Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 11

அத்தியாயம் : 11

காலை நேரம், சுபாஷினியின் அழைப்பின் பேரில் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தாள் ஆனந்தி. முதன்முறையாகத் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் மருமகளை, ஆலத்தி கரைத்து வரவேற்றார் ஜெயலட்சுமி. ஆச்சரியமாக அவரை நோக்கிவிட்டு, எதுவும் சொல்லத் தோன்றாமல் வீட்டிற்குள் நுழைந்தாள் அவள்.

செல்வா காலையிலேயே வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததால், அவனைத் தவிர மற்ற இருவரும் வீட்டில் இருந்தனர். கூடத்தில் சற்று நேரம் அமர்ந்து பெண்கள் இருவரின் கேள்விகளுக்கும் பதிலளித்தாள். பின்னர், அவர் தந்த காஃபியை அருந்திவிட்டு, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பார்வையிட்டாள்.

இயற்கை சூழ்ந்த தென்னந்தோப்பிற்குள் வீட்டை அமைத்திருந்தார்கள். குளுகுளுவெனக் காற்று வீசிக்கொண்டிருந்தது. வீட்டின் வெளிப்பகுதியில் இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருந்த பெரிய குளத்தில், செந்தாமரை மலர்கள் பூத்து மணம் வீசின. ஆசையுடன் அதன் அருகில் சென்று, கைக்கு எட்டிய தாமரை மலர்களைப் பறித்து முகர்ந்து பார்த்தாள் ஆனந்தி. அதன் வாசனை மனதை மயக்கியது.



Advertisement

அமெரிக்காவில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துப் பழகியவள், இங்கே திறந்தவெளியில் மாராப்பு கட்டிக் குளிக்கும் பெண்களைக் கண்டு திகைத்தாள். சிறுவர்கள் நீச்சலடித்து விளையாடுவதும், பெண்கள் துணிகளைத் துவைப்பதும், மற்றொரு பகுதியில் பசு மற்றும் காளை மாடுகளைக் குளிப்பாட்டுவதையும் கண்டு அதிர்ந்தாள்.

“இப்படி எல்லாத்தையும் ஒரே குளத்து நீரில் செய்தால், அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதா?” என்று கேட்டாள் ஆனந்தி.

“இல்லை, இது ஒரு பக்கமிருந்து வந்து கலந்து, மறுபக்கமாக மடை வழியாக வெளியேறிச் சென்று விவசாய நிலங்களுக்கு உதவும் நோக்கில் கட்டப்பட்ட மிகப்பெரிய குளம். தினமும் இங்கேயே குளிப்பதும், தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் இங்குள்ள மக்களின் பழக்கம். இதில் வசிக்கும் மீன், தவளை, நத்தை, பாம்பு, கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், அதில் உள்ள பாசிகளையும் கழிவுகளையும் உண்டு தன் பசியாறும். அதனால் கிருமிகள் குளத்தில் தங்குவதில்லை” என்று சுபாஷினி விளக்கமாகச் சொன்னாள்.

Advertisement

“உங்க கிராமத்துப் பழக்கம் ரொம்பவும் டிஃபரண்டா தான் இருக்கு!”

Advertisement

“போகப் போகப் பழகிடும். நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக் கத்துக்கோங்க.”

“ஐயோ! எனக்கு இதெல்லாம் வேணாம்பா. நீங்களே என்ஜாய் பண்ணுங்க!”

அவள் சொன்ன விதத்தில் சுபா சிரித்துவிட, இருவரும் கிராமம் மற்றும் அமெரிக்க வாழ்க்கை குறித்துப் பேசினார்கள். மரத்தடியில் இருந்த ஊஞ்சலில் அவளை அமர வைத்து ஆட வைத்தாள் சுபாஷினி. ஊஞ்சல் ஆடும்போது கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, பயத்தை மறைத்துத் தன்னை உறுதியாகக் காட்டிக்கொண்டாள் ஆனந்தி.

Advertisement

“இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது. நான் எவ்வளவு வேகமா ஆடுவேன் தெரியுமா?” என்று சொல்லி, அவள் இறங்கிய பின்னர் தான் அமர்ந்து ஆடிக் காட்டினாள் சுபா. அவளை வியந்து நோக்கினாள் ஆனந்தி.

சரளமான பேச்சுகளுக்கு மத்தியில் ஒரு நல்ல தோழமை அவர்களுக்குள் உருவானது. காலை உணவை பாரதியின் கையால் முடித்து வந்திருந்ததால், சுபாஷினியுடன் சேர்ந்து அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்ப்பதும், தெரியாததைக் கேட்டுத் தெரிந்து கொள்வதுமாக நேரத்தைச் செலவிட்டாள்.

மதிய நேரம் வீட்டிற்கு வந்து அவளைப் பார்த்ததும் புன்னகையுடன் பேசினான் செல்வா. தான் பார்த்து மகிழ்ந்த இடங்களைப் பற்றி அவன் முன் குதூகலமாக விவரித்தாள் ஆனந்தி. மதிய உணவை முடித்துச் சற்று நேரம் ஓய்வெடுத்தவன், பிறகு அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான். மாலை நேரம் வீடு திரும்பிய ஆனந்தி, பூபாலனின் அருகில் அமர்ந்து அன்று நடந்தவை அனைத்தையும் மறைக்காமல் அவரிடம் பகிர்ந்துகொண்டாள்.

“அங்கிள்! சுபா என்கிட்ட அவ்வளவு உரிமை எடுத்துப் பழகுறதைப் பார்க்குறப்போ, நிஜமாவே அவள் என் அத்தை பொண்ணா இருக்கக் கூடாதான்னு மனசு ஏங்குது. அவங்க அம்மா கூட என்னை ஏதோ முன்பின் தெரியாத பொண்ணா நினைக்காம அவ்வளவு உரிமையோடு பழகுறாங்க. ஏன் அங்கிள்… நிஜமாவே என்னைப் போல அவங்களுக்கு வேற யாராவது சொந்தக்காரங்க இருக்காங்களா?” என்று தன் ஆழ்மனதில் எழுந்த சந்தேகத்தைக் கேட்டாள் ஆனந்தி.

​அவள் கேட்ட அந்தக் கேள்வியில் இருந்த நியாயமும், அதற்குப் பின்னால் இருந்த மறைக்கப்பட்ட உண்மைகளும் பூபாலனை நிலைதடுமாறச் செய்தன. அவர் பதில் கூற முடியாமல் திணறுவதைக் கண்டவள், “எங்க அப்பாவும் இதே மாதிரி ஒரு அழகான கிராமத்துல பிறந்து வளர்ந்திருந்தா, எனக்கும் இவங்களைப் போல நிறைய உறவினர்கள் கிடைச்சிருப்பாங்க. நானும் அவங்களோட சேர்ந்து சந்தோஷமா ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்… இல்லையா அங்கிள்?” என்று ஒருவிதமான ஏக்கத்துடன் கேட்டாள்.

யாரும் இல்லாத அநாதையாக அமெரிக்காவில் வளர்ந்து வந்த அவளது ஏக்கமான வார்த்தைகள், பூபாலனின் நெஞ்சைச் சுருக்கெனத் தைத்தன. உண்மையைச் சொல்லவும் முடியாமல், பொய்யைச் சொல்லி அவளைத் தேற்றவும் முடியாமல், அவளது கண்களைக் கூட நேருக்கு நேராகப் பார்க்கத் துணிவின்றி மிகவும் சிரமப்பட்டார் பூபாலன்.

தன்னிடம் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவுமறைவின்றி அப்படியே கொட்டிவிடும் ஆனந்தியின் வெளிப்படையான குணத்தைக் கண்டபோது, பூபாலனுக்குத் தன் மீதே ஒருவித கசப்பு உண்டானது. இத்தனைத் தூரம் தன்னை நம்பிப் பேசுபவளிடம், தான் அதற்குத் தகுந்த முறையில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லையே! என்ற குற்றவுணர்வு, ஒரு தீராத வலியாய் அவர் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

ஆனந்தியின் அப்பா அன்புச்செல்வனின் கடந்த கால வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் அந்தப் பயங்கரமான உண்மைகளை அவளிடம் சொல்லாமல் மௌனம் காப்பது, அவருக்குப் பெரும் சுமையாக இருந்தது. அதேநேரம், தன்னை மட்டுமே ஒரு பிடிமானமாக நம்பி வந்திருப்பவளிடம் உண்மைகளைச் சொல்லாமல் மறைத்துவிட்டு, அவளைச் செல்வாவின் பொறுப்பில் விட்டுச் செல்வது தவறு என்று அவரது உள்ளுணர்வு எச்சரித்தது.

​காலம் எதையும் நிரந்தரமாக ஒளித்து வைப்பதில்லை; என்றாவது ஒருநாள் எதிர்பாராத தருணத்தில் இந்த ரகசியங்கள் யாவும் அவளுக்குத் தெரிய வரும்போது, ‘உயிருக்கு உயிரான மாமா கூடவா என்னை ஏமாற்றினார்? இத்தனை பெரிய உண்மையை சொல்லாமல் மறைத்து நாடகமாடினாரே!’ என்று அவள் துடித்தால், அதற்குத் தான் என்ன பதில் சொல்ல முடியும் என்ற பயம் அவர் அடிமனதில் வேரூன்றியது. அவள் தன்னை ஒரு துரோகியைப் போலத் தவறாக நினைத்து ஒதுக்கிவிடக் கூடாது என்ற கலக்கமும் கவலையும் அவர் மனதை அழுத்தத் தொடங்கியது.

​”ஆனந்திகிட்ட உண்மையைச் சொல்லிடுறதுதான் நல்லது. அவளாகவே தற்செயலா அறிய நேர்ந்தால் விளைவுகள் விபரீதமாகிடும்” என்று பாரதி ஏற்கனவே எச்சரித்திருந்தார். அது சாதாரண விஷயமாக இருந்திருந்தால் அவரே எப்போதோ சொல்லியிருப்பார். ஆனால், இது அன்பு சம்பந்தப்பட்ட விஷயம். ஆனந்தி இதைப் புரிந்துகொள்ள மறுத்தோ அல்லது கோபத்திலோ இங்கிருந்து சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும், அதன் விளைவுகளுமே அவர் நாவைக் கட்டிப் போட்டிருந்தன.

அதேசமயம், ஆபத்து மிக அருகில் இருப்பதை உணர்ந்ததால் சொல்லாமல் இருக்கவும் அவருக்கு மனம் வரவில்லை. யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவள் எடுக்க வேண்டிய முடிவு. ஒருவேளை அவள் மனதில் வேறு எண்ணங்கள் இருந்தால், அதை அறியாமல் அவளைச் செல்வாவிடம் ஒப்படைப்பதும் தவறு என்று கபிலனிடம் பேசிய பிறகு அவருக்குத் தோன்றியது. அதனால்தான் பூபாலன் அவசரப்பட வேண்டாம் என்று நினைக்கிறார். ஆனால், ஊர் அறிந்த ரகசியத்தை தம்மால் மட்டும் மூடி வைக்க முடியாது என்பதைக் காலம் அவருக்கு உணர்த்தியது.

மறுநாளும் சுபாஷினியுடன் சேர்ந்து ஊரின் எல்லைப் பகுதிகளைப் பார்வையிட்டாள் ஆனந்தி.

அடர்ந்த மரங்கள் அடர்த்தியாகக் குடை பிடித்து நின்ற அந்த வனப்பகுதியில், முயல்கள் மின்னல் வேகத்தில் ஓடுவதையும்; மிளா, காட்டுப்பன்றி மற்றும் மயில்கள் என வரிசையாகக் காட்சியளித்த வனவிலங்குகளைக் கண்டதும் ஆனந்தி பிரமிப்பில் ஆழ்ந்தாள். ஒரு மயில் எவ்வித அச்சமுமின்றித் தன் தோகையை விரித்து ஆடும் பேரழகைக் கண்டு, மெய்மறந்த நிலையில் அங்கேயே நின்றாள். “அங்கே போக வேண்டாம் ஆனந்தி, அது பாதுகாப்பில்லை” என்று சுபாஷினி பதற்றத்துடன் தடுத்தும், அவள் காதில் விழவில்லை. இயற்கையின் அழகை அணு அணுவாக அள்ளிப் பருகும் ஆவலில், காட்டில் வசிக்கும் விலங்குகளைத் தன் விழிகளால் ஆவலுடன் பின்தொடர்ந்தாள்.

​துள்ளித் திரிந்த முயல் குட்டிகளின் அழகு அவளைக் கவர்ந்தது. சிறு பிள்ளையைப் போல அவற்றின் பின்னே ஓடினாள். எப்படியாவது அவற்றில் ஒன்றைப் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் மேலோங்கியது. ஆனால் அந்த முயலோ, அவளிடம் அகப்பட மாட்டேன் என்பது போலத் துள்ளிக் குதித்துப் புதர்களுக்குள் புகுந்து மறைந்தது. சுபாஷினியுடன் வந்ததையும், தான் இருக்கும் சூழலையும் முற்றிலுமாக மறந்து முயலுடன் ஒன்றிப்போனாள் ஆனந்தி. நேரம் சிறகடித்துப் பறப்பதை அவள் உணரவில்லை. தான் எங்கே இருக்கிறோம், யாராவது தன்னை வேடிக்கைப் பார்க்கிறார்களா என்று எந்த எண்ணமுமின்றி, முன்னெப்போதும் இல்லாத ஒரு மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள்.

ஒரு முயலையாவது பிடித்து வீட்டிற்குச் சென்றால், அதனுடன் ஜாலியாக விளையாடலாம் என்ற எண்ணம் அவளுக்குள் வலுக்க, தன் சுற்றத்தையே மறந்தாள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பஞ்சு போன்ற ஒரு சிறிய வெண்ணிற முயல் குட்டியைத் தன் இரு கைகளிலும் ஏந்தினாள். அதன் மென்மையை ரசித்தபடி, வாஞ்சையுடன் முத்தமிடுவது போல முகத்திற்கு அருகில் கொண்டு சென்றாள். அது பயத்தில் கண்களை இறுக்க மூடிக்கொள்ள, அதைக் கண்டு ஆனந்தி வாய்விட்டுச் சிரித்தாள்.

பிடித்த முயல் குட்டியை உடனே மாமாவிடம் காட்ட வேண்டும் என்ற ஆவல் அவளை உந்தித் தள்ள, வேகமாக திரும்பிய பிறகுதான் தான் இருக்கும் இடத்தையே உணர்ந்தாள். அங்கிருந்த அடர்ந்த மரங்களும், நிசப்தமும் அவளை உறைய வைத்தன. ‘இது வெறும் காட்டுப் பகுதியா? இல்லை மலைப்பாங்கான இடமா? கவனிக்காம இவ்வளவு தூரம் தனித்து வந்துட்டோமே!” என்று எண்ணியபோது அவள் உடல் ஒருமுறை நடுங்கியது. “தனியாக எங்கும் போகாதே!” என்று செல்வா சொன்ன எச்சரிக்கை வார்த்தைகள் இப்போது அவள் காதுகளில் மோதி பயத்தை விதைக்க, கையில் இருந்த முயல் குட்டியைப் பயத்தின் காரணமாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, எச்சிலை விழுங்கியபடி சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆனந்தி.

கைப்பேசி சுபாவிடம் இருந்ததால், யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பயத்தில் தொண்டை உலர்ந்துப் போனது. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, எப்படியாவது சாலைக்குச் சென்றுவிட முயன்றாள். ஆனால் எந்தப் பக்கம் நடப்பது என்று கூடத் தெரியவில்லை. சுபாவின் பேச்சைக் கேட்காமல் தவறு செய்துவிட்டோமே என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டே நடந்தவளின் கண்ணில், அங்கிருந்த ஒரு வீடு தென்பட்டது.

யாராக இருந்தாலும் பரவாயில்லை, உதவி கேட்கலாம் என்று நினைத்து அவள் அங்கே செல்ல, அந்த வீடோ ஆள் அரவமற்று வெறிச்சோடிப் போயிருந்தது.

அவள் பதற்றத்தில் தன் மார்பை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள்; இதயத் துடிப்பு எகிறித் தொண்டைக்குழி வரை வந்து மோதியது. அப்போது, எங்கிருந்தோ வந்த ஊதுபத்தி வாசனை அவள் நாசியைத் துளைக்க, அது வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

கண்களைச் சிமிட்ட மறந்து அப்படியே நின்றவள், தென்றலின் அசைவில் மேனி சிலிர்க்க தான் கண்ணால் கண்டது நிஜமா என்று சந்தேகத்துடன் பார்த்தாள். பிரமையோ அல்லது அப்பாவின் நினைவில் தான் காணும் கனவோ என்று எண்ணிக் கண்களைத் தேய்த்தாள். ஆனால், அவள் என்ன செய்தாலும் அங்கிருந்த காட்சி மாறவில்லை. மறைந்துபோன அவளது அப்பா அன்புச்செல்வன், அங்கே வாடாச் சந்தன மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்திற்குள் சிரித்த முகத்துடன் இருந்தார்.

அமெரிக்காவில் மறைந்த தன் தந்தையின் புகைப்படம், சம்பந்தமே இல்லாத இந்தக் கிராமத்து வீட்டில், அதுவும் ஒரு பழைய வீட்டில் மாலையுடன் இருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை. ‘அப்பாவுக்கு இந்த ஊரோடு என்ன சம்பந்தம்? யாருமே இல்லாத அநாதைன்னு நினைச்சவருக்கு இங்க ஒரு வீடு இருக்கா?’ என்ற கேள்விகள் அவள் மூளையைத் துளைத்தன. தன் கண்முன்னே விரிந்திருக்கும் அந்த மர்மமான உண்மையை இன்னும் கூட அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

“இது யார் வீடு? தன் அப்பாவின் புகைப்படம் எப்படி இங்கே வந்தது?” என்று தெரியாமல் அவள் திகைத்து நின்றிருக்க, அந்தப் படத்திலிருந்த இளவயது அன்புச்செல்வனோ எதற்கும் கலங்காமல் சிரித்த முகத்துடன் காட்சியளித்தார்.

நம்ப முடியாமல் அந்தப் படத்தையே உற்று நோக்கியவள், அதில் இருப்பது தனது அப்பாவே தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திவிட்டு, “அப்பா!!” என்று அழைத்துக்கொண்டே அந்தப் படத்தை நோக்கி ஓடிச் சென்றாள்.

அங்கே நடப்பவை யாவும் அவளுக்கு மர்மமாகவும் பயமாகவும் தெரிந்தன. ‘அப்பாவோட போட்டோ இங்க எப்படி வந்தது? யார் கொண்டு வந்து மாட்டியிருப்பாங்க? அப்படியின்னா, தன் அப்பாவுக்கும் இந்த ஊருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கா? தனக்குத் தெரியாம பூபாலன் எதையாவது மறைக்க முயற்சி செய்றாரா?’ என்று எண்ணங்கள் அவள் மண்டைக்குள் சுழல, அந்தப் புகைப்படத்தைக் கட்டிக்கொண்டு விம்மினாள் ஆனந்தி.

“தனக்குத் தெரியாம இங்க என்ன ரகசியம் மறைஞ்சிருக்கு? ஏன் அப்பா இதுவரைக்கும் இங்க ஒருவாட்டி கூட எங்களைக் கூட்டிட்டு வரல? நான் வந்த பிறகும் கூட இது பத்தி யாருக்கிட்டயும் மூச்சு விடாம இருந்தாங்களே… இது யாருடைய வீடு?” என்று பல கேள்விகளுடன் வெகுநேரமாக அழுதுகொண்டே இருந்தவள், அந்த வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தாள்…

அந்த வீட்டில் எங்குத் தேடியும் ஒரு ஆள் அரவத்தைக் கூட அவளால் காண முடியவில்லை. அந்த நிசப்தம் அவளுக்குள் இனம் புரியாத நடுக்கத்தைத் தந்தது. உண்மையில் அது அவளது தந்தை அன்புச்செல்வன் பிறந்து வளர்ந்த பழைய வீடு. தான் ஆசை ஆசையாய் வளர்த்த மகன், தங்களை ஏமாற்றிவிட்டுச் சென்ற கோபத்திலும் ஆத்திரத்திலும் மார்க்கண்டேயன் அந்தப் படத்திற்குப் போட்ட சந்தன மாலை அது. மகன் மறைந்துவிட்டான் என்று ஊரே நினைக்கும்படி அவர் செய்த அந்தச் செயல், இன்று ஒரு மாலையாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு மரணங்கள் நிகழ்ந்து நிம்மதியை இழக்க காரணமாக இருந்த அதே வீட்டில் மேற்கொண்டு வசிக்கப் பிடிக்காமல், அவர்கள் வேறு வீடு அமைத்துச் சென்றுவிட்டதால், அந்தப் பழைய வீடு யாராலும் தீண்டப்படாமல் புழக்கமின்றிப் பாழடைந்து கிடந்தது. இத்தனை வருடங்களாகத் தேசங்கள் கடந்து வெளியூரில் வசித்து வந்த ஆனந்திக்கு இந்த ஊரின் கடந்த கால கசப்புகள் எதுவுமே தெரியவில்லை. இதை எப்படி அவளிடம் தெரியப்படுத்துவது என்று தான் பூபாலனும் தயக்கத்துடன் மௌனம் காத்து வருகிறார்.

வெறித்த பார்வையுடனும், கனத்த இதயத்துடனும் அந்த வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்து கொண்டிருந்தாள். அப்போது, அன்று குலதெய்வக் கோவிலில் வைத்து அவளைப் புகைப்படம் எடுத்த அதே மர்ம நபர் மின்னல் போல அவள் முன்னே வந்து நின்றார். ஆனந்தி எதையும் உணரும் நிலையில் இல்லாமல் நடக்க, அவளது தோள் பகுதியில் அவரது அழுத்தமான கரங்கள் இறுகப் பதிந்தன. ஏற்கனவே பார்த்த காட்சியால் அதிகப்படியான மன உளைச்சலில் இருந்தவள், அந்த நபரிடமிருந்து மீள முடியாமல், பயமும் அதிர்ச்சியும் ஒருசேரத் தாக்க அங்கேயே மயங்கிச் சரிந்தாள்.

மறுபடி அவள் மெல்லக் கண் திறந்தபோது, தான் பூபாலனின் வீட்டில் இருப்பதை உணர்ந்தாள். கண்கள் தானாக நீரைக் கசியவிட, நா தழுதழுத்து ஒரு வார்த்தை கூடப் பேச முடியாமல் தடுமாறினாள். பூபாலன் அவள் அருகில் அமர்ந்து ஆறுதலாக அவள் கைவிரல்களைப் பற்றிக் கொண்டார். ஆனால், நேரில் கண்ட தந்தையின் புகைப்படம் அவளை நிலைகுலையச் செய்திருந்தது.

“என்னம்மா? என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?” என்று பூபாலன் பதற்றத்துடன் கேட்க, அந்த அன்பான வார்த்தைகளில் அவள் மனம் வேதனை தாளாமல் துடித்தது. கட்டுக்கடங்காத கண்ணீர் கன்னங்கள் வழியாக வழிந்து கழுத்துப் பகுதியில் இறங்கியது. அவளது மௌனமும் அழுகையும் பூபாலனுக்குப் பெரும் சங்கடத்தைத் தந்தன. செல்வாவும் அருகில் நின்று அவளைப் பார்த்து மிகுந்த வருத்தப்பட்டான்.

“என்னாச்சு ஆனந்தி? யாராவது ஏதும் சொன்னாங்களா? நான்தான் சுபாவை விட்டுட்டுத் தனியா எங்கேயும் போக வேண்டாம்னு சொன்னேனே!” என்று ஆற்றாமையுடனும் கவலையுடனும் கூறினான் செல்வா.

செல்வாவுக்குத் தன் மீது இருக்கும் பாசம் வெறும் சாதாரணமானது என்றுதான் இதுவரை அவள் நினைத்திருந்தாள். அவன் ஒரு மருத்துவர் என்பதாலும், பூபாலனுக்கு வேண்டியவள் என்பதாலும் காட்டும் அக்கறை என்று கருதியவளுக்கு, இப்போது அவன் பேசும் விதத்தைக் கவனிக்கும்போது, அதன் பின்னணியில் வேறேதோ வலுவான காரணம் இருப்பதாக தோன்றியது.

அப்பாவைப் புகைப்படத்தில் பார்த்த அந்த நொடியிலிருந்து ஆனந்தியின் மூளை மரத்துப்போனது போல் இருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் திண்டாடினாள். அவளை அந்த ரணமான நினைவிலேயே உழல விடாமல் தடுக்க முயன்ற பூபாலன், “என்ன நடந்ததுன்னு சொன்னால்தானே அம்மா எங்களுக்கும் தெரியும்?” என்று மென்மையாகக் கேட்க, அவளது கூர்மையான பார்வை பூபாலனின் முகத்தில் அசைவின்றி நிலைத்தது.

“சொல்லும்மா… என்னாச்சு?”

“நான்… நான் உடனே இங்கிருந்து அமெரிக்காவுக்குப் போகணும். எனக்கு இப்போவே டிக்கெட் போட்டுத் தர முடியுமா?” என்று அவள் சட்டென்று கேட்டதும், அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!