Skip to content
Post Views: 3,465
அன்பு – 23
“அப்படியே அஞ்சலி மாதிரியே இருக்காலங்க!!!” என மீண்டும் தன் மகளையே கையில் ஏந்தியதைப் போல உடல் சிலிர்க்க பேத்தியைப் பார்த்தவண்ணம் பொற்கொடி கூற,
Advertisement
அதை ஆமோதித்த சேதுராமனுக்கும், முகமெல்லாம் புன்னகை!!!
ஆனால் இவர்களின் சந்தோஷத்தில் துளியும் கலந்து கொள்ளாமல், அந்தக் குட்டிச் சிட்டின் முகத்தில் எங்காவது தன் மகனின் ஜாடை தெரிகிறதா?? உண்மையில் இது என் குடும்ப வாரிசு தானா?? என கண்களில் விளக்கெண்ணெய் விட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் யசோதா.
Advertisement
Advertisement
ஜெயசிம்மனுக்கு அந்த சந்தேகம் எல்லாம் தற்பொழுது இல்லை!!! கவி தான் முழுமையாக அவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறாளே!! எனவே இது அவனுடைய குழந்தை தான் என்பதில் ஜெயசிம்மனுக்கு சந்தேகம் இல்லை என்றாலும், ஏனோ அந்தக்குழந்தையின் மீது ஒரு ஒட்டுதல் தோன்றவில்லை.
அஞ்சலியின் மீதிருந்த கோபம், அவளை உரித்து வைத்துப் பிறந்திருந்த குழந்தையின் மீதும் தன்னாலே ஒட்டிக்கொண்டதோ என்னவோ??
Advertisement
எனவே கடமைக்கு அங்கு இருந்தவன்,
“எனக்கு முக்கியமான வேலை இருக்கு!! நான் கிளம்புறேன்!!” என மனைவியின்(?) நலன் அறியாமல் கூட அங்கிருந்து சென்றுவிட,
“சிம்மா!! நில்லுடா!! நானும் வரேன்.. இந்த மருந்து வாடையே எனக்கு ஆகலை!! பொறு வரேன்!!” என யசோதாவும் அவனுடனே சென்றுவிட்டார்.
செல்லும் அவர்களையே கடுப்புடன் பார்த்திருந்த பொற்கொடி,
“கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்க அக்காவுக்கும் உங்க மருமகனுக்கும்.. மொத குழந்தை கலைஞ்சு அவ உடம்புத் தேறக்கூட நேரம் கொடுக்காம அடுத்த மூணு மாசத்திலேயே மறுபடியும் மாசமாக்கி, அவ உடம்பு இந்தக்குழந்தையை தாங்குற அளவு தெம்பா இல்லைன்னு தெரிஞ்சும் அவளைப்போட்டு பாடா படுத்துனாங்க.. நல்லவேளை, நான் மட்டும் இங்க வந்து இல்லைன்னா என் பொண்ணை வேலை வாங்கியே கொன்றுப்பாங்க.. இதோ இப்பவும் குழந்தையை தூக்கக் கூட மனசில்லாம கிளம்பிட்டாங்க.. நான் தலைப்பாட அடிச்சிக்கிட்டேன்.. இங்க கொடுக்க வேணாம் அஞ்சலியைன்னு, என் பேச்சை யார் கேட்டா??” என எப்போதும் போல் பொற்கொடி கணவனிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த,
ஜெயசிம்மன் குடும்பம் மேல் அதிருப்தி இருந்தாலும், இது அனைத்திற்கும் அஞ்சலியின் செயல் தான் காரணம் என அதையே இன்னும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த சேதுராமன்,
“ப்ச்!! உன் மக பண்ண அசிங்கத்துக்கு இன்னும் என்ன இவளை தங்கத்தட்டுல போட்டு சீராட்டுவாங்களா?? கடுப்பேத்தாம குழந்தையைப் பாரு!!” என அதட்டி மனைவியை அமைதிப்படுத்தினார் அவர்.
அதற்குள் வெளியே வந்த மருத்துவர்,
“எங்க அந்தப்பொண்ணோட ஹஸ்பன்ட்??” என அடக்கி வைத்த கோபத்துடன் தெலுங்கில் கேட்க,
“ஏன் என்னாச்சு டாக்டர்?? என் பொண்ணுக்கு என்ன??” என்று பதறினார் பொற்கொடி.
“மனுஷனாமா அவரு?? ஒரு பொண்ணைப் போட்டு இப்படி கொடுமை பண்ணிருக்காரு.. அவங்க உடம்பெல்லாம் அத்தனை காயம்.. ஆல்ரெடி அபார்ஷன் ஆகி மறுபடியும் கன்சீவா இருக்க பொண்ணை எப்படி பார்த்துக்கணும்னு கூடவா அறிவில்லை.. அவங்க ரொம்பவே வீக்கா இருக்காங்க.. ரொம்ப ஜாக்கிரதையாத் தான் அவங்களை பார்த்துக்கணும்!!! உங்க பொண்ணு மேல உண்மையாவே அக்கறை இருந்தா, அவங்க ஹஸ்பன்ட் கிட்ட அனுப்பாதீங்க.. அவ்ளோதான் சொல்லுவேன்” என அஞ்சலியின் உடம்பில் இருந்த காயங்களைக் கண்டு இன்னும் பதறிய நெஞ்சத்துடன் அந்த மருத்துவர் செல்ல, பொற்கொடி அதன்பின் யாரென்ன சொல்லியும் மகளை ஜெய்சிம்மனுடன் அனுப்ப மாட்டேன் என ஒற்றைக்காலில் நின்றுவிட்டார்.
மகளுக்கு முதன்முறை கரு கலைந்த போதே, சேதுராமன் தம்பதியர் ஜல்பல்லி வந்து மொத்தமாக இங்கேயே குடியேறியிருக்க, அந்த வீட்டில் தான் தற்போது அஞ்சலியின் வாசம்.
தன்னை நம்பாத பெற்றோரிடம் இருந்து மனதளவில் மிகவும் விலகிச் சென்றிருந்த அஞ்சலிக்கு, காலம் கடந்து வந்த இவர்களின் அக்கறையில் பெரிதாய் உள்ளுக்குள் குளிர்ந்துவிடவெல்லாம் இல்லை.
யாருடனும் பேசாமல், தன் உலகமே அவள் மகள் தான் என்பது போல், அந்த சின்னச்சிட்டுக்காக மட்டுமே உயிர்வாழ்ந்தாள் அவள்.
குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவடையப் போகும் தருவாயில்,
“இனி அஞ்சலியை பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்!!!” என சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதி அளித்து, மகளையும் மனைவியையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் ஜெயசிம்மன்.
இத்தனை மாதங்களாக, தாங்கள் இருக்கிறோமா செத்தோமா என்று கூட கவலையில்லாமல் இருந்த ஜெயசிம்மன், இன்று நல்லவன் வேஷம் போட்டுக்கொண்டு வந்ததும், அதை நம்பி அவனுடன் தங்களை அனுப்பி வைத்த பெற்றவர்களை எண்ணி கோபம் வந்தாலும், யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை அஞ்சலி.
இங்கு வந்ததும் யசோதா கூட இப்பொழுதெல்லாம் பெரிதாய் எதுவும் அவளை காயப்படுத்தும்படி பேசவில்லை என்றாலும், அவளை பார்வையால் முறைத்துக் கொண்டு தான் இருந்தார்.
புலி எதற்காக பதுங்குகிறது என அஞ்சலிக்கு புரியவில்லை என்றாலும், விஷயம் மட்டும் பெரிது என அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
அவள் நினைத்தது பொய்யாகவில்லை!!
ஜெயசிம்மனின் ஒரு பிரபல அரசியல்வாதியின் கீழ் வேலை செய்கிறான் என்பது முன்பே அறிந்த ஒன்று!!
அவரின் தயவில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருந்த நூலகம் கட்டும் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருந்த ஜெயசிம்மனுக்கு, பணப்பற்றாக்குறையாக இருந்தது.
முன்பே வேறொரு இடத்தில் பாலம் கட்டும் பணியில், பணம் தேங்கிக் கிடக்க, உடனடியாக பணத்திற்கு வழிவகை செய்யவேண்டுமென்றால் சேதுராமனை விட்டால் அவனுக்கு அந்த சமயம் வேறு வழியிருக்கவில்லை.
எனவே, எனக்கு துரோகம் விழைவித்தும், அஞ்சலியை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன் என சேதுராமனின் மனதில் பதியுமாறு அடிக்கடி சொன்னவன், பின் தற்போதைய தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொல்ல,
அவருக்கும் மருமகன் நன்றாக இருந்தால் தானே மகளுக்கும் பெருமை என நினைத்து, ஜெயசிம்மனுக்கு பணம் வழங்குவதாக ஒப்புக்கொண்டார்.
தொகை மிகவும் பெரிது என்றாலும், இதனால் கிடைக்கக்கூடிய லாபத்தை கணக்கிட்டு, மனிதரும் தன்னுடைய அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து மருமகனுக்கு பணம் கொடுத்திருந்தார்.
இது அனைத்தும் பெண்களின் கவனத்தைக் கவராமல் மறைமுகமாகவே நடந்திருந்தது,
இப்போதெல்லாம் கவியை அவன் கட்டிலில் கூட அதிகம் தேடுவதில்லை. எந்நேரமும் ஏதோ ஒரு யோசனையில் கடுகடுத்த முகத்துடன் வலம் வரும் தந்தையைக் கண்டு, ஒன்றரை வயது ஆதினிக்கும் பயம் தான் வந்தது.
எனவே, அஞ்சலியை விட்டு துளியும் நகரமாட்டாள் குழந்தை!!!
மகிழ்ச்சி இல்லை என்றாலும், பெரிதாய் எந்த துன்பமும் இல்லாமல் கவிக்கு நாட்கள் நகர, அதற்கும் ஆயுள் குறைவு என்பதைப் போல், அவளிடம் அன்று வந்து நின்றான் ஜெயசிம்மன்.
“எனக்காக நீ ஒன்னு பண்ணனும்!!!” என அவன் தொடங்கவுமே,
நீயே சொல் என்பதைப் போல் கவி பார்த்திருக்க,
இவளிடம் போய் கெஞ்சிக் கொண்டு நிற்கும்படி ஆகிவிட்டதே என இயலாமை தந்த கோபத்தில் கைமுஷ்டி இறுக நின்றவன், பின் மேம்போக்காக அவனுக்கு ஏற்பட்டிருக்கும் பணக்கஷ்டத்தைப் பற்றி அவளிடம் விளக்கி,
“மாமா கொடுத்த பணம் சரியாப் போயிடும்னு தான் நினைச்சேன்.. ஆனா இப்போ பிரச்சனை வேற விதமா திரும்பி நிக்குது!!!” என்றவனை அவள் கேள்வியாகப் பார்க்க,
“நான் முன்னாடி ஒரு பிரிட்ஜ் கட்டுற காண்ட்ராக்ட் எடுத்திருந்தேன்ல.. அது கொஞ்சம் முடிக்க முடியலை.. அதுக்காக நான் வாங்கியிருந்த கடனை இப்போ உடனே அடைக்கணும்னு நிக்குறாங்க.. டைம் குடுத்தா கண்டிப்பா அடைச்சுடலாம்.. ஆனா, உடனே கொடுக்கணும்னு வம்படியா நிக்குறாங்க.. இந்த எம். பி வேற புதுசா அந்த ஆளுக்கு தான் சப்போர்ட் பண்றான்.. அதான்” என அவன் இழுக்க,
இதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்லிக்கொண்டு நிற்கிறாய் என புரியாமல் கவி பார்த்திருக்க,
“உன்னால தான் என்னை இந்தப் பிரச்சனையில இருந்து காப்பாத்த முடியும்!!!” என பலத்த யோசனைக்குப் பின் தன் தன்மானத்தை விட்டொழுந்துவிட்டு அவன் கேட்க,
அப்போதும் கவிக்கு ஒன்றும் புரியவில்லை.
“நம்ம ரிசப்ஷன் அப்போ, எனக்கு கடன் கொடுத்தவன்.. உன்னைப் பார்த்திருப்பான் போல.. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்..” என மெதுவாய் அவன் விஷயத்திற்கு வர,
கவிக்கு ஏதோ புரிவதாய் இருக்க, புரிந்த விஷயத்தில் அவளுக்கு அதிர்ச்சியில் கண்கள் வெளியே தெறித்துவிடும் போல் இருந்தது!!
பின்னே!! இப்படியுமா ஒரு மனிதன் இருப்பான்?? என அருவெறுப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டாள் கவி!!
அவள் விஷயத்தை யூகித்துவிட்டாள் என அறிந்த ஜெயசிம்மனும்,
“நீ பயப்படுற மாதிரி எல்லாம் இல்லை!! ஒரு நாள் மட்டும் அவன் கூட இருந்தா போதும்!!!” என அவன் முடிப்பதற்குள்ளே, தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவனை அடித்திருந்தாள் கவி!!
“ச்சீ!! நீயெல்லாம் மனுஷன் தானா?? வெட்கமா இல்லை இப்படி வந்து கேட்க உனக்கு?? காசுக்காக எவனாச்சும் இப்படி கூட வாழ்ந்த பொண்ணை கூட்டிக் குடுப்பாங்களா???” என உட்சபட்ச கோபத்தில் இறைந்தவளுக்கு, உடலெல்லாம் நடுங்கியது.
இவ்வளவு கீழ்த்தரமாக இவன் இறங்கக்கூடும் என நினைத்திராத கவிக்கு, கோபம்!! கோபம்!! கோபம் மட்டுமே மனமெங்கும்!!!
“பெரிய பத்தினி மாதிரி சீன் போடாத!!! வேற ஒருத்தன் கூட படுத்து எழுந்து பிள்ளைப்பெக்க துணிஞ்சவ தான நீ??? இப்போ மட்டும் சிலிர்த்துகிற?? ஒழுங்கா சொன்னதை செய்!!” என அவன் இதை நீ செய்தே ஆக வேண்டும் என நிற்க,
இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, கவியை அடித்துத் துவைத்துவிட்டான் ஜெயசிம்மன்.
ஒன்றரை வயது ஆதினிக்கு, இந்தக்காட்சி மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட, ஜெயசிம்மனைக் கண்டு அன்றிலிருந்து மிரண்டு ஓடத் துவங்கியிருந்தாள்.
ஜெயசிம்மன் எவ்வளவு கொடுமைப்படுத்தியும், கவி தன் முடிவில் உறுதியாக நின்றவள், இதற்கு மேல் உன்னுடன் வாழ முடியாது என மீண்டும் தன் பெற்றோரிடமே சென்றுவிட,
அவளின் உடம்பில் வெளிப்படையாகத் தெரிந்த காயங்களைக் கண்டு பதறிய பொற்கொடியும், மகளைத் தன்னுடனே வைத்துக்கொண்டார்.
இருவருக்கும் எப்போதும் போல் ஏதோ பிரச்சனை என மற்றவர்கள் நினைத்திருக்க, ஜெயசிம்மனின் இந்த கீழ்த்தரமான புத்தி யாருக்கும் தெரியாமலே போனது!!
பெண்ணின் கண்ணீருக்கு சக்தி அதிகம் என்பது போல், அடுத்தடுத்து ஜெயசிம்மனுக்கு தொழிலில் பலத்த அடியாக விழ, தன் சொத்து அனைத்தையும் விற்று கடனை அடைக்கப் போராடி, கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழந்து கொண்டிருந்தான் அவன்.
பணம் இல்லாத அவனை பல் பிடுங்கிய பாம்பாகவே அனைவரும் நடத்த, ஒருகாலத்தில் அவனுக்கு கீழ் வேலை பார்த்தவன் கூட இன்று ஜெயசிம்மனை துச்சமாக நடத்த, மனதளவில் மிகவும் பலவீனமானான் அவன்.
ஆதினிக்கு இரண்டரை வயது ஆன சமயத்தில், எதேச்சையாக பிரபாவை அந்த பாட்டுப்போட்டியில் கண்டுவிட்டு கவி சமைந்து நிற்க,
ஒரு வருடம் கழித்து மீண்டும் அந்த வீட்டிற்குள் அதே சமயம் காலெடுத்து வைத்தான் ஜெயசிம்மன்.
தொலைக்காட்சியின் மேலே இருந்த கண்ணாடியில் தெரிந்த தகப்பனின் பிம்பத்தைக் கண்டு,
“ம்மா!! அப்பா!!!” என ஆதினி மிரண்டு போய் அன்னையின் பின்னே ஒளிந்து கொள்ள,
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து, பிரபஞ்சனைக் கண்டதில் சுற்றம் மறந்து, அவனையே கண்களில் நிரப்பி பார்த்துக்கொண்டிருந்த கவிக்கு நெஞ்சடைக்கும் மகிழ்ச்சி!!!
இத்தனை வருடங்களில், அவன் எங்கிருக்கிறானோ?? நன்றாக இருக்கிறானா?? இவ்வளவு ஏன், இருக்கிறானா இல்லையா?? என்று கூடத் தெரியாமல் அவள் அனுபவித்த வேதனை அவள் மட்டுமே அறிந்த ஒன்று!!
தான் மட்டும் அவனின் வாழ்க்கையில் நுழையாமல் இருந்திருந்தால், அவனின் அறிவிற்கும் திறமைக்கும் இன்று எங்கேயோ உயரத்தில் இருந்திருப்பான்.. ஆனால் என்னால் அனைத்தையும் இழந்து உயிருக்கு போராடும் நிலைக்கு அவனைக் கொண்டு வந்துவிட்டேனே என எண்ணி அவள் வருந்தாத நாளில்லை.
அவள் துயரை எல்லாம் போக்குவதைப் போல், பிரபஞ்சன் இன்று அந்த மிகப்பெரிய இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது, இத்தனை வருடங்களாய் அவள் கொண்டிருந்த குற்ற உணர்ச்சியில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் அவளை விடுவிக்க,
“நீ நல்லா வருவ டா பிரபா!!!” என மகிழ்வுடன் அவனுடன் மானசீகமாக உரையாடிக் கொண்டவளுக்கு, மகளின் தொடுகை அப்போது தான் உணர, மகளைத் தொடர்ந்து கவியின் பார்வையும் வாசலுக்குச் சென்றது.
அங்கே கடன் படுத்தும் பாட்டில், ஆளே பாதியாக இழைத்து, கருத்துப் போயிருந்த ஜெயசிம்மனைக் கண்டு, கவியின் மனத்தில் சற்று முன்பு வரை இருந்த இலக்குத்தன்மை சுத்தமாக மறைய, கோபம் கொப்பளிக்கும் விழிகளுடன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பட்டென உள்ளே சென்றுவிட்டாள்.
கவி மட்டும் அன்று நான் சொன்னதற்கு சம்மதித்திருந்தால் இன்று எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது என இப்போதும் கவியை துவேஷத்துடன் நோக்கிய ஜெயசிம்மன், மீண்டும் மாமனாரிடம் பணத்தேவை என்று வந்து கடன் பெற்றுக்கொண்டு செல்ல,
சேதுராமனும் பெண்ணைக் கொடுத்த பாவத்திற்காக அவன் கேட்கும் போதெல்லாம் தன்னிடமிருந்த அனைத்தையும் அவனுக்கு கொடுக்கவே செய்தார்.
இப்படி இருக்கையில், பிரபஞ்சன் பங்குபெற்ற அந்த நிகழ்ச்சியை யாரும் அறியாமல் கண்டு ரசித்த கவிக்கு, அது ஒன்றே அத்தனை காயங்களுக்கும் மன ஆறுதலாய் அமைந்தது.
பிரபஞ்சன் பங்குபெற்ற இசை நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், அவன் கவியை இன்னும் மறக்கவில்லை என்பதற்குச் சான்றாய் அவளுக்காகவே ‘ நினைத்து நினைத்து ‘ பாடலை உருகி உருகிப் பாட, கவிக்கு அழுகையில் தொண்டையடைத்தது!!
“என்னை மறந்திடு பிரபா பிளீஸ்!!! நான் வேண்டாம் உனக்கு!! நான்.. நான் அசிங்கம்!!! நீ நல்லா இருக்கணும் டா.. பிளீஸ் என்னை மறந்திடு!!” என மானசீகமாக அவனுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம்,
பரபரப்புடன் அவளின் அறைக்குள் நுழைந்த பொற்கொடி,
“அஞ்சலி!! சிம்மனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்!! ரொம்ப சீரியஸா இருக்கானாம்..” என தகவல் சொல்ல, பெண்ணவளின் இதழோரம் ஒரு இகழ்ச்சிப் புன்னகை!!
‘ தெய்வம் இருக்கு போல ‘ என்று நினைத்துக் கொண்டவள், யார் எவ்வளவு போராடியும், ஜெயசிம்மனைப் பார்க்கக் கூட மறுத்துவிட்டாள்.
அதில் பொற்கொடிக்கு கூட மனத்தாங்கல் தான்.
‘அவன் என்ன பண்ணியிருந்தாலும், புருஷன் சாகக் கிடக்கப்ப கூட என்ன வீம்பு ஒரு பொம்பளைக்கு??’ என அவர் நினைக்க,
தாயிடம் கூட சொல்ல முடியாத அளவிற்கு கொடுமைகளைச் செய்த கொடூரனின் மூச்சுக்காற்று படும் தூரத்தில் நிற்பது கூட பாவம் என அஞ்சலி நினைத்தது யாருக்கும் புரியவில்லை.
அதில் யசோதாவிற்கு அவளின் மேல் அத்தனை கோபம். நேரில் வந்து மண்ணை எடுத்துத்தூவி அவளுக்கு சாபமிட்டுச் சென்றுவிட்டார்.
மிகுந்த போராட்டத்திற்குப் பின், ஜெயசிம்மனை சேதுராமன் பணத்தை கொட்டிக் கொடுத்து காப்பாற்றி இருந்தாலும், இனி அவனின் காலமெல்லாம் மற்றவரின் தயவில் தான் என்பது போல் ஒரு கையும், காலும் விபத்தில் மொத்தமாக சிதைந்திருந்தது.
யார் என்ன சொல்லியும் கடைசி வரை கவி அவனை சென்று பார்த்திருக்கவில்லை. ஒரு வருடம் வரையில் அவனை முடிந்தளவு பார்த்த யசோதாவிற்கும் ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்துவிட,
“நீ இப்படி ஒன்னுத்துக்கும் உதவாம இருக்கதுக்கு செத்தே போயிருக்கலாம்!!” என நாளாக நாளாக அவனை ஏசிக்கொண்டே இருக்க, தன்னுடைய இயலாமை தந்த கோபத்தில் அவனுக்கு கண்கள் எல்லாம் சிவந்துவிடும்!!
ஆனால் என்ன செய்ய?? அவன் செய்த கொடுமைக்கான தண்டனை தான் இது என மரணப்படுக்கையிலும் அந்த முட்டாள் உணரவில்லை.
நாட்கள் இப்படியே போய்க்கொண்டிருக்க, ஒருநாள் உறக்கத்திலேயே மாரடைப்பில் உயிரை விட்டிருந்தான் ஜெயசிம்மன்.
அதைக்கேட்டதும் மகிழ்ச்சியும் கொள்ளவில்லை, துன்பமும் அடையவில்லை. அதுவும் ஒரு செய்தி என்பதைப் போல் கவி கடந்துசெல்ல, அவளைப் பெற்றவர்களுக்குத் தான், கவியை நினைத்து ஆதங்கமாக வந்தது.
அவனின் இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ள கவி மறுக்க,
“இன்னும் என்ன அந்த கேடுகெட்டவனை மனசுல நினைச்சிட்டு தான் இருக்கியா?? அதான் உன் புருஷனுக்கு செய்ய வேண்டிய மரியாதையைக் கூட செய்ய வர மாட்டேங்குறியா??” என சேதுராமன் ஆட்டம் போட,
“எனக்கு முறையா தாலி கட்டி குடும்பம் நடத்திருந்தா நானும் வந்து முறையா சடங்கு செஞ்சு அவனை அனுப்பி வைக்கலாம்.. இவனுக்கு எதுக்கு நான் செய்யணும்??” என எதிர்த்து கேள்வி கேட்ட கவிக்கு பதில் சொல்ல சேதுராமனால் முடியவில்லை.
ஜெயசிம்மனும் சென்ற பின், போக்கிடம் இல்லாத யசோதா, சேதுராமன் வீட்டிற்கே வந்துவிட, கவி அவரின் முகம் பார்ப்பதையே தவிர்த்துவிடுவாள்.
இப்போதெல்லாம் மற்றவரின் துணையில்லாமல் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என நினைத்து, தந்தையின் எதிர்ப்பையும் மீறி, ஒரு மருத்துவமனையில் வரவேற்பாளராக வேலைக்குச் செல்கிறாள்.
வருடங்களும் உருண்டோட, அவளின் உலகமே மகள் மட்டுமே என்றாகிப் போனது. அவ்வப்போது கேட்கும் பிரபஞ்சனின் பாடல்களே, அவள் வாழ்க்கையை இன்னும் வெறுத்துவிடாமல் இருக்க உதவி புரிகின்றது.
சென்ற வருடம், குலதெய்வ கோவிலுக்குச் சென்று வருகிறேன் என சேதுராமன் , பொற்கொடி, யசோதா மூவரும் கிளம்பிய பேருந்து, விபத்துக்குள்ளாக, சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்திருந்தனர்.
சமீப காலத்தில் எப்படியோ, ஆனால் அவள் பிறந்த தினந்தொட்டு, கஷ்டம் எனும் வார்த்தைக்கு பொருள் கூட அறியாதவாறு அவளை வளர்த்திருந்த பெற்றோருக்காக அவள் மனம் மிகவுமே வருந்தியது.
ஆனால், யார் இருந்தாலும், சென்றாலும் அடுத்து நிற்காமல் ஓட வேண்டும் என இத்தனை வருடத்தில், வாழ்க்கை அவளிற்கு கற்றுக் கொடுத்திருக்க, எங்கேயும் துவண்டு போகாமல் பெண்ணவள் இதோ ஓடிக் கொண்டே இருக்கிறாள்.
இனியும் அவள் மகளுக்காக, தொடரும் கவியின் ஓட்டம்!! ஆனால் இந்த முறை தனியாக அல்ல!!! அவளின் தலைவனோடு!!!
“துயரங்கள் பல வந்த போதும்,
துணையென நீ இருந்தால், அனைத்தும் தூசாக பறந்து போகும் மாயம் தான் என்ன??”
error: Content is protected !!