Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே-01

    வீடு முழுக்க பேச்சுச் சத்தம் கேட்ட வண்ணம் இருக்க, ஒருத்தி மட்டும் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள்.

“இதோப் பாருங்க நிலாப்பா இந்த கல்யாணத்தில் எந்த குறையும் யாரும் சொல்ற மாதிரி நடந்திடக் கூடாது. ஊரேப் பாத்து மூக்குல விரலை வைக்கணும் அப்படி ஜாம் ஜாம்னு நடத்துறோம்.”என்று உற்சாகமாக சொல்லிக் கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி வளர்மதி.

“அதுக்கென்ன வளரு. நீ சொல்ற மாதிரியே செஞ்சுட்டா போச்சு”என்றார் அவரின் கணவன் தேசிகன்.

“ஆமாம் தம்பி. வளரு சொல்ற மாதிரி தான் கல்யாணம் இருக்கணும். நம்ம சொந்தக்காரங்க ஒருத்தரை விடக் கூடாது. எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சிடு”என்றார் தேசிகனின் அம்மா பொன்னி.



Advertisement

“சரிம்மா”என்றவர் “நீயென்னடா செல்வம் வாயைப் பார்த்துட்டே நிற்கிற, போய் பேப்பர் பேனா எடுத்துட்டு வா. நாளைக்கு நிச்சயம் பண்ண போறதுக்கு தேவையான சாமான் வாங்கணும்”என்று அங்கே நின்றிருந்த  அவரின் இரண்டாவது மகன் ஆழிச்செல்வனை விரட்டினார்.

“இதோ கொண்டு வர்றேன் ப்பா”என்று ஆழியன் நகர உள்ளே சமைத்துக் கொண்டிருந்தவளுக்கு பெருமூச்சு ஒன்று எழுந்தது.

“இன்னமுட்டுமா காபி போடுற?”என்று சத்தமிட்டார் வளர்மதி.

காபி கோப்பை நிரம்பிய தட்டுடன் வேகமாக வெளியே வந்தாள் நீரதி.

Advertisement

“எவ்வளவு நேரம் நீரு”என்று காஃபி தட்டை வாங்கிக் கொண்டாள் அந்த வீட்டின் மூத்த மருமகள் தரங்கினி.

“அத்தை !”என்று அழைத்த தரங்கினி காஃபியை வளர்மதியிடம் நீட்ட முகமலர்ச்சியோடு வாங்கிக் கொண்டவர் “எல்லாருக்கும் குடுத்துட்டு நீயும் குடி தரு”என்றார் வாஞ்சையாக.

Advertisement

“சரிங்கத்தை”என்றவள் அங்கிருந்த அனைவருக்கும் காஃபி கொடுத்து முடித்து தனக்கும் எடுத்துக் கொண்டு அமர ஆழியன் பேப்பர் பேனாவோடு வந்தான். அந்த காஃபியை அவனுக்கு தரப் போனவளை தடுத்த வளர்மதி “நீ குடி”என்றவர் “நீரு உன் வீட்டுக்காரனுக்கு காஃபி கொண்டு வா”என்றார் சத்தமாக.

‘எல்லாருக்கும் சேர்த்து தானே குடுத்தேன்’என்ற யோசனையோடு காஃபியை மீண்டும் கலந்து எடுத்துக் கொண்டு வர அங்கே அவனுக்கென்று கொடுத்து விட்டதை தரங்கினி குடிப்பது கண்டு தன் கணவனுக்கு காஃபியை நீட்டினாள் நீரதி. சற்று முன் தான் தரங்கினிக்கு அவளுக்கு பிடித்தமான ஏலக்காய் பொடி போட்டு தேநீர் கலந்து தந்திருந்தாள். அதனாலேயே அவளுக்கு எடுத்து தராமல் மற்றவர்களுக்கு தந்து அனுப்பி இருக்க இப்போது அந்த காஃபியை எடுத்து குடிக்கவும் சற்று எரிச்சல் ஆகினாள்.ஆனால் எரிச்சலை வெளிக்காட்ட முடியாதே.

“என்ன அண்ணி அண்ணனுக்கு மட்டும் ஸ்பெஷல் காஃபியா?”என்று கிண்டல் அடித்தான் அங்கிருந்த வீட்டின் இளவல் வெற்றிதீபன். அவனுடைய திருமணம் பற்றி தான் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது.

Advertisement

அதனைக் கேட்ட ஆழியனுக்கு முகம் சுருங்கி தன் பெற்றோரைப் பார்க்க, அவர்களோ அசூசையாக காஃபியை அருந்தினர்.

இதற்கிடையில் மெல்லிய சிரிப்பை உதிர்த்த நீரதி, மீண்டும் சமையலறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

“சட்டுனு குடிச்சுட்டு லிஸ்டை எழுது செல்வம். தீபு வாய் பேசாம உட்கார்”என்று இரண்டு மகன்களையும் அதட்டி விட்டு வளர்மதி பொருட்களை பட்டியலிட்டார்.

ஒரே மிடறில் காஃபியை குடித்த ஆழியனோ கடமையை ஆற்ற அமர்ந்து விட்டான். ‘மனைவி என்ற ஒரு ஜீவன் அங்கில்லையே மற்றவர்கள் எல்லாம் குழுமி உள்ளனரே?’ என்ற எண்ணம் கூட இல்லாமல் எழுதத் துவங்கினான். பிள்ளையார் சுழி போட்ட தருணம்

“நான் வர்றதுக்குள்ள ஆரம்பிச்சுட்டீங்களா. என்ன அவசரம்?”என்றபடி உள்ளே நுழைந்தாள் அந்த வீட்டின் கடைக்குட்டி கவிநிலா.

“நீ இல்லாம விஷேஷமா நிலாக்குட்டி. மாப்ள நல்லா இருக்காரா? கூட வரலையா தனியா வந்தியாடா?.உள்ள வா வா இப்ப தான் லிஸ்ட் எழுத எடுத்து வைக்க சொன்னேன்”என்று மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் வரவேற்க, மற்றவர்களும் வீட்டின் பெண் பிள்ளையைக் கண்டு உற்சாக வரவேற்பு தர கவிநிலா முகம் பரவசமாகியது.

“அவர் தான் முன்னாடி நீ போ ஈவ்னிங் ஆஃபிஸ் முடிஞ்சதும் இங்க வர்றேன்னு சொன்னார் மா.”என்றவள் தீபன் அருகே அமர்ந்து கொண்டாள்.

“வீட்டுப் பொண்ணு வந்திருக்கா இன்னும்  தண்ணி கொண்டு வந்திருக்காளா பாரு என்னத்த சொல்லி என்ன? அதெல்லாம் குடும்பத்துல சொல்லி வளர்த்து இருந்தா தான”என்று நொடித்த பொன்னி “ஏ நீரா இன்னும் உள்ள என்னதான் பண்ற? நிலா வந்திருக்கா பாரு”என்று அமர்ந்த இடத்தில் இருந்தே அதட்டினார்.

“நான் போறேன் பாட்டி”என்று எழுந்த தரங்கினியை அமர்த்தி “அவ கொண்டு வருவா. புள்ள பெத்தவ நீ அலைவியா?”என்றார்.

அதற்குள் நீரதியே அங்கே வந்துவிட்டாள்.

“வா நிலா எப்படி இருக்க அண்ணா வரலை?”என்று கேட்டுக்கொண்டே தண்ணீரைக் கொடுத்தவள் “இதை சாப்பிடு நிலா”என பணியாரத்தை கொடுத்தாள்.

“நல்லா இருக்கேன்.அவங்க ஈவ்னிங் வருவாங்க. “என்றவள் அவள் கொடுத்ததை உண்ண, அதற்கு மேல் நமக்கு அங்கே வேலை இல்லை என்பது போல மீண்டும் உள்ளே சென்று விட்டாள் நீரதி.

வளர்மதி மகளின் கேசத்தை வாஞ்சையாக வருட ஆழியன் அப்பாவின் முகம் பார்த்தான்.

தேசிகன் ஒவ்வொன்றாய் கூற கடகடவென்று எழுதி அவரிடம் நீட்டினான்.

“என்ன செல்வம் என் கிட்ட நீட்டுற?. நீயும் பெரியவனும் போய் வாங்கிட்டு வந்திடுங்க நான், உங்க அம்மா, தீபன், நிலா, தரு, எல்லாம் போய் துணிமணி எடுத்துட்டு வர்றோம்”என்றார்.

“சரிங்க ப்பா”என்றவன்,’ ஏன் தன் மனைவியை அழைத்துச் செல்லவில்லையா?’ என்றெல்லாம் கேட்கவில்லை.

“நீரு அம்மாவைப் பார்த்துட்டு வீட்டில் இருக்கட்டும். சாயங்காலம் பிள்ளைங்க வந்திடும். அதுகளுக்கு செய்யணும் யாராவது வீட்டில் இருக்கணும்”என்ற வளர்மதி, “ஒண்ணு ரெண்டு சொந்தம் எல்லாம் இங்கேயே வந்திடுறதா சொன்னாங்க வந்திடுவாங்க”என்றார்.

‘நீ கேட்கும் முன்பே உன் மனைவியை கூட்டி செல்லாத காரணத்தை நான் சொல்லி விட்டேன்’ என்பது போல மகளோடு தன்னறை புகுந்திருந்தார் வளர்மதி. அவர் பின்னே தேசிகனும் செல்ல, அங்கிருந்த ஒவ்வொருவராய் நகர்ந்தனர்.

தேசிகன் வளர்மதி தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் மூத்தவன் அமுதவாணன், இரண்டாமவன் ஆழிச்செல்வன் மூன்றாவது வெற்றிதீபன் நான்காவதாக ஒரு பிள்ளை பிறந்து இறந்திருக்க ஐந்தாவது பிள்ளையாய் பிறந்தவள் தான் கவிநிலா. மூத்தவன் அமுதவாணனுக்கு தன் அண்ணன் மகள் தரங்கினியை திருமணம் செய்து வைத்திருந்தார் வளர்மதி. இரண்டாமவன் ஆழிச்செல்வன் நீரதியை காதல் திருமணம் செய்து கொள்ள, வீட்டினில் சற்று மனத் தாங்கல் அனைவருக்கும். மகன் செய்த செயலில் வளர்மதிக்கும் தேசிகனுக்கும் கோபம் இருந்தாலும் வீட்டின் ஒற்றுமை எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று அவர்களை ஏற்றுக் கொண்டனர். இன்னொரு காரணம் அவர்களின் குடும்ப தொழில் அதில் ஆழிச்செல்வன் பங்கு என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தது. வெளிப்படையாக பார்ப்பதற்கு ஏற்றது போல தெரிந்தாலும் ஆழ்ந்து நோக்கினால் அவர்கள் காட்டும் வேற்றுமை புரியும். மகன் காதல் திருமணம் செய்ததினால் தன் மகளுக்கு வரன் அமையாமல் போய்விடுமோ என்ற கவலை பெற்றவர்களுக்கு. சொல்லி வைத்தாற் போல கவிநிலாவிற்கு இருபத்தி நாலில் தான் மாப்பிள்ளையே வரத் துவங்கியது. இருபத்தி ஐந்தில் திருமணம் ஆகி தற்போது மூன்று மாதங்கள் ஆகிறது.

நீரதிக்கு ஒரு அண்ணன் மட்டும் அவனும் சவுதியில் குடும்பத்துடன் வசிக்கிறான். நீரதியின் அன்னை சமீபத்தில் தான் இறந்திருந்தார். அவர்கள் வீட்டில் காதலுக்கு பெரிதாக எதிர்ப்பு இல்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால் தங்கையை பெரிதாக கண்டிக்கவில்லை அவளின் அண்ணன். அவளுக்கு திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான் அவன். அவளின் அண்ணிக்கு பிடித்தம் இல்லை என்றாலும் பெரிதாய் எதிர்க்கவில்லை அவள். வருடம் ஒரு முறை மட்டும் வந்து தங்கையை பார்த்து செல்கிறான் மற்றபடி பேச்சுக்கள் எல்லாம் கைபேசியில் மட்டும் தான். உன் வாழ்க்கை நீ தேர்வு செய்தது அதை நீ தான் பார்க்க வேண்டும் என்று முடித்துக் கொண்டனர் அவளின் குடும்பம். ஆழிச்செல்வன் பற்றி எந்த எதிர்மறை எண்ணங்களும் தோன்றாத காரணத்தால் அவனைப் பற்றி எதுவும் பேசவில்லை அவர்கள். எங்கள் கடமையை நாங்கள் செய்து விட்டோம் என்ற நிலைப்பாட்டில் தான் அவளின் அண்ணன் அண்ணி இருந்தனர்.அமுதவாணன் தரங்கினி தம்பதிக்கு ஒரு பெண் பிள்ளை நிலஞ்சனா மூன்று வயது ஆகிறது.தற்போது ஆறுமாதம் முன்பாக தரங்கினி ஒரு ஆண்மகனை  பெற்றெடுத்திருந்தாள்.ஆழிச்செல்வனுக்கும் நீரதிக்கும் ஒரு பெண் பிள்ளை ஸ்வர்ணிகா ஐந்து வயதாகிறது.அறைக்குள் நுழைந்த ஆழியன் வேலைக்குக் கிளம்பினான்.“சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் ங்க”என்று நீரதி உள்ளே வரவும் “ஹ்ம்ம்”என்று விட்டு தன் வேலையை கவனிக்க, நீரதி மீண்டும் வெளியே சென்றாள் பெருமூச்சுடன். இருவருக்கும் காதல் திருமணம் என்று வெளியே கூறினால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு இருந்தது அவர்களின் இல்லறம்.திருமணம் ஆகி வந்த புதிதில் “வயசுப் பொண்ணு வீட்டுல இருக்கிறதை மறந்து கல்யாணம் தான் முடிச்சாச்சு. அதுக்காக எங்க பார்த்தாலும் ஒட்டிட்டு அலையணும்னு இல்லை பார்த்து சூதானமா நடந்துக்க”என்று பொன்னி நொடித்ததில் நீரதிக்கு திக்கென்றது என்றால் ஆழியனோ “அவங்க கல்யாணம் பண்ணி வச்சதே பெருசு ரதி. அவங்க குற்றம் சொல்ற மாதிரி நாம நடந்துக்க வேண்டாம்”என்றிருந்தான்.“சரிங்க”என்றவளுக்குமே நிலாவின் துறுதுறு பார்வை அவளின் ஆவல், கவனிப்பு எல்லாம் கண்டு கணவனோடு வெளியில் நெருங்கி நிற்க கூடாது என்று எண்ண வைத்து விட்டது. புதுமணத் தம்பதியாய் அறைக்குள் இருந்தால் போதும் என்று நினைக்க ஆழியனோ வேறொரு எண்ணத்தில் இருந்தான். வயதுப் பெண்ணை வீட்டில் வைத்து கொண்டு நாம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற குற்றவுணர்வை குடும்பமே ஏற்படுத்தி இருந்தது. திருமணத்திற்கு முன்பான காதல் பார்வைக்கு கூட பஞ்சமாகிப் போனது திருமணம் ஆன பிறகு.இவர்களுக்கு திருமணம் முடித்த மூன்று மாதங்கள் கழித்து தான் அமுதவாணன் தரங்கினி திருமணம் நடந்தது. ஊரையே திரட்டி பெருமிதமாக திருமணம் நடத்த எண்ணி இருந்த தேசிகன் ஆழியனின் திடீர் திருமணத்தால் அமுதவாணனுக்கு எளிமையாக நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து திருமணத்தை முடித்து இருந்தார். அதற்கே ஏன் இளையவனுக்கு விரைவில் திருமணம் முடித்தீர்கள் என்ற கேள்விக்கும் அதற்குள் பிள்ளையா என்ற கேலிச் சிரிப்புக்கும் பதில் கூற முடியாமல் அவமானமாக உணர்ந்தனர். ஆம் அமுத வாணன் தரங்கினி திருமணத்தின் போது நீரதி இரண்டு மாதங்கள் முடிந்து மூன்றாம் மாதத்தில் இருந்தாள்.

 

 

…… தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!