையை நட்டுக் கொண்டார். 
நாக்கை கடித்து சிரித்துக் கொண்டவன் ஜன்னல் வழியே முகத்தை திருப்பி அறைந்து செல்லும் காற்றை இன்பமாய் வாங்கியபடி இதமாய் கண்களை மூடி சிறிது நேரத்தில் உறங்கியும் போயிருந்தான்.
அந்த வாரம் முழுக்க பள்ளியில் வேலை அவனை அழுத்திப் பிடித்தது. தேர்வுகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் பாடங்களை விரைவாக முடிக்கவும் மாணவர்களை தயார்படுத்தவும் என்று அவனது வேலைநேரமும் வேலைப்பழுவும் கூடியிருந்தது. ஆனாலும் தன் குடும்பத்திற்கு அழைத்துப் பேச தவறுவதில்லை. ஆம்… அவன் குடும்பம் இருப்பது ராமேஸ்வரத்தில்தானே.
இன்னமும்கூட அவன் செல்லக் கிறுக்கி கோபத்தில் இருந்து வெளியே வந்திருக்கவில்லை. அவனோடு பேசுவதே இல்லை. மகள்தான் தலையை ஆட்டி ஆட்டி விதவிதமாய் கதை பேசுவாள். ஆனால் வேண்டுமென்றே வீடியோகாலில் அவனுக்கு தெரியும்படி அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருப்பாள் அவன் பிடாரி. அவளுடன் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஏக்கமாக அவளை நோக்கி விழிகள் சுழலும். 
“அம்மாகிட்ட கொடு அம்மு…”
அதுவரை தந்தையும் மகளும் பேசுவதை பக்கவாட்டு கண்களால் பார்த்தபடியே வேலை செய்வதுபோல் நடித்துக் கொண்டிருப்பவள் ஃபோனை தூக்கிக் கொண்டு மகள் அவளிடம் நெருங்கியவுடன் வேகமாக முதுகை காட்டியபடி புடவையை அயர்ன் செய்வது போல் திரும்பிக் கொள்வாள். 
“அம்மா… அப்பா பேசுறாங்க…” 
“பேசு…”  
“உங்ககிட்ட பேசணுமாம்…” 
“எனக்கு வேலை இருக்கு…” 
கேமரா அவளை நோக்கித்தான் திரும்பி இருக்கும். பள்ளிக்கு உடுத்திச் செல்லும் காட்டன் புடவையை மடித்து நீவி வைத்துக் கொண்டிருப்பாள்.
“அம்மா… அப்பா பாவம்…” 
தந்தைக்கு கொடி பிடித்து வரும் மகளை படக்கென திரும்பி முறைத்துப் பார்ப்பாள்.
“ஆமாமா… உன் அப்பா ஒன்னுமே தெரியாத அப்பாவிதான்…” என்பவள் “என்ன்ன்ன… சொல்லுங்ங்ங்க…” வார்த்தையை அரைத்து துப்புவாள் போனை கையில் வாங்கிக் கொண்டு. 
விழிகள் ஆசையோடு அவனை விழுங்கிக் கொண்டாலும் முகத்தில் கோபம் இருப்பதுபோல் காட்டிக் கொள்வாள். ஆனால் அந்த கண்கள் வெளிப்படுத்தும் ரகசியத்தை அவள் காதலை படிக்கத் தெரிந்தவன் கண்டுகொள்ளாமல் போவானா..? அவனும் ஆசையோடுதான் அவளை பார்ப்பான். கடந்த சில நாட்களாக அவனது வாழ்வின் மொத்த அர்த்தங்களையும் உள்வாங்கி உணர்ந்து கொண்டிருக்கிறான். 
நட்டமரம் போல் எங்கும் திரும்பாது எதிலும் அசையாது இந்த தமிழ்நாட்டில் கால் பதித்தபின் அவன் வாழ்க்கை எதை நோக்கிச் செல்கிறது என்று தெரியாமலே பயணப்பட்டுக் கொண்டிருந்தவன். வாழப் பிடிக்காத வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தான்… பட்டமரமாய் அவன் வாழ்க்கை மொத்தமாய் முடிந்து போனதாக முடிவு செய்து கொண்டவனுக்கு எதிலும் பிடித்தமில்லை. இதழ்கள் இறுகி விழிகள் குறுகி பல ஆண்டுகள் கடந்து போயிருந்தன. 
என்று மதுரை வந்து இறங்கினானோ… என்று சவி என்னும் குட்டிச் சிட்டு அவன் கண்களில் பட்டாளோ… அவன் வாழ்வும் மறுமலர்ச்சி அடையத் தொடங்கியது. அவளால் ஈர்க்கப்பட்டவன் இன்று அவள் அன்னையிடமும் அடிமையாகிப் போனதுதான் விதியின் விளையாட்டு. 
தீபாவை முழுமையாய் மனதில் சுமந்து வாழ்ந்தவன்தான். மனைவி, மகள் என்று தனக்கான கூட்டை அழகாக அமைத்து சுகமாக வாழ்ந்த ஒருவன்தான் குரு. அவர்கள் இறந்த பின்பும் இத்தனை ஆண்டுகளில் எந்த சஞ்சலமும் இன்றி மனைவியையும் மகளையும் மனதில் சுமந்து வெற்று பிம்பமாய் ஒரு வாழ்க்கைதான். அப்படிப்பட்டவனின் மனம் அஞ்சலி என்ற ஒரு செல்லக் கிறுக்கியிடம் சிக்கிப் போகும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 
விரும்பி ஏற்றானா..? விதியால் ஏற்றானா..? தேவையற்ற ஆராய்ச்சி எதற்கு..? சன்னம் சன்னமாக அவன் இதயத்தை தூர்வாரி உள்ளே நுழைந்து இன்று ஏகோபித்த ஆட்சியில் அமர்ந்து விட்டாள் அஞ்சலி. 
தீபாவை மறந்துவிட்டானா..? நிச்சயமாக இல்லை… அவள் அவனது முதல் காதல், முதல் மனைவி. எப்படி மறப்பான்..? அவளுக்கான இடம் என்றும் அப்படியே அங்கு உண்டு. ஒரு தெய்வமாக, ஒரு பொக்கிஷமாக அவன் இதயத்தில் அவளுக்கான இடம் என்றும் உண்டு. அவளை மறக்க மாட்டான்… தூக்கி எறியவும் மாட்டான்… அவளுக்கு கொடுத்த இடம் தனித்துவம் மிகுந்த பகுதியாக இதயத்தின் ஓரம் தனியே ஒரு சிறு கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. 
இன்று அவனுக்கான உணர்வுகளை, உறவுகளை, நிஜங்களை, நேசங்களை என்று மனம் சார்ந்த உளவியல் சார்ந்த அனைத்துக்கும் இனிவரும் நாட்களில் காரணியாக மாறி நிற்கப் போகிறவள் அஞ்சலிதான். இதயம் முழுக்க நிறைந்து நின்றுவிட்டாள்… அவன் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தத்தை காட்டிவிட்டாள்… இனி அவளையும் சவியையும் பிரிந்து ஒரு வாழ்க்கை என்பது அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. 
இன்னொரு இழப்பையோ பிரிவையோ சந்திக்கும் மன தைரியம் அவனுக்கு அறவே கிடையாது. உற்றவர்களை இழந்தபோதும் உயிர் வாழ்ந்தவன் இனி இவர்களை பிரியும் சூழல் வந்தால் மரணித்தே போவான். விட்டுச்சென்ற பொக்கிஷங்கள் வேறு வடிவில் கையில் வந்து கிடைத்தபின் விட்டுக் கொடுத்து விடுவானா..? இறுக்கி பிடித்துக் கொள்வான்… அவர்களுக்காக இனி என்ன வேண்டுமானாலும் செய்வான். 
அஞ்சலியை தன் மனைவியாக மாற்றி சவியை முறையாக தனது குழந்தையாக மாற்றி அடுத்தடுத்த வாழ்க்கையில் நகர நிறைய சவால்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றன. ஆனாலும் சமாளிக்கலாம் சமாளிக்க முடியும் என்ற தைரியம் மனதில் ஆழமாக பிறந்துவிட்டது… சமாளிப்பான். 
அண்டை வீடான அஞ்சலியின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஆழமாக கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவர்களின் மனநிலை என்ன..? அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார்கள்..? அல்லது மகளையும் பேத்தியையும் அடியோடு மறந்து ஒதுங்கிக்கொண்டனரா என்பது போன்ற விஷயங்களை கிரகித்துக் கொண்டுதான் இருக்கிறான். 
எந்நேரமும் அங்கு அசாத்திய அமைதி நிலவுகிறது… பெரியவர்களின் முகத்தில் ஒளி இல்லை… கறுத்து இருண்டு கன்றி இழப்பின் ரேகை அப்பட்டமாகவே தெரிகிறது. அவர்களோடு இவனுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதில்லை. காமாட்சியின் மூலம் அங்கு நடக்கும் நிலவரங்களை தெரிந்து கொள்கிறான். 
“எங்கிட்டெங்கிட்டோ தொழாவி பாத்துட்டாகளாம் தம்பி… புள்ள எங்கேயும் ஆப்படலையாம் (அகப்படவில்லையாம்). வடநாட்டுக்கு ஓடிப்போன அவ பொறந்தவன் இப்போவரைக்கும் போலீசுக்கு போகவிடவே மாட்டேங்குறானாம்… எடுபட்ட பய…கூடப் பொறந்தவள தொலைச்சவனுக்கு கௌரதை ஒன்னுதேன் கேடு. யாரும் வேணாம்னு திமிர் பிடிச்சு போனாள்ல அப்படியே போய் ஒழியட்டும்… இனி நான் மட்டுந்தேன் உங்களுக்கு மகே… புள்ள இல்லைன்னு நினைச்சுக்கங்க அப்படின்னு சொல்லிப்புட்டியான்… உண்மைய சொல்லணும்னா அஞ்சலி வீட்டை விட்டுப் போனதுல உள்ளுக்குள்ள அந்த பயலுக்கு சந்தோசந்தேன்… பின்னாடி காலத்துல இவன் தோள்மேல ரெண்டு பொட்டைகளும் ஏறி உட்கார்ந்துடுமோன்னு பயம் அவனுக்கு…இவன் எல்லாம் ஒரு அண்ணே… த்தூ…”
“அஞ்சலிக்கு டார்ச்சர் கொடுத்த அந்த இன்னொரு ஃபேமிலி..?”
அஞ்சலியின் கணவன் குடும்பம் என்ற வார்த்தை அவன் தொண்டைக் குழிக்கு கூட வரவில்லை. இந்த நொடி அவள் அவனது சரிபாதி அல்லவா.
“மூனு நாளைக்கு முன்னாடிகூட வந்துட்டு போனாய்ங்க. அப்பப்ப எட்டி பாத்துட்டுதேன் போறாய்ங்க… எல்லாம் காரணம் இருக்கு தம்பி… நாந்தேன் சொன்னேனே… அந்த செத்துப் போன பய பேருல இருக்குற பணம் அம்புட்டும் அஞ்சலி பேர்ல இருக்கு… அதுவும் லட்சக்கணக்குல இருக்கும் போல… அந்த காசுக்காகத்தேன் வலையை போட்டு தேடிட்டு திரியிறாய்ங்க… அதை எழுதி வாங்கிட்டாய்ங்கன்னா இந்த தெருப் பக்கம் திரும்பிக்கூட பாக்க மாட்டாய்ங்க…ஆனா அந்த பணத்தை அந்த புள்ள இவய்ங்களுக்கு ஏன் விட்டுக் கொடுக்கணும்..? அவ புருஷன் வீட்டு சொத்து..? நாளைக்கு அவளுக்கும் அவ பிள்ளைக்கு வேணாமா..? அப்படியே அவ அம்புட்டாலும் காசை கொடுக்கக் கூடாதுங்கிறேன்…”
காமாட்சி பேசிக் கொண்டே செல்ல குருவின் முகம் அசூசையாய் சுருங்கியது.
‘அவளுக்கு நான் இருக்கேன்… கண்டவன் சொத்து அவளுக்கு எதுக்கு..? என் பிள்ளைக்கு எதுக்கு..?’
தொண்டைக்குழிவரை வந்த வார்த்தையை முயன்று முழுங்கினான்.
சரி செய்ய வேண்டிய பிரச்சனைகள் தலைக்குமேல் இன்னும் நிறைய இருக்கின்றன என்பதும் தெரிந்தது. 
சம்பந்தி வீட்டின் கேடுகெட்ட குணம் மொத்தமாய் தெரிந்துவிட மகள் எங்கேயோ சென்று நிம்மதியாக எப்படியும் பிழைத்துக் கொள்ளட்டும் என்று எண்ணுகின்றனர் அஞ்சலியின் பெற்றோர். கண் போனபின் சூரிய நமஸ்காரம். வற்புறுத்தி அமைத்துக் கொடுத்தாலும் அருணுடன் அவள் வாழும் வாழ்க்கை நிச்சயமாக சுகிக்கப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்தது. அதிலும் அவள் போன பின்பு வெறிபிடித்து ஆடிக் கொண்டிருக்கிறது அந்த கூட்டம். ஆட்களை ஆங்காங்கே ஏவி அவளைத் தேடும் வேலையை துரிதப்படுத்தி இருப்பது என்னவோ அவர்கள்தான். அனைத்தும் பணத்திற்காக.
தெய்வத்திடம் பிரார்த்தனையை மட்டும் வைத்துவிட்டு இயலாமையோடு உழன்று கொண்டிருக்கின்றனர் கையாலாகாத இந்த பெற்றோர். 
இங்கு நடந்து கொண்டிருக்கும் சூழல் பற்றி அஞ்சலியிடம் அவன் தெரிவிப்பதில்லை. அங்கு அவள் நிம்மதியாக இருக்கிறாள். தன்மேல் ஊடல் கொண்டாலும் அந்த ஊடலுக்கு பின்னணியில் பெரும் காதல் ஒளிந்திருக்கிறது. அந்த மனநிலையோடு நிம்மதியாக அவள் இருக்கட்டும் என்று இங்கு நடக்கும் நிலவரங்கள் பற்றி அவளிடம் அவன் தெரிவிப்பதே இல்லை. அதுவும் இல்லாமல் அவனிடம் பேசாமல் கூடுதலாய் அவனை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறாளே அவன் ராட்சஷி. 
தொடர்ந்து இரண்டு வாரங்களாக ஊருக்குச் செல்லவில்லை. அத்தனை வேலை… மகளின் முகம் மொத்தமாய் வாடி இருக்கிறது… அவன் வரவுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் தெரிந்தது. ஏதேதோ சொல்லி சமாளித்தவன் பரீட்சை முடிந்தவுடன் அடுத்து 10 நாட்கள் விடுமுறை இருப்பதை அவ்வப்போது அவளுக்கு கூறி சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறான். 
அவனும்கூட அந்த பத்துநாள் விடுமுறையை ஆவலாகத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்… அவன் ஆசை மகளை நெஞ்சோடு அள்ளி அணைத்துக் கொள்ள… கூடுதலாக அவன் செல்லக் கிறுக்கியையும்தான்.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!