Skip to content
Post Views: 1,712
சக்தி போனில் சொன்ன தகவலால், தங்கமணி அருந்ததி சகுந்தலா ஜெகதீஷ் பாலமுரளி என மொத்த பேரும் மருத்துவமனைக்கு வந்து சேர, அதன் பின் எங்கிருந்து வாய்க்கும் தனிமை பிள்ளையை பெற்றவர்களுக்கு.
நர்ஸ் வந்து ஒரு மருந்து சீட்டை கொடுக்க அதை வாங்கவென வெளியே சென்றிருந்தான் தீனா.
Advertisement
யமுனாவோ பிள்ளை பெற்ற சோர்வில் உறங்கியிருந்தாள்.
Advertisement
“குட்டி மாமா.. குட்டி பாப்பா.. பாரு..” என பாலமுரளி துள்ளி குதிக்க, அண்ணன் மகளை ஆசையாய் தடவி மகிழ்ந்தான் ஜெகதீஷ்.
Advertisement
“ஏங்கிட்ட ம்மா..” என கேட்டு அழுத பாலமுரளியை அங்கிருந்த இன்னொரு மெத்தையில் கால் நீட்டி அமர வைத்த வாணி, பிள்ளையை அவர் கையால் பிடித்த படி வைக்க, அடுத்த நொடி, “ங்கே…” என்ற அழுகை அந்த சேட்டைக்காரியிடமிருந்து.
Advertisement
அதில் பாலா பதறி, “ம்மா..” என கத்த.. சுற்றியிருந்தவர்கள் எல்லாம் சிரித்தே விட்டனர் பாலாவின் முகம் காட்டிய பாவனை கண்டு.
வாணி அழும் பிள்ளையை கையில் வைத்து சமாதானம் செய்ய முயன்றபடி இருக்க, “க்கா.. என்கிட்ட பாப்பாவ கொடு..” என்றான் ஜெகதீஷ் ஆசையாய்.
“பாப்பா அழுகைய நிறுத்தி தர்றேன் ஜெகா..” என வாணி சொல்ல,
“நா பாத்துப்பேன் கொடுக்கா..” என்றான் ஏக்கமாய்.
‘சரி.. அவன் காலிலும் வைத்து தூக்கிக்கொள்ளலாம்..’ என நினைத்து அவனின் மடியில் வைக்க,
அழுகையை நிறுத்தி.. தன் சிறிய தந்தையை தன் கொட்டைப்பாக்கு கண்ணால் உற்று பார்த்து சிரித்தாள் நளினமாய்.
“அடி ஆத்தே.. இதப்பார்ரா..! ஏன் டீ.. எம்மகன் தொட்டா அழுகறே..
அதே உன்னோட சித்தப்பன பாத்தா சிரிப்பு வருதோ..?” என வாணி அங்கலாய்க்க ஜெகதீஷிக்கோ அத்தனை மகிழ்ச்சி.
“பட்டும்மா.. சித்தப்பா கிட்ட வந்துட்டீங்களா..?” என அவன் சிரித்துக்கொண்டே பேச, மீண்டும் ஒரு புன்னகை அந்த அழகியின் இதழில்.
அப்போது உள்ளே வந்த தீனாவின் கண்ணிலும் இந்த காட்சி விழ, “டேய் தம்பி உம்புள்ள இப்பவே ஆளு அடையாளம் கண்டுக்கறாடா.. பாரு ஜெகாகிட்ட அவ சிரிக்கறத..” என வாணி சந்தோஷமாய் சொல்ல,
“என்னோட புள்ளைங்க ரெண்டும் எப்பவும் ஒத்துமையா தான் இருக்கும்..” என்றவனின் வார்த்தையில் புதைந்திருந்த அர்த்தத்தில் அங்கிருந்த அத்தனை பேரின் நெஞ்சமும் நெகிழ்ந்து போக
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் சாயல்.
—
ஆறு மாதங்களுக்கு பின்…
“மாப்பிள்ள நீங்களும் யமுனா புள்ளையோட சேந்து நில்லுங்க..” என்ற மரகதம் தன் மகள் மருமகனோடு பேத்திக்கும் ஆலம் சுற்றி வரவேற்றார் தன் இல்லத்தில்.
கங்காவும்.. கிருஷ்ணாவும், ‘எப்போதடா இதெல்லாம் முடியும்..? அக்கா கையிலிருக்கும் பிள்ளையை தூக்கலாம்..’ என ஆர்வமாய் காத்திருந்தனர்.
பிள்ளை பிறந்த போது வந்து நேரில் பார்த்தது தான் என்றாலும், தினமும் வீடியோ காலில் பேசுவதை மட்டும் விடவில்லை இருவரும்.
மரகதம் முதல் முறை திருப்பூர் வந்தது முதல் அக்காவுடன் வீடியோ காலில் பேசுவது நடப்பது தான். இப்போது அவர்களுக்கு அவர்களின் அக்கா மகளே பிரதானம்.
ஆலம் சுற்றிய பின் உள்ளே வந்தவர்களை பொதுவாக, “வாங்க..” என அழைத்த முத்தரசன், அமைதியாய் ஒரு சேரில் அமர்ந்து கொள்ள அதுவரை இருந்த இதம் லேசாக மங்கியது யமுனா முகத்தில்.
பிள்ளை பிறந்த போது நேரில் வந்து பார்த்து, தனக்கு சீர் செய்ய வைத்திருந்த பணத்தில் மொத்தமாக பிள்ளைக்கு தங்கமாய் எல்லாவற்றையும் வாங்கி வந்து கொடுத்த போதும் யமுனாவிடம் பேசவில்லை அவர்.
இப்போது அவளாக தேடி வந்து நின்ற போதும், இப்படி இருந்தால் என்ன செய்வது..? என புரியாது விழிகள் கலங்க தீனாவை ஏறிட்டு பார்க்க, ‘எல்லாம் சரியாகும்..’ என கண்ணாலேயே ஆறுதலை தந்தான்.
தீனா குழந்தையை தன்னோடு சேர்த்து பிடித்திருக்க, புது இடம் என்பதால் தலையை நாலா புறமும் திருப்பி பார்த்தவள் அங்கிருந்த அனைவரையும் கூர்ந்து பார்க்கவும் தவறவில்லை.
தன்னை பார்ப்பதை கண்ட கிருஷ்ணா அவளிடம் நெருங்கி, “மான்யா..” என்றிட,
அவனை அடையாளம் கண்டது போல குஷியாய் சத்தமிட்டு கை காலை ஆட்டினாள் குழந்தை.
“மாமா.. என்ன கண்டுபிடிச்சிட்டா..!!” என கிருஷ்ணா சந்தோஷிக்க,
“டேய் இருடா.. நா பாப்பாகிட்ட பேசறேன்..” என்ற கங்கா,
“மான்யா குட்டி.. சித்தி பாருங்க..” என கை தட்டி அழைக்க, அவளை பார்த்தவள் அவளிடமும் தனது பொக்கை வாயை காட்டி சிரித்தாள்.
ஆசையாய் கை நீட்டியவர்களிடம் செல்லாமல் அவள் போக்கு காட்ட, அவர்கள் குழந்தையிடம் கவனத்தை செலுத்த யமுனாவோ தன் தந்தையிடம் நெருங்கும் வழி புரியாத தவிப்போடு நின்றிருந்தாள் ஒரு ஓரமாக.
“ரொம்ப நேரமா கையிலயே வச்சிருக்கீங்க. ஏ கங்கா.. அந்த பாய நடு கூடத்துல போட்டு பெட் சீட்டை போட்டு விடு. புள்ள காத்தாட கொஞ்ச நேரம் இருக்கட்டும்..
நீங்க புள்ளைய படுக்க வச்சுட்டு உட்காருங்க மாப்பிள்ள..” என குடிக்க கொண்டுவந்து கொடுத்துவிட்டு மரகதம் சொன்னார்.
அதன் படி படுக்க வைக்கப்பட்ட குழந்தை படுத்த வேகத்தில் குப்புற திரும்பி வயிற்றால் உந்தி கைகளை ஊன்றி நகர ஆரம்பித்தாள்.
“மான்யா எங்கே போறீங்க..? இங்கே பாருங்க..” என சித்தியும், மாமனும் மாறி மாறி அழைக்க.. அவர்களிடம் போக்கு காட்டிக்கொண்டு வேகமாய் நகர்ந்து தள்ளி அமர்ந்திருந்த முத்தரசனை நெருங்கியிருந்தாள்.
அதுவரை அவர்களின் செய்கையை பாராமல் பார்த்திருந்த முத்தரசன், தன் காலடியில் வந்து தலை தூக்கி தன்னையை பார்க்கும் பேத்தியை விட்டு கண்ணை திருப்ப முடியவில்லை.
அவர் தன்னை பார்க்கிறார் என அறிந்தவளோ அசத்தலாய் ஒரு புன்னகையை உதிர்க்க, மொத்தமாய் கவிழ்ந்து போனவர் குனிந்து தூக்கியிருந்தார் பேத்தியை.
அதுவரை சிரிப்போடு இருந்த பிள்ளை அவர் தூக்கியதும் என்ன நினைத்தாளோ.. வைத்தாளே ஒரு அடி அவர் கன்னத்தில்.. ஒரு நொடி அந்த இடமே நிசப்தம் ஆனது.
சின்ன பிள்ளை அடி வலிக்க வில்லை தான்.. ஆனால் தன் பிள்ளைக்கு தான் தந்த தண்டனைக்கு பதிலடியாய் அதை எண்ணியவருக்கு நெஞ்சுவரை வலித்தது.
“ஏய் மானும்மா..” என தீனா அவரிடம் ஓட,
யமுனாவும், “என்னடீ பண்ணறே..?” என ஓடியிருந்தாள் தந்தையிடம்.
“சாரி மாமா..” என தீனா சங்கடமாக பேச,
“அப்பா வலிக்குதாப்பா..?” என்றாள் யமுனா அவரின் கன்னத்தை தடவி பரிதவிப்போடு.
அதுவரை இழுத்து பிடித்திருந்த வைராக்கியம் எல்லாம் தவிடு பொடியாக தன்னிடம் நின்றிருந்த மகளை தன் கரத்தில் அணைத்து பிடித்தவரின் கண்கள் கலங்கும் போலானது.
அவர்களின் நிலை கண்ட மற்றவர்களும் உணர்வின் பிடியில் இருக்க,
“ம்ம்ம்ஆ…” என யமுனாவை பிடித்திருந்த தனது தாத்தாவின் கையை தள்ளி அங்கிருந்த சூழ்நிலையை மாற்றினாள் மான்யா.
“அது உன்னோட அம்மா ஆகறதுக்கு முன்னே என்னோட பொண்ணுடா..” என சிரிப்போடு முத்தரசன் சொல்ல,
மேல் கண்ணால் முறைத்தவள், “ம்ம்ம்ஆ..” என யமுனாவிடம் தாவியிருந்தாள்.
“சரி விடு.. நா என்னோட மாப்பிள்ள கூட சேந்துக்கறேன்..” என முத்தரசன் தீனாவிடம் நகர,
“ப்ப்ஆ…” என துள்ளிக்கொண்டு யமுனாவிடமிருந்து அவனிடம் கையை உயர்த்தி தூக்க சொல்லி உதட்டை பிதுக்க, குழந்தையின் செய்கையில் அந்த இல்லமே சந்தோஷத்தில் பூரித்தது.
‘மருமகனுக்கான விருந்து..’ என தடபுடலாக ஒரு உணவு பரிமாறல் முடிந்து எல்லாரும் அமர்ந்திருக்க,
அனைவரையும் தனது சேட்டையால் ஒரு பாடு படுத்தி ஆட்டம் போட்டு, தூக்கத்திற்கு கண்ணை கசக்க ஆரம்பித்தாள் பூஞ்சிட்டு.
“உள்ள ரூம்ல தொட்டில் கட்டி இருக்கு. அதுல புள்ளைய போட்டுட்டு நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..” என்ற தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு உள்ளே சென்றாள் யமுனா.
“மாப்பிள்ள நாங்க வயக்காடு வரைக்கும் போயிட்டு வர்றோம். நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..” என நாசுக்காக மற்றவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தார் மரகதம்.
அனைவரும் சென்றதும் புன்னகையோடு கதவடைத்து அறைக்கு வந்தவன், மகளை தொட்டிலில் போட்டுவிட்டு திரும்பியவளை வாகாய் அணைத்துக்கொண்டு,
“நா சொன்னேனே பாப்பா, குழந்தை வந்தா எல்லாம் சரியாகிடுமுன்னு.. இதோ இப்ப சரியாகிடுச்சா..?” என கெத்தாக கேட்க,
அவனிடமிருந்து விலகி அவனை மேலிருந்து கீழாக யமுனா ஒரு பார்வை பார்க்க,
“என்ன லுக்கு.. அய்யா கெத்து எப்படி.. சொன்னத செஞ்சிட்டோம் பாத்தீயா..?” என காலரை தூக்காத குறையாய் சொன்னான்.
கண்ணாலேயே தனக்கு அருகே நெருங்கி வருமாறு அழைத்தவள் பாவனையில்.. அவளின் தந்தையோட சேர்த்து வைத்ததற்காக ஏதோ தனக்கு ஸ்பெஷலாக தரப்போதாய் எண்ணி, “ம்ம்.. யாரும் வீட்டுல இல்ல.. சோ தாராளமா நல்லாவே கவனிக்கலாம் என்னை..” என தன் உதட்டை காட்ட,
“அய்யே.. ஆச தா.. நீங்க பண்ண சாதனைக்கு ரொம்ப முக்கியம்..!” என அவள் தலையை பின்னால் நகர்த்த,
“ஏன் நா பண்ணது சாதனை இல்லையா..?” என்றான் ரோசமாக.
“இப்ப பண்ணத.. கல்யாணமான பத்து மாசத்துல புள்ளய பெத்துக்க வச்சு.. சாதிச்சு காட்டியிருந்தா பாராட்டலாம்.
ரெண்டு வருஷம் கழிச்சு.. அவரே சமாதானம் ஆக ரெடியா இருக்கும் போது பண்ணிட்டு.. எதுக்கு இந்த பில்டப் கண்ணழகா..!” என்றிட,
எப்போதும் போல தன்னை வாரியவளின் செய்கையில், “ஞே..!” என்ற ஆஸ்த்தான பார்வையோடு நின்றிருந்தான் தீனதயாளன்.
அவனின் பாவனையில் வாய்விட்டு சிரித்தவளின் சிரிப்பை ஆசையோடு தன்னிதழ்களுக்குள் பதுக்கிக்கொண்டான் இன்பமாய்.
நொடிகள் நிமிடங்களாய் நீண்டு முடிய சுவரில் சாய்ந்து கால் நீட்டி தீனா அமர்ந்திருக்க, அவனின் காலில் வாகாய் அமர்ந்து அவனின் கழுத்தோடு கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் யமுனா.
எப்போதையும் விட இன்னும் மலர்ந்து விட்டிருந்த தன்னவனின் முகம் பார்த்த யமுனா,
“என்ன உங்க முகம் இன்னைக்கு இன்னும் கொஞ்சம் ஓவர் ப்ரைட்டா இருக்கு..?” என அவனின் தாடி அடர்ந்த கன்னத்தில் லேசாக தன் கன்னத்தை உரசியபடி கேட்டவளை கண்டவன்,
“மனசுல இருந்த ஒரு குறையும் இன்னைக்கு எனக்கு தீர்ந்திடுச்சு பாப்பா.
ஒத்த உறவு கூட எனக்கு நிரந்தரமில்லையோ ன்னு ஏங்கி தவிச்சு கிடந்தேன் பாப்பா நீ என் வாழ்க்கையில வர்ற வரை..
இப்போ பாரு என்னை சுத்தி எத்தன உறவுன்னு… எல்லாமே யாரால.. உன்னால மட்டும் தான்.
கங்கை நதியில நீராடினா அவங்க அத்தனை பாவங்களும் சாபங்களும் நீங்குமுன்னு சொல்வாங்க.. ஆனா எனக்கு இந்த யமுனா தான் என்னோட தனிமை சாபத்தை தீர்த்த புண்ணிய நதி.. என்னோட ஜீவநதி..” என்றவனின் வார்த்தையில் அகமும் புறமும் மலர்ந்து அவளவனின் இதயத்தில் தன் முகம் சேர்த்தாள் பாவை.
ஒரு துளி நீா் வேண்டி
நின்றேன் அடை மழை தந்து
என்னை மிதக்கவிட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து
நின்றேன் சுகங்களை தந்து
என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம்
நீா்த்துளியை
மகிழ்ச்சி தந்து உலரவைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொா்க்கங்களை கண்ணருகில்
காட்டினாய்
கருப்பு நிறத்தில்
கனவு கண்டேன்
காலை நேரம் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்தின் தேவதையே
வண்ணங்களை தந்துவிட்டு என்
அருகில் வந்து நில்லு
error: Content is protected !!