Skip to content
Post Views: 4,715
தூறல் – 20
வழக்கமான வேகத்தில்தான் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. அதிலும் நள்ளிரவு நேரத்தில் போக்குவரத்தற்ற பைபாஸ் சாலையில் காற்றைக் கிழித்தபடி சீரான வேகத்தில்தான் சென்று கொண்டிருந்தது பேருந்து. ஆனால் உள்ளே அமர்ந்திருந்த ஒருவனுக்கோ பேருந்தும் நகராமல் நேரமும் நகராமல் போனதுபோல் அப்படி ஒரு அவஸ்தை.
Advertisement
மூன்று வாரங்கள் கழித்து அவன் பொக்கிஷங்களைக் காண ஓடோடிக் கொண்டிருக்கிறான். அதிலும் இன்றுவரை அவனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் ஆட்டம் பழக்கும் பெரியவளின் மீதுதான் கோபத்தோடு காதலும் பெருகிக் கொண்டே இருக்கிறது. அன்பான அவளது வார்த்தையை கேட்காமல் மிகவும் தவித்துதான் போனான்.
இதற்கு முன்பும் கனிவும் ஆதரவும் பொங்க பெரிதாக அவனிடம் பேசிக் கொண்டதில்லை. அமைதியாக பேசுவாள்… அக்கறையாக அவ்வப்போது சில வார்த்தைகள் கூறுவாள்… அவ்வளவுதான். ஆனால் இப்போது காதல் கொண்ட மனம் நிறைய எதிர்பார்க்கிறது. அதிலும் இன்றுவரை அவள் காட்டிக் கொண்டிருக்கும் கோபத்திலும் ஊடலிலும் அவளது காதலின் அளவீட்டையும் கணக்கிட்டு விட்டானே.
Advertisement
Advertisement
மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். நேரம் நகர்வேனா என்றது. நொடிக்கு நூறு முறை பார்த்தால் கடிகாரம்தான் பாவம் என்ன செய்யும்..?
அங்கும் ஒருத்திக்கோ இரவு முழுக்க உறக்கமில்லை… அவன் வருகிறான் என்ற செய்தி அறிந்ததில் இருந்து அன்று முழுக்க நேரத்தை நகர்த்த அவளும் படாதபாடுபட்டு கொண்டுதான் இருக்கிறாள். ஏதோ இருவரும் 20 வயது இளம் தளிர்கள் போல் புதிதாக காதல் வயப்பட்டவர்கள் போல் உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகளைச் சுமந்து, தனிமையில் சிரித்து, கண்கள் குறுக்கி யோசித்து, நகம் கடித்து சிலாகித்து என்று அவர்கள் வாழ்வின் ஓர் புதிய பரிமாணத்தை முதன்முறையாக அதிலும் காலம் கடந்து அனுபவிக்கின்றனர்… ஆனாலும் இனிக்கிறது.
Advertisement
புரண்டு புரண்டு படுத்தவள் அதிகாலை மூன்று மணிக்கே குளித்து உடைமாற்றி தயாராகிவிட்டாள். ஊரே ஙோ வென ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவள் மட்டும் மொட்டு மொட்டென விழித்தபடி அமர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட மண்வாசனை திரைப்படத்தில் பாண்டியனின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் ரேவதியின் நிலைதான். சேவலைகூட கல்லை விட்டு எறிந்து கூவச் செய்வாளே… அப்படித்தான் இவளும்கூட ஏதேனும் சேவல் தென்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்தாள் திண்ணையில அமர்ந்து.
பச்பச்சென விடிந்தும் இருட்டை முழுதாக விலக்காத அதிகாலை வேளையில்தான் அவன் வருவது வழக்கம்.
“சவிம்மா… அப்பா வந்துடுவார்… எழுந்து பல் வெளக்கி குளிச்சுக்கலாமா..?”
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளின் காதில் மென்மையாக கூற ஸ்ப்ரிங் போல் நட்டமாய் எழுந்து நின்றிருந்தாள் குருவின் செல்லமகள். அவளையும் குளிக்க வைத்து கிளப்பி இருவரும் தயாராகி நேரத்தை பார்த்தாள்.
இதோ அவன் வரும் நேரம்… வந்து விடுவான்… இதழ்கள் புன்னகையில் விரிய என்றும் இல்லாமல் முகம் பளபளத்து மினுமினுத்தது. இதயத்தில் என்றும் இல்லாத படபடப்பு, துடிதுடிப்பு.
தினமும் வீடியோகாலில் அவளிடம் பேச அவன் கெஞ்சுவதும், “அஞ்சலீஈஈ…” என்ற அவனது கெஞ்சலான அந்த அழைப்பில் உள்ளூர இவள் கிளர்வதுமாக அவள் அனுபவித்த அந்த சந்தோஷ தருணங்களை இப்பொழுதும் எண்ணிப் பார்த்து சிரித்துக் கொண்டாள்.
அவள் காதலை அவனிடம் உணர வைத்துவிட்டாள். அவன் காதலையும் அந்த கண்களின் மூலம் உணர்ந்து கொண்டாள். ஆனாலும் இந்த ஊடலை தொடர்கிறாள். இது அவளுக்கு தேவையாகத் தோன்றுகிறது… பிடித்திருக்கிறது… இன்னும் அவனை அலைய வைத்து வம்பிழுக்கச் சொல்லி மனம் சேட்டை செய்கிறது. அதையும் தாண்டி இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
அத்தனை நேரம் திண்ணையில் அமர்ந்திருந்தவள் தூரத்தில் தெருமுனையில் அவளது உயர்ந்த மனிதன் நடந்து வருவதைக் கண்டு உடல் முழுக்க சிலிர்த்தாள். வேகமாய் உள்ளே நுழைந்து கதவை வெறுமனே சாத்தி மகளை அருகில் அமர்த்திக் கொண்டு பாயில் படுத்துக் கொண்டாள்.
“அம்மா… அப்பா வந்துருவாங்க… இப்ப ஏன் படுத்துட்டீங்க..?” தாயின் செய்கை புரியாமல் குழம்பினால் குட்டிப்பெண்.
“வரட்டும் வரட்டும்… அம்மாவுக்கு டயர்டா இருக்கு… தூக்கம் வர்ற மாதிரி இருக்கு… உன் அப்பா வந்தா உன்னைத்தானே கொஞ்சப் போறார்… கொஞ்சட்டும்… நான் பாட்டுக்கு தூங்குறேன்…”
அவள் சொல்லி முடிக்கும்போது படக்கென கதவைத் திறந்து உள்ளே நுழைந்திருந்தான் குரு.
“அப்பாஆஆ…”
மூன்று வாரப் பிரிவின் ஏக்கத்தை ஒற்றைக் குரலில் தேக்கி ஓடிச் சென்று தந்தையை காலோடு கட்டி குதூகலித்தாள் சவி. அவளை அள்ளித் தூக்கி முகம் முழுக்க முத்தமிட்டு தன் நெஞ்சோடு அழுத்தமாய் சாய்த்து அங்கிருந்த நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டான் குரு. கண்மூடி தன் மகளின் வாசத்தை முழுமையாக உள்ளே ஏற்றிக் கொண்டான். வாராவாரம் மகளைப் பார்த்து சக்தி ஏற்றிச் செல்பவனுக்கு இந்த மூன்று வாரங்களாக அவளைப் பார்க்காமல் மகளோடு விளையாடாமல் ஆக்சிஜன் குறைபாடு தோன்றியதுபோல் அப்படி ஒரு சிரமம்.
மகளின் ஸ்பரிசமும் வாசமும் அவன் மூச்சினை சீர்படுத்தி ஆசுவாசப்படுத்தின. கண்மூடி விரிந்த புன்னகையோடு அந்த நொடியை ஆழ்ந்து அனுபவித்தான். பாயில் படுத்தபடி ஒற்றைக் கண்ணை மட்டும் மெல்லத் திறந்து அரைக் கண்ணால் பார்த்தாள் அஞ்சலி. அந்த சிரிப்பில், அந்த அணைப்பில், அந்த காட்சியில் தன்னை மறந்தவள் அகல விழி திறந்து அந்த அழகியலை ஆழமாய் நெஞ்சில் ஏற்றி புதிய புகைப்படமாய் பதிவேற்றிக் கொண்டாள்.
குட்டிக் கைகளால் இறுக்கி அணைத்திருந்த அந்த ஸ்பரிசத்திலேயே மகள் தன்னை எவ்வளவு தேடி இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.
“அம்மு…”
ஆசையாய் அழைத்தவனை நிமிர்ந்து பார்த்தாள் சவி. அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்தவன் விழிகள் திருப்பி தன்னவளை பார்க்க அவன் பார்க்கிறான் என்று அறிந்து படக்கென விழிகளை மூடிக் கொண்டாள் அஞ்சலி.
‘ஃப்ராடு… எப்படி நடிக்கிறா..? நான் வரேன்னு தெரிஞ்சு குளிச்சு கிளம்பி தயாராகி படுக்கையில படுத்திருக்காங்களோ அம்மணி. இருடி… உன்னை வச்சுக்கிறேன்…’
தனக்குள் எண்ணி சிரித்துக் கொண்டவன் எழுந்து கொண்டான். அவன் கொண்டு வந்திருந்த பைகளை பார்த்த சவியின் கண்கள் விரிந்து கொண்டன.
“அப்பா… என்ன நிறைய கொண்டு வந்து இருக்கீங்க..? இனிமே இங்கேயே இருந்துடுவீங்களா..?” ஆச்சர்யமும் ஆசையுமாக கேட்டவளை கன்னம் கிள்ளி வாயில் வைத்து முத்தமிட்டுக் கொண்டான்.
“ஆமா செல்லம்… நிறைய கொண்டு வந்திருக்கேன்… பத்து நாள் அப்பா இங்கேதானே இருக்கப் போறேன்… அப்பா போய் குளிச்சிட்டு வந்துடறேன்… வந்து நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து எல்லாத்தையும் எடுத்துப் பார்க்கலாம்… சரியா…”
மகளிடம் குனிந்து கூறியவன் பையில் இருந்து தேவையான துணிகளை எடுத்து துண்டையும் தோளில் போட்டுக் கொண்டு நிமிர்ந்தான்.
“அப்பா… அம்மாவை எழுப்ப வேணாமா..?”
மகளின் கேள்விக்கு கருவிழிகள் உருள கண்மூடி படுத்திருந்தவளை ஒரு மார்க்கமாய் தலைசாய்த்து அழுத்தமாக பார்த்தவன் ஆழமாக ரசித்தும் கொண்டான்.
“தூங்கட்டும் விடு அம்மு… தூங்குறவங்களை எழுப்புறது கொலை செய்றதைவிட பெரிய பாவம்னு சொல்லுவாங்க… அவ எந்திரிக்கும்போது எந்திரிக்கட்டும்… அப்பா குளிச்சிட்டு வந்துடறேன்…”
அவள் காதில் விழும்படி சத்தமாகவே கூறியவன் பொங்கி வந்த குறும்புச் சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கியபடி குளியலறை நோக்கிச் சென்றிருந்தான்.
உள்ளே சென்று கதவடைத்த சத்தம் கேட்டு நீர் விழும் சத்தமும் கேட்க மெல்ல கண்களைத் திறந்து எழுந்து அமர்ந்தாள் அஞ்சலி.
“இந்த நெட்டிலிங்க மரத்துக்கு எம்புட்டு திமிரு… கொஞ்சமாச்சும் என்னை கண்டுக்குதா…”
கடுப்பாய் முணுமுணுத்தவள் அவன் எடுத்து வந்திருந்த பைகளை அப்போதுதான் பார்த்தாள்.
‘ஆமா இது என்ன..? இந்த அமிதாப்பச்சன் என்னென்னத்தையோ வாங்கிட்டு வந்திருக்கும் போல இருக்கே…’
அதற்கு மேலும் படுக்கையில் படுத்து நாடகமாட அவளுக்கும் விருப்பமில்லை. அவனும் கண்டு கொண்டானே. குளித்து வருபவனுக்கு சூடாக தேநீர் தயாரிக்க சமையலறைக்குள் நுழைந்திருந்தாள்.
உடலை ஒட்டிய டி-ஷர்ட்டும் லுங்கியும் அணிந்து ஈரத் தலையை துவாலையால் துடைத்தபடியே குளியலறையில் இருந்து வெளிப்பட்டான் குரு. அவன் வாங்கி வந்த பைகளை சுற்றிச் சுற்றி வந்தபடி கண்கள் பளிச்சிட ஆராய்ந்து கொண்டிருந்தாள் அவன் செல்லக்குட்டி.
மகளோடு அமர்ந்து பைகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்தான் குரு. டீ தயாரித்து வெளியே வந்தவள் எதுவும் பேசாமல் அவன் முகத்தில் முன் நீட்டினாள். அதனை கையில் வாங்காமல் நிமிர்ந்து அவள் முகத்தையே பார்த்தான் குரு.
அன்றலர்ந்த மலராக அவள்…
ஆண்மை மிளிரும் அரிமாவாக அவன்…
அவள் அவனை ரசிக்க அவன் அவளை ரசித்தான்.
“வாங்குங்க…”
ஒரு வழியாக முத்து உதிர்ந்திருந்தது அவள் வாயில் இருந்து.
அமைதியாக வாங்கிக் கொண்டவன் விழிகளை அகற்றாமல் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதற்குமுன் அவளை துளைக்காத ஒரு பார்வை…
அவன் தவிர்த்து வந்த ஒரு பார்வை…
அவனிடம் அவள் எதிர்பார்த்த அந்தப் பார்வை…
அந்த விழிவீச்சின் வீரியம் இவள் விழிகளில் பாய்ந்து இதயத்தை தீண்டியது. குப்பென குங்குமமாய் சிவந்தாள் பெண். இவன் இதழ்களில் அழகான சின்னப் புன்னகை. அவனை கீழ்கண்ணால் பார்த்தபடியே மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் அஞ்சலி.
தேநீர் பருகி முடித்து “அம்மாவை வரச் சொல்லு அம்மு…” என்று இவன் சொல்லி முடிக்கும் முன் சமையலறையில் இருந்து வேகமாய் வெளியேறி அவனிடம் வந்திருந்தாள் அஞ்சலி.
அவன் ஏதோ பேச வாய் திறக்கும் முன் தன் கையில் வைத்திருந்த பணத்தை அவனிடம் நீட்டினாள்.
புரியாமல் புருவம் சுருக்கி அவள் முகம் பார்த்தான் குரு.
“வாங்குங்க…”
“என்ன இது..?”
“தெரியல..? பணம்…”
“அது தெரியுது… இது எதுக்கு..?”
“இந்த வீட்டுக்கு நீங்க கொடுத்த அட்வான்ஸ்… அதோட எங்களுக்காக செலவு பண்ணின தொகையில கொஞ்சம் முன்பணம். எல்லாத்தையும் தெளிவா குறிச்சு வச்சிருக்கேன். மாசா மாசம் சரியா கொடுத்துடுவேன்…”
வார்த்தைகள் ஈட்டியாய் மாறி ஏகாந்தத்தில் இன்புற்றிருந்த அவனது இதயத்தை குத்திக் கிழித்து ரணப்படுத்தின. அவனுக்குள் இருந்து எழுந்த வேறொருவன் ஆத்திரத்தோடு அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான். அது அவனது கற்பனைக் காட்சிதான். ஆனால் இவனோ நினைத்ததை செய்யாமல் விழிகளால் தன் கோபத்தை வெளிப்படுத்தி ரத்தச் சிவப்பாகிய மாறிய விழிகளுடன் அவளையே முறைத்திருந்தான்.
பணத்தை அவன் வாங்காமல் இருக்க அங்கிருந்த மேஜையின்மேல் வைத்து சமையல் அறைக்குள் மீண்டும் நுழைந்து கொண்டாள் அஞ்சலி.
அவர்களுக்காக ஏதேதோ வாங்கி வந்து அவளோடு அமர்ந்து ஆசையாக அனைத்தையும் காட்ட அவளை அழைத்தவனுக்கு சன்மானம் கொடுத்துவிட்டுச் சென்றவளின் மேல் கட்டுக்கடங்காத ஆத்திரம் கிளர்ந்தது.
குழந்தையின் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது என்று பற்களை கடித்து தன்னை கட்டுப்படுத்தினான். கண்கள் விரிய ஆசையோடு அமர்ந்திருந்த மகளை ஏமாற்ற மனம் இல்லாமல் விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள், உடைகள் என்று ஒவ்வொன்றாய் அவளிடம் கொடுத்து அவள் சிரிப்பை ரசிக்கும் மனநிலை இல்லாமல் பெயருக்கு புன்னகைத்து நெருப்பில் அமர்ந்திருப்பவன் போல் அங்கு அமர்ந்திருந்தான் குரு.
தான் செய்த வேலையால் அவன் மொத்தமாய் துடித்து அமர்ந்திருக்கிறான் என்பது உள்ளே இருந்தவளுக்கும் தெரிந்தது. ஊமை நாடகத்தை முடிவுக்கு கொண்டு வர அவளுக்கும் வேறு மார்க்கம் தெரியவில்லை. அனைத்தையும் தாண்டி அவன் கொண்ட காதல் எந்த வகையைச் சார்ந்தது என்ற குழப்பம் அவளுக்குள் இருந்து கொண்டே இருக்கிறதே.
முதலில் சரிந்தது அவள் மனம்தான்… அவன் இவளிடம் சரியவில்லை… சரிந்தானா தெரியாது… ஆனால் எதனையும் காட்டிக் கொள்ளவே இல்லையே… இவளது கோபத்தில் இவளது மனதை வெளிப்படுத்திய பின்புதானே சிறிது சிறிதாக அவனிடம் மாற்றம். குழந்தையின்மேல் பேரன்பை வைத்திருக்கிறான்… குழந்தைக்காக என்னை ஏற்றுக் கொள்கிறானா..? வற்புறுத்தலால் என்னை இவனுக்கான அவளாக மாற்ற முயற்சிக்கிறானா..? இந்த அன்பும் நேசமும் இயல்பாக இதயத்தில் இருந்து வந்ததா..? இல்லை இரக்கத்தில் வந்ததா..?
இந்த குழப்பம் அவள் மூளைக்குள் வண்டாய் குடைந்து கொண்டிருக்கிறது. அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டும்… தெரிந்து கொள்ள வேண்டும்… இன்று மற்றொரு பூகம்பம் எழுந்தாலும் அதைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை… அவள் அறிந்து கொள்ள வேண்டியது அவனது நிஜமுகம்… நிஜமனம்.
அவனுக்குப் பிடித்த காலை உணவை சமைக்கத்தான் முதல்நாள் இரவே அனைத்தையும் தயார்படுத்தி வைத்திருந்தாள். வேலையில் மனம் முழுதாய் லயிக்கவில்லை. கூடத்தில் அமர்ந்திருப்பவன் என்ன செய்யப் போகிறான்..? என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே அவளது கவனம் பதிந்திருந்தது. நொடிகள் நிமிடங்களாகி கரைந்து ஓடிக் கொண்டிருக்க சண்டையிடவாவது அவன் உள்ளே வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே. அத்தோடு கூடத்திலும் சத்தமே இல்லை… அப்படி ஒரு அமைதி.
காத்திருந்து பார்த்தவள் வெளியே வந்தாள். கூடத்தில் இருவரும் இல்லை. வாசல் கதவு அகலத் திறந்து கிடக்க ஓடிச்சென்று வாசலைப் பார்த்தாள். அங்கு அவன் செருப்பு இல்லை… மகளையும் தூக்கிக் கொண்டு ராதா வீட்டிற்குத்தான் சென்றிருப்பான் என்பது தெளிவாகவே தெரிந்தது.
அவள் கொடுத்த பணம் மேஜையில் காற்றுக்கு சடசடவென அடித்துக் கொண்டிருந்தது… அவளது மனமும்கூட…
(தொடரும்)
error: Content is protected !!